Loading

பெங்களூரில் அனுபல்லவியின் வாழ்க்கை சாதாரணமாகக் கடக்க, மூன்று வருடங்கள் சென்ற நிலையில் தான் அவள் பிரணவ்வைச் சந்தித்தாள்.

 

ஆனால் எதிர்ப்பாராத விதமாக பிரதாப்பும் அவளின் இருப்பிடத்தைக் கண்டு பிடித்து விட, பிரணவ்வின் உதவியால் அவனிடமிருந்து தப்பித்தான்.

 

அதன் பின் ஏதேதோ நிகழ்வுகள் நடந்து விட, இறுதியில் பிரணவ் பழைய நினைவுகளை இழந்து அனுபல்லவியைப் பற்றியும் மறந்து மருத்துவமனையில் இருந்த போது தன்னவனை எண்ணித் தனியே கதறியவளின் அழைப்பேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

 

யார் என்ற குழப்பத்துடன் அதனை ஏற்ற அனுபல்லவி, “அனு… வீடியா கால் வா.” என்று விட்டு பிரதாப் அழைப்பைத் துண்டித்து விட, தயக்கமாக வீடியோ காலை ஆன் பண்ணியவள் முடி எல்லாம் நரைத்து படுக்கையில் கிடந்தவரைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள் அனுபல்லவி.

 

ஏனெனில் அங்கு உறங்கிக் கொண்டிருந்தது வேறு யாருமல்ல. அவளின் ஆருயிர்த் தந்தை பல்லவன்.

 

இறந்து விட்டார் என நினைத்துக் கொண்டிருந்தவர் கண் முன்னே உயிரோடு இருக்க, அனுபல்லவியின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது.

 

எதிர் முனையில் பேசிய பிரதாப், “உடனே நான் அனுப்புற அட்ரஸுக்கு வா அனு.” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தேன்.

 

மறு நொடியே பிரணவ்வைக கூட மறந்து விட்டு பிரதாப் அனுப்பிய முகவரிக்கு விரைவாகச் சென்றாள்.

 

நகரத்துக்கு உள்ளே இருந்த ஒரு குறுக்குப் பாதையில் ஆள் நடமாட்டம் அற்ற ஒரு இடத்தில் அக் கட்டிடம் அமைந்திருக்க, மனம் ஒரு பக்கம் பயத்தில் படபடக்க, தந்தையைக் காணும் ஆவலில் எதைப் பற்றியும் யோசிக்காமல் உள்ளே சென்றாள் அனுபல்லவி.

 

பிரதாப் ஹாலில் தலையில் கை வைத்து அமர்ந்திருக்க, அனுபல்லவியைக் கண்டவன் ஒரு அறைப் பக்கம் கை காட்டினான்.

 

உடனே அங்கு ஓடிய அனுபல்லவி கட்டிலில் முடி எல்லாம் நரைத்து, மெலிந்து போய், தோல் எல்லாம் சுருங்கி, முகம் களையிழந்து பல்லவனைக் கண்டு, “அப்பா…” என்ற கதறலுடன் பல்லவனிடம் ஓடினாள்.

 

பல்லவனோ ஆழ்ந்த மயக்கத்தில் இருக்க, அவனின் கையைப் பிடித்து அருகில் அமர்ந்த அனுபல்லவியின் கண்கள் விடாது கண்ணீரை சிந்தின.

 

“அப்பா…” என அனுபல்லவி கண்ணீருடன் அழைக்க, பல்லவனிடமோ பதில் இல்லை.

 

“அப்பா… நீ… நீங்க உயிரோட தான் இருக்…கீங்களா? ஏன்ப்பா அப்போ இ… இத்தனை வருஷமா என்னையும் அம்மாவையும் தேடி வரல?” எனக் கேட்டாள் அனுபல்லவி திக்கித் திணறி.

 

பல்லவனைக் கண்டதும் அனுபல்லவிக்கு தாய் தனியே அனுபவித்த கஷ்டங்கள் தான் நினைவுக்கு வந்தன.

 

தந்தை இருந்திருந்தால் தாய்க்கு அந் நிலைமை வந்திருக்குமா? என எண்ணும் போதே அனுபல்லவியின் உள்ளம் குமுறி அழுதது.

 

ஆனால் இவற்றுக்கு காரணமானவர்களை எண்ணும் போது அவளுக்கு அவர்களைக் கொன்று போடும் அளவுக்கு கோபம் வந்தது.

