என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -29

Loading

 

 

முகம் 29

 

 

அங்கே மருத்துவமனையில் தான் மயல் இருந்தாள்.

 

கயல் இன்னும் உயிரோடு தான் இருக்கிறாள் என்பதும், அவள் கொலை செய்யப்பட இருந்தது கூட அந்த கடத்தல் வேலைகளில் தொடர்பு பட்டவனிடம் தான் என்று தீரன் சொல்லியதற்கு இணங்க, அங்கே ஏதேனும் கிடைக்கிறதா என்று தேடலைத் தொடங்கி இருந்தாள்.

 

அப்போது அன்று ஒரு நாள் முரளிதரன் கொடுத்த கோப்புகள் ஞாபகம் வர தனது அறைக்குச் சென்று அதனை எடுத்து ஆராயத் தொடங்கினாள்.

 

பெரிதாக ஒன்றும் அப்போதைய அவசரத்துக்குப் பார்க்க முடியவில்லை.

 

எல்லாம் பணம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ‘இதில் என்ன இருக்கப் போகிறது’ என்று சலித்தபடி உள்ளே வைக்க போனவளின் காலருகே ஒரு தாள் விழ, குனிந்து எடுத்தவள், என்னவென்று பார்க்க அதுவோ கர்ப்பத்தை உறுதி செய்யும் ஸ்கேன் அறிக்கையாக இருந்தது.

 

“ப்ச்…” என்று சலித்துக் கொண்டவள். அதில் தெரிந்த மீனா என்ற பெயரிலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த திகதியிலும் கவனம் பதிய, சட்டென அவள் கரங்களில் ஒரு பதட்டம்.

 

ஒரு மகப்பேறு மருத்துவராக அவளுக்கு அந்த அறிக்கையில் தவறாக எதுவும் தெரியவில்லை.

 

ஆனால் மீனா அவளிடம் சொன்னது, அவள் அழுதது, அவள் குழந்தையை அழித்தது, ஆம் அழித்ததே தான்.

 

“ம்ம்ம்ம்மா” என்று பல வருடம் கழித்து முதல் முதலாய் அழைத்த பொழுது குரலுடன் கரங்களும் நடுங்கியது.

 

அவரா இத்தனை நாள் போராட்டத்திற்கும் அவமானத்திற்கும் காரணமான அத்தனை உயிர்களை பறித்த அந்தக் கயவன் அவள் தாயா???

 

நம்ப முடியாமல் அப்படியே இருக்கையில் பொத்தென்று அமர்ந்தாள்.

 

கரங்கள் நடுங்க, உடல் நடுங்க, பல பிஞ்சுகளின் கூக்குரல் அவள் காதுகளில்…

 

அந்த மரண ஓலம் அவளை பயமுறுத்த, வெளியே ஓடி வந்தவள், சக்திவேல் பாண்டியனின் மீது மோத, அவரோ அவளைத் தாங்கி பிடித்திருந்தார்.

 

அவள் “அப்பாஆஆஆஆ” கேவலுடன் அவரை அனைத்துக்கொண்டவள் அவர் நெஞ்சில் சாய்ந்து அழ, அவருக்கு புரிந்தது எதிலோ பயந்திருக்கிறாள் என,

 

தங்கையை இழந்ததனால் இருக்கும் என அவர் நினைக்க, அவர் தொலைபேசி அதறியது.

 

அவளை அணைத்தபடியே அதனை எடுத்துக் காதில் வைத்திருக்க, அங்கே மீனாட்சி தான் பேசினார். இத்தனை நாள் இன்பனுடன் இருந்தவர் நேற்று தான் ஊருக்கே சென்றிருந்தார்.

 

“சொல்லு மீனாட்சி” என்க,

 

“என்னங்க இங்க, நம்ம ராயி, கண்ணம்மா, பொண்ணுத்தாயி எல்லார் புள்ளையும் கலைஞ்சிருக்குங்க இப்போ தான் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக போறேன், என்னத்த சாப்பிட்டாளுங்களோ தெரியல, இங்க வேற மழையா இருக்கு, நம்ம டிரைவருக்கு ஃபோனப் போட்டு வீட்டுக்கு வரச் சொல்லுங்க, நான் இவளுகளுக்கு என்னனு பார்க்குறேன்” என்று வைத்திருந்தார்.

