Loading

“ஆத்தா என் மாடு அந்த வரப்புல மேஞ்சிட்டு இருந்துச்சு பாத்தியா” தெருவில் இருந்த வயதான பாட்டியிடம் கேட்டபடி பதற்றத்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள் கண்ணகி.

” ஆமா ஆத்தா. இவ்வளவு நேரம் இங்க தான் இருந்துச்சு.அது உங்க வீட்டு மாடு தானா. நான் கூட யாருதோ என்னவோன்னு நினைச்சேன். அதோ அந்த வயல்காட்டுக்குள்ள தான் போச்சு. சோளத்தை திங்கறதுக்குள்ள போய் புடிச்சி இழுத்துட்டு வா. இல்ல அந்த வீட்டு பொம்பள திட்டியே சாகடிச்சுறுவா ஏதோ அவ ஒன்னு தான் பொள்ளாத காடு வச்சிருக்க மாதிரி.” என அந்த வயதான மூதாட்டி வீட்டு திண்ணையில் அமர்ந்து வெற்றிலை பாக்கு கொட்டி கொண்டே கூறினாள்.

” சரி ஆத்தா. நான் போய் கூட்டியாரேன். இந்த கூறுகெட்ட மாட்டுக்கு இனி காலையும் சேர்த்தி தான் கட்டி போடனும் போல. கட்டுன இடத்து விட்டுட்டு ஊரான் வூட்ல திட்டு வாங்க வைக்குறதே சோலியா போச்சு. “என புலம்பிய படியே மாடு சென்ற இடத்தை நோக்கி சென்றாள்.

அவங்க மாடு புடிக்க போற கேப்ல நம்ம கண்ணகி பற்றி சின்னதா பாத்துட்டு வரலாம் வாங்க. இந்தாங்க டீஎல்லாரும் டீ குடிச்சிட்டே கதை கேளுங்க. இந்த கேப்ல டீ மட்டும் தான் என்னால கொடுக்க முடியும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.

அந்த கண்ணகி கோவலன இழந்த மாதிரி இந்த கண்ணகியும் அவங்க கோவலன இழந்தவங்க தான். அதாவது அவங்க ஆத்துக்காரர் அவங்கள விட்டுட்டு மேலோகம் போயிட்டாங்க. ஒரு ஆண் மகன் கார்த்திக். குடும்ப சூழ்நிலையால் சிறு வயது முதலே அரிசி மில்லில் வேலை செய்து குடும்ப பாரத்தை சுமந்து வருபவன். அடுத்து ஒரு பெண் மகவு சிந்து; அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். ஊரார் பலர் படிப்பெதற்கு என கூறினாலும், குடும்ப சூழல் சரி இல்லை எனினும், தான் தான் பள்ளி செல்ல வில்லை தங்கையின் வாழ்க்கை அப்படி இருக்க அவசியம் என்ன. பெண் பிள்ளைக்கு கல்வி அவசியம் என்பதால் அவளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைத்து அழகு பார்த்தான் கார்த்திக். கண்ணகி வீட்டில் இருக்கும் ஒரு கறவை மாட்டை பார்த்து கொள்வது மற்றும் கிராமத்தில் உள்ள நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் ஒரு தொழிலாளி இவ்வளவே அவள் வேலை. இதிலிருந்து வரும் பணம், கார்த்திக்கின் சம்பாத்தியம் மற்றும் கண்ணகிக்கு மாதாந்தோறும் வரும் விதவைப்பணம் இது தான் அவர்களின் பசியை அடைக்க வழிகள்.

கண்ணகி அந்த வயலில் சென்று பார்க்க வயலின் விளிம்பில் உள்ள சோளக்கதிர்களை ருசித்து கொண்டிருந்தது. இங்கிருந்து பார்த்தாவள் அங்கு சத்தம் கேட்கும் படி இங்கிருந்தே கத்தினாள்.

” ஓஓஓ… சு… சு… அங்க என்னடி பண்ணுறவ. உனக்கு ஊருல மேய வேற இடம் இல்லையா… இரு வாரேன்.” என் கத்த அதற்கு கேட்டு விட்டது. திருட்டுத்தனம் செய்யும் குழந்தை தாயின் சத்தம் கேட்டால் திருட்டு முழி முழிக்குமே அது போல இதுவும் முழித்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தது. அதுவும் போகப்போக சோளத்தை அசைபோட்டு கொண்டே நகர்ந்தது.

