Loading

அத்தியாயம் – 13 : ருத்ர தாண்டவம்!

அக்னி கீழே இருந்த ஆயுத அறையிலிருந்து மேலே ஏறி வந்ததும், அவளைப் பார்த்துக் கொண்டே கண்களில் அனல் வீச அவளை நோக்கி விரைந்து வந்த ருத்ரன், தடதடவெனப் படிகளில் இறங்கி அந்த ஆயுத அறையை நோக்கிச் சென்றான்.

அவன் தன்னை நோக்கிக் கோபமாக வரவும் முதலில் அக்னி சற்று மிரண்டு தான் போனாள். இத்தனை பேர் முன்னிலையில் ஏதேனும் செய்துவிடுவானோ என்று உள்ளுக்குள் கொஞ்சம் அச்சமும் கூடத் தான்.

ஆனால் தன்னை முறைத்தபடியே அவன் கீழிறங்கிச் செல்லவும் சட்டென ஓர் ஆசுவாசம் பிறந்தது அவளுக்கு.

கூடவே அதே வேகத்தில் அவன் திரும்ப மேலே வரவும், அதுவும் கையில் ராக்கெட் லாஞ்சருடன் வரவும், திகைத்து.. கண்களிரண்டும் சாசர் போல விரிய நின்றாள் பெண்ணவள்.

‘இப்போ எதுக்கு ராக்கெட் லாஞ்சர் எடுத்துட்டு வரான்? என்ன நடக்குது இங்க?’ என்று சுற்றும் முற்றும் அவள் பார்க்க.. அங்கே தூரத்தில் இரு கப்பல்கள் நின்று கொண்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது.

“அந்த யாரோட கப்பல் ருத்ரன்.. நீங்க எதுக்கு இப்போ ராக்கெட் லாஞ்சரை எடுத்துட்டு வந்துருக்கீங்க..” என்று அவள் கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்த ருத்ரனின் கண்களிலோ ஏளனச் சிரிப்பு!

“நான் இங்க என்ன செய்ய வந்தேன்னு உளவு பார்க்கத் தானே வந்த? அப்படி ஓரமா போய் உட்கார்ந்து உளவு பாரு..” என்று அவளிடம் கூறிவிட்டு, கப்பலின் முனை நோக்கி நடந்தான்.

தோளில் ராக்கெட் லாஞ்சரை வைத்துக் கொண்டு கண்களிரண்டும் சிவந்திருக்க, ஒரு ராட்சனைப் போல நடந்து சென்றவனைப் பார்த்து மிரண்டு போனாள் அக்னி!

இதுவரை ருத்ரனைக் கோபமாய், ரௌத்திரமாய் பார்த்திருக்கிறாள் தான் அவள். ஆனால் இப்படி வேட்டைக்குச் செல்லும் அரிமாவைப் போலப் பிடரி சிலிர்க்க நின்றவன் அவளுக்குப் புதியதோர் அவதாரமான தெரிந்தான்.

அதிலும், நரசிம்ம அவதாரமாய்!

அவனிடம் வேறெதுவும் கேட்கத் தைரியமின்றி அதிர்ந்து போய் அவள் பார்த்திருக்க, அங்குக் கூடியிருந்த அத்தனைப் பேரின் கண்களும் அவனையே கூர்நோக்காய் நோக்கிக் கொண்டிருக்க, அடுத்த பத்தாவது நொடி, அவனது தோளில் சாய்ந்திருந்த ராக்கெட் லாஞ்சர் இயக்கப்பட்டு அதிலிருந்து, “வார் ஹெட்” என்று அழைக்கப்படும் கிரானைட் நிரப்பிய முனை அசுர வேகத்தில் சீறிப் பாய்ந்தது.

ருத்ரன் அந்த லாஞ்சரை தோளில் தூக்கி வைத்தது மட்டும் தான் அக்னியின் கண்களுக்குப் புலப்பட்டது. அடுத்து, அந்த லாஞ்சர் எதிரிலிருந்த கப்பலைத் தாக்கவும் தான் அந்த அதிர்வில் காதைப் பொத்திக் கொண்டு அதிர்வுடன் திரும்பிக் கொண்டவளின் இதயம் பலமாக அடித்துக் கொண்டது!