 

சக்திவேலின் நெஞ்சில் சாய்ந்திருந்த மயலுக்கு இது நன்றாகவே கேட்டதில், இன்னும் நடுங்கியது. அக்காவின் உயிர் என்று பயம் தோன்ற, முதலில் தீரனுக்கு சொல்ல வேண்டும் என,

 

அவரிடம் இருந்து விலகியவள் ஃபோனை எடுக்க மீண்டும் உள்ளே நுழைந்திருந்தாள்.

 

அவனுக்கு அழைத்து எடுக்கப்பட்டதும் இவள் “கோதை” என்க, அதே நேரம் அவனும் “கோதை” என்றான்.

 

அதிலேயே இருவருக்கும் தெரிந்திருப்பது புரிய,

 

“இங்க, இவன் கண்ண முழிச்சச்சிட்டான் மயல், கயல் சேஃப் தான் எந்தப் பாதிப்பும் இல்லை… அவன் அங்க இன்பனை மாட்டி விட ஓடுனதுல கயலை ஒன்னும் பண்ணல. கொஞ்சம் வீக்கா இருக்கா அவ்வளவு தான்” என்றதில் இவளுக்கு நிம்மதியானது.

 

அவன் பாதிப்பு எங்கையில் எதனை சொல்கிறான் என்று இவளுக்கு புரிந்ததில் வந்த நிம்மதி.

 

சிறு மௌனத்துக்குப் பின் “அவங்க தான்னு உண்மை எல்லாம் தெரிய வந்திருக்கு, இப்போ அங்கே அவங்களோட ரகசிய இடத்துக்கு தான் போயிட்டு இருக்கேன், அங்க நீ ஒன்னும் காட்டிக்காத” என்றவன் அவளுக்கு தெரிந்தது என்னவென்று கேட்டுக் கொண்டான்.

 

அங்க காவல் துறையுடன் சென்று அனைத்தையும் அறிந்து கொண்டவன் தான். தன் உயர் அதிகாரிகளின் உதவியுடன் இதோ கோதையின் அத்தனை ஆட்டங்களையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறான்…

 

_______________________

 

“அப்போ அந்த முப்பதொரு குழந்தைங்க?” என்று தீரன் கேட்க,

 

“சரியா நாப்பது ஷோல்ஜர்ஸ் இதையே உன்னால கண்டு பிடிக்க முடியல” என்றவர்,

 

“அதெல்லாம் உனக்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்றார்.

 

தீரனோ “சொல்லணும் சொல்லித்தான் ஆகணும்” என்றவன், ஜோதிக்கு கண் காட்ட, அவன் நண்பனின் பார்வைக்கு இணங்க கங்காவை அங்கே அழைத்து வந்து அவர் கழுத்தில் கத்தியை வைத்தான்.

 

அதில் சிரித்த கோதையோ “உங்களுக்கும் மிரட்ட உயிர் தான் தேவப்படுது அதுவும் தப்பான ஜீன்” என்றார்.

 

தீரனோ “முள்ள முள்ளாள எடுக்கணும்னு சொல்லுவாங்களே அது தான் இது?” என்க,

 

அவரோ முறைத்தப்படி பேச தொடங்கினார் “அவங்க எல்லாம் ஷோல்ஜர்ஸ், ஒரு நாட்டுல போர் நடந்தா இங்க நாம சேஃபா இருந்துட்டு குறிப்பிட்ட கொஞ்ச பேர மட்டும் போருக்கு அனுப்புவோமே! அது தான். அந்த நாப்பது பேரோட டிபெக்ட் ஜீனையும் வெச்சு ஜீன் மோடிபிகேஷன் மூலமா அந்தந்த டிபெக்ட்டுக்குரிய மெடிசின் தயாரிக்க அவங்க எல்லாரும் தான் சாம்பில். வருங்காலத்தை காப்பாத்த போற ஷோல்ஜர்ஸ்” என்றார்.

