Loading

 

ஜகதீஸ்வரியும் வீராவும் வீட்டுக்கு வந்தனர்.

“நான் எதாவது செய்யுறேன். சாப்பிடலாம்” என்றவன், உடனே சமையல் வேலையை ஆரம்பித்தான்.

“வேலை எல்லாம் எப்படி போகுது வீரா?”

“எப்பவும் போல தான்”

“அதெல்லாம் பார்க்காம இங்க நல்லா இருக்கு தெரியுமா? ஆனா அப்பப்ப அதையும் கேட்டுக்க வேண்டியிருக்கு”

“இங்கயே தங்குற முடிவுல இருக்கீங்களா?”

“உன் அப்பத்தா கூட வர்ரேன். அது வரை நல்லா தூங்கி எந்திரிச்சு, ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கதே நல்லா இருக்கு. டாக்டர் கிட்ட போனேன். பிரஸ்ஸர் எல்லாம் குறைஞ்சு நல்லா இருக்கேன்னு சொல்லுறாரு. நைட் நல்லா தூக்கம் வருது. ஊர் கதை பேசிட்டு உட்கார்ந்துருக்கது அவ்வளவு நிம்மதியா இருக்கு வீரா.”

“அப்ப நல்லா ரெஸ்ட் எடுத்துட்டே வாங்க” என்றவன், இருப்பதை வைத்து சமைத்து முடித்தான்.

சாப்பிட்டு பார்த்து விட்டு, “நல்லா செய்யுற வீரா. உன் அப்பத்தா மாதிரியே செய்யுற” என்றார்.

“அவங்க தான சொல்லிக் கொடுத்ததே”

“முதல்ல வேலை பார்த்தப்போவும் நீயா தான் சமைச்சியா?”

“அப்ப நான் சேரிங்ல இருந்தேன். ரெண்டு மூணு பேர் ஃப்ரண்ட்ஸா இருந்தோம். எல்லாருமே சமைப்போம். இப்ப தனியா வீட்டயே வாங்கிட்டேனே? நானே செய்ய வேண்டியது தான்.”

“ஜாக்ஷிக்கு சமைக்கவே தெரியாது. சொல்லி தர்ரேன்னு சொன்னாலும், பிடிக்கலனு சொல்லிட்டா. அவள கட்டுனா நீ தான் அவளுக்கு சமைச்சு போடனும்”

“சமைக்க வேற ஆள பார்த்துக்க வேண்டியது தான்”

“எதே?”

“சமையலுக்கு யாரையாச்சும் வச்சுட்டு, நாங்க ஆஃபிஸ் வேலைய பார்க்க போகனும்ல? அத சொன்னேன். ஏன் இப்படி சாக் ஆகுறீங்க? நீங்களே கொடுத்தாலும் எனக்கு ஜாக்ஷி தவிர யாரும் வேணாம். போதுமா?”

“அது. தப்பி தவறி கூட அவ முன்னாடி வாய விட்டுறாத. உன்னை கொன்னுடுவா. அவ அப்பன் பண்ணத இன்னைக்கு வர ஜீரணிக்க முடியாம இருக்கா. பாவம்.”

“அவர் செஞ்சது துரோகம். வீட்டுல புள்ளைய வச்சுட்டு, வெளியில துரோகம் பண்ணி.. ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல”

“ஆனா.. டைவர்ஸ் வாங்குனப்புறம் என் கிட்ட வந்து பேசுனான்.”

“என்னனு?”

“உங்க மகளுக்கு நான் துரோகம் பண்ணிட்டதா நினைக்கிறீங்க. உலகத்த பொறுத்தவரை அது தான் உண்மை. தாலி கட்டுன பொண்டாட்டி அவ தான? ஆனா என் மனசுலயோ, எங்க வாழ்க்கையிலயோ அவ பொண்டாட்டியா நடந்துக்கல. என்னை ஒரு புருஷனா நடந்துக்கவும் விடல. நான் அவளோட வேலைக்காரன் மட்டும் தான். ஈகோ பிடிச்ச மனசு, ஒரு கட்டத்துக்கு மேல அடங்கல. என்னை தலையில தூக்கி வச்சு ஆடுற ஆள் வேணும்னு தாவிடுச்சு. என்னை கொஞ்சமாச்சும் உங்க மக புருஷனா நினைச்சுருந்தா, கடைசி வரை என் மகளுக்காக மட்டுமே வாழ்ந்துட்டு போயிருப்பேன். கால்ல போட்டு மிதிக்கும் போது, என்னாலயும் என்ன செய்ய முடியும்? பண்ணது தப்பில்லனு சொல்ல மாட்டேன். ஆனா அதுக்கு ரெண்டு பேருமே காரணம் தான்.