அவள் இந்திய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பான ராவில் இணைந்து பணியாற்றத் துடித்தவள் தான்!

ரஷ்யாவுக்கே சென்று மூன்றாண்டுகள் மிகக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டவள் தான்!

நூற்றுக்கணக்கான போர் நிகழும் இடங்களுக்கெல்லாம் சென்று அதையெல்லாம் நேரில் கண்டு மக்களின் வலியையும், வேதனையும், போர்வீரர்களின் அந்த அசுரத்தனமான சண்டைகளையும் நேரிலேயே பார்த்தவள் தான்.

ஆனால்.. இப்படி ஒரு தனி மனிதன்.. கண்களில் வெறி கொண்டு ஒற்றையாளாய் வேட்டையாடுவதை அவள் என்றுமே கண்டதில்லை!

இன்று அவள் கற்பனைக்கும் எட்டாத காரியங்கள் யாவும் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்க, அதையெல்லாம் நம்பக் கூட முடியாத அதிசயத்தில் பிரம்மை பிடித்து நின்றிருந்தாள் பேதையவள்.

ருத்ரனால் தாக்கப்பட்ட கப்பலானது, வெடி பொருட்கள் சுமந்து வந்த கப்பல்! ருத்ரன் நேரடியாக அதையே தாக்கிவிடவும், எதிர்க் கப்பலில் இருந்த கபீரோ அதிர்ந்து போனான்!

அவர்கள் இருந்த கடல் பகுதியானது, இந்தியாவுக்கும் அண்டை நாடான பங்களாதேஷுக்கும் இடைப்பட்ட கடற்பகுதி. எனவே இப்படி அந்தக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது பங்களாதேஷ் கடற்படை என்று அவன் தவறாக நினைத்திருந்தான்.

“டேய்.. எப்படிடா இங்க பங்களாதேஷி போலீஸ் வந்தாங்க.. அவங்களுக்கு எப்படி விஷயம் லீக் ஆச்சு?

அதுவுமில்லாம இப்போ இவனுங்க அட்டாக் பண்ணிட்டு இருக்கறது வெப்பன்ஸ் இருக்கற கப்பலை. கொஞ்சம் மிஸ் ஆனா, அந்த வெப்பனெல்லாம் வெடிச்சு, இந்தக் கடலைத் தாண்டி ரெண்டு நாட்டோட எல்லைப்புற ஊரே இல்லாம போய்டும்..” என்று அவனது ஆட்களிடம் கூறிக் கொண்டிருந்தவன், எதிரில் இருக்கும் கப்பலைக் கூர்ந்து பாக்க முயல, அங்கே கப்பலின் முனையில் நின்றிருந்தவனைப் பார்த்துப் பயத்தில் இரண்டெட்டு பின்னே சென்றான் கபீர்.

அவனது பயத்தைக் கண்டு அவனது ஆட்களின் முகமுமே வெளிறிப் போக..

“ஜி.. என்ன ஆச்சு? ஏன் இப்படி பயந்து போயிருக்கீங்க?” என்று அவன் கேட்க, கபீரோ வைத்த விழி எடுக்காமல் ருத்ரனின் கப்பலை நோக்கிக் கை காட்டினான்!

அங்கே அந்தக் கப்பலில் பறந்து கொண்டிருந்த ரத்தச் சிவப்பு நிறக் கொடியோடு மிளிர்ந்திருந்த வங்கப் புலியைப் பார்த்த அவர்களின் நாக்கும் உலர்ந்து போனது!

“ஜி.. ஜி.. அது.. அது..” என்று ஒருவன் தயங்க.. கபீரோ..

“அது.. கோஸ்ட்!” என்கவும் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரின் நெற்றியிலும் வியர்வை துளிர்த்தது!

“இது.. இது எப்படி சாத்தியம்? எப்படி இவனுக்கு நியூஸ் கசிஞ்சது?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, ராக்கெட் லாஞ்சரின் அடுத்த தாக்குதல் அவர்களது கப்பலை நோக்கி வந்தது.