 

அவர் பேசப் பேச அவன் கோபம் எல்லை கடந்தது.

 

“சென்னையில் இருக்கிற பல ஊர்களுக்கு ஃப்ரீ மெடிக்கல் கேம்ப் மூலமா போறப்போ, அங்க டிபெக்ட் உள்ள பிரக்னன்ட் லேடீஸுக்கு அந்த மருந்த செலுத்தி சில குழந்தைங்க காப்பாத்தபட்டும் இருக்காங்க” என்றார் பெருமையாக… அதில் எத்தனை குழந்தைகள் அழிந்தது என அவருக்கு ஒரு பொருட்டே இல்லை…

 

அதற்கு மேல் கேள்வி கேட்கும் பொறுமையை தீரன் இழந்திருந்தான். அங்கேயே அமர்ந்திருந்தால் துப்பாக்கியை எடுத்து அவர் மீது சுட்டு விடுவோமோ என்ற பயம் தோன்ற, ஜோதி அருகே போய் அவன் கரங்களை இறுக்கப் பற்றி கொண்டு நின்றிருந்தான்.

 

அவனோ நண்பனை ஆறுதலாய் அணைத்தபடி “நீ, ஸ்ட்ரோங்கா இருடா தோஸ்து, இனி ஒரு உயிர் இவங்க மூலமா போகாம தடுத்து நிறுத்தி இருக்க, அத மட்டும் யோசி” என்க கண்களை மூடித்தத் திறந்தான்.

 

அங்கே அமர்ந்திருந்த ராம் பிரசாத்தை சொல்லவே வேண்டாம், கோதை கோதை என காதலில் எத்தனை உருகி இருப்பார். இங்கே அவரே பொய்த்திருக்க, காதல் எங்கே உண்மையாக இருக்கப்போகிறது?

 

மனதில் ரணத்துடன் தன் அமைதியை கலைத்தவர் “கயல் உயிர் முக்கியம் முக்கியம்னு மயலை அவ்வளவு படுத்துனியே, அந்த கயல் உயிரையே எடுக்கச் சொன்னது எதுக்காக?” என்று கேட்டார்.

 

“கட்டாயம் சொல்லனுமா மிஸ்டர் ராம். சொல்லி முடியும் போது ரொம்ப கஷ்டப்படுவீங்க எனக்கொன்னும் இல்ல” என்க,

 

 

 

தான் ஏமாற்றப்பட்டிருப்பது உயிரை வதைத்தாலும் தன் முன்னே அமர்ந்திருக்கும் துரோகியிடம் எதனை அவரால் யாசித்திட முடியும்??? கேட்பாரற்றுக் கிடக்கும் அவர் காதலையா??? அது இனிமேலும் முடிந்திடுமா அவரால்???

 

அந்த நொடி அவர் தந்தை மட்டுமே! அவரது பெண்கள் இருவரும் தான் அவர் மனதில்….

 

“செத்துட எல்லாம் மாட்டேன், இதுக்கே இன்னும் உயிர் இருக்கே! சொல்லு” என்றார் ஓர் இயலாமையுடன்…

 

“அப்பறம் உங்க விருப்பம்” என்றவர் ஒரு தோள் குலுக்களுடன் சொல்ல ஆரம்பித்தார்.

 

“எவ்வளவுக்கு எவ்வளவு தப்பான ஜீன் உருவாகிறது குறையனுமோ அதே அளவுக்கு சரியான ஜீன் உருவாகிறத கூட்டனும். அதனால் தான் என்னோட ஜீனுக்கு பொருத்தமான பியேர் ஜீன் தேடிட்டு இருந்தேன். அப்ப தான் என் கண்ணுல நீங்க பட்டீங்க. உங்களப்பத்தி விசாரிச்சுத் தெரிரிஞ்சிகிட்ட அப்பறம் நானே வந்து பேச இருந்தப்போ, நீங்களே வந்தீங்க காதல்ன்னு சொன்னீங்க எனக்கு உங்க ஜீன்ல ஸ்பெர்ம் வேணும். சோ ஏத்துக்கிட்டேன்” என்றதும், ராம் பிரசாத் என்ற மனிதனின் காதல் அங்கே அனாதையாய் கிடந்து கதறியது.

