

முகம் 12
மேலும் ஒருநாள் கடந்திருந்தது. அன்று தான் தீரன் சென்னை செல்ல இருக்கிறான்.
துவா, சித்தார்த் இருவரும் நேற்றே ஊருக்கு வந்திருந்தனர். மருத்துவ முகாமுக்கு இன்னும் இரு நாட்கள் இருந்தது தான் ஆனால் சித்தார்த் அவன் திட்டத்தை செயல் படுத்த முன்னரே இங்கே வந்திருந்தான்.
அவளைக் கண்டதும் மலர் கூட கலாய்த்திருந்தாள்.
“விவேக் படிக்காதவன்ல டான் ஆகி படியேறி மேல போய் கீழ வருவாரே அப்படி இருக்கு துவா உன் கதை. போய் அஞ்சு நாள்ல திரும்பி வரவா அத்தனை அழுக” என்று மலர் கேட்டு, அவளைக் காணும் நேரமெல்லாம் விவேக் போல படியேறி இறங்கிக் காட்டிச் சிரிக்க, மற்றவர்களும் சிரித்து துவாவை வாரி இருந்தனர்.
பெரியவர்களுக்குத் தீரன் செல்ல இருக்கும் கவலை கூட, இந்த அரட்டையில் கொஞ்சம் மறைந்தது எனலாம்…
தீரனோ தாயாராகித் தோட்டத்து வீட்டைப் பூட்டி சாவியை எடுத்துக் கொண்டவன், இணர்வியுடன் பெரிய வீட்டுக்கு வந்தான்.
அங்கே அவனுக்காக அனைவரும் வாசலிலே காத்துக் கொண்டிருக்க, பெட்டியை வண்டியில் வைத்து, முதலில் மாணிக்கவேலின் காலில் விழுந்து எழுந்தவன்,
“நான் போயிட்டு வரேன் தாத்தா, உடம்ப பார்த்துக்கோங்க, இப்போ பனிக்காலம் வேற ஆரம்பிச்சிடிச்சு வெளில போய் வீசிங் பிரச்சனையைக் கூட்டிக்காதீங்க” என்று அவரிடம் சொன்னவன்,
சிவரஞ்சனியிடம் “ஏய் வாலு, இது உன் பொறுப்பு, இவர் ஏதாச்சும் அடம் பண்ணினா எனக்கு சொல்லணும் சரியா?” என்று சொல்ல, அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.
“அடேய் ராஸ்கல், இது வைரம் பாஞ்ச கட்டடா, எனக்கே நான் கிழவன்னு ஞாபகப் படுத்திறியா? இன்னமும் நான் போனா எத்தன பொண்ணுங்க மயங்குவாளுங்க தெரியுமா?” என்று மீசையை முறுக்கியபடி மாணிக்கவேல் கேட்க,
தீரன் பேச முன் முந்திக்கொண்ட கிருபனோ “பொண்ணுங்க இல்ல தாத்தா கிழவிங்க, இருந்தாலும் உன் குசும்பு இருக்கு பார்த்தியா? மேலே இருந்து உன் பாக்கியம் இதெல்லாம் தன்னோட பாக்கியமா நினைச்சு பார்த்துட்டு தான் இருக்கும். கோபம் வந்து கண்ணைக் குத்திடும் ஜாக்கிரதை” என்று அவரை வார,
“நீ போடா பொறாமை பிடிச்சவனே! அதெல்லாம் என் பாக்கியம் ஒன்னும் சொல்லாது” என்றவர், புன்னகை முகமாக நிற்கும் தீரனிடம்,
“நீ பார்த்து போயிட்டு வாய்யா. நீ போற விஷயம் இந்தத் தடவ உனக்கு சிறப்பானதா தான் அமையும்” என்றார்.
