

முகம் 18
அங்கே கற்பகம் மருத்துவமனையில் “மெடிக்கல் கேம்ப் எப்போ முடியுது சிஸ்டர்?” என்று மயல் கேட்க,
“இன்னும் டு டேய்ஸ்ல முடிஞ்சிடும் டாக்டர்” என்றார் மாலா…
“ம்ம்ம், ஓகே அக்கௌன்ட்ஸ் டீடெயில்ஸ் பார்க்கணும், டாக்டர் முரளிய வரச் சொல்லிடுங்க சிஸ்டர்” என்றவள், அங்கிருந்த கோப்புக்களைப் புரட்டத் தொடங்கினாள்.
சில நிமிடங்கள் கழித்து அவளது கதவு தட்டப்பட “எஸ் கமின்” என்க, முரளிதரன் உள்ளே நுழைந்தார்.
“மயல், அப்பாவும் அம்மாவும் அக்கௌன்ட் டீடெயில்ஸ் செக் பண்ணியாச்சே மா, ஒவ்வொரு மந்த்தும் ப்ரொப்பரா டீடெயில்ஸ் கொடுத்துடுவேனே” என்க,
“வெல் மிஸ்டர் முரளி, அதனால என்ன? அவங்க பார்த்திருந்தாலும், நான் பார்க்கணும்னு கேட்டா காட்ட மாட்டீங்களா என்ன?” என்றாள் இலகுவான குரலில்…
அவள் என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டாள். ஆனால் அவருக்கோ அந்த குளிரூட்ப்பட்ட அறையிலும் வியர்க்கத் தொடங்கியது.
“இதுல என்னமா இருக்கு? அவங்க பார்க்கலயோன்னு தான் நீ கேக்குறதா நினைச்சிட்டேன். இப்போ எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்து எக்ஸ்பிளைன் பண்ணட்டுமா?” என்று கேட்டார்.
அவளோ “ஒன்னும் ப்ரோப்லம் இல்ல மிஸ்டர் முரளி. எடுத்துக் கொடுங்க நானே பார்த்துக்கிறேன். நான் இன்னைக்கு ஃபிரீ தான். எக்ஸ்பிளனேஷன் அப்பறம் கூடப் பண்ணிக்கலாம்” என்றவள்,
“இந்த மந்த் மட்டுமில்ல, இந்த வருசத்தோடது எல்லாமே வேணும்” என்றாள்.
முரளிக்குத் தான் பேய் அறைந்ததை போலானது. செய்து வைத்திருக்கும் திருகுதாளம் எல்லாம் மொத்தமாய் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருக்க, ‘எப்படி தப்பிப்பது?’ என்ற எண்ணமே அவர் மண்டைக்குள்…
‘ஐயோ, பெத்தவங்ககிட்ட இருந்து தப்பி இப்போ புள்ளைகிட்ட போய் மாட்டணுமா???’ என்று புலம்பிக் கொண்டிருந்தது அவர் மனம்.
மாதம் ஒரு முறை தகவல்கள் எல்லாம் சமர்பிக்கும்போது அவர் படும்பாடு அவர் ஒருவரே அறிவார்.
அதிலும் மாதக் கடைசி நெருங்கும் போது எப்படியோ கணக்கை நேர் செய்து விடுவார். ஒன்று இரண்டு பிசறினாலும் முந்தய மாதக் கணக்கில் சேர்த்துச் சமாளித்துக் கொள்வார்.
ஆனால் இந்த மாதம் அந்தக் கண்டம் இன்னும் வந்திருக்கவில்லை, நாள் இருக்கிறதே என அவர் அமைதியாக இருக்க,
இவள் என்னவென்றாள் ஒட்டுமொத்த வருடத்துக்குரியதையும் கேட்டதில் மனிதர் ஆடித்தான் போய் விட்டார்.
கயல் மொழி இதனை எல்லாம் எப்போதும் ஆராய்ந்தது கிடையாது, ‘அவளைப் போல் இவளும் இருப்பாள்’ என்று எண்ணிய தன் மடத்தனத்தை அவரால் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
“சரிமா, நான் எடுத்துட்டு வரேன்” என்றவர், சென்று மேலும் இருபது நிமிடங்கள் தாழ்த்தி விட்டே எடுத்து வந்திருந்தார்.