அவள் புலம்பி கொண்டே வர, அவளுக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்த மாடு வயலின் விளிம்பு தாண்டி ஊர் பொதுகிணற்றிற்கு அருகில் வந்துவிட்டது. அதில் மேல் சுவறு எதுவுமின்றி கிடக்க அதை பாராமல் ஒடி வந்த வாயில்லா ஜீவன் அந்த கிணற்றில் தவறி விழுந்தது.

அதை கண்ட கண்ணகியோ “அய்யோ…” என கத்தி கொண்டு கிணற்றுக்கருகில் வந்து சேர்ந்தாள். எட்டி பார்க்க அந்த வாயில்லா ஜீவன் கத்த தாய் மனமோ கல்லாய் மாற இருவரின் மனமும் தத்தளித்தது. அவள் கத்தி கூச்சலிட ஊரார் அனைவரும் வந்தனர். கட்டில், கயிறு என எடுத்து கொண்டு ஆட்கள் உள்ளே குதித்து காப்பாற்றினர் அவளின் உயிரை. அவள் பெறாவிட்டாலும் அது அவளின் உயிர் தானே.அரை உயிராக தத்தளித்து கொண்டிருந்த உயிரை காப்பாற்றிய பின் அவள் அதை வீட்டிற்கு கூட்டிச்சென்றாள்.

வீட்டிற்கு சென்றதும் அதற்கு திருஷ்டி கழித்தாள். பின் சாமியிடம் சென்று நன்றி சொன்னாள். “அய்யா முருகா.. தலைக்கு வந்தது தலைப்பாகையோட போன மாதிரி கிணத்துல விழுந்து கிடந்த என் மாட்ட எப்படியோ காப்பாத்தி குடுத்துட்ட முருகா…” என முருகனை வணங்கி விட்டு முந்தியை எடுத்து முடிந்து கொண்டு வீட்டு மாடத்தில் இருந்து அறிவாளை எடுத்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு மாட்டிற்கு தீனி அறுக்க சென்றாள்.

போகும் வழியில் அண்டை வீட்டில் இருப்பவள் நலம் விசாரித்தாள்.

“ஏக்கா மாடு கிணத்துல விழுந்துருச்சாமே. இப்போ எப்படி இருக்கு. சுத்தி போட்டியா கா”

” ஆமா ஆமா…சுத்தி போட்டுட்டு இப்ப தான் டி புல் அறுக்க போறேன். கெட்டதுலயும் ஒரு நல்லது போல நேரம் நல்லா இருந்ததால ஆச்சு. இல்லன்னா என்ன ஆகிருக்கும்.” அவளின் நேரம் அறியாமல் அவள் கூறிக்கொண்டிருந்தாள்.

“ஆமாக்கா கெட்டதுலயும் நல்லது தான். எதுக்கும் குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வந்துரு கா. கடவுள் உன்ன சோதிக்குறாரு போல”

“ஆமா போகனும்னு நினைச்சேன். போக தான் நேரமே கிடைக்கல. என் புள்ளைங்கள ஒரு நாளு லீவ் போட சொல்லி போயிட்டு வரனும் டி. அப்புறம் சிந்து வந்தா இந்த சாவிய குடுக்கறியா.வீட்ட தொறப்பு போட்டுட்டு வந்துட்டேன். நான் அந்தா இருக்குற காட்டுல புல் அறுத்துட்டு வரேன். மாடு வயிறு ஒட்டி கிடக்குது. வயித்துல ஒன்னுமே இல்ல”கண்ணகி.

” சரிக்கா நான் சிந்து கிட்ட குடுக்குறேன். நீ சாவிய கொண்டா”என சாவியை வாங்கி கொண்டாள்.

அவள் சென்று மாட்டிற்கு தேவையான மிதமாக மெல்லும் வகையில் நுனிப்புல்லை ஒரு கட்டு அறுத்து கொண்டு வர, மேகத்தில் இருள் சூழ்ந்திருந்தது. புல் கட்டை தலையில் வைத்து இடது கையால் அதை புடித்து கொண்டு வலது கையால் அறிவாளை புடித்து கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள். அண்டை வீட்டு காரியோ அவளை தடுத்தாள்.

“ஏண்டி போறவள தடுக்குறவ”கண்ணகி.

