Loading

மாலை மயங்கும் வேளையில் தெருமுனையில் சிறுவர்கள் தென்னம் மட்டையால் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, ஒரு சிறுவன் மட்டும் ஓரமாக நின்று அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

கிழிந்து தொங்கும் காற்சட்டை மற்றும் கசங்கிய சட்டை அணிந்து கொண்டு மற்ற சிறுவர்கள் விளையாடுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் சற்று நேரத்தில் தயங்கித் தயங்கி அவர்களை நெருங்கி, “ஆட்டைக்கு நானும் வாரேனே…” எனக் கண்கள் சுருக்கி கெஞ்சவும் அச் சிறுவர்களில் ஒருவன் அவனைத் தள்ளி விட்டான்.

“அங்குட்டு போலே… எங்க ஆத்தா உன் கூட சேராதேன்னு சொல்லி இருக்காப்புல… நீயி கீழ் சாதியாம்லே… உன் கூட பேசுறத பார்த்தாவே எங்க ஆத்தா வெஞ்சாமரத்தாலே வீசிபுடுவா… ஆட்டத்தை கெடுக்காம‌ போலே…” என்று விட்டு மீண்டும் விளையாட்டைத் தொடர மற்ற சிறுவர்களும் அவனுடன் இணைந்தனர்.

கீழே விழுந்ததில் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு விட காயத்தை அழுத்தப் பிடித்துக்கொண்டு அழுதபடி அங்கிருந்து சென்றான் முத்துராசு.

_______________________________________________

“ராவாகிடுச்சு… இந்தப் பயல இன்னும் காணலியே..” என வாசலையே பார்த்துக்கொண்டிருந்தவர் கையில் காயத்துடன் அழுதபடி வந்த மகனைக் கண்டு பதறி,

“எலேய் முத்து… என் ராசா… என்னலே ஆச்சு… எப்படிலே கைல காயம்…” எனக் கேட்க,

“தெரு முனைல பசங்க கிரிக்கெட் ஆடிட்டு இருந்தாய்ங்கன்னு என்னையும் கூட்டு சேர்த்துக்க கேட்டேன் ஆத்தா… ஆனா அவிய என்னைய கீழ தள்ளி விட்டுட்டு உன் கூட பேசினத பார்த்தா அவிய ஆத்தா வெஞ்சாமரத்தாலே வீசிபுடுவாய்ங்கன்னு என்னைய வெரட்டிட்டானுங்க ஆத்தா… நான் ஏன்த்தா கீழ் சாதில பொறந்தேன்… யாரும் என்னைய ஆட்டத்துல சேர்த்துக்கமாட்டேங்குறாய்ங்கலே… நீயி கீழ் சாதில பொறந்தவன்னு வையுறாய்ங்க ஆத்தா… எனக்கு இங்குட்டு ஒரு சேக்காளி கூட இல்ல…” என அழுதான் முத்துராசு.

கண்ணீருடன் அவனை அணைத்துக்கொண்ட அவனின் தாய் அலமேலு, “என்னலே பண்ண முடியும்… எல்லாம் நம்ம தலைவிதிலே… உன் ஐயன் ஊருல எல்லாப் பயலு கிட்டையும் கடன வாங்கி வெச்சிட்டு பாதிலயே போய் சேர்ந்துட்டாரு… என் ராசா உனக்காக தான்லே உன் ஆத்தா இன்னும் இந்த உசுர பிடிச்சி வெச்சிட்டு இருக்கேன்லே… உனக்கு ஆத்தா நான் இருக்கேன்… ஆனா ஒன்னுலே… உன் ஆத்தா பட்ட கஷ்டத்த உன்ன பட விட மாட்டேன்… இங்குட்டு தானே உன்னால மத்த பயலுங்க போல படிக்க முடியல… ஆட்டைல கலந்துக்க முடியல… என் தலைய அடகு வெச்சாவது உன்ன சீமத்துக்கு அனுப்பி படிக்க வைக்கிறேன்லே… அங்குட்டு ஒரு பயலும் உன்ன கீழ் சாதின்னு வைய மாட்டாய்ங்கலே…” என்றார்.

