Loading

பல்லவனுக்கு முக்கியமான சில மருத்துவ பரிசோதனைகள் முடித்து விடவும் அவர் உறங்கி விட, பிரதாப் அனுபல்லவியை

வீட்டுக்குச் செல்லக் கூறினான்.

 

பிரணவ் ஏற்கனவே ஏதோ மீட்டிங் என்று கிளம்பிச் சென்றிருக்க, அனுபல்லவிக்கோ வீட்டில் தனிமை வாட்டியது.

 

பிரணவ்வின் அருகாமைக்கு அவளின் மனம் வெகுவாக ஏங்க, அவனின் நினைவில் சிக்கித் தவிப்பதை விட தந்தையின் அருகில் இருப்பது மனதுக்கு சற்று இதமாக இருந்தது.

 

சில மணி நேரங்கள் கழித்து வீடு சென்றவளை வரவேற்றது அவளின் ஆருயிர்த் தோழியின் குரல்.

 

“சாரு…” என ஆவலாக அழைத்துக் கொண்டு அனுபல்லவி வீட்டினுள் நுழைய, அவளைக் கண்டதும் கண்கள் பளிச்சிடத் திரும்பிய சாருமதி சட்டென ஏதோ நினைவு வந்தவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

அனுபல்லவிக்கு தோழியின் புறக்கணிப்பு வலியைக் கொடுக்க, சாருமதியின் அருகே அமர்ந்து அவளின் கரத்தைப் பற்றிக் கொண்ட அனுபல்லவி, “நீயும் என் கூட பேச மாட்டியா?” எனக் கேட்டாள் வலி நிறைந்த குரலில்.

 

அவளின் கேள்வியே சாருமதிக்கு பிரணவ்வின் விலகலை தெளிவாகக் கூற, தானும் அவளைக் கஷ்டப்படுத்தக் கூடாது என அனுபல்லவியை பாய்ந்து அணைத்துக் கொண்டாள்.

 

அவ்வளவு தான். மறு நொடியே இத்தனை நாட்களும் உள்ளுக்குள் பூட்டி வைத்திருந்த மொத்த பாரத்தையும் வெளியே கொட்டி விடுவது போல் சாருமதியை அணைத்துக் கொண்டு நெஞ்சம் உடைந்து கதறி அழுதாள் அனுபல்லவி.

 

பிரஜன் ஆகாஷுடன் வெளியே சென்றிருக்க, சாருமதியுடன் பேசிக் கொண்டிருந்த லக்ஷ்மி தோழிகள் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றார்.

 

“ஷ்ஷ்ஷ்… அனு… போதும் விடு. அதான் எல்லாம் சரி ஆகிடுச்சுல்ல.” என்றவாறு சாருமதி அனுபல்லவியின் முதுகை வருடி விட, “உங்க எல்லாரையும் நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல.” என மேலும் அழுதாள் அனுபல்லவி.

 

“ப்ச்… அனு… நீயும் தானே ஹர்ட் ஆன. நீ ஒன்னும் ஆசைப்பட்டு அப்படி பண்ணலயே. எல்லாம் சூழ்நிலை தான். ஆனா என் கிட்ட மட்டுமாவது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்னு தான் எனக்கு ஆதங்கமா இருந்தது. உனக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு ரொம்ப பயந்துட்டோம்.” எனும் போதே சாருமதியின் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வடிந்தது.

 

“சாரி டி…” என அனுபல்லவி அழ, “விடு… அழாதே. நான் உன்ன மன்னிச்சிட்டேன். நீ இப்போ மன்னிப்பு கேட்க வேண்டியது பிரணவ் சார் கிட்ட தான். ஆகாஷ் சொல்லி இருக்காரு. அவருக்கு உன்ன பத்தின நினைவுகள் எதுவும் இல்லன்னாலும் அடிக்கடி எதையோ தேடி எங்கயாவது கிளம்பி போய்டுவார்னு. அவரும் இந்த அஞ்சி வருஷமா ஒன்னும் சந்தோஷமா இருக்கல.’ என்றாள் சாருமதி.