 

அதே கோபத்துடன் அறைக்கு வெளியே அமர்ந்திருந்த பிரதாப்பிடம் சென்ற அனுபல்லவி அவனின் சட்டைக் காலரை ஆவேசத்துடன் பற்றி, “ஏன் டா இப்படி பண்ண? சொல்லு டா. ஏன் டா இப்படி பண்ண? உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? அப்படி என்ன தான் டா பணத்து மேல மோகம்? சொத்து சொத்துன்னு அதுக்கே அலையுறீங்க? அதை விட மனுஷனோட உணர்வுகள் முக்கியம் இல்லையா? உயிரோட இருக்குற மனுஷன இறந்ததா ஊருக்கு காட்டி இப்படி பண்ணி வெச்சிருக்கியே பாவி. நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? அப்பா இல்லாம நானும் என் அம்மாவும் எவ்வளவு கஷ்டப்பட்டோம் தெரியுமா? அப்பா மட்டும் எங்க கூட இருந்திருந்தா என் அம்மாக்கு அந்த நிலைமை வந்திருக்குமா? இது எல்லாத்துக்கும் காரணம் யாரு? நீயும் உன்னோட குடும்பமும் தான்.” என்றாள் ஆக்ரோஷமாக.

 

அனுபல்லவியின் கேள்வியில் கண்ணீருடன் நின்றிருந்த பிரதாப்போ, “எனக்கும் தெரியாது அனு. சத்தியமா தெரியாது. அவங்க என்னையும் ஏமாத்திட்டாங்க. இருபத்தி இரண்டு வருஷமா மாமா கோமாவுல இருந்து இருக்கார். நேத்து தான் கண் முழிச்சு இருக்கார். எதேச்சையோ தான் எனக்கே தெரிய வந்தது.” என்றவன் நடந்ததைக் கூற ஆரம்பித்தான்.

 

முன் தினம் ஆஃபீஸில் சற்று சீக்கிரமாகவே வேலை முடியவும் பிரதாப் வீட்டிற்கு வர, அவன் வந்த நேரம் வீட்டில் யாரும் இருக்கவில்லை.

 

எங்காவது சென்றிருப்பார்கள் என எண்ணிக் கொண்டு மாடி ஏறியவன் அவன் காதில் விழுந்த செய்தியில் அடுத்த அடி எடுத்து வைக்காமல் உறைந்து நின்றான்.

 

“யாருங்க கால் பண்ணாங்க? எதுக்கு இப்போ இவ்வளவு பதட்டமா இருக்கீங்க? எங்க போய்ட்டு இருக்கீங்க?” எனக் கேட்ட ஹேமாவிற்கு, “நம்ம பழைய குடோன் வீட்டுக்கு போறேன். உன் அண்ணன் கோமால இருந்து எழுந்திருச்சிட்டானாம். டாக்டர் கால் பண்ணி இருந்தாங்க. கண் முழிச்சு கொஞ்ச நேரத்துலயே மயங்கிட்டானாம். திரும்ப எழுந்திரிச்சதும் கத்தி பிரச்சினை பண்ணி இருக்கான் போல. டாக்டர் உடனே மயக்க ஊசி போட்டு இருக்காங்க. கோமால இருந்து எழுந்திருச்சதால அவன் உடம்புல அவ்வளவா சக்தி இல்ல. நான் போய் பார்த்துட்டு வரேன். அவன் உயிரோட எங்க கிட்ட இருந்தா தான் அந்தப் பல்லவன வெச்சி அவன் பொண்ண வரவெச்சி மிரட்டி சொத்த நம்ம பெயருக்கு எழுதி வாங்கலாம். அப்புறம் அப்பனையும் பொண்ணையும் ஒன்னா மேல அனுப்பிடலாம்.” என்றான் கிஷோர் வன்மமாக.

 

“சரி நானும் வரேன். அவன நல்லா நாக்க பிடுங்குற மாதிரி நாழு கேள்வி கேட்கணும். சொந்த தங்கச்சி எனக்கு ஒரு பைசா இல்லாம மொத்தத்தையும் அந்த ஓடுகாலி கழுதைக்கு எழுதி வெச்சிருக்கான்.” என்றாள் ஹேமா கோபமாக.

 

பின் இருவரும் சேர்ந்து கிளம்ப, அவர்கள் பார்க்காதவாறு மறைந்து நின்று கொண்டான் பிரதாப்.

 

அவர்களின் கார் கிளம்பி சற்று நேரத்தில் தன் காரில் அவர்களைப் பின் தொடர்ந்த பிரதாப் இருவரும் காரை விட்டு இறங்கி உள்ளே சென்றதும் அவனும் உள்ளே சென்று மறைவாக நின்று நடப்பவற்றைக் கவனிக்கத் தொடங்கினான்.

 

அந்த நேரம் பல்லவன் மயக்கம் தெளிந்து காணப்பட, ஆனால் அந்த டாக்டர் அடித்த ஊசியால் அவனால் அசைய முடியாதிருந்தது.