அப்படினு சொல்லிட்டு, ஜாக்ஷிய மேனகா பார்த்துக்க மாட்டா. அவள கூட்டிட்டு போய் கஷ்டப்படுத்துறத விட, உங்க கிட்டயே இருக்கட்டும்னு விட்டுட்டு போயிட்டான்”

வீராவிடம் இதற்கு பதில் இல்லை. அமைதியாக இருந்தான்.

“காதம்பரிக்கு தலைக்கணம். சிற்றம்பலத்துக்கு ஈகோ.”

“அதுல காயப்பட்டது ஜாக்ஷி தான்” என்று பெரு மூச்சோடு சொன்னான்.

“ஆமா. சிற்றம்பலத்துக்கு என் மேல நிறைய மரியாதை. அதான் காதம்பரிய மீறி, என் பேரையே ஜாக்ஷிக்கு வச்சான். என் வீட்டுக்காரு கூட சொல்லி பார்த்தாரு. முடியாதுனு சண்டை போட்டு வச்சான். முழு பேர சொல்லாம பாப்பானு கூப்பிடுவான். அப்புறம் வளர வளர பேர சுருக்கி ஜாக்ஷி ஆகிடுச்சு. அதான் போகும் போது இதான் நடந்துச்சுனு சொல்லிட்டு போயிட்டான்”

“ஜாக்ஷிக்கு இதெல்லாம் தெரியுமா?”

“தெரியாது. நான் எதுவும் சொல்லிக்கல. அவ இடத்துல அவ கோபம் நியாயமானது. சும்மா விளக்கம் கொடுத்து அவள மன்னிக்க சொல்லுறதுலாம் நடக்காத காரியம்”

“உண்மை தான்”

“சிற்றம்பலம் உயிர விட்டு தப்பிச்சுடான். இந்த காதம்பரி இவ கிட்ட மாட்டிருக்கா”

“ரொம்ப பண்ணிட்டா உங்க பேத்தி. அவங்கள எந்திரிக்கவே விடல”

“அவள வேணாம்னு தூக்கி போட்ட கோபம் இருக்கும்ல? நாம தடுக்க முடியாது. வேடிக்கை தான் பார்க்கனும். பார்ப்போம்.”

சாப்பிட்டு முடித்து விட்டு ஜகதீஸ்வரி ஓய்வெடுக்க செல்ல, ஜாக்ஷி வீராவை அழைத்தாள்.

“ஜக்கம்மா”

“கல்யாணம் முடிஞ்சதா?”

“முடிஞ்சது.”

“சத்தமே இல்லாம அமைதியா இருக்கு?”

“வீட்டுல இருக்கேன்” என்றவன் நடந்ததை சொல்ல, “தப்பிச்சுட்ட. இல்லனா உன்னை அங்க இருந்து துரத்தி விடனும்னு தான் கால் பண்ணேன்” என்று சிரித்தாள்.

வீராவும் சிரித்து விட்டான்.

“அதுங்க பேசுங்க. நீயும் பஜனை கேட்குற மாதிரி நிப்பனு நினைச்சேன்”

“இந்த தடவ எனக்கு அங்க இருக்க பிடிக்கல. என்னை தெரிஞ்ச சிலர் கிட்ட மட்டும் பேசிட்டு ஓடி வந்துட்டேன்.”

“என் கூட சேர்ந்ததால உனக்கும் கொஞ்சூண்டு ரோசம் வந்துடுச்சுடா”

“நான் எங்கடி சேர்ந்தேன்?”

“டேய்!”

“என்ன?” என்று வீரா சிரிக்க, “வச்சு தொலை. நான் ஆஃபிஸ் கிளம்பனும்” என்றாள் கோபமாக.

“சரி பை. ஈவ்னிங் கிளம்பிடுவேன். அப்ப கால் பண்ணுறேன்” என்று விட்டு வைத்து விட்டான்.

சற்று நேரம் வீட்டை கவனித்து மதியத்துக்கு சமைக்க தயாராக, லட்சுமி அழைத்தார்.

