Loading

மறுநாள் காலை பிரணவ் தான் முதலில் கண் விழித்தான்.

 

அவனின் முகத்துக்கு மிக நெருக்கமாக இருந்த அனுபல்லவியின் முகத்தை முதலில் கண்டதும் பல நாட்கள் கழித்து மனம் இதமான உணர்வு.

 

அனுபல்லவியின் தூக்கம் கலையாதிருக்க, அசையாது அவளையே விழி எடுக்காமல் நோக்கிக் கொண்டிருந்தான் பிரணவ்.

 

அவள் உறக்கம் கலைந்து லேசாக அசைய, “குட் மார்னிங்…” எனப் பிரணவ் கூறவும் சட்டென விழிப்புத் தட்டி இமைகளைப் பிரித்தவளுக்கு தன்னிலை அடைய சில நொடிகள் எடுத்தது.

 

பிரணவ் அவளையே குறுஞ்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, இரவு நடந்த சம்பாஷனைகளை நினைவு கூர்ந்தவளுக்கும் மனதில் இருந்த பெரும் பாரம் இறங்கிய உணர்வு.

 

இதழ்கள் மகிழ்ச்சியில் விரிய, பதிலுக்கு தன்னவனை விழி அசைக்காமல் நோக்கினாள் அனுபல்லவி.

 

திடீரென அறைக் கதவைத் திறந்து கொண்டு, “அம்மா…” என்றவாறு ஓடி வந்த பிரஜன் தாயும் தந்தையும் இருந்த நிலையைக் கண்டு உற்சாகம் அடைந்து, “ஐ ஜாலி… ஜாலி… பிரஜுவும் வரேன்.” என்ற சிறுவன் ஓடிச் சென்று தாய்க்கும் தந்தைக்கும் இடையில் பாய்ந்து படுத்துக் கொண்டு கிலுக்கிச் சிரித்தான்.

 

பிரஜனின் வயிற்றில் குறுகுறுப்பூட்டி பிரணவ் விளையாட்டு காட்ட, “ஹா… ஹஹா… அப்பா… போதும்… ஹஹா…” என அடக்கமாட்டாமல் சிரித்தான் சிறுவன்.

 

தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருந்த பாசப் பிணைப்பில் அனுபல்வவியின் கண்கள் ஆனந்தத்தில் கலங்க, ஒரு கையால் மகனையும் மறு கையால் மனைவியையும் அணைத்து இருவரின் நெற்றியிலும் முத்தமிட்ட பிரணவ்விற்கு உலகையே வென்ற உணர்வு.

 

மூவரும் சில மணித்துளிகள் அவ் உணர்விலேயே கட்டுண்டு கிடக்க, நேரத்தைப் பார்த்த அனுபல்லவி சட்டென எழுந்து கொண்டாள்.

 

“என்னாச்சு பவி?” எனப் பிரணவ் குழப்பமாகக் கேட்க, “பிரஜு ஸ்கூல் போகணும். நேத்தும் போகல. பிரஜு எழுந்திரு. லேட் ஆகிடுச்சு. சீக்கிரம் ரெடி ஆகணும்.” என்றாள் கட்டளையாக.

 

உடனே தந்தையை இறுக்கி அணைத்துக் கொண்ட பிரஜன், “நோ நோ… நான் ஸ்கூல் போக மாட்டேன். அப்பா கூட தான் பிரஜு இருப்பேன். அம்மா, அப்பா, பிரஜு எல்லாரும் சேர்ந்து விளையாடலாம். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் டெய்லி அப்படி தான் விளையாடுவாங்க.” என இத்தனை நாள் மறைத்து வைத்த ஏக்கங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான் பிரஜன்.

 

“பிரஜு…” என அனுபல்லவி அதட்டவும் முகம் வாடிய சிறுவன் உதடு பிதுக்கி அழத் தயாராக, “பல்லவி…” எனக் குரலை உயர்த்தினான் பிரணவ்.

 

கணவனை முறைத்த அனுபல்லவி அமைதியாக இருக்க, “பிரஜு அப்பா சொன்னா கேட்பீங்க தானே. பிரஜு இப்போ குட் பாயா ஸ்கூல் போவாங்களாம். நைட் பிரஜு, அப்பா, அம்மா எல்லாரும் சேர்ந்து வெளிய போவோமாம். டீல் ஓக்கேயா?” எனப் பிரணவ் மகனிடம் கேட்கவும் சிறுவனின் கண்கள் பளிச்சிட்டன.

 

அனுபல்லவியின் கண்களிலும் ஒரு மின்னல்.

 

அதனை ஓரக் கண்ணால் ரசித்தவாறே பிரஜனின் கன்னத்தில் முத்தமிட்ட பிரணவ், “ஆமா டா கண்ணா… உன்னோட ஃப்ரெண்ட்ஸ விட நாம ஜாலியா இருக்கலாம்.” என்கவுமே, “ஜாலி ஜாலி…” எனத் துள்ளிக் குதித்த பிரஜன், “அம்மா பிரஜுவ சீக்கிரம் ஸ்கூல் போக ரெடி பண்ணி விடுங்க.” என்றவாறு குளியலறைக்குள் ஓடினான் சிறுவன்.

 

அனுபல்லவி புன்னகையுடன் நின்றிருக்க, எழுந்து அவளைப் பக்கவாட்டாக அணைத்துக் கொண்ட பிரணவ், “ஹேப்பியா இருக்கியா பொண்டாட்டி?” எனக் கேட்டான்.

 

உடனே திரும்பி தன்னவனின் கழுத்தில் மாலையாகக் கரங்களை கோர்த்துக் கொண்ட அனுபல்லவி, “ரொம்ப… ரொம்ப ரொம்ப… எங்க இதெல்லாம் தொலைச்சிடுவேனோன்னு பயமா இருந்துச்சுங்க.” எனும் போதே அவளின் கண்கள் கலங்கின.

 

தன் பெரு விரல்களால் அதனை அழுத்தமாக துடைத்து விட்ட பிரணவ், “இனிமே உன் மனசுல எந்தக் குறையும் இருக்கக் கூடாது. நீ, நான், நம்ம பையன் இந்த அஞ்சி வருஷமும் இழந்த மொத்த சந்தோஷத்தையும் நாம பல மடங்கு அனுபவிக்கலாம்.” என்றவனின் பார்வை அனுபல்லவியின் இதழ்களில் படிய, பிரணவ் இதழ்கள் அதன் துணையை தேடி நெருங்கின.

