Loading

எனதழகா – 33 ❤️

ரியாவை காணச் சென்ற அசோக், கைப்பேசியில் பேசிக் கொண்டே ரியாவின் தோளில் தட்டினான். ஏற்கனவே கைப்பேசியில் புகைப்படத்தை பார்த்து கடுப்பில் இருந்த ரியா, அசோக் கையை தோளில் வைத்தவுடன் இடம் கருதாமல் அசோக்கின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

அதிர்ந்து கன்னத்தில் கை வைத்து ரியாவைப் பார்த்தான். தாமரைக்கு சர்க்கரைக்கு ரத்த பரிசோதனை மாதிரி கொடுத்து விட்டு திரும்ப வந்த தாஸும், தாமரையும் அதிர்ந்து அவர்களின் அருகில் வந்தனர்.

வாசலில் நின்ற ஆகாஷ் தன் கன்னத்தை தடவிக் கொள்ள, பின்னிருந்து அவன் தோளில் கை வைத்தாள் ஆதிரா. “ஆஆஆ ” என்று கத்தி விட்டான். அதில் ஆதிராவும் சேர்ந்து கத்த, மீராவிற்கு சகல ஏற்பாடுகளையும் செய்து முடித்து கீழே வந்த அர்ஜுன் இவர்கள் கத்துவதை அசிங்கமாக பார்த்தான்.

பின்பு, அவர்கள் முன் நின்று “ச்சீ…. நீங்க ரெண்டு பேரும் டாக்டர்ஸ் தானே. அசிங்கமா இப்படி கத்திக்கிட்டு இருக்கீங்க. அதுவும் ஹாஸ்பிட்டலையே. அறிவு இல்லை?. மேனர்ஸ் இல்லை? ” என்று அர்ஜுன் வசைப்பாட,

வழக்கம் போல் ஆகாஷ் பாவமாக பார்க்க, ஆதிரா தான் அமைதியாக நில்லாமல் “உனக்கு மூளை இல்லை? ” என்று கோபமாக கேட்டாள். ஆகாஷும் “ஆமாம்  ! கண் இல்லை ? ” என்று அவன் பங்கிற்கு கேட்டான். தனக்கு முன் இவள் கேட்டு விட்டாள், அதனால் நம்மளை திட்ட மாட்டான் என்ற அற்ப ஆசையில் கேட்டான் .

அனைவர் முன்பும் இப்படி கேட்டு விட்டனரே என்கின்ற கோபத்தில் ஆகாஷின் முதுகில் ஒரு அடி வைத்தான். “என்ன தான் டா ஈஸியா அடிச்சுறீங்க? ” என்று வழக்கம் போல் பாவமாக கேட்டன். அதில் ரியா கிளுக்கென்று சிரித்தாள். அதில் கோபமாக திரும்பிய ஆகாஷை அசிங்கப்படுத்தவது போல் தாமரையும் சிரித்தார். அதுவும் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தார்.

அவர் சிரிப்பதைப் பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வந்து விட்டது. இதற்கு மேல் தான் மட்டும் அமைதியாக இருப்பதா என்று நினைத்து , ஆதிரா வேண்டுமென்றே  பலமாக சிரித்துக் கொண்டே அசோக்கின் அருகில் சென்று அவனின் தோளில் அடித்து அடித்து சிரித்தாள்.

கடுப்பாகிய அசோக் , ஆதிராவின்  கைகளை தள்ளி விட்டு, ரியாவை அடிக்க பாயும் முன், செவிலியர்  ரியாவை அழைத்தார்.

ரியாவை அழைத்துக் கொண்டு தாமரையும் தாஸும் செல்ல, பின்னே ஆகாஷ் சென்றான். மீதமுள்ள மூவரும் குழுமியிருந்தனர். அசோக் தான் பார்த்த அனைத்தையும் இருவருக்கும் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே ஆருஷி வெளியில் செல்வதை கண்டு விட்டான் அர்ஜுன்.

அவள் பின்னால் செல்ல முயல, அவனை தடுத்த ஆதிரா, அசோக்கிற்கு கண் ஜாடை காண்பித்து அவனை செல்ல சொன்னாள். அதனால், ஆருஷியின் பின்னால் அசோக் சென்று விட்டான்.

