Loading

 

ஈர்ப்பு 16

 

“எனக்கு கண்ணை கட்டிட்டு எங்க கூட்டிட்டு போறீங்க?”

 

“இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு, உனக்கே தெரியும்!”

 

“இதை தான் அஞ்சு நிமிஷமா சொல்லிட்டு இருக்கீங்க.”

 

“பேபி, உன் பொறுமையை பத்தி எனக்கு நல்லா தெரியும். சோ, இன்னும் கொஞ்ச நேரம் குட் கேர்ளா அமைதியா வந்தா உனக்கு ஒரு கிப்ட் கிடைக்கும்.”

 

என் பொறுமையை பற்றி கிண்டலடித்ததும் இனிமேல் அவனிடம் எதுவும் கேட்க கூடாது என்று முடிவெடுத்து வாயைக் கைகளால் மூடியபடி அவன் இழுத்த இழுப்பிற்குச் சென்றேன். என் செய்கையை பார்த்து அவன் நகைப்பது கேட்டாலும் அவனிடம் பேசக் கூடாது என்று என்னையே கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

 

சில நிமிடங்கள் கடந்த பின் சில்லென்ற காற்று வீசி என்னை சிலிர்க்கச் செய்தது. என்னால் பூக்களின் வாசத்தை உணர முடிந்தது. அங்கு வந்ததும் அவன் மெல்ல என் கண்களை திறக்க, என் முன்னால் இருந்த கார்டன் டின்னர் செட்டிங்கில் மயங்கித் தான் போனேன்.

 

கண்கள் கூசுமளவு இல்லாமல் மிதமான வெளிச்சத்தோடு அந்த இரவை மேலும் ரம்மியமாக்கியது அங்கு போடப்பட்டிருந்த லைட்டிங்ஸ். வழி நெடுகிலும் ரோஜா இதழ்கள் தூவப்பட்டு இருந்தன. அவற்றின் மீது என்னவனுடன் நடக்கும்போது பெருமையாகவும் கர்வமாகவும் உணர்ந்தேன். அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் வாய் மூடி மெளனமாக அந்த தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்.

 

அங்கு போடப்பட்டிருந்த அலங்கார மேசைக்கு சென்றோம். அது ஒரு ‘ரொமான்டிக்’ டின்னருக்காக அமைக்கப்பட்டிருந்த மேசை. ரோஜா இதழ்களும் இதய வடிவ மெழுகுவர்த்திகளும் அதை அலங்கரித்தன. இவற்றையெல்லாம் ஒரு வித ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

நான் அங்கு அமர சென்ற போது என் நாற்காலியை அவனே இழுத்து என்னை அமரச் சொன்னான். இது போல அவன் செய்யும் சிறு சிறு விஷயங்களும் என்னை ஸ்பெஷலாக உணரச் செய்தன.

 

“எப்படி இருக்கு பேபி?”

 

இன்னும் அந்த அற்புதமான அதிர்ச்சியிலிருந்து வெளிவராத நான், “ஹான், என்ன கேட்டீங்க?” என்று வினவினேன்.

 

அவனோ எதுவும் சொல்லாமல் என்னைப் பார்த்து அவனின் வழக்கமான சிரிப்பை உதிர்த்தான். 

 

‘இப்படி சிரிச்சே என்னை மயக்கிடுற!’ 

 

இவ்வளவு நேரம் சுற்றியிருந்ததை திறந்த வாய் மூடாமல் பார்த்த நான் இப்போது அவனிடம் லயித்து விட்டேன்.

 

அதில் அவனிற்கும் வெட்கம் வந்திருக்க வேண்டும். “பேபி என்னை பார்த்தது போதும்.” என்று கூறியவன்,, “இந்த செட்டிங் பத்தி ஒன்னுமே சொல்லையே?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான். 

 

அப்போதே அவனின் புருவம் உயர்த்தும் செயலுக்கு நான் அடிமையாகிப் போனேன்.

 

“உங்களுக்கே தெரியலையா நான் எவ்ளோ ஹாப்பியா இருக்கேன்னு. ஐயம் இன் ‘கிளௌட் நையன்’ நவ். இந்த மாதிரி ஒரு சர்ப்ரைஸை நான் எதிர்பார்க்கவே இல்ல!”

 

“அப்படியா அப்போ இந்த மொமெண்ட்டை இன்னும் மறக்க முடியாததா மாத்திடலாமா பேபி?” என்று கூறியபடியே என்னருகே வந்தான்.

 

நானோ என் கண்களை இறுக்க மூடிக்கொண்டேன். என் இதயம் படுவேகமாக துடிக்கும் சத்தம் மட்டுமே எனக்கு கேட்டது. சில வினாடிகள் கழிந்தும் எதுவும் நடக்காததால் கண்களை திறந்து பார்த்தபோது நான் இன்னமும் என் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன்.