 

அனுபல்லவியின் கண்கள் தன்னால் மூடிக்கொள்ள, இருவரின் இதழ்களுக்கும் இடையில் நூலளவு இடைவெளியே இருக்கும் நிலையில் குளியலறைக்குள் இருந்து, “அம்மா சீக்கிரம் வாங்க.” எனக் கத்திய பிரஜனின் குரலில் சட்டென பிரணவ்வின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளி விட்டு ஓடினாள் அனுபல்லவி.

 

கைக்கு எட்டியது வாய்க்கு (இதழ்களுக்கு) எட்டாமல் போகவும் கிளர்ந்தெழுந்த உணர்வுகளை தன் தலைமுடியை அழுத்தமாகக் கோதிக் கட்டுப்படுத்த முயன்றான்.

 

பிரஜனின் இரு பக்கமும் பிரணவ்வும் அனுபல்லவியும் மகனின் கை கோர்த்தவாறு ஒன்றாகத் கீழே இறங்கி வர, அதனைக் கண்ட பெரியவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

 

பல்லவன் ஒரு படி மேலேயே சென்று பிரணவ்வை அணைத்து விடுவித்தவர் அவனின் கரத்தைப் பற்றி, “ரொம்ப நன்றி தம்பி. எங்க என் பொண்ணோட வாழ்க்கையும் எங்க வாழ்க்கை போலவே ஆகிடுமோன்னு ரொம்பவே பயந்துட்டேன். அப்படி மட்டும் நடந்திருந்தா என் ஷியா என்னை நிச்சயம் மன்னிச்சு இருக்க மாட்டா.” என்றார் கண்ணீருடன்.

 

“என்ன மாமா இது? அவ உங்க பொண்ணு மட்டும் இல்ல. என் பொண்டாட்டியும் கூட. நான் தான் பைத்தியம் போல என் பவிய புரிஞ்சிக்காம போய்ட்டேன். ஆனா இப்போ என் தவற உணர்ந்துட்டேன். இனிமே நீங்க உங்க பொண்ண பத்தி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல மாமா.” எனப் பிரணவ் கூறவும் பல்லவனின் முகத்தில் திருப்தியான புன்னகை.

 

பிரணவ்வும் அனுபல்லவியும் சேர்ந்தே சென்று பிரஜனை பள்ளியில் விட, சிறுவனின் சநாதோஷத்தைப் பற்றி விபரிக்கவும் வேண்டுமா என்ன? 

 

தன் நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெற்றோரை அறிமுகப்படுத்தி வைத்து மகிழ்ந்தான்.

 

பிரஜனை பள்ளியில் விட்டு விட்டு காரில் பிரணவ்வுடன் வந்து கொண்டிருந்த அனுபல்லவி கார் வீட்டுக்குச் செல்லாமல் வேறு வழியில் செல்லவும், “எங்க போய்ட்டு இருக்கோம்ங்க?” எனக் கேட்டாள் குழப்பமாக.

 

“வந்து பாரு.‌‌.. உனக்கே புரியும்.” என்ற பிரணவ் சில நிமிடங்கள் கழித்து நிறுத்திய இடத்தைக் கண்டு அனுபல்லவியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன.

 

ஏனெனில் பிரணவ் அனுபல்லவியை அழைத்து வந்திருந்தது அவனின் தனிப்பட்ட பீச் ஹவுஸிற்காகும்.

 

எங்கு இருவரும் தம் வாழ்வை முதன் முதலில் ஆரம்பித்து அதுவே அவர்கள் இணைந்திருந்த இறுதித் தருணமுமாய் மாறிப் போன இடம்.

 

அனுபல்லவியின் கண்கள் அன்றைய நினைவுகளில் லேசாகக் கலங்க, காரில் இருந்து இறங்கி வந்து தன்னவனுக்காக கார் கதவைத் திறந்து விட்டான் பிரணவ்.

 

கரங்களைக் கோர்த்துக் கொண்டு இருவரும் உள்ளே நுழைய, அன்று போலவே எந்த மாற்றமும் இன்றி காணப்பட்ட இடத்தைப் பார்த்து அனுபல்லவியின் கண்கள் விரிந்தன.

 

“இங்க நீங்க அடிக்கடி வருவீங்களா?” என்ற அனுபல்லவியின் கேள்விக்கு ஒரு கசந்த புன்னகையை முகத்தில் தவழ விட்ட பிரணவ், “ம்ம்ம்… அடிக்கடி வருவேன். எப்போ எல்லாம் என் மனசு வெறுமையா ஃபீல் பண்ணுமோ அப்போ எல்லாம் வருவேன். எதைத் தொலைச்சேன்? எங்கே தொலைச்சேன்? எதைத் தேடுறேன் அப்படின்னே தெரியாத ஒரு தேடல். ஏனோ இங்க வந்தா மட்டும் தான் என் மனசு கொஞ்சம் அமைதி அடையும்.” என்றவனின் குரல் கரகரத்தது.

 

கணவனின் கலையிழந்த முகத்தைப் பார்த்து வேதனை அடைந்த அனுபல்லவி பிரணவ்வை அணைத்துக் கொண்டு, “சாரி பிரணவ். எல்லாம் என்னால தானே.” என்றாள் வருத்தமாக.

 

“ச்சே ச்சே… நீ என்ன டி பண்ணுவ? நான் தானே உன்ன மொத்தமா மறந்தேன். எனக்காச்சும் உன்னோட நினைவுகளே இருக்கல. ஆனா உனக்கு அப்படியா? என்னோட நினைவுகள் எல்லாம் இருந்தும் நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சும் என்னை நெருங்க முடியாம குழந்தையையும் வெச்சிக்கிட்டு ரொம்ப தவிச்சு போய் இருப்பல்ல.” என்றான் பிரணவ் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து.

 

இருவருக்கும் இடையில் சில நொடிகள் மௌனமே ஆட்சி செய்ய, தன்னிலை அடைந்த பிரணவ் அனுபல்லவியை அவர்களின் இல்லற வாழ்வை ஆரம்பித்த அறைக்கு அழைத்துச் செல்ல, காரிகையவளின் முகத்தில் வெட்கத்தின் சாயல்.