“இல்ல கா.. இன்னும் சாவிய வாங்க சிந்து வரலையே. டவுன்ல எதாவது டியூசன் போறாளா என்ன”

“இல்லையே டி. அவ நல்லா படிக்குற பொண்ணுன்னு அதெல்லாம் சேக்கல. இந்த பொண்ணு எப்பயும் இம்புட்டு நேரம் வூட்டுக்கு வராம இருக்க மாட்டாளே. என்னனு தெரியலையே. பொட்ட புள்ளைய அனுப்புனாலே பயமா இருக்குதே” கண்ணகி.

“பயப்படதீங்க கா. ஸ்கூல் லேட்டா விட்ருப்பாங்க. இல்ல சைக்கிள் மெதுவா மிதிச்சிட்டு வந்துட்டு இருப்பா.எதுக்கும் கார்த்தி கிட்ட சொல்லி பாக்க சொல்லு இந்தா சாவி” என அவள் சாவியை கொடுக்க, அவளும் பயம் கலந்த குழப்பத்துடனே அதை வாங்கி கொண்டு சென்றாள்.

வீட்டிற்கு சென்று புல்லை மாட்டிற்கு போட்டு விட்டு அவளது ஃபோனை எடுத்து கார்த்திக்கிற்கு அழைத்தாள்.

“ஏய்யா நம்ம சிந்து இன்னும் வீட்டுக்கு வரல சாமி. ஒரு எட்டு பாக்குறியா” கண்ணகி.

“இன்னும் பாப்பா வரலயா மா. இவ்வளவு நேரம் ஆச்சு. இப்ப சொல்ற” கார்த்திக் பயத்துடன் கேட்டான். அவ்வளவு நாழி கடந்திருந்தது.

“ஆமா சாமி. நான் புல் கட்டு அறுத்துட்டு வந்து இப்ப தான் பாக்குறேன். இன்னும் அவ வந்த பாடில்ல. அவ வேற வீட்டுக்கு தூரமா இருக்கா. கொஞ்ச என்னனு பாரேன்” கண்ணகி.

“சரிம்மா பாக்குறேன். நீங்க பயப்படாதீங்க. பாப்பாவுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் எதாவது இருந்துருக்கும். நான் போய் பாக்குறேன்” எனகூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

நேரம் ஆக ஆக கடிகாரம் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. பள்ளி சென்ற அவளையும் காணவில்லை. அவளை காண சென்ற அவனையும் காணவில்லை. வெகுநேரம் ஆக கண்ணகி மனம் பதற்றத்தில் பரிதவித்தது. அழுகையும் விழிகளில் தானாகவே ஒட்டிக்கொண்டது. தான் பெறாத பிள்ளைக்காகவே துடித்த இதயம் தான் பெற்ற இரு முத்துக்களும் காணவில்லை எனில் இதயம் நின்றாலும் சொல்வதற்கில்லை. அழுது கரைந்தாள். கண்டதையும் புலம்பி கொண்டே அழுதாள். அவளிடம் இரண்டு செல்வங்களை விட்டு சென்ற அவள் கணவரிடமும் புலம்பினாள்.

இருள் மறைந்து வெளிச்சம் ஒட்டிக்கொண்டது வானிற்கு. இன்னும் அவள் அழுகை நிற்க வில்லை. சாமியின் அருகில் அமர்ந்து அழுது கரைந்திருந்தாள்.

“அக்கா…. உங்க வீட்டு பெரிய வேன் வருது” என ஒருத்தி கத்திக்கொண்டே அவள் வீட்டிற்கு வர, வேன் சத்தத்தை கேட்டு அவளும் அரக்கபரக்க ஓடி வந்தாள் அது அவளின் வாரிசாக இருக்க கூடாதா என.

வெளியில் வந்து பார்க்க ‌ஆம்புலன்ஸில் இருந்து ஒரு இறந்த உடல் வெளியில் இறக்க பட்டது. தீடீரென வீட்டில் ஆம்புலன்ஸ் வந்தால் யாருக்குத்தான் பயம் வராது. இவளுக்கும் பயம் வரவே மனதை கல்லாக்கி கொண்டு அந்த உடலை பார்க்க, இவள் ஆசை ஆசையாய் பெற்றெடுத்த முதல் சிசு தான். அதை பார்த்த மறுநொடியே சாய்ந்தாள் நெஞ்சை பிடித்து கொண்டு மயக்கத்தில்.

என்ன நடந்தது….