அதனை வாங்கியவளோ “தேங்க்ஸ் மிஸ்டர் முரளி, நீங்க போய் உங்க வேலையப் பாருங்கள்” என்றவள் அந்தக் கோப்பினை திறக்க,
இங்கே இவருக்கோ ‘நீ உன் வேலையப் பாருடா’ என்று அவள் திட்டுவது போலவே இருந்தது.
தடதடக்கும் இதயத்துடன் அவர் இருக்க, அவருக்கு இன்று நல்ல நேரம் போல, புயல் வேகத்தில் அவளது கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்திருந்தான் பரஞ்ஜோதி…
அவன் பின்னாலேயே மாலாவும் வர, அவளுக்கோ இவனைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது.
“டாக்டர் எவ்வளவு சொல்லியும் கேட்காம உள்ள வந்துட்டாரு” என்று, அவனைத் தடுக்க முடியாமல் போனதில் பயத்துடன் சொல்ல,
“இட்ஸ் ஓகே சிஸ்டர், நீங்க போங்க நான் பேசிக்கிறேன்” என்றவள், பார்த்துக் கொண்டிருந்த கோப்புக்களை அவளது மேசை ட்யாரில் வைக்க, அப்போது தான் முரளிதரனுக்கு மூச்சே வந்தது.
அப்போது பரஞ்ஜோதி பரமாத்மாவாகத்தான் அவர் கண்களுக்குத் தெரிந்தான்.
அப்போது அவர் நினறிருப்பதைக் கண்டவள் “மிஸ்டர் முரளி நீங்க போகலாம்” என்க, அதற்கு மேல் நிற்க முடியாமல் அவர் சென்றதும், ஜோதியின் மீது பார்வையை நிலைக்க விட்டாள்.
அவனோ அவளைத்தான் பார்த்திருந்தான்.
‘அவன் அமருவான்’ என்று அவள் பார்த்திருக்க, அவன் அப்படியே தான் நின்றிருந்தான்.
“உக்கார பொறுமை இல்லனா இட்ஸ் ஓகே, நின்னுட்டு கூடப் பேசலாம் தப்பில்ல” என்று சொன்னவளை முறைத்தவன்,
“என்ன உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அப்படி தானே?” என்க,
“கண்டிப்பா, மூச்சுக்கு முன்னூரு தடவ என் புருசன் வாயில் இருந்து வந்த என் சக்காளத்தி ஜோதிகாவ எப்படி தெரியாமப் போகும்?” என்று அவள் மென்புன்னகையுடன் கேட்டதும்,
‘தீரா…’ என்று மனதுக்குள் நண்பனைக் கடுப்போடு எண்ணிக்கொண்டவன்,
“அபி யாரோட குழந்தை?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
அவளுக்கு அவன் கேட்பது புரிந்தாலும் “என்னோட குழந்தைதான்” என்றாள் வேண்டுமென்றே…
“அது தெரியுது நான் கேட்டது அப்பா யாருனு” என்றான் மீண்டும் திருத்தமாய்…
அவளோ “ப்ளீஸ் கொஞ்சம் உக்காந்து பேசலாமே” என்க அவனும் மறுக்காமல் அமர்ந்துகொண்டான்.
அங்கே சட்டெனத் தோன்றிவிட்ட அமைதியை இருவரும் உடைக்கவில்லை…
ஜோதிக்கு அவள் பேச்சு, பார்வை எதிலும், எங்கும் கோபத்தின் சுவடு கூடத் தெரியலவில்லை.
‘இவள் மீது தவறு இருப்பதனால் தானோ’ என்று மனதுக்குள் எண்ணம் தோன்றினாலும்,
அவள் முகம் பார்த்தவனுக்கு, இவள் தான் தீரனின் தீரா வடுவுக்கு காரணம் என அவனால் நம்ப முடியவே இல்லை…
‘எந்தப் புத்துக்குள் எந்தப் பாம்பு இருக்குனு யாருக்கு தெரியும்’ என்று எண்ணிகொண்டான்.
பெருமூச்சு ஒன்றுடன் “விஷயம் தெரிஞ்சதுனால தான் இப்போ இங்க என்னை தேடி வந்திருக்கீங்கன்னு நல்லாவே தெரியுது. நீங்க என்ன நினைச்சு வந்தீங்களோ அது தான் உண்மை. அபி என் ஜெய்யோட குழந்தை” என்றாள்.
