Loading

சரியாக ஒரு மாதத்தில் பல்லவன் நன்றாகவே நடக்க ஆரம்பித்து விட, அனுபல்லவி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

ஆனால் தன்னவனின் விலகலும் நிராகரிப்பும் தான் அவளை வருத்தியது.

 

ஆகாஷ் – சாருமதி திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே என்றிருக்க, இங்கோ கணவன் மனைவி இருவருக்கும் இடையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

 

பல்லவனை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்து சில நாட்களிலேயே அனுபல்லவி தன் தொழிலை பெங்களூருக்கே மாற்றிக்கொண்டு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள்.

 

அதனால் அவளுக்கு பிரணவ்வை சந்திக்கும் வாய்ப்பு நன்றாகவே குறைந்தது.

 

பிரதாப்பும் சிங்கப்பூர் சென்று செட்டில் ஆகி விட்டான்.

 

என்ன தான் அனுபல்லவியைப் பிரணவ் புறக்கணித்தாலும் ஒரு தந்தையாய் தன் கடமையை அவன் மறக்கவில்லை.

 

தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிரஜனுடன் நேரம் செலவழித்து, அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொடுத்து, அவனின் ஆசைப்படியே இருசக்கர வண்டியில் ஊரை சுற்றுவான்.

 

மாலை வீட்டுக்கு வரும் தாயிடம் பிரஜன் அன்று நடந்ததை எல்லாம் ஒப்புவிக்க, அனுபல்லவியின் மனதில் ஏக்கம் அதிகரித்தது.

 

பிரஜனுக்கு ஐந்து வயதை நெருங்குவதால் அவனை ப்ரீ ஸ்கூலில் சேர்த்து விட, கணவனும் மனைவியும் பார்த்துக்கொள்வதே அரிதாகிப் போனது.

 

இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நாளும் விரைவிலேயே வந்தது.

 

அன்று பிரணவ் தன் ஆஃபீஸில் வேலையாக இருக்க, அவனைப் பார்க்க வந்தார் மூர்த்தி.

 

“அப்பா… என்னப்பா திடீர்னு வந்து இருக்கீங்க? என்ன விஷயம்? அம்மா நல்லா இருக்காங்க தானே.” எனக் கேட்டான் பிரணவ் பதட்டமாக.

 

அவனுக்குப் பதில் கூறாமல் வாகாக அவனுக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்த மூர்த்தியோ, “என்ன பண்ணுறதுப்பா? சொந்தப் பையன பார்க்கவே இப்போ அப்பாய்ன்மென்ட் வாங்கி தான் பார்க்க வேண்டி இருக்கு. வீட்டுல தன்னையே நினைச்சி வயசான அப்பா, அம்மா இருக்காங்குறதே என் புள்ளைக்கு மறந்து போச்சு.” என்றார் நக்கலாக.

 

“அப்பா…” என தயக்கமாக அழைத்தவனின் நெஞ்சில் குற்றவுணர்ச்சி.

 

“நானும் என் பொண்டாட்டியும் வயசானவங்க. பார்க்க வேண்டியது எல்லாம் பார்த்து வாழ்ந்து முடிச்சிட்டோம். என்ன ஒரே குறை எங்க பையன் பொண்டாட்டி புள்ளன்னு சந்தோஷமா இருக்குறத பார்க்குற கொடுப்பினை எங்களுக்கு இல்ல போல. ஆனா என் பேரன் என்ன தப்பு பண்ணான்? பிறந்ததுல இருந்து அப்படி என்ன அனுபவிச்சுட்டான்? முன்னாடி அப்பா யார்னே அவனுக்கு தெரியாது. இப்போ தெரியும். அவ்வளவு தான் வித்தியாசம்.” என சிறிது இடைவெளி விட்டார் மூர்த்தி.

 

“சாரி ப்பா…” எனத் தலை குனிந்த பிரணவ்விடம், “இல்ல பிரணவ். நான் பேசி முடிச்சிடுறேன். இன்னைக்கு நான் பேசலன்னா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவேன். நீ சொல்லுவ பிரஜனுக்கு அப்பாவா உன்னோட கடமைய செஞ்சிட்டு தான் இருக்கன்னு… ஆனா ஜஸ்ட் ஆசைப்பட்ட பொருள வாங்கிக் கொடுக்குறதுலயும் ஊர சுத்தி காட்டுறதுலயும் ஒரு அப்பாவோட கடமை நிறைய இருக்கு. நானும் உன்னோட அம்மாவும் பண்ண அதே தப்ப எங்க பையன் தன்னோட பையனுக்கு பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறோம் நாங்க. ஏன்னா அதனால நாங்க இழந்தது ரொம்பவே அதிகம்.” என்ற மூர்த்தியின் குரல் கரகரத்தது.