 

‘ச்சே, இந்த கனவு ரொம்பத்தான் தொல்லை பண்ணுது!’ என்று சலித்துக் கொண்டேன்.

 

‘இன்னும் லவ்வே சொல்லலையாம் அதுக்குள்ள ‘கிஸ்’ சீன் கேக்குதோ?’ என்று என் மனசாட்சி  என்னை கலாய்க்க, ‘க்கும், அவன் என் கனவுல வந்தா நான் என்ன பண்ணுவேன்?’ என்று நானும் என் மனசாட்சியும் சண்டைப் போட்டுக் கொண்டிருக்க, என் அம்மாவின் குரலில் அடித்துப் பிடித்து எழுந்து சென்றேன்.

 

*****

 

அன்று காலை லோன் விஷயமாக வங்கிக்கு நானும் அபியும் சென்றோம்.  அங்கு ஏற்கனவே சாண்டியும் தாமோ அங்கிளும் எங்களுக்காக காத்திருந்தனர். மேனேஜரிடம் லோன் பற்றி ஆலோசிக்க, அவர் இன்னும் ஒரு மாதத்தில் லோன் சன்க்ஷனாகிவிடும் என்று கூறினார். பின் நாங்கள் அனைவரும் ரெஸ்டாரண்டிற்கு வந்தோம்.

 

“லோன் சன்க்ஷன் ஆக ஒன் மந்த் ஆகும்னு சொல்றாரு. அது வரைக்கும் என்ன பண்ண?” என்று சாண்டி கேட்டாள். நானும் அதையே யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

“லோன் கையில கிடைக்கிற வரைக்கும் உங்களுக்கு நான் பணம் தரேன்.” என்று தாமோ அங்கிள் கூறியவுடன், “வேண்டாம் அங்கிள்.” என்று கூறினேன்.

 

“க்யூட்டி, நான் சொல்றத முழுசா கேளு. நான் நினைச்சா உங்கள லோன் வாங்க விடாம நானே உங்க பொடிக்குக்கு ஃபுல்லா ஃபண்ட் பண்ண முடியும். ஆனா, அப்படி ஆரம்பிச்சா அது உங்களோட பொடிக்கா இருக்காது. அதனால தான் லோன் வாங்கவே நான் சம்மதிச்சேன். இப்போ என்ன லோன் வரவரைக்கும் நான் தரேன். லோன் வந்ததுக்கு அப்பறம் நான் எவ்வளவு செலவு பண்ணேனோ அதை திருப்பி கொடுத்துடுங்க.” என்று கூறினார்.

 

இது எனக்கு பிடித்திருந்தது. நான் அபியை பார்க்க அவனும் இதற்கு சம்மதிப்பது போல தலையசைத்தான்.

 

“சூப்பர்!  இப்போவே நாம பொட்டிக்கோட ஒர்க்ஸ் ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்று சாண்டி மகிழ்ச்சியோடு கூறினாள்.

 

“எந்த இடத்துல ஓப்பன் போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்றார் தாமோ அங்கிள்.

 

“இல்ல அங்கிள், நாங்களும் ரெண்டு மூணு இடத்தை நெட்ல தேடிப் பார்த்தோம். பட் அங்கயெல்லாம் வாடகை காஸ்ட்லியா இருக்கு.” என்றேன்.

 

அப்போது அபி அவனின் ரெஸ்டாரண்ட்டிலிருந்து  சிறிது தூரத்தில் ஒரு இடம் இருப்பதாக கூறினான். நானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு செல்லும் போது அந்த இடத்தை பார்த்திருக்கிறேன். வெளியே இருந்து பார்த்தபோதே அந்த இடம் நன்றாக இருந்தது. எங்கள் பொடிக்கிற்கும்  அது ஏற்றதாக இருக்கும். ஆனால், அந்த இடத்தின் விலை அதிகமாக இருக்கும் என்று எண்ணியே அந்த இடத்தை பற்றி விசாரிக்கவில்லை.

 

“அபி, ஆனா அந்த இடத்தோட ரெண்ட் அதிகமா இருக்கும்ல?” என்று நான் வினவ, “ஒரு முறை அந்த இடத்தை பாரு. உனக்கு பிடிச்சா மேற்கொண்டு ரெண்ட் பத்தி பேசலாம்.” என்றுவிட்டான் அபி. 

 

“அப்போ வாங்க இப்போவே போகலாம்.” என்று சாண்டி உற்சாகமாக கூறினாள்.