“அங்குட்டு போய் நானும் மத்த பயலுங்க போல படிச்சி ஐயன் சொன்ன மாதிரி பெரிய ஆஃபீஸர் ஆக முடியுமாத்தா…” எனக் கண்கள் மின்ன முத்துராசு கேட்க,

“ஆமாலே… என் ராசாக்கு என்னத்தலே கொற… எம்புட்டு அம்சமா இருக்கான்… நீ படிச்சு முடிச்சு சீமத்துல இருந்து வரக்கோல அம்புட்டு பயலுகளும் உனக்கு சல்யூட் அடிப்பாய்னுங்க… உன்ன கீழ் சாதின்னு வையுற அம்புட்டு பேரும் உன்ன காண வரிசையா நிப்பான்லே… நீ நடந்து வரேல ஒவ்வொருத்தனும் குட்டு… குட்டு.. அது என்னத்த சொல்லுவாலே… ஆஹ்… குட்டு மார்னிங்குன்னு சல்யூட் அடிப்பாய்னுங்க…” என அவனின் தாய் வர்ணித்து கூறவும் கிலுக்கிச் சிரித்தான் அந்த சிறுவன்.

மகனின் காயத்துக்கு மஞ்சள் தடவிய அன்னையவள் இரவுணவுக்கு முத்துராசுவிற்கு கூழைப் பருக்கி விட்டு தன் மடியிலே உறங்க வைத்தாள்.

அவன் உறங்கி விட்டதும் அந்த ஓலைக் குடிசையின் ஒரு மூலையில் மாலையிடப்பட்டிருந்த தன்னவனின் படத்தருகே வைத்திருந்த தாலிக் கொடியை எடுத்தவர், “நீயி போனதுக்கு அப்புறம் உங்க நெனவா எனக்கு இருந்த ஒரே சொத்து இந்தத் தாலிக்கொடி தான்லே… ஆனா நம்ம மயேனுக்காக நான் இன்னைக்கு இதை அடகு வைக்க போறேன்… என்ன மன்னிச்சிருலே… அவன சீமைக்கு அனுப்பி வெச்சிட்டு எந்த சோலிய பார்த்தாவது அவன படிக்க வெச்சு உங்க ஆசைய நெறவேத்துறேன்…” என்றார் கண்களைத் துடைத்தபடி.

_______________________________________________

“உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா என் வூட்டு வாசப்படிய மிதிப்பியேலே ****சாதிக்காரப் பயலே…” என கையிலிருந்த சாட்டையால் அந்த வயதானவரை விலாசினார் திருவம்பட்டி ஊர்த் தலைவர் மற்றும் எம்.எல்.ஏ ராஜதுரை.

சுற்றி இருந்த அனைவரும் கூக்குரலிட்டு அவரை இன்னும் ஊக்கப்படுத்த தன் சாதி வெறியை அந்த வயதானவரிடம் காட்டினார் ராஜதுரை.

அந்த வயதானவரை ஊர் நடுவில் ஒரு தூணில் கட்டி வைத்து ராஜதுரை சாட்டையால் அடித்துக்கொண்டிருக்க, திடீரென அவரின் காலில் விழுந்த ஒரு பெண்,

“தயவு செஞ்சி எங்க ஐயன விட்டுருலே.. வயித்துப் பசிய தாங்கிக்க முடியாம உங்க வூட்டுப் படிய மிதிச்சிட்டாரு… எங்குட்டு சரி போய் பிச்சை எடுத்தாச்சும் பொழச்சிக்குறோம்… எங்க ஐயன விட்டுருலே…” எனக் கதறினாள்.

ஆனால் அந்த சாதி வெறி பிடித்த மிருகமோ தன் காலால் அப் பெண்ணை எட்டி உதைத்து விட்டு, “நீயெல்லாம் *****சாதிக்காரனுங்க… எங்க நெழல தொடக் கூட உமக்கு தகுதியில்லலே… என் வூட்டு வாசப்படியவே மிதிப்பியேலா… இந்த ஊருல எந்தப் பயலாவது ****சாதிக்காரனுங்களுக்கு உதவி பண்றது தெரிஞ்சது… ஊர விட்டே ஒதுக்கி வெச்சிருவேன்லே… ” என அனைவரையும் மிரட்டி விட்டு துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சென்றார் ராஜதுரை.

