Loading

தூயவன் மற்றும் ஆதினி இருவருமே தங்களது முதல் சந்திப்பைக் குறித்து கூற எத்தனித்த சமயம் மாதவன் மற்றும் தூயவனின் அலைப்பேசி அலற தொடங்கியது. தூயவனுக்கு அவனது அன்னை இந்திராவும் மாதவனுக்கு அவனது தந்தை கணபதியும் அழைப்பு விடுத்திருந்திருந்தனர். அழைப்பை ஏற்று காதில் வைத்த மறுகணம் இருவருக்கும் அதிர்ச்சி தான். தூயவனோ,

“என்ன சொல்றீங்க மா” எனவும் மாதவனோ,

“என்ன சொல்றீங்க பா..” எனவும் அதிர்ந்து கேட்க மறுமுனையில் என்ன கூறப்பட்டதோ அதன் பின்,

“சரி நாங்க உடனே வரோம்” என்றபடி அழைப்பைத் துண்டித்தனர் இருவரும். சமரோ,

“என்னாச்சு மச்சான்.. அம்மா என்ன சொன்னாங்க” எனவும் அங்கு மாதவியோ,

“என்னாச்சு மாதவ்.. அப்பா என்ன சொன்னாங்க.. ஏன் பதட்டமா இருக்க” என்றும் கேட்க இருவரும்,

“பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம்.. சீரியஸா இருக்காங்களாம்.. ஹாஸ்ப்பிட்டல்ல சேர்த்திருக்குறதா சொன்னாங்க.. உடனே வர சொல்றாங்க” என்றனர் சோகமாக. அதனைக் கேட்ட ஆதினிக்கும் வருத்தமாக இருந்தது. பெண் பார்க்க வந்த போதே அவளுக்கு மீனாட்சி பாட்டியை மிகவும் பிடித்துவிட்டது. மாதவனோ,

“சரி ஓகே ஆதினி.. நாங்க கிளம்புறோம்.. ” என்றபடி செல்ல எத்தனிக்க ஆதினியோ சற்றும் யோசிக்காமல்,

“நீங்க ஏதும் நெனச்சுக்கலைனா நானும் உங்க கூட வரலாமா.. எனக்கு பாட்டியைப் பார்க்கணும் போல இருக்கு” என்க அன்று மீனாட்சி பாட்டி அவளிடம் பேசியதெல்லாம் மாதவனுக்கும் நினைவிருந்தது. இருந்தும் தூயவன் ஏதாவது கூறுவானோ என்று நினைத்து தயங்க மாதவியோ,

“வாங்க ஆதினி போலாம்” என்றபடி முன்னே சென்றாள். ஆதினியோ காதம்பரியிடம்,

“காது நான் போய்ட்டு பார்த்துட்டு வரேன்” என்று கூற அவளோ,

“ஏன் ஆது.. கல்யாணமே நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு.. இப்போவும் நீ போகணுமா”

“என்ன காது பேசுற.. அவங்க அன்னைக்கு என்கிட்ட பாசமா பேசுனாங்க டி.. அந்த ஒரு அக்கறைல கூட நான் பார்க்கலைனா மனிதாபிமானத்துக்கு இடம் இல்லாம போய்டும்.. நான் பார்த்துட்டு வரேன்..” என்க,

“சரி டி பார்த்து போ” என்று வழியனுப்பிவைத்தாள். மாதவன், மாதவி மற்றும் ஆதினி தூயவனுக்காக காத்திருக்க அவனும் சமரும் மாதவன் மற்றும் மாதவியை அழைத்து போக திரும்ப வந்தனர். வந்தவன் ஆதினியைப் பார்த்து முகம் சுளித்தபடி,

“இவ எதுக்கு இப்போ நம்ம கூட வர மாதிரி நிக்குறா” என்று எரிச்சலாக கேட்க மாதவனோ,

“டேய் தூயவா.. மரியாதையா பேசு டா.. அவங்களும் நம்ம கூட வராங்க.. எதுவும் கேட்காம வண்டியை எடு நீ.. நாம சீக்கிரம் போகணும்” என்றிட வேறு வழியின்றி அமைதியாக வண்டியைக் கிளப்பினான். செல்லும் வழியில் கேசவன் ஆதினிக்கு விஷயத்தைக் கூறி வர சொல்ல அவளோ,

“நானும் மாதவன் கூட வந்துட்டு தான் இருக்கேன் பா” என்று கூறி துண்டித்தாள். தூயவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க பற்றிக் கொண்டு வந்தது. ஆனால் ஆதினி அதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அனைவரது சிந்தையிலும் பாட்டியைப் பற்றிய எண்ணமே ஓட அந்த பயணம் அமைதியாகவே கழிந்தது. ஒருவழியாக எட்டு மணி நேர பயணம் குறைந்து தூயவனின் கைவித்தையில் ஏழு மணி  நேரத்திற்குள்ளாகவே மதுரையை அடைந்தனர்.