“உங்க ஜெய்யா? இது அன்னைக்குத் தெரியலையா?” என்று பட்டென வந்தது ஜோதியின் கேள்விகள்…
“விளக்கங்கள் எங்கிட்ட எப்போவுமே இருக்கு, ஆனா அதைக் கேக்குற பொறுமை என் ஜெய்கிட்ட இல்லையே!” என்றவள்,
“பை தி வேய், இப்போ அந்த விளக்கங்கள சொல்லுற எண்ணத்துல நான் இல்லை” என்றாள்.
“வேற எந்த விளக்கமும் எனக்கு வேணா, அபியப் பத்தி தீரன் கிட்ட மறைச்சதுக்கு காரணம் தான் வேணும்” என்று கேட்டவன்,
“இன்னைக்கு வரைக்கும் இணர் மட்டும்தான் அவன் பொண்ணுன்னு நினைச்சு வாழ்ந்துட்டு இருக்கறவன்கிட்ட, இல்லடா உனக்கு இன்னொரு பையன் இருக்கான். நீ மறுபடியும் ஏமாந்துட்டன்னு எப்படி என்னால சொல்ல முடியும்?” என்றான்.
மயலோ “இணர்…” என்று மெல்லிய குரலில் மகளின் பெயரை சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.
அது அவனுக்கும் புரிய, “அபிய மறைச்சிங்க சரி இணர் வேணான்னு எதுக்காகத் தூக்கிப் போட்டீங்க?” என்று கேட்டவனுக்கு
‘அவள் எதிலாவது தயங்குவாள், தப்பை உணர்வாள்’ என்ற முனைப்பு தான்.
அவளோ புன்னகையுடன் “நான் என் ஜெய் கூட இருக்க முடியாது அதான் என் ஜெராக்ஸ்ஸ அவருக்குக் கொடுத்தேன்” என்றாள்.
ஜோதி கேள்வியுடன் அவளையே பார்க்க, தியாகராஜன் ராம் பிராசாத்திடம் சொல்லிய அவளது பிரசவ நாளில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள்,
“அபியப் பத்தி ஜெய் கிட்ட சொல்றதும் சொல்லாததும் உங்க விருப்பம், பட் நானும் அபியும் மறுபடியும் யூஎஸ் போயிடுவோம். என் ஜெய்க்கு நான் வேணாம். என் ஜெய் கஷ்டப்படக்கூடாதுனு நினைச்சீங்கனா. இத பத்தி எப்போவுமே சொல்லாதீங்க. இத நான் உங்க கிட்ட உதவியா கேக்கல. உரிமையா கேக்குறேன். சொன்னா என்ன ஆகும்னு என்ன விட உங்களுக்கு நல்லாவே தெரியும். சோ…” என்று நிறுத்தினாள் இறுகிய குரலில்…
அவள் இவ்வளவு நேரம் பேசியதில் எங்கும், ‘உன் நண்பன்’ என தீரனை விளிக்கவே இல்லை அவள். அத்தனையிலும் ‘என் ஜெய்’ மட்டுமே!
அதனை உணர்ந்து கொண்டவனும் கேட்டே விட்டான்.
புன்னகைத்தவளோ “அதெப்படி என் ஜெய்ய பேச்சுக்குக் கூட உங்களுக்கு விட்டுத்தர முடியும்? அதெல்லாம் எப்போவும் நடக்காது” என்றாள்.
இத்தனை நாட்களில் தீரனிடம் கூட அவனது பழைய கதைகளை அவன் கேட்டதே இல்லை. அவன் இருக்கும் மனநிலையில் முதலில் அவனைத் தேற்றுவதே ஜோதிக்கு முதன்மையாய் இருக்க அவன் காயத்தை கீற எண்ணவில்லை…
அவனாக சொல்வதை மட்டுமே கேட்டுக்கொள்வான்.
அன்று நண்பன் வந்து நின்ற கோலமும். அவன் மடி சாய்ந்து அழுத அழுகையும் அவனை இன்று வரை குற்றுயிராக்கிக் கொண்டு தானே இருக்கிறது. அன்று தான் நண்பன் காதலித்தான் என்றே அவனுக்குத் தெரிய வந்திருந்தது.
