Loading

“போதுமுங்கய்யா… இதுக்கு மேல குடிச்சா உங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்லே…” என மாரி ராஜதுரையின் கரத்திலிருந்த மதுக் கோப்பையை வாங்கப் பார்க்க, அவன் கரத்தை தட்டி விட்ட ராஜதுரை, “தள்ளிப் போலே… என் ஆத்திரம் அடங்க தான் இம்புட்டு குடிக்குறேன்… அந்த கீழ் சாதிக்கார நாய இப்பவே வெட்டி போடுற வெறில இருக்கேன்லே…” எனக் கோபமாகக் கூறவும், “அவன நான் பார்த்துக்குறேன் ஐயா…” என்றான் மாரி.

ராஜதுரை, “என்னலே பார்த்துக்குறீய? நீ பார்த்த லட்சணம் தான்லே அந்தப் பயலு திரும்ப உசுரோட வந்து இருக்கான்…” என ஆவேசமாகப் பேசவும் மாரி அமைதியாகத் தலை குனிந்தான்.

ஆனால் தன் தந்தை முன் அவமானப்பட்டு நிற்பதற்கு காரணமான துருவ் மீது மாரிக்கு கொலை வெறி வந்தது.

“அவன கொன்னுட்டு தான்லே மறு வேலை பார்ப்பேன்… அவன கொல்லணும்… அந்த ****சாதிக்கார நாய கொல்லணும்…” என ராஜதுரை போதையில் உளற, தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான் மாரி.

மாரி யாருக்கோ அழைக்கப் பார்க்க, அதற்குள் அவனின் கைப்பேசி ஒலி எழுப்பியது.

புருவ முடிச்சுடன் மாரி அவ் அழைப்பை ஏற்று காதில் வைக்க, “என்னலே… அப்பனும் புள்ளயும் ஃபேக்டரி பறிபோன சோகத்துல சுத்திட்டு இருக்கியா…” என மறுபக்கம் இருந்து ஏளனமாகக் கேட்கவும், “ஏய்… எம்புட்டு தில்லு இருந்தா எங்க ஃபேக்டரி மேலயே கை வெச்சி இருப்பியேலே… அந்த ஜெய்யப் போட்டது போலவே உன்னையும் உன் பாசக்கார தம்பி துருவ்வையும் போட்டுத் தள்ளாம விட மாட்டேன் முத்துராசு…” எனக் கோபத்தில் கத்தினான் மாரி.

மாரியின் கத்தலைக் கேட்டு சத்தமாக சிரித்த முத்துராசு, “உன்னால எங்க….” என நிறுத்தியவன், மாரி, “ஏய்….” எனக் கத்தவும், “இதைக் கூட புடுங்க முடியாதுடா… நீ சரியான கோழைடா… அதான்லே பின்னால நின்னு முதுகுல குத்துற… தில்லு இருந்தா ஒத்தைக்கு ஒத்த சண்டைக்கு வாலே பொட்ட…” என தெரிந்தே மாரியின் கோபத்தைத் தூண்ட, முத்துராசு எதிர்ப்பார்த்தது போலவே ஆவேசமடைந்த மாரி, “யாரைப் பார்த்துலே பொட்டன்னு சொன்ன… வரேன்லே… இப்பவே வரேன்… உன்ன என் கையால கொன்னு போட்டா தான் என் ஆத்திரம் அடங்கும்….” என்றவன் கோபத்தில் தன் கைப்பேசியைத் தூக்கி தரையில் அடித்து விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு முத்துராசுவைக் காணப் புறப்பட்டான்.

மாரியின் அழைப்பு துண்டிக்கப்பட்டதும் வாய் ஒரு பக்கம் கோணி கை கால்கள் இழுத்து மருத்துவமனைக் கட்டிலில் வாடிய கொடியாய் உறங்கிக் கொண்டிருந்த அலமேலுவின் கரத்தைப் பற்றிய முத்துராசு, ‘என்னை மன்னிச்சிருலே ஆத்தா… நான் பண்ணப் போற காரியம் உனக்கு பிடிக்காம இருக்கும்… ஆனா நம்ம குடும்பத்தை சிதைச்சவங்கள பழி வாங்க இதை விட்டா எனக்கு வேற வழி தெரியல ஆத்தா… என் தம்பி ஜெய்க்கு செஞ்ச அநியாயத்துக்கு அவன நான் சும்மா விட மாட்டேன்…’ என மனதில் நினைத்தவன் வேகமாக மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.