நேராக மருத்துவமனையில் கார் நிற்க அனைவரும் இறங்கி உள்ளே சென்றனர் வேகமாக. கணபதி, இந்திரா, கேசவன், அபிராமி மட்டும் இருந்தனர். வந்ததும் அனைவரும் மீனாட்சி பாட்டிக் குறித்து விசாரிக்க திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். சிறிது நேரம் கழித்து மருத்துவர்,

“பேஷண்ட் உங்க கிட்ட பேசணும்னு சொல்றாங்க” என்று கூறிவிட்டு செல்ல கணபதியும் மாதவனும் உள்ளே சென்றனர். மருத்துவ சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்த பாட்டி தனது சுவாச கவசத்தைக் கழட்ட முயல மாதவன் அவருக்கு உதவி செய்தான். பின் கணபதியின் கரத்தையும் மாதவனின் கரத்தையும் பற்றியவர்,

“எனக்கென்னமோ இந்த கட்ட ரொம்ப நாளைக்கு தாங்காதுன்னு தோணுது.. என் பேரன் ஒருத்தனோட கல்யாணத்தையாச்சு கண்குளிர பார்த்துட்டு சிவலோகம் போக ஆசைப்படுறேன்.. என் கடைசி ஆசைய நிறைவேத்தி வைங்க பா” என்றவர் மீண்டும் மயங்கிவிட அவசரமாக மருத்துவரை அழைத்தனர். வந்தவர் பரிசோதித்துவிட்டு,

“இன்னும் ரெண்டு மூணு நாள் தான்.. அதுக்கு மேல…” என்றவர் தொடரமுடியாமல் மன்னிப்பு வேண்டிவிட்டு சென்றார். கணபதிக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் தாயின் ஆசையை நிறைவேற்ற முடியுமா என்ற கவலை தோன்ற மாதவனுக்கும் அதே கவலை இருந்தாலும் இதயம் தாறுமாறாக துடித்தது பயத்தில். அவனுக்கும் ஆதினிக்கும் திருமணம் நடந்தேறிவிடுமோ என்று. கவலைத் தோய்ந்த முகத்தோடு இருவரும் வெளியே வர நடந்ததைக் கூறினார் கணபதி. இந்திராவோ,

“இப்போ திடிர்னு என்னங்க செய்ய முடியும்..” 

“அதான் இந்திரா எனக்கும் தெரில.. அம்மா இருக்குற கண்டிஷன்ல வெளிய கூட்டிட்டு போகுறதும் கஷ்டம்.. இங்க வச்சே கல்யாணத்தை நடத்த ஆதினி அப்பா அம்மா யோசிப்பாங்க தான” என்றபடி கலக்கமாக கூற மாதவன் மற்றும் மாதவி கையைப் பிசைந்தபடி நிற்க ஆதினியும் செய்வதறியாது தான் நின்றாள். ஆனால் கேசவனோ சற்றும் யோசிக்காமல்,

“உங்களுக்கு என்ன தோணுதோ நாம செஞ்சிடலாம் சம்மந்தி.. அம்மாவோட ஆசை தான் நமக்கு முக்கியம்.. ரெண்டாவது ரிசெப்ஷன் வேணா பெருசா பண்ணிக்கலாம்.. இங்க வச்சு கல்யாணம் நடக்குறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. உங்க நிலைமை ஒரு மகனா எனக்கு நல்லாவே புரியுது” என்று கூறி இளசுகளின் தலையில் இடியை இறக்கினார். தூயவனோ,

“இல்ல அதெல்லாம் சரியா வராது.. மாதவன்..” என்று ஏதோ கூற வர அவனது கரத்தைப் பற்றிய மாதவியோ,

“பெரியவங்க பேசும்போது நீ எதுக்கு குறுக்க பேசுற” என்றபடி அவனை சற்று தூரம் தள்ளி இழுத்து சென்றாள். அவர்களைத் தொடர்ந்து சமர், மாதவன் மற்றும் ஆதினி செல்ல தூயவனோ,

