Loading

அன்று காலையில் இசை அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, திடீரென அங்கு வந்தான் சித்து. எதுவும் சொல்லாமல் வந்திருக்க முதலில் பார்த்த இசை, “மாம்ஸ். இது என்ன சர்ப்ரைஸ். வாங்க” என அவனை வரவேற்க, அவனோ அதை கண்டு கொள்ளாது, “உங்க அக்கா எங்க?” எனக் கேட்டான்.

சத்தம் கேட்டு மற்றவர்களும் வர, “வாங்க தம்பி” என வரவேற்றார் மீனாட்சி. “வரேன் அத்தை. மகிழை கொஞ்சம் வெளில கூட்டிட்டு போகனும்” என்றவன், மகிழிடம், “கொஞ்சம் உடனே கிளம்பி வரீயா. டைம் இல்ல” எனவும் அவளும் ஏதோ அவசரம் என்பதை உணர்ந்து ஐந்தே நிமிடங்களில் வர, காரில் அமர சொல்லி விட்டு காரை எடுத்தான்.

“என்னாச்சு அபி, ஏதாவது பிரச்சனையா?” என மகிழ் கேட்க, “கொஞ்ச நேரம் பேசாம வர்றீயா?” என்றான் கோபமாக. திடீரென அவன் பாராமுகம் காட்டியதில் குழம்பியவள் என்னவென்று தெரியாமல் தவித்திருக்க, அவன் கூட்டிச் சென்ற இடத்தை பார்த்து அதிர்ந்து விட்டாள்.

அவன் கூட்டி வந்தது மருத்துவ கவுன்சில் அலுவலகத்திற்கு. அவளது அதிர்ந்த முகத்தை கண்டாலும் எதுவும் பேசாமல் இறுக்கமாக கரங்களை பற்றியவன், உள்ளே அழைத்து சென்றான். உள்ளே சென்றவன் ஏதோ கேட்க, அவர்கள் ஒரு அறையை காட்டி அமர சொல்லவும், சற்று நேரத்தில் அங்கு வந்த ஒரு அலுவலர் அவளிடம் ஒரு உறையை கொடுத்தார்.

என்னவென்று யோசிக்க பிரித்து பார்த்தால் சென்னையில் ஒரு முக்கிய மருத்துவமனையில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணை அதில் இருந்தது. அதைக் கண்டதும் கண்களில் நீர் வந்துவிட்டது அவளுக்கு.

அவர், “ஓகே சித்து. நெக்ஸ்ட் மன்டேல்ல இருந்து ஜாயின் பண்ணனும். நீங்க போகலாம்” எனவும் மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு காருக்கு வர, “எப்படி அபி இது முடியும்” என்றவள் “ரொம்ப தேங்க்ஸ்” என கையெடுத்து கும்பிட, “ஹேய் வதனி. என்ன இதெல்லாம்” என அவள் கைகளை பற்றியவன் அதில் முத்தமிட்டு கண்களை துடைத்துவிட்டு வண்டியை எடுத்தான்.

கார் நேராக ஆகாஷ் வீட்டில் சென்று நிற்க, தன்னிடம் இருந்த சாவியால் வீட்டை திறந்தான். உள்ளே சென்றவன் எதுவும் பேசாமல் நிற்க, மகிழ் “அபி” என அவனது தோள்களை தொட, முன்னே இழுத்தவன் ஓங்கி ஒரு அறை விட்டான்.

அதில் கீழே விழப்போனவளை பிடித்தவன், “எத்தனை முறை கேட்டேன். என்ன பிரச்சனைன்னு. ஏண்டி எப்பவும் என்னை நம்பவே மாட்ற” என்றான் இயலாமையோடு.

“நம்பாமல்லாம் இல்ல அபி. ஏற்கனவே உங்களுக்கு நிறைய கஷ்டம். இதுல நான் வேற எதையாவது சொல்லி, பாதி சொன்னதுக்கே, நீங்க அவ்ளோ கோபப்பட்டீங்க. அதான். என்ன பண்றதுனு புரியல. கொஞ்ச நாள் இது எதுவும் இல்லாம இருக்கலாம்னு நினைச்சேன்” என்றாள் மகிழ்.