 

அபியோ, “இருங்க அந்த இடத்தோட ஓனர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்.” என்று கூறிவிட்டு சென்றவன், ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து, “அந்த ஓனர் ஊருல இல்லையாம். சோ, நம்ம அந்த இடத்தை பார்த்துட்டு பிடிச்சுருந்தா போன்ல இன்போர்ம் பண்ணிடலாம்.” என்றான்.

 

அந்த இடத்திற்கு சென்று பார்த்ததும் பிடித்திருந்தது. நான் அபியிடம் அந்த இடத்திற்கான வாடகை எவ்வளவு என்று கேட்டதும் மீண்டும் அந்த உரிமையாளரிடம் பேசினான். 

 

அந்த உரிமையாளரிடம் பேசிவிட்டு வந்த அபி சொன்ன வாடகையில் நாங்கள் இருவரும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் மதிப்பிட்டதை விட குறைவான வாடகையை சொன்னான். இனிய அதிர்ச்சி தான் எங்களுக்கு!

 

அங்கிருந்து வீட்டிற்கு வந்த நான் என் அப்பாவிடம் லோன் பற்றியும் நாங்கள் பார்த்த இடம், அதன் வாடகை பற்றியும் கூறினேன். அவரோ அனைத்தையும் கேட்டு ஒரு தலையசைப்புடன் சென்று விட, என் அம்மாவை கட்டிப்பிடித்து என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். மேலும், அவரை வெறுப்பேற்றி கலாய்த்து விட்டே என் அறைக்கு சென்றேன்.

 

என் அறைக்கு சென்றதும் வேகமாக முகநூலிற்குள் சென்றேன், இன்று நடந்ததை க்ரிஷிற்கு ஒளிபரப்ப! நான் சொல்வதை பொறுமையாக கேட்டது மட்டுமல்லாது, அதற்கு வாழ்த்தவும் செய்தான். பின்னர், அந்த இடத்தை பற்றியும் கேட்டான்.

 

க்ரிஷ் : ஹே, உனக்கு அந்த ரெண்டல் பிளேஸ் பிடிச்சுருக்கா?

 

நான் : சூப்பரா இருக்கு. ஃபர்ஸ்ட் அந்த பிளேஸை பார்த்துட்டு ரெண்ட் ரொம்ப அதிகமா இருக்கும்னு நினைச்சேன். பட் நாங்க எஸ்டிமேட் பண்ணதை விட ரொம்ப கம்மியா தான் இருந்துச்சு. ஃபைனலி, மீ வெரி ஹாப்பி! 

 

க்ரிஷ் : ஓஹ், சூப்பர் சூப்பர்!

 

நான் : ஆனா, பாவம் அந்த ஓனருக்கு தான் அந்த பிளேஸோட ஒர்த்தே தெரியல!

 

க்ரிஷ் : ஹாஹா, உனக்கு போய் ரெண்டுக்கு விட்டுருக்காரே அந்த ஓனர்!!!

 

*****

 

அன்று மாலை நான் பொடிக் பற்றியும், சமீபத்திய வரவுகள் பற்றியும் இணையதளத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ப்ரியா வந்திருப்பதாக என் அம்மா கூறினார். அப்போது தான் நேற்றைய விஷயம் நினைவுக்கு வந்தது. இன்று அவளிடம் அதற்கான விளக்கத்தை கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்க சென்றேன்.

 

“ஹாய் ப்ரியா, நானே கூப்பிடனும்னு நினைச்சேன். நீயே வந்துட்ட.” என்று கூறி அவளருகே அமர்ந்தேன்.

 

அவள் முகம் நேற்றைக்கு விட இன்று சிறிதளவு தெளிவாகவே இருந்தது. அதற்காக அவள் பெரிதும் முயன்றிருக்கிறாள் என்பதும் எனக்கு புரிந்தது.

 

மேலும், சிறிது நேரம் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அவளிடம் இன்று வங்கிக்கு லோன் வாங்க சென்றது முதல் வாடகைக்கு இடம் பார்த்தது வரை எல்லாவற்றையும் சொன்னேன்.

 

அப்போது அவள் ஏதோ கூற வந்தாள். ஆனால், மறுநிமிடமே அவள் முகத்தை சாதாரணமாக்கிக் கொண்டாள். நான் அதைக் கவனித்தாலும் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

 

“என்னோட பொடிக்கோட இன்டீரியர் டெகரேஷன்ஸ் பார்த்துட்டு இருக்கேன். நீயும் வந்து அதை செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ணு.” என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றேன். 

 

“நான் எப்படி…” என்று அவள் தயங்கியபடியே என்னுடன் வந்தாள் ப்ரியா.

 

“இனிமே எல்லாம் அப்படி தான்!” என்று அவளிடம் கண்ணடித்து விட்டு என் அறைக்கு அழைத்து சென்றேன்.