அந்த நேரம் சமயறையில் இருந்து ஒரு பெட்டியுடன் வந்த வேதவல்லியோ, “இணர், உன்னை எதுக்குக் கூட்டிட்டு போகணும், நாங்க இல்லையா என்ன? எல்லாத்துலையும் பிடிவாதம். அங்க ஊருக்குப் போய் என்ன சாப்பாடு இருக்குமோ? இதுல முறுக்கு பலகாரம் எல்லாம் இருக்கு, அதோட உனக்குப் பிடிச்ச அதிரசமும் வெச்சிருக்கேன். மதிய சாப்பாடும் வெச்சிருக்கேன். யாருக்கும் கொடுக்காம சாப்பிடு சரியா?” என்று தீரனைப் பார்த்தபடி சொல்ல,
அவனோ ஒரு புன்னகையுடன் குறும்பாய் இவரைத் தான் பார்த்திருந்தான். அதில் சீண்டப்பட்டவர் “இந்தாடி இணர், உனக்கு மட்டும் தான் சொல்லிப்புட்டேன்” என்க,
“சின்னப்பாட்டி எனக்கு தான் அதிரசம் பிடிக்காதே! ஜெய்க்கு தானே பிடிக்கும். எனக்கு நீ ஜாங்கிரி தான செஞ்சிருக்கணும்” என்று சமயம் பார்த்து அவர் கள்ளத்தனைத் அவளறியாமலே காட்டிக் கொடுத்திருக்க, அங்கே அனைவரும் கவலை மறந்து சிரித்தே விட்டனர்.
குழந்தை இணரும் ‘தான் பெரிதாய் நகைச்சுவை சொல்லி விட்டேன் போலும்’ என அவளும் கை தட்டிச் சிரித்தாள்.
அப்போதும் விட்டுக்கொடுக்காமல் “வயசாகிடுச்சுல அதான் மறந்துடிச்சு” என்றவர் சமாளிப்பில் இன்னும் புன்னகை தான் அங்கே!
வேதவல்லியோ கோபம் போல் நின்று கொள்ள, அவர் பாசம் அவர்கள் அறியாததா? அண்ணன் மகன் என்றால் கொள்ளை பிரியம் அவருக்கு…
தனக்கு குழந்தை பிறந்ததில் மகிழ்ந்ததை விட, அது பெண் பிள்ளையாய் இருந்ததில் அவர் மகிழ்ந்தது தான் அதிகம்.
தீரனுக்கு மனைவியைப் பெற்று எடுத்துவிட்டேன் என்று அத்தனை ஆர்ப்பாட்டம் செய்து விட்டார்.
இதில் அக்கா வரலட்சுமியிடம் சண்டை வேறு, ஒரு மாதத்திக்கு முன் அவரும் சிவாவை பெற்றிருக்க, அப்போதே தீரனுக்காக சண்டை போட்டவர் அவர்.
மலர் கூட வளர்ந்த பிறகு, அம்மாவின் அலுச்சாட்டியத்தில் கோபம் கொள்வதுண்டு.
மலரிடமும் சரி தீரனிடமும் சரி அவர் விருப்பதின் சாயல் இல்லாமல் போனது தான் அவரது பல வருட ஆசை தீக்குளிக்கக் காரணம்.
அந்தக் கோபத்தில் தான் அவனுடன் அவர் பேசுவதில்லை. ஆனாலும் அவன் மீதான அக்கறை என்றும் குறைந்ததில்லை, அவர் பேசாமல் இருப்பதும் அந்த அக்கறையின் உச்சம் தானே!
தீரனோ புன்னகையுடன் வரலட்சுமி கருணாகரன் இருவரிடமும் ஆசி வாங்கியவன், அருகில் நின்றிருந்த வேதவல்லியின் காலில் விழப்போக அவனைத் தடுத்தவர்,
“ஏங்க, இங்க வாங்க அவன் தான் கால்ல விழ வர்றான்னு தெரியுதுல, வந்து என் பக்கத்துல நிக்கிறதுக்கு என்ன உங்களுக்கு” என்று அவரது கணவன் குமரவேலிடம் ஆரம்பித்தவர்,
“யேடி மலரு, போ போய் சாமியறையில திருநீரு இருக்கும் எடுத்துட்டு வா” என்று மகளிடம் முடித்தார். அவளும் போய் எடுத்து வந்து கொடுக்க, மன நிறைவுடன் அவனை ஆசீர்வதித்தவர் அவன் நெற்றியில் திருநீரையும் வைத்து விட்டார்.
அவனுக்கு ஏனோ அன்று அத்தனை உணர்வு பூர்வமான நாளாய் தான் இருந்தது.
