Loading

சலனம்-30 (final)

 

அன்று சம்யூவின் நினைவு நாள். எதை மறக்க வேண்டும், எதை நினைக்கவே கூடாதென நினைக்கிறோமோ? அது மட்டுமே திரும்ப திரும்ப நம் மனதில் வந்து நம்மை ஆட்டிப் படைக்கும்.

 

அன்றும் அப்படித்தான், சம்யூவின் விபத்து நடந்த அன்றைய நாளின் நினைவுகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தேன்.

 

ஒவ்வொரு வருடமும், அவள் நினைவுகளோடு போராடி போராடியே உணர்வுகள் எனக்குள் மரத்துப் போய்விட்டது. இந்த நாள் இந்த நொடி வரை, நான் அவள் புகைப்படத்திற்கு மாலையிட்டதோ, அவளை தெய்வமாய் நினைத்து வழிபட்டதோ கிடையாது.

 

 

அவள் இப்போதும் என்னுடன் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். ஆனாலும், அந்த ஒருநாளின் நினைவு மட்டும் அவள் இல்லை என்பதை எனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது. எனக்குள் யோசித்தபடியே அவள் புகைப்படத்தில் பார்வையைப் பதித்தபடி அமர்ந்திருந்தேன்.

 

 

புகைப்படங்களில் சம்யூ நிரம்பவும் இளமையாக இருந்தாள். அவசரமாய் கண்ணாடியின் முன் நின்று என் முகத்தைப் பார்த்தேன். பரவலாக வெள்ளையாய் மாறியிருக்கும் கேசம், வெள்ளையான தாடி, கண்களில் கண்ணாடி எனக் கொஞ்சம் வயதானவனாய் தெரிந்தேன். 

 

 

‘என் மகள் என்னைப் பார்த்து என்ன நினைப்பாள்?’ கேள்வி எனக்குள் எழுந்த அந்த நிமிடமே, எனது மடிக்கணினியில் அழைப்பு வருவதற்கான ஒலி கேட்டது. அவசரமாய் கணிணியின் முன் சென்று அமர்ந்து அழைப்பை ஏற்றேன்.

 

 

“ப்பா!”

என் மகளின் குரலைக் கேட்டதும், என் கண்களில் நீர் தேங்கியது.

 

 

“ப்பா! இங்கே பாருப்பா! நான் எப்படி இருக்கேன்?” என் மகளின் குரலில், கண்ணீரை உள்ளிழுத்துவிட்டு, நிமிர்ந்து பார்த்தேன். 

 

 

“நல்லா வளர்ந்துட்ட அவிம்மா! எப்படி இருக்கே? சமுத்ரா எப்படி இருக்கா?!”

 

 

“சமிம்மா நல்லா இருக்காங்க! உன் மூஞ்சி ஏன் இப்படி இருக்கு? ஓ! இன்னைக்கு சம்யூம்மா சாமிக்கிட்டே போன நாளுன்னு சோகமா இருக்கியா? நான்தான் சொல்லிருக்கேனேப்பா சம்யூம்மா உன் கூடத்தான் இருக்காங்க!” எனக்கு தாயாய் மாறி தைரியம் சொன்னாள் என் மகள்.

 

 

“ஸாரிடா மா! உனக்கு அம்மா இல்லாமல் பண்ணிட்டேனே?”

 

 

“அதான் கார்டியன் ஏஞ்சலா சமிம்மா இருக்காங்களே? இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லி ஃபீல் பண்ணிட்டு இருக்கப் போற? நான் சந்தோஷமா இருக்கேன்ப்பா. நீ ஃபீல் பண்ணாதே!”

 

 

“இருந்தாலும்..!”

 

 

“ப்பா! சும்மா சோகமா பேசிட்டு இருந்தேன்னு வை, நான் அப்பறம் கால் கட் பண்ணிடுவேன்.!” தாயைப் போலவே விரல்நீட்டி மிரட்டினாள் அவந்திகா.

 

 

“ஓகே.. பேசலை! நீ சொல்ல வந்ததை சொல்லு டா!”

 

 

“உனக்கு ஒண்ணு தெரியுமாப்பா, அந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்சோமினேஷன் பேஷண்ட்டுக்கு இன்னிக்கு தான் டெலிவரி ஆச்சு தெரியுமா? நான் ஐ.யூ.ஐ  பண்ணின முதல் பேஷண்ட் அவங்க தான்.!”

 

 

“ரொம்ப சந்தோஷமா இருக்கு டா! வாழ்த்துக்கள் அவிம்மா!”

 

 

“என்ன குழந்தைன்னு கேட்க மாட்டியாப்பா?” ஏக்கமாய் கேட்டாள் என் மகள்.