_______________________________________________

பயத்தில் ஒவ்வொன்று கூறி உளறிக் கொண்டிருந்த அருணிமா திடீரென மயங்கிச் சரியவும் அவளைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்த துருவ் தன் கைப்பேசியை எடுத்து அருணிமாவை வழமையாக பரிசோதிக்கும் மருத்துவருக்கு அழைத்தான்.

அவர் அழைப்பை ஏற்கவும் நடந்ததை விளக்கிய துருவ், “ஏதாவது பிரச்சினையா டாக்டர்? ஏன் இப்படி நடந்துக்குறா?” என வருத்தமாகக் கேட்க, “பயப்பட எதுவும் இல்ல துருவ்… அன்னைக்கு நடந்த சம்பவங்கள் அவங்க மனசுல ஆழமா பதிஞ்சி இருக்கு… அவங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் ஞாபகம் வந்தோ கனவா வந்தோ இருக்கலாம்… அதனால தான் பயந்துட்டாங்க… தலைவலிக்கும் சேர்த்து தான் நான் மெடிசின் தந்து இருக்கேன்… நீங்க அதை எப்பவும் போல ஃபாலோ பண்ணுங்க… தலைவலி ரொம்ப அதிகமா வந்தா அவங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க…” என மருத்துவர் கூறவும் அவருக்கு நன்றி கூறி அழைப்பைத் துண்டித்தான் துருவ்.

அருணிமா பயத்தில் துருவ்வின் சட்டையை இறுக்கமாகப் பிடித்தபடி மயங்கி இருக்க, அதனை விலக்காது அவளருகில் அமர்ந்தவன், “சாரி நிரு… ரொம்ப சாரி… என்னால தான் உனக்கு இந்த கஷ்டம்… அன்னைக்கு மட்டும் என்னை நீ காப்பாத்த வரலன்னா உனக்கு இப்படி ஆகி இருக்காது…” எனக் கண் கலங்கியவன் அருணிமாவிடம் லேசாக அசைவு தெரியவும் அவசரமாக தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

சில நொடிகளில் கண் விழித்த அருணிமா, “மாமா…” என்று அழைக்கவும், “உன் பக்கத்துல தான்டா இருக்கேன்…” என துருவ் கூறவும் திரும்பி அவனைப் பார்த்த அருணிமா வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.

துருவ், “சாப்பிடலாமா நிரு…” என்க, அருணிமா சரி எனத் தலை அசைக்கவும் அவளை எழுப்பி அறைக்கு வெளியே அழைத்து வந்தான்.

பணி முடிந்து வரும் போது வாங்கி வந்த உணவைத் தட்டில் போட்டு வந்து அருணிமாவுக்கு ஊட்டி விட்ட துருவ் மெதுவாக, “ஏதாவது கனவு கண்டியா நிரு? அதனால தான் பயந்துட்டியா?” என்க, தாடையில் விரல் பதித்து யோசித்த அருணிமா, “ஹ்ம்ம்ம்… ஆமா மாமா… டீவில ஏதோ மூவி பார்த்துட்டு இருந்தேனா… எப்போ தூங்கினேன்னே தெரியல… அதான்… கனவு… யாரோ உங்களை…” என நிறுத்தியவள் துருவ்வை ஒட்டி அமர்ந்து கொண்டாள் பயந்து.

அன்று நடந்த சம்பவம் தான் அவள் நினைவில் வந்துள்ளது என புரிந்து கொண்ட துருவ் அருணிமாவை சமாதானப்படுத்தும் பொருட்டு, “சரி நீ அதை மறந்துடு நிரு… ஹா… நான் உனக்கு ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்…” என உணவை ஊட்டியவாறு புன்னகையுடன் கூற, “நெசமாவா… என்னலே அது… சொல்லுங்க… வெறசா காட்டு மாமா…” என அருணிமா சிணுங்க, “ஃபர்ஸ்ட் சாப்பிட்டு டேப்லெட் போடு… அப்புறம் தரேன்…” என துருவ் கூறவும் அவனின் கரத்திலிருந்த தட்டைப் பிடுங்கிய அருணிமா தானே வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்‌.