அதில் கப்பலின் எஞ்சின் பகுதியில் சேதாரமாகிவிட, அவர்களது கப்பல் நிலைகொள்ளாமல் தள்ளாடத் துவங்கியது.

அதைக் கண்டவர்கள்.. “ஜி.. இப்போ நாம யோசிக்க நேரமில்லை. அவனைப் பதில் தாக்குதல் செய்யணும்.

கூடவே நம்ம சப்போர்டுக்காக நாம எடுத்துட்டு வந்த இந்த மோட்டார் போட்ல எல்லாரும் இறங்கி தப்பிச்சாகனும்.

ஆனா.. இந்தக் கப்பல்ல இருந்தே நாம தாக்க முடியாது. முதல்ல அந்தக் கப்பல்ல இருந்து நாம வெப்பனைக் காப்பாத்தணும்!” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே, ருத்ரன் தன் வசமிருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியை எடுத்து அந்த ஆயுதக் கப்பலில் இருந்தவர்களை சரமாரியாகத் தாக்கத் துவங்கிவிட்டான்.

அந்தக் கப்பலில் இருந்தவர்கள் எல்லாம் அலறிப்புடைத்துக் கொண்டு பதுங்குவதற்கான வழியைத் தேட, ருத்ரனுடன் இருந்தவர்களெல்லாம் ஏதோ கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது போலப் பெரும் குதூகலத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அதைக் கண்ட அக்னிக்கு பெரும் வியப்பாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? காட்டில் ஒரு சிங்கம், வேட்டையாடுவதை வீட்டுத் தொலைக்காட்சியில் பார்ப்பது போல, பரவசத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே?

எதிரில் இவர்களால் வேட்டையாடப்படுபவன் ஒரு மனிதன் என்ற உணர்வு அற்றுப் போய்விட்டதா இவர்களிடம்?’ என்று தோன்றியது அவளுக்கு.

அதை வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது.. அங்கு நடக்கும் களேபரத்தைத் தடுக்கவும் முடியாது.. அதே சமயம் மற்றவர்களைப் போல ருத்ரனின் இந்தத் தாண்டவத்தைப் பார்த்துப் பரவசப்படவும் முடியாது திகைத்துப் போயிருந்தாள் அவள்!

அதே சமயத்தில் கபீர் இருந்த கப்பலிலோ, அவன் ஆட்களிடம் தோன்றிய பய உணர்வைப் பார்த்து அவனே அதிர்ந்து போயிருந்தான்.

தன்னுடைய ஆள்.. கபீரின் கூட்டத்தில் அங்கம் கொண்டிருப்பவன் என்ற ஒன்றே அவர்களுக்கெல்லாம் கர்வமளிக்க கூடியதாய்.. எவ்வித அக்கிரமத்தையும் செய்ய வலு கொடுப்பதாய் இருந்து வந்தது.

ஆனால் இப்பொழுது அவனே உடன் இருந்தும், எதிரில் இருக்கும் ஒற்றை மனிதனைக் கண்டு இப்படி அலறுகிறார்கள் என்ற எண்ணம் அவன் நெஞ்சில் வெறியேற்றியது.

அவனது கப்பல் தனது கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடுவதையும் பொருட்படுத்தாது தன்னிடத்தில் இருக்கும் ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்து அவனும் ருத்ரனின் கப்பலைச் சரமாரியாகச் சுட ஆரம்பித்தான்.

ஆனால் அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது ருத்ரனின் கப்பல் கபீரின் கப்பலை நெருங்கிக் கொண்டிருந்தது.

அதே சமயத்தில் கபீரின் கப்பலில் கொஞ்சம் கொஞ்சமாகத் தீப்பிடிக்கவும் ஆரம்பித்திருந்தது.

கூடவே இந்த இரு இளம்புலிகளின் நேருக்கு நேர் மோதலால் வங்கக்கடலும் கூடச் சற்று பீதி கொண்டது போல மெல்ல மெல்ல அதன் சீற்றம் அதிகரிக்கத் துவங்கியது.

பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் இருந்தன. ஆனால் அந்தச் சீற்றம் என்னவோ பௌர்ணமி நாளின் தாக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருந்த கபீரின் கப்பல், கடலின் சீற்றத்தையும் கொந்தளிப்பையும் தாங்க முடியாது இப்படியும் அப்படியுமாகக் குதிக்கத் துவங்கியது.

ஏற்கனவே பீதியில் ஆழ்ந்திருந்த கபீரின் ஆட்களோ, இன்னமும் இந்தக் கப்பலில் இருப்பது தற்கொலைக்குச் சமம் என்று கருதினார்கள். ஆனால் இன்னமும் கபீர் எதற்காக வீண் முயற்சியாக அந்த கோஸ்டின் கப்பலைத் தாக்கிக் கொண்டிருக்கிறான் என்பதும் அவர்களுக்குப் புரியாது போகவே, கபீரின் முக்கிய அடியாட்களில் ஒருவன் ஓரிடத்தில் நிற்க முடியாது இப்படியும், அப்படியும் ஆடிக் கொண்டிருந்த கப்பலில் சிரமத்துடன் கபீரிடம் வந்து..

“ஜி.. என்ன செய்யறீங்க? இப்போ நாம இங்கிருந்து தப்பிக்கறது முக்கியம். வாங்க ஜி.. இங்கிருந்து போய்டலாம்..

நாம இந்த நேவி ஆபிசர்ஸ ஏமாத்த எடுத்துட்டு வந்த மோட்டார் போட்ல தான் தப்பிச்சுப் போகணும். இப்போ இவன் கூடச் சண்டை போடறதுல எந்த உபயோகமும் இல்ல.. கப்பல் வேற தீப்பிடிகிச்சு..” என்று பதட்டமாகக் கூற.. அவனது நெஞ்சின் மீது கை வைத்து அவனைத் தள்ளிவிட்ட கபீரோ..

“இவனுக்குப் பயந்து என்னை இங்கிருந்து ஓடச் சொல்லறீயா?” என்று சீறினான்.

ஆத்திரத்திலும், கோபத்திலும் இருக்கும் இவனை எப்படி நிதானத்துக்கு கொண்டு வருவது என்று புரியாமல் நெற்றியைத் தடவினான் மற்றவன்.

அப்போது அவனது உதவிக்கு மற்ற ஆட்களும் வந்து.. “ஜி.. இப்போ நாம இங்கிருந்து கிளம்பனும்னு சொல்லறது இந்த கோஸ்டுக்குப் பயந்து இல்ல.. இங்க பாருங்க நம்ம கப்பல்ல தீப்பிடிச்சுகிச்சு.

அதே சமயம் கடலும் திடீருன்னு கொந்தளிக்க ஆரம்பிச்சுடுச்சு.. இப்போதைக்கு நமக்கு இந்த மோட்டார் போட்ல போற வாய்ப்பு ஒன்னு தான் இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் போச்சுன்னா அந்த வாய்ப்பும் இருக்காது.” என்று கூற, அவனை உறுத்து விழித்த கபீரோ..

“எல்லாரும் ஒரு விஷயத்தை மறந்துட்டீங்க.. அந்தக் கப்பல்ல நம்ம சரக்கு இருக்கு.. அதை அப்படியே விட்டுட்டுப் போகச் சொல்லறீயா?” என்றான் தள்ளாடிக் கொண்டே.

அதற்குள் மற்ற இருவர் அவனிடம் வந்து..

“ஜி அதெல்லாம் சரி தான்.. ஆனா இப்ப நாம இருக்கற நிலைமைக்கு இந்த ஆபத்துல இருந்து தப்பிச்சுப் போகணும்.

கப்பல்ல பிடிச்ச நெருப்பு நம்ம பக்கத்துலயே வந்துடுச்சு. அதே நேரம் கடலோட உக்கிரமும் அதிகமாகிடுச்சு..” என்று கூறியவன், கபீரின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனான்.

வேறு வழியில்லாத கபீரும் அவனுடன் நடந்து சென்றாலும், அவன் கண்களில் என்னவோ கொலைவெறி தாண்டவமாடியது.