 

ஹேமாவையும் கிஷோரையும் அடையாளம் கண்டு கொண்ட பல்லவன், “ஹேமா… எ…துக்கு என்னை அடை…ச்சி வெச்சிருக்க? என் பொண்…டாட்டியும் புள்ளையும் எங்க?” எனக் கேட்டான் கோபமாக.

 

“அட… என் அருமை அண்ணனுக்கு என்னை நல்லா தெரியுதே.” என நக்கலாகக் கூறிய ஹேமா, “அப்போ என்ன ****க்கு சொத்த உன் பொண்ணு பெயர்ல எழுதி வெச்சிருக்க?” எனக் கேட்டாள் ஆவேசமாக.

 

“அது எ…ன் சொத்து. அதை நான் யாருக்கு வே…ணும்னாலும் எழுதி கொடுப்பேன். அதைக் கேட்…க உனக்கு எந்த உ…ரிமையும் இல்ல.” என்றான் பல்லவன் கோபமாக.

 

அவனுக்கு பேசுவதே சிரமமாக இருந்தது.

 

“ஓஹோ… அவ்வளவு திமிரு. அப்போ உனக்கு உன் பொண்டாட்டியும் பொண்ணும் வேணாம் போல.” என ஹேமா கேட்கவும் பல்லவனின் முகத்தில் பதட்டம் குடிகொண்டது.

 

“என் ஷியா எங்க? பல்லவி எங்க? அ…அவங்கள என்ன பண்ண? அடைச்சி வெச்சிருக்கியா? ம…ரியாதையா அவங்கள விட்டுடு.” எனப் பதட்டமாகக் கேட்ட பல்லவன் தன் கை கால்களை அசைக்க முயல, பலன் என்னவோ பூச்சியம் தான்.

 

அவனின் முயற்சியைக் கண்டு அவ் அறையே அதிரச் சிரித்தனர் கிஷோர் மற்றும் ஹேமா.

 

“என்ன? அசைய முடியலயா? நீ கோமால இருந்து வேணா கண் முழிச்சி இருக்கலாம். ஆனா உன்னால எங்கள மீறி ஒரு துரும்ப கூட அசைக்க முடியாது. ஏன் னா எங்க ட்ரீட்மெண்ட் அப்படி. அப்புறம் இன்னொரு விஷயம் தெரியுமா மச்சான்? இந்த ஊர் உலகத்தை பொறுத்தவரைக்கும், ஏன் உன் காதல் மனைவிக்கும் பொண்ணுக்கும் கூட இருபத்தி இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே கார் ஆக்சிடன்ட்ல நீ இறந்துட்ட. உனக்கு காரியம் கூட பண்ணிட்டோம். எப்படின்னு பார்க்குறாயா? ஒரு அநாதை பிணத்த நீன்னு நம்ப வெச்சி எங்க வேலைய முடிச்சிட்டோம்.” என்றான் கிஷோர் இளக்காரமாக.

 

அதனைக் கேட்டு அதிர்ந்த பல்லவனின் மனமெங்கும் மனைவியின் நினைவே.

 

‘இருபத்தி இரண்டு வருடங்களாக கோமாவில் உள்ளோமா? நான் இறந்து விட்டேன் என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனரா? நான் இல்லாமல் என் மனைவியும் மகளும் என்ன பாடுபட்டிருப்பர்? இப் பணப் பேய்களிடம் எப்படி நிம்மதியாக இருந்து இருப்பர்?’ என எண்ணியவனின் கண்கள் கலங்கின.

 

அதனைக் கண்டு ஹேமா, கிஷோர் இருவருக்குமே மனம் குளிர்ந்தது.

 

பின் கிஷோர் மருத்துவருக்குக் கண் காட்டவும் அவர் மயக்க மருந்து கொண்ட ஊசியை பல்லவனுக்கு செலுத்த, ‘ஷியா…’ என்றவாறு மயக்கத்திற்கு சென்றான் பல்லவன்.

 

“உன் அக்கவுன்ட்டுக்கு பணம் கரெக்ட் டைமுக்கு வந்துடும். இவன் நமக்கு ரொம்ப முக்கியம். என்ன நடந்தாலும் இவன் தப்பிச்சிட கூடாது. எதுக்கும் இவன கட்டியே வை. கூடிய சீக்கிரமே உன் வேலை முடிஞ்சிடும். இந்தப் பல்லவனையும் மொத்தமா அனுப்பி வெச்சிடலாம்.” என்று விட்டுக் கிளம்பினர் இருவரும். 

 

அவர்கள் செல்லும் வரை மறைந்து நின்ற பிரதாப் கிஷோரின் கார் அங்கிருந்து செல்லவும் வெளியே வந்தான்.

 

அவனின் கண்கள் சிவந்து கலங்கிப் போயிருந்தன.