 

“அப்பா…” எனக் கலங்கிய கண்களுடன் மூர்த்தியின் கரத்தை அழுத்திய பிரணவ்விற்கு பேச நா எழவில்லை.

 

தந்தை கூறுவது மறுக்க முடியாத உண்மை தானே. 

 

சிறு வயதில் பெற்றோரின் அன்பிற்காக ஏங்கி, அது கிடைக்காமல் போய் தடம் மாறிச் சென்று இழந்தவைகள் ஏராளம் இருக்க, அதே வலியை தன் உயிரணுவில் ஜனித்த மகவுக்கும் கொடுக்க நினைப்பானா அவன்?

 

“காலைல என்ன ஆச்சுன்னு தெரியுமா பிரணவ்? அதனால தான் நான் இன்னைக்கு உன் கூட பேச வந்திருக்கேன்.” என்ற மூர்த்தியின் குரலில் பிரணவ் தந்தையின் முகத்தை கேள்வியாக ஏறிட்டான்.

 

காலையில் அனுபல்லவி பிரஜனை ப்ரீ ஸ்கூல் செல்ல தயார்ப்படுத்தி காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள்.

 

மூர்த்தி, லக்ஷ்மி, பல்லவன் மூவருமே அங்கு தான் இருந்தனர் தத்தம் வேலைகளைப் பார்த்தபடி.

 

“அம்மா… அப்பாவும் நீங்களும் டிவைஸ் பண்ண போறீங்களா?” எனத் திடீரென கேட்கவும் சுற்றி இருந்தவர்களுக்கு அதிர்ச்சி என்றால் அனுபல்லவியின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

 

டிவோர்ஸ் என்ற வார்த்தையை சரியாகக் கூறத் தெரியாமல் சிறுவன் டிவைஸ என்றிருக்க, ஆனால் பெரியவர்களுக்கோ அவன் என்ன கேட்க வருகிறான் எனத் தெளிவாகவே புரிந்தது.

 

“அம்மா சொல்லுங்க…” என பிரஜன் கெஞ்சவும் தன்னிலை அடைந்த அனுபல்லவி, “பிரஜன்… எங்க இருந்து இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசக் கத்துக்கிட்ட? யாரு உன் கிட்ட அப்படி சொன்னாங்க?” எனக் கேட்டாள் அனுபல்லவி சற்று அதட்டலாக.

 

“என் ஃப்ரெண்ட் மனோஜ் தான் சொன்னான். அவனோட அம்மாவும் அப்பாவும் கூட திடீர்னு பேசாம விட்டுட்டாங்களாம். அப்புறம் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டு டிவைஸ் வாங்கிட்டாங்களாம். மனோஜோட அம்மா மனோஜ அவங்க அப்பா கிட்டயே விட்டுட்டு யார் கூடவோ போய்ட்டாங்களாம். இப்போ மனோஜோட அப்பா ஒரு பேட் சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து இருக்காங்களாம். அந்த பேட் சித்தி மனோஜ அடிப்பாங்களாம், திட்டுவாங்களாம். மனோஜ் டெய்லி ஸ்கூல் வந்து அழுவான்.” என்ற பிரஜன், “நீங்களும் அப்பாவும் கூட டிவைஸ் பண்ணுவீங்களா? மனோஜ் அம்மா மாதிரி நீங்களும் என்னை அப்பா கிட்ட தனியா விட்டுட்டு போய்டுவீங்களா? அப்பா பேட் சித்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வருவாங்களா? அப்பாவோட ஆஃபீஸ்ல பிரஜுவ தள்ளி விட்ட ஆன்ட்டி போல… பிரஜு அம்மா கூடயே வந்துடுறேன் மா. எனக்கு பயமா இருக்கு.” என்ற சிறுவனின் முகமே வெளுத்துப் போனது.