 

சாருமதியை விட்டு விலகிய அனுபல்லவி, “அவர் என் மூஞ்ச கூட பார்க்க மாட்டேங்குறார் சாரு. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றாள் வேதனைக் குரலில்.

 

“மனசு விட்டு பேசினா தான் எந்தப் பிரச்சினையா இருந்தாலும் முடிவுக்கு வரும் அனு. யாராவது ஒருத்தர் ஃபர்ஸ்ட் ஸ்டெப் எடுத்து தான் ஆகணும். இல்லன்னா உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்குற இந்த சின்ன நூலளவு இடைவெளி ரொம்ப அதிகமாகும். முன்னாடின்னா நீங்க ரெண்டு பேரும் மட்டும் தான். ஆனா இப்போ உங்களுக்குன்னு உங்கள நம்பி உங்க பையன் இருக்கான். பெரியவங்க நீங்க ரெண்டு பேரும் பண்ண தப்பால அந்தச் சின்ன பையன் ஆல்ரெடி நிறைய அனுபவிச்சிட்டான். இனிமேலாச்சும் அவன் அம்மா அப்பா குடும்பம்னு சந்தோஷமா இருக்கட்டும்.” என்ற சாருமதியிடம் சரி எனத் தலையசைத்த அனுபல்லவி, “அ…அவர் என்னை வெ…வெறுத்துட்டாரோன்னு பயமா இருக்கு சாரு.” என்றாள் கண்ணீருடன்.

 

சாருமதி பதிலுக்கு ஏதோ கூற வர, அதற்குள் பிரஜன், “அம்மா…” எனக் கத்திக் கொண்டு ஓடி வரவும் இருவரின் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.

 

அப்போது தான் கதவின் நிலையில் சாய்ந்து மார்புக்கு குறுக்காக கைகளைக் கட்டிக் கொண்டு அனுபல்லவியையே அழுத்தமாக நோக்கிக் கொண்டிருந்த பிரணவ்வைக் கண்ட அனுபல்லவிக்கு திக் என்றானது.

 

அவனின் பார்வையே அவன் வந்து வெகுநேரம் ஆகி விட்டது என்பதை அவளுக்கு எடுத்துரைக்க, அனுபல்லவியின் நா மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.

 

பிரணவ்வோ அவளைக் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க, அனுபல்லவியோ பார்வையாலே அவனிடம் மன்னிப்பை யாசித்தாள்.

 

“ஹாய் சார்…” என்ற சாருமதியின் குரலில் இருவரும் தன்னிலை அடைய, பிரணவ் சிறிய தலையசைப்புடன் சாருமதியை வரவேற்றாள்.

 

“பாஸ்… தேங்க் யூ பாஸ்… நீங்க மட்டும் இல்லன்னா அந்த எம்டன் அவர் பொண்ண கட்டிக் கொடுக்க சம்மதிச்சு இருக்கவே மாட்டாரு.” என ஆகாஷ் பிரணவ்வின் கரங்களைப் பிடித்து நன்றி தெரிவிக்க, பிரணவ்வோ அவனைப் பார்த்து வாயை மூடி சிரித்தான்.

 

“என்னாச்சு பாஸ்? ஏன் சிரிக்கிறீங்க?” எனக் கேட்ட ஆகாஷ் பிரணவ்வின் பார்வை சென்ற திக்கை நோக்க, அங்கு ஆகாஷை முறைத்தவாறு கொலைவெறியோடு நின்றிருந்தாள் சாருமதி.

 

“அவசரப்பட்டு வாயை விட்டுட்டியே குமாரு…” எனத் தன்னையே கடிந்து கொண்ட ஆகாஷ் சாருமதியைப் பார்த்து கழித்து வைக்க, “என் அப்பா உனக்கு எம்டனா நெட்ட கொக்கு?” எனக் கேட்டாள் கோபமாக.