 

எவ்வளவு பெரிய துரோகம்? என்னையும் அவர்களின் பாவத்தில் பங்கேற்க வைத்து விட்டனரே என எண்ணிய பிரதாப்பிற்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.

 

கள்ளங்கபடமின்றி தன் மீது அன்பைப் பொழிந்த அத்தையைக் கூட சந்தேகப்பட்டு வெறுத்து விட்டேனே என பிரதாப்பின் மனம் குமுறி அழுதது.

 

சில நொடிகள் கழித்து தன்னை சமன் செய்து கொண்டவனின் பார்வையில் பட்டது அங்கிருந்த ஒரு உடைந்த கதிரை.

 

அதன் காலை கழட்டி எடுத்த பிரதாப் பல்லவனை அடைத்து வைத்திருந்த அறைக்குள் புயலாக நுழைய, அவனை அங்கு எதிர்ப்பார்க்காத அம் மருத்துவரோ அதிர்ந்து நின்றான்.

 

நொடி நேரம் கூட யோசிக்காது அவனைப் போட்டுப் புரட்டி எடுத்தான் பிரதாப்.

 

“ஏன் டா நாயே? நீ எல்லாம் ஒரு டாக்டரா? உசுர காப்பாத்துற வேலை பார்க்க வேண்டிய நீயே இப்படி ஒரு உசுர துடிக்க வைக்கிறியே. வெட்கமா இல்லையா உனக்கு?” எனக் கேட்டவாறு அடித்த பிரதாப் அம் மருத்துவர் அடி தாங்காது மயக்கத்திற்குச் செல்லவும் தான் அவனை விட்டான்.

 

கிஷோர் கூறியதற்கு இணங்க அம் மருத்துவர் பல்லவனின் கை கால்களைக் கட்டிலோடு சேர்த்துக் கட்டி வைத்திருக்க, பல்லவனின் கட்டுக்களைப் பிரித்த பிரதாப் அக் கயிற்றினாலேயே அம் மருத்துவனைக் கட்டினான்.

 

எதற்க்கும் இருக்கட்டும் என்று மயக்க மருந்து கொண்ட ஊசியை எடுத்து அம் மருத்துவனுக்குச் செலுத்தினான் பிரதாப்.

 

பின் அவசரமாக பல்லவனிடம் சென்றவன், “மாமா… மாமா…” என உலுக்க பல்லவனிடம் அசைவில்லை.

 

லேசாகப் பயம் எட்டிப் பார்க்க, பல்லவனின் நெஞ்சில் காதை வைத்துக் கேட்க, இதயம் சீராகத் துடித்துக் கொண்டிருக்கவும் தான் பிரதாப்புக்கு நிம்மதியாக இருந்தது.

 

அன்று இரவு முழுவதும் அங்கேயே தங்கி அடுத்து என்ன செய்வது என்று யோசித்தான் பிரதாப்.

 

விடிந்ததுமே அனுபல்லவிக்கு அழைத்து விபரம் தெரிவித்து விட்டான்.

 

அனுபல்லவியிடம் நடந்தவற்றைக் கூறிய பிரதாப், “அவங்க இப்படி பண்ணுவாங்கன்னு சத்தியமா நான் நினைக்கல அனு. உனக்கு தெரியுமா அத்தைன்னா எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு. ஆனா அவங்களயே எனக்கு வெறுக்க வெசசிட்டாங்க என்னைப் பெத்த ரெண்டு பேருமே. எனக்கு மட்டும் முன்னாடியே எல்லா உண்மையும் தெரிஞ்சிருந்தா அத்தைக்கு அந்த நிலைமை வந்திருக்காது. இதெல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம். மாமா கண் விழிச்சதும் அத்தைய பத்தி கேட்டா நான் என்னன்னு சொல்லுவேன்?” என்றவன் தலையில் அடித்துக் கொண்டு கதறினான்.

 

பிரதாப்பின் வார்த்தைகளில் அனுபல்லவியுமே அங்கேயே மடங்கி அமர்ந்து கண்ணீர் வடித்தாள்.

 

சில நிமிடங்களில் தன்னை சமன் செய்து கொண்ட பிரதாப், “அனு… நீ மாமா கூட இரு. நான் பண்ண தப்புக்கு நானே பிராயச்சித்தம் தேடி ஆகணும். இதுக்கு மேலேயும் அவங்க ரெண்டு பேரையும் சும்மா விட்டா உனக்கும் மாமாவுக்கும் தான் ஆபத்து.” என்றவன் ஏதோ முடிவெடுத்தவனாக அங்கிருந்து கிளம்பிச் செல்ல, அனுபல்லவி தன் தந்தை கண் விழிக்கும் வரை அவர் அருகிலேயே அமர்ந்தாள்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்