வெளியே நடந்ததை தன் வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்த சிறுமி கூட்டம் கலைந்ததும் தன் மகளின் தோளில் கை போட்டு நொண்டியவாறு செல்லும் வயதானவரைக் கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்து விட்டு தாயின் அழைப்பில் கீழே இறங்கி சென்றாள்.

“எங்கலே இருந்த… இம்புட்டு நேரம் நான் கத்தினது காதுல விழல?” எனக் கேட்கவும்,

பதிலேதும் கூறாமல் தன் தாயை வந்து அணைத்துக்கொண்டாள் அந்த சிறுமி.

“ஏன்த்தா ஐயன் அந்த தாத்தாவ அப்படி அடிச்சாரு? அவரு பாவம் இல்லையா? அந்த அக்காள கூட ஐயன் காலால எட்டி உதைச்சாருலே…” எனக் கண் கலங்கக் கூற,

“நீ ஏன் புள்ள அதெல்லாம் பார்த்தியேலே… ஐயனுக்கு தெரிஞ்சா என்னைத் தான் வையுவாரு… இதை போல அவரு கிட்ட கேட்டுறாதேலே… உங்க ஐயன் சாதி வெறில ஊறி போனவிய… சாதி பார்த்து தான் யாரு கூடவும் பழகுவாய்ங்க… அவிய கூட இருக்குற பயலுகளும் அவிய போலவே இருக்குறதுனால தான் கூட வெச்சி இருக்குறாருலே… உன் தாத்தன், முப்பாட்டன் எல்லாருமே காலங்காலமா ஊர்த்தலைவரா இருந்து வராய்ங்க… அவியலுக்கு சாதி வெறி ரத்தத்துல ஊறி போய் கெடக்குது… அவிய குணம் தான்லே உன் ஐயனுக்கும்… அவிய முன்னாடி நீ சூதானமா இருத்தா… இல்ல உன் மேல எம்புட்டு பாசம் இருந்தாலும் சாதிக்காக நம்மள கொல்லக் கூட தயங்க மாட்டாய்ங்க…” என்றார் ராஜதுரையின் மனைவி விஜயா.

“சரிலே… நீயி போய் படி… உங்க ஐயன் வர முன்னாடி வாசல்ல அவருக்கு தலைய நனைக்க தண்ணி நெறச்சி வெக்கனும்… இல்லன்னா என்னை வையுவாருலே…” என மகளை அனுப்பி விட்டு குடத்தில் தண்ணீர் எடுத்து வர சென்றார் விஜயா.

தன் அறைக்கு வந்த சிறுமியின் தலையில் தாயின் வார்த்தைகளே ஓடின.

_______________________________________________

சில வருடங்களுக்கு பின்

“என்ட் ஃபைனலி… திஸ் இஸ் தி மொமன்ட் யூ ஆல் ஆர் வெய்ட்டிங் ஃபார்… யேஸ்… தி பெஸ்ட் ஸ்டுடன்ட் ஆஃப் தி யேர் இஸ் துருவ்… வெல்கம் டு தி ஸ்டேஜ்…” என அறிவிப்பாளர் ஒலிவாங்கியில் கூறவும் அரங்கம் முழுவதும் கரகோஷத்தால் நிரம்பி வழிந்தன.

அனைவரின் “த்ரு.. த்ரு…” என்ற கூச்சலுக்கும் கரகோஷத்துக்கும் மத்தியில் தன் ட்ரேட்மார்க் புன்னகையுடன் மேடையேறினான் துருவ்.

கல்லூரி முதல்வர் கையால் பதக்கத்தை வாங்கியவன் அவருக்கு நன்றி கூறி விட்டு மாணவர்கள் பக்கம் திரும்பி பதக்கத்தை தூக்கிக் காட்ட, மீண்டும் அவ் அரங்கம் முழுவதும் கரகோஷ ஒலி.

சில மணி நேரத்தில் நிகழ்ச்சி முடிவடைந்து அனைவரும் கலைந்து செல்ல, துருவ்விடம் வந்த கல்லூரி முதல்வர், “காங்கிராட்ஸ் யங் மேன்..” எனப் புன்னகையுடன் கூறி அவனை அணைத்து விடுவித்தார்.