“இன்னைக்கு மட்டும் இதை வாங்கலன்னா பெரிய பிராப்ளம் ஆகி இருக்கும் தெரியுமா? முன்னாடியே சொல்லியிருந்தா இன்னும் ஈசியா வேலை முடிஞ்சிருக்கும்” என்றான் சித்து. “ஆனா இது எப்படி அக்ஸப்ட் பண்ணாங்க.

என்னை சஸ்பென்ட் பண்ணியிருந்தாங்களே?” என அவனை கேள்வியாக பார்க்க, “நீயெல்லாம் படிச்சுதான் டாக்டர் ஆனியா? இல்ல யாராவது பாவம் பார்த்து வேலை போட்டு குடுத்தாங்களா?” என்றான் நக்கலாக.

“என்ன அப்படி சொல்றீங்க. நான் மெரிட்ல பாஸ் ஆனவ” எனவும், “அப்பறம் எப்படி எவனோ சொன்னா நீ சஸ்பெண்ட் ஆகிடுவியா? அப்படி இருந்தா கன்ட்டினியூவா பிராக்டிஸ் பண்ண முடியுமா?” எனக் கேட்டான் சித்து.

“யார் சொல்லியும் நான் நம்பல. சஸ்பென்ஷன் லெட்டரை நானே பார்த்தேன். உங்க ஆபிஸ்ல மெடிக்கல் அஸிட்டென்டா தானே வொர்க் பண்ணேன்” என மகிழ் விளக்கம் கொடுக்கவும் அவளை அமரவைத்தவன் நடந்ததை கூற வந்தான்.

அதற்கு முன்பே மகிழும் அங்கு நடந்ததை உரைத்தாள். அன்று தனது வீட்டில் வைத்து தவறாக நடந்து கொள்ள முயன்ற சந்தேஷை மகிழ் அடித்துவிட்டு வெளியேறி இருக்க, வேலைக்காரன் வந்து பார்த்தபோது மயங்கி இருந்தான்.

அதில் பயந்து போனவன், அவசரமாக அவனது தந்தைக்கு அழைத்து கூறிவிட, அவரோ தனது மருத்துவ நண்பனை அனுப்பி வைத்தார். அவர் வந்து கட்டு போட்டுவிட்டு செல்ல மேலும் ஒரு வாரம் ஆனது அவன் உடல்நிலை சரியாக.

சரியானதும் அவள் மீது வன்மம் வைத்து, நண்பன் ஒருவன் மூலம், அவளும், அவனும் இணைந்திருப்பது சில போலியான புகைப்படங்களை உருவாக்கினான். முதலில் அதை அவளுக்கு அனுப்பி மிரட்டி வழிக்கு கொண்டு வரத்தான் நினைத்தான்.

ஆனால் அவள் அதற்கெல்லாம் மசியாமல் செத்துகித்து போய்விட்டால் வம்பாகி விடுமே என்றவனது மூளை வேறு மாதிரி யோசித்தது. தன்னையே அடித்தவள் எப்போதும் நிம்மதியாக இருக்க கூடாது என நினைத்தவன்,

அவளது அலைபேசியை அவளுக்கு தெரியாமல் எப்படியோ எடுத்து, அவள் இவனுக்கு இந்த புகைப்படங்களையும் அனுப்பி இதை வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு பத்து இலட்சம் தரவேண்டும் எனவும் செய்தி அனுப்பியது போல செய்துவிட்டான்.

அந்த நேரம் பார்த்து அவனது தந்தை கிரிசங்கர் வர அவரிடம் இந்த செய்தியை காட்டியவன், இவன் செய்த தவறுகளை மறைத்து அவளை தவறானவளாக காட்ட, கிரியும் அதை நம்பி விட்டான். தனது மகன் செய்யும் தவறுகள் அனைத்தும் அவனுக்கு தெரிந்திருந்தாலும் இது மகிழ் அனுப்பிய செய்தியாக இருக்கவும் அதை நம்பினான் அவனும்.