 

கூடவே அன்றைய கூடலின் நினைவுகள்.

 

பிரணவ்வும் அதே நினைவில் புன்னகையுடன் நின்றிருக்க, “ஐ லவ் யூ பிரணவ். இனிமே உங்கள விட்டு பிரியுறதா இருந்தா அது என்னோட உயிர் என்னை விட்டுப் போற நாளா மட்டும் தான் இருக்கும்.” என்றாள் அனுபல்லவி பிரணவ்வின் கண்களை ஆழ்ந்து நோக்கி.

 

இவ்வளவு நேரமும் புன்னகையில் விரிந்திருந்த பிரணவ்வின் முகம் அனுபல்லவியின் கூற்றில் இறுகியது.

 

“எவ்வளவு சந்தோஷமான நேரத்துல என்ன பேச்சு பேசிட்டு இருக்க நீ?” எனக் கடுமையாகக் கேட்ட பிரணவ், “இனிமே உன் வாய்ல இருந்து பிரிவு அது இது இப்படி ஏதாவது வந்துச்சுன்னா அப்புறம் விளைவுகளும் தண்டனையும் மோசமாக இருக்கும்.” என்றான் அனுபல்லவியை முறைத்தவாறு.

 

“நெருப்புன்னு சொன்னதும் வாய் சுட்டுடாது பிரணவ்.” என அனுபல்லவி கூறவும் தோள்களை அழுத்திப் பிடித்து தன்னை விட்டு விலக்கி நிறுத்திய பிரணவ், “இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங் பல்லவி. திரும்ப சொல்ல மாட்டேன்.” என்றான் கோபமாக.

 

அவனைக் குறும்புப் பார்வை பார்த்த பெண்ணவளோ, “சொன்னா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்கவும், “வேணாம் அனுபல்லவி. என்னை சீண்டிப் பார்க்காதே. விளைவு மோசமா இருக்கும்.” என்ற பிரணவ்வின் பார்வை கூர்மை ஆகியது.

 

அனுபல்வவியோ தன்னவனைச் சீண்டும் பொருட்டே, “எப்படியும் ஒரு நாளைக்கு நாம…” எனத் தொடங்கியவளின் வார்த்தைகள் பிரணவ்வின் வன்மையான இதழ்களுக்குள் அடங்கிப் போயின.

 

அனுபல்லவியின் பேச்சில் ஆவேசமுற்று அவளின் இதழ்களை தண்டிக்க வன்மையாக முத்தமிட ஆரம்பித்த பிரணவ் சில நொடிகள் கடந்த பின் பல வருடங்கள் கழித்து கிடைத்த தன்னவளின் இதழ் தேனில் விரும்பியே தொலைந்தான்.

 

இதழ் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தவனுக்கு துணையாக அனுபல்லவியின் இதழ்களும் சலிக்காமல் தம் துணையோடு முத்த யுத்தம் செய்தன.

 

பிரணவ்வின் கரங்கள் தன்னவளின் மேனியில் அத்துமீற ஆரம்பித்த சமயம் பெண்ணவளின் புலன்கள் விழித்துக் கொள்ள, சட்டென பிரணவ்வை விட்டு விலகினாள்.

 

பிரணவ்வோ கண்களில் தாபமும் காதலும் கலந்து அனுபல்லவியை நோக்க, அனுபல்லவியின் நெஞ்சுக்குழி ஏறி இறங்கியது.

 

அதுவே பிரணவ்வின் உணர்வுகளை மேலும் தட்டி எழுப்ப, ஆவேசமாக அனுபல்லவியின் இதழ்களை கொள்ளையிடுவதற்காக நெருங்கியவன் திடீரென என்ன நினைத்தானோ அவளை விட்டு விலகி நீண்ட பெருமூச்சுகளை இழுத்து விடுவித்தான்.

 

“சா…சாரி பல்லவி. நான்… நான்… கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.” என்ற பிரணவ் தன் உணர்வுகளை தன்னவளின் முன் காட்டிக்கொள்ள விரும்பாது அவசரமாக அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

 

தன்னவனின் ஆசையும் ஏக்கமும் புரிந்த அனுபல்லவிக்கு ஏதோ ஒரு தயக்கம்.

 

குளியலறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்ட பிரணவ்விற்கோ தன் உணர்வுகளை அடக்குவதே பெரும் போராட்டம் ஆனது.

 

அவனின் ஒவ்வொரு நாடி நரம்பும் அனுபல்லவியின் அருகாமையை எதிர்ப்பார்த்தது.

 

சில நிமிடங்கள் கடந்தும் பிரணவ் வெளியே வராமல் போக, அனுபல்லவி சென்று குளியலறைக் கதவைத் தட்டவும் தலையில் இருந்து ஈரம் சொட்ட சொட்ட வந்து கதவைத் திறந்தான் பிரணவ்.

 

அவனுள் எழுந்த உணர்வுகளை அடக்க முடியாமல் அதனைக் குளிர்விக்க தலையை முழுதாக நனைத்திருந்தவனைக் கண்டு அதிர்ந்த பிரணவ், “என்ன பிரணவ் இது? என்ன பண்ணி இருக்கீங்க? வாங்க வந்து முதல்ல தலைய துவட்டுங்க.” என்ற அனுபல்லவி பிரணவ்வைக் கட்டிலில் அமர வைத்து அவளே அலமாரியில் இருந்து துவாலையை எடுத்து வந்து பிரணவ்விற்கு முன்பாக நின்று துவட்டி விட்டாள்.

 

தன் முகத்துக்கு நெருக்கமாக இருந்த தன்னவளின் அங்க வனப்புகளில் பிரணவ் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்த உணர்வுகள் மீண்டும் கிளர்ந்தெழ, நொடி நேரம் கூட யோசிக்காது சட்டென அனுபல்லவியின் இடையைப் பிடித்து இழுத்து கட்டிலில் சாய்த்து அவள் மீது மொத்தமாகப் படர்ந்தான்.

 

அனுபல்லவியோ கண்களை அகல விரித்து பிரணவ்வை அதிர்ச்சியாக நோக்க, “யூ ஆர் டெம்ப்ட்டிங் மீ பவி. ப்ளீஸ்…” எனக் கரகரத்த குரலில் கூறிய பிரணவ் தன்னவளின் அனுமதி வேண்டி அனுபல்லவியின் முகம் நோக்க, தன்னவனின் விழிகளில் தெரிந்த பேராசையில் தன் தயக்கம் துறந்து தானே அவனின் இதழ்களை சிறை பிடித்தாள்.