காதல் விடயம் தெரியவந்த அன்றே பிரிவும் சேர்த்தே தெரிவந்திருக்க, நண்பனுக்காக வருந்தித்தான் போனான்.
நீதிமன்றத்தில் நடந்த அனைத்தும் சித்தார்த்தின் மூலம் ஜோதி அறிந்ததே! அதனைக் கொண்டு அவள் மீது அவனுக்கும் கோபம் தான்.
இணர்வி நன்பண் வாழ்வில் வரும் வரை, அவனைத் தேற்றுவதே ஜோதிக்கு சிரமாகித் தான் போயிருந்தது.
அந்த சம்பவத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் பரணி பிறந்திருந்தான்.
அப்போதைக்கு தீரனுக்கு இருந்த ஒரே ஆறுதல் பரணி தான். அவன் உருவில் கருவில் இருக்கும் அவன் உயிரை எண்ணினானோ என்னனோ, பரணியை அணைத்து ஆறுதல் தேடிக்கொண்டான்.
இணர்வி வருகையின் பின்னும், இரு குழந்தைகளும் தங்கள் மழழைப் பேச்சில் அவனை சிறிது சிறிதாய் மீண்டுக் கொண்டிருந்தனர்.
பல நேரங்களில் உணர்வுகளை மறைத்துக் கொள்பவன், சில நேரங்களில்
‘அப்பாக்காக, அதுவும் அந்த ராம்பிரசாத்துக்காக என்னை விட்டுட்டாளே மச்சான்’ என்றும்,
“என்னை ஏமாத்திட்டா மச்சான் அவ’ என்றும்
‘என் குழந்தை அவளுக்கு வேணாமாமே! என்னத் தூக்கிப் போட்டது போல என் பொண்ணையும் தூக்கிப் போட்டுட்டாளேடா’ என்றும், இப்படி பல வகையில் புலம்பும் அதே தீரன்,
‘அவ என் மயில்டா மச்சான்’ என்றும்
‘என்னால அவ இல்லாம முடியலையே! நான் எல்லாத்தையும் மறந்து அவளைத் தூக்கிட்டு வந்துடவா?’ என்றும்
‘நான் போய் கூப்பிட்டா அவ அப்பாவ விட்டிட்டு வருவாளாடா?’ என்றும் அவள் மீது அவன் வைத்த காதலையும் பிதற்றுவதுண்டு.
அப்போதெல்லாம் ‘இப்படிப் பட்ட காதலை இழக்க அந்தப் பெண்ண்ணுப் பைத்தியம் தான் பிடித்திருக்க வேண்டும்?’ என்று பல முறை நினைத்திருக்கிறான்.
தீரன் மறந்தும் அவள் காதலையோ, அவர்கள் காதலித்த தருணம் பற்றியோ பேசியது கிடையாது.
அதனை எல்லாம் மறக்க வேண்டும் என எண்ணினான் போலும். மனதின் அடியாளத்தில் புதைத்துக் கொண்டான்.
ஆனால் இன்று இவளுடன் பேசிய இந்த சில நிமிடங்களில் அவள் விழிகளிலும் அவள் வார்த்தைகளிலும் தான் எத்தனை காதல்??
பரஞ்ஜோதிக்கு இப்போதும் அவள் மீது கோபம் தான் வந்தது.
ஆம் கோபம் தான். ‘காதல் இல்லாமல் நண்பனை ஏமாற்றினாள்’ என்று முன்னர் எண்ணிக் கோபம் கொண்டிருக்க, இப்போதோ ‘இத்தனை காதல் இருந்தும் அவனையும் வதைத்து அவளும் சிதைந்து போயிருக்கிறாளே!’ என்ற கோபம்…
“இவ்வளவு காதல் இருக்குனா அப்பறம் ஏன் பிரிஞ்சிருக்கணும்? அவனை நம்பாம போனது ஏன்?? இணர அவன் கிட்ட கொடுத்துட்டு இப்படி விலகி இருக்குறது ஏன்??? அபியை அவன் கிட்ட இருந்து பிரிச்சது ஏன்?? அவன் கூட வாழாம அவனையும் வாழ விடாம இப்படி படுத்துறது ஏன்?” என இப்படி பல ‘ஏன்’களை உச்ச கோபத்தில் அவன் விடாமல் கேட்டிருந்தான்.