“உனக்கென்ன பைத்தியமா மாதவி.. இப்போ மட்டும் நாம விஷயத்தை சொல்லலைனா மாதவனுக்கும் அவளுக்கும் கல்யாணத்தைப் பண்ணி வச்சுருவாங்க..” என்று கூற மாதவியோ,

“அது தான் விதின்னு இருந்தா நடக்கட்டும்” என்றவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

“ஓஹோ மேடம் தியாகி ஆகிட்டிங்களோ.. நீயே நெனச்சாலும் இவளை எங்க வீட்டுக்கு மருமகளா வர நான் விட மாட்டேன்” என்றவன் அவளை முறைக்க அவளோ இப்பொழுது என்ன செய்வது என்று பலமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள். மாதவனோ,

“தூயவா ஏதாச்சும் செய்யணும் டா” என்க,

“அதுக்கு இவ விடணும் தான.. பெரிய தியாக செம்மல்னு மனசுல நெனப்பு..” என்றவன் மாதவிக்கும் முறைப்பைப் பரிசாக வழங்கினான். அதற்குள் கணபதியும் கேசவனும் எங்கோ வெளியில் செல்ல அதனைக் கண்ட சமர் இந்திராவிடம்,

“ம்மா அவங்க ரெண்டு பேரும் எங்க போறாங்க” என்று கேட்டான்.

“நாளைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.. அதான் ஜோசியரைப் பார்த்து ஒரூ வார்த்தைக் கேட்கலாம்னு போயிருக்காங்க” என்றிட சமரோ,

“மணி பதினொன்னு ஆகுதே மா.. இந்த நேரத்துல எந்த ஜோசியரைப் பார்க்க போறாங்க”

“ஆதினியோட அப்பா ஏற்கனவே பொருத்தம் பார்த்த ஜோசியர் இங்க பக்கத்துல தான் இருக்காராம்.. அதான் உடனே கிளம்பிட்டாங்க” என்று இந்திரா கூறிமுடிக்க,

‘அட கடவுளே’ என்றபடி சமர் வந்து சொல்ல அதனைக் கேட்ட இளசுகள் நால்வரும் அதிர்ந்தனர். மாதவிக்கோ நடப்பதைத் தடுக்க மனம் வரவில்லை. ஏற்கனவே பாட்டியைக் குறித்த கவலையில் இருக்கும் பெரியவர்களுக்கு மேலும் அவர்களின் காதல் கதையைக் கூறி சங்கடப்படுத்த விருப்பமில்லை. சற்றும் யோசிக்காமல் தூயவன் மற்றும் மாதவனின் கரத்தை எடுத்து தன் தலை மேல் வைத்தவள்,

“யாரும் எங்க காதல் விஷயம் பத்தி வீட்டுல சொல்ல கூடாது.. இது என்மேல சத்தியம்.. மீறி சொல்லி இந்த விஷயத்துனால ஏதும் அசம்பாவிதம் ஆச்சுன்னா அப்றம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது” என்றபடி பொரிந்து தள்ளிவிட்டு விறுவிறுவென்று கழிவறைக்குள் ஓடிவிட்டாள் அழுது தீர்க்க. அவளது திடீர் செயலை எதிர்பார்க்காத மற்ற நால்வரும் அதிர்ந்து தான் பார்த்தனர். 

“ஏன் டா அவளுக்கென்ன பைத்தியமா” என்று தூயவன் அர்ச்சிக்க மாதவனுக்கு மாதவியின் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆதினிக்கோ தன்னால் தான் மாதவி இவ்வாறு கூறுகிறாளோ என்று வருத்தமாக இருந்தது. 

“நான் போய் மாதவிகிட்ட பேசுறேன்” என்றபடி கழிவறைக்குள் சென்றாள். உள்ளே சென்றவள்,

“மாதவி கதவைத் தோறங்க.. நீங்க எதுக்கு இப்படி பண்றீங்க.. என்னால தான இப்படி நீங்க பண்றீங்க. என் அப்பா அம்மா கிட்ட நான் பேசி புரிய வச்சுக்குறேன்.. தயவு செஞ்சி வெளிய வாங்க.. உங்களுக்கும் மாதவனுக்கும் கல்யாணம் நடக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.. அவசரப்பட்டு எதுவும் யோசிக்காதிங்க” என்க சிறிது நேரத்தில் வெளியில் வந்த மாதவி,