 

கோதைக்கென்று அவர் விட்டுக்கொடுத்தது கொஞ்சமா என்ன??

 

கோதை மீண்டும் தொடர்ந்தார் “அப்பறம் குழந்தை பிறந்திச்சு, அதுவும் இவளோட கண்ணு, அத என்னால ஏத்துக்க முடியல. அதான் அடிக்கடி கயலுக்கு ஃபீவர் வரவெச்சு அவ கூடயே இருந்துக்குவேன். அத்தனை பார்த்து பார்த்து நான் அவளை உருவாகுனா அவ எப்படி குறையோட பிறப்பான்னு எனக்கு கோபம், அதோட உங்க அக்கா பத்தி நீங்க சொன்னதும், என்னோட மொத்த தேடலும் வேஸ்ட்டாப் போச்சுனு புரிஞ்சிது, அதுக்கப்பறம் உங்ககூட வாழ என்னால முடியாது, அதான் இவ உயிருக்கு ஆபத்துன்னு பொய்யா நடிச்சு ஏமாத்திட்டு கயல மட்டும் எடுத்துட்டு வந்துட்டேன்” என்றவர்,

 

“எங்க என்னையும் கங்காவையும் போல இவங்க பாசமா இருந்துட்டா நான் சொல்றத கயல் கேக்க மாட்டாங்குற பயத்துல, ரெண்டு பேரையும் நிரந்தரமா பிரிச்சு வெச்சேன். மயலுக்கு கல்யாண வயசு வரும் போது, அப்படி ஒன்னு இவ வாழ்க்கைல நடக்கவே கூடாதுன்னு நான் முடிவு செஞ்சு வெச்சா, பத்தொன்பது வயசுலேயே கல்யாணமும் பண்ணிக்கிட்டு, அடுத்த வருஷம் குழந்தையும் பெத்துக்கிட்டா” என்று மயலைக் கோபமாய்ப் பார்த்தார்.

 

“அது பத்தாதுனு ரிசேர்ச்சுக்காக கடத்துன குழந்தைங்கப் பத்தி எப்படியோ மோப்பம் பிடிச்சிட்டான் இவன். அதான் அது எல்லாத்தையும் உங்க பக்கம் திருப்புனேன். கடைசில இவ வந்து உங்கள காப்பாத்திட்டா, கேஸ் அப்படியே இருந்தா வேற யாராச்சும் மூக்கை நுழைப்பாணுங்கனு அந்த சிவப்பிரகாசத்தோட வீட்டு ஆட்களை வெச்சு மிரட்டி ஒத்துக்க வெச்சேன்”

 

“எல்லாம் முடிஞ்சிதுன்னு பார்த்தா அடுத்து அஞ்சு வருஷம் கழிச்சு இவங்க ரெண்டு பேரும் திருப்பி வந்தாங்க, அந்த கடத்தல் உங்க வேலைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். சரி பொண்ணு வாழ்க்கைக்கு ரிஸ்க் எடுக்குறீங்க எப்படியோ மாட்டி தொலையட்டும்னு சும்மா விட்டுடுடேன். அதான் நான் செஞ்ச தப்பு” என்றவர், கயலைக் கோபமாய் பார்த்து,

 

“ஒரு சிற்பி சிலைய செதுக்கி அதுல ஏதாச்சும் தப்பக் கண்டா அப்படியேவா வெச்சிருப்பான். அந்த சிலையை மொத்தமா நொறுக்குவான். அதான் இவ விஷயத்துலயும் நான் பண்ண நினைச்சது. பிறந்ததுல இருந்து இந்த வயசுல இதப்பண்ணனும்னு ஒவ்வொரு வயசுக்கும் இவள செதுக்கி வளர்த்தா? எவனோ வந்தான்னு எனக்கிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணது மட்டும் இல்லாம, என்கிட்ட இருந்து மறைச்சிட்டா. அதான் கொல்ல நினைச்சேன்” என்று முடிக்க,

 

கயலோ அதற்கு மேல் இயலாமையுடன் “இனாஃப்ப்ப்ப்” என்று கத்தி இருந்தாள்.