 

அவசரமாக சாருமதியை நெருங்கிய ஆகாஷ், “அச்சோ இல்ல பேபி. நம்ம மாமாவ போய் யாராவது அப்படி சொல்லுவாங்களா? உன் பக்கத்து வீட்டுக்காரங்க தான் மாமாவ பத்தி அப்படி சொன்னாங்க பேபி. அதான் ஒரு ஃப்ளோல வந்திடுச்சு.” என்றான் பாவமாக.

 

“அப்படிங்களா சார்? அந்தப் பக்கத்து வீட்டுக்காரங்க எம்டன் மகள பத்தி எதுவும் சொல்லல்லயா?” என சாருமதி இடுப்பில் கை வைத்துக் கேட்கவும், “அது ஒரு பஜாரி…” என்றான் ஆகாஷ் சட்டென.

 

அதனைக் கேட்டு சுற்றியிருந்தவர்கள் வாய் விட்டுச் சிரிக்க, அப்போது தான் அவன் கூறியதன் அர்த்தம் உணர்ந்த ஆகாஷ் ஸ்லோ மோஷனில் திரும்பி தன்னவளை நோக்கினான்.

 

கண்களில் கோபச் சுவாலை வீச ஆகாஷை சுட்டெரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த சாருமதியின் சட்டென நெடுஞ்சான் கிடையாக விழுந்த ஆகாஷ் சாருமதியின் கால்களைப் பற்றிக் கொண்டு, “சாரி சாரி சாரி குட்டச்சி. என் செல்லம்ல. வாய் தவறி வந்திடுச்சு.” எனக் கெஞ்சினான்.

 

ஆகாஷின் செயலில் அனைவரும் அடக்கமாட்டாமல் சிரிக்க, சாருமதிக்கும் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாகிப் போனது.

 

அவனின் காதைப் பிடித்து எழுப்பி விட்ட சாருமதி ஆகாஷின் காதைத் திருகி, “மகனே இன்னைக்கு உன்ன பாவம் பார்த்து மன்னிச்சு விடுறேன். ஆனா இனிமே தான் நீ பார்க்க போற எம்டன் மகள் யாருன்னு.” என்றான் போலிக் கோபத்துடன்.

 

“தங்கள் கட்டளையே சாசனம் தாயே…” என ஆகாஷ் வலியில் முகத்தை சுருக்கிக் கொண்டு கூற, அதற்கு மேல் முடியாமல் வாய் விட்டுச் சிரித்தாள் சாருமதி.

 

அதன் பின் தான் ஆகாஷிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

 

ஆகாஷ் சாருமதியின் வீட்டிற்கு பெண் கேட்டுப் போக, கலாச்சாரத்தில் ஊறிப் போயிருந்த அவளின் தந்தையோ இவர்களின் காதலுக்கு மறுப்புத் தெரிவிக்கவும் பிரணவ் தான் அவரிடம் பேசி அவர் மனதை மாற்றி இருந்தார்.

 

ஆனால் பிரணவ் சாருமதியின் தந்தையிடம் பேசியிருந்த பேரம் தான் அவர் சம்மதிக்க காரணம் என்று அவர்கள் அறியவில்லை.

 

சரியாக ஒரு மாதத்தில் திருமணம் என நிச்சயிக்கப்பட்டு இருக்க, பிரணவ்விடமும் அனுபல்லவியிடமும் அவர்களே தம் திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்க வேண்டும் என அன்புக் கட்டளை இட்டு விட்டு ஆகாஷும் சாருமதியும் அங்கிருந்து கிளம்பினர்.

 

அவர்கள் சென்றதும் லக்ஷ்மி பிரஜனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்று விட, கணவனும் மனைவியும் மட்டும் அங்கு தனித்து விடப்பட்டனர்.

 

“பிரணவ் அது…” என அனுபல்லவி ஏதோ கூற முயன்ற போதே அவளைத் திரும்பிக் கூடப் பார்க்காது சட்டென வீட்டில் இருந்து வெளியேறினான் பிரணவ்.

