Loading

காதல் 18

 

 

இவாஞ்சலின் கூறியதைக் கேட்ட ரஞ்சுவிற்கு குழப்பம் தான் மிஞ்சியது. அவரின் குரலும் தொனியும் அவர் கூறுவதை சந்தேகப்பட வைக்கவில்லை. அப்போது தன் அன்னை யாரென்ற கேள்வி மீண்டும் பூதாகரமாக எழ, துவண்டு தான் போனாள் ரஞ்சு.

 

ரஞ்சுவின் குற்றச்சாட்டு இவாஞ்சலினிற்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும், தான் அவளை பெற்றவள் இல்லை என்பதை கூறிய பின்னர், அவள் படும்பாட்டை உணர்ந்தவர் வருந்தவே செய்தார். இந்த வயதில் அவளிற்கு இத்தனை துன்பங்களா என்று கலங்கினார்.

 

“இங்க பாரு ரஞ்சனா, உன் குழப்பம், கவலை எல்லாம் எனக்கு புரியத்தான் செய்யுது. ஆனா, அதுக்காக நீ முன்வைக்குற குற்றச்சாட்டை என்னால ஏத்துக்க முடியல. இதுவரை உன்னை தன் மகளா பார்த்துக்கிட்ட கமலா எதுக்கு இப்படி பண்ணான்னும் தெரியல. அட்லீஸ்ட் சொன்ன உண்மையை முழுசா சொல்லியிருக்கலாம்.” என்ற இவாஞ்சலினின் எரிச்சல் இப்போது தோழி கமலாவின் புறம் திரும்பியது.

 

அவர் கூறிய எதற்கும் எந்தவித எதிர்வினையும் புரியாமல் குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருந்தாள் ரஞ்சு.

 

“சரி உண்மையை நானே சொல்றேன். நானும் கமலாவும் சின்ன வயசு பிரெண்ட்ஸ். அவளுக்கு கல்யாணமாகி கொஞ்ச நாள்ல ஒரு வேலை விஷயமா, நான் அவக்கூட ஸ்டே பண்ணேன். அப்போ தான் ஒருநாள் வெளிய போயிட்டு இருக்கப்போ, ரோட்டுக்கு சைட்ல சரிவா இருக்க இடத்துல இருந்து குழந்தையோட அழுகை சத்தம் கேட்டுச்சு.” என்றவர், சற்று இடைவெளி விட்டு, “அந்த குழந்தை நீதான் ரஞ்சனா. கமலா தான் உன்னை தூக்குன்னா. நீ அழுறதை பார்த்ததும், அப்படியே விட்டுப்போக அவளுக்கு மனசு கேட்கல. நான் கூட உன்னை ஏதாவது அனாதை ஆசிரமத்துல சேர்க்கலாம்னு தான் சொன்னேன். ஆனா, அவ தான் உன்னை தன்னோட குழந்தையா வளர்க்கப் போறேன்னு சொன்னா. அதுக்கு அவளோட ஹஸ்பண்டும் சம்மதிச்சாரு. அதுக்கப்பறம் சில பெர்சனல் விஷங்களால கமலாவோட டச் விட்டுப்போச்சு.” என்று இவாஞ்சலின் கூறி முடிக்க, ரஞ்சுவோ விரக்தியின் விளிம்பில் இருந்தாள்.

 

“அன்னைக்கு ஆசிரமத்துல விட யோசிச்ச கமலா ஏன் இப்படி பண்ணான்னு எனக்கு தெரியல.” என்று அவர் கூறியதெல்லாம் ரஞ்சுவின் மனதிலேயே பதியவில்லை.

 

அவள் மனமெல்லாம், ‘என்னை பெத்தவங்க யாருன்னு கடைசி வரை எனக்கு தெரியாது போல!’ என்ற எண்ணத்திலேயே தேங்கி விட்டது.

