Loading

“நீயா” என்றபடி ஒரு சேர தூயவனும் ஆதினியும் ஒருவறையோருவர் பார்த்து அதிர மத்த நால்வரும் புரியாமல் முழித்தனர். தூயவனைப் பார்த்த மறுகணமே,

‘உன்னை ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்க போறான்னு தெரிஞ்சாலே அவன்கிட்ட உன்னைப்பத்தி சொல்லி அவனை ஓட விட்ருவேன்’ என்று கூறிய அதே வாக்கியம் நினைவுக்கு வர,

‘போச்சு எல்லாம் போச்சு.. சொன்ன மாதிரியே எல்லாத்தையும் செஞ்சுட்டான்.. மாதவன் கிட்ட என்னைப்பத்தி எதையோ தப்பு தப்ப சொல்லிருப்பான்.. அதைக் கேட்ட அப்புறம் தான் மாதவன் என்னை சந்திக்க வந்துருப்பாரு’ என்று அவளாக மனதினுள் கணக்கு போட்டவள் விறுவிறுவென்று சென்று தூயவனின் சட்டையைப் பிடித்து,

“ஏன் டா பாவி.. நான் உனக்கென்ன டா துரோகம் செஞ்சேன்.. அப்படி என்ன என்னால உனக்கு குடி முழுகி போச்சு.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லைல.. நீயெல்லாம் மனுஷனே இல்ல” என்றபடி திட்டிக்கொண்டே போக அவளது திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர். தூயவனும் கூட. உடனேயே தன்னை சுதாரித்தவன்,

“ஹே என்ன பண்ற நீ.. பொண்ணாச்சேன்னு பாக்குறேன்.. இல்லனா கன்னம் பழுத்துருக்கும்.. எடு டி முதல்ல கைய்ய” என்று கர்ஜித்தான். அவனது குரலில் சற்று பெண்ணவள் ஆடி போனாலும் அதனை முகத்தில் காட்டாதவாறு அவனை முறைத்து கொண்டு நின்றாள். தூயவனின் குரலில் தன்னை மீட்ட மற்றவர்களுள் காதம்பரியைத் தவிர்த்து மற்ற மூவரும்,

“டேய் தூயவா.. என்னாச்சு..” என்க மாதவனோ மேலும் தொடர்ந்தான்.

“உனக்கு ஏற்கனவே ஆதினியை தெரியுமா..” என்க இப்போது புரியாமல் முழிப்பது ஆதினியின் முறையாயிற்று. ஆதினியின் கூற்றில் அவன் தான் அவள் கூறும் உராங்கொட்டான் என்று புரிந்த காதம்பரி அதனை உறுதிப்படுத்தும் விதமாக கேள்வியாய் ஆதினியைப் பார்க்க அவளோ ஆமென தலையசைத்தாள். 

“நீ எந்த பொண்ணுக்கிட்டயும் இப்படி மரியாதைக் குறைவா பேசி நாங்க பார்த்ததில்லையே டா.. உங்களுக்குள்ள என் பிரச்சனை” என்று சமர் கேட்க மாதவியும் அதே கேள்வியோடு தான் நின்றாள். ஆனால் அதெல்லாம் காதில் வாங்காத தூயவனோ ஆதினியை முறைப்பதே தன் தலையாய கடமை என்றபடி நின்றான். அவனிடம் கேட்டு பயனில்லை என்றுணர்ந்த மாதவனோ ஆதினியிடம்,

“ஏங்க நீங்களாச்சு சொல்லுங்க.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.. உங்களுக்கு எப்படி என் தம்பியைத் தெரியும்” என்று கேட்க ஆதினியும் காதம்பரியும்,

“எதேய் தம்பியா” என்றபடி அதிர்ந்து பார்த்தனர். அதிர்ந்த ஆதினி தூயவனைப் பார்க்க அவளை நக்கல் கலந்த பார்வைப் பார்த்தவன்,