 

இதழ் யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது மட்டும் தான் அவள்.

 

அதன் பின் அவளின் மொத்த ஆட்சியுமே பிரணவ்வின் வசம். 

 

இதழ்களில் ஆரம்பித்த வேட்கை மெல்லமாக கழுத்தில் வந்து சற்று நேரம் இளைப்பாற, பெண்ணவளின் சங்குக் கழுத்தில் பற்களால் அழுத்தமாக தன் காதல் தடத்தைப் பதித்தான் பிரணவ்.

 

பிரணவ்வின் ஒவ்வொரு தொடுகைக்கும் உடல் சிலிர்த்து லேசாக முனங்கியவளின் ஓசை எல்லாம் பிரணவ்வின் இதழ்களுக்குள் அடங்கியது.

 

அங்கு மீண்டும் அரங்கேறியது அவர்களின் அழகான கூடல்.

 

_______________________________________________

 

பௌர்ணமி நிலவொளியில் அத் தீம் பார்க்கின் ஓரமாகப் போட்டிருந்த கல் இருக்கையில் அமர்ந்து சில மணி நேரங்களாக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்த பிரஜனையே ஆசை தீர ரசித்தனர் பிரணவ் மற்றும் அனுபல்லவி.

 

அன்று வீட்டுக்கு கூட செல்லாமல் முழு நாளுமே ஐந்து வருடங்களில் இழந்ததை எல்லாம் மீட்கும் பொருட்டு பசி, உறக்கம் மறந்து தம் இணைகளை விட்டு நொடி நேரம் கூடப் பிரியாது, கட்டுண்டு கிடந்தனர்.

 

மாலை ஆனதும் தான் பிரஜனுக்கு கொடுத்த வாக்கின் காரணமாக மனமேயின்றி இருவரும் பீச் ஹவுஸில் இருந்து கிளம்பினர்.

 

அருகில் இருந்த தீம் பார்க்கிற்கு பிரஜனுடன் இருவரும் வந்திருக்க, அங்கிருந்த விளையாட்டுக்களை வயது வித்தியாசம் இன்றி மூவரும் விளையாடி மகிழ்ந்தனர்.

 

இறுதியில் பெரியவர்கள் இருவரும் களைத்து விட, சிறுவனுக்கோ களைப்பின் அடையாளமே இல்லை.

 

அதனால் தான் மகனைத் தம் பார்வையில் தனியே விளையாட வைத்து விட்டு, அதனைக் கண் குளிர ரசித்துக் கொண்டிருந்தனர் பிரஜனைப் பெற்றவர்கள்.

 

மேலும் பல மணி நேரங்கள் அங்கேயே கழித்து பிரஜனுக்கு உறக்கம் சொக்கும் போது தான் மூவரும் வீடு திரும்பினர்.

 

கட்டிலின் நடுவே படுத்திருந்த பிரஜன் தன் பெற்றோரின் கரங்களை தன் கைகளுக்குள் அடக்கியவாறே உறக்கத்தை தழுவி இருக்க, பிரணவ்வும் அனுபல்லவியும் விழி வழி காதல் செய்தனர்.

 

“தேங்க்ஸ் பவி.” எனத் திடீரென பிரணவ் கூறவும் அனுபல்லவி அவனைக் குழப்பமாக ஏறிட, பிரஜனின் மீது பார்வையைப் பதித்த பிரணவ், “என் வாழ்க்கைல இனிமே காதல், கல்யாணம் ஒன்னுக்கும் வாய்ப்பே இல்லன்னு நினைச்சிட்டு சாவு மட்டும் தான் மிச்சம் இருக்குன்னு வாழ்ந்துட்டு இருக்கும் போது தேவதை போல என் வாழ்க்கைல நீ வந்த. காதல், கல்யாணம் எல்லாம் என் வாழ்க்கைல சாத்தியம் ஆக்கின. காதலுக்கு தனி அகராதியே எழுதின. எல்லாத்தையும் தாண்டி என் உயிரணுல உதிக்கிற குழந்தை என்னை அப்பான்னு கூப்பிடும் அந்த நொடி என் வாழ்க்கைல வராமலே போகும்னு இருந்தப்போ இதோ அப்பா அப்பான்னு என்னையே சுத்தி வர, என் மேல உயிரையே வெச்சிருக்கிற, என் உயிரணுவுல பிறந்த, என் காதலோட பரிசு. ம்ஹ்ம்… எங்க காதலோடு பரிசு.” என்றான் புன்னகையுடன்.

 

உணர்ச்சிப்பெருக்கில் பேசிக் கொண்டிருந்த கணவனின் கரத்தில் அழுத்தம் கொடுத்த அனுபல்லவியின் முகம் நோக்கிய பிரணவ், “நீ என் வாழ்க்கைல வராம போய் இருந்தா இது எதுவுமே சாத்தியம் இல்ல பவி. இந்த வாழ்க்கை, இந்த உடல், இந்த உயிர், இந்த ஆன்மா எல்லாம் ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உனக்கு மட்டும் தான். ஐ லவ் யூ டி பொண்டாட்டி.” என்றவன் எக்கி அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

 

_______________________________________________

 

சுற்றி எங்கும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்க, மண்டபம் முழுவதும் சனத் திரள் நிரம்பி வழிந்தன.

 

சிறுவர்களோ அங்கும் இங்கும் ஓடியாடி விளையாடித் திரிய, அவர்களுள் ஒருவனாய் ஓடித் திரிந்தான் பிரஜன்.

 

மணமேடையில் அமர்ந்திருந்த ஆகாஷோ தன்னவளைக் காணும் வரை பொறுமை இன்றி ஐயர் கூறும் மந்திரங்களை தப்பு தப்பாக உச்சரித்துக் கொண்டிருக்க, அவனை சுற்றி நின்றிருந்தவர்கள் வாய் விட்டு சிரித்தனர்.

 

ஐயர் வேறு ஆகாஷை ஏகத்துக்கும் முறைத்து வைக்க, அவரைப் பார்த்து இளித்து வைத்த ஆகாஷோ அடிக்கடி திரும்பி மணமகள் அறை இருந்த பக்கம் நோட்டம் விட்டான்.

