
அத்தியாயம் – 23
வீட்டில் இருந்த ஒவ்வொருவரும் விக்ராந்தை ஒரு துரோகியைப் போலப் பார்த்துவிட்டு, அங்கிருக்கப் பிடிக்காமல் அவரவர் அறைக்குச் சென்றனர், சுமித்ரா நித்திலாவை காண சென்றாள்,….
விக்ராந்த் ஒரு சிலையைப் போல உடைந்து போய் நின்றிருக்க, லாவண்யா அவன் தோளைத் தொட்டு, “ஃபீல் பண்ணாத விக்கு! சீக்கிரம் எல்லாரும் நம்மள புரிஞ்சுப்பாங்க,” என ஆறுதல் கூறினாள். அன்னலட்சுமியும் விடாமல், “ஆமாடா கண்ணா… இன்னைக்கு இப்படி பேசுறவங்க, நாளைக்கே உனக்கு லாவண்யா கூட கல்யாணம் பண்ணி வைப்பாங்க, நீ இதை நினைச்சு கவலை படாதே” எனத் தூபம் போட்டார்.
ஆனால் விக்ராந்தின் காதுகளில் அந்த வார்த்தைகள் விழவே இல்லை. அவனது கண்கள் நிலைகுத்திப் போயிருந்தன. அவன் மனதில் இப்போது வழிந்து நின்ற வேதனை எதைப் பற்றியது என்பதை அவனது மௌனம் மட்டுமே ரகசியமாக வைத்திருந்தது.
மொட்டை மாடியின் சுவரோரம் வெறித்த பார்வையுடன் நின்றிருந்தாள் நித்திலா. சுமித்ரா அவளருகில் சென்று மென்மையாகத் தோள் தொட்டு “நித்தி” என அழைக்க, “சொல்லுங்கக்கா” நித்திலா மெல்ல திரும்பினாள், அவள் இதழில் ஒரு புன்னகை இருந்தது. ஆனால், அந்தப் புன்னகையில் உயிர் இல்லை என்பதைச் சுமித்ரா அவளது கண்களைப் பார்த்தே கண்டுகொண்டாள்.
”நித்தி… அழுதுடுடி! வேதனையை மனசுக்குள்ளேயே போட்டுப் புதைக்காதே… அது உன் உயிரையே எடுத்துடும். தயவு செஞ்சு அழுதுடு!” எனச் சுமித்ரா சொன்ன அந்த நொடி… அத்தனை நேரம் கல்லாய் உறைந்திருந்த நித்திலா, சுமித்ராவைக் கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.
விக்ராந்த் வேறு பெண்ணை நேசிக்கிறான் என்று தெரிந்திருந்தாலும், லாவண்யா அவனை உரிமையோடு அணைப்பதையும் கொஞ்சுவதையும் நேரில் பார்த்தது அவளது இதயத்தை ரணமாக்கியிருந்தது.
அவன் கணவன் என்பதை தாண்டி அவனை மனதார நேசிக்க ஆரம்பித்த காரணத்தினாலோ என்னவோ வேறொரு பெண்ணுடன் அவனை ஒன்றாக பார்த்ததை அவளது மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது, அவள் வேதனை குறையும் வரை அவளை அழவிட்டாள் சுமித்ரா,…
நொடிகள் கடந்து, நிமிடங்களும் கழிய அவள் அழுகை மட்டும் நின்ற பாடில்லை, தரையில் அமர்ந்து தேம்பித் தேம்பி அழுவதைக் கண்டு சுமித்ராவே ஒரு கட்டத்தில் பயந்து போனாள். “நித்தி… போதும்டி!” அழுகையை நிறுத்து” சுமித்ரா சொல்ல, தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தவள், சுமித்ராவை அணைத்துக் கொண்டு அழுதாள்…
“நித்தி,…. கவலை படாதடி, உனக்கு நான் இருக்கேன், உனக்கு துணையா எப்போதும் நான் இருப்பேன்” அவளது தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே ஆறுதல் கூறினாள் சுமித்ரா,…
“என்னால முடியலக்கா” என விம்மியவளுக்கு மேலும் பேச முடியாமல் அழுகை தான் வந்தது.