துருவ், “தேங்க் யூ சார்..” என்க, “இன்னும் சில மாசத்துல உங்க ரிசல்ட்ஸ் வந்துரும்… ஐம் டேம்ன் ஷூர் யூ வில் கெட் தி ஃபர்ஸ்ட் ப்ளேஸ் மை பாய்…” என முதல்வர் கூறவும் அவருக்கு புன்னகையைப் பரிசாக அளித்தான்.

முதல்வர், “நெக்ஸ்ட் டைம் நான் உன்ன மீட் பண்ணும் போது நீ கலக்டரா இருக்கனும்..” என்று வாழ்த்த, “ஷூர் சார்… ஐ வில் ட்ரை மை பெஸ்ட்…” என்றான் துருவ்.

சற்று நேரம் அவரோடு பேசி விட்டு கல்லூரி விடுதிக்கு வர அவனை வழிமறித்தாள் அவள் அருணிமா.

துருவ், “தள்ளிப் போ…” என அழுத்தமாகக் கூற, “என்னல நீயி… ஜாரிய பக்கத்துல வச்சிக்கிட்டு தள்ளிப் போன்னு வெரட்டுரியேலே… பொஞ்சாதின்னு செத்த பாசமா பாத்தா தான் என்னவாம்…” என அவள் உதட்டை சுழிக்க,

“ஏய்….. யாருக்கு யாருடி பொண்டாட்டி… நான் என்ன உனக்கு தாலி கட்டினேனா…  பொண்டாட்டின்னு சொல்ற…” எனக் கத்தினான் துருவ்.

அருணிமா, “எதுக்கு இப்போ சும்மா எகிறிட்டு வரிய… எவலே வேணான்னு சொன்னது… தோ.. இப்போ கூட உன் கையால தாலிய வாங்க நான் தயாரா தான் இருக்கேன்லே… என்ன மாமோய் சொல்ற…” எனக் கண்ணடித்துக் கேட்கவும் கோபத்தின் உச்சிக்கே சென்ற துருவ்,

“மாமா கீமான்னு சொல்லிட்டு வந்தா பல்ல தட்டி கைல தந்துருவேன்…” என மிரட்ட,

அதனைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாத அருணிமாவோ, “அப்படி தான்லே சொல்லுவேன்… மாமா… மாமா… மாமோய்…” என சொல்லிக் கொண்டே போக கோபத்தில் அவளை அறைந்தான் துருவ்.

அருணிமா ஒரு நொடி அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைக்க, “ச்சே…” என்று விட்டு அங்கிருந்து சென்றான் துருவ்.

துருவ் செல்லும் திசையைப் பார்த்து புன்னகைத்த அருணிமா, “எலேய் மாமோய்… நீயி எம்புட்டு தான் என்னை வைஞ்சாலும் அடிச்சாலும் நான் உன்னயே சுத்தி சுத்தி வருவேன்லே… லவ் யூ மாமோய்…” எனக் கத்த,

கோபத்தில் பல்லைக் கடித்தபடி நின்றவன் அவசரமாக அங்கிருந்து விடுதிக்குள் நுழைந்தான்.

துருவ் தன் அறைக்குள் நுழையும் போதே, “என்ன மாப்பு… ரொம்ப நேரமா தங்கச்சி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தீய போல..” என அவனின் நண்பன் ஜெய் கிண்டலடிக்க,

அருணிமாவின் மீதிருந்த மொத்த கோபமும் ஜெய்யின் பக்கம் திரும்பியது.

துருவ்வின் தீப்பார்வையிலேயே தனக்கு நேரம் சரி இல்லை எனப் புரிந்து கொண்ட ஜெய் அவனைப் பார்த்து இளித்தபடி,

“அ..‌அது…‌ மாப்பிள்ளை… ஹா.. எப்போ மச்சான் ஊருக்கு கிளம்புறோம்… இனிமே நமக்கு இங்குட்டு எந்த சோலியும் கெடயாதுலே… என்னப் பண்றதா இருக்க…” எனப் பேச்சை மாற்றினான்.

துருவ், “இன்னும் ரெண்டு நாள்ல போலாம் மச்சான்… வீட்டுல இன்னும் சொல்லல… சர்ப்ரைஸா இருக்கட்டும்…” என்க, “அதுவும் சரிலே..” என்றான் ஜெய்.