“இல்ல ஆதினி உங்களுக்காக மட்டுமில்ல.. கணபதி அங்கிள் சொன்னதுமே மறுபேச்சு பேசாம உங்க அப்பா சரின்னு சொல்லும் போதே அவரோட மனசு நல்லாவே புரிஞ்சுது.. அப்படிப்பட்ட நல்ல மனுஷன எங்க விஷயத்தை சொல்லி காயப்படுத்த மனசு வரல.. கணபதி அங்கிளும் இந்திரா ஆண்டியும் கூட இதை ஏத்துக்க மாட்டாங்க.. வீணா என்னால பிரச்சனை வர வேணாம்.. அப்புறம் எனக்கு தான் மனசாட்சி உறுத்தும்.. நான் ஏற்கனவே சொன்னது தான்.. விதிப்படி உங்களுக்கு தான் கல்யாணம் நடக்கணும்னு இருந்தா நடக்க தான் செய்யும்.. அப்படி எங்க காதலுக்கு சக்தி இருந்தா ஏதாவது அதிசயம் நடக்கும்.. ஆனா கண்டிப்பா பெரியவங்ககிட்ட எங்க காதல் விஷயத்தை சொல்ல சம்மதிக்கமாட்டேன்” என்று உறுதியோடு கூற ஆதினிக்கோ ஆயாசமாக இருந்தது. 

“மாதவி நீங்க ஏன் என்னைப்பத்தி யோசிக்க மாட்டேங்குறீங்க.. உங்க காதல் விஷயம் தெரிஞ்சப்புறமும் என்னால எப்படி மாதவனைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்.. என்னால முடியாது.. நான் அப்பா அம்மா கிட்ட பேசியே தீருவேன்” என்றபடி வெளியே வந்து மாதவி கூறியவற்றை மற்ற மூவரிடமும் கூறினாள். மாதவனோ செய்வதறியாமல் வருந்தினான். தூயவனோ,

“மாதவி எனக்கு உன்மேல அவ்ளோ ஆத்திரம் வருது.. பைத்தியக்காரத்தனமா யோசிக்குற நீ.. அப்பா வந்ததும் நான் சொல்ல தான் போறேன்..” என்று கூறியபடி தூயவனும் ஆதினியும் கணபதி மற்றும் கேசவன் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் கணபதியோ ஸ்டரெச்சரில் கேசவனைக் கடத்தி அவசரமாக மருத்துவரை அழைத்தபடியே ஓடிவர அதனைக்கண்டு அனைவரும் அதிர்ந்தனர். ஆதினியோ,

“அப்பா…” என்று கதறியபடி ஓட அபிராமியும்,

“என்னங்க.. என்னாச்சு உங்களுக்கு” என்றபடி அழுதுகொண்டே ஓடினார். அதற்குள் மருத்துவர்கள் வந்து கணபதியிடம் நடந்ததை விசாரித்துவிட்டு கேசவனை அறைக்குள் அழைத்து செல்ல மற்றவர்கள் வெளியில் கலக்கமாக நின்றனர். வேகமாய் அறைக்கதவின் கண்ணாடி வழியே தன் தந்தையின் நிலையைப் புரியாமல் பார்த்து கதறியவள் வெளியில் வந்த கணபதியிடம்,

“அங்கிள் என்னாச்சு அப்பாக்கு..  நல்லா தான வந்தாங்க உங்க கூட” என்று அழுதபடி கேட்க அபிராமியும் அதே கேள்வியைக் கண்களில் கண்ணீரோடு தேக்கி பார்க்க கணபதிக்கும் கண்கள் கலங்கியது. ஏற்கனவே தாயின் உயிர் ஒருபுறம் ஊசலாட இங்கே ஒரு நல்ல மனிதரின் உயிர் தன்னால் ஊசலாட அவருக்கோ வார்த்தைகள் எல்லாம் கண்ணீராய் தான் வெளிவந்தது.  தூயவனோ,

“அப்பா என்ன நடந்த்துச்சுன்னு சொல்லுங்க பா.. சொன்னா தான தெரியும்” என சற்று கண்டிப்பாக கேட்க கணபதி நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.