அவளோ அவனது அத்தனை கேள்விகளுக்கும் பதிலாய் “என் ஜெய்க்காக” என்றாள் புன்னகை மாறாமல்.
_______________
அங்கே ராம் பிரசாத்தின் கெஸ்ட் ஹவுஸில் ராஜ் வெளியே யாரையோ எதிர்பார்த்தபடி நிற்க, ராம்பிரசாத்தின் கார் அந்த வாளாகத்துக்குள் நுழைந்தது.
இறங்கியதும் “என்னாச்சு ராஜ், ஒரு வேலைய தந்தா ஒழுங்கா பார்த்துக்குறது இல்லையா??? இப்போ அவங்க கேட்டா நான் என்னனு சொல்லுவேன். நீ இப்படி இர்ரெஸ்பான்சிபிலா இருந்ததில்லையே! அதனால தான் உன்கிட்ட இந்த வேலையைக் கொடுத்தேன். நீ என்னடான்னா இப்படி கவனமில்லாம இருந்திருக்க” என்றவர் உள்ளே நுழைந்தார்.
அங்கே கடத்தப்பட்ட அந்த இருபது குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு இருந்தது.
அந்தக் குழந்தையைப் பரிசோதித்து முடித்தவர் மருந்தையும் எழுதிக்கொடுத்து வெளியே வந்தார்.
ராஜ் என்பவன் இன்னும் அப்படியே நிற்க, “எனக்குப் புரியுது ராஜ், இதுல உன் தப்பு எதுவும் இல்லனு தெரியுது. ஆனா நான் இப்போ பண்ணுறது பல வருச போராட்டத்தோட தொடர்ச்சி, இது எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கு நான் சொல்லனுமா என்ன? அதுவும் அந்தக் குழந்தைங்க அவங்கள வெச்சி நான் போட்ட திட்டம் எல்லாம் எவ்வளவு முக்கியமானது. எனக்கு அவங்க தேவை கவனமா பார்த்துக்க ராஜ்” என்று வெளியேறியவர்,
கார் வரை சென்று திரும்பி “இனிமேல் என்னை அடிக்கடி கூப்பிடாத, நான் இங்க வர்றது அவ்வளவு சேஃப் இல்ல, ஏற்கனவே ஆதாரம் தேடிட்டு இருந்தவனுக்கு இது கெடச்சா என் திட்டம் எல்லாம் வீணாப் போயிடும்” என்றவர் கிளம்பி இருந்தார்.
____________
அங்கே காவல் நிலையத்துக்குச் சென்ற பரஞ்ஜோதி, தீரனுடன் பேச முயற்சி செய்தும் முடியாமல் போனது.
ஒன்று அவனை வேலை இழுத்துக் கொண்டது இல்லையேல் இவனை இழுத்துக் கொண்டது.
எல்லாம் முடித்து இரவாகி விட, இவர்கள் அங்கே தங்கி இருக்கும் இடத்துக்கு சென்ற நேரம், அங்கே இணரைப் பார்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பெண், இவர்கள் வரும் வரை காத்திருந்தாள்.
இவர்கள் வர நேரமாகும் என்பது தெரிந்ததால் இணரைப் பார்த்துக்கொள்ள, ஒரு பெண்ணை ஏற்பாடு செய்திருந்தான் தீரன்.
இவர்கள் வந்ததும், அவள் சொல்லிக்கொண்டு கிளம்பி விட, தீரன் இணரின் அறைக்குச் சென்றவன் தூங்கும் மகளின் கன்னத்தில் முத்தம் வைத்து, “குட் நைட் இணர்குட்டி, ஐ லவ் யூ” என்க, அவளோ தூக்கத்திலும் “குட் நைட், ஐ லவ் யூ ஜெய்” என்றாள்.
எப்போதும் போல் மகளின் அன்பில் புன்னகை தான் அவன் முகத்தில், ஆனால் வேண்டாம் என விரட்டும் பல நினைவுகளும் கூடவே வர, “குழந்தையையும் அவளை மாதிரியே பெத்து வெச்சிருக்கா ராட்சசி” என்று சொல்லிக் கொண்டவனுக்கு ஏனோ எப்போதும் இருப்பதைவிட இன்று அவள் எண்ணங்கள் அதிகமாகி இருந்தது.