 

அவனின் கூத்தைப் பொறுக்க முடியாத ஐயரே இறுதியில் மணப் பெண்ணை அழைத்து வரக் கூற, அனுபல்லவியின் கரம் பிடித்து தோழிகள் சூழ மேடைக்கு வந்தாள் சாருமதி.

 

ஆகாஷால் சாருமதியை விட்டு தன் பார்வையை அகற்ற முடியாமல் கண்களில் காதலும் ஆசையும் பொங்க ஆவென வாயைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்க, அவனின் தலையில் லேசாகக் குட்டி நேரே பார்க்க வைத்தான் அவனுக்குப் பின் நின்றிருந்த பிரணவ்.

 

அவனின் செய்கையில் சுற்றி இருந்தவர்கள் அடக்கமாட்டாமல் சிரித்து வைக்க, ஆகாஷின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

 

பிரணவ்வின் கண்களோ மணமகள் தோழியாக வந்த தன்னவளின் அழகை ரசனையாக நோக்க, அதனைக் கடைக்கண்ணால் பார்த்த அனுபல்லவி யாருக்கும் தெரியாமல் தன்னவனுக்கு ஒரு பறக்கும் முத்தத்தைக் கொடுக்க, பிரணவ்வின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

 

“ஹ்க்கும்… எங்களுக்கு மட்டும் தான் எல்லா அட்வைஸும். என்னமா ரொமான்ஸ் பண்ணுறாங்க. இங்க மாப்பிள்ளை யாருன்னே தெரியல.” ஆகாஷ் வேண்டும் என்றே சத்தமாக முணுமுணுக்க, அது பிரணவ்வின் செவிகளில் தெளிவாக விழுந்தது.

 

ஆகாஷின் மாலையை சரி செய்து விடுவது போல் குனிந்த பிரணவ் அவனின் காதில் மெதுவாக, “தம்பி… இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் நடக்கணுமா? வேணாமா?” எனக் குறும்பாகக் கேட்கவும் கப்சிப் என வாயை மூடிக் கொண்டான் ஆகாஷ்.

 

சாருமதி ஆகாஷின் அருகில் வந்து அமரவும் அனுபல்லவி சென்று பிரணவ் அருகே நின்று அவனின் கரம் கோர்த்துக் கொண்டாள்.

 

“செமயா இருக்க குட்டச்சி. எனக்கு உன்ன இப்பவே தூக்கிட்டு போகணும் போல இருக்கு.” என ஆகாஷ் சாருமதியின் காதில் கிசுகிசுக்க, போலியாகப் புன்னகைத்தபடி அவனின் இடையில் கிள்ளி வைத்தாள் சாருமதி.

 

ஆகாஷிற்கு வலியில் கத்தவும் முடியாமல் தன்னவளைப் பாவமாகப் பார்த்து வைக்க, “வாயை வெச்சிட்டு சும்மா இருக்கலன்னா நைட் பட்டினி போட்டுடுவேன்.” என மெல்லிய குரலில் சாருமதி மிரட்டவும் முன்னே திரும்பிக் கொண்ட ஆகாஷ், “எல்லாரும் அதுலயே கண்ணா இருக்காங்க.” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

 

மணமக்களின் இரு பக்கமும் இருவரின் பெற்றோரும் நின்றிருக்க, அவர்களுக்குப் பின்னால் மனைவி மற்றும் மகனுடன் குடும்பமாக நின்றிருந்தான் பிரணவ்.

 

ஐயர் ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்ற மறு நொடியே தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளைத் தன் சரிபாதியாக ஆக்கிக் கொண்டான் ஆகாஷ்.

 

அனுபல்லவி தான் மூன்றாவது முடிச்சான நாத்தனார் முடிச்சை இட்டாள்.

 

மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அவர்களை அணைத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் பிரணவ் மற்றும் அனுபல்லவி.

 

ஆகாஷ் சாருமதி திருமணம் நல்லபடியாக முடிந்த மறு நிமிடமே பிரஜனை தன் பெற்றோரிடம் ஒப்படைத்த பிரணவ் தன்னவளை அழைத்துக் கொண்டு அவர்களின் காதலின் நினைவுச் சின்னமான பீச் ஹவுஸிற்கு சென்றான்.

 

“பிரணவ்… இப்போ ஏன் இங்க வந்திருக்கோம்? பிரஜு நம்மள தேடுவான். பாவம் தனியா இருப்பான் பையன்.” என அனுபல்லவி கூறவும் அவளின் நெற்றியில் இரு விரல்களால் சொட்டிய பிரணவ், “கொஞ்சம் புருஷன பத்தியும் கவலலப்படுங்க மேடம். அதுவும் இல்லாம பிரஜு ஒன்னும் தனியா இல்ல. நம்ம அப்பா அம்மா கூட தான் இருப்பான். இது நமக்கான நேரம். சோ நம்மள பத்தி மட்டும் பேசலாம். இந்தக் கொஞ்சம் நாளா கல்யாண வேலை அது இதுன்னு நீ என்னைக் கண்டுக்கவே இல்ல பவி.” என முகத்தைத் தொங்கப் போட்டவாறு கூறிய பிரணவ் மெதுவாக அனுபல்லவியை நெருங்கினான்.

 

பிரணவ் நெருங்க நெருங்க பின்னோக்கி அடி எடுத்து வைத்த அனுபல்லவி, “சார் எதுக்கு அடி போடுறீங்கன்னு நல்லாவே தெரியுது. ஒழுங்கா ஓடிடுங்க. எனக்கு செம டயர்டா இருக்கு.” என்றவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கிக் கொண்ட பிரணவ், “பொண்டாட்டியோட டயர்ட போக்க தானே புருஷன் நான் இருக்கேன்.” என்றவாறு அனுபல்லவியின் இதழ்களை நோக்கிக் குனிந்தான்.

 

தன்னவனின் கைகளுக்குள் குழைந்த அனுபல்லவியின் இதழ்களை பிரணவ் முத்தமிட நெருங்கிய நொடி சட்டென அனுபல்லவியின் முகம் மாற, பிரணவ்வைத் தள்ளி விட்டு விட்டு இரு கரங்களாலும் வாயைப் பொத்திக் கொண்டு குளியலறைக்குள் ஓடினாள்.