இத்தனைக்கும் வேலைக்குத் தான் செல்கிறான். இதற்கு முதல் இப்படி அவன் வீட்டை விட்டு வெளியே தங்கவென கிளம்பிய பொழுதுகள் ஏராளம் தான். ஆனால் இன்று ஏதோ ஒரு புது உணர்வு…
வேதவல்லியின் கண்கள் கூடக் கலங்கித்தான் இருந்தது. அவனுக்கும் கலங்கி விடும் போலிருக்க, திருநீரை வைத்து விட்டவரின் கரத்தைப் பற்றியவன்,
“இன்னும் எத்தனை நாளைக்கு என்கூட பேசாம இருக்கப்போறன்னு பார்த்துக்கிறேன் வேதா. ரொம்பத் தான் பண்ணுற நீ?” என்றவன் அவர் எதிர் பாராத நேரம் அவர் கன்னத்தில் முத்தம் வைத்திருந்தான்.
அதில் அதிர்ச்சியடைந்த வேதாவுக்கு திட்ட முடியாமல் வெட்கம் வந்து விட்டது.
சிறியவர்கள் ஒன்றாக சத்தமிட்டு கோஷம் எழுப்ப, இன்னும் வெட்கமாகிப் போனது அவருக்கு,
குமரவேலோ “போதும் போதும் விடுங்க என் பொண்டாட்டிய” என்று வேதவல்லியை ஆதரவாய் தாங்கிக்கொண்டார்.
அவர் அறியாத மனைவியா? இன்று தன் மனைவி எவ்வளவு சந்தோஷத்தில் இருப்பார் என்பது அவரறிந்தது தானே! கூடவே இன்றைய தூக்கமும் அவருக்கு எட்டாக்கனி தான்.
தினமும் கவலையைப் பகிர்பவர் இன்று சந்தோசத்தை பகிர்வார் அவ்வளவே வித்தியாசம். ஆனால் எது மாறினாலும் மனைவியின் உணர்வுகளையும் அவளையும் தாங்கிக் கொள்வது அவராகிற்றே!
இப்படி தீரனை வழியனுப்ப நின்றிருந்த ஒவ்வொருவரும் அரட்டையில் இருக்க, இது அத்தனையிலும் கலந்து கொள்ளாமல் ஒரு ஓரமாய் நின்றிருந்த சக்திவேலின் முகத்தைலோ கவலையின் ரேகை.
தந்தை அன்று அழைத்துப் பேசியது தான் மனதில் வந்து போனது. பேசிவிடலாம் என்று எண்ணினாலும் அவரது மனது அதற்கு இடம் கொடுக்கவில்லை…
மகனை நிச்சயம் நேர்மையான ஒருவனாக மட்டுமே பார்க்க வேண்டும் என்பது அவரது எண்ணம். அது அவன் வாழ்விலும் தொழிலிலும் சேர்த்தே!
பொறுமையாக இத்தனை நாள் கடந்தாகிற்கு இதோ மகன் ஒரு முடிவுக்கு வந்து அங்கே செல்லவிருக்கிறான். சென்று வரட்டுமே! செல்லும் காரியம் நன்மையில் முடிந்தால் அவருக்கும் மனநிறைவு தானே!
‘சென்று வரட்டும் பேசிக்கொள்ளலாம்’ என்றது அவர் மனம்.
இதே போலொரு நாளில் சென்னை செல்வதாக வந்து அவரிடம் ஆசி வாங்கிச் சென்ற நாள் அவர் நினைவலைகளில் எழுந்தது.
அன்று அவனைக் கொண்டாடி அனுப்பியவர் அவர். மகனின் நியமனம், அதுவும் காவல் துறையில் உயர் பதவி பெற்று சென்னை செல்லவிருக்க, எத்தனை ஆர்ப்பாட்டமாய் பெருமை பொங்க அனுப்பி வைத்தார்.
ஆனால் போன இரண்டு வருடத்தில் கையில் குழந்தையுடன் வாழ்க்கையில் மட்டுமல்லாது அவன் வேலையிலும் தோற்றுப் போயல்லவா அவரிடம் மீண்டும் வந்திருந்தான்.
மகனின் அந்தச் செயலை ஏற்றுக்கொள்ள முடியாமல் இன்று வரை பேசாமல் தண்டிப்பவருக்கும் அது தண்டனை தானே!
முதன் முதலில் அவருக்கு அப்பா ஸ்தாணத்தை கொடுத்து அழகு பார்த்தவன் அவன்.
அவனுடன் பேசாமல் இருப்பது என்பது அவருக்கு கொடிய தண்டனை தான். வெளியே விரைப்பாய் சுற்றினாலும் மனிதர் உள்ளே உடைந்து தான் போயிருந்தார். இணர்வியைப் பார்க்கும் போதெல்லாம் அத்தனை வலிக்கும், மகனுக்கு தெரியாமல் தான் அவளைக் கொஞ்சுவார்.