ஆருஷி அழுதுக் கொண்டே மருத்துவமனை வாயிலில் உள்ள திண்டில் அமர்ந்து எதையோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அழுகையை முழுங்க கடினப்பட்டு கொண்டிருந்தவளை சோதிக்காமல் அவளின் அருகில் வந்து அமர்ந்தான் விக்ரமின் தம்பி.

அவனைக் கண்டு அதிர்ந்தான் அசோக். அதை விட ஆருஷி அவனின் தோளில் சாய்ந்து ஏதோ கூற, இவன் அவளின் தோளை தட்டி சமாதானம் செய்து, அவளுடன் இவனும் அருகில் உள்ள ஆட்டோவில் ஏறி சென்று விட்டனர். இவன் வேக வேகமாக இவர்களை பின்தொடர  காரை எடுக்கச் சென்றான். ஆனால், அதற்குள் பாமா இவனை கைப்பேசியில் அழைக்க, அதில் அவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்து மேலே சென்று விட்டான்.

🏘️நிவானின் வீடு

அவனது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் மயான அமைதியாக இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சிதறிக் கிடந்தது. அபி சாப்பாடு மேஜையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தான்.

விக்ரமின் தம்பி  பரத் மற்றும் ஆருஷி உள்ளே நுழையும் பொழுது கண்ட காட்சி இதுவே. ஆருஷியிடமும் ஒரு சாவி  எப்பொழுதும் லாக்கெட்டில் வைத்து இருப்பதால், இவர்களே திறந்து உள்ளே வந்தனர். வந்தவள் புரியாத புதிராக அனைத்தையும் பார்த்தவள் அபி அமர்ந்து இருப்பதைக் கண்டவளுக்கு கோபம் கொப்பளித்தது.

ஹாலில் அனைத்து பொருளும் உடைந்து இருந்ததால்,  அவள் பங்கிற்கு   வேகமாக சமையலைறைக்கு  சென்று அனைத்தையும் கீழே தள்ளி விட்டாள். அச்சத்தத்தில் , அபி எழுந்து சமையலைறைக்கு வந்தான். இவர்கள் உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை. கூடவே, படுக்கையறையில் இருந்து நிவானும் வெளியில் வந்தான்.

அவர்களை பார்த்துக் கொண்டே  வேண்டுமென்றே அனைத்தையும் கீழே தள்ளி விட்டாள். நிவானிற்கு கோபம் வந்து பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தான். கைகள் மடக்கி கோபத்தை அடக்கினான். அதற்கு பயன் இல்லாமல் அவளின் அருகில் செல்ல முயல, அபி அவனின் கைப் பிடித்துத் தடுத்தான். ஆனால், அதையெல்லாம் உதறி தள்ளி விட்டு சமையலைறைக்குள் நுழைந்து  ஆருஷியை பிடித்து நிறுத்த, அவனின் கன்னத்தில் அறைந்து விட்டாள்.

இவனும் நொடி பொழுதில் அவளின் கன்னத்தில் அறைந்தான். நிவானை அடித்தற்கே, பரத்தும் அபியும் பாய்ந்து செல்ல, அதற்குள் இவன் ஆருஷியை அடித்து விட்டிருந்தான்.

“என்ன இஷ்டத்துக்கு அப்பாவும், மகளும் எங்க வீட்டு பொருளை உடைக்கிறீங்க? உங்ககிட்ட பணம் இருக்கு,அதனால் உடைப்பீங்க வாங்குவீங்க. இது எங்க காசு. நாங்க சம்பாதிச்சது. உன் அப்பா மாதிரி இல்லை” நிவான் நிலை இல்லாமல் கோபத்தில் பேசினான்.

“பார்த்து மரியாதையா பேசு” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் ஆருஷி.

“ஹே ஆமாம்டி, அப்படி தான் பேசுவேன். நான் சொன்னது தான் உண்மை. உன்னை அடிச்ச மாதிரி அவரை அடிச்சு இருந்துருக்கனும் ” என்று கத்தினான்.

“ஏய் ” என்று கத்தினாள் ஆருஷி. அதன் பின் அவளுக்கு வார்த்தை வரவில்லை. கண்கள் கலங்கி, குரல் நடு நடுங்க அவள் கையை மட்டும் நீட்டி எச்சரித்தாள்.