 

“பல்லவி… என்னாச்சு?” எனப் பதட்டமாகக் கேட்ட பிரணவ் அனுபல்லவியைப் பின் தொடர, அவளோ குடல் வெளியே வரும் அளவுக்கு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 

அவசரமாக சென்று அவளின் தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட பிரணவ், “ஓக்கே ஓக்கே ரிலேக்ஸ் டா… ஒன்னும் இல்ல. மெதுவா… மெதுவா…” என்றவாறு அனுபல்லவியின் முதுகை வருடி விட்டான்.

 

அனுபல்லவி வாந்தி எடுத்து முடிந்ததும் பிரணவ்வே அவளின் முகம், வாய் எல்லாம் துடைத்து விட, களைப்பில் வாடிய கொடியாய் தன்னவனின் மார்பில் சாய்ந்தாள் அனுபல்லவி.

 

அணைத்தவாறே அழைத்துச் சென்று அனுபல்லவியைக் கட்டிலில் படுக்க வைத்த பிரணவ் அவளின் குமட்டல் போக எழுமிச்சை சாறு கரைத்துக் கொண்டு வந்து பருகக் கொடுத்தான்.

 

அதன் பின் தான் அனுபல்லவிக்கு சற்று தெம்பாக இருந்தது.

 

கட்டிலில் சாய்ந்து இருந்தவளின் தலையைப் பிடித்து விட்ட பிரணவ், “என்னாச்சு பவி? சாப்பாடு எதுவும் ஒத்துக்கலயா? இன்னும் வாமிட்டிங் ஃபீல் இருக்கா? பேசாம டாக்டர் கிட்ட போகலாமா?” எனக் கேட்டான் வருத்தமாக.

 

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், “தெரியலங்க… அப்படி வாமிட் வர அளவுக்கு பெரிசா ஒன்னும் சாப்பிடல.” எனக் கண் மூடி புருவம் சுழித்தவாறு கூறியவளின் கண்கள் பட்டென விரிந்து கொண்டன.

 

“பவி…” எனப் பிரணவ் பதட்டமாகக் கேட்க, அவசரமாக எழுந்தமர்ந்த அனுபல்லவி தனக்குள் ஏதோ கணக்குப் போட்டு பார்த்து விட்டு, “பிரணவ்… எனக்கு நாள் தள்ளிப் போய் இருக்கு.” என்றாள் முகம் மலர.

 

அவளைக் குழப்பமாக ஏறிட்ட பிரணவ்வோ, “அதனால என்ன பல்லவி? ஏதாவது பிரச்சினையா? டாக்டர் கிட்ட காட்டணுமா?’ எனக் கேட்டான் புரியாமல்.

 

தலையில் கை வைத்த அனுபல்லவி, “அச்சோ மக்கு புருஷா… நாள் தள்ளிப் போய் இருக்கு. நாள் தள்ளிப் போய் இருக்கு…” என்று அழுத்திக் கூறினாள்.

 

அனுபல்லவி கூற வருவது புரியாமல் குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மூளையில் விளக்கு ஒளிர, கண்கள் அதிர்ச்சியிலும் ஆனந்தத்திலும் விரிந்து கொண்டன.

 

“நீ… நீ… நான்…” என பிரணவ் வார்த்தை வராது தடுமாற, புன்னகையுடன் ஆம் எனத் தலையசைத்த அனுபல்லவி, “நீங்க திரும்பவும் அப்பா ஆகப் போறீங்க பிரணவ்.” எனக் கூறிய மறு நொடியே பிரணவ்வின் இறுகிய அணைப்பில் இருந்தாள் அனுபல்லவி.

 

“நா…நான்… நிஜமாவா பவி? எ…என்னால நம்பவே முடியல. டாக்டர் ஏ…தேதோ சொல்லி இருக்கவும் பி…ரஜுவுக்கு அப்புறம் ந..மக்கு குழந்தையே பிறக்காதுன்னு நினைச்சேன். பிரஜு பிறக்கும் போது என்னால உன் கூட இருக்க முடியலன்னு ரொ…ம்பவே வருத்தமா இருந்துச்சு. ஆனா இப்போ…” எனத் திக்கித் திணறிப் பேசிய பிரணவ்வின் கண்கள் விடாமல் கண்ணீர் வடித்தன.

 

அவனின் முதுகை வருடி விட்ட அனுபல்லவி, “ஆமா பிரணவ். நீங்க திரும்பவும் அப்பா ஆகப் போறீங்க. பிரஜு பிறக்கும் போது உங்களால செய்ய முடியலன்னு ஃபீல் பண்ணதெல்லாம் இந்தக் குழந்தைக்கு பண்ணுங்க. டாக்டர்ஸ் தியரி படி ஆயிரம் சொல்லுவாங்க. ஆனா கடவுள்னு ஒருத்தர் இருக்கார். அவரோட நியதிய யாராலயும் மாத்த முடியாது. நீங்க ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்தீங்க தானே. பிரஜு என் வயித்துல இருக்கும் போது நானும் உங்கள் ரொம்ப மிஸ் பண்ணேன். பிரஜு ஒவ்வொரு தடவையும் என் வயித்துல அசையும் போது உங்க கிட்ட அதைப் பத்தி சொல்ல ரொம்ப ஆசையா இருக்கும்.” என்றவளின் கண்களும் கலங்கின.

 

அனுபல்லவி அவ்வாறு கூறவும் பிரணவ்வின் அணைப்பு மேலும் இறுகியது.

 

அன்றே மருத்துவரிடம் சென்று கர்ப்பத்தை உறுதி செய்து கொண்டு வீட்டிற்கு சென்று அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள, அங்கோ மகிழ்ச்சிக்கோ பஞ்சம் இல்லாமல் இருந்தது.

 

பிரஜனைக் கையில் பிடிக்கவே முடியவில்லை. 

 

“ஹே..‌. எனக்கு தங்கச்சிப் பாப்பா வரப் போறா… எனக்கும் என் ஃப்ரெண்ட்ஸ் போல தங்கச்சிப் பாப்பா வரப் போறா…” என்று சந்தோஷக் கூச்சல் இட்டு ஊரையே கூட்டினான்.

 

பிரதாப்பிற்கும் வீடியோ காலில் அழைத்து தகவல் தெரிவிக்க, அவனுடைய காதலியான ஜெனிஃபரும் அங்கு தான் இருந்தாள்.

