Loading

நாட்கள் மாதங்களாகி வருடங்களாக உருண்டோட, அதன் போக்கில் வேகமாக வளர்ந்தாள் அனுபல்லவி.

 

அனுஷியா தன் சான்றிதழ்களைக் கையோடு கொண்டு வராததால் அவளுக்கு படித்த படிப்புக்கு ஏற்ப வேலையைத் தேடிக் கொள்ள முடியாதிருந்தும் வலைத்தளம் மூலம் ஒரு சில சான்றிதழ்களை பணம் கட்டி பெற்றுக் கொண்டு ஒரு கம்பியூட்டர் சென்டரில் வேலைக்கு சேர்ந்தாள்.

 

ஓரளவு போதுமான அளவு சம்பளம் கிடைத்தாலும் தன் ஓய்வு நேரங்களில் கிடைக்கும் வேலைகள் அனைத்தையும் பார்த்து அனுபல்லவியை வளர்த்தாள்.

 

அரச பள்ளியில் படித்துக் கொண்டிருந்த அனுபல்லவி படிப்பில் எப்போதும் கெட்டிக்காரி என்பதால் வகுப்பில் முன்னிலையிலேயே இருந்தாள்.

 

அதனாலேயே அனுபல்லவியால் அனுஷியாவிற்கு அவ்வளவு செலவுகள் ஏற்படவில்லை.

 

ஆனால் அவளின் வயதுடைய மற்ற பெண் பிள்ளைகளைப் போல் தன் மகளால் விரும்பியவாறு உடுத்தி, உண்டு மகிழ முடியாதது அனுஷியாவின் மனதில் பெரும் குறையாக இருந்தது.

 

அனுபல்லவியோ தன் தாயைப் போல் கிடைத்ததை வைத்து மகிழக் கூடியவள். 

 

இதுவரை ஒரு நாள் கூட தாயிடம் குறை என்று சென்று நின்றதில்லை.

 

தாயினால் முடிந்தால் தனக்காக செய்வாள் தானே என்ற எண்ணத்தில் சாதாரணமாக எழும் சின்னச் சின்ன ஆசைகளைக் கூட தனக்குள் போட்டு புதைத்துக் கொள்வாள் அனுபல்லவி.

 

அனுஷியாவிற்கு தான் தன்னவன் இருந்திருந்தால் தம் மகளை இளவரசி போல் வளர்த்திருப்பாளே என்ற எண்ணம் அடிக்கடி எழுந்து மனதை வாட்டும்.

 

தாயின் முகத்தை வைத்தே அனுஷியாவைப் புரிந்துகொள்ளும் அனுபல்லவியோ உடனே தாயின் கழுத்தைக் கட்டிக்கொண்டு மௌனமாய் ஆறுதல் அளிப்பாள்.

 

மும்பைக்கு வந்த புதிதில் இரண்டு வயதான அனுபல்லவி ஆரம்பத்தில், ‘ப்பா… ப்பா…’ எனத் தந்தையைக் கேட்பாள்.

 

வாசலில் ஏதாவது சத்தம் கேட்டால் போதும் ‘ப்பா…’ என்ற வண்ணம் தவழ்ந்து கொண்டே வாசலுக்குச் செல்வாள்.

 

அந் நேரமெல்லாம் தன் குழந்தையை நெஞ்சில் சாய்த்துக் கொண்டு மௌனமாய் கண்ணீர் வடிப்பாள் அனுஷியா.

 

அவளின் மனமோ தன்னவன் உயிரோடு இல்லை என்பதை ஏற்கவே இல்லை.

 

எங்கோ நலமாக இருக்கிறான் எண்ணம் தான் அனுஷியாவிற்கு.

 

பின் ஓரளவு நினைவு தெரிந்த பின் தந்தையைத் தேடாவிட்டாலும் பள்ளி செல்ல ஆரம்பித்த பின் அங்கு மற்ற பிள்ளைகள் தம் தந்தையுடன் வருவதையும் போவதையும் பார்க்கும் போது அனுபல்லவியின் மனம் தந்தையின் அருகாமைக்கு ஏங்கும்.

 

முதல் முறை அனுஷியாவிடம் வந்து ஏன் தனக்கு மட்டும் தந்தை இல்லை என்று அனுபல்லவி கேட்ட போது அதற்குப் பதலளிக்காது அவளை அணைத்துக் கொண்டு அனுஷியா கதறிய கதறலில் அதன் பின் அனுஷியாவிடம் அவள் தந்தையைப் பற்றிக் கேட்டதே இல்லை.