“நித்தி…. நான் சொன்னா கேட்பல்ல, இந்த அக்கா சொன்னா கேட்ப தானே, நீ எதையும் நினைச்சு வீணா உன் உடம்பை கெடுத்துக்காத, இனி தான் நீ தைரியமா இருக்கணும், விக்ராந்த்க்கு உன் கூட வாழ கொடுத்து வைக்கல, அவர் இல்லாட்டா என்ன, உனக்கு நான் இருக்கேன், எனக்காக தயவு செஞ்சு அழறதை நிறுத்துமா” சுமித்ரா அவளை தேற்றத் தொடங்கினாள், அவளும் மூச்சை இழுத்து விட்டு மெல்லத் தன்னைச் சமாளித்துக் கொண்டு எழுந்தாள்…
“ஏன்க்கா எனக்கு மட்டும் இப்படி நடக்குது, நான் தான் தப்பு பண்ணிட்டேனா, ஆரம்பத்திலேயே நான் அவரை கல்யாணம் செஞ்சிருக்க கூடாதா?” என குழந்தை போல் வினவினாள்,..
“நீ எந்த தப்பும் பண்ணல நித்தி, லட்சுப்பாக்காக தான் இதை பண்ணிருக்க, அதோட நீ இதை பல தடவை கேட்டுட்ட, இதை பத்தி நாம இனி பேச வேணாம், வா கீழே போலாம்” என்றாள்,…
“இல்லக்கா…. நீங்க போங்க, நான் வரல” அவள் மெல்லிய குரலில் சொல்ல.,… “நீ வரலன்னா நானும் போகல” என்றாள் சுமித்ரா….
“அக்கா… என்னை நினைச்சு கவலை படாதீங்க, நான் இப்போ நல்லா தான் இருக்கேன், என் வலி தீர அழுதுட்டேன், என் மனசு இப்போ கொஞ்சம் ரிலீஃபா இருக்குக்கா, நான் இனி எதை நினைச்சும் கவலை பட போறதில்லை, நீங்க சொன்ன மாதிரி இனி தான் நான் தைரியமா இருக்கணும், இருப்பேன்” அவளது அந்தக் குரலில் இருந்த உறுதி சுமித்ராவிற்கு நிம்மதியைத் தந்தது.
“சரி சீக்கிரம் வந்துடு” என அவள் கன்னம் பற்றி சொல்லி விட்டு, கீழே சென்றாள் சுமித்ரா…..
‘அம்மா அப்பா…. உங்க பக்கத்துல இருக்கணும் போல மனசெல்லாம் ரொம்ப ஏங்குது, எதுக்காக என்னை விட்டுட்டு போனீங்க, தன் பொண்ணோட வாழ்க்கையில இந்த கொடுமையெல்லாம் முன்னமே நடக்கும்னு தெரிஞ்சு, இதை நீங்க பார்க்க கூடாதுனு தான் முன்னாடியே போய் சேர்ந்துடீங்களா, நீங்க என் கூட இல்லனாலும், எனக்கு கெட்டது அண்டாம பார்த்துபீங்கன்னு நினைச்சேன், ஆனா நீங்களும் என்னை இப்படி கைவிட்டுடீங்களே….
இது நீயா விருப்பபட்டு தேர்ந்தெடுத்துகிட்ட வாழ்க்கை, உரியப்பட்டவரின் வழியாவே உன்கிட்ட சொல்ல வச்சோம், நீ தானே போய் மாட்டிகிட்டேனு சொல்றீங்களா,…?
ஆமா…. நானே வந்து மாட்டிக்கிட்டேன், என்னோட தப்பு தான், எல்லாம் என் தப்பு தான், அவரை பத்தி முத ராத்திரிலேயே தெரிஞ்சிருந்தும் அவரை என்னை நெருங்க விட்டிருக்க கூடாது இது நான் செய்த முதல் தவறு, இரண்டாவது தவறு அவரை மனசார நேசித்தது, எந்த உரிமையில நான் அவரை நேசித்தேன், அவர் எனக்கு நிரந்தரம் இல்லைனு தெரிந்தும் எப்படி நேசித்தேன், முத ராத்திரி அன்னைக்கு விவாகரத்து பத்திரத்துல கையெடுத்து வாங்கினவர நான் எப்படி நேசித்தேன், ஆறு மாசம் மட்டும் தான் நீ எனக்கு பொண்டாட்டினு சொன்னவரை நான் எப்படி நேசித்தேன், எப்படி? எப்படி?, ஏன்?, எதற்காக அவரை நான் நேசித்தேன்?’ தலையில் கைவைத்துக் கொண்டு மீண்டும் அழுதாள் நித்திலா…..