 

பிரஜனின் பேச்சில் பத்து மாதம் சுமந்து பெற்றவளின் நெஞ்சில் நீர் வற்ற, மகனை வாரி அணைத்துக் கொண்ட அனுபல்லவி, “இல்லடா கண்ணா. இல்ல… அம்மா உன்ன விட்டு எங்கேயும் போக மாட்டேன். எங்கேயும் போக மாட்டேன். என் பிரஜு கூடவே தான் இருப்பேன்.” என்றாள் கண்ணீருடன்.

 

பிரஜனின் பேச்சில் பெரியவர்களின் கண்களும் கலங்கியது. 

 

ஆனால் அவர்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்.

 

அனுபல்லவி அவ்வாறு கூறவும் அனுபல்லவியை இறுக்கி அணைத்துக் கொண்ட பிரஜன், “பிரஜுவுக்கு அப்பாவும் வேணும்.” என்றான் குரல் கமற.

 

மகனின் ஏக்கம் அனுபல்லவிக்கு தெளிவாகவே புரிந்தது.

 

பிரஜன் வெறும் தாய்ப் பாசத்துக்கோ தந்தையின் பாசத்துக்கோ ஏங்கவில்லை. 

 

மாறாக பெற்றோரின் அன்பு தனக்கு ஒருசேர கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறான்.

 

மகனின் கேள்விக்கு அனுபல்லவிக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

 

தன் வாழ்க்கையை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, எதை நம்பி பிரஜனிடம் வாக்கு கொடுக்க முடியும்?

 

அதுவும் பிரஜன் கூறியது போல் தன்னவனை வேறு ஒரு பெண்ணுடன் நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

 

தன் அணைப்பை இருக்கிய அனுபல்லவி, “அ…அப்பா எப்போவும் நம்ம கூட தான் கண்ணா இருப்பார். பிரஜு இனிமே இப்படி எல்லாம் பேசக் கூடாது.” என்றவளுக்கு சுற்றி இருந்தவர்களின் முகம் நோக்கவே உள்ளம் குறுகியது.

 

சட்டென பிரஜனையும் தூங்கிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.

 

மகளின் வேதனையைக் கண்டு பல்லவனின் முகம் வேதனையில் சுருங்கியது.

 

அவரின் கரத்தைப் பற்றிய மூர்த்தி, “நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சம்பந்தி. பிரணவ் கூட நான் பேசுறேன்‌. எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.” என்க, பல்லவனின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

 

லக்ஷ்மியோ முந்தானையால் வாயை மூடி கண்ணீர் வடித்தார்.

 

தந்தை கூறிய செய்தியில் பிரணவ்வின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

 

தன்னவளுக்கு தண்டனை அளிப்பதாக எண்ணி தன் மகனுக்கும் பெரிய அநியாயம் செய்து விட்டேனே.

 

முதலில் தன்னவளுக்கு தண்டனை கொடுக்க தனக்கு என்ன உரிமை இருக்கிறது? 

 

காதலை வெளிப்படுத்தி சில நாட்களிலேயே அவளை மொத்தமாக ஆட்கொண்டு, அதன் இனிமை நெஞ்சை விட்டு மறைய முன்னே தன்னவளின் நினைவுகளை மொத்தமாக இழந்து விட்டவன் மீது அனுபல்லவிக்கு எவ்வாறு நம்பிக்கை வரும்? 

 

அந்த நம்பிக்கையை முதலில் தான் அவளுக்கு கொடுத்தோமா? என்ற கேள்வியே பிரணவ்விற்கு பூதாகரமாக எழுந்தது.

 

பிரணவ் தனக்குள் ழ்ந்த யோசனையில் இருக்க, இருக்கையை விட்டு எழுந்த மூர்த்தி, “பிரணவ்… இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல. இத்தனை வருஷ வாழ்க்கைல நீ இழந்தது அதிகம். ஆனா கை கிட்ட பொக்கிஷத்த வெச்சிக்கிட்டு ஒரு சின்ன மனஸ்தாபத்தால அதை தவற விட்டுட்டன்னா வாழ்க்கை பூரா நீ கஷ்டப்படுவ. உன்ன சுத்தி இருக்குறவங்களும் கஷ்டப்படுவாங்க. எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சு முடிவெடு. உனக்காக ஒரு அழகான வாழ்க்கை காத்துட்டு இருக்கு. அதை மிஸ் பண்ணிடாதே.” என அவனின் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றார்.