 

அறைக்குள் வந்ததும் அவளின் கண்கள் நானும் அபியும் இருக்கும் புகைப்படத்திலேயே நிலைத்திருந்தன. 

 

அவளைப் பார்த்து சிரித்துக் கொண்ட நான், ‘இவ்ளோ நாள் இதைப் பத்தி வாயே திறக்கலேல நீ, கேடி!’ என்று மனதிற்குள்ளே கூறிக் கொண்டேன்.

 

“என்ன டி அண்ணி, அபி நல்லா இருக்கான்ல?” என்று நான் கேட்டதும் ஏதோ ஒரு ஞாபகத்தில், ‘ஆம்’ என்று தலையை ஆட்டி பின் நிகழ்விற்கு வந்ததும் இல்லை என்று மீண்டும் தலையசைத்தாள்.

 

அவளைப் பார்த்து நகைத்துவிட்டு, “ஃப்ராடு டி  நீ! என் அண்ணாவையே சைட்டடிச்சுருக்க!” என்று நான் கூறவும், “அது…வந்…ந்து…” என்று அவள் திணறினாள்.

 

“விடு டி நீ ஒன்னும் சமாளிக்க வேண்டாம். ஆனா, நேத்து என்ன ஆச்சுன்னு மட்டும் சொல்லு.”

 

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், பின்பு யாரிடமாவது பகிர்ந்தால் நன்றாக இருக்குமென்று எண்ணினாளோ என்னவோ, என்ன நடந்தது என்று கூற ஆரம்பித்தாள். 

 

அவள் சொல்ல ஆரம்பிக்கும் போது, “ஃபர்ஸ்ட் உன் லவ் மேட்டரை பத்தி சொல்லுங்க மேடம்.” என்று கூறினேன்.

 

அவளும் லேசாக சிரித்துவிட்டு, “நானும் நீயும் ஒன்னா ஸ்கூல் படிச்சப்பவே உங்க அண்ணாவை எனக்கு பிடிக்கும். அவங்க உன்னை திட்டி, கலாய்ச்சாலும் உனக்கு ஏதாவது பிரச்சனைனா ஃபர்ஸ்ட் முன்ன வந்து நிப்பாங்க. உன் மேல ரொம்ப கேரிங்கா இருப்பாங்க. அப்போலாம் அவங்களை மாதிரி ஒரு அண்ணா எனக்கு இல்லயேனு ஃபீல் பண்ணிருக்கேன்.” என்று அவள் கூறவும், “என்னாது அண்ணாவா இல்லையேனு ஃபீல் பண்ணியா! அப்போ இப்போ?” என்று கண்ணடித்து கேட்டேன்.

 

அதற்கு என்னை அடித்துவிட்டு, “இப்போ தான் எனக்கு வேற அண்ணா கிடைச்சிட்டானே.” என்றாள் அவளும் சிரித்துக் கொண்டே.

 

அவள் ராகுலை தான் கூறுகிறாள் என்று தெரிந்தாலும், அதைப் பற்றி வினவாமல் அவளின் காதல் கதையை தொடரச் சொன்னேன்.

 

“நான் டெல்லி போனதுக்கு அப்பறம் ரெண்டு பேரும் அவ்ளோவா டச்ல இல்ல. ரொம்ப நாள் கழிச்சு தான் உன்னை ஃபேஸ்புக்ல பாத்தேன். அது கூட நீயும் உங்க அண்ணாவும் இருக்குற போட்டோவை நீ டிபியா வச்சுருந்ததை பார்த்து தான் உங்க ஞாபகமே வந்துச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும் உங்க அண்ணா மேல அப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் எனக்கு வந்தது இல்ல. ஆனா, அந்த போட்டோவை பார்த்ததும் எனக்குள்ளேயே ஏதோ ஃபீலிங்! அதை எப்படி எக்ஸ்பிரஸ் பண்றதுன்னு எனக்கு தெரியல. ஆனா, லவ் பண்ணா உங்க அண்ணாவை தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும்னு டிசைட் பண்ணிட்டேன். அதுக்காக தான் என் காலேஜ் முடிஞ்சதும் இங்க வந்துட்டேன்.”  என்றாள் ப்ரியா.