“கேட்குறாங்கல்ல சொல்லுங்க மேடம்” என்றபடி மார்பின் குறுக்கே கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்தான். சமரோ,

“முதல்ல நீங்க ரெண்டு பேரும் உட்காருங்க.. எல்லாரும் நம்மளையே தான் பாக்குறாங்க.. எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்று சுற்றம் கருதி கூற பிறகு இருவரும் அமர்ந்தனர். ஆதினிக்கு இப்பொழுது தான் ஒரு விஷயம் புரிந்தது. முதல் முறையாக கோவிலில் மாதவனைப் பார்த்தபோது எங்கோ பார்த்தது போல தோன்றியது இருவரும் சகோதரர்கள் என்ற காரணத்தினால் தான் என்று. உடன் பிறந்த சகோதரர்களுக்குள் முகஜாடையில் ஒற்றுமை இருப்பது இயற்கை தானே. அதுமட்டுமன்றி இந்த திருமண விஷயம் பற்றிய பேச்சு ஆரம்பித்ததில் இருந்து தன் மனதில் ஏற்பட்ட சஞ்சலத்திற்கு இது தான் காரணமோ என்றும் தோன்றியது. ஆகமொத்தத்தில் இந்த திருமணம் நடக்காது என்று முடிவே செய்துவிட்டாள் ஆதினி. தூயவனோ,

“டேய் மாதவா.. இந்த கல்யாணம் நடக்காது.. அதுவும் இவ தான் உனக்கு பார்த்த பொண்ணுன்னு எனக்கு தெரிஞ்சுருந்தா ஆரம்பத்துலயே தடுத்துருப்பேன்.. இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகல நிச்சயம் கூட இன்னும் பண்ணிக்கல தானே.. அப்பா அம்மாகிட்ட நான் பேசிக்குறேன்.. வந்த வேலை முடிஞ்சுது வாங்க போலாம்” என்றவன் சாதாரணமாக இருக்கையைவிட்டு எழும்ப அவனது அதிரடி பேச்சில் ஆதினியைத் தவிர்த்து அனைவரும் அதிர்ந்து பார்த்தனர். மாதவனோ,

“டேய் தூயவா.. என்ன டா நீ.. இப்படி மனசாட்சி இல்லாம பேசுற.. நீ ஏன் இப்படி எல்லாம் நடந்துக்குறன்னு புரியல.. தப்பு தூயவா”

“யாரு நான் தப்பா பிகேவ் பண்றேனா.. இவ நல்ல பொண்ணே கிடையாது.. சரியான பிராடு..” என்று குற்றம் சாடியவன் அவளை வெறுப்பாக பார்க்க அதில் கோபமடைந்த காதம்பரியோ,

“ஹலோ.. வாய்க்கு வந்ததைப் பேசாதீங்க.. என்ன தெரியும் உங்களுக்கு இவளைப் பத்தி..” என்று எகிற,

“அவ தப்பானவனா.. அவ பிரெண்ட் நீ மட்டும் யோக்கியமாவா இருக்க போற.. அதான் அவளுக்கு வரிஞ்சி கட்டிட்டு வர..” என்றவன்,

“ஸச் அ கேரக்டர்லெஸ் பீப்புள்” என்று வாய்விட்டு புலம்ப காதம்பரியின் கண்கள் கலங்கின அவனின் வார்த்தையில். அதைக் கண்ட ஆதினியோ,

“ஹே என்ன நீ.. விட்டா ஓவரா பேசிட்டு போற.. நாங்க கேரக்டர்லஸா.. பொண்ணுங்ககிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியாத நீ தான் டா கேரக்டர்லெஸ்.. உனக்கெல்லாம் கல்யாணமே ஆகாது டா.. அப்படியே ஆனாலும் சேடிஸ்ட்டான பொண்டாட்டி தான் கிடைப்பா” என்றவள் மாதவனிடம்,