 

தனக்குள் ஏதேதோ சிந்தனைகளில் மூழ்கிக் கிடந்த பிரணவ் மாலை ஆனதும் அன்று சற்று நேரத்துடனே வீட்டுக்கு செல்லலாம் என நினைக்க, வழமைக்கு மாறாக அவனுக்கு வேலை மலை போல் குவிந்தது.

 

இரவு வெகுநேரம் கழித்து வீடு சென்றவனை வரவேற்றது அவனுக்காக ஹாலில் உறங்காமல் காத்திருந்த லக்ஷ்மி தான்.

 

“என்னம்மா இன்னும் முழிச்சிட்டு இருக்கீங்க? உங்கள தான் டைமுக்கு தூங்கணும்னு டாக்டர் சொல்லி இருக்கார்ல.” என சிறந்த தனையனாக தாயைக் கண்டித்தான் பிரணவ்.

 

“அதுக்கில்லப்பா… காலைல நடந்தது எல்லாம் அப்பா சொல்லி இருப்பார்ல. அனு அப்போ போய் ரூம பூட்டிக்கிட்டது. சாப்பிட கூப்பிட்டும் வரல. பிரஜன மட்டும் அனுப்பி வெச்சா. பையன் எங்க ரூம்ல தூங்குறான். அனு தான் காலைல இருந்தே ஒரு வாய் சாப்பிடாம இருக்கா.” என்றார் லக்ஷ்மி கவலையாக.

 

பிரணவ்விற்கு குற்றவுணர்ச்சி அதிகரித்துக் கொண்டே சென்றது எல்லாம் தன்னால் தானே என்று.

 

தொண்டைக்குள் ஏதோ அடைப்பது போல் இருக்க, பேசுவதே கடினமாக இருந்தது.

 

“நீ…ங்க போய் தூங்குங்கம்மா. நா…நான்… நான் பார்த்துக்குறேன்.” என்றவன் அதற்கு மேல் காத்திருக்காது தாயின் முகத்தைக் கூடப் பார்க்காது அவசரமாக மாடி ஏறி தன் அறைக்குச் சென்றான்.

 

பிரணவ் அறையினுள் நுழையும் போது விளக்குகள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

 

கட்டிலில் ஒரு ஓரமாக கால்களை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த அனுபல்லவியின் வரி வடிவம் ஜன்னல் வழியே வந்த மெல்லிய ஒளியில் தெளிவாகவே தெரிய, பிரணவ்வின் இதழ்கள் தன்னால் விரிந்தன.

 

ஆனால் மறு நொடியே தந்தையின் வார்தைகள் நினைவுக்கு வந்து மனம் வாடினான்.

 

அனுபல்லவி உறங்கிக் கொண்டிருந்ததால் குளித்து உடை மாற்றி வந்து அவளுடன் பேசலாம் என்று தன்னவளுக்கு தொந்தரவாக இருக்கும் என்று எண்ணி விளக்கைக் கூடப் போடாது மாற்றுடையை எடுத்துக் கொண்டு நேராக குளியலறைக்குள் நுழைந்தான் பிரணவ்.

 

சற்று நேரத்தில் குளித்து உடை மாற்றி வெளியே வந்த பிரணவ் அறை விளக்கை ஒளிர்விக்க, கட்டிலில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்தமர்ந்து அவனையே வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

 

முடியெல்லாம் கலைந்து, அழுததற்கு சாட்சியாக கண்கள் இரத்தச் சிவப்பாகி, கன்னங்களில் இருந்த காய்ந்து போன கண்ணீர்த் தடங்கள் என வாடிப் போய் கிடந்தவளைக் கண்டு தன்னையே கடிந்து கொண்ட பிரணவ் மறு நொடியே எதுவும் யோசிக்காது அனுபல்லவியை நெருங்கி அவளின் முகத்தை தன் உள்ளங்கைகளுக்குள் தாங்கி, “பல்லவி…” என்றான் கலங்கிய குரலில்.

 

தன் முகத்தை ஏந்தி இருந்த பிரணவ்வின் கரங்களையும் அவனையும் மாற்றி மாற்றிப் பார்த்த அனுபல்லவி, “பல்லவி?” எனக் கேட்டாள் கசந்த புன்னகையுடன்.

 

அவள் எதனைக் குறிப்பிடுகிறாள் எனப் புரிந்து கொண்ட பிரணவ்விற்கு அடுத்து என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

 

மெதுவாக பிரணவ்வின் கரங்களை விலக்கி விட்ட அனுபல்லவி முகத்தை அழுந்தத் தேய்த்து விட்டு பிரணவ்வின் முகத்தை அழுத்தமாக நோக்கினாள்.