‘அப்படின்னா இத்தனை நாட்களும், என் உடம்புக்கு மட்டுமே ஆசை பட்டு என்னை நெருங்குனவரை தான் நான் நேசிச்சிட்டு இருந்தேன்னா? இல்ல… அவர் அந்த மாதிரி நோக்கத்துல என்கிட்ட நெருங்கலனு மனசு சொல்லுது, ஆனா அவரோட வாய் அப்படி தானே சொன்னது, அப்படின்னா எனக்கு காயம் ஏற்பட்ட போது துடிச்சு போனது, அவரோட அந்த துடிப்பு பொய் இல்லைனு அவரோட கண்ணு சொன்னது, ஆனா இன்னைக்கு.. இன்னைக்கு நடந்ததுக்கு என்ன காரணம்,…?
அவர் நேசித்த பொண்ணு வீட்டுக்கே வந்துட்டா, அவருக்கு தெரியாம இது நடந்திருக்காது, அவர் தான் அன்னைக்கே சொன்னாரே தெளிவா,’
‘இப்போ… இப்போ எதுக்கு நான் இப்படி புலம்பிட்டு இருக்கேன், இல்ல நான் என் மனசை விட்டுற கூடாது, இது தான் நடக்கும்னு நான் முன்னாடியே எதிர்பார்த்தது தான், ஆனா இது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு எதிர்பார்க்கல, அதான் என் மனசு ஏத்துக்க மறுக்குது, இதுக்கு மேல நான் இதை பத்தி யோசிக்க போறதில்லை, நான் யோசிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்னு பாட்டி தாத்தா கிட்ட இதை எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தான்,…
‘கண்டிப்பா அவங்களால இதைலாம் தாங்கிக்க முடியாது, இப்போ நான் என்ன பண்ணுவேன், எப்படி சொல்லி புரிய வைக்க போறேன்’ என்பதை நினைத்து மீண்டும் அழ துவங்கினாள்,…
பொழுது சாய்ந்து இருட்டியும் போனது, சுமித்ரா தான் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வாள், கீழே வா என்று கூப்பிட்டாலும் அவள் வரமாட்டேன் என்று மறுத்து விட்டாள்,… வேறு எவரும் அவளை வந்து பார்க்கவில்லை, எந்த முகத்தை வைத்து கொண்டு அவள் முன்னிலையில் வந்து நிற்பார்கள், அவள் முகத்தை பார்க்கும் சக்தி அவ்வீட்டில் எவருக்கும் இல்லை, தங்கள் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்,….
மிகவும் மன்றாடி அவளை ஒரு டம்ளர் பாலை மட்டும் குடிக்க வைத்தாள் சுமித்ரா,… இன்று அவளுடன் இருக்க நினைத்து வந்த சுமித்ராவை, ‘நான் இன்னைக்கு தனியா இருக்கனும்னு நினைக்கிறேன்’ என்று சொல்லி அவளை அனுப்பி வைத்து விட்டாள் நித்திலா…
எவருமே சாப்பாடு பக்கம் செல்லவில்லை, இருவரை தவிர,
அவளின் தாத்தா பாட்டி மட்டும் தான் இப்போது நித்திலாவின் மனத்திரையில் இருந்தது, அவர்களிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்பது தெரியாமலேயே
சோர்வுற்று, மொட்டை மாடியின் சுவரோரம் வதங்கிய கொடியாய் உறங்கிப் போனாள் நித்திலா.