“ஹேய் பார்த்து நிரு… மெதுவா…” என துருவ் கூறியது எதுவும் அவள் காதில் விழவில்லை.

ஐந்து நிமிடங்களிலேயே சாப்பிட்டு முடித்தவள், “சாப்பிட்டாச்சி மாமா… எங்கலே காட்டு என்னன்னு…” என அருணிமா ஆர்வமாகக் கேட்கவும் அவளின் கையைக் கழுவி விட்டு குடிக்க தண்ணீரைக் கொடுத்த துருவ் அறைக்குச் சென்று தன் பின்னே ஏதோ மறைத்துக் கொண்டு வந்தான்.

அருணிமா எட்டிப் பார்க்க முயலவும் அதனை மறைத்தவன், “கண்டிப்பா தரணுமா?” எனப் புன்னகையுடன் துருவ் கேட்கவும் அருணிமா உதட்டைப் பிதுக்க, அவள் முன் ஒரு பார்பி பொம்மையை நீட்டினான் துருவ்.

மகிழ்ச்சியில் கண்களை அகல விரித்த அருணிமா, “ஹை… பார்பி டால்…” என உற்சாகத்தில் கத்தியவாறு அதனை துருவ்விடமிருந்து வாங்கியவள், “சூப்பரா இருக்கு மாமா… நான் கேட்டேன்னு வாங்கிட்டு வந்தியாலே?” எனக் கேட்கவும் துருவ் ஆம் எனத் தலையசைக்க, “தேங்க்ஸ் மாமா..” என்று அவனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் அருணிமா.

துருவ் ஒரு நொடி அதிர்ச்சியில் உறைந்தவன் அவசரமாகத் தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தியவன், ‘அவ இப்போ குழந்தை போல இருக்கா துருவ்… ஒரு குழந்தை சந்தோஷத்துல முத்தம் கொடுக்குறது போல தான் அவளும் தந்துட்டு போறா… அதைத் தப்பா எடுத்துக்காதே…’ என மனதில் தனக்கே கூறிக் கொண்டான்.

_______________________________________________

தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஆவேசமாக முத்துராசுவைக் காணச் சென்ற மாரியின் வண்டி பாதியிலேயே நிற்கவும் எரிச்சலாகக் கீழே இறங்கி என்னவெனப் பார்க்க, வண்டியின் டயரில் ஏதோ ஆணி குத்தி இருந்தது.

“ச்சே…” என கோபத்தில் வண்டியை உதைத்தவன் சுற்றி பார்வையை செலுத்த, இரவு நேரம் என்பதால் அவ் இடமே அமைதியாக இருந்தது.

திடீரென மாரிக்குப் பின்னால் ஏதோ சத்தம் கேட்கவும் மாரி திரும்பிப் பார்க்க முனைய, அதற்குள் யாரோ மயக்க மருந்து அடித்த கைக்குட்டையை மாரியை சுவாசிக்கச் செய்தனர்.

மயக்க மருந்தின் வீரியத்தில் மயங்கிச் சரிந்தான் மாரி.

சில மணி நேரத்தில் கண் விழித்த மாரியால் தன் கை கால்களை அசைக்க முடியவில்லை.

அவனின் கை கால்களை எல்லாம் கட்டி வைத்திருந்தனர்.

சுற்றியும் ஒரே இருட்டாக இருக்க, என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை.

திடீரென அவனைக் கட்டி வைத்திருந்த அறையின் விளக்கு ஒளிர, கண்கள் கூசவும் கண்களை மூடிக் கொண்டான் மாரி.

சில நொடிகளில் கண்ணைத் திறக்க அவன் எதிரே கால் மேல் கால் போட்டு ஏளனப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான் முத்துராசு.

மாரி, “ஏய்… நீ…” என ஆத்திரத்தில் கத்த, “நானே தான்… என்னலே பல்லக் கழட்டின பாம்பு போல இப்படி கம்முன்னு இருக்க…” எனக் கேலி செய்தான் முத்துராசு.