 

பிரணவ்வும் தன்னவளின் வாடிய தோற்றத்தையே விழி அசைக்காமல் கலங்கிய கண்களுடன் நோக்கிக் கொண்டிருக்க, “என்னை அ…அப்படியே போ…க விட்டிருக்கலாம்ல. எ…எதுக்காக இப்படி? உ…உங்க கூட இல்லன்னாலும் உங்க…ளோட வாழ்ந்த அந்த ஒரு நாளே எ…னக்கு ஒரு யுகத்துக்கு உங்க கூட கழி…ச்ச இனிமையான நினைவுகளோட மட்டும் வா…ழ போதுமானது. ஆ…னா இப்போ… என்…னை இப்படி பிடிச்சி வெ…ச்சிக்கிட்டு உ…ங்க பக்கத்துல இருந்தும் உங்கள நெ…ருங்க கூட முடியாத தண்டனைய த…ரீங்க. ஏன் பிரணவ்? என…க்கு வ…லிக்கிது… இங்க…” எனத் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டிய அனுபல்லவிக்கு எவ்வளவோ முயற்சித்தும் அவளின் குரல் உடைவதைத் தடுக்க முடியவில்லை.

 

கன்னங்களில் கண்ணீர் ஆறாகப் பெருகி ஓட, அழுகையில் முகம் சிவந்து உதடு துடிக்க தன்னைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தவளின் கேள்விக்கு பதிலாக அனுபல்லவியைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பிரணவ், “சாரி டி… சாரி… எல்லாம் என் தப்பு தான். நான் அப்படி பண்ணி இருக்கக் கூடாது. என் கஷ்டத்த பத்தி மட்டும் தான் யோசிச்சேன். நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பன்னு நான் யோசிச்சு பார்க்கல.” என்றவனின் கண்ணீர் அனுபல்லவியின் தலையில் விழுந்தது.

 

ஆனால் அனுபல்லவியோ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிந்து, “தயவு செஞ்சி எ…ன்னை விட்டுடுங்க. நானும் என் பையனும் உ…ங்க வாழ்க்கைல இருந்தே போயிடுறோம். ப்ளீஸ். எ…என்னால முடியல… சத்தியமா… நான் போயிடுறேன்.” எனக் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறினாள் அனுபல்லவி.

 

அனுபல்லவியின் வார்த்தைகளில் முற்றிலும் நொறுங்கிப் போனான் பிரணவ்.

 

கட்டிலில் அமர்ந்து இருந்தவளின் முன் சட்டென மண்டியிட்டு தரையில் அமர்ந்தவன் அனுபல்லவியின் கரங்களை எடுத்து தன் உள்ளங்கைகளுக்குள் புதைத்துக் கொண்டு, “இ…இந்த ஒரு வார்த்தை தான் டி என்னை உன் கிட்ட நெருங்க முடியாம தடுக்குது.” எனக் கண்ணீருடன் கூறவும் அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அனுபல்லவி.

 

“ஏன் டி திரும்ப திரும்ப விட்டு போயிடுறேன் விட்டு போயிடுறேன்னே சொல்ற. என்ன நடந்தாலும் என் கூட இருப்பன்னு எல்லாம் சொன்ன. எல்லாம் வாய் வார்த்தை தானா? அந்த அஞ்சி வருஷத்த கூட நான் விட்டுடுறேன். ஆனா எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்து உன்ன என் கூட வாழ கூப்பிட்ட அப்புறம் கூட நீ என்னை விட்டு போக நினைச்சியே. அதைத் தான் என்னால ஏத்துக்கவே முடியல. ஏன் நீ நம்ம காதல தக்க வெச்சிக்க ஒரு முயற்சியுமே எடுக்கல?இதோ இப்போ கூட அதையே தான் சொல்ற. ஏன் பவி? என் காதல் உன்னைப் பொறுத்தவரை ஒன்னுமே இல்லையா? ஒ…ஒருவேளை சி…சிதாராவ ஏமாத்தினது போல உ…ன்னையும் ஏமாத்திடுவேன்னு நினைச்சியா?” எனக் கேட்ட பிரணவ்வின் விழிகள் சிந்திய கண்ணீர் அனுபல்லவியின் கரங்களில் பட்டுத் தெறிக்க, சட்டென தன் கரத்தால் அவனின் வாயை மூடி மறுப்பாகத் தலையசைத்தாள்.