மணி பன்னிரண்டைத் தாண்டியது. அறைக்குள் அடைந்து கிடந்த விக்ராந்திற்கு நித்திலாவைக் காண வேண்டும் என்கிற ஆவல் உயிரைத் தின்றது. எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளைப் பார்ப்பது? அவளிடம் என்ன பேசுவது? அவள் இப்போது தன்னிடம் என்ன பேசுவாள்? எப்படி நடந்து கொள்வாள்? என்ற பயமே அவனை அவளை சந்திக்க நிறுத்தி வைத்திருந்தது,..
கல்யாணமான நாளிலிருந்து இன்றுதான் அவளை விட்டு இத்தனை மணிநேரம் பிரிந்திருக்கிறான், நேரங்கள் கடக்க கடக்க மனதை ஏதோ வந்து அழுத்த, மூச்சை இழுத்துவிட்டபடி
தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை பார்க்க வேண்டி மாடி நோக்கி நடந்தான்,
அங்கே தரையில் சுருண்டு கிடந்த தன் மனையாளைக் கண்டு வி
தன் மீதே வெறுப்பு வந்தது, எதற்கும் கலங்காத அந்தப் பாறை போன்ற நெஞ்சம், இன்று அவளது கோலத்தைக் கண்டு உருகியது.
மெல்ல நடையுடன் அவளருகில் வந்தவன்,… அவளருகில் அமர்ந்தான், சில நிமிடங்கள் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டு எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்,…
அவள் அழுத அழுகை, சோர்வு எல்லாம் சேர்ந்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு எடுத்து சென்றிருந்தது, அருகில் அவன் அமர்ந்திருப்பதை கூட அவள் உணரவில்லை, அந்த கணம் அவள் கரத்தில் கடித்துக் கொண்டிருந்த ஒரு கொசு அவனது பார்வையில் படவே, அதன் மீது அவ்வளவு கோவம் வந்தது,….
மறுகணமே அவன் மனம் ‘இதை விட நீ அவளுக்கு பெரிய வலியை கொடுத்திருக்க’ என அவனது மனசாட்சி அவனைச் சுட்டெரித்தது.
அவளை பார்த்தபடி இருந்தவன், என்ன நினைத்தானோ,… அவளது உறக்கம் கலையாதவாறு, பூவைப் போல மெல்ல அவளை கரங்களில் ஏந்தி, அறை நோக்கி புறப்பட்டான்,
அவளை படுக்கையில் படுக்க வைத்தவன், அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,…”ஸாரி பேபி” என முணுமுணுத்தான்.
அவன் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளிக் கண்ணீர் அவள் கன்னத்தில் விழ… உறக்கத்திலேயே அவள், “அத்து…” என முனகினாள். தூக்கத்திலும் அவள் தன்னைத்தான் நினைக்கிறாள் என்பது தெரிந்ததும், விக்ராந்திற்குச் சந்தோஷப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று தெரியவில்லை, ஆனால் கண்ணீர் மட்டும் நிற்காமல் சுரந்து கொண்டிருந்தது,..
அன்று இரவு முழுவதும் அவனுக்கு இமை மூடவில்லை. விடிய விடிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலையில் உறக்கத்திகிருந்து விடுபட்ட நித்திலாவிற்கு, தான் எப்படி அறைக்கு வந்தோம் என முதலில் குழப்பம் ஏற்படுத்தினாலும், சற்று நேரத்தில் எல்லாம் அதற்கான விடையும் கிடைத்தது,… சுற்றி அறையை நோட்டமிட்டாள். விக்ராந்த் அங்கு இருப்பதற்கான அறிகுறி கூட தென்படாமல் போகவே, வேறு எதை பற்றியும் எண்ணாமல் குளியலறைக்குள் நுழைந்தாள்,…
தயாராகியவள்,… மனதை திடப்படுத்திக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள், வழக்கம் போல் காலையில் இருக்கும் பரபரப்பு இல்லாமல் ஊசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அளவுக்கு வீடு வெறிச்சோடிக் கிடந்தது. சமையலறையில் சுமித்ரா மட்டும் இயந்திரத்தனமாக வேலை செய்துகொண்டிருந்தாள்.