அதற்கு அவன் இன்று சந்தித்த நபரும் கூட காரணமாய் இருக்கலாம்…
கண்களை மூடித் தன்னை சமன் செய்தவன், அறைக்கதவை மூடி வெளியே வந்திருந்தான்.
அங்கே ஜோதி இன்னும் உடை மாற்றாமல் இருக்க, தீரன் நேற்றுப் போல் இன்றும் அவனை கண்டு கொள்ளவில்லை…
நேற்றைக்கு முன் தினம் தான் அரவிந்த்திடம் அப்படி நடந்து கொண்டதுக்கு திட்டி இருந்தான் ஜோதி. அதனால் பேசாமல் இருக்கிறான் போல என்று நேற்று நினைத்திருக்க, இன்றும் அதுவே தான் தொடர்கிறது என ஜோதியின் மூளை அப்போது தான் எடுத்துக்கொடுத்து.
வரும் போது கூட இவன் அபியின் யோசனையில் வந்ததில், ஜீப்பில் வைத்துக் கூட நண்பன் பேசாதது தெரிந்திருக்கவில்லை. இப்போது யோசிக்கையிலேயே அவனுக்கு அது புரிய, நண்பனைத் தேடினான்.
அவனோ குளியலறையில் இருக்க, காத்திருக்கத் தொடங்கியவனின் காத்திருப்பு பத்து நிமிடங்கள் நீள, வெளியே வந்த தீரன் அப்போதும் ஜோதி நிற்பதைக் கூடக் கணக்கில் எடுக்காமல் சமையலறை நோக்கிச் சென்று விட, ஜோதி கடுப்பாகி விட்டான்.
அவன் பின்னே சென்றவன் “என்னடா மூஞ்சத் திருப்பிக்கிட்டுப் போற, என்ன நான் உன்ன இதுக்கு முதல் திட்டுனதே இல்லையா?” என்று பொரிய, தீரன் நிமிர்ந்து தீர்க்கமாய் பார்த்தானே ஒழிய, பேசவில்லை…
“தீரா” என்று ஜோதி கோபமாய் அழைக்க,
“இப்போ உனக்கு என்ன வேணும்?” என்றான் தீரன்.
அதில் உடைந்த குரலுடன் “என்னடா தோஸ்து நான் ஏதும் பண்ணிட்டேனா?” என்றான் கலங்கிவிட்ட குரலுடன்…
இப்படியெல்லாம் தீரன் அவனிடம் முகம் காட்டியது கிடையாதே!
தப்பு என்றால் திட்டி விடுவான். இப்போது என்னவென்றால் தவிர்க்கிறான். நிச்சயம் அவன் மனது கஷ்டப்படும்படி ஏதும் செய்து விட்டேன் என்றே அவன் உள்ளம் கூறியது.
அவன் அப்படிக் கேட்டதும் தீரன் மனமும் கலங்க, “தேனு உண்டாகி இருக்குறது உனக்குத் தெரியுமா தெரியாதா?” என்று கேட்க, ஜோதி தலையோ ‘ஆம்’ என ஆடியது.
“எப்போ?” என்று மீண்டும் அவனிடமிருந்து கேள்வி வர,
ஜோதியோ மெல்லிய குரலில் “இங்க வர்ற அன்னைக்கு” என்றான்.
அதில் அவன் கன்னத்தில் ஒன்று விட்ட தீரன், பாய்ந்து நண்பனை அணைத்துக் கொண்டான்.
“என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க ரெண்டு பேரும், உங்க உணர்வுகளை விட என்ன ஏன் முக்கியமா பார்க்குறீங்க? அவ கூட நீ இந்த நேரத்துல இருக்க வேணாமா ஜோதி” என்று கேட்டான் உடைந்துவிட்ட குரலில்…
“இதுக்கு உனக்கு நான் காரணம் சொல்லனுமா தீரா? இதுக்கா என்னோட பேசாம இருந்த நீ, என் பொண்ணுக்கு அவளோட ஜோதிப்பாவும் மட்டுமில்ல இந்த தீராப்பாவும் கூட இருக்கணும், நாம சேர்ந்தே போவோம். இல்லனா நம்ம பொண்ணு கோச்சிப்பா?” என்றான் நண்பனை இலகுவாக்கும் பொருட்டு…
அதில் இன்னும் தான் தீரன் கண்ணீர் பெறுகியது… ஏற்கனவே அந்த தாதியை இன்று மீண்டும் கண்டதில் அவன் பழைய நினைவுகள் எல்லாம் மேலெழும்பி இருக்க, இன்னும் உடைந்து தான் போனான்.