“ஏன் மாதவன்.. நீங்க பொறந்த அதே வயித்துல தான் இவன் பொறந்தானா.. நீங்க எவ்ளோ ஜெனியூனா இருக்கீங்க.. ஆனா இவன்..” என்றவள்,

“ஸச் அ சைக்கோட்டிக் கேரக்டர்” என்று திட்ட,

“ஹே நீ ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க.. அவ்ளோ தான் உனக்கு மரியாதை.. இன்னோரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு அப்புறம் நான் மனுஷனா மாட்டேன் சொல்லிட்டேன்.. முதல்ல இந்த இடத்தை விட்டு வெளிய போடி” என்று கத்த,

“தோ பாரு டா.. இதென்ன உங்க தாத்தா கட்டி வச்ச ஹோட்டலா.. உன்னையெல்லாம் நான் மனுஷனாவே நினைக்கல.. நீ போடா வெளிய..” என்றவள் அவனை நக்கல் தோனியில் பார்க்க அதில் எரிச்சலுற்றவன்,

“டேய் மாதவா.. நான் கிளம்புறேன்” என்றவன் கடுங்கோபத்தில் முறைத்துக் கொண்டே வெளியே செல்ல உனக்கு நான் சளைத்தவள் அல்ல என்ற ரீதியில் ஆதினியும் முறைத்துக் கொண்டு தான் இருந்தாள். சமர், மாதவன் மற்றும் மாதவிக்கு தலையைப் பிய்த்துக்கொள்ளலாம் போல் இருந்தது நடப்பது புரியாமல். ஆனால் கதம்பரியின் கண்ணீர் சமரை ஏதோ செய்தது மட்டும் உண்மை. பார்த்த கணத்தில் ஒரு பெண்ணை இப்படித்தான் என்று முடிவு செய்து பேசியதில் தூயவன் மேலும் சிறு வருத்தம் இருந்தது. மாதவனோ,

“டேய் சமர்.. நீ அவன்கூட போ..” என்று கூற அவனும்,

“சரிங்கண்ணா” என்றவன் செல்ல எத்தனிக்க என்ன தோன்றியதோ யோசிக்காமல் காதம்பரியிடம்,

“அவன் பேசுனதுக்கு நான் சாரி கேட்டுக்குறேன்.. ரிலாக்ஸ்சா இருங்க” என்று கூறிவிட்டு தூயவனின் பின் சென்றான். இங்கு மாதவனோ,

“சாரி ஆதினி.. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல.. ஆனா அவன் சொன்ன அளவுக்கு நீங்க தப்பான பொண்ணா எனக்கு தெரியல.. ஆக்சுவலா உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்ன தான் நடந்துச்சு..” என்று கேட்க ஆதினியோ,

“அதை விடுங்க மாதவன்.. நீங்க முதல்ல எதுக்கு என்னை வர சொன்னிங்க.. அதைப் பத்தி முதல்ல பேசுவோம்” என்றிட மாதவனுக்கும் முதலில் வந்த விஷயத்த முடித்து விடலாம் என்றே தோன்றியது. தைரியத்தை வரவழைத்து பேச ஆரம்பித்தவன்,

“இவங்க மாதவி” என்று அவளை அறிமுகப்படுத்த ஆதினியோ,

“ஹெலோ மாதவி” என்று கைநீட்ட அவள் பயத்தை மறைத்தவாறு,

“ஹாய் ஆதினி” என்று கைக்குலுக்கினாள். மாதவியின் உள்ளங்கை சில்லிட்டிருந்ததை உணர்ந்த ஆதினிக்கு ஏதோ பெரிய குண்டைத் தூக்கிப் போடப்போகிறார்கள் என்று மட்டும் புரிந்தது. மாதவனோ,