“கட்டிப் போட்டு அடிக்க வெக்கமா இல்லயாலே? தில்லிருந்து கயித்த அவுத்துட்டு அடிடா…” என மாரி கோபமாகக் கூறவும் ஏதோ நகைச்சுவையைக் கேட்டது போல் சிரித்த முத்துராசு, “எலேய்… உன்ன அடிக்கிறதா இருந்தா என்னைக்கோ அடிச்சி கொன்னுட்டு போயிருப்பேன்லே… உன்ன அம்புட்டு சீக்கிரம் கொல்ல எல்லாம் மாட்டேன்…” என சிரித்தபடி கூறியவன் மாரியின் தாடையை இறுக்கப் பற்றி, “அப்பனும் மயேனும் சேர்ந்து என் ஐயனையும் இப்படி தானே கட்டி வெச்சி சித்திரவதை பண்ணி கொன்னியேலே… அதை விட பல மடங்கு சித்திரவதைய நீ இப்போ அனுபவிக்கப் போறடா…” என்றான் ஆத்திரத்துடன்.

முத்துராசு, “சாதி வெறி பிடிச்ச நாய்… அடிக்கடி சொல்லுவியேலே உன் இரத்தத்துல கூட உங்க சாதி வெற ஊறி கிடக்குதாம்லே…” என்றவன் கூரிய கத்தியொன்றை எடுத்து மாரியின் கரத்தில் கீறினான்.

“ஆஹ்….” என மாரி கத்த, அவனின் கரத்தில் முத்துராசு கத்தியால் கீறிய இடத்திலிருந்து இரத்தம் வெளி வரத் தொடங்கவும் மாரியின் கரத்தை அங்குமிங்கும் திருப்பி உற்றுப் பார்த்து புன்னகைத்த முத்துராசு, “என்னலே… எங்குட்டு இருக்கு அந்த சாதி… பார்க்க எங்க சாதி சனங்களோட இரத்தத்தை போலவே இருக்கு…” என்றான் கேலியாக.

“எங்க ஐயன், என் தம்பி அம்புட்டு பேரையும் அநியாயத்துக்கு கொன்னியேலே… இதெல்லாத்துக்கும் காரணமான உன்னையும் உன் ஐயனையும் துடிதுடிக்க வைக்கிறேன்… சொந்தத் தங்கச்சின்னு கூட பார்க்காம அநியாயத்துக்கு அந்தப் புள்ளையையும் கொன்னுட்டியேலே…” எனக் கோபமாகக் கூறிய முத்துராசு மாரியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

மாரி, “டேய்… உன்ன சும்மா விட மாட்டேன்… உன் ஐயனையும் உன் தம்பியையும் கொன்னது போல தான்லே உன்னையும் போட்டு தள்ளுவேன்…” என ஆவேசமாகக் கூறவும் மீண்டும் அவனை அறைந்த முத்துராசு, “இன்னும் உன் திமிரு அடங்கலேலே… என் ஐயன் பண்ண விரும்பினத நான் பண்ணி காட்டுவேன்…” என்றவன், “இப்படியே கிடலே… உனக்கு ஒரு வாய் சோத்து பருக்கை கூட தர மாட்டேன்…” என்று விட்டு அங்கிருந்து சென்றான்.

“ஆஹ்……….” என அவ் அறையே அதிரும்படி கத்திய மாரியின் மனதில் அன்று மோகன் கூறியதே வந்து சென்றது.

_______________________________________________

ராஜதுரையின் மேல் புகார் கொடுப்பதற்காக அலமேலுவிடம் கூறி விட்டு முத்துராசுவுடன் காவல் நிலையம் சென்றார் மோகன்.

திருவம்பட்டி காவல் நிலையத்தினுள் நுழையும் போதே காவல் நிலையத்தின் தோற்றம் மோகனின் நம்பிக்கையை லேசாக அசைத்துப் பார்த்தது.

ஏனென்றால் பெயருக்கு தான் அது காவல் நிலையம். அங்கு சிறையில் இருந்த குற்றவாளிகளும் காவலாளிகளும் ஏதோ சொந்தம் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

சில காவலாளிகள் மேசை மேல் கால் நீட்டி உறங்கிக் கொண்டிருந்தனர்.

புகார் அளிக்க வந்த வரிய மக்கள் சிலர் வரிசை கட்டி நின்றிருக்க, காவலாளிகளோ அவர்கள் யாரையும் கண்டு கொள்ளவே இல்லை.