 

 

“பெண் குழந்தையா டா?” என் மகளின் முகத்திலிருந்தே இதுவாகத்தான் இருக்கும் என என்னால் யுகிக்க முடிந்தது.

 

 

“ஆமாப்பா!” எனச் சொன்ன என் மகளின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

 

 

“என்னடா?!”

 

 

“ரொம்ப வருஷம் கழிச்சு பொறந்த அவங்கக் குழந்தைக்கு, என்னைத்தான் பேர் வைக்கச் சொன்னாங்கப்பா! இன்னைக்கு தான் அம்மா சாமிக்கிட்டே போனாங்கல்ல.. அதனால் அம்மா பேர்தான்ம்ப்பா வச்சேன். கொஞ்சம் எமோஷ்னல் ஆகிடுச்சுப்பா!” என் மகளின் உணர்வுகளை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

 

 

“சம்யூ நம்மக் கூடத்தான் இருக்காள்ன்னு நீ தானே அவிம்மா சொன்னே? நீயே கலங்கி நின்னால் அப்பா என்னடா செய்வேன்? என் உயிரே நீதானே டா?!” என்ற என் வார்த்தைகளில் ஸ்விட்ச் போட்டார் போல் என் மகளின் அழுகை நின்றது.

 

 

“அவிம்மா! அந்த ஃபோட்டோஸ் அனுப்பினேனே பார்த்தியா?!” என நான் கேட்டதும் என் மகளின் முகம் சுருங்கியது.

 

 

“ப்பா! விளம்பர மாடல் மாதிரி ஃபோட்டோவா அனுப்பி வைக்காதே! எனக்கு இதெல்லாம் பிடிக்கலை. எனக்குப் பிடிச்ச மாதிரி ஒருத்தரை மீட் பண்ணும் போது உன்கிட்டே சொல்லாமல், யார்க்கிட்டே சொல்லப் போறேன்.?!” எனச் சொன்னாள்.

 

இருந்தாலும் எனக்கு பயமாக இருந்தது. என்னைப் போல் ஒருவனை என் மகள் தேர்ந்தெடுத்துவிட்டால்? சம்யூ வாழ்க்கையைப் போல் என் மகள் வாழ்க்கையும் மாறிவிட்டால்? அப்படியொரு நிலையில் என் மகளைப் பார்க்கும் தைரியம் என்னிடம் சுத்தமாக இல்லை. என் மகளின் வாழ்க்கைப் பற்றிய பயம் மட்டுமே கொஞ்ச காலமாய் என் மனதைக் குடைந்துக் கொண்டிருந்தது.

 

 

“விக்ரம்! அவந்தி ஒண்ணும் குழந்தை இல்லை. அவளுக்கு யாரை தேர்ந்தெடுக்கணும்? அவளோட தனித்தன்மையைப் பாதிக்கிற மாதிரி அந்த உறவு இருந்தால், என்ன முடிவு எடுக்கணும்ன்னு அவளுக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அவ ஒரு டாக்டர் அதை முதலில் ஞாபகம் வச்சுக்கோ! நீ இன்னும் மாறவே இல்லையா விக்ரம்.? கொஞ்சமாவது அவந்தியைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணு.”

 

இடையிட்டு என் மகளுக்குப் பரிந்து வந்தாள் சமுத்ரா. சமுத்ரா சொல்வது எனக்குப் புரிந்தாலும், என் மனதில் பயம் அப்படியே தான் இருந்தது. ஆனாலும் வேறு வழியின்றி,

 

 

“அப்பாவைப் பார்க்க எப்போடா வருவே?” அவள் மனநிலையை மாற்ற கேள்வி கேட்டேன் நான்.

 

 

“எப்போவும் போலத்தான்ப்பா! சென்னையில் கான்ஃப்ரன்ஸ் அட்டண் பண்ண வர்ரேன் ஒருமாசம் உன்னைத் தொல்லை பண்ணாமல் போக மாட்டேன்.!” என அவந்தி சொன்னதில் என் உதடுகள் புன்னகையில் விரிந்தது.

 

 

“வா.. வா..!”

 

 

“அதுக்கு முன்னாடி, நீ உன்னை சேஞ்ச் பண்ணிக்கோப்பா! வெள்ளை தாடியும் மீசையும் நல்லாவே இல்லை.நல்லா யங்கா, எனக்கு தம்பி மாதிரி இருக்கணும். இந்தக் கண்ணாடியெல்லாம் தூக்கி போட்டுட்டு லென்ஸ் போட்டுக்கோ! சமிம்மாவைப் பாரு, இப்போவும் எனக்கு தங்கச்சி மாதிரி தான் இருக்காங்க!” என என் மகள் சொன்னதும், என் பார்வை என் மகளின் பின்னால் வந்து நின்ற சமுத்ராவின் மீது படிந்தது.