அழைப்பை துண்டித்த அவன் வேலை செய்யும் இடத்தில் சொல்லி விட்டு அவனது தங்கை படிக்கும் பள்ளி சென்று பார்த்தான். யாரும் இல்லை. பிறகு அங்கிருந்து வீட்டிற்கு செல்லும் வழி நெடுகிலும் பார்த்து கொண்டே சென்றான். எப்போதும் மெதுவாக செல்பவன், சிந்துவை காணாத பதற்றத்தால் சிறிது வேகமாகவே சென்றான்.

அவளை வழி நெடுகிலும் காணவில்லை. அந்நேரம் பார்த்து அவனுடைய வண்டியின் விளக்கு அதன் ஒளியை காட்ட மறுத்தது. அது அதன் வேலையை காட்டியது. விளக்கு விட்டு விட்டு ஒளிர்ந்தது. இவன் வந்த சாலையிலோ தெருவெங்கும் ஒளிவிளக்கு இல்லை.இரண்டு கிலோ மீட்டர் தொலைவு வரை வெளிச்சமே இல்லை. என்ன நடந்தாலும் கண்டு கொள்ள அருகில் யாரும் இல்லை. வெளிச்சம் இல்லாத இடத்தில் எவர் தான் குடியிருப்பார். வெளிச்சம் இல்லாது சிறிது கடினமான தான் இருந்தது அவனுக்கு. இதில் அவன் செல்லும் சாலை வேறு மேடு பள்ளமாக உள்ள சாலை. எத்தனை முறை புகார் கொடுத்தும் ஏற்க வில்லை. சாலை அப்படியே தான் உள்ளது. வெளிச்சம் இல்லாத இடம் என்பதால் எதிரில் உள்ள பள்ளத்தை பார்க்காமல் அதில் வண்டியை விட அங்கிருந்த மண் சருக்கி விட்டு அவன் ஒருபுறமும் அவனுது பைக் ஒரு புறமும் வீசி எறியப்பட்டது. அவனுக்கு அடித்த வேகத்தில் மண்டையில் அடிபட்டு அருகில் இருந்த காட்டில் விழ உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவனது துரதிஷ்டம் அப்போது வழியில் வேறாரும் வர வில்லை. ஊசாலாடிய உயிர் நீண்ட நேரம் யாரும் காணாது அனாதையாக கிடக்க, இனிமேல் முடியாது என உயிர் அவனைவிட்டு பிரிந்து சென்றது.

விடிந்து யாரோ ஒருவர் அடையாளம் கண்டு கூற ஆம்புலன்ஸ் அழைத்தால் தான் தெரிந்தது அவனது உயிர் அங்கு இல்லையென. பிறகு அவனுக்கு தெரிந்தவர் இருந்ததால் அவனை அவன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

“அம்மா உங்க பையன் பைக் ஆக்சிடென்ட் ல இறந்து கிடந்தாரு. ஒருத்தர் சொன்னாங்க இது தான் உங்க பையன்னு. உங்க கிட்ட ஒப்படச்சிட்டோம். நாங்க கிளம்புறோம். வேற எதாவதுன்னா ஸ்டேசன் வாங்க” என கூறிவிட்டு ஆம்புலன்சுடன் சேர்ந்து வந்த போலீஸ் அதிகாரியும் கிளம்பினர்.

அவர் சொல்லும் போது அவள் மயக்கம் தெளிந்திருந்தாள். இருந்தும் அவர் சொன்னது அவளது காதில் விழவில்லை. பித்து பிடித்தவள் போல அமர்ந்திருக்க, அடுத்த அரை மணி நேரத்தில் மற்றொரு ஆம்புலன்ஸ் வந்தது.

அதிர்ந்து பார்த்தாள் அவள். அடுத்து என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ என பார்க்க, அவளது உதிரத்திலிருந்து வந்த மகவு உடல் முழுக்க உதிரத்துடன் உலண்டிருந்தாள். அவளது மகள் சிந்து தான் அது.

“கண்ணு என்னாச்சு கண்ணு… என்னாச்சு மா. எழுந்திருமா ஏன் இப்படி படுத்துருக்க. எழுந்திருடி. உன் அண்ணன் மாதிரி நீயும் என்ன ஏமாத்திடாத….” அழுது கரைந்தாள். அவளின் அழுகை கடவுளுக்கு கேட்க அவ்வளவு ஆசை போல.