 

அவ்வளவு சிறு வயதில் கூட தாயின் முகம் கவலையில் சுருங்குவதை விரும்பவில்லை அனுபல்லவி.

 

அனுபல்லவி ஓரளவு வளர்ந்த பின் அவளின் முகத்தில் தெரியும் ஏக்கத்தை வைத்தே தன் மகள் தந்தையின் அருகாமைக்கு ஏங்குகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட அனுஷியா அனுபல்லவியிடம் பல்லவனைப் பற்றிக் கூறினாள்.

 

அவன் தன்னைக் கரம் பிடித்த கதையை மகளிடம் கூறும் போது அனுஷியாவின் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

 

ஒரு விபத்தில் பல்லவன் இறந்து விட்டான் என்று கூறிய அனுஷியா முழுக் கதையையும் கூறாது பல்லவனின் குடும்பத்துக்கு தம்மைப் பிடிக்கவில்லை என்றும் அதனால் தனியாக வந்து விட்டோம் என்று மட்டும் கூறினாள்.

 

தான் தாலியைக் காட்டாது வைத்திருப்பதன் காரணத்தைக் கூறியவளை அணைத்துக் கொண்ட அனுபல்லவி, “அப்பா எங்க கூட தான் மா இருக்கார். இதோ இங்க.” என தன் நெஞ்சையும் அனுஷியாவின் நெஞ்சையும் தொட்டுக் காட்ட, அனுஷியாவின் கண்கள் கலங்கின.

 

வருடங்கள் செல்லச் செல்ல வயது கூடினாலும் அனுஷியாவின் அழகோ குறையவே இல்லை.

 

அனுபல்லவியுடன் சென்றால் அவளின் சகோதரி என்றே அனுஷியாவை எண்ணுவர்.

 

அதனாலேயே சில காமுகர்ளின் பார்வை அனுஷியா மீது விழும்.

 

முடிந்தமட்டும் அவர்களிடம் இருந்து தப்பிப்பவளுக்கு அவளின் கழுத்தில் இருந்த பல்லவன் கட்டிய தாலியும் மாலதியும் மட்டுமே பாதுகாப்பு.

 

இடைப்பட்ட காலத்தில் மாலதி அடிக்கடி சுகவீனமுற, ஆரம்பத்தில் வயது காரணமாக என சாதாரணமாக எண்ணிய அனுஷியாவிற்கு அதன் பின் மாலதியின் நடவடிக்கைகளில் சந்தேகம் வரப் பெற்று அவளிடம் விசாரித்தாள்.

 

இதற்கு மேலும் மறைக்க முடியாது தனக்கு இரத்தப் புற்றுநோய் இருக்கிறது என்பதையும் இப்போது இறுதிப்படியில் இருக்கிறதாகவும் மாலதி கூறவும் மனம் உடைந்து நின்றாள் அனுஷியா.

 

அதன் பின் வந்த நாட்களில் மாலதிக்கு புற்றுநோய் முற்றிப் போய் கட்டிலோடு ஆனாள்.

 

அனுஷியா தான் அவளது அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட உதவி புரிந்தாள்.

 

அனுபல்லவி ப்ளஸ் டூ படிக்கும் போது ஒருநாள் மாலதியின் உயிர் இம் மண்ணை விட்டு நீங்கி விண்ணுலகம் பயணித்தது.

 

அன்று அனுஷியா கதறிய கதறல் முழு ஊருக்குமே கேட்டிருக்கும்.

 

அனுபல்லவியும் தாயை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, இருந்த ஒரே சொந்தமும் பாதுகாப்பும் போய் நிராதரவாக நின்றாள் அனுஷியா.

 

மாலதியின் மரணத்தில் களிப்படைந்த பல காமுகர்களோ வெளிப்படையாகவே அனுஷியா மீதும் அனுபல்லவியின் தம் பார்வையைப் படர விட, அனுஷியாவுக்கு தனி ஒருத்தியாக நின்று வயதுப் பெண்ணை வளர்ப்பது பெரும் சவாலாக இருந்தது.

 

ப்ளஸ் டூ இல் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அனுபல்லவி அருகில் இருந்த ஒரு கல்லூரியிலேயே  வணிகப் பிரிவில் சேர்ந்தாள்.

 

அவர்களின் வாழ்க்கை எந்தவொரு முன்னேற்றமும் இன்றி எப்போதும் போல் கடந்தது.

 

இவ்வாறே வருடங்கள் ஓட அனுபல்லவி கல்லூரி கடைசி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம் ஒருநாள் அனுபல்லவியும் அனுஷியாவும் சேர்ந்து பல நாட்கள் கழித்து வெளியே சென்றிருந்தனர்.