 

தன் வாய் மீது இருந்த அனுபல்லவியின் கரத்தை விலக்கிய பிரணவ், “அ…அந்த நம்பிக்கைய நான் உனக்கு தரலன்னு நினைக்கும் போது எனக்கும் இங்க வலிக்கிது டி.” என்றான் தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டி.

 

மறு நொடியே பிரணவ்வின் மார்பில் சாய்ந்து கதறினாள் அனுபல்லவி.

 

பிரணவ்வும் தன்னவளுடன் சேர்ந்து கண்ணீர் வடிக்க, “எ…எனக்குப் பயமா இருந்ததுங்க. எ…என்னோட தகுதி என்னன்னு எனக்குத் தெரியும். உங்க உண்மையான அடையாளம் என்னன்னு தெரியாம இருக்கும் போது உங்க மேல எனக்கு வந்த காதல் எனக்கு தப்பா தெரியல. ஆ…ஆனா நீங்க தான் மூர்த்தி சார் பையன்னு தெரிஞ்சதும் நா…நான் உங்க முன்னாடி ரொம்ப தாழ்ந்து போய்ட்டது போல ஃபீல் பண்ணேன். நீங்…க எவ்வளவோ உயரத்துல இருக்கீங்க. ஆ…னா என் பிறப்பே எ…எல்லாருக்கும் பேசுபொருளா இருக்கும் போது உங்க கூட நான் நடந்தா உங்க…ளுக்கும் அசிங்கமா இருக்கும்னு தோணிச்சு. அ…அதனால தான் அன்னைக்கு உங்க கிட்ட எல்லா உண்மையையும் சொல்லலாம்னு வந்தேன். ஆ…ஆனா அதுக்குள்ள எ…என்னென்னவோ ஆகிப் போச்சி.” என்றவளின் முதுகை ஆறுதலாக வருடி விட்ட பிரணவ், “நீ எப்படி பவி எனக்கு தகுதி இல்லாம போவ? உ…உண்மைய சொல்லணும்னா நான் தான் உனக்கு எந்த விதத்துலயும் தகுதி இல்லாதவன்.” என்றான் குரல் தழுதழுக்க.

 

பிரணவ்வை விட்டு விலகி தலை குனிந்து அமர்ந்த அனுபல்லவி, “இ… இன்னும் ஒரு காரணம் இருக்கு.” என்றாள் தயக்கமாக.

 

பிரணவ் அனுபல்லவியை குழப்பமாக நோக்க, “அ…அந்த ஆக்சிடன்ட்ல உ…உங்களுக்கு…” என அனுபல்லவி கூறும் போதே பிரணவ்வின் பார்வை கூர்மை ஆகியது.

 

அவனின் அழுத்தமான பார்வையில் அனுபல்லவிக்கு பயத்தில் முதுகுத்தண்டு சில்லிட்டது.

 

“உங்கள நான் தப்பா நினைக்கல.” என அவசரமாகக் கூறிய அனுபல்லவி, “நம்ம காதலுக்கோ, நம்ம கல்யாணத்துக்கோ நம்ம ரெண்டு பேரையும் தவிர சாட்சி யாருமே கிடையாது. அ…அப்படி இருக்குறப்ப… எ…என்னைப் பத்தியும் என் அம்…மா பத்தியுமே இந்த சமூகம் தப்பா பேசும் போது உ…உங்க வீ…ட்டுல எ…என்… இல்ல நம்ம… பையன பத்தியும் யா…ராவது தப்…பா பேசிட்டா என்னால அதைத் தாங்கி…க்க முடியும்னு தோணல. அ…அதனால தான் உங்கள விட்டு மொத்தமா விலகி போய்டணும்னு நினைச்சேன்.” என்றவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை.

 

அனுபல்லவி அவ்வாறு கூறவும் பிரணவ்விற்கு கோபம் தலைக்கேறியது.

 

ஆனால் மறு நொடியே அவளின் பேச்சில் இருந்த நியாயம் அவனை மௌனியாக்கியது.

 

ஒருவேளை தனக்கு மட்டும் நினைவுகள் திரும்பி இருக்காவிட்டால் தன் தாயே நிச்சயம் தன்னவளைத் தவறாகத் தானே எண்ணி இருப்பார்.