 

“ஓஹ், அப்போ மேடம் மெசேஜ் பண்றப்போ மிஸ் யூன்னு சொல்றதெல்லாம் எனக்கு இல்ல. எப்படி எப்படி அவன் போட்டோவை பார்த்து தான் எனக்கு ரெக்வஸ்ட்டே அனுப்பிருக்க! அடிப்பாவி, உன்னை எல்லாம் எங்க வீட்டுல ஃபிரெண்டுக்காக எதையும் செய்வா ப்ரியான்னு ‘நாடோடிகள்’  ரேஞ்சுக்கு பில்ட் அப் கொடுத்துருக்கேன், நீ என்னடானா உன் ஒன் சைடு லவ்வுக்காக என்னை யூஸ் பண்ணிருக்கேல?” என்று நான் வினவ, “ஹே அப்படிலாம் இல்ல டி…” என்று சங்கடமாக இழுத்தாள் ப்ரியா.

 

“க்கும், ரொம்பத்தான்… போதும் போதும் நீ எதுவும் சொல்ல வேண்டாம்!” என்று நான் வேண்டுமென்றே கூற, “உண்மையா தான் டி சொல்றேன். எனக்கு நீயும் முக்கியம் தான்.” என்று கிட்டத்தட்ட கெஞ்சினாள் அவள்.

 

“ஓஹ், நா’னும்’ முக்கியமா?” என்று நான் ஏற்றி இறக்கி பேசி காண்பிக்க, “அச்சோ படுத்தாத டி, நீயும் உங்க அண்ணா மாதிரியே! உனக்கு ஏதாவது ஃப்யூச்சர்ல ஹெல்ப் வேணும்னா நான் செய்ய மாட்டேனா என்ன?” என்று வாய் விட்டாள்.

 

‘இவளுக்கு விஷயம் தெரிஞ்சு பேசுறாளா இல்ல சும்மா ஃப்ளூக்ல அடிச்சி விடுறாளானு தெரிலேயே!’ என்று சிந்தித்தாலும், வெளியே அதை காட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம், அதை அப்பறம் பார்ப்போம். இப்போ நேத்து நடந்த மேட்டருக்கு வா மா.” என்றேன்.

 

அதைக் கேட்டதும், ஒரு நொடி அவள் முகம் சோர்ந்து கவலையுற்றது போல மாறியது. நான் அவளை தேற்றி, “எதுவானாலும் பார்த்துக்கலாம். டோன்ட் ஒர்ரி பேபி!” என்றவாறு அணைத்தேன்.

 

லேசான புன்னகையை பரவவிட்டு நடந்ததை கூறத் துவங்கினாள் ப்ரியா.

 

“நேத்து கேக் செய்யுறதை பார்க்க கிச்சனுக்கு போனேன். அங்க யாரோ கேக் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்க திரும்பி இருந்ததால அவங்க முகம் எனக்கு தெரியல. நானும் கேக் பார்க்குற ஆர்வத்துல அவங்க யாருன்னு தெரிஞ்சிக்க விரும்பல. தூரத்துல இருந்து சரியா தெரியாததால பக்கத்துல போய் பார்த்துட்டு இருந்தேன். திடீர்னு அவங்க கேக் செய்யுறத நிறுத்திட்டாங்க. நானும் நிமிர்ந்து பார்த்தா…”

 

“யாரு அபியா?”

 

“ஹுஹும் இல்ல, ஒரு செஃப்!”

 

“என்னாது செஃப்பா? அதுக்கு ஏன் டி இப்படி ரொமான்டிக் சீன் சொல்ற மாதிரி எக்ஸ்பிளேன் பண்ணிட்டு இருக்க?”

 

“நீ தான் டி பாதிலேயே கேள்வி கேட்ட!”

 

“சரி சரி நீ கன்டின்யூ பண்ணு…”

 

“என்னை பார்த்துட்டு அவங்க ‘கஸ்டமர்ஸ் ஆர் நாட் அல்லோவ்ட் ஹியர்’னு சொன்னாங்க. அதுக்கு நான், ‘என் பிரென்டோட அண்ணா தான் உங்க ஓனர். சோ நான் கஸ்டமர் இல்ல’னு சொன்னேன்.

 

அதுக்கு அப்பறமும் கொஞ்ச நேரம் என்னை ஒரு மாதிரி பார்த்துட்டு இருந்தாரு. ‘உங்களுக்கு அன்கம்ஃபர்டபிளா இருந்தா நான் போறேன்’னு சொன்னதுக்கு, ‘அப்படிலாம் ஒன்னும் இல்ல மேம். நீங்க இருங்க’னு சொன்னாரு. அப்பறம் கேக் மேக்கிங் ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருந்ததுல சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்க மறந்துட்டேன்!

 

கேக் பேட்டர் ரெடி பண்ணி முடிச்சுட்டு ஃப்ரோஸ்ட்டிங் பண்ணிட்டு இருந்தாரு. அப்போ நான் ரெட் வெல்வெட் கேக் ரெசிபி சொல்லுங்கன்னு கேட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தோம்…”

 

“அடிப்பாவி சைட் அடிச்ச கதைய சொல்ல சொன்னா நீ கேக்  செய்ய கத்துட்டு வந்த கதைய சொல்லிட்டு இருக்க!” என்று நான் தலையிலேயே அடித்துக் கொண்டேன்.