அடுத்த நாளே மகிழை அழைத்து மிரட்ட, அவளோ இதுநாள் வரை மரியாதையாக பார்த்துக் கொண்டிருந்த ஒருவர் இப்போது இப்படி பேசவும் கிரிக்கு விளக்கம் கொடுக்கவே முயன்றாள்.

“இல்ல சார். நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிட்டு இருக்கீங்க. உங்க பையன்தான் என்கிட்ட” என கூற வர, அவளை தடுத்தவர், “இப்ப அவன் வந்து தப்பா நடந்ததுக்கு மிரட்ட நீ இப்படி பண்ணீயா. அவன் என்ன பண்ணியிருந்தாலும் நீ இதை பண்ணியிருக்க கூடாது” என்றான் அவன்.

மகிழ், “இல்ல சார். நீங்க நினைக்கற மாதிரி அவன் இல்ல.” என்க, “ஏய். நிறுத்து. என்ன உன்னை மாதிரி எத்தனை பேரை பார்த்திருப்பேன். அவன் கூட தப்பா பழகிட்டு கல்யாணம் பண்ணீக்க சொல்லியிருப்ப. அவன் முடியாதுனு சொன்னதும் பணம் பறிக்க பிளான் போட்டுட்ட அதானே” என இலகுவாக கூற, அவனை அடிக்க கை ஓங்கி விட்டாள் மகிழ்.

“இத்தனை நாள் அவன்தான் தப்பான ஆளுன்னு நினைச்சேன். ஆனா இப்பதான் தெரியுது. அவன் வளர்ப்பே தப்புனு. இப்பவே உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணி உங்களை உள்ள தள்ளறேன் பாருங்கடா” என திட்டியவள் வேகமாக வெளியே சென்று விட்டாள்.

ஆனால் அடுத்தநாள் காலையிலேயே அவளது வீட்டிற்கு வந்த அப்பனும், மகனும் அவளிடம் ஒரு காகிதத்தை நீட்டினர். அது அவளை மெடிக்கல் கவுன்சில் சஸ்பென்ட் செய்ததற்கான ஆர்டர். அவள் அதிர்ச்சியாக அவரை பார்க்க,

“என்னை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்க, நாளைக்கு இதுதான் உனக்கு நடக்க போகுது. காலைல ரெடியா இரு. செக்கிங் பண்ண ஆள் வருவாங்க. நீ காலாவதியான மருந்து கொடுக்கறதா உன் மேல புகார் அனுப்பியிருக்கேன். என்கிட்ட அப்படி எதுவும் இல்லனு யோசிக்காத.

எப்ப வைக்கனும், யாரை வைச்சு எடுக்கனும்னு எல்லாம் எங்களுக்கு தெரியும். முடிஞ்சதும் இந்த லெட்டர் அனுப்புவாங்க. குறைஞ்சது ஒரு வருஷத்துக்கு நீ எங்கேயும் வேலை பார்க்க முடியாது” என மிரட்டிவிட்டு அவர்கள் சென்றுவிட, மகிழோ தொய்ந்து போய் அமர்ந்தாள்.

மெடிக்கல் கவுன்சில் புகார் கொடுத்தால் விசாரிப்பார்கள். தன் மீது தவறு இல்லையென நிரூபித்து விடலாம் என தோன்றினாலும் அவனது பலம் அவளை பயமுறுத்தியது. என்ன செய்வதென யோசித்தவளுக்கு விடைதான் கிடைக்கவில்லை.

அலைபேசியும் அவனிடம் இருக்க, வேறு யாருக்கும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. அவ்வபோது பேசிக் கொண்டிருந்த அகல்யாவின் எண் மட்டும் டைரியில் கிடைக்க உடனே தொடர்பு கொண்டு விட்டாலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் அவள் புரிந்து கொண்டாள்.