ஆனால் அவனுக்கு அது தெரியாது என்று எண்ணிக்கொண்டிருக்கும் அவர் அவரறியவில்லை, அவர் அப்படியாவது கொஞ்சட்டும் என்று தான் அவன் தெரியாதது போல் நடிக்கிறான் என்று…
இன்று மீண்டும் அவன் அப்படி வந்து நின்றதில் பழைய நினைவுகள் அவரை அலைக்களிக்க மனதில் ஏதோ நெருடல்.
தீரனோ ஒவ்வொருவராய் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் பார்வையும் தந்தையின் கசங்கிய முகத்திலேயே இருந்தது.
ஆனால் போய் பேச ஏதோ ஒரு தயக்கம். கனிந்திருந்த அவர் முகம் அவனுக்கு அவர் மனதை விளக்க,
‘என்ன மன்னிச்சிடுங்கப்பா, நீங்க எனக்கிட்ட கேட்ட ரெண்டு விஷயத்துல ஒன்னையாவது பண்ணிட்டுத் தான் உங்ககிட்ட பேசுவேன். இப்போதான் அதுக்கான நேரம் வந்திருக்கு, சீக்கிரமே உங்க மகனா வருவேன்ப்பா. அப்போ உங்ககிட்ட உங்க தீரனா ஆசீர்வாதம் வாங்கிப்பேன்’ என்று எண்ணிக் கொண்டவனுக்கு, தந்தை கேட்ட இரண்டாவது விடயத்தை செய்ய துளியும் எண்ணம் இல்லை…
அவன் தன் எண்ணங்களுக்குள் சுழல, தாய் மீனாட்சியோ ஒவ்வொன்றாய் சின்னப்பிள்ளைக்கு சொல்வது போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.
சக்திவேலோ மனதில் ‘அவனே நாலு வயசுப் புள்ளைக்கு அப்பா, இவ இன்னும் அவனை நாலுவயசுப் புள்ளைன்னு கொஞ்சிட்டு இருக்குறதப் பாரு’ என்று மனதுக்குள் எண்ணிக்கொண்டாலும் தன்னால் அவனிடம் அப்படிப் பேச முடியவில்லை என்ற எண்ணம் உள்ளே அரிக்கவே செய்தது. இருந்தும் மனதார அவனை ஆசீர்வதிக்கத் தவறவில்லை.
அந்த நேரம் பெட்டி ஒன்றுடன் “நான் வந்துட்டேன்” என்றபடி பரஞ்ஜோதி அங்கே வர, சித்தார்த் அதிர்ந்து விட்டான்.
அவன் அதிர்ச்சி யார் கண்ணுக்கு எட்டவில்லை என்றாலும் தீரனின் கண்களில் நன்கு விழுந்தது.
வேதவல்லி தான் “நீ எங்கடா கிளம்பிட்ட?” என்று கேட்க,
“சிங்கம் சூர்யா எங்க இருக்காரோ அங்க தானே இந்த ஜோதிகா இருக்கணும்” என்று ஒரு நகைச்சுவை நோக்கோடு அவன் சொல்ல, எப்போதும் போல் அவன் கெட்ட நேரத்துக்கு அவனை வழியனுப்ப வந்த தேன்மொழியின் காதில் விழுந்திருந்தது.
“அதான பார்த்தேன். என்னடா இன்னும் சொல்லலைனு. தீரா ஐயா கூப்பிட்ட மாதிரி தெரியல, நீங்களே அடம்பிடிச்சு போற மாதிரி தான் தெரியுது. இதுல இவரு இல்லாம ஐயா போக மாட்டாங்கலாமே! என்னா பொய். போயிட்டு வாங்க இருக்கு உங்களுக்கு” என்றாள்.
தேன்மொழியுடன் வந்த பரணியைத் தூக்கி முத்தமிட்ட தீரனோ “தீரப்பா போய் வர்ற வரை சமத்தா இருக்கணும். அப்புறம் உன் அப்பாவை அடிக்கடி ஃபோன் பண்ணி தொல்லை பண்ணனும் சரியா?” என்று ரகசியத்தைச் சத்தமாய்ப் பேச, ஜோதியோ அவனை முறைத்தான்.