அப்பொழுது ருத்ரனின் கப்பலும் அவனுக்கருகே வந்துவிட, அவனோ மற்றுமொரு ராக்கெட் லாஞ்சரை கபீரின் கப்பலை நோக்கிச் செலுத்த, அந்தக் கப்பலின் ஒரு பாகமோ வெடித்துச் சிதறியது. அதே நேரத்தில் கபீர் அந்த மோட்டார் படகில் குதித்திருந்தான்.

ருத்ரனின் கண்களும், கபீரின் கண்களும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேராகச் சந்தித்துக் கொண்டன.

இன்னும் ஒரே ஒரு நொடி.. ருத்ரன், லாஞ்சரை அவர்களது படகின் புறம் திருப்பிவிட்டால் இவர்களது மொத்தக் கதையும் முடிந்துவிடும்.

அவன் லாஞ்சரை இவர்கள் புறம் திருப்பிய வேளையில், அந்த ஆயுதம் ஏந்திய கப்பலில் இருந்து பெரும் புகை கசியத் துவங்கியது.

அதாவது கபீரின் கப்பலிலிருந்த தீ, அந்தக் கப்பலுக்குப் பரவத் துவங்கியிருந்தது.

இன்னும் சில மணித்துளிகளில் அந்தக் கப்பலிலும் முழு வேகத்தில் நெருப்பு பற்றத் துவங்கிவிடும்.

அப்படி மட்டும் நடந்துவிட்டால், அதிலிருக்கும் அந்த வெடி பொருள் வெடித்துச் சிதறிவிடும்!

அதனால் ஒட்டுமொத்த காளிக்ஷேத்ராவுமே சர்வ நாசமாகிவிடும்! என்று அஞ்சிய ருத்ரனோ, இப்போதைக்கு கபீரை கொல்லாமல், நேரே அந்தக் கப்பலில் குதித்தான்.

அவனுக்குப் பிறகு இன்னும் சிலரும் குதித்தார்கள். இவர்கள் இருந்த கப்பலில் மாலுமியும், அக்னியும் மட்டுமே இருந்தார்கள்.

தன் கண் முன்னே தன்னுடைய பொருளைத் தன்னிடமிருந்து பறித்து எடுத்துச் செல்லுபவனைப் பார்த்த கபீரின் கண்கள் நெருப்பைக் கக்கின.

அதே சமயம் எதேச்சையாய் ருத்ரனின் கப்பலைப் பார்வையிட்ட அவனது விழிகள், அங்கே ஒரு பெண் கண்களில் பயத்துடனும், கவலையுடனும் ருத்ரனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவனது புருவங்கள், வியப்பில் நெற்றியின் உச்சியைத் தொட்டன!

‘இவன் கப்பல்ல.. இந்த நேரத்துல ஒரு பொண்ணா? அதுவும், அவ கண்ணுல ருத்ரன் மேல இத்தனை கவலை தெரியுதே..’ என்று எண்ணமிட்டவனது இதழ்கள் வஞ்சத்துடன் வளைந்து கொள்ள.. அவனது கைகளோ, அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஸ்னைப்பரைத் தொட்டன.

அந்த ஆயுதக் கப்பலிலிருந்து வெடி பொருள் சிறு சிறு பாகமாகப் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. அதை ருத்ரனின் ஆட்கள் ஒவ்வொருத்தராகத் தங்களது கப்பலில் இடம் மாற்றிக் கொண்டிருந்தனர்.

அதே வேளையில் கடைசியாக வந்த ருத்ரன் தன் கையில் மிகப்பெரிதாக அந்த வெடி பொருளை வைத்திருக்க, அவனையே கண்களில் கனலுடன் பார்த்த கபீரோ, தனது ஸ்னைப்பரை எடுத்து அவனை நோக்கிக் குறி பார்த்தான்.

அதில் ருத்ரனின் கண்கள் சட்டெனக் கூர்மையுற, அடுத்த நொடியே தனது குறியை அக்னியை நோக்கித் திருப்பிய கபீர், அவளது நெஞ்சை நோக்கிச் சுட்டிருந்தான்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.