அங்கு இருக்க முடியாத சூழல் என்றால் உடனே கிளம்பி வா என அவள் கூறியதும் தனது பொருட்களை எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக அங்கிருந்து பெங்களூர் வந்துவிட்டாள். நாளை விசாரணைக்கு வந்தால் எல்லோர் முன்னிலையும் அவமானப்படுவதை விட, தப்பி விட்டாள் என்பது பரவாயில்லையாக தோன்றியது அப்போது.

அவள் இப்படி கிளம்பி செல்வாள் என சந்தேஷ் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் கிரிசங்கரின் திட்டமே அதுதான் என்பதை இருவருமே அறியவில்லை. ஒருவேளை அவன் கூறியதை போல செய்திருந்தாலும் இத்தனை வருடங்கள் அவள் வாங்கி வைத்துள்ள பெயரால் அரசல் புரசலாக தவறு யாருடையது என தெரிந்துவிடும்.

அவளை பயமுறுத்தி ஓடச் செய்வதற்காகவே போலியாக ஒரு சான்றிதழை தயார் செய்து காட்டியிருந்தான் கிரி. அதுபோலவே நடக்கவும் அவன் வேலையை பார்க்க கிளம்பிவிட, அவளைத் தேடி வந்து அடுத்த தவறை செய்தான் சந்தேஷ்.

பெங்களூர் வந்த மகிழோ, எந்த மருத்துவமனைக்கும் செல்ல மாட்டேன் என்றிருக்க, அப்போதுதான் சித்து அலுவலகத்தில் பணி இருப்பது அகலுக்கு தெரிந்தது. அலுவலகத்தில் பெரிய அளவில் பணி இருக்காது என அகல் நினைக்க, அலுவலகத்தில் சான்றிதழ்களை பெரிதாக பார்க்க மாட்டார்கள் என்பதால் பிரச்சனை இல்லை என மகிழ் நினைத்தாள்.

ஆனால் சித்துவின் அலுவலகத்திலும் சான்றிதழ் சரிபார்த்ததும் அதில் எந்த பிரச்சனையும் இல்லாததும் அவளுக்கு தெரியாது.

அவள் கூறி முடித்ததும், “இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு. ஆனா உனக்கு என் நியாபகமே வரலயாடி? எப்படி வந்திருக்கும். நம்ப பழக்கம் அப்படி” என சித்துவே கேள்வி கேட்டு பதிலும் கூற,

“இல்ல அபி. நியாபகம் வந்தது. ஆனா உங்க நம்பர்தான் என்கிட்ட இல்ல. அப்பவும் உங்க ஆபிஸ் நம்பருக்கு டிரை பண்ணேன். நீங்க ஊர்லயே இல்லனு தகவல் வந்தது. அதனாலதான் அகல்யாவுக்கு பண்ணேன்” என அவள் கூற அதுவோ அவனுக்கு புதிய செய்தி.

இதுவரையில் யாரிடமும் கூறாமல் பெங்களூர் சென்றதை தவறாகவே அவன் எண்ணியதில்லை. முதல் முறையாக ‘சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டுமோ. அப்படி இருந்தால் மகிழ் அழைத்தபோதே சென்று பார்த்திருக்கலாமே’ என்றெல்லாம் எண்ணம் வர திகைத்து போய் அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவன் மனநிலை புரிந்தவள் அவனருகே அமர்ந்து “எதுவும் யோசிக்காதீங்க. அதான் நான் உங்களை பார்த்துட்டேன்ல” என்றாள் அவள்.

“ஒருவேளை பார்க்காம இருந்திருந்தா, அந்த சந்தேஷ் கையில மறுபடி சிக்கியிருந்தா, பாவம்ல நீ” என பயத்தோடு வார்த்தைகள் வர, “அதான் எதுவும் நடக்கலல்ல. சரி விடுங்க. எப்படி இந்த வேலை கிடைச்சது. அதை சொல்லுங்க” என அவனது கவனத்தை திசைதிருப்ப அவனும் அதை விடுத்து, “வேற எப்படி அந்த சந்தேஷாலயும், அவன் அப்பன் கிரியினாலயும்தான் தெரியும்” என்ற சித்து அதற்கு பின் நடந்ததை கூறினான்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்