 

பிரணவ்வின் செய்கையில் அனுபல்லவியின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

 

அடுத்து வந்த இரண்டு நாட்களுமே பிரணவ் அனுபல்லவியை சந்திக்காது கண்ணாமூச்சி ஆட, சரியாக மூன்றாம் நாள் பல்லவனுக்கான சிகிச்சை தொடங்கியது.

 

லக்ஷ்மியும் மூர்த்தியும் அனுபல்லவிக்கு துணையாக மருத்துவமனை செல்ல, பிரஜனை சாருமதியிடம் விட்டனர்.

 

அனுபல்லவி பல முறை பிரணவ்வின் கைப்பேசிக்கு அழைத்தும் அவளின் அழைப்புகள் எதுவும் ஏற்கப்படவில்லை.

 

அவளின் மனம் முழுவதும் ஒரு வெறுமை படர்ந்தது.

 

சுற்றியும் அவளுக்காக இத்தனை பேர் இருந்தும் ஏனோ தன்னவனின் அருகாமைக்கு அனுபல்லவியின் மனம் வெகுவாக ஏங்கியது.

 

ஏனென்றால் டாக்டர் சித்தார்த்  இவ் அறுவை சிகிச்சை சிறிய ஒன்றாக இருந்தாலும் வாழ்வா சாவா நிலை தான் என்றும் சிகிச்சை வெற்றி பெற்றால் அதன் பின் எந்தப் பிரச்சனையும் இல்லை, மாறாக சிகிச்சை தோல்வியில் முடிந்தால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் தெளிவாகவே கூறி இருந்தார்.

 

பல வருடங்கள் கழித்து கிடைத்த தந்தையின் அரவணைப்பை அனுபல்லவியால் முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

 

அனுபல்லவியின் கலங்கிய நிலையைக் கண்டு ஒரு ஓரமாக பிரதாப்பும் வேதனையுடன் நின்றிருந்தான்.

 

அவளின் இந் நிலைக்கு ஒரு வகையில் தானும் காரணம் தானே என்ற எண்ணமே பிரதாப்பை உயிருடன் வதைத்தது.

 

பல்லவனின் சர்ஜரி தொடங்கி சில மணித்துளிகள் கடக்க, அனுபல்லவியோ தன் தந்தையை நினைத்து கலங்கிப் போய் உள்ளங்கைகளில் முகத்தை புதைத்து அமர்ந்து இருந்தாள்.

 

திடீரென அவளின் தோளைச் சுற்றி ஒரு கரம் படரவும் அதற்காகவே காத்திருந்தது போல் அக் கரத்துக்கு சொந்தக்காரனின் மார்பில் முகத்தைப் புதைத்து வெளியே கேட்காதவாறு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

 

அனுபல்லவியை அணைத்திருந்த பிரணவ் மறு கரத்தால் தன்னவளின் தலையை வருடி, “மாமாவுக்கு ஒன்னும் இல்ல அனு. மைனர் சர்ஜரி தான். சீக்கிரம் ரெகவர் ஆகிடுவார்.” என ஆறுதல் அளித்தான்.

 

ஆனால் அனுபல்லவிக்கு அவன் கூறிய ஆறுதல் மனதில் பதிந்ததோ இல்லையோ அவனின் ‘அனு’ என்ற அழைப்பு தெளிவாகவே உரைத்தது.

 

ஏனென்றால் அவளின் தாய்க்கு அடுத்ததாக அவளைப் பல்லவி என அழைத்தது அவன் தான்.

 

அதுவும் அவர்களுக்கே உரிய பொழுதுகளில் பிரணவ்வின் பிரத்தியேகமான ‘பவி’ என்ற அழைப்பு கூட காணாமல் போய் இருந்தது.

 

அதுவே தன்னவனின் விலகலை அனுபல்லவிக்கு எடுத்துரைக்க, அவளின் அழுகை மேலும் அதிகம் ஆகியது.