அதில் தீரன் வில்லங்க சிரிப்பை பதிலாய் கொடுக்க,
ஜோதியோ ‘ஐயையோ அவசப்பட்டு முறைச்சிட்டேனே! இப்போ இவன் எங்க ஆப்ப சொருகுவான்னே தெரியாதே’ என்று அவன் மனம் புலம்பிய இடைவெளியில் அங்கே தீரன் ஆப்பை சொருக ஆரம்பித்திருந்தான்.
“அதான நானும் சொன்னேன் தேனு. எதுக்குடா நீயும் வர்ற, இங்க தேனு பரணி கூட இருக்கலாமேன்னு சொன்னேனே! எங்க கேட்டான் ஒரே அடம். இப்போவே வரதராஜன் சார் கிட்ட பேசுன்னு விடவே இல்லையே! ஆனா பேசி சம்மதம் வாங்குன அப்பறம் ஒன்னு சொன்னான் பாரு அது தான் தேனு எனக்கு கஷ்டமாகிடிச்சு” என்று சோகம் போல் கடைசியில் ஏற்ற இரக்கத்துடன் நிறுத்த,
‘என்ன பொய்யை வைத்திருக்கிறான்?’ என்று அவன் சொல்லும் வரை கண்டுபிடிக்கவும் முடியாது என்பதால் ஜோதியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது.
“என்னங்கய்யா சொன்னாரு?” என்று கணவனை முறைத்தபடியே தேன்மொழி கேட்க, அவனும் ‘என்னவாக இருக்கும்?’ என்று காதினை கூர்மையாகினான்.
பின்னே அதற்கு எப்படி சமாதானம் செய்ய வேண்டும் என்று வேறு யோசிக்க வேண்டுமே, அவன் கவலை அவனுக்கு…
“அதுவா தேனு, கல்யாணம் பண்ணினதுல இருந்து அவருக்கு நிம்மதியே இல்லயாம். இப்போ அங்க வந்து கொஞ்ச நாள் தனியா நிம்மதியா இருக்கணுமாம். அத ஏன்டா கெடுக்கப் பார்க்குறன்னு கேட்டான்மா. அப்பறம் அங்க பொண்ணுங்க எப்படி இருப்பாங்கனு ஒரு மாதிரி வெட்கப்பட்டுட்டே கேட்டான்னா, அது மட்டும் தான் ஏன்னு புரியல” என்று சொல்ல,
“எதே…” என்று ஜோதி அலறியே விட்டான்.
தேனுவோ கையில் வைத்திருந்த பலகாரப்பையை அவன் கரத்தில் வைத்து கோபமாய் அருகில் இருக்கும் வீட்டை நோக்கி நடக்க,
ஜோதியும் “ஏன்டா” என்று தீரனிடம் கேட்டவாறு அவள் பின்னே சென்றவனை,
“என்ன ஐயாச்சாமி இந்த பிட்டுப் போதுமா?” என்ற தீரனின் குரல் பின் தொடர்ந்தது.
வரலட்சுமியோ தீரனின் காதைப் பிடித்தவர் “பாவம் ஜோதி, ஏன் தீரா எப்போ பாரு தேனுகிட்ட அவனை மாட்டி விடுற, பாவம்ல?” என்க,
“யாரு அவனா பாவம்? சும்மா போங்கத்தை, அவங்க சண்டை போடுறாங்கன்னா நினைக்குறீங்க எல்லாம் நடிப்பு, இப்போ போய் கொஞ்சிக்குவாங்க” என்று சிரிப்புடன் சொன்னவன்,
“இந்த லூசுப்பய வராதடான்னாலும் கேக்குறான் இல்ல, அங்க என்னை தனியா விட முடியாதாம். ஒரு தடவ விட்டுட்டு பட்டது போதுமாம். என்னை என்ன காக்க தூக்கிட்டு போய்டுமா? அதுக்கு இந்த தேனுவும் கூட்டு, அவங்க எனக்குப் பண்ணுறது எல்லாத்துக்கும் நான் எப்படி கைமாறு செய்யப் போறேன்னே தெரியலத்தை. ஜோதி வெறும் என் நண்பன் மட்டுமில்ல, எனக்கான எல்லாமும் அவன்… அவன் எனக்கு கிடைச்ச கிஃப்ட். கொஞ்ச நாள் பிரிஞ்சிருக்கப் போறாங்க. பேசிட்டு வரட்டும்” என்றான் அவர்கள் மீதான புரிதலுடன்…
___________
தீரன் சொன்னது போல் அங்கே கொஞ்சல் மிஞ்சல் எல்லாம் தான் நடந்து கொண்டிருந்தது.