 

அவள் வாழ்க்கை மொத்தமும் ஏமாற்றப்பட்ட வலி அது???

 

தலையில் அடித்து அழுதவளை தோள் தாங்கி நின்றிருந்தாள் மயல், தீரனோ மயலிடம் கண்களால் ராம்பிராசத்தைக் காட்ட, அவரோ திக் பிரமை பிடித்தது போல் தான் அமர்ந்திருந்தார்.

 

கயலைக் கைத் தாங்களாக அப்பாவின் அருகில் அவள் அழைத்துச் செல்ல, தரையில் மடிந்து அமர்ந்திருந்தவரோ இரண்டு மகள்களின் மடியின் மீதும் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுதார்.

 

தீரன் மயல் தோள் தொட அவன் கரத்தில் முகம் சாய்த்தவள் கண்ணீர் அவன் பெருவிரல் வழியே வழிந்தது. பரஞ்ஜோதி நண்பன் அருகே வந்து நின்று கொண்டான்.

 

அதனை சிறிதும் கோதை மதிக்கவே இல்லை. எழுந்து கங்காவின் அருகில் சென்றார்.

 

அவர் உயரத்துக்கு அமர்ந்து “நாம போகலாம் கங்கா” என்றவர் அவர் கையைப் பிடிக்க, அதனைத் தட்டிவிட்டார் அவர்.

 

முதன் முதலில் அக்காவின் எதிர்வினை… அவருக்கோ சந்தோசமாகிப் போக “கங்கா இப்போ நீ என் கையத் தொட்டல்ல” என்று ஆர்வமாய் கேட்க,

 

சத்தமாய், ஆக்ரோசமாய் “ஆஆஆஆ” என்று கத்தியபடியே மீண்டும் மீண்டும் கோதையின் கரத்தைத் தட்டி விட்டார்.

 

அதில் பதறிய கோதையோ “கங்கா… கங்கா… நான் உன் கோதைடா கங்கா இங்கப் பாரேன் நான் உன் கோதைல, என்னோட எப்போவும் இருக்கணும்னு கேட்டியே இப்போ கேளுடா” என்று கங்காவின் கரத்தை தொட்டு தொட்டு அரற்ற, அவரோ தட்டி விழுவத்திலும் கத்துவத்திலுமே இருந்தார்.

 

எத்தனை ஆண்டுகள் கழித்தான அவரது வெளி வருகை… எப்போதும் அவருக்குள் கேட்கும் மௌனம் இனி வேண்டாம் என்று எண்ணினார் போலும் சத்தமிட்டுக்கொண்டே இருந்தார்.

 

அதனையும் தாண்டி கோதை அருகே போக, அவர் பலம் கொண்டு தள்ளி விட்டதில் சற்று தூரம் சென்று விழுந்திருந்தார் கோதை.

 

அதில் மற்றவர்கள் கவனம் அங்கே பதிய, கங்காவோ சைகை மொழியில் கோதையுடன் பேச தொடங்கினார்…

 

கிட்டத்தட்ட முப்பது வருடங்களின் பின்னான அவரது கரங்களின் உணர்ச்சி அது.

 

அவர் கை அசைக்க, இங்கே மயல் அதனை மற்றவர்களுக்கு மொழி பெயர்த்தாள்.

 

“உயிரோடு இருக்காத.. செத்துடு, எனக்கு உடம்புல மட்டும் தான் ஊனம். உனக்கு மனசுலையும் மூளையும், எண்ணங்களையும் ஊனம்” என்றவருக்கு அடுத்துப் பேச மனதில் ஆயிரம் இருந்தாலும் பல வருடம் அசைக்காத அவர் கரம் இன்று மூளையின் வேகத்துக்கு இயங்கவில்லை..

 

சிறிது நேரம் இடைவெளிக்கு பின் மீண்டும் தொடர்ந்தார்.