 

இருவரும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்க, அதனைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர்கள் பிரதாப்பிடம் அவசரமாக திருமண செய்தியைக் கூற சொல்லி கேலி செய்ய, புதுக் காதல் ஜோடியின் முகத்தில் வெட்கம்.

 

_______________________________________________

 

சில வருடங்களுக்கு பிறகு,

 

பூஞ்சோலைக் கிராமத்தின் ஊர்த் தலைவரான ராஜேந்திரனின் வீடு சொந்தங்கள் மற்றும் நட்புக்களால் நிரம்பி வழிந்தன.

 

அன்று அபினவ் மற்றும் அக்ஷராவின் இளைய மகனான தேவ்வின் முதல் பிறந்தநாள்.

 

அவர்களின் மூத்த மகள் ஆராதனாவுக்கு எட்டு வயதாகிறது. இரண்டாவது மகள் ஷிவன்யாவிற்கு ஐந்து வயதாகிறது.

 

ஆதர்ஷ் மற்றும் லாவண்யாவிற்கு எட்டு வயதில் யுவன் மற்றும் யுவனியா என ஆண் ஒன்று பெண் ஒன்றென இரட்டைப் பிள்ளைகள்.

 

ராஜேந்திரனின் வீட்டிலேயே நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

 

“ஜிராஃபி ஜிராஃபி… ப்ளீஸ் ஜிராஃபி… இது தான் லாஸ்ட். இனிமே கேட்க மாட்டேன். என் செல்ல ரயன் தானே.” என ஆர்யானின் சட்டை நுனியைப் பிடித்துத் தொங்கியபடி அவனைப் பின் தொடர்ந்தாள் சிதாரா.

 

தம் மூன்று வயது மகள் யாழினியை தூக்கி வைத்திருந்த ஆர்யானோ தன் நடையை நிறுத்தி விட்டு திரும்பி சிதாராவை முறைக்க, அவளோ அவனைப் பாவமாகப் பார்த்து வைத்தாள்.

 

தன்னவளின் முக பாவனையில் இளகிய மனதைக் கடிவாளமிட்டுத் தடுத்த ஆர்யான், “இனாஃப் மினி. அது தான் நமக்கு மூணூ குழந்தைங்க இருக்காங்கல்ல. இன்னும் என்ன? உனக்காக தான் நீ ஆசைப்படுறியேன்னு ரெண்டு தடவை மனசைக் கல்லாக்கிட்டு ரிஸ்க் எடுத்தேன். இன்னொரு தடவை என்னால உன்ன அந்த நிலைமைல பார்க்க முடியாது. ஒவ்வொரு செக்கனும் உயிர கைல பிடிச்சிட்டு இருக்க முடியாது.” என்றான் கண்டிப்பாக.

 

அவர்களின் மூத்த மகள் பிரக்யாவிற்கு பத்து வயதாகிறது. இரண்டாவது மகன் இஷானிற்கு ஆறு வயதாகிறது.

 

பிரசவ நேரத்தில் சிதாரா அனுபவிக்கும் வலிகளைக் கண்ணால் பார்த்து மனதளவில் அதே வலியை அனுபவிக்கும் ஆர்யான் வேறு குழந்தைகளே வேணாம் என்றிருக்க, ஒவ்வொரு முறையும் சிதாரா ஏதாவது செய்து அவனது மனதை மாற்றி விடுவாள்.

 

இம் முறையும் அதே போல் செய்ய, ஆர்யானோ முடிவாக மறுத்து விட்டான்.

 

தன்னவனின் கண்டிப்பில் முகம் வாடிய சிதாரா, “ப்ளீஸ் ஜிராஃபி… இது தான் லாஸ்ட். என் செல்லம்ல. எப்படியாவது அக்ஷுவ ஓவர்டேக் பண்ணிடணும். அவ கிட்ட நான் பெட் கட்டி இருக்கேன். அவளுக்கும் மூணு பசங்க. நம்மளுக்கும் மூணு பசங்க. நமக்கு இன்னொரு குழந்தை பிறந்திச்சுன்னா நாம தான் லீட்ல இருப்போம்.” என்றாள் கண்கள் மின்ன.

 

மனைவியின் பதிலில் தலையில் அடித்துக் கொண்ட ஆர்யான், “இதென்ன சின்னப்பிள்ளைத்தனம் மினி? இதுல எல்லாம் யாராவது பெட் கட்டுவாங்களா? நோ வே மினி. இந்தத் தடவை நான் ஏமாற மாட்டேன்.” என்றான் அழுத்தமாக.

 

“சரி அந்த ரீசன் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு மட்டும் உங்க மினி போல ரெண்டு பொண்ணுங்க. எனக்கு மட்டும் ஒரே ஒரு மினி ரயன். எனக்கு ஒரு மினி ஜிராஃபி வேணும்.” என்றாள் சிதாரா சிணுங்கலாக.

 

அதில் சட்டென சிரித்த ஆர்யானோ அவ் வழியாக தம்பியின் கரம் கோர்த்து நடந்து வந்து கொண்டிருந்த மகளை அழைத்தாள்

 

“பிரகி… பாப்பாவ கொண்டு போய் தேவி பாட்டி கிட்ட கொடுடா. டேடியும் மம்மியும் வந்துடுறோம்.” என்ற ஆர்யான் யாழினியை பிரக்யாவிடம் கொடுத்து அனுப்பினான்.

 

சிதாரா இன்னும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்க, யாரும் இல்லாத மறைவான ஒரு இடத்திற்கு அவளை அழைத்து வந்து தன்னுடன் நெருக்கமாக நிறுத்திக் கொண்டான்.

 

“மினி… என் கண்மணி. ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா. எ…எனக்கு உன்ன அ…ப்படி கஷ்டப்படுறத பார்க்க முடியாது. அதான் நமக்கு கண்ணுக்கு கண்ணா தங்கமான மூணு பசங்க இருக்காங்கல்ல. போதும் டா.” என்றான் ஆர்யான் கெஞ்சலாக.