_______________________________________________

திருவம்பட்டி ஊர் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

ஊர்த்தலைவர் ராஜதுரையின் மகள் பல வருடங்கள் கழித்து படித்து முடித்து விட்டு ஊருக்கு வர இருப்பதால் தான் இந்த ஏற்பாடு.

“ஏய் விஜயா… சீக்கிரம் வாலே…” என ராஜதுரை கத்தவும் அவசரமாக கூடத்துக்கு ஓடி வந்தார் விஜயா.

ராஜதுரை, “என்னலே இன்னும் உள்ள பண்ணிட்டு இருக்கியேலே… என் மவ வரா… ஆரத்தி கரச்சி வைலே… நான் பஸ் ஸ்டான்டுக்கு போய் என் மவள அழச்சிட்டு வரேன்…” என்று விட்டு வெளியேற,

கணவரிடம் சரி எனத் தலையசைத்த விஜயா சமையலறைக்குள் சென்று ஆரத்தி கரைத்தார்.

பேருந்து திருவம்பட்டி பேருந்து நிலையத்தில் வந்து நிற்க தன் உடைமைகளுடன் அதிலிருந்து இறங்கினாள் அருணிமா.

அவள் அவ்வூரில் காலடி எடுத்து வைத்ததுமே‌ பட்டாசு சத்தம் காதைக் கிழிக்க, காதைப் பொத்தியபடி நடந்தவளின் முன் வந்து நின்றார் ராஜதுரை.

அருணிமா அவரைக் கண்டதும் புன்னகையுடன், “அப்பா…” என அவர் காலில் விழ,

அவளை ஆசிர்வதித்த ராஜதுரை, “எப்படிலே இருக்க தாயி… என்ன ரொம்ப எழச்சிட்டியேலே…” என அருணிமாவின் கையிலிருந்த பையை வாங்கப் பார்க்க,

“நான் எடுத்துட்டு வரேன்பா..” என்றாள்.

தந்தையும் மகளும் வீட்டை அடையவும் விஜயா ஆரத்தி எடுத்து வரவேற்க,

அருணிமா, “ஆத்தா…” எனத் தாயை அணைத்துக் கொண்டாள்.

ராஜதுரை, “எலேய் விஜயா… மவ எழச்சி போய் வந்திருக்கா… நல்ல வாய்க்கு ருசியா செஞ்சி போடுலே… கறிக்கொழம்பும் செய்லே.. மவளுக்கு பிடிக்குமே…” என மனையாளுக்கு கட்டளையிட எப்போதும் போல சரி எனத் தலையாட்டினார் விஜயா.

அதற்குள் ராஜதுரையைத் தேடி வந்த ஒருவன், “ஐயா… அந்த ***சாதிக்காரப் பயலோட ஓடிப்போன சிறுக்கிய கண்டு பிடிச்சிட்டோம்லே.. அந்தப் பயல நம்ம குடோன்ல அடச்சி வெச்சி இருக்கோம்… நீயி வந்தியன்னா காரியத்த முடிச்சிடலாம்…” என்க,

தன் மீசையை முறுக்கிய ராஜதுரை, “அருவாள சீவி வைலே… தோ வரேன்… அந்த ஓடுகாலிக்கும் இன்னைக்கு ஒரு முடிவு கட்டணும்லே… அப்போ தான்லே திரும்ப ஒரு பய இந்தத் தப்ப பண்ண யோசிப்பாய்னுங்க… ” என்றவர் அருணிமாவிடம்,

“நீ போய் குளிச்சிட்டு வா தாயி… ஐயனுக்கு அவசர சோலி ஒன்னு கிடக்குது…” என்று விட்டு வெளியேறினார்.

சோகம் ததும்பிய முகத்துடன் தாயிடம் திரும்பிய அருணிமா, “இவிய இன்னமும் மாறலையா ஆத்தா? இதெல்லாம் பார்க்க பிடிக்காம தானே சீமத்துக்கு படிக்க போனேன்…” என்க,

விஜயா, “அவிய திருந்திட்டா தான் ஆச்சர்யமே… நீ அதெல்லாம் கண்டுக்காதேலே… போய் குளிச்சிட்டு வா… ஆத்தா உனக்கு கறிக்கொழம்பு பண்ணி வைக்கிறேன்…” என்றார்.