 

இருவரும் சேர்ந்து வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய நேரம் இரு சோடி விழிகள் அவர்களை வன்மத்துடன் வெறித்தன.

 

மறுநாள் இருவருக்கும் விடுமுறையாக இருக்க, மாலையில் வீட்டின் காலிங் பெல் சத்தம் கேட்கவும் அனுஷியா தான் சென்று கதவைத் திறந்தாள்.

 

அவர்களின் வீட்டு வாசலில் நின்றிருந்த ஆறடி ஆண்மகனை அனுஷியா குழப்பமாக நோக்க, “அத்தை…” என்றான் எதிரில் இருந்தவன்.

 

அனுஷியாவிற்கு அவ் ஆடவனின் முகம் லேசாகப் பழக்கப்பட்டது போல் தோன்ற, திடீரென அவன் ‘அத்தை’ என்கவும், “பிரதாப் கண்ணா…” என்றாள் அனுஷியா ஆனந்த அதிர்ச்சியுடன்.

 

முன்தினம் அவர்களை வெறித்த ஒரு சோடி விழிகளுக்குச் சொந்தக்காரன் பிரதாப் தான்.

 

படிப்பை முடித்து விட்டு தந்தையின் தொழிலை எடுத்து நடத்திக் கொண்டிருந்தவன் வேலை விஷயமாக மும்பை வந்திருக்க, அவனின் பார்வை வட்டத்துக்குள் விழுந்தாள் அனுஷியா.

 

பல வருடங்கள் கழித்து அனுஷியாவைக் கண்டவனுக்கு இத்தனை வருடங்களாக அவனின் தாய் போதித்தவை தான் நினைவுக்கு வந்தன.

 

கூடவே பல்லவனின் மரணமும்.

 

பிரதாப்பைக் கண்டு முதலில் ஆனந்த அதிர்ச்சி அடைந்த அனுஷியா மறு நொடியே பதட்டமாக பிரதாப்பைத் தாண்டி சுற்றும் முற்றும் தேடியவள், “நீ…நீ… தனியாவா வந்த?” எனக் கேட்டாள் அவசரமாக.

 

பிரதாப் ஆம் எனத் தலையசைக்கவும் அவசரமாக அவனின் கைப் பிடித்து வீட்டினுள் அழைத்துச் சென்று கதவை சாத்திய அனுஷியா, “பிரதாப் கண்ணா… அ…அது… நாங்க இங்க இருக்குறது உன் அப்பா, அம்மாவுக்கு தெரியுமா?” எனக் கேட்டாள் பதட்டமாகக்.

 

பிரதாப் இல்லை என்று இட வலமாகத் தலையசைக்கவும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனுஷியா, “தயவு செஞ்சு அவங்க கிட்ட சொல்லிடாதே கண்ணா.” என்றாள் கெஞ்சலாக.

 

பிரதாப் சரி எனத் தலையசைக்கவும் அவனின் தலையைப் பரிவுடன் வருடிய அனுஷியா, “எவ்வளவு வளர்ந்துட்ட. அடையாளமே தெரியல.” என்றாள் கண்கள் கலங்க.

 

பிரதாப் அனுஷியாவின் முகத்தையே நோக்க, “அட நான் ஒருத்தி. முதல் தடவை வீட்டுக்கு வந்த பிள்ளைக்கு ஒன்னும் சாப்பிட கொடுக்காம பேசிட்டு இருக்கேன்.” என்ற அனுஷியா உள்ளே பார்த்து, “பல்லவி…” எனக் குரல் கொடுத்த மறு நிமிடமே, “இதோ வந்துட்டேன் மா.” என்றவாறு வந்து நின்றாள் அனுபல்லவி.

 

அனுபல்லவி வரவும், “யாருன்னு தெரியுதா கண்ணா? நம்ம பல்லவி தான். காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறா. பல்லவி. இது தான் உங்க அத்தை பையன் பிரதாப். சின்ன வயசுல நீங்க ரெண்டு பேரும் ஒன்னா தான் விளையாடுவீங்க.” என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தாள்.

 

அனுபல்லவி பிரதாப்பைப் பார்த்து தயக்கமாகப் புன்னகைக்க, பிரதாப்போ அனுபல்லவியை கண்கள் சுருக்கி அழுத்தமாக நோக்கினாள்.

 

ஏனோ பிரதாப்பின் பார்வை அனுபல்லவிக்கு உள்ளுக்குள் அச்சத்தைப் பரப்ப, அதனை வெளியே காட்டாது மறைத்தாள்.