“அங்க எதையும் செய்யாத. நான் கொடுத்து விடுறேன் உங்க ரெண்டு பேருக்கும்” என்றதும் சம்மதித்து விட்டான்.

நன்றாக உறங்கி ஓய்வெடுத்து, லட்சுமி அனுப்பிய உணவை சாப்பிட்டு முடித்து கிளம்ப காத்திருக்க, அப்போது தான் லட்சுமி வந்தார்.

“நாளைக்கு தான் வருவீங்கனு நினைச்சேன்?”

“இதுக்கு மேல அவங்களே பார்த்துக்கட்டும்னு வந்துட்டேன். கோவிலுக்கு போயிட்டு வந்தாச்சு. இனி எதுக்கு அங்க? நீ ஊருக்கு கிளம்பிட்டியா?”

“ம்ம். இன்னும் கொஞ்ச நேரத்துல பஸ் ஏற போகனும். நீங்க எப்ப அங்க வர்ரீங்க?”

“நான் இன்னும் நாலஞ்சு நாள் இங்க தான் இருக்கனும் போல”

“ஏன்?”

“கடை வாடகை, குத்தகை பணம் ரெண்டும் வந்து சேரல. ஆளு இருந்து கேட்டாலே இழுத்தடிக்கிறானுங்க. அங்க போயிட்டா வரவே வராது. அத வாங்கி வச்சுட்டு அப்புறமா வர்ரேன்.”

“எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் இந்த ஊர விட மனசு வரல? ஆனா ஒரு வாரத்துல நீங்க வந்து தான் ஆகனும் சொல்லிட்டேன்.” என்று மிரட்டி விட்டு, சென்னையை நோக்கிக் கிளம்பி விட்டான்.

“நந்தி மாதிரி நடுவுல நாம நிக்க வேணாம்னு சொல்லிட்ட. இப்ப அங்க போகவும் முடியல. இங்க இருக்கவும் முடியல” என்று லட்சுமி பெருமூச்சு விட, “இந்த மாசம் போயிடுவோம் விடு” என்று தேற்றினார் ஜகதீஸ்வரி.

வீரா ஜாக்ஷிக்கு இடையே நந்தியாக இருக்கவும் மனமில்லை. அதே நேரம் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லையே என்ற பதட்டமும் குறையவில்லை. என்னசெய்வதென்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருந்தார் லட்சுமி.

*.*.*.*.*.*.

நாட்கள் பறந்தது.

அன்றோடு நிஷாந்தினி சேகருக்கு திருமணம் முடிந்து, ஆறு நாட்கள் ஆகியிருந்தது. உறவுகளின் விருந்துகள் எல்லாம் அப்போது தான் ஓரளவு குறைந்து இருக்க, தாமரை சமைக்கும் போது வந்து நின்றாள் நிஷாந்தினி.

“நானும் செய்யவா அத்த?”

“எதுக்குமா? நானே பண்ணிடுறேன்”

“நீங்க நல்லா சமைக்கிறீங்க. எனக்கு அவ்வளவு வராது. வேணும்னா நான் இந்த பொரியல பார்க்குறேன். எப்படினு நீங்க சொல்லுங்க செய்யிறேன்” என்று அவளாகவே பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.

நிஷாந்தினி படிப்பை முடித்து விட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து கொண்டிருக்கிறாள். அருகே இருக்கும் கல்லூரி தான்.

மிகவும் தைரியமான பெண். சேகரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்ததால், உடனே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி மனைவியாகி விட்டாள். சேகரும் அவள் மீது பைத்தியமாக இருந்தான்.

தாமரையின் அமைதியான குணம், அவளுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அதட்டி பேசவில்லை. அவளை அதிகாரம் செய்யவில்லை. அவளுடைய விருப்பத்திற்கு விட்டு விட்டார்.

அதனால் தாமரையோடு ஒட்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

சமையல் முடித்து எல்லோரும் சாப்பிடும் போது, “நிஷா தான் இதெல்லாம் பொறிச்சா” என்று வேறு சொல்ல, அவளுக்கு தாமரையை நினைத்து பெருமையாக இருந்தது.

அன்று இரவு நிஷாந்தினியை அறைக்கு அழைத்தார் தாமரை.

“என்னத்த?”

“இந்தா.. வச்சுக்கோ” என்று சாவியை கொடுத்தார்.