 

“அப்ப நீயும் இந்த உலகத்தில் வாழ தகுதி இல்லாத ஆள் தானே! இப்ப உன்ன நீயே கொல்லுவியா? சொல்லு கொல்லுவியா??” என்று கேட்டவர்,

 

“உன்னோட கொள்கை அதுக்கு மட்டும் விதி விலக்கா?? உடல் ஊனம் மட்டும் தான் ஊனமா உன்னை மாதிரி மனசு முழுக்க கெட்ட எண்ணங்கள் வெச்சிருக்கவங்க தான் உண்மையான ஊனம்னு சொல்லணும். என் அப்பா அம்மா அவங்களுக்கு அப்படி குறை இருக்குனு என்னைக்கும் கவலைப் படல உனக்கு பாரமா இருக்கோமேன்னு தான் காவலப்பட்டாங்க. அதுக்காகத் தான் சாவையும் விரும்பிக் கேட்டாங்க. உன்னமாதிரி ஜென்மத்துக்கு எல்லாம் எப்போவும் பாசம் எங்குற வார்த்தையோட உணர்வு புரியவே புரியாது” என்று நிறுத்தியவரின் விழிகளில் அளவுக்கு அதிகமான வெறுப்பு…

 

அது கோதையைப் பலமாய் தாக்கியது. கங்கா அவர் ஒருவரை அவர் எவ்வளவு நேசிக்கின்றார் என்பது அவரது இந்தக் கொடூரமான கொள்கையையும் தாண்டி கங்கா இன்றளவிலும் உயிரோடு இருப்பதில் தெரியாதா என்ன?

 

மெல்லிய நடுங்கும் குரலுடன் “கங்கா வேணா என்ன அப்படி பார்க்காத, நான் உன் கோதை உனக்கான பிடிப்பு நான். உனக்கு நிம்மதியான சாவ விட என்னை நேசிக்கணும் நீ. இந்த பார்வை வேண்டாம். நோஓஓஓஓ” என்று இறுதியில் கோபமாய் கத்த,

 

அதனை சற்று திருப்தியுடன் பார்த்த கங்கா மீண்டும் விரல்களை அசைத்தார்.

 

“இந்த பூமியில பிறந்த நாங்க எப்ப சாகணும்னு விதிக்கப்பட்டிருக்கோ அப்போதான் இந்த உலகத்தை விட்டுப் போவோம். அதுவரைக்கும் எங்க வாழ்க்கை எங்களுக்கு புடிச்ச மாதிரி நாங்க வாழுவோம். எங்கள இங்க வாழ வேணான்னு சொல்ல நீ யாரு? படைச்ச கடவுள் உன்ன மாதிரி ஆளுங்கள விட எங்கள உயர்வாதான் படைச்சு இருக்காரு, இப்போவே நீ சாகுறேனேன்னு சொல்லு அப்போ நம்புறேன் உன்னையும் உன் கொள்கையையும்” என்று அவர் மனதில் இத்தனை ஆண்டுகளாக அடைந்து கிடந்த அனைத்தும் வெளியே வந்திருந்தது.

 

கோதை அவர் பேச்சில் அரண்டு நிற்க, கங்கா அவர் முகம் பார்க்கப் பிடிக்காதவராய் மறுபக்கம் திரும்பி இருந்தார்.

 

மீண்டும் கோதை அவர் அருகில் போக “என் பக்கத்துல வராத, உன் கை இனிமேல் என்மேல பட்டா அது தான் எனக்கு நரகம். இவ்வளவு நாள் என்னை ஒரு அடிமை மாதிரி வெச்சிருந்து என்னத்த கண்டுட்ட நீ, என் வாழ்க்கையும் சேர்த்து நீ முடிவு பண்ணுவியா? யார் குடுத்தது உனக்கு அந்த உரிமைய, என் தொடவோ பேசவோ நினைக்காத அப்பறம் உன் கூடவே இருக்கணும் கேட்ட என் மடத்தனதுக்கு நானே என் உயிர விட்டுடுவேன்” என்க,

 

கோதையோ “கங்கா, இல்ல… இல்ல, தொடல… தொடல,” என்று கத்தியவர் இரண்டடி பின்னால் சென்றிருந்தார்.

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்