“ஆதினி நான் டைரக்ட்டா விஷயத்துக்கு வந்துடுறேன்.. மாதவியும் நானும் அஞ்சு வருஷமா லவ் பண்றோம்..” என்று பட்டென விஷயத்தை உடைக்க ஆதினியும் காதம்பரியும் அதிர்ந்தனர். அதில் கோபமடைந்த காதம்பரியோ,

“என்னங்க பேசுறீங்க நீங்க.. முதல்ல நீங்க தான கோவில்ல பார்த்து இவளை பிடிச்சுருக்குன்னு சொன்னீங்க.. இப்போ வந்து இப்படி சொன்னா என்ன அர்த்தம்..” என்று கேட்க ஆதினிக்கோ இதனை வேறு கோணத்தில் யோசிக்க தோன்றியது. 

“காது நீ அமைதியா இரு” என்றவள் மாதவனிடம்,

“ஏன் மாதவன்.. உங்க தம்பி என்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லிருக்காருன்னு நினைக்குறேன்.. அதனால தான் நீங்க இந்த கல்யாணம் வேணாம்னு நெனைக்குறீங்க.. அதை நேரடியா சொல்ல சங்கடப்பட்டுட்டு இப்படி காரணம் சொல்றீங்கன்னு தோணுது..” என்று தன் சந்தேகத்தை வெளிப்படையாக கேட்க மாதவியோ,

“அயோ இல்லவே இல்லைங்க.. ஆக்சுவலி தூயவனுக்கும் உங்களுக்கும் நடுவுல இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு இப்போ தான் எங்களுக்கு தெரியும்.. அதுமட்டுமில்ல தூயவனுக்கே நீங்க தான் மாதவனுக்கு பார்த்த பொண்ணுன்னு இப்போ தான் தெரியும்..” என்று கூற அப்பொழுது தான் தூயவன் கூறிய, ‘இவ தான் உனக்கு பார்த்த பொண்ணுன்னு எனக்கு தெரிஞ்சுருந்தா ஆரம்பத்துலயே தடுத்துருப்பேன்’ எனும் கூற்று நினைவிற்கு வர மாதவனும் மாதவியும் உண்மையை தான் கூறுகிறார்கள் என்று புரிந்தது. 

“அப்புறம் எதுக்குங்க என்னை பிடிச்சுருக்குன்னு சொன்னீங்க..” என்ற ஆதினியின் குரலில் லேசாக கோபம் எட்டிப்பார்த்தது. மாதவனோ,

“ஆதினி.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுருங்க.. நான் செஞ்சது மிகப்பெரிய தப்பு தான்.. அன்னைக்கு அறிவு கெட்டுப்போய் அவசரமா யோசிக்காம செஞ்ச ஒரு விஷயம் இன்னைக்கு இவ்ளோ பெரிய பிரச்சனைய உண்டு பண்ணும்னு சத்தியமா நெனச்சு கூட பார்க்கல நானு..” என்றவன் நடந்த அனைத்தையும் கூறினான். அதனைக் கேட்டவளுக்கு கண்ணீர் பெருகியது தன் திருமணத்தைக் குறித்து தன் பெற்றோர்கள் எவ்வளவு கனவு கொண்டிருக்கிறார்கள் என்று. அவளின் வலி புரிந்த காதம்பரி,

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையாங்க.. எப்படி இப்படி செய்ய மனசு வந்துச்சு.. நீங்க ரெண்டு பெரும் சண்டைப் போட்டு விளையாட ஆதினி வாழ்க்கை தான் கிடைச்சுதா..” என்றவள் மாதவிடம்,

“நீங்களும் ஒரு பொண்ணு தான.. கொஞ்சம் கூட யோசிக்காம அவர் செஞ்சதுக்கு கொடி பிடிச்சுட்டு வந்துருக்கீங்க.. அதுசரி உங்க ரெண்டு பேருக்கும் உங்க வாழ்க்கை முக்கியம்.. அதுக்கு மத்தவங்க வாழ்க்கை எப்படி போனாலும் உங்களுக்கு கவலையில்ல தானே” என்று கேட்க ஒரு பெண்ணாக மாதவிக்கு ஆதினியின் நிலையை எண்ணி கண்கள் கலங்கின. ஆதினியோ,