இவர்கள் சன்னடையை ஆரம்பிக்கும் முன்னே வந்த அபியும், பரத்தும் தான் இவர்களை தடுக்க முயற்சித்தனர்.அபி தான் நிவானை இழுத்து நிறுத்த பார்த்தான். கடைசியில் ஆருஷியின் அப்பாவையும் அடித்திருக்க வேண்டும் என்று கூறியவுடன் நிவானை விட்டு விட்டு தன் தமக்கையிடம் தாவி விட்டான்.

ஏனென்றால்  அவளுக்கு அவள் அப்பா மீது எவ்வளவு பாசம் என்று அவனுக்கு தான் தெரியுமே. நிவானுக்கும் அவ்விஷயம் தெரிந்தும் கூட இவ்வாறு பேசி விட்டு இறுதியாக “இனிமே நீயோ உன் அப்பாவோ எங்க முகத்துல முழிச்சிடாதீங்க. அப்புறம் நடக்கிறதே வேற ” என்று எச்சரித்து விட்டு அவனின் அறைக்கதவை அறைந்து சாத்திவிட்டு உள்ளே சென்று விட்டான்.

அவன் போவதை பார்த்து விட்டு இவள் அமைதியாக வெளியில் சென்று விட்டாள். அபியும் பரத்தும் செய்வதறியாது அந்நிலையிலேயே இருந்தனர்.

மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

 

எனதழகா – 34 ❤️

ரியாவை அழைத்து அனைத்து ரிப்போர்ட்டுகளையும் பார்த்த நரம்பியல் நிபுணர் , ரியாவின் பெற்றோர்களைப் பார்த்து “சார், எல்லாம் செக் பண்ணிட்டேன். இதை நாம கொஞ்சம் நாளைக்கு மாத்திரை மூலமா சரி செய்ய பார்க்கலாம் ” .

தாஸ் ” இல்லை டாக்டர், ரிஸ்க் வேணாமே. நீங்க ஆப்ரேஷனே செஞ்சுடுங்களேன் ” என்று அவர் மகளின் உயிருக்கு பயந்து மருத்துவர் கூறும் முன் கூறினார்.

நின்று கொண்டிருந்த ஆகாஷ் தான் தாஸின் தோளில் கை வைத்து அமைதிப்படுத்தினான். அதே நேரம் தாஸின் பதற்றத்தைக் கண்டு ரியாவும் பயப்பட, தாமரைக்கு பயம் இருந்தாலும் அதை வெளியில் காண்பிக்காமல், தன் மகளுக்கு தைரியம் கொடுப்பதற்காக ரியாவின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

ஆகாஷ் தான் மறுபடியும் மருத்துவரைப் பார்த்து “சார், நீங்க சொல்லுங்க ” என்று கூறிய பின், அந்நிபுணர் தாஸைப்  பார்த்து “நீங்க பயப்படமா இருங்கனு  சொல்ல மாட்டேன். கொஞ்சம் பதட்டம் இல்லாமல் இருந்தீங்கனா நான் சொல்ல வர்றது புரியும் ” என்று சொன்ன பின்னும் தாஸ் அதே பதட்டத்துடன் இருக்க, ஆகாஷ் அந்நிபுணரின்  உதவியோடு அருகிலிருந்த தண்ணீரை கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த முயற்சி செய்தான்.

ஒரு சில நொடிகளுக்கு பின், டாக்டர் பத்ரன் கூற ஆரம்பித்தார். “சார்! அவங்களுக்கு சரியாகாதுனு சொல்லல. அதே மாதிரி மாத்திரை மட்டுமே போதும்னு சொல்லல. அவங்களுக்கு சிகிச்சை ஆரம்பிக்கும் பொழுது, அவங்க உடம்பு அதை ஏத்தகனும். அதே மாதிரி அவங்க மனசும் ஆப்ரேசனை ஏத்தகனும். அது ரெண்டுமே அவங்க கையில தான் இருக்கு. அதனால், அவங்க உடம்புக்கு மாத்திரை, மனசுக்கு மனநல மருத்துவரையும் பரிந்துரை செய்யுறேன் . ஒரு மாசம் கழிச்சு திரும்ப இந்த டெஸ்டுலாம் எடுத்து பார்த்துட்டு முடிவு பண்ணுவோம் ” என்று நீண்ட விளக்கவுரையை கொடுத்தார்.