ஆனால் அதனைக் கண்டு கொள்ளாமல் தனது அடையாள அட்டையைக் காட்டி உள்ளே நுழைந்தவர் நேராக இன்ஸ்பெக்டரிடம் செல்ல, அவர் மோகனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவர், “நீ தான் அந்த சமூக சேவகராலே? யாருக்கு பிரச்சினைன்னாலும் முதல் ஆளா போய் நிற்பீயலாம்… இப்போ என்னத்துக்கு இங்குட்டு வந்திருக்க? யாரு மேல கம்ப்ளைன் குடுக்கணும்லே?” எனக் கேட்கவும் மோகன், “எம்.எல்.ஏ. ராஜதுரை மேல கேஸ் கொடுக்க வந்திருக்கேன்லே…” என்கவும் அவரை உற்று நோக்கினார் அந்த இன்ஸ்பெக்டர்.

இன்ஸ்பெக்டர், “என்ன விஷயமா எம்.எல்.ஏ மேல கம்ப்ளைன் தர நினைக்கிறீயலே?” எனக் கேட்கவும், “அந்தாளு பண்ண வேலைக்கு எம்.எல்.ஏ பதவி தான்லே கேட்குது… முதல்ல அவன அந்தப் பதவில இருந்து தூக்கணும்…” என முத்துராசு ஆவேசமாகப் பேச, அவனை அடக்கினார் மோகன்.

“இள ரத்தம்லே..‌ அதான் தம்பி இம்புட்டு துள்ளுது…” என இன்ஸ்பெக்டர் கேலியாகக் கூறவும் அவரை முறைத்தான் முத்துராசு.

மோகன் நடந்த அனைத்தையும் விளக்க, அதனை செவிமடுத்த இன்ஸ்பெக்டர், “வெளிய போய் ஏட்டு கிட்ட உங்க கம்ப்ளைன எழுதி கொடுலே… நான் பார்த்துக்குக்குறேன்…” என மோகனையும் முத்துராசுவையும் அனுப்பி வைத்தவர் அவர்கள் சென்றதும் தன் கைப்பேசியை எடுத்து ராஜதுரைக்கு அழைத்தார்.

ராஜதுரை, “சொல்லு பாண்டி… என்ன விஷயமாலே கால் பண்ணி இருக்கீய…” எனக் கேட்க, “ஐயா… அது… உங்க மேல ஒரு கம்ப்ளைன் வந்திருக்குது…” எனப் பணிவாக இன்ஸ்பெக்டர் கூறவும் சிரித்த ராஜதுரை, “யாருக்குலே அம்புட்டு தைரியம்… அதுவும் இந்த ராஜதுரை மேலயே கம்ப்ளைன் கொடுத்திருக்கான்… தில்லு தான்லே…” என்க,

இன்ஸ்பெக்டர், “சமூக சேவகர் மோகன் தான்லே…” என்றவர் மோகன் வந்து புகார் அளித்தது பற்றி கூறவும் ராஜதுரை அவரிடம் ஏதோ கூற, “சரிங்கய்யா… நான் அப்படியே பண்ணுறேன்லே…” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

பின் தன் அறையிலிருந்து வெளியே வந்தவர், “எம்.எல்.ஏய அரெஸ்ட் பண்ண ஆர்டர் கிடச்சிருச்சுலே… நீயும் என் கூட வாலே..” என மோகனிடம் கூற, “கம்ப்ளைன் தந்தா அரெஸ்ட் பண்ணுறது உங்க பொறுப்பு… எதுக்குலே எங்க ஐயனையும் கூட்டிட்டு போறீய?” என முத்துராசு சந்தேகமாகக் கேட்கவும், “எலேய்… செத்த நேரம் கம்முன்னு இருலே… நான் பேசிக்குறேன்…” என்ற மோகன், “நான் எதுக்குங்க உங்க கூட வரணும்?” எனக் கேட்டார் இன்ஸ்பெக்டரிடம்.

“உங்க சனத்துக்கு தானே எம்.எல்.ஏயால பிரச்சினைனு சொன்னியேலே… அந்தாள அரெஸ்ட் பண்ணுறத பார்க்க வேணாமா… வாலே.. வந்து வண்டில ஏறு…” என இன்ஸ்பெக்டர் சற்று கடுமையாகக் கூறவும் வேறு வழியின்றி அவருடன் சென்றனர் மோகன் மற்றும் முத்துராசு.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்