“ஏன் மாதவன்.. அட்லீஸ்ட் அன்னைக்கு பொண்ணு பார்க்க வந்தப்போ சொல்லிருக்கலாம் தானே.. உங்க கிட்ட கேட்க தான செஞ்சேன் ஏதும் பிரச்சனையான்னு.. என் அப்பா அம்மா முகத்துல இருந்த சந்தோஷத்தைப் பார்த்தீங்க தான.. அப்போ கூட உங்க மனசு உறுத்தலையா.. எப்படி இப்படி சுயநலமா யோசிக்க தோணுச்சு..” என்று ஆதங்கமாய் கேட்க மாதவனும் கண்கலங்கினான். 

“அயோ ஆதினி ப்ளீஸ்.. வார்த்தையால வதைக்காதீங்க.. உங்க அப்பா அம்மா முகத்துல இருந்த சந்தோஷத்தைப் பார்த்து மனசு உறுத்துனதுனால தான் அன்னைக்கு என்னால சொல்ல முடியாம போச்சு.. நான் ஒத்துக்குறேன் நான் கோழை… அவசரமா யோசிக்காம செஞ்சுட்டேன்.. அதுமட்டுமில்ல கோவில்ல வச்சு உங்க அப்பா உங்களுக்கு வரன் தேடுறோம்னு சொல்லும் போதே உங்க முகத்துல அதிருப்தி தெரிஞ்சுது.. அதை வச்சு நீங்க இந்த கல்யாணத்துக்கு எப்படியும் சம்மதிக்க மாட்டிங்கன்னு ஒரு நம்பிக்கைல தான் அப்படி எல்லாம் செஞ்சேன்..” என்று கூற ஆதினி கடுப்பாக பார்த்தாள். மேலும் தொடர்ந்தவன்,

“நான் என்னோட தப்ப நியாயப்படுத்தி பேசல.. நான் செஞ்சது தப்பு தான்.. இதுல என்னோட வாழ்க்கை மட்டும் அடங்கியிருந்தா நான் சரின்னு ஏத்திருந்துருப்பேன்.. மாதவியோட வாழ்க்கையும் இருக்கு.. அதான் எனக்கு மன்னிப்பு கேட்குறதைத் தவிர வேற வழி தெரியல.. மன்னிச்சுருங்க ஆதினி.. ப்ளீஸ்” என்றவனின் கண்களில் வலி தெரிந்தது. மாதவியோ,

“மாதவன் அப்படி செய்ய முழுக்க முழுக்க காரணம் தான் நான் ஆதினி.. இந்த விஷயத்த யோசிச்சு யோசிச்சு அவர் நிஜமாவே உடைஞ்சி போய்ட்டாரு.. நான் அவருக்கு சப்போர்ட்டா பேச வரல.. அவருக்கும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்க தான் வந்தேன்.. ஆனா ஒரு பொண்ணா உங்க வலியும் உணர்வும் எனக்கு நல்லாவே புரியுது ஆதினி. அதனால நீங்க என்ன முடிவு சொல்றீங்களோ நான் ஏத்துக்குறேன்.. உங்க கண்ணுல இவ்ளோ வலிய பார்த்த அப்புறமும் என் மாதவனை எனக்கு கொடுங்கன்னு நான் கேட்டா என்னைவிட சுயநலவாதி இந்த உலகத்துல யாரும் இருக்கமாட்டா..