“இப்படி நீ மூஞ்ச தூக்கி வெச்சா எப்படி போறது தேனு?” என்று கேட்டு அவள் முகத்தை கையில் ஏந்தியபடி அவன் நிற்க,
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “மாமா, உன்கிட்ட ஒன்னு சொல்லணும் அத இன்னைக்கு இப்படி சொல்லணுமேன்னு தான் கவலையே!” என்றவள் அவன் சட்டையில் உள்ள பட்டனை திருக,
“தேனு போகணும்டி சீக்கிரம் சொல்லு” என்றான் மனைவியின் நெருக்கமும் அவள் குழைவும் தரும் போதை தாளாமல்…
“ம்ம்ம்ம்” என்ற சத்தத்தை தவிர அவளிடம் அடுத்து வருவதாக இல்லை,
நேரம் செல்வதை உணர்ந்தவன் ஒலி எழுப்பிய தொலைபேசியைப் பார்க்க,
அதிலோ ‘டேய் ஜோதிகா இன்னும் பத்து நிமிஷம் தான் உனக்கு டைம். வந்து சேரு’ என்று கண்ணடிக்கும் பொம்மையுடன் தீரனிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.
அதனைப் புன்னகையுடன் தேன்மொழியிடம் காட்டி,
“நான் சீக்கிரம் வந்துடுவேன்னு முன்னாடியே அலர்ட் பண்ணுறாராம்” என்றான் நண்பனை எண்ணி புன்னகையுடன்…
“நீங்க அங்க உருகுறதும், ஐயா உங்ககிட்ட உருகுறதும் எப்பா தாங்கள” என்றவள் உதட்டை சுருக்கி கொள்ள, அதனை இரு விரல் கொண்டு பிடித்தவனோ,
“ரொம்ப பண்ணாதடி, நீ அவன் கூடச் சேர்ந்துட்டு என்ன எத்தனை கலாய்க்கிற. பார்த்துக்கிறேன்டி உன்ன ஒரு நாளைக்கு” என்றான் மனைவி மீதான நேச மிகுதியில்…
“பார்த்து பார்த்து தான் என்னை அம்மாவாக்கி வெச்சிருக்கீங்க போதாதா?” என்று கேட்டவள், அவன் கரத்தைப் பற்றி அவள் மணி வயிற்றில் வைத்திருந்தாள்.
முதலில் புரியாதவனோ “அதான் அஞ்சு வருசத்துக்கு முத…” என்று பேசிக்கொண்டே போனவனுக்கு மின்னலாய் அவள் சொன்ன செய்தியின் சங்கதி மூளையை தாக்க,
புதிதாய் அவர்களது வசந்ததில் ரம்யமாய் சேரவிருக்கும் மொட்டு அவன் கரத்துடன் சேர்த்து அவன் உள்ளத்தையும் குளிர்வித்தது.
அப்படித்தான் சில்லிட்டுப் போயிருந்தது அவன் கரங்கள். அது சொன்னது இதனை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை…
‘இந்த நிலையில் அவளை விட்டுப் பிரிய வேண்டுமா?’ என்று ஒரு மனது அடித்துக்கொள்ள, இன்னொரு மனமோ நண்பனை எண்ணியது.
ஒருமுறை நண்பனை தனியே அனுப்பி, அவன் மீண்டும் அரை உயிராய் திரும்பி வந்திருக்க, இந்த முறை அந்தத் தவறை மீண்டும் செய்ய அவன் தயாராய் இல்லை.
மனைவி வயிற்றில் சுமக்கும் மொட்டு அவன் குழந்தை என்றால், அவன் மனதில் சுமக்கும் அவன் நண்பனும் அவனுக்கு இன்னொரு குழந்தை தானே!
ஆழ மூச்சை எடுத்துக்கொண்டவனின் கண்களில் தெரிந்த வலியை உணர்ந்த தேன்மொழி
“அடடே ஐயா தந்த பத்து நிமிஷம் முடிஞ்சப்பறம் தான் எனக்கு முத்தம் கிடைக்குமோ? எவ்வளவு இனிப்பான விஷயம் சொல்லி இருக்கேன், இன்னும் இனிப்பா நிறைய தரலாம்ல மாமா” என்று அவன் கவனத்தை மாற்ற,
அவனும் புன்னகையுடன் அவள் நெற்றியில் தொடங்கி அவளிடம் முத்தத்தால் மொத்தமாய் சரணடைந்தான்.