 

தந்தையை இழந்து விடுவோமோ என இவ்வளவு நேரமும் கலக்கத்தில் இருந்தவள் இப்போது தன்னவனையும் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் அழுகை பொங்க, தன்னவனின் மார்பில் அழுத்தமாக முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

 

தந்தையை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் என நினைத்த பிரணவ்வோ, “அதான் சொல்றேன்ல அனு மாமா…” என ஏதோ கூற வந்தவனின் பேச்சு பாதியிலேயே நின்றது அவனை விட்டு சட்டென விலகி அனுபல்லவி பார்த்த வலி நிறைந்த பார்வையில்.

 

அதன் காரணம் புரிந்தவனுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை. ஏதோ ஒரு இடைவெளி. அனுபல்லவியிடம் இருந்து ஏதோ ஒன்றை அவன் மனம் எதிர்ப்பார்த்தது.

 

எதுவும் பேசாது அனுபல்லவியின் பின் கழுத்தைப் பிடித்து இழுத்து அவள் முகத்தை மீண்டும் தன் மார்பில் வைத்து அழுத்தவும் இம்முறை அனுபல்லவியின் கரங்கள் தன்னவனைச் சுற்றிக் கட்டிக் கொண்டு மௌனக் கண்ணீர் வடித்தாள்.

 

பிரணவ்வின் நெஞ்சில் வெம்மை பரவ, தன்னவள் அழுகிறாள் எனப் புரிந்தவனின் கண்களும் லேசாகக் கலங்கின.

 

அவ்வாறே சில மணித்துளிகள் கடக்க, அனுபல்லவிக்கு இத்தனை நாட்கள் வராத உறக்கம் தன்னவனின் அருகாமையில் வர, பிரணவ்வின் மார்பில் சாய்ந்தவாறே கண்ணயர்ந்தாள்.

 

சரியாக இரண்டு மணி நேரத்தில் பல்லவனின் அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர் சித்தார்த்துடன் மருத்துவர் ஆன்டனியும் வெளியே வர, அவ் அரவத்தில் கண் விழித்த அனுபல்லவி அவசரமாக அவர்களை நெருங்கி, “டாக்டர் அப்பாவுக்கு இப்போ எப்படி? அவருக்கு ஒன்னும் இல்லல்ல. அவர் நல்லா இருக்கார் தானே.” எனக் கேட்டாள் பதட்டமாக.

 

சித்தார்த்தும் ஆன்டனியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, சுற்றி இருந்தவர்களின் இதயத்துடிப்பு எகிறியது.

 

அனுபல்லவியோ விட்டால் அழுது விடுவேன் என்பது போல் இருக்க, அவளின் அருகே வந்து பக்கவாட்டாக அவளை அணைத்துக் கொண்டான் பிரணவ்.

 

பிரணவ் கண்களாலேயே சித்தார்த்திடம் என்னவென்று கேட்க, அவனைப் பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்த சித்தார்த், “ஆப்பரேஷன் சக்சஸ்… உங்க அப்பா கூடிய சீக்கிரமே பழையபடி எழுந்து நடமாடுவார்.” என்கவுமே அனைவருக்கும் போன உயிர் திரும்ப வந்தது.

 

“ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்… ரொம்ப தேங்க்ஸ். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. அப்பாவ நாங்க பார்க்கலாமா?” என்றாள் அனுபல்லவி ஆனந்தக் கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டபடி.

 

“ஒரு டாக்டரா இது எங்களோட கடமை. நீங்க அந்த கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும். இன்னும் கொஞ்சம் நேரத்துல பல்லவன வார்டுக்கு மாத்திடுவோம். அப்புறம் நீங்க போய் பார்க்கலாம். ஒரு ஒன் வீக் ஹாஸ்பிடல்லயே ஆப்சர்வேஷன்ல இருக்கட்டும். அப்புறம் எங்க ஃபிசியோதெரபிஸ்ட் பல்லவனுக்கு கொஞ்சம் எக்சர்சைஸ் சொல்லி கொடுப்பார். ஒரு ஒன் மந்த்துக்கு அதெல்லாம் தொடர்ந்து ஃபாலோ பண்ணா பல்லவன் பழையபடி எழுந்து நடமாடுவார்.” என்று விட்டு அங்கிருந்து அகன்றார் சித்தார்த்.