“ஏன் ஏன்” என மீண்டும் அதே கேள்வியையே கேட்டுக்கொண்டிருக்க,
கடுப்பான ஜோதியோ “ஏன்னா நீ என் ஜெய்” என்று சொல்ல, சட்டென அவனைத் தன்னில் இருந்து பிரித்திருந்தான் தீரன்.
நண்பனையே அவன் அதிர்வாய் பார்க்க, “வார்த்தைக்கு வார்த்தை ‘என் ஜெய் என் ஜெய்’னு பேசுற ஒருத்தர இன்னைக்கு மீட் பண்ணேன் அதான் அது எனக்கும் ஒட்டிக்கிச்சு போல” என்றான்.
தீரனோ “மயலப் பார்த்தியா?” என்க,
“ஆமாமா, உன் மயிலத்தான் பார்த்தேன். நீயே அறிமுகப் படுத்தாட்டி என்ன, நாங்களே மீட் பண்ணிகிட்டோம்” என்றவன்,
“அவகிட்ட கூட, என் மானத்தை வாங்க மறக்கல்லல நீ? சக்காளத்தி எங்குறா?” என்று அவள் பேசியதைச் சொல்லி ஜோதி புன்னகைக்க, தீரனுக்கும் சிரிப்பு வந்தது.
ஜோதியே மீண்டும் “இன்னொரு விஷயம் தெரிஞ்சிகிட்டேன். முதல்ல உனக்கு தெரியாதுன்னு அவ்வளவு கோபம் வந்திச்சு, ஆனா அப்பறம் யோசிச்சுப் பார்த்ததுல உனக்குத் தெரியாம இருக்காதுன்னு ஒரு எண்ணம் ஆழமா தோணுது, உனக்கு தெரியுமா தெரியாதான்னு நீதான் சொல்லணும்” என்க, தீரனிடம் மௌனம்.
கண்களை மூடி உணர்வுளை அடக்கி சிறிது நேரம் எடுத்துக்கொண்டு கண்களைத் திறந்தவனோ “அபி” என்றான் மெல்லிய குரலில்…
“அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கு?” என்றவன் அமைதியாக,
“ம்ம்ம் தெரியும், நானும் அவளும் பிரிஞ்சி, அவ அங்க அமெரிக்கா போனப்பறம் பார்க்கப் போயிருந்தேன் அப்போ தெரிஞ்சிது, அன்ட் இணர என்கிட்ட கொடுத்த அந்த நர்ஸ் கிட்ட அன்னைக்கே விசாரிச்சேன் மிச்சம் எல்லாம் சொன்னாங்க. இன்னைக்குக் கூட அவங்கள மீட் பண்ணேன்” என்றவன் குரல் உடைந்து வர,
ஜோதியோ நண்பன் கரத்தைப் பற்றி “அப்போ ஏன் அவ கூட சேர்ந்து வாழல தீரா? உன் பையனுக்காக, உங்க குழந்தைகளுக்காக போய் இருக்கலாமே!” என்று கேட்க,
“எப்படி போக சொல்லுற ஜோதி, என் குழந்தைங்களுக்காகப் பார்த்தா அவ யாராம்?” என்று நிறுத்தியவன்,
மீண்டும் “அவ பண்ணத மறந்துட்டு என்னால இருக்க முடிஞ்சாலும் அவளால அது என்னைக்கும் முடியாதே ஜோதி!” என்றான்.