 

“ம்ச்ச், இரு டி நானே ஒரு ஃப்லோவா சொல்லிட்டு இருக்கேன்ல. நீ டிஸ்டர்ப் பண்ணா திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்து சொல்ல ஆரம்பிச்சுடுவேன்!”

 

“ஐயோ, தெரியாம கேட்டுட்டேன் டி! இந்த மொக்க கதையை திருப்பி ஃபார்ஸ்ட்ல இருந்துலாம் கேட்க முடியாது. யூ கன்டின்யூ!”

 

“எங்க விட்டேன்… ஹான், அப்படி நாங்க பேசிட்டே இருந்ததுல, அங்க எங்களை தவிர இன்னொருத்தரும் இருந்ததை நான் பார்க்கல. கேக் ஃபுல்லா கம்ப்லீட் ஆனதும் அந்த செஃப்புக்கு கங்க்ராஜுலேட் பண்ண கை கொடுத்தேன். அவரோ சிரிச்சுட்டே ‘எனக்கு வேண்டாம், அங்க இருக்க எங்க ஓனருக்கு கொடுங்க. அவரு தான் என்னை கைட் பண்ணாரு’னு சொல்லிட்டு வெளிய போயிட்டாரு. அப்போ தான் இவ்ளோ நேரம் அனவ் அங்க இருந்தத கவனிச்சேன்!”

 

“ஓஹ், எங்களுக்கெல்லாம் அபி. உனக்கு அனவ்வா? கலக்குங்க  மேடம்!” என்று நான் கூற, அவளோ லேசான வெட்கத்துடன், “ஷ், சும்மா இரு டி!” என்று சிணுங்கினாள்.

 

“ஹாஹா, இப்படிலாம் அவன் முன்னாடி வெட்கப்பட்டுறாத டி. பயந்துடப் போறான்!”என்று அவளை வெறுப்பேற்ற, “அடிங்… அமைதியா இரு டி. அப்போ தான் ஃபுல் ஸ்டோரியும் சொல்லுவேன்.” என்று மிரட்டினாள்.

 

“சரிங்க மேடம் சொல்லுங்க உங்க காதல் காவியத்தை!” என்று அப்போதும் அடங்காமல் பேசியது என் வாய்.

 

“அனவ்வை அங்க பார்த்ததும் எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. என்ன தான் லவ் பண்ணாலும், ஃபர்ஸ்ட் டைம் அவங்களும் நானும் தனியா இருக்கோங்கிறதே எனக்கு நெர்வஸ்ஸா இருந்துச்சு. அந்த டென்ஷன்ல ரொம்ப நேரமா அவங்களையே பார்த்துட்டு இருக்குறதை மறந்துட்டேன். அவங்க பக்கத்துல வரவர எனக்குள்ள ஒரு மாதிரி ஃபீலாச்சு! பக்கத்துல வந்ததும் என்ன பண்ணன்னு தெரியாம கண்ணை மூடிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு எதுவும் ஆகலன்னு கண்ணை திறந்தப்போ தான் அவங்க எனக்கு பக்கத்துல டேபிள்ல இருந்த கேக்கை மொபைல்ல ஃபோட்டோ எடுத்துட்டு இருந்தாங்க.

 

அப்போ தான் எனக்கு மூச்சே வந்துச்சு. என்னை நானே ரிலாக்ஸ் பண்ணிட்டு அங்க இருந்து வெளியே போலாம்னு நினைச்சப்போ, யாரும் இல்லாத அந்த நேரம் தான் உங்க அண்ணா கிட்ட என் லவ்வை சொல்ல சரியான டைம்னு தப்பா கெஸ் பண்ணி அவங்க கிட்ட பேச ட்ரை பண்ணேன்.” என்றவளின் மனமும் தன்னவனிடம் காதலை சொல்ல முயன்ற தருணத்திற்கு சென்றது.

 

“ஹாய், நான் ப்ரியா. உங்க சிஸ்டர் நதியோட பிரெண்ட்.  என்னை தெரியுதா?” – ஒரு வழியா திக்காம சொல்லிட்டேன்.

 

“ம்ம்ம் தெரியும்…” – ஒரே லைன்ல உங்க அண்ணா முடிச்சிட்டாங்க.

 

“அதுக்கு அப்பறம் நான் எப்படி என் லவ்வை சொல்லன்னு தெரியாம நாங்க டெல்லி போனது, ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் உன் கிட்ட சாட் பண்ணதுன்னு லூசு மாதிரி ஏதோ உளறிட்டு இருந்தேன்.”