 

அத்தனை நேரம் அமைதியாக இருந்த சஞ்சய் ரஞ்சுவிற்கு தனிமை தேவைப்படும் என்பதை உணர்ந்தவனாக இவாஞ்சலினிடம் பிறகு பேசுவதாக கூறிவிட்டு, ரஞ்சுவுடன் அங்கிருந்து கிளம்பினான்.

 

இவாஞ்சலினிற்கும் ரஞ்சுவின் முகம் பார்த்து பாவமாக இருந்தது. தோழியின் மீது கோபம் கூட வந்தது.

 

“இந்த பொண்ணை அப்போவே ஆசிரமத்துல சேர்த்திருந்தா கூட இவ்ளோ வருத்தப்பட்டுருக்க மாட்டா.” என்று ரோஸியிடம் கூறி வருந்தினார் இவாஞ்சலின்.

 

சஞ்சய் வாகனத்தை செலுத்த ரஞ்சுவோ எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் நிர்மலமான முகத்துடன் ஜன்னல் பக்கம் பார்வையை செலுத்தியபடி வந்தாள். ஆனால், அவள் மனமோ கழிவிரக்கத்தில் சிக்கித்தவித்தது.

 

சற்று நேரம் அவளை பார்த்தபடியும் சாலையை பார்த்தபடியும் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தவன், அவள் அறியாமலேயே கண்ணோரம் துளிர்க்கும் கண்ணீரை கண்டு, நெரிசல் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தியிருந்தான்.

 

அவள் கண்ணீர் அவனை சுட்டது போலும், மெதுவாக அவன் அவளின் கண்ணீரை துடைக்க, அப்போது தான், தான் அழுவதையே உணர்ந்தாள் ரஞ்சு.

 

தன் கண்ணீரை துடைத்தவனை ஒரு பார்வை பார்த்தவளிற்கு மேலும் கண்ணீர் பெருகியது. தனக்கு நெருக்கமானவர்கள், தனக்கானவர்களிடம் மட்டுமே உணர்வுகள் பீறிட்டு வெளிப்படும். இப்போது ரஞ்சுவும் அதே நிலையில் தான் இருந்தாள்.

 

அவளின் கண்ணீர் பெருக பெருக, அவளை தேற்றுவதிலேயே கவனம் கொண்டான் அவன். அதில் இருவரும் மறந்த ஒன்று, இந்த திடீர் நெருக்கத்திற்கான காரணம். அதை இருவருமே ஆராயவில்லை. ஒருவர் என்று கூற வேண்டுமோ. சஞ்சயின் மனம் ஒரு ஓரத்தில் கூவினாலும், அதை அவன் அப்போதைக்கு கண்டு கொள்ளவில்லை.

 

“ரஞ்சு, இப்படியே அழுதுட்டு இருந்தா எல்லாம் சரியாகிடுமா? இனி தான் நீ ஸ்ட்ராங்கா இருக்கணும். முன்னாடி சொன்னதை தான் திரும்ப சொல்றேன், உனக்காக உன் பிரெண்ட்ஸ் இருக்காங்க, நாங்க இருக்கோம். நீ இப்படி விட்டு போனவங்களையே நினைச்சு அழுதுட்டு இருந்தா, அது உன்கூட இருக்கவங்களுக்கு தானே ஹர்ட்டாகும்.” என்றவனின் குரல் எப்போதும் இல்லாத வகையில் மென்மையை சுமந்திருந்தது.

 

“அது இல்ல சஞ்சய், என்னை எதுக்கு பெத்துக்கணும், எதுக்கு விட்டுட்டு போகணும்? இதை அவங்க கிட்ட கேட்டே ஆகணும்னு நினைச்சேன். ஒருவேளை… ஒருவேளை நான் தப்பா… தப்பான அஃபயர்ல பிறந்தவளா? அதான் என்னை விட்டுட்டு போயிட்டாங்களா?” என்று கேட்கும்போதே அவளிற்கு கண்ணீர் பெருக, அதை துடைத்தவனுக்கும் மனம் பாரமாகிப் போனது.