யாருக்கு கிடைக்கும் இப்படியொரு புரிந்து கொள்ளும் உறவு??
தீரன் அவனுக்கு எத்தனை முக்கியம் என்பது தேன்மொழிக்கு எப்படி தெரியாமல் போகும்?
அவன் கூடவே வளர்ந்தவள் அவள். அவனை மட்டுமல்ல அவன் உணர்வுகளையும் சேர்த்தே தான் காதலிக்கிறாள்.
மொத்த பிரிவுக்கும் சேர்த்தான முத்தம் விடைபெற்று, அடுத்து சிறு இளைப்பாறுதல் இருவரிடமும்…
ஜோதியின் அணைப்பு மேலும் இறுக, “தீரா ஐயா கூடவே இருங்க மாமா, உடம்ப பார்த்துக்கோங்க, போன்ல பேசலாம். நாங்க இங்க மூனு பேரும் உங்களுக்காக காத்திட்டு இருப்போம். போயிட்டு வாங்க” என்றவள் அவன் முகம் தெளிவில்லாததை உணர்ந்து,
“அங்க போய் புதுசா பொண்ணுங்கள பார்க்குறேன் பேசுறேன்னு ஏதாச்சும் கேள்விப்பட்டேன்” என்று கோபமாய் அவனை மிரட்ட, அத்தனை நேர அலைப்புறுதல் மறைந்து அவன் முகத்தில் புன்னகை…
அவள் அப்படி பேசுவது எப்போதும் அவளது காதலைத் தான் காட்டும். அந்த அதட்டல் மிரட்டல் தான் அவனுக்கும் பிடிக்கும்.
அவர்களுக்கு அவர்கள் காதலை அப்படிதான் பரிமாறத் தெரியும். இருவரும் சேர்ந்து புதிதாய் காதலுக்கு இலக்கணம் எழுதுகிறனர் அதுவும் அவர்களுக்கு தெரிந்த வகையில்..
தாய் தந்தை இல்லாமல் தனியே நின்றவனுக்கு முதலில் அவனுக்காகவென்று கிடைத்த முதல் உறவு தீரன் என்றால், அடுத்தது இவள் தானே! அவனை அவனுக்காவே நம்பி வந்தவள்.
இருவருக்கும் கொள்ளைக் காதல். ஒருவரை விட்டு ஒருவர் இல்லை எனலாம். அது தீரனுக்கும் தெரியும் என்பதால் அவர்களுடன் விளையாடுவது அவன் வழக்கம்.
பத்து நிமிடம் என்று முழுதாய் இருபது நிமிடம் கழிந்து அவன் அவளுடன் பெரியவீட்டுக்கு வர, தீரனும் செல்வதற்கு தயாராக இருந்தான்.
ஜோதியை விசமமாகப் பார்த்தவன் “அடி ஒன்னும் பலம் இல்லையே மச்சான்?” என்க,
“எல்லாம் உள்காயம்டா தோஸ்து வெளில தெரியாது. இருந்தாலும் இவள எனக்கு நீ கட்டி வெச்சிருக்க வேணாம்” என்றான் ஜோதி.
“தேனு இல்லனா நான் இல்லடா தோஸ்துனு வந்து கண்ண கசக்கிட்டு நின்ன காலம் எல்லாம் மறந்துடிச்சு போல?” என்று கேட்டவன் அவன் கழுத்தில் முழங்கையிட்டு இறுக்கி,
“இவனை கூட்டிட்டு போய் மந்திரிச்சுக் கூட்டிட்டு வர்றேன் தேனு” என்று தேன்மொழியிடம் முடித்தவன் வண்டியில் ஏற, ஜோதி வாகனத்தை உயிர்பித்தான்.
அவனது அடுத்த அத்தியாயத்துக்கான பயணத்தைக் காலம் ஆரம்பித்து வைத்திருந்தது.
இந்தப் பயணம் அவன் தோற்ற இடத்தில் அவன் வெற்றியை எழுதுமா???
பிஞ்சுக் குழந்தைகளை கடத்தும் மூலக் கயவன் யார்???
அவன் நோக்கம் தான் என்ன???
ஈர்க்கும்…