இட்ஸ் ஓகே.. நான் செஞ்ச தப்புக்கான தண்டனையா மாதவனை நான் இழந்துக்குறேன்.. நீங்க ரெண்டு பேரும் தான் சேரணுங்குறது விதியா கூட இருக்கலாம் தானே.. யாரால தடுக்க முடியும்.. ஆக்சுவலா இந்த முடிவ நான் முன்னடியே யோசிச்சுருக்கணும்.. நீங்க சொன்ன மாதிரி சுயநலமா தான் யோசிச்சு உங்க கிட்ட பேச அவர்கூட வந்துருக்கேன்னு இப்போ தான் புரியுது.. அப்போ எனக்கு என் அஞ்சு வருஷ காதல் மட்டும் தான் தெரிஞ்சுது.. ஒரு பொண்ணா உங்க இடத்துல இருந்து யோசிக்க தவறிட்டேன்.. இப்போ புரிஞ்சுக்கிட்டேன்” என்றவள் மாதவனிடம்,

“மாதவ்.. நீங்க ஆதினிய தான் கல்யாணம் பண்ணிக்கணும்.. அது தான் சரியும் கூட.. எப்போதும் என்கிட்டே ஒரு கேள்வி கேப்பீங்களே.. உனக்காக ஏதாச்சும் பெருசா செய்யணும்னு ஆசைபடுறேன்னு.. அது உண்மைனா எனக்காக இதை செய்ங்க.. ” என்று கூறியவள் எழுந்து செல்ல எத்தனிக்க அவளைக் கரம்பற்றி தடுத்த ஆதினியின் மனதில்,

‘என்ன பொண்ணுடா இவ.. இப்படியும் காதல் செய்ய முடியுமா’ என்று ஆச்சார்யப்படாமல் இருக்க முடியவில்லை. அவள் கூறியதும் மறுகேள்வி கேட்காமல் அவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு வலியோடு அவளைப் பார்த்த மாதவனின் கண்களில் தான் எத்தனைக் காதல். இத்தகைய இருவரது காதலைக் கொன்றுவிட்டு மாதவனைத் திருமண செய்து என்ன சாதித்துவிட போகிறோம். மணமேடைவரை வந்த பின்பு திருமணம் பிடிக்கவில்லை என்று நின்றுபோன எத்தனைத் திருமணங்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.. நிச்சயத்திற்கு முன்னரே இவர் கூறிவிட்டார் தானே. தவறு என்பது அனைவரும் செய்கின்ற ஒன்று தானே என்று ஒரு மனம் அவர்களுக்கு சாதகமாக யோசிக்க தொடங்கியது. பெருமூச்சொன்றினை விட்டவள்,

“இப்போ எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்துறது.. என் சைடுல இருந்து நான் செய்யணும்” என்று ஆதினி அமைதியாக கேட்க அவளின் அமைதியைக் கண்ட மாதவன் மற்றும் மாதவிக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. காதம்பரியோ,

“என்ன ஆது நீ.. பைத்தியமா உனக்கு” என்று பொங்க,

“காது.. விடு.. அவங்களை மனசுல நெனச்சுட்டு மாதவனால என்கூட எப்படி நிம்மதியா வாழமுடியும்.. இல்ல இவ்ளோ விஷயம் தெரிஞ்ச அப்புறம் என்னால தான் அவருக்கு கழுத்த நீட்ட முடியுமா.. எல்லாம் விதி.. ” என்க அவளது விரக்தி பேச்சில் மனம் வருந்திய மாதவி,

“இல்ல ஆதினி.. எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு..” என்று கூறவர அவளைத் தடுத்த ஆதினி,

“இதுக்கு மேல எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல மாதவன்.. எப்படியாச்சு நம்ம ரெண்டு பேரோட பேரண்ட்ஸுக்கும் மனசு நோகாதபடி கல்யாணத்தை நிறுத்துனா போதும் எனக்கு..” என்று கூற அவளை நினைத்து பிரம்மிப்பாக இருந்தது மாதவன் மற்றும் மாதவிக்கு. அவளின் பெற்றோர் என்று மட்டும் சிந்திக்காமல் இருவரது பக்கமும் யோசிப்பவளின் வெள்ளை மனதை தெளிவாக புரிந்துக் கொள்ள முடிந்தது. இத்தகைய நல்ல குணம் கொண்டவளை ஏன் தூயவன் அவ்வாறு கூறுகிறான் என்று மாதவன் மனதில் கேள்வி எழ,