ஜோசியரைப் பார்க்க அங்கு சென்ற பிறகு தான் கேசவன் தன்னுடைய அலைபேசியில் தானே மாதவனின் ஜாதகம் உள்ளது அதனை எடுத்து வர மறந்துவிட்டோமே என்று யோசித்தவர் கணபதியிடம்,

“சம்மந்தி.. என் மொபைலை எடுத்துட்டு வரல.. மாப்பிளையோட ஜாதகம் உங்க கிட்ட இருக்கு தான” என்று கேட்க,

“அப்படிங்களா பரவாயில்ல.. நேத்து காலைல தான் நிச்சய தேதி குறிக்க போலாம்னு ஜாதகத்தை எடுத்து வச்சு உங்கள கூப்பிட்டு போகலாம்னு உங்க வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள தான் அம்மாக்கு இப்படி ஆகிடுச்சு.. கார்ல தான் இருக்கு நான் எடுத்துட்டு வரேன்..” என்று கூறிவிட்டு அதனை எடுத்து வந்தார். ஆனால் கேசவனோ,

“சம்மந்தி மாப்பிள்ளை ஜாதகம் ஓகே.. ஆதினி ஜாதகத்துக்கு என்ன செய்ய” என்க,

“அட ஆமால.. இப்போ என்ன செய்றது.. ஹான் அன்னைக்கு நீங்க எனக்கு அனுப்புனது என்னோட வாட்சப்ல தானே இருக்கும்.. இருங்க தேடி பாக்குறேன்” என்றபடி பார்க்க அதில் இருந்தது. ஜோசியரோ,

“என்ன கேசவன் இந்த நேரத்துல வந்துருக்கேள்.. எதுவும் அவசரமா..” என்று யோசனையாக கேட்க,

“ஆமா ஜோசியரே..” என்றவர் நடந்ததைக் கூறிவிட்டு, “அதான் அவங்க ஜாதக கட்டப்படி நாளைக்கு கல்யாணம் வைக்குறதுனால எதுவும் பிரச்சனை இல்ல தானன்னு பார்த்து சொல்லணும்” என்று கூற,

“உங்க அவசரம் புரியுது.. வந்து உட்காருங்க.. இப்போவே பார்த்து சொல்றேன்” என்றபடி மாதவனின் ஜாதகத்தைப் புத்தகத்திலும் ஆதினியின் ஜாதகத்தை அலைபேசியில் பார்த்தும் கணிக்க ஆரம்பித்தவரின் நெற்றியில் சிந்தனை ரேகைப் படர ஒருமுறை கேசவனை ஏறிட்டவர் மீண்டும் எதையோ தீவிரமாக கணித்தார். 

“என்ன கேசவன்.. இந்த ஜாதகம் ரெண்டுக்கும் சுத்தமா பொருத்தமே இல்லைங்களே.. அன்னைக்கு பொருத்தம் பார்த்துட்டு போன வரன் இல்லையா இது” என்று கேட்க கணபதியும் கேசவனும் குழம்பி போயினர். கணபதியோ,

“என்னங்க சொல்றீங்க.. அன்னைக்கு பார்த்த அதே பையனுக்கு தான் இப்போ கேட்க வந்துருக்கோம்.. அன்னைக்கு பத்துக்கு பத்து பொருத்தம் இருக்குன்னு சொன்னீங்க.. இந்த ஜாதகருக்கு பொறந்த பொருத்தமான ஜாதகி இவங்க தான்னு சொன்னீங்கன்னு சொன்னாங்க.. இப்போ என்னடான்னா இப்படி சொல்றீங்க” என்று கேட்க அதே கேள்வியோடு தான் கேசவனும் பார்த்தார். ஜோசியரோ,

“ஆமாங்க.. அன்னைக்கு பார்த்த ஜாதகமும் இந்த பொண்ணோட ஜாதகமும் அவ்ளோ கச்சிதமா பொருந்துச்சு.. ஆனா இது அந்த ஜாதகம் இல்ல..” என்க மேலும் குழம்பிய கேசவனோ,

“எங்களுக்கு புரியல ஜோசியரே..”