 

அவனின் மனையாளோ வேண்டும் என்றே பொய்யாக கோபம் காட்ட, அவளின் முகத்தை தன் கரங்களில் ஏந்திய ஆர்யான் பெருமூச்சுடன், “ஓக்கே… நாம இதைப் பத்தி வீட்டுக்கு போய் டிஸ்கஸ் பண்ணலாம். இப்போ இப்படி மூஞ்ச தூக்கி வெச்சிட்டு இருக்காதே மினி. என் மூடும் ஸ்பாய்ல் ஆகுது. ஸ்மைல்…” என்கவும் சட்டென குறும்பாகப் புன்னகைத்தாள் சிதாரா.

 

“கேடி பொண்டாட்டி. உன்னால மட்டும் தான் என்னை இப்படி இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க முடியும்.” என்ற ஆர்யான் அதற்கான தண்டனையை தன்னவளின் இதழ்களுக்கு வழங்கினான்.

 

சற்று நேரத்தில் அனைவரும் கேக் வெட்டும் இடத்தில் ஒன்று கூட, அபினவ்வோ அடிக்கடி வாசல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்னாச்சு அபி? யார் வரும் வரை வெய்ட் பண்ணுற?” எனக் கேட்டான் ஆதர்ஷ்.

 

“பிரணவ் வரேன்னு சொன்னான் ஆதர்ஷ். அதான் பார்க்குறேன்.” என அபினவ் கூறவும் அனைவரின் பார்வையும் சட்டென சிதாராவின் பக்கம் திரும்ப, அவளோ தன்னவனின் கரம் கோர்த்தவாறு புன்னகையுடன் நின்றிருந்தாள்.

 

ஆர்யான் சிதாராவிடம் பிரணவ் செய்த உதவி, அவனின் மனமாற்றம் என அனைத்தையும் மறைக்காமல் கூறி இருக்க, சிதாராவும் பழைய கோபங்கள் எல்லாம் மறந்து நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளப் பழகினாள்.

 

அதுவும் அபினவ் மற்றும் பிரணவ்வின் நட்பைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தவள் தன்னால் அவர்களுக்குள் மனஸ்தாபம் வருவதை விரும்பவில்லை.

 

சில நிமிடங்களிலேயே வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து குடும்பமாக இறங்கினான் பிரணவ்.

 

ஒன்பது வயதான பிரஜன் அனுபல்லவியின் கரம் பற்றிக் கொண்டு வர, தம் மூன்று வயதான மகள் அனுஷியாவை ஒரு கரத்தில் தூக்கிக்கொண்டு மறு கரத்தை மனைவியின் கரத்தோடு கோர்த்தவாறு வீட்டினுள் நுழைந்தான்.

 

பல வருடங்கள் கழித்து அவனைக் கண்டதும் நண்பர்கள் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி.

 

சிதாராவிற்கே பிரச்சினை இல்லை என்பதால் பிரணவ்வின் வரவை அனைவரும் மகிழ்ச்சியாக ஏற்றனர்.

 

பிரணவ்வை வெகுநேரம் அணைத்து விடுவித்த அபினவ் தம்மை விட்டு விலகி இருந்ததால் அவனைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை.

 

பிரணவ் ஒவ்வொருவராக மனைவிக்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டு இறுதியாக ஆர்யான் மற்றும் சிதாராவின் முன் வந்து நின்றான்.

 

ஆர்யானும் பிரணவ்வை நட்பாக அணைத்து விடுவித்தான்.

 

என்ன தான் இருந்தாலும் தன்னவளை தன்னிடம் முழுதாக மீட்டுக் கொடுத்தவன் அல்லவா?

 

“பவி… இது தா…” எனக் கூற வந்தவன் நிறுத்தி, “இது சிதாரா…” எனப் பிரணவ் தயக்கத்துடன் அறிமுகப்படுத்தி வைக்க, அனுபல்லவியும் சிதாராவும் புன்னகையுடன் கரம் குவித்து வணக்கம் வைத்துக் கொண்டனர்.

 

பின் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி தேவ்வின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

 

ஆர்யான், பிரணவ், அபினவ், ஆதர்ஷ் என நண்பர்கள் ஒரு பக்கம் பல வருடங்கள் கழித்து சந்தித்ததால் பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவர்களின் மனைவியர் ஒரு பக்கம் நட்பை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

 

அனைவரும் ஆளுக்கொரு பக்கம் கலகலப்பாக இருக்க, சிதாராவுக்கும் அனுபல்லவிக்கும் கிடைத்த தனிமையில் சிதாராவிடம் மன்னிப்புக் கேட்டாள் அனுபல்லவி.

 

“சிதாரா… பிரணவ் என் கிட்ட எல்லாமே சொன்னார். அவருக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறேன். அவர் இப்போ ரொம்பவே மாறிட்டார்.” என அனுபல்லவி தயக்கமாகக் கூறவும் புன்னகைத்த சிதாரா, “விடுங்க அனு. எதுக்கு பழசைப் பேசிக்கிட்டு? நிஜமாவே எனக்கு இப்போ பிரணவ் மேல எந்தக் கோபமும் இல்ல. வருத்தமும் இல்ல. ஏன்னா ஏதோ ஒரு வகைல என் ரயன் எனக்கு கிடைக்க காரணம் அவர் தானே.” என்றவளின் பார்வை யாழினியை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ஆர்யானை காதலுடன் தழுவியது.

 

சிதாரா பார்த்த திசையில் பார்த்த அனுபல்லவி தம் மகளைத் தூக்கிக் கொண்டு அபினவ்விடம் பேசிக் கொண்டிருந்த பிரணவ்வைப் புன்னகையுடன் பார்த்தவாறு, “அதுவும் கரெக்ட் தான் சிதாரா. யார் யாருக்கு யார் யாரை முடிச்சு போட்டிருக்காங்குறது அந்தக் கடவுளுக்கு மட்டும் தான் வெளிச்சம். அப்படி எல்லாம் நடந்ததால தான் இன்னைக்கு எனக்கும் என் பிரணவ் கிடைச்சிருக்கார்.” என்கவும் புன்னகையுடன் ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் சிதாரா.

 

பின் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து குடும்பம் குடும்பமாகப் புகைப்படங்கள் எடுக்க, அன்றைய நாள் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் சென்றது.

 

பெற்றோரைப் போலவே அவர்களின் பிள்ளைகளும் தமக்குள் புதிய நட்பை உருவாக்கிக் கொண்டனர்.

 

இவர்கள் வாழ்வு என்றும் இது போல் இனிமையாக நகர நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

 

சுபம்

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்