தன் அறைக்கு வந்த அருணிமாவின் மனம் கனத்துப் போயிருந்தது.

இவ் ஊரில் நடக்கும் கொடுமைகளைக் காண முடியாமல் தான் தந்தையிடம் கெஞ்சி வெளியூர் சென்று படித்தாள்.

ஆனால் இனி ஒவ்வொரு நொடியும் இங்கு நடக்கும் வன்முறைகளைக் காண வேண்டி வரும்.

இதற்கு ஒரு முடிவே கிடையாதா என அவளின் மனம் ஏங்கித் தவித்தது.

_______________________________________________

தன் முன்னே கைகள் பின்னே கட்டப்பட்டு வாயிலிருந்து இரத்தம் வடிய மண்டியிட்டு இருந்தவனை நெருங்கிய ராஜதுரை,

“****சாதிப்பய நீ… உனக்கு எங்க சாதி பொட்டப்புள்ள கேக்குதாலே… *****” என்றவர் அடுத்த நிமிடம் தன் முன் இருந்தவனின் கழுத்தை அறுத்து விட்டு அருவாளை அவன் பக்கத்தில் வீச,

அவர் பின்னிருந்து, “ஐயோ….. என்னங்க…..” என ஒரு பெண்ணின் கதறல் குரல் கேட்டது.

தன் பின்னே திரும்பிப் பார்த்த ராஜதுரை அந்தப் பெண்ணைப் பார்த்ததும் தன்னுடன் இருந்தவனைப் பார்த்து,

“அறிவிருக்காலே உனக்கு… இந்த சிறுக்கியையும் இங்குட்டு வெச்சிருக்கிய… அவள கொண்டு போய் அவ ஆத்தா வூட்டுல விட வேண்டியது தானேலே…” எனத் திட்டினார்.

அதற்குள் தரையில் இறந்து கிடந்தவனை நெருங்கிய அந்தப் பெண், “என்னங்க… எழுந்திரிலே… ஐயோ… நீயி கட்டின தாலியோட ஈரம் கூட இன்னும் போகலயே… அதுக்குள்ள என்னை விட்டு போய்ட்டியேலே…” என கதறியவள்,

“நீயி இல்லாத இந்த சுயநலமான உலகத்துல என்னாலயும் வாழ முடியாதுலே… நானும் உங்க கூடவே வந்துடுறேன்…” என ராஜதுரை சுதாகரித்து அவளை நெருங்க முன்னே அவர் கீழே போட்ட அருவாளை எடுத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டாள்.

அவளின் மூச்சு நின்று தன் கணவனின் மீதே விழுந்தாள்.

ராஜதுரை, “ச்சே.. என்னக் கருமாந்திரக் காதலோ… தகுதி தராதரம் பார்த்து இவியலுக்கு வருதா பாரு… எலேய்… ரெண்டு பாடியையும் யாரு கண்ணுலயும் படாம நம்ம தோட்டத்துல பொதச்சிடுலே… ஊருக்கு இவிய ஓடி போனதாவே இருக்கட்டும்லே… நம்மாளுங்களுக்கு மட்டும் விஷயத்த சொல்லு… எல்லா பயலும் தெரிஞ்சிக்கணும்… நம்ம சாதிக்கு ஒரு இழுக்குன்னா அவன் உசுர அறுத்துட்டு தான் இந்த ராஜதுரை மறு வேலை பார்ப்பான்னுலே…” எனத் தற்பெருமை பேசினார்.

_______________________________________________

யாரோ ஒருத்தி சாதி மாற்றி திருமணம் செய்ததற்கே உயிரைப் பறித்தவர் தன் மகள் காதலிப்பது தெரிந்தால் என்ன செய்வார்?

மனம் மாறி சம்மதிப்பாரா?

இவர்களின் வன்முறையை அடக்க இனி யாராவது பிறந்து வருவார்களா? இல்லை ஏற்கனவே பிறந்து விட்டானா?

_______________________________________________

வெஞ்சாமரம் – விளக்குமாறு

ஆட்டை – விளையாட்டு

வையுதல் – திட்டுதல் / ஏசுதல்

ஜாரி – அழகான பெண்

பொஞ்சாதி – பொண்டாட்டி

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
10
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Nice update. Intha caste ஆணவ கொலை ellam epo ilama pokumo.?