 

“பல்லவி… பிரதாப் கூட பேசிட்டு இரு. நான் இப்போ வந்திடுறேன்.” என அனுஷியா உள்ளே செல்ல, அனுபல்லவி செய்வதறியாது கைகளைப் பிசைந்து கொண்டு அங்கேயே நின்றாள்.

 

அனுபல்லவியைக் காணவும் போது பிரதாப்பிற்கு தாயின் வார்த்தைகள் தான் காதில் ஒலித்தன.

 

‘பிரதாப்… அந்த அனுஷியா உங்க மாமாவ ஏமாத்தி சொத்தெல்லாம் அவ பெயருக்கும் அவ பொண்ணு பெயருக்கும் மாத்திக்கிட்டா. அதெல்லாம் எங்களுக்கு சேர வேண்டியது. உங்க அப்பா இந்த கம்பனிக்காக எவ்வளவு உழைச்சார், உழைக்கிறார்னு உனக்கு நல்லாவே தெரியும். ஆனா அவருக்கு இந்தக் கம்பனில சொந்தமா ஒரு இடமும் இல்ல. அந்த அனுஷியாவும் அவ பொண்ணும் எப்போ வந்தாலும் உங்க அப்பாவ அந்தக் கம்பனில இருந்து துரத்திடுவா. உனக்கே தெரியும் உங்க அப்பாவுக்கு அந்தக் கம்பனி தான் எல்லாமே. அது போக எங்க எல்லாரையும் கூட அவ நடுத்தெருவுக்கு கொண்டு வந்துடுவா. அப்படி மட்டும் நடக்கவே கூடாது. அதுக்கு நீ அந்த அனுபல்லவிய கல்யாணம் பண்ணிக்கணும். அப்போ தான் சொத்து பூரா நமக்கு வரும்.’ என்பதை அடிக்கடி கூறி பிரதாப்பின் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்திருந்தாள் ஹேமா.

 

அங்கு மௌனமே ஆட்சி புரிய, கையில் காஃபியுடன் வந்த அனுஷியா அதனைப் பிரதாப்பிடம் நீட்டினாள்.

 

அமைதியாக அதனை வாங்கிப் பருகிய பிரதாப்பிடம், “கண்டிப்பா சாப்பிட்டு தான் போகணும் கண்ணா.” என அனுஷியா அன்புக் கட்டளை இட, பிரதாப்பிற்கோ அவை எல்லாமே வெறும் நடிப்பாகத் தான் தோன்றியது.

 

முயன்று வரவழைத்த புன்னகையுடன், “இல்லை அத்தை. ஒரு வேலை விஷயமா வந்தேன். கண்டிப்பா இன்னொரு நாளைக்கு வரேன். இனிமே அடிக்கடி சந்திக்கலாம்.” என்ற பிரதாப்பின் பார்வை அனுபல்லவியிடம் வன்மத்துடன் பதிந்து மீண்டது.

 

முதலில் இருவரையும் தம் இடத்திற்கு வரவழைக்க ஒரு திட்டத்தைப் போட்ட பின் தான் தன் பெற்றோரிடம் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும் என முடிவெடுத்த பிரதாப் அதற்கான வேலைகளில் ஈடுபட்டான்.

 

பிரதாப் வந்து சென்ற பின் அனுஷியாவின் முகத்தில் பல நாட்கள் கழித்து ஒரு பிரகாசம் தெரிய, “அவர உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா அம்மா?” எனக் கேட்டாள் அனுபல்லவி.

 

“ம்ம்ம்… அந்தக் குடும்பத்துல உங்க அப்பாவுக்கு அப்புறம் என் மேல உண்மையான பாசத்த வெச்சிருந்த ஒரே ஜீவன். அவங்க அம்மா எவ்வளவு திட்டினாலும் அடிச்சாலும் என்னைப் பார்த்ததும் அத்தைன்னு ஓடி வந்து என் காலை கட்டிக்குவான்.” என்ற அனுஷியாவிற்கு அந்த நாட்களின் நினைவில் முகம் மலர்ந்தது.

 

“அப்போ ஏன் மா எல்லாத்தையும் போட்டுட்டு மொழி தெரியாத ஒரு ஊருக்கு வந்தீங்க?” என அனுபல்லவி கேட்கவும் அனுஷியா ஊரை விட்டு ஓடி வரக் காரணமாக இருந்த நிகழ்வு நினைவுக்கு வந்து உடலெல்லாம் வியர்வை பூத்தது.