 

“கடைசில உன் லவ்வை அவன் கிட்ட சொன்னயா இல்லையா?” என்று ஆர்வத்தோடு நான் வினவினேன்.

 

“எங்க சொல்ல விட்டாங்க உங்க அண்ணா! நான் உளறினதை பார்த்தோ என்னவோ அவங்களுக்கே நான் சொல்ல நினைச்சது தெரிஞ்சுடுச்சு போல. ‘நீ ரொம்ப நேரமா ஏதோ சொல்ல ட்ரை பண்ற, அது என்னனு எனக்கும் தெரிஞ்சுடுச்சு. பட்  அது நடக்காது ப்ரியா. இப்போ தான் எனக்கு பிடிச்ச ஃபில்டுல நான் ஸ்டெப் எடுத்து வச்சுருக்கேன். இதுக்கப்பறம் நான் ட்ராவல் பண்ண வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு. அது தவிர எனக்குன்னு என் ஃபேமிலில சில ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸும் இருக்கு. சோ, நீ எந்த எக்ஸ்பெக்டேஷன்ஸும் வச்சுக்காத. அது உன் லைஃபை தான் ஸ்பாயில் பண்ணும்’னு ரொம்ப பெருசா லெக்ஷர் கொடுத்துட்டு போய்ட்டாங்க!” என்றாள் ப்ரியா சோகமாக.

 

“பார்றா! அபியா இப்படி எல்லாம் பேசுனான்?  இப்போ என்ன அவன் முன்னேறணும்னு சொல்றான். நீ அது வரைக்கும் வெயிட் பண்றேன்னு சொல்ல வேண்டியது தான. இதுக்கா நேத்து அழுதுட்டு இருந்த?” என்று நான் வினவ, “இப்போ தான் அவங்க மைண்ட் செட் என்னன்னு புரியுது நதி. பட், அந்த நேரம் அவங்க என் லவ்வை சொல்லக் கூட விடாம என்னை அவாய்ட் பண்ற மாதிரி பேசுனதை என்னால அக்ஸப்ட் பண்ணிக்க முடியல டி. அதான் கொஞ்சம் டிப்ரெஸ்ட் ஆகிட்டேன். கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுல போய் யோசிச்சப்போ தான் அவங்களோட சிசுவேஷன் புரிஞ்சது. அப்பறம் கொஞ்சம் நார்மல் ஆனேன்.” என்றாள்.

 

எனக்கு அப்போது தான் ராகுல் இவளிடம் பேசிக் கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.

 

“அப்போ வேற யாரும் உனக்கு கவுன்சிலிங் கொடுக்கலையா?” என்றேன் பதில் தெரிந்துக் கொண்டே.

 

“நீ ராகுலை சொல்றியா? அவனும் ரெஸ்டாரண்ட்டிலேயே கேட்டான். பட் அங்க சொன்னா அந்த பார்ட்டி மூட் ஸ்பாயில் ஆகிடும்னு அங்க வச்சு எதுவும் சொல்லல. வீட்டுக்கு போய் சொன்னதும் அவன் திட்டுனான். ‘லவ் பண்றேன்னு சொல்ற ஆனா அவனோட சிஷுவேஷன் என்னனு புரிஞ்சிக்காம லவ்வை சொல்லி அதை அக்ஸப்ட்  பண்ணலேனு ஃபீல் பண்ணிட்டு இருக்க! நீ உன் லவ்வை சொன்னதும் அவனும் ஓகே சொல்லிடணுமா? அவனும் நீ ஃபீல் பண்ண மாதிரி லவ்வை ஃபீல் பண்ண வேண்டாமா?’ன்னு’ ஒரே அட்வைஸ் தான்!” என்று சலித்துக் கொண்டாள் ப்ரியா.

 

‘பரவால்ல நம்ம ஆளு லவ்வுக்கு எனிமி இல்ல போல!’ என்று அந்நிலையிலும் அவனை பற்றி யோசித்தேன்!

 

“என்ன டி யோசிச்சுட்டு இருக்க?” என்று ப்ரியா வினவ, “இல்ல, எங்க அண்ணாக்கு சமந்தா மாதிரியோ காஜல் அகர்வால் மாதிரியோ பொண்ணு அமையும்னு பார்த்தா, போயும் போயும் நீயா எனக்கு அண்ணியா வரணும்! அதான் அபிக்கு என்னோட ஆழ்ந்த அனுதாபங்களை டெலிபதில சென்ட் பண்றேன்.” என்று மறைமுகமாக அவள் காதலுக்கு ஆதரவு தெரிவித்தேன்.