 

 

“அப்பா நீ சமிம்மா கிட்டே பேசிட்டு இரு.. எனக்கு வேலை இருக்கு.. பை..!” கையை ஆட்டி விடைபெற்று என் மகள் சென்றுவிட சமுத்ரா மடிக்கணினியின் முன் வந்து அமர்ந்தாள்.

 

 

“தேங்க்ஸ்ன்னு ஒரு வார்த்தை பத்தாது சமுத்ரா! ஆனால் அதைத் தவிர, என்கிட்டே வேற வார்த்தைகள் இல்லை. இப்போ என் பொண்ணு, டெல்லியிலேயே பிரபலமான கைனகாலஜிஸ்ட். அது மட்டுமில்லாமல், தாத்தா பாட்டின்னு, உன் அம்மா அப்பாவோட பாசமும் என் பொண்ணுக்கு கிடைச்சிருக்கு. எல்லாத்துக்கும் காரணம் நீ தான் சமுத்ரா. தேங்க்ஸ் அ லாட்..!”

 

 

“இதையே எத்தனை தடவை விக்ரம் சொல்லிட்டே இருப்ப? அவந்தி வளர்ந்துட்டா! இனி நீ அவளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஒரு மகப்பேறு மருத்துவரா, ஒரு உயிரோட மதிப்பு அவளுக்குத் தெரியும். ஒரு கரு உருவாக எத்தனைக் கட்டங்களைத் தாண்டி வரணும்ன்னு அவளுக்குத் தெரியும். அவள் கண்டிப்பா சாதாரண பொண்ணா இருக்க மாட்டா! உனக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா அவள் குளவியின் முட்டைகளைச் சுமக்கிற கம்பளிப்புழு இல்லை. அவள் பட்டாம்பூச்சியாய் சிறகை விரிச்சுட்டா!”

 

 

“நீ அவந்தியை நல்லா பார்த்துப்பேன்னு எனக்குத் தெரியும் சமுத்ரா! நான் எற்கனவே பல முறை இதை கேட்டுட்டேன். ஆனாலும் திரும்ப கேட்கிறேன்.. அவந்தியால் தான் நீ கல்யாணம் பண்ணிக்காமல் இருக்கிறாயா? அவந்தியை உன்கிட்டே கொடுத்து உன் வாழ்க்கையை காவு வாங்கிட்டேனோன்னு எனக்கு கவலையாய் இருக்கு!”

 

 

“நானும் ஏற்கனவே சொல்லிட்டேன் விக்ரம்! ஒருவேளை எனக்கு கல்யாணம் பண்ணணும்ன்னு தோணிருந்தா கண்டிப்பா பண்ணிருப்பேன். அதற்கு நிச்சயமாய், நீயோ, அவந்தியோ தடையாய் இருந்திருக்க மாட்டீங்க! அவந்திக்காக கல்யாணம் பண்ணணும்ன்னு நினைச்சிருந்தால், ,நான் உன்கிட்டேயே நேரடியாய் கேட்டிருப்பேன். எனக்கு இன்னொரு ஆணோடு என் வாழ்க்கையைப் பகிர்ந்துக்கிற பொறுமையோ, பக்குவமோ இல்லை. ஒருவேளை கல்யாணம் பண்ணியிருந்தால், குழந்தைக்காக பண்ணியிருக்கலாம். ஆனால் நான் பெறாத குழந்தையாய் அவந்தி இருக்காளே! அப்பறம் எதுக்கு கல்யாணம்? நான் நானாக இருப்பதில் தான் சந்தோஷமாய் நிம்மதியாய் இருக்கேன். உனக்கு எந்தக் குற்றவுணர்வும் தேவையில்லை விக்ரம்.!” சமுத்ரா சொன்னதும் எனக்குள் ஏதோ பாரம் நீங்கியதைப் போல் ஓருணர்வு.

 

 

“தேங்க்ஸ் சமுத்ரா!” அவள் எதிர்பார்க்கவில்லை எனத் தெரிந்தும், அவளுக்கு நன்றி தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

 

மனம் நிம்மதியாக இருந்தது. என் மகள் என்னைக் காண வரும் நாளுக்காய் காத்திருக்கத் துவங்கியிருந்தேன். மகளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமென மனம் திட்டமிடத் துவங்கியிருந்தது. என் மகள் வளர்ந்த இத்தனை வருடங்களில், நிறைய படங்கள், பாராட்டுகள், நிறைய விருதுகள், ஏன் தேசிய விருது கூடக் கிடைத்திருந்தது.