 

இதை அவன் யோசிக்கவே இல்லையே!

 

இதை நினைத்து தான் இத்தனை நாள் வருத்தப்பட்டாளா என்று கவலை கொண்டான் சஞ்சய்.

 

‘ச்சு, யாரோ பண்ண தப்புக்கு, இந்த பொண்ணு இவ்ளோ கஷ்டப்படுறாளே.’ என்று நினைத்தவனிற்கு அப்போது தோன்றியது எல்லாம், எப்படியாவது ரஞ்சுவை சமாதானப்படுத்தி இதிலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது தான்.

 

“சனா, என்னை பாரு. நமக்கு தெரியாத ஒன்னை, தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடியே ஒரு அசம்ப்ஷனுக்கு வரது சரியா, ஹ்ம்ம்? அப்படியே நீ நினைச்ச மாதிரியே இருந்தாலும், தப்பு செஞ்ச அவங்களே, அதுக்காக வருத்தப்படாதப்போ, நீ எதுக்கு ஃபீல் பண்ற? உன் கடந்த காலத்தை யோசிச்சு நிகழ்காலத்தை நரகமாக்கிக்க போறியா சனா? நீ இப்படி சோகமாக இருக்குறதால, யாருக்கு என்ன லாபம்? உன்னை சுத்தி பாரு சனா, சந்தோஷமா இருக்க ஆயிரம் காரணம் கிடைக்கும். உனக்காக என்ன வேணும்னாலும் செய்யற பிரெண்ட்ஸை மறந்துட்டியா? அவங்களை விட, உன்னை விட்டுட்டு போனவங்க பெருசா தெரியுறாங்களா?” என்றவன் அவள் கரத்தை தன் கரங்களுக்குள் அடக்கிக்கொண்டு, “கம்மான் சனா, உன் சோகத்தை விட்டு வெளிய வா. சந்தோஷமா இரு. நீ தனியா இல்ல.” என்று வார்த்தைகளில் கூறியவன், ‘நான் இருக்கிறேன்’ என்பதை உணர்வுகளின் வழியே அவளிற்கு கடத்தினான்.

 

அவன் கூற்றும் குரலும் அவளை சமன்படுத்தி இருக்க, நிகழ்விற்கு வந்தவள் முதலில் கண்டது அவளின் கரம் அவன் கரத்திற்குள் இருந்ததை தான்.

 

இப்போது அவன் கூறிய, ‘உன்னை சுத்தி பாரு சனா, சந்தோஷமா இருக்க ஆயிரம் காரணம் கிடைக்கும்.’ என்பதும், அவன் சொல்லாமல் விட்ட, ‘நான் இருக்கிறேன்’ என்பதும் அவளுள் தோன்றி ஒரு குறுகுறுப்பை உண்டாக்கியது உண்மை தான்.

 

சில நொடிகளில் தன் கரத்தை விடுவித்துக் கொண்டவள், பதட்டத்தில் அவனை நோக்காமல் கண்களை சுழற்றினாள்.

 

அவனிற்கு பதட்டம் எல்லாம் இல்லை போலும், இயல்பாக வாகனத்தை இயக்க ஆரம்பித்தான்.

 

இருவரின் மனமும் இப்போது தான் தங்களின் நெருக்கத்தை உணர ஆரம்பித்தது. அதை முழுமையாக அனுபவிக்க கூட விடாமல் சஞ்சயின் அலைபேசி ஒலியெழுப்ப, அதன்பிறகான சூழல் அவர்களை சிந்திக்க விடவில்லை.

 

*****

 

சில மணித்துளிகளுக்கு முன்…

 

“க்கும், இப்படி அமைதியா வரதுக்கு, நான் அந்த டேவிட்டோடவே குப்பை கொட்டியிருப்பேன்.” என்ற கோகுலின் முணுமுணுப்பு பின்னே அமர்ந்திருந்த சஞ்சுவுக்கு கேட்கத்தான் செய்தது.