 

“அம்மா… அம்மா… என்னாச்சு ம்மா? சொல்ல பிடிக்கலன்னா விடுங்க.” என்றாள் அனுபல்லவி பதட்டமாக.

 

அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து தன்னை சமன் செய்து கொண்ட அனுஷியா, “பல்லவி. இப்போ உனக்கு எல்லாமே புரிஞ்சிக்குற பக்குவம் வந்திடுச்சு. இதுக்கு மேல நான் உன் கிட்ட மறைச்சி பிரயோஜனம் இல்ல. நான் இல்லன்னாலும் இந்த விஷயம் உன் மனசுல இருக்கணும்.” என்றவள் அனுபல்லவியிடம் கிஷோர் மற்றும் ஹேமா பற்றி அனைத்தையும் கூறினாள்.

 

அதனைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள் அனுபல்லவி.

 

தனக்காக தன் தாய் எவ்வளவு போராடி இருக்கிறாள் என்பதை அறிந்த அனுபல்லவியின் கண்கள் குளமாகின.

 

தாயின் மார்பில் தலை சாய்த்து கண்ணீர் வடித்த அனுபல்லவி, “எனக்காக தான் இவ்வளவு கஷ்டப்பட்டீங்களாம்மா?” எனக் கேட்கவும் புன்னகைத்த அனுஷியா, “உனக்காக தான். ஆனா அதை விட முக்கியமா உங்க அப்பாவுக்கும் எனக்குமான காதலுக்கு கிடைச்ச பரிசு நீ. அவர இழந்தது போல உன்னையும் என்னால இழக்க முடியாது டா. பல்லவி… இதை மட்டும் மனசுல வெச்சிக்கோ. எந்த சூழ்நிலையிலும் அவங்க முன்னாடி போய் நின்னுடாதே. அவங்க எல்லாம் மனுஷ ரூபத்துல இருக்குற மிருகங்கள். சொத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவாங்க. பிரதாப் நல்லவன் தான். ஆனா நாம யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாதுடா.” என்றாள்.

 

அனுபல்லவி சரி எனத் தலையசைக்கவும், “பல்லவி… ஒருவேளை எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ அநாதை ஆகிடுவடா. எனக்கு அதை நினைச்சா தான் டா பயமா இருக்கு.” என்றாள் அனுஷியா கண்கள் கலங்க.

 

“இப்படி எல்லாம் பேசாதீங்க மா. உங்களுக்கு எதுவும் ஆகாது. நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு உங்கள நல்லா பார்த்துப்பேன்.” என்றாள் அனுபல்லவி.

 

“நெருப்புன்னு சொன்னா நாக்கு சுட்டுடாது பல்லவி. ஆனா என்னைக்கா இருந்தாலும் நம்ம உயிர் போக தான் போகுது. அதுக்கு முன்னாடி உன்ன ஒரு நல்ல பையன் கைல பிடிச்சு கொடுக்கணும்டா.” என்றாள் அனுஷியா அனுபல்லவியின் முகத்தை வருடி விட்டவாறு.

 

அனுபல்லவி அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, “ஆனா ஒன்னு பல்லவி. நான் இல்லாத காலத்துல பாசமுங்குற முகமூடிய போட்டுக்கிட்டு அவங்க உன்ன தேடி வந்தாலும் வரலாம். ஆனா எந்தவொரு சூழ்நிலையிலும் நீ அவங்கள நம்பக் கூடாது டா.” என்றாள் அனுஷியா அழுத்தமாக.

 

இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் அனுபல்லவி தாயின் மடியிலேயே உறங்கியிருக்க, அவளை எழுப்பி இரவு உணவை ஊட்டி விட்டு அறைக்குத் தூங்க அனுப்பினாள் அனுஷியா.

 

பின் தன் வேலைகளை முடித்து வீட்டை ஒதுங்க வைத்து முடிப்பதற்குள் நன்றாகவே இருட்டி விட, உறங்குவதற்காக அறைக்குள் நுழையப் போன அனுஷியா யாரோ வாசல் கதவைப் படபட எனத் தட்டவும் அதிர்ந்தாள்.

 

நேரத்தைப் பார்த்தவளுக்கு நெஞ்சம் பதைபதைக்க, நேரம் செல்லச் செல்ல விடாது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.

 

என்ன நினைத்தாளோ அனுபல்லவி உறங்கும் அறையை தாழிட்டு சாவியைக் கையில் எடுத்த அனுஷியா மெதுவாக சென்று கதவைத் திறக்க, வாசலில் முழு போதையுடன் நின்றிருந்த சத்யனைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்