 

அனுபல்லவி இன்னும் பிரணவ்வின் அணைப்பிலேயே இருக்க, பிரணவ்வின் கைப்பேசி ஒலி எழுப்பவும் சட்டென அவனை விட்டு விலகினாள் அனுபல்லவி.

 

அனுபல்லவியின் விலகலில் சிறு குழந்தையிடம் இருந்து மிட்டாயைப் பறித்தது போல் பிரணவ்வின் மனம் சுணங்கியது.

 

அடுத்து வந்த ஒரு வாரமும் அனுபல்லவியின் நேரம் மருத்துவமனையிலேயே கழிய, பிரணவ் அடிக்கடி வந்து மனையாளுக்கு துணையாக மருத்துவமனையில் நின்றான்.

 

ஒட்டிக்கொண்டு பேசாவிடிலும் பார்வையாலும் தன் இருப்பாலுமே தன்னவளுக்கு ஆறுதல் அளித்தான் பிரணவ்.

 

அதற்கு மேல் ஏனோ அவளை நெருங்க அவன் மனம் இடம் கொடுக்கவில்லை.

 

சரியாக ஒரு வாரம் கழித்து பல்லவனை டிஸ்சார்ஜ் செய்து தம் வீட்டுக்கே அழைத்து வந்தான் பிரணவ்.

 

பல்லவன் எவ்வளவோ மறுத்தும் கணவனும் மனைவியும் அவர் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை.

 

வேறு வழியின்றி சம்மதித்த பல்லவனுக்கும் பேரனைப் பிரிந்து இருப்பது கஷ்டமாகத்தான் இருந்தது.

 

பிரதாப்பை எவ்வளவோ அழைத்தும் அவன் உறுதியாகவே மறுத்து விட்டான்.

 

இன்னும் சில நாட்களில் சிங்கப்பூர் சென்று அங்கிருக்கும் பல்லவன் இன்டஸ்ட்ரீஸ் கிளையை தானே பொறுப்பெடுப்பதாகக் கூறியவனுக்கு மீண்டும் இந்தியா வரும் எண்ணமே இல்லை.

 

பல்லவன் வீட்டுக்கு வந்ததில் அனுபல்லவியை விட பிரஜனுக்குத் அதிக கொண்டாட்டம்.

 

மருத்துவமனையில் ஃபிசியோதெரபிஸ்ட் தந்த பயிற்சியில் பல்லவனால் ஓரளவு நன்றாகவே இப்போது கை கால்களை அசைக்க முடியுமாக இருந்தது.

 

தந்தையை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த அனுபல்லவி மருத்துவமனையில் வைத்து பிரணவ் தன்னிடம் நடந்து கொண்டதை வைத்து அவன் தன்னை மன்னித்து விட்டான் என எண்ணி இருக்க, அந்தோ பரிதாபம் மீண்டும் அவளுடன் கண்ணாமூச்சி ஆடினான் பிரணவ்.

 

அனுபல்லவியும் பிரஜனும் உறங்கிய பின் வீட்டுக்கு வருபவன் அனுபல்லவி எழுந்திருக்க முன்னே கிளம்பி சென்று விடுவான். 

 

சில சமயம் வீட்டுக்கே வராமல் கூட போவான்.

 

இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் பெரியவர்களின் பார்வையிலும் படாமல் இல்லை.

 

தந்தையின் முன் சிரித்த முகமாக இருந்தாலும் மகளின் மனதை அழுத்தும் பாரம் பல்லவனுக்குப் புரியாமல் இல்லை.

 

ஆனால் இது கணவனும் மனைவியும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினை என்பதால் அவராலும் எதுவும் செய்ய இயலவில்லை.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்