 

ஆனால் எந்த விருதுமே என் மகள் அப்பா என அழைக்கும் ஒற்றை விளிப்பிற்கு ஈடாகாது. இத்தனை வருடங்களில் உறவுகளின் அத்தியாவசியம் உணர்ந்திருந்தேன். கொஞ்சம் முன்னாலேயே உணர்ந்திருந்தால், சம்யூவோடு காதலாக வாழ்ந்திருக்கலாம். ஆனால் சம்யூவின் மறைவு தானே, என் கண்களைத் திறந்து, அத்தனையும் உணர வைத்தது. என் மகளுக்காவது நல்ல தகப்பனாய் இருக்கிறேனே என்றெண்ணி என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

 

 

“குளியலறையில் ஹீட்டரை சரி செய்து வைக்க வேண்டும்!”

 

 

“அவந்திக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது. மளிகைப் பொருட்கள் வாங்கி வைக்க வேண்டும்.!”

 

 

“அவள் கேட்ட ஐ ஃபோனை அவளுக்கு சர்ப்ரைஸாக வாங்கி வைக்க வேண்டும்.!” என திட்டமிட்டபடியே காபியைக் கலந்துக்கொண்டு வந்து மெத்திருக்கையில் அமர்ந்தேன்.

 

“உன் பொண்ணு உனக்கு பெருசு தான்.. இல்லையா விக்ரம்?”என்ற குரல் கேட்டு பக்கவாட்டில் திரும்பினேன்.

 

 

“நீயும் எனக்கு பெருசு தான் டி! அது என்ன உன் பொண்ணு?, நம்ம பொண்ணுன்னு சொல்லு டி! நம்ம பொண்ணு பார்த்தியா கைனகாலஜிஸ்ட் ஆகிட்டா! ரொம்ப பெருமையாய் இருக்கு சம்யூ! இதெல்லாம் பார்க்க நீ எங்கக் கூட இருந்திருக்கலாம்..!” என ஏக்கமாகச் சொன்னேன்.

 

 

“இப்போ மட்டும் என்ன..? எல்லாத்தையும் பார்த்துட்டு தானே இருக்கேன்.. நான் எப்போவும் உன் கூடத்தான் விக்ரம் இருக்கேன்.!” என்ற சம்யூவின் குரல் கேட்ட நான் சமாதானமாக, என் பக்கத்திலேயே அரூவமாய் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் மனைவி சம்யுக்தா.

 

யார் கண்ணுக்கும் அவள் தெரியாமல் போயிருக்கலாம். இந்த பிரபஞ்சத்தில் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் அவள் என்னோடு தினமும் இதே வீட்டில் என்னோடு சிரித்துப் பேசி வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறாள் என் இரகசிய காதலியாய்..

 

 

“போ.. அல்லது போய் வா!

இப்போதிருந்து எதுவும் நமதல்ல..

எல்லாம் உனது..

இனியுன் வானம்..

இனியுன் பூமி..

இனியுன் பசுமை..!

வெறுப்போவென மனம் சுருங்காதே..

இதுநாள் வரையிலும் சொந்தம் கொண்டாடினேன்..

இன்று தான் உன்னை,

மிச்சமின்றி விரும்பவே துவங்கியிருக்கிறேன்..!

ஆம் தேவி

அன்பு சிறை செய்யும்..

பேரன்பு விடுவிக்கும்.!”

                                    (யாத்திரி)

முற்றும்..

 

கதை நிறைவுற்றது மக்களே! இந்தக் கதையோடும் என்னோடும் தொடர்ந்து பயணித்து, கருத்துப் பகிர்ந்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கதை அருமை. விக்ரம் காதலித்த மனைவி சம்யுக்தா அவள் தன் இஷ்டப்படி இருக்கவேண்டும் என்று அதன்படி செயல்படுகிறான் மனைவியை விபத்தில் இழக்க பொண்ணை பார்க்கத் தெரியாமல் பார்க்கிறான். சமுத்திரா வந்து குழந்தை அவந்திகா அழகாக பார்த்து அவனுக்கு பெண்களின் மனதை பற்றியும் பட்டாம்பூச்சி வாழ்க்கை வாழவேண்டும் கூட்டுப்புழு போல் இல்லை என்று அழகாக எடுத்து சொல்லுகிறாள். அவந்தியை அவனாகவே விட்டு கொடுக்கும் படி செய்வது அவன் வாழ்ந்த வாழ்க்கை உணர்த்துவது சூப்பர். மகளும் டாக்டர் படித்து முடித்து சம்யூ நினைவாக வாழ்வது அழகு. சமியும் அவந்திகா வளர்ப்பதில் மகிழ்வு கொண்டு வாழ்வது அழகு. முடிவு அருமை. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்.

    1. Author

      நெஞ்சார்ந்த நன்றிகள் கலைமா ❤ உங்களின் தொடர் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்ற வார்த்தையைத் தவிர என்னிடம் வேறொன்றும் இல்லை. நன்றிகள் கலை மா ❤