தாஸிற்கும் தாமைரக்கும் என்ன கூறுவது என்று தெரியவில்லை. அதனால், அமைதியாக மகளை பார்க்க, அவளோ பயத்தில் ஆகாஷை காண, அவளின் தோளில் கை வைக்க, அதை இறுக்கி பிடித்துக் கொண்டாள் .

அதை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அபிக்கு கோபம் தலைக்கேறியது. இங்கு நாம் இருந்தால் அவளை காயப்படுத்தி விடுவோம் என்கின்ற பயத்தில் சென்று விடலாம் என்று நினைத்து திரும்புகையில் ஆதிராவும், அர்ஜுனும் நின்றுக் கொண்டு இருந்தார்கள் அவனைப் பார்த்துக் கொண்டு .

அவன் ஒரு நொடியில் தன் மன நிலையைப் மாற்றி கொண்டு நக்கலாக அவர்களை பார்த்து சிரித்து விசிலடித்து கொண்டே அவர்களை தாண்டி சென்று விட்டான்.

ஒரு சில நேர காத்திருப்பிற்கு பின் நால்வரும் வெளியில் வந்தனர். அர்ஜுன் தாஸின் அருகில் செல்லும் முன் தாமரை அர்ஜுனை கட்டியணைத்து அழுது விட்டார். யாரும் எதுவும் கூற முடியாத நிலையில் இருந்தனர். அனைவரையும் அர்ஜீன் கேண்டினிற்கு அழைத்து சென்று விட்டான்.

மூவரும் முகம் வெளிரி காணப்பட்டனர். ஆனால், யாரும் எதுவும்  பேசவில்லை. பாமாவைக் காண சென்ற அசோக் அனைவரும் கேன்டினில் அமர்ந்திருப்பதை கண்டு அங்கு வந்தான். அனைவரின் அமைதியே அவனுக்கு விஷயம் வெளிப்படையாக தென்பட்டது.

ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றவன் அர்ஜுன் மற்றும் ஆகாஷிற்கு அழைத்தான். பின்பு ,சிறிது நேரம் கழித்து மூவரும் வந்தனர். அந்த ஐந்து நிமிடமும் அவர்களின் நிலை மாறாமல் அப்படியே  அமர்ந்து இருந்தனர்.

ஆகாஷ் ரியாவிற்கு எதிரில் அமர்ந்து காபியை உறிந்து குடித்தான். அச்சத்தத்தில் நிமிர்ந்து பார்க்கும் தருணம் அசோக் மற்றும் அர்ஜுன் ரியாவை இடித்துக் கொண்டு அமர்ந்தனர். ஆகாஷ் தாஸ் மற்றும் தாமரையை நகற்றி இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.

அசோக் மணக்கும் சாம்பார் வடையை ரசித்து ருசித்து உண்ண, அர்ஜுன் மசால் தோசையை சாம்பார் மற்றும் மூன்று வகை சட்னியில் தோசையை பிட்டு அதில் பட்டும் படாமல் தொட்டு சாப்பிட்டான்.

இதை பார்த்து ரியாவிற்கு மட்டுமில்லை தாஸின் வயிற்றில் இருந்து கூட சத்தம் வந்தது. தாமரை தலையில் அடித்துக் கொண்டு எழப் பார்க்க, அவரை எழ விடாமல் ஆகாஷ் அவரை பிடித்து கொண்டு அவரின் முன் உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்தான்.

தாமரை ஆகாஷின் தலையில் கொட்ட , இவர்கள் சாப்பிடுவதில் ஏற்கனவே கடுப்பாக இருந்தவள், ஆகாஷை தான் அடித்த பின் எளிமையாக சமாளிக்க முடியும் என்று நினைத்து ரியாவும் சேர்ந்து தலையில் கொட்டினாள்.

தாமரை விளையாட்டிற்கு மெதுவாக கொட்ட, ரியா தான் மனதினில் உள்ள அனைத்து கோபத்திற்கும் சேர்த்து வைத்து நன்கு கொட்டினாள். ஏனென்றால், ஆகாஷ் தான்  ரியாவிற்கு ஆகாஷ், அனு மற்றும் காவ்யாவுடன் எடுத்த புகைப்படத்தை அனுப்பி இருந்தான். அதை இப்பொழுது சொல்லி அடிக்க முடியாத காரணத்தினால் சொல்லாமல் வெளுத்து விட்டாள்.