நித்திலாவை கண்ட சுமித்ரா “நித்தி…. வந்துட்டியா, உன்னை தான் நினைச்சிகிட்டு இருந்தேன்” என்று சொல்ல,.. “ஸாரிக்கா அசந்து தூங்கிட்டேன், டிஃபன் பண்ணிட்டீங்கா” நித்திலா எதையும் காட்டிக்கொள்ளாமல் கூறினாள்,..
“பச்… இந்த ஸாரி எல்லாம் என்கிட்ட சொல்லாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன், அடி வாங்க போற நீ” என்ற சுமி,…”இப்போ தான் முடிஞ்சது” என்றாள்…
“மணி எட்டாச்சு, இன்னும் யாரும் வரலயாக்கா” நித்திலா கேட்க,… “வரல நித்தி,… வருவாங்க” என்றவள் அவளுக்கு சிறு வேலையை கொடுத்தாள்,…
மணி எட்டரையை காட்டிய நேரம் ஊர்மிளா வந்து சேர்ந்தார். அவருக்கு நித்திலாவின் முகத்தை பார்க்கவே சங்கடமாக இருந்தது, அவளிடம் பேச கூட முடியாமல் ஒதுங்கியே இருந்தார், அவரிடம் தெரிந்த அந்தத் தயக்கமும், விலகலும் நித்திலாவின் மனதை ரணமாக்கியது.
தன் மீது எந்தத் தப்பும் இல்லாதபோது, தன் குடும்பத்தினர் ஏன் இப்படித் தன்னை ஒரு அந்நியப் பெண்ணைப் போலப் பார்க்கிறார்கள் என்ற ஆதங்கம் அவளுக்குள் எழுந்தது.
நேரடியாகவே அவரிடம் சென்று கேட்டுவிட்டாள், “அத்தை… என்கூட இனி பேச மாட்டீங்களா?” அந்த ஒற்றைக் கேள்வியில் ஊர்மிளாவின் அணை உடைந்தது. நித்திலாவைத் தாவி அணைத்துக் கொண்டார்.
“ஏன்டா இப்படிச் சொல்ற? எனக்குக் கஷ்டமா இருக்குடா… உன் முகத்தைப் பார்க்கவே எனக்குத் தைரியம் இல்லை. அதனாலதான் ஒதுங்கிப் போனேன்,” என்றார் கண்ணீர் ததும்ப,…
நித்திலா அவர் கண்களைத் துடைத்துவிட்டு.. “ப்ளீஸ் அத்தை… இனி அந்தப் பேச்சை எடுக்காதீங்க. நான் இங்க இருக்கிற வரைக்கும் உங்க எல்லார் கூடவும் சந்தோஷமா இருந்துட்டுப் போகலாம்னு இருக்கேன். நீங்க என்கிட்ட முன்னாடி மாதிரி பேசுவீங்க தானே?”
அவளது அந்த ஏக்கமான கேள்வி ஊர்மிளாவின் மனதைச் சுளுக்கியது. “இப்படியெல்லாம் கேட்காதடா! நீ சொன்ன மாதிரியே நான் இனி அந்தப் பேச்சை எடுக்க மாட்டேன். யார் என்ன வேணும்னாலும் பண்ணிட்டுப் போகட்டும்… எப்போதும் நீ எங்க வீட்டுப் பொண்ணுதான்!” என அவளை இறுக்க அணைத்துக் கொண்டார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
31
+1
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


விக்ராந்த் மனசு மாறினா சந்தோஷம் .. நிலா தாத்தா பாட்டி ரொம்ப கஷ்டப்படுவாங்க .. அவங்களை எப்படி சமாளிக்க போறா நிலா ..
விக்ராந்த் பொழிந்த அன்பிற்கு நித்திலா மனதில் காதல் வரவில்லை என்றால் தான் அதிசயம்.
ஆறு மாதம் என்று வாய் வார்த்தையாக சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தாலும், விழி வழி காதலை வழியவிட்டு அவனை காட்டிக்கொடுத்து விட்டதே.
அவளிடம் உன் மன எண்ணங்களை, செயல்களுக்கான காரணங்களை கூற நேரம் வாய்க்கவே இல்லையா. எல்லாம் கைமீறி போன பிறகு வருந்திக்கொண்டுள்ளான்.