“சாரி மா. சொல்ல கஷ்டமா தான் இருக்கு.உங்க பொண்ணு இறந்துட்டா. யாரோ அவள ரேப் பண்ணி கொடூரமா கொலை பண்ணிருக்காங்க. ஸ்கூல்ல இருந்து வந்த பொண்ண இப்படி பண்ணிட்டாங்க படுபாவிங்க” என கூறினார் உடன் வந்த போலீசார்.

அவளுக்கு நடந்தது….

பத்தாம் வகுப்புக்காக முன்கூட்டியே விழிப்புணர்வு வகுப்பு எடுத்ததால் இன்று சிந்துவிற்கு பள்ளி விடுவதற்கு தாமதமாகியது. அவள் உடன் செல்லும் பெண்கள் இன்று விடுமுறை என்பதால் அவள் மட்டும் மிதிவண்டியில் வந்தாள். வரும் வழி தான் ஆள் ஆரவாரமின்றி வெளிச்சத்திற்கு தெரு விளக்குகள் கூட இல்லாமல் இருக்குமே. அதில் அவள் இருட்டில் பயந்து பயந்து வர அவள் பயந்தது போலவே இருவர் அங்குள்ள காட்டில் இருவர் குடித்து கொண்டிருந்தனர். யாரோ வருவது போலிருக்க டார்ச் அடித்து இவள் வருவதை பார்த்து விட்டனர். போதை தலைக்கேறியதால் பெண் சகவாசத்திற்கு மனது ஏங்கியது. இது போல எவ்வளவோ பெண்களின் வாழ்வை குழைத்தவர்கள் தான். அவளை கண்டதும் அவளை வழிமறித்தனர். அவளை வலுக்கட்டாய படுத்தி கொடுமை செய்து, அவள் அனுமதி இல்லாமல் அவளது கற்பை சூறையாடினர் அந்த கொடிய மனித மிருகங்கள். அதை யாருக்கும் தெரியாவண்ணம் இருப்பதற்காக அவளை மனித தன்மையின்றி கத்தியால் கொடூரமாக குத்தி கிழித்தனர்.

தன் மகனின் இறப்பு மற்றும் மகளின் இறப்பு இரண்டும் தாங்குமா பெற்றவளின் மனம். முதலில் வந்த மாரடைப்பை தொடர்ந்து அடுத்த மாரடைப்பு அவளை தாக்க நெஞ்சை பிடித்து கொண்டு அமர்ந்தாள். அவளுக்காக ஆறுதல் கூறியது ஒரு மனம். நேற்று காப்பாற்றிய வாயில்லா ஜீவன் அதன் வாலால் அவளை தடவியது. உனக்காக நான் இருக்கிறேன் என சொல்லாமல் சொல்லியது.

இரண்டு உயிரும் ஓரே நாளில் இறைவனிடம். ஒரே நாளில் இருவரும் மேலோகம் சென்றனர்.காரணம் அவர்கள் செய்த பாவமோ அநியாயமோ இல்லை. சமூகத்தில் தவறால். சாலையும் தெருவிளக்குகளும் சரியாக இருந்தால் இன்நேரம் இரண்டு உயிர்களை வீணாக இழந்திருக்க தேவையில்லை. அதே போல் பல பெண்களின் வாழ்க்கையை பாழாக்கிய வஞ்சகர்களை தண்டிக்க எவரும் வர மாட்டார்கள். இவர்களுக்கு கருணை காட்ட எவருமிலர். காரணம் அவர்கள் ஏழை.

ஏழைக்கென ஓர் உலகம்
பணத்திற்க்கு ஓர் உலகம்

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இந்தக் கதையை படிச்சு முடிச்சதும் எனக்கு அழுகையே வந்திருச்சு..வாயில்லா ஜீவனை காப்பாற்றிய கண்ணகியால் தான் பெற்ற பிள்ளைகளை காக்கமுடியவில்லையே..தான் படிக்காவிட்டாலும் தங்கைக்கு கல்வி அவசியம் என நினைத்த கார்த்திக்கின் இழப்பும் அதற்கு காரணமான தெரு விளக்குகள் இல்லாததும் வருத்தமே..சிந்துவுக்கு நேர்ந்தது படிக்கவே கஷ்டமா இருந்துச்சு.. சமூகத்தின் அலட்சியமும்,கயவர்களும் ஏழைகளின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை பதிவு செய்தது அருமை அருமை.. வாழ்த்துக்கள் 💐💐