 

ஆனால், தர்ஷு பதட்டத்திலும் பயத்திலும் இருப்பதை உணர்ந்தவளாக அவனுடன் சண்டை போடாமல் பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தாள். தர்ஷு இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. அவள் மனம் அவளின் அத்தையின் நினைவில் லயித்து விட்டிருந்தது.

 

“கேட்டும் கேட்காத மாதிரியே இருக்குறது! ரொம்ப கஷ்டம் டா கோகுலு. இதுக்கு தான் அம்மா பேச்சை கேட்காம, லிண்டாவையே ஓகே பண்ணியிருக்கணும்னு சொல்றது. ஹ்ம்ம், இங்க யாருக்குமே உன் ரேஞ்சே தெரியல!” என்று அவன் புலம்புவதை சில நிமிடங்களுக்கு மேல் கேட்க முடியாதவளாக, “ப்ச், கொஞ்சம் பேசாம வண்டியை ஓட்டுறீங்களா?” என்று வினவினாள் சஞ்சு.

 

‘அட ஒர்க்கவுட் ஆகுது.’ என்று உள்ளுக்குள் குதூகளித்தவன், வேண்டுமென்றே பேச்சை வளர்க்க வேண்டி, “கொஞ்சம் பேசாமன்னா, எல்லா வரிலையும் ரெண்டு மூணு வார்த்தைகளை கட் பண்ணிடவா?” என்றான்.

 

“ஹைய்யோ! நீங்க பேசவே வேண்டாம். வண்டியை மட்டும் ஓட்டுங்க.” என்று சஞ்சு சலித்துக்கொள்ள, “பேசாம எப்படிங்க வண்டி ஓட்ட முடியும்?” என்று அவனும் சலித்துக்கொள்வதை போல கூறி, அவளிற்கே தெரியாமல் அவளை தன் உரையாடலிற்குள் இழுத்திருந்தான்.

 

“உங்க கை தான் வண்டி ஓட்டுது. வாய் எதுக்கு மூட மாட்டிங்குது?” என்று சிறு எரிச்சலுடனே சஞ்சு வினவ, “கை வேலை செஞ்சு டையர்ட்டா இருக்கப்போ வாய் தான் ரிலாக்ஸேஷனுக்காக பேசும். அதையே தடுத்தா எப்படிங்க மனுஷனால வேலை பார்க்க முடியும்?” என்றவன் கண்ணாடியில் அவள் முகம் சிவந்திருப்பதை பார்த்து, “இன்னைக்கு கோபத்துல சிவக்குற உன் முகத்தை கூடிய சீக்கிரம் வெக்கத்துல சிவக்க வைக்குறேன் சஞ்சுக்குட்டி!” என்று முணுமுணுத்தான்.

 

அவன் முணுமுணுப்பு முழுதாக கேட்கா விட்டாலும் ஓரளவிற்கு சஞ்சுவுக்கு கேட்டுவிட, “ஹலோ, இப்போ என்ன சொன்னீங்க?” என்று கோபமாக கேட்டாள் சஞ்சு.

 

“ஹான், நீங்க கோபமா இருக்கீங்கன்னு உங்க முகசிவப்பை பார்த்து சொன்னேன். ஏங்க, ஒரு மனுஷன் வேலை பளு தெரியாம இருக்க, பேசுனது ஒரு தப்பா? அதுக்கு இப்படி தான் கோபப்படுவீங்களா?” என்று பாவமாக கேட்டான்.

 

அப்போது தான் அவர்களின் உரையாடலில் கவனத்தை வைத்த தர்ஷுவோ, “சஞ்சு, ஏன் இவ்ளோ கோபம் உனக்கு?” என்று சஞ்சுவை தான் கேட்டாள்.

 

“ப்ச் தர்ஷு, உனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது.” என்றவாறே முன்னே இருந்த கோகுலை பார்க்க, அவனோ நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தான்.