 

இதை சொன்னதும் ப்ரியா சிணுங்கிக் கொண்டே, “உங்க குடும்பத்துக்கெல்லாம் நானே பெருசு! இதுல சமந்தா காஜல் அகர்வால் மாதிரி அண்ணி கேட்குதோ? அடிங்….” என்று என்னை அடிக்க துரத்தினாள்.

 

அன்றைய நாள் அபியை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்பது பற்றிய தீவிர ஆலோசனையில் கழிந்தது. ப்ரியாவிடம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு அவனை கண்டுகொள்ளாமல் அவள் காதலை சற்று ஆறப்போடுமாறு கூறினேன்.

 

“சும்மாவே என்னை கண்டுக்கமாட்டான் உங்க அண்ணன். இதுல நான் அவனை மீட் பண்ணாம இருந்தேனா, விட்டது தொல்லைன்னு என்னை சுத்தமா மறந்துடுவான்.” என்று ப்ரியா புலம்ப, “அதுக்குள்ள எதுக்கு அவசரப்படுற? ஆமா, இப்போ அபி அண்ணாவை மரியாதை இல்லாம பேசுனியா? அது எப்படி ஹஸ்பண்டை மரியாதை இல்லாம பேசலாம்? நீயெல்லாம் குடும்ப பொண்ணா!” என்று அவளை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தேன்.

 

“ஆமா ஆமா,  இன்னும் கல்யாணமே நடக்கல அதுக்குள்ள மரியாதையா? ஃபர்ஸ்ட் பொறுப்பான சிஸ்டரா எங்களை சேர்த்து வைக்கப் பாரு.” என்று அவள் கூற, “அடியேய்! அது சிஸ்டர் இல்ல டி அதுக்கு பேரு வேற.” என்று சொல்லிக் கொண்டே ஓட்டம் பிடித்தேன்.

 

அவளும் என்னை துரத்த,  ஓடிக்கொண்டே அறையை விட்டு வெளியே வந்தேன். சிறிது தூரம் சென்ற பிறகு என் பின்னால் அவளின் அரவத்தை உணரவில்லை.

 

‘என்ன டா இது நம்ம பின்னாடி தான வந்தா. முடியலன்னு பாதிலேயே நின்னுட்டாளோ?’ என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன்.

 

பார்த்த எனக்கு தான் அதிர்ச்சி!

 

‘அட லூஸி, உன்னை அவனைப் பார்க்காதனு சொன்னா, நீ என்ன பண்ணிட்டு இருக்க?’ என்று மனதிற்குள் அவளை திட்டியவாறே அவளை முறைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவளோ அதை அறியாமல் அவன் கைகளில் இருந்தாள்.

 

ஆம், அவன் கைகளில் தான். அவன் அவளை இறக்கிவிட்டு பார்த்து செல்லுமாறு கூறி சென்று விட்டான். இன்னமும் அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தவளை உலுக்கி அவளை முறைத்தேன். அதற்கும் ஒன்றும் சொல்லாமல் மந்திரித்து விட்ட மாதிரியே இருந்தாள்.

 

“ஹே எருமை, நிஜத்துக்கு வா. இன்னும் பறந்துட்டே இருக்காத!” என்று அவளை தட்டிக் கூப்பிட்டேன். அப்போதும் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தாள். கடுப்பான நான் அவள் முதுகில் ஒரு அடி வைத்து அவளை நிகழ்விற்கு அழைத்து வந்தேன்.

 

“எதுக்கு டி இப்போ அடிச்ச?” என்று சுரணை வந்து அவள் வினவ,  “ஹான் போர் அடிச்சது, அதான் உன்னை அடிச்சேன். எரும மாடு! உன்னை என்ன சொன்னா, என்ன பண்ணிட்டு இருக்க? அவனை கொஞ்ச நாளைக்கு கண்டுக்காம இருன்னு சொன்னா அவனைப் பார்த்து ஜொள்ளிட்டு இருக்க!” என்று திட்டினேன்.

 

“ஹ்ம்ம், அவன் என் ஆளு… என் உரிமை! நான் அப்படி தான் பார்ப்பேன்.” என்று அவள் போர்க்கொடி தூக்க, “உனக்கு போய் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சேன் பாரு, என்னை சொல்லணும்! போடி நீயும் உன் லவ்வும்.” என்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன்.

 

“சரி சரி கோச்சுக்காத நதி மா. நாளைக்கிருந்து என் பெர்ஃபோர்மன்ஸை பாரு.” என்று அவள் சவால் விட, “உன்னை தான் பார்க்க முடியல… அதுவாச்சும் நல்லா இருக்குமா டி?”  என்று விட்ட இடத்திலிருந்து மீண்டும் ஓட்டத்தை ஆரம்பித்தேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
20
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்