“அன்னைக்கு பார்த்த அதே பொண்ணு ஜாதகம் தான் இது.. ஆனா மாப்பிள்ளை ஜாதகம் அது இல்ல.. அந்த பையனோட ஜாதகம் பரணி நட்சத்திரம்.. இந்த பையனோட ஜாதகம் அவிட்டம் நட்சத்திரம்.. அசுவினிக்கும் பரணிக்கும் தான் பத்துக்கு பத்து பொருத்தம்.. அசுவினிக்கும் அவிட்டதுக்கும் ஆகவே ஆகாதுங்க..” என்க கணபதிக்கோ,

‘பரணி நட்சத்திரமா..’ என்று யோசித்தவர் சட்டென தன் அலைபேசியில் அன்று கேசவனுக்கு தான் அனுப்பிய ஜாதகம் நினைவிற்கு வர அதனை எடுத்துவர் ஜோசியரிடம் காண்பித்து,

“இந்த ஜாதகம் தான அன்னைக்கு பொருத்தம் பார்த்தீங்க” என்க அதனை வாங்கி பார்த்தவர்,

“சாட்ஷாத் இதுவே தான்.. இந்த ரெண்டு ஜாதகத்துக்கும் நாளைக்கு நீங்க தாராளமா கல்யாணம் வச்சுக்கலாம்” என்று கூற கணபதியோ,

“இது ரெண்டு ஒரே ஜாதகம் இல்லையா..”

“இல்ல. இது வேற இது வேற” என கூற தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார் கணபதி. இதனைக் கண்ட கேசவனோ,

“என்னாச்சு சம்மந்தி..” என்க அவரின் கையைப்பற்றியவர்,

“ஐயோ என்னை மன்னிச்சுருங்க சம்மந்தி.. என்னோட கவனக்குறைவால ஒரு பெரிய தப்பு நடந்துருச்சு.. அன்னைக்கு மாதவனோட ஜாதகத்துக்கு பதிலா உங்களுக்கு என் சின்ன பையன் தூயவனோட ஜாதகத்தைத் தெரியாம மாத்தி அனுப்பிட்டேன்..” என்று கலக்கமாக கூற,

“என்ன சொல்றீங்க” என அதிர்ந்தார் கேசவன். 

“ஆமா.. நீங்க சம்மதம் சொன்ன சந்தோஷத்துல  அன்னைக்கு எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. அதான் சீக்கிரமா அனுப்பனுமேன்னு பெயர் எழுதிருக்குற முகப்பு அட்டையைக் கூட அனுப்பாம வெறும் கட்டத்தை மட்டும் போட்டோ எடுத்து அனுப்பிட்டேன்.. இப்ப தான் புரியுது அது தூயவனோட ஜாதகம்னு” என்றவர் கையைப் பிசைய கேசவனுக்கு தலையில் இடி இறங்கியது. அதனைக் கண்டு வருந்திய கணபதியோ ஜோசியரிடம், 

“ஜோசியரே சிரமத்துக்கு மன்னிக்கணும்.. என் பெரிய பையன் ஜாதகத்துக்கும் இந்த பொண்ணு ஜாதகத்துக்கும் கல்யாணம் நடத்தி வைக்க எதுவும் வாய்ப்பு இருக்கான்னு பார்த்து சொல்லுங்க ப்ளீஸ்” என்று வேண்டுகோள் விடுக்க அதற்கிணங்க கணித்த ஜோசியர்,

“இல்லைங்க சுத்தமா பொருத்தம் இல்ல.. கண்டிப்பா இருக்க வேண்டிய அடிப்படை பொருத்தம் கூட இல்ல.. இது மாங்கல்யத்துக்கு ஆபத்தை உண்டாக்கும்” என்று கூறிவிட கேசவனோ அதற்கு மேல் கேட்க விரும்பாமல்,

“நன்றி ஜோசியரே.. நாங்க வரோம்” என்றபடி வெளியில் வந்து நின்றார். அவரை அந்நிலையில் பார்க்க கணபதிக்கு சங்கடமாக இருந்தது.

தன் மகளின் வாழ்க்கைக் குறித்து பெரிய கனவு கோட்டையல்லவா கட்டி வைத்திருந்தார். நல்ல குடும்பத்தில் தன் மகள் மருமகளாக போகிறாள் என்று எத்தனை முறை கற்பனை செய்து மகிழ்ந்திருப்பார். அதெல்லாம் ஒரே நொடியில் தவிடுபொடியாகி விட ஒரு தந்தையாய் அவரின் மனம் கதறியது. அதில் அவருக்கு லேசாக இதயக்கூட்டில் வலியெடுத்து நெஞ்சைப் பிடித்தபடி அமர்ந்துவிட கணபதியோ,

“ஐயோ கேசவன்.. என்னாச்சு உங்களுக்கு” என்று பதறியபடி அவரைக் காரில் ஏற்றி மின்னல் வேகத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
6
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்