 

“அவரு தான் வேணும்னே என்னை சீண்டிட்டு இருக்காரு தர்ஷு. இதோ இப்போ கூட பாரு, எப்படி கேலியா சிரிச்சிட்டு இருக்காருன்னு.” என்று சஞ்சு குற்றப்பத்திரிக்கை வாசிக்க, அவர்களின் சண்டையை அவர்களே போட்டு தீர்த்து கொள்ளட்டும் என்று தர்ஷு நினைத்தாளோ என்னவோ, கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

 

அவன் மேலும் சஞ்சுவை சீண்டியபடி வர, “ப்ச், முன்னாடி பார்த்து வண்டியை ஓட்டுங்க.” என்றாள் சஞ்சு.

 

அதற்கு அவனோ, “பின்னாடி வேறெதுவும் வண்டி வருதான்னு பார்த்தேன்.” என்று அவளை பார்த்துக் கொண்டே கூறினான்.

 

புசுபுசுவென்று மூச்சை இழுத்துவிட்ட சஞ்சு, “இப்போ முன்னாடி பார்க்கல, ஹாரஸ்மெண்ட்னு போலீஸ்ல கம்பலைன்ட் பண்ணிடுவேன்.” என்று கூற, ‘பாதகத்தி பண்ணாலும் பண்ணிடுவா. இன்னைக்கு இது போதும்.’ என்று நினைத்தவன், அதன்பின்னர் அமைதியாகவே வாகனத்தை செலுத்தினான்.

 

அங்கு நிலவிய மௌனமும் மென்காற்றும் தாலாட்ட சஞ்சுவும் கண்களை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

 

ஊருக்குள் நுழைந்ததும் முகவரி கேட்க கோகுல் பின்புறம் பார்க்க, இருவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர்.

 

“க்கும், தூக்கத்துல மட்டும் தான் உன் வாய் அமைதியா இருக்கு சஞ்சுக்குட்டி. இதுல, என்னை அமைதியா வர சொல்றியா நீ?” என்று சஞ்சுவை கொஞ்சியவன், ‘இவங்க இப்போ முழிக்குற மாதிரி இல்லையே. சரி, நம்ம வந்த வேலையை பார்த்துட்டு இவங்களை எழுப்புவோம்.’ என்று நினைத்து, டேவிட் தனக்கு அனுப்பிய முகவரியை கூகிள் மேப்பில் போட்டு, அது காட்டிய வழியில் வாகனத்தை செலுத்தினான்.

 

அவன் நேரம் நன்றாக இருந்ததோ என்னவோ, மேப் சரியான வழியையே காட்டியிருக்க, அவன் வந்து சேர வேண்டிய வீட்டின் முன் வாகனத்தை நிறுத்தினான்.

 

வந்த வழியிலிருந்த மேடு பள்ளங்களினால் சஞ்சுவின் தூக்கம் பறிபோக, கோகுல் வாகனத்தை நிறுத்திய நொடியில் அவளும் கண்விழித்தாள்.

 

வாகனம் தர்ஷுவின் வீட்டிற்கு முன் நிற்பதைக் கண்ட சஞ்சு, ஒருநொடி விழித்து பின் கோகுலிடம் திரும்பி, “உங்களுக்கு எப்படி தர்ஷுவோட வீடு தெரியும்?” என்று சந்தேகமாக வினவினாள்.

 

‘இது தர்ஷுவோட வீடா?’ என்று கோகுல் மனதிற்குள் குழம்பும்போதே தர்ஷுவும் விழித்துவிட, அவளிற்கு அவனை கேள்வி கேட்கவெல்லாம் தோன்றவில்லை.

 

அவசரமாக அவனிற்கு நன்றியை கூறியவள் தன் அத்தையை பார்க்க சென்றுவிட, அவளை பார்க்க வேண்டி சஞ்சுவும் பின்தொடர்ந்தாள். செல்லும் முன், சந்தேக பார்வையை கோகுலின் மீது வீச தவறவில்லை.