“நைனா, அய்யோ, அம்மே, எந்த அம்மே, நைனா …. என்ன காப்பாத்து நைனா! அம்மா இங்க பாருமா ! ஏய் பைத்தியம், நான் காபி தான் டி குடிக்கிறேன். அவனவன் டிபனே சாப்பிட்டுகிட்டு இருக்காங்க. அவனுங்களையும் பாருடி… அய்யோ காளியாத்தா விடுடி. நான் இங்க டாக்டர் டி. விடுடி ” என்று கூறி தலையை சரி செய்து, கசங்கிய சட்டையையும் சரி செய்தான்.

தாமரை தான் ரியாவை பிடித்துக் கொண்டிருந்தார். பின்னே எட்டி பார்த்த பொழுது தான் தெரிந்தது அர்ஜுன்  மற்றும் அசோக் தத்தமது உணவுகளை உண்டு கொண்டு அதே நிலையில் உள்ளார்கள் என்று. அதை விட கொடுமையானது தாஸ் ஆகாஷ் வைத்து விட்டு சென்ற காபியை குடித்துக் கொண்டிருப்பதே.

சுற்றும் முற்றும் பார்த்தவன்  பொது இடம் கருதி, அதே போல் தான் வேலை செய்யும் இடம் என்று கருதியும் அவன் வேகமாக தாஸின் அருகில் அமர்ந்தான். “யோவ் நைனா ! இங்க உன் பொண்ணு கொலை கேசில் உள்ள  போக முயற்சி செஞ்சுக்கிட்டு இருக்க. நீ என்னடானா ஜாலியா காபியை குடிச்சுட்டு இருக்க? ”
என்று பொங்கி கொண்டு கூறினான்.

“டேய் மகனே, போய் அப்பாக்கு ஒரு தோசை, அம்மாவுக்கு மூணு இட்லியும், பாப்பாக்கு ஒரு செட் பூரியும் வாங்கிட்டு வா ……ஹாங் டேய்” என்று கூறி நிமிர்ந்து வலது புறத்தில் திரும்பி பார்த்தவர், இன்னும் ஆகாஷ் அங்கேயே இருப்பதை உணர்ந்து ” இன்னும் போகலையா நீ ? எள்ளுனா எண்ணெய்யா இருக்க வேணாமா ? சரி அதுவும் நல்லது தான்.
உங்க அம்மாக்கு சுகர் இருக்கு. அதனால், இனிப்பு இல்லாமல் ஒரு காபி . காபி வாங்குடா. உங்க அம்மாக்கு டீ பிடிக்காது. போ போ , சீக்கிரமா வாங்கிட்டு வா…. ” என்று சொல்லி விட்டு அவர் காபியைக் குடித்துக் கொண்டிருந்தார்.

அவரை கோபமாக பார்ப்பது போல் பார்த்து விட்டு, அர்ஜுன் மற்றும் அசோக்கைப் பார்த்து அர்த்த பார்வை வீசி விட்டு சென்று விட்டான். இதைக் கண்ட தாமரைக்கு தான் கண்கள் குளமாகியது தான் பெறாத பிள்ளைகளை நினைத்து. ரியாவைப் பற்றி பேச பேச தன் கணவனும் பிள்ளையும் வருத்தம் தான் படுவார்கள். அதனால், இவ்வாறு இருப்பதே நலம் என்று அவரும் எதுவும் நடவாவது போல் அமைதியாக அமர்ந்து விட்டார்.

அதே சமயம் , அங்கு பாமாவிற்கு ஒரு மூளையில் ஒடுங்கி அமர்ந்திருந்தார். லஷ்மி அம்மாவோ தலையில் அடிபட்டு ரத்தம் வழிய கீழே விழுந்து இருக்க, வசுதேவர் மறுபடியும் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நிற்க, ஆருஷி மீராவின் ஆக்ஸிஜன் மாஸ்க்கை அவிழ்த்துக் கொண்டிருந்தாள்.

கீர்த்தி☘️

 

                     

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்