“ஒரு வேகத்து அப்பாக்காக அப்படி பண்ணிட்டாடா அவ, என் மேல எவ்வளவு காதல் தெரியுமா??? அதையும் தூக்கிப் போட்டுட்டு அவ அப்பாக்காக அன்னைக்கு நின்னா, ஆனா எல்லாத்தையும் மறந்துட்டு எங்க வாழ்க்கைக்காக காதலுக்காக அவகிட்ட போகலாம்னு நான் அவளை தேடிப் போனப்போ தான் அபி விஷயம் தெரிய வந்திச்சு கூடவே அவ எனக்காக இணரக் கொடுத்ததும் சேர்த்து” என்றவன்,
“அதுக்கு மேல பொறுமையா இருக்க என்னால முடியல நான் தியாகராஜன் சாரை மீட் பண்ணிப் பேசுனேன். அப்போ தான் அவ மனநிலை என்னனு எனக்குத் தெரிய வந்திச்சு, இந்த கேஸ்ல அவ அப்பா பக்கம் தப்பு இல்லனு நிரூபிக்கனுமாம். அப்போ தான் என்னோட அவளால நிம்மதியா வாழ முடியுமாம். அது எப்படிடா மச்சான் நடக்கும்???” என்று விரக்தி புன்னகை சிந்தினான்.
ஜோதியோ “தீரா…” என்க, அது அவன் காதில் விழவில்லை, மொத்தமாய் உடைந்திருந்தான்.
“இல்லனா குற்றவுணர்ச்சில உயிரை விட்டுடுவாளாம். அவ சாகவா நான் அவளை காதலிச்சேன். இப்போவும் என்னால அவளை இழுத்துட்டு வந்து வாழ முடியும். ஆனா நான் அதப் பண்ண மாட்டேன். இந்தக் கேஸ் எப்போ முடியுதோ அப்போ எங்க வாழ்க்கை மறுபடியும் முடிஞ்சிடுமே மச்சான். அப்போ எப்படி அவளை என்னால கூட்டிட்டு வர முடியும்? அதுக்காக இந்தக் கேஸ்ஸையும் என்னால விட முடியாது, வாழ்க்கையா தொழிலான்னு கேள்வி வரும் போது நான் என்னடா பண்ணுவேன்” என்று கேட்டான்.
அவன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டட்டும் என ஜோதி அமைதியாய் இருக்க, எல்லாம் வெளியே வந்தது.
“சரினு அவ எனக்கு இணர விட்டுக் கொடுத்த மாதிரி நான் அவளுக்கு அபிய விட்டுக் கொடுத்துட்டேன் மச்சான். ஆனா இன்னைக்கு வரைக்கும் அபியோட நிழலா நான் இருக்கேன். தியாகராஜன் சார் மூலமா அபியையோட ஒவ்வொரு அசைவையும் என்னால பார்க்க முடிஞ்சிது, இப்போவும் அவனோட செலவு எல்லாத்தையும் நான் தான் அவர் மூலமா பார்த்துக்கிறேன்” என்று தரையில் மடங்கி அமர்ந்தவன்,
“ஆனா என் பையன் அப்பாக்காக ஏங்கும் போது கூட என்னால போய் பார்க்க முடியலயே மச்சான். அவனை தூக்கிக் கொஞ்சனும்னு அவ்வளவு ஆசையா இருக்கும் ஆனா முடியலையே! இங்க கைக்கு எட்டுற தூரத்துல இருந்தும் அரவணைச்சுக்க முடியாத அளவுக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம்டா? எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி?” என்றான்.
சிறு அமைதிக்குப் பின் அவனே “சித்து கேட்டான் அவளை நேர்ல பார்க்கப் பயமான்னு” என்று சொல்லிப் புன்னகைத்தவன்,
“அன்னைக்கு விரைப்பா அவன்கிட்ட இல்லைனு சொன்னேன். ஆனா உண்மையில ரொம்ப பயம் அது தான் உண்மை. எனக்கு அவளைப் பிடிக்காது, அவ என்ன ஏமாத்திட்டான்னு என்னை நானே ஏமாத்திப்பேன் மச்சான். எல்லாம் தெரிஞ்சும் அவ வேணும்னு அடம்பிடிக்கிற மனச என்னடா பண்ண?” என்று அவன் பிதற்றல்கள் நீண்டு கொண்டே தான் போனது.
அவனை சமாதானப்படுத்த ஜோதியால் கூட முடியவில்லை. அவன் கடந்த கால நினைவுகளை மொத்தமாய் ஜோதியிடம் கொட்டத் தொடங்கினான்.
இதே அங்கே நேரம் ஜோதி வந்து சென்ற தாக்கத்தில், மயல் மொழியும் அவள் கடந்தகால நினைவிலேயே மூழ்கிப் போனாள்.
ஈர்க்கும்…