 

அதுவும் அவனின் தாய் அவ்வாறு எண்ணாவிட்டாலும் அர்ச்சனா அவ்வாறு எண்ண வைத்து இருப்பாளே.

 

நீண்ட பெருமூச்சை வெளியிட்ட பிரணவ் அனுபல்லவியை அமைதியாக நோக்க, “ஆ…னா இப்போ அது எல்லாத்தையும் விட உங்களோட வி…லகல தான் தாங்கிக்க முடியல. எ…ங்க நீங்…க என்னை மொ…மொத்தமா வெ…றுத்துட்டீங்களோன்னு ப…யமா இருந்துச்சு. என்…னால உ…ங்கள வேற ஒரு பொ…ண்ணு கூட நினைச்சி கூட பார்க்க முடியல. இ…ன்னைக்கு காலைல பிரஜு கே…ட்ட கேள்வியில ச…சத்…தியமா செ…த்துடணும் போல இருந்துச்சு.” எனப் பிரணவ்வின் முகத்தைப் பார்க்காது தலை குனிந்த வண்ணம் விம்மியவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான் பிரணவ்.

 

அனுபல்லவியின் விம்மல் மெல்ல மெல்ல கதறலாக மாற, காற்று கூட புகாத வண்ணம் அவளைத் தன்னுடன் சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான் பிரணவ்.

 

அழுதுக் கொண்டே பிரணவ்வின் மார்பில் தன் மென் கரங்களால் மாறி மாறிக் குத்திய அனுபல்லவி, “ஏன் என்னை மட்டும் மறந்தீங்க? ஏன் என்னோட நினைவு உங்களுக்கு கொஞ்சம் கூட வரல? ஏன் டா? ஏன்? அது ஏன் என்னை மட்டும் மறந்தீங்க?” எனக் கேட்டுக் கேட்டு குத்தினாள்.

 

அனுபல்லவியின் கரங்கள் தந்த வலியை விட அவளின் கேள்விகள் பிரணவ்வின் இதயத்தை முள்ளாய்த் தைத்தது.

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல பவிம்மா. எல்லாத் தப்புக்கும் ஆரம்பப் புள்ளி நான் தான். முடிஞ்சா உன் பிரணவ்வ மன்னிச்சிடு டி. ஐம் சாரி…” என்றான் பிரணவ் கண்ணீருடன்.

 

அவனின் மார்பில் சாய்ந்து மறுப்பாகத் தலையசைத்த அனுபல்லவி, “இ…இல்ல. எல்லாம் என் தப்பு தான். நான் உங்கள விட்டுப் போய் இருக்கக் கூடாது. சாரி…” என்க, அவளின் முகமெங்கும் ஒரு இடம் விடாமல் முத்தமிட்ட பிரணவ், “இல்ல… நான் தான் சாரி.” என்றவாறு ஒவ்வொரு முத்தத்துக்குப் பின்னும் மன்னிப்புக் கேட்க, சில நிமிடங்களுக்கு மாறி மாறி இருவருமே மன்னிப்புப் படலம் நடத்தினர்.

 

சற்று நேரத்தில் அனுபல்லவியின் கண்கள் தூக்கத்திலும் அயர்விலும் சொருக, அனுபல்லவியை மார்பில் கிடத்திக் கொண்டு தரையில் சாய்ந்த பிரணவ், “போதும் பவி அழுதது. நாம ரெண்டு பேரும் நம்ம வாழ்க்கைல நிறைய இழந்துட்டோம். நிறையவே வலிகளைக் கடந்துட்டோம். நிறைய ஏமாற்றங்கள சந்திச்சிட்டோம். இதுவே கடைசியா இருக்கட்டும். இந்த பிரணவ்வோட உடல், உயிர், ஆன்மா எல்லாமே எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவனோட பவிக்கு மட்டும் தான். உன்ன தவிர எனக்கு யாருமே பெஸ்ட் கிடையாது. நான் உன் மேல வெச்சிருக்குற காதல் வெறும் மூணு வார்த்தைல சொல்லிட முடியாது. உயிர் போற கடைசி நொடி வரை வாழ்ந்து காட்டுறேன்.” என்கவும் அனுபல்லவியின் இதழ்கள் தன்னால் விரிய, நித்ராதேவி இருவரையும் சில நொடிகளில் அரவணைத்துக் கொண்டாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்