“ரொம்ப தேங்க்ஸ் ஆதினி புரிஞ்சுக்கிட்டதுக்கு.. இப்படிப்பட்ட உங்கள தூயவன் தான் தப்பா ஏதும் புரிஞ்சு வச்சுருக்கான்னு தோணுது.. என்ன தான் நடந்துச்சு உங்களுக்குள்ள..” என்று கேட்க மாதவியும் அதே கேள்வியோடு பார்த்தாள். அவர்களின் கேள்வியில் அவளது சிந்தை அந்நாளுக்கு பயணப்பட அன்று தோன்றிய அவளின் இதய அதிர்வுகள் வார்த்தைகளாய் வர காத்திருந்தது.

——————————–

அங்கு வேகமாக தூயவன் பின்னே வந்த சமர் அவனிடம் இருந்து மகிழுந்து சாவியைப் பிடுங்கிவிட்டு,

“இவ்ளோ கோபத்துல ஒன்னும் நீ வண்டி ஓட்ட வேணாம்.. நான் ஓட்டுறேன்” என்றபடி ஓட்டுநர் இருக்கையில் அமர தூயவன் அவனுக்கு மறுபுறம் அமர்ந்தான். அவனது சிவந்த கண்களும் மூச்சுவிடும் வேகமும் அவனது கோபத்தில் அளவை பறைசாற்றியது. சற்று தூரம் அமைதியாக சென்ற சமர் அவன் கோபம் மட்டுப்பட்டதை உணர்ந்து வண்டியை நிறுத்தி பேச ஆரம்பித்தான்.

“டேய் தூயவா.. என்ன டா ஆச்சு உனக்கு.. ஏன் இவ்ளோ கோபம் உனக்கு அவங்கமேல.. நீ சொல்ற அளவுக்கு ஒன்னும் அவங்க தப்பானவங்களா தெரியலையே எனக்கு..” என்று கூற தூயவனோ அவனை முறைத்தான். 

“சரி டா முறைக்காத.. என்னாச்சுன்னு சொன்னா தான தெரியும்.. இங்க பாரு தெரிஞ்சோ தெரியாமையோ நம்ம அண்ணா ஒரு தப்பு செஞ்சிட்டாரு அந்த பொண்ணுக்கு.. அதனால நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கனும்..”

“அவள மாதிரி ஆளுங்களுக்கு இது தேவை தான் டா.. அனுபவிக்கட்டும்”

“லூசு மாதிரி பேசாத தூயவா.. அவங்க அப்பா அம்மா பத்தி எல்லாம் நெனச்சு பார்த்தியா.. அவங்க தப்பு செஞ்சவங்களாவே இருக்கட்டுமே.. அதுக்கு அவங்க அம்மா அப்பா என்ன செஞ்சாங்க.. இது நாமளே ஆரம்பிச்ச சம்மந்தம்.. பொறுமையா தான் ஹேண்டில் பண்ணனும்.. நீ என்ன நடந்துச்சுன்னு சொல்லு முதல்ல” என்க தூயவனோ தன் கண்முன் இருந்த சேனிட்டைசரை எடுத்தி பயன்படுத்த அப்பொழுது ஆதினியை சந்தித்த அந்த நாளும் நிகழ்வும் மனக்கண்ணில் வந்தது மட்டுமல்லாமல் அவன் தொண்டைக்குழி அதிர வார்த்தைகளாய் வரவும் காத்திருந்தது. 

 

தொடரும் அதிர்வுகள்..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
9
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்