 

‘ஹ்ம்ம், இந்த ஜென்மத்துல இவ என்னை லவ்வா பார்க்க மாட்டா போல.’ என்று பெருமூச்சு விட்டவனிற்கு, அவள் கூறிய ‘தர்ஷு வீடு’ நினைவிற்கு வர, ‘இங்க ஏன் அந்த ராஜசேகர் வரணும்? இதை உடனே பாஸ்கிட்ட சொல்லணும்.” என்று நினைத்து, காலதாமதம் செய்யாமல் சஞ்சய்க்கு அழைத்திருந்தான்.

 

*****

 

கோகுலிடமிருந்து அழைப்பு வந்திருக்க, ஒரு புருவச்சுழிப்புடன் அதை ஏற்றான் சஞ்சய்.

 

“பாஸ், நாங்க ரீச் ஆகிட்டோம். ஆனா, ராஜசேகர் வந்தது தர்ஷுவோட வீட்டுக்கு தான் பாஸ்.” என்று இருவரியில் நடந்ததை கோகுல் கூற, அதைக் கேட்ட சஞ்சய்க்கும் குழப்பமானது.

 

‘ராஜசேகருக்கு ஃபேமிலின்னு எதுவும் இல்லன்னு தான தகவல் கிடைச்சுது. ஒருவேளை தன் குடும்பத்தை பத்தின விஷயங்களை ரகசியமா வச்சுருக்காரோ?’ என்று நினைத்த சஞ்சய்க்கு அது கொடுத்த பதில் அவ்வளவு உவப்பானதாக இல்லை.

 

அவன் எதிரியாக நினைக்கும் ராஜசேகர், ரஞ்சுவின் தோழிக்கு உறவாக இருக்கக்கூடுமோ என்று யோசிக்க விரும்பவில்லை அவன்.

 

சஞ்சயிடமிருந்து எந்த பதிலும் வராததால் கோகுல், “பாஸ்… பாஸ்…” என்று கத்த, சஞ்சய் மறுமொழி கூறும் முன்பே, மறுமுனையில் யாரோ அழும் சத்தம் கேட்டது.

 

அங்கு சஞ்சு தான் கதறியபடி வெளியே ஓடி வந்து கொண்டிருந்தாள்.

 

சற்று முன் வரை இயல்பாக இருந்த தன்னவளின் முகம் அழுகையால் சிவந்து இருப்பதைக் கண்ட கோகுலிற்கு பதட்டம் தொற்றிக்கொள்ள, சஞ்சய் அழைப்பில் இருக்கிறான் என்பதை எல்லாம் மறந்தவனாக, தன்னை மறந்து ஓடிக் கொண்டிருக்கும் சஞ்சுவின் முன் வந்தவன், அவளை தற்காலிகமாக தடுத்திருந்தான்.

 

அவளோ தன் முன்னிருந்தவனை கண்ணீர் பொங்கும் விழியோடு ஏறிட்டவள், “என்னை ***** ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறீங்களா?” என்று அழுது கொண்டே வினவ, அவளின் கண்ணீரில் அவன் தலை தன்னால் அசைந்தது.

 

இங்கு நடப்பது காட்சியாக தெரியாவிடினும், சஞ்சுவின் குரல் கேட்ட சஞ்சய்க்கு, ‘இது என்ன அடுத்த பிரச்சனை?’ என்றே தோன்றியது.

 

அவன் விழிகள் தன்னருகே அமர்ந்திருந்த ரஞ்சுவை பார்க்க, அழுது சிவந்திருந்த முகமும், அழுகையால் உண்டான சோர்வில் மூடியிருந்த அவளின் விழிகளுமே அவன் பார்வையில் பட்டன.

 

ஒரு பெருமூச்சுடன், “கோகுல், நீ ஹாஸ்பிடல் போ. நானும் வரேன்.” என்று அழைப்பை துண்டித்து, ரஞ்சுவின் ஊர் நோக்கி பயணமானான் சஞ்சய்.

 

காதல் தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்