“எந்த சாவி இது?”

“வீட்டோட சாவியும் பீரோவோட சாவியும். ஒரு செட் உன் மாமா கிட்ட இருக்கு. இது உனக்கு”

“எனக்கா?”

“ஆமா. இனிமே எல்லாத்தையும் நீ தான் பொறுப்பா பார்த்துக்கனும்”

“எனக்கு இதெல்லாம் வராது. நீங்களே பார்த்துக்கோங்களேன்”

“எனக்கடுத்து நீ தான்மா இந்த வீட்டு நிர்வாகி. அதான் கொடுக்கிறேன். கொஞ்ச கொஞ்சமா கத்துக்க. ஒரு பிரச்சனையும் இல்ல”

“என் கிட்ட கொடுத்துட்டு நீங்க என்ன செய்வீங்க?”

“நிஷா பணம் எடுத்து கொடுமானு கேட்டா நீ எடுத்து தர மாட்டியா?”

“தரலாம் தான்”

“உன் கிட்ட பொறுப்பு இருந்தா தான், சேகரும் பொறுப்ப கையில எடுப்பான். நாங்களே எவ்வளவு நாள் பார்க்க முடியும் சொல்லு? பத்திரமா வச்சுக்க. இப்ப போய் தூங்கு” என்று கூறி அனுப்பி வைத்தார்.

*.*.*.*.*.*.

சுபத்ராவுக்கு அறுவை சிகிச்சைக்கான நாளை குறித்து இருந்தனர். மருத்தவமனையில் அனுமதித்ததிலிருந்து, சுபத்ரா அமைதியாக இருக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்குள் இருந்த பயத்தை பேசிப்பேசி சரி கட்டியிருந்தனர் வீராவும் ஜாக்ஷியும்.

“நைட் நீ இரு. நான் வீட்டுக்கு போறேன்.” என்று விட்டு, வீரா கிளம்பி விட்டான்.

ஜாக்ஷி மட்டும் சுபத்ராவுடன் தங்கினாள்.

வீரா வீடு வந்து சேர, தாமரையிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுக்கவே கூடாது என்று நினைத்தான். ஆனால் மனம் சற்று இளக்கமாக இருந்த நேரம், ஒதுக்க முடியாமல் எடுத்து விட்டான்.

“ஹலோ”

“வீரா..”

“சொல்லுங்க”

“நல்லா இருக்கியாபா?”

“ம்ம்”

“என் மேல இன்னும் கோபம் குறையலயா?”

“அப்படி எதுவும் இல்ல”

“என் தப்பு தான். உன்னை அப்படி விட்டுருக்க கூடாது. உன்னை என் வாயாலயே சபிச்சுருக்கவும் கூடாது. மன்னிச்சுடுபா”

அவரது கலங்கிய குரல் அவனை காயப்படுத்த, அமைதியாக கண்மூடித்திறந்தான்.

“விடுங்க. அத ஏன் இப்ப பேசிட்டு? இப்ப எதுக்கு கால் பண்ணீங்க?”

“கவிதாவ பத்திரமா பார்த்துக்கனு சொல்ல கூப்பிட்டேன்”

“ஏன்?”

“அங்க எதோ ஒரு பையன் வம்பு பண்ணுறானாமே..”

“அத சரி பண்ணியாச்சு.”

“இனிமேலும் பார்த்துக்க”

“ம்ம்”

“அம்மாவ மன்னிச்சுட்டியா?”

“ம்ம்”

“அம்மானு சொல்ல மாட்டியா?”

அமைதி காத்தான்.

“சரி நீ சொல்ல வேணாம். நீ என்னை மன்னிச்சது போதும். இன்னும் ஒன்னு சொல்லனும்.. யாருக்குமே நான் சொல்லாம எனக்குள்ள மட்டுமே வச்சுருந்த ஒன்னு… நான் பண்ணது தப்பு தான் வீரா. உன்னை.. உன்னை ஒதுக்கி இருக்க கூடாது. ஆனா உன் அப்பாவோட அடையாளமா என் கிட்ட இருக்க ஒன்னே ஒன்னு, நீ மட்டும் தான். இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வாழுனு அத்தை சொல்லும் போது, தப்பா தோணல. பண்ணிக்கிட்டேன். ஆனா உன்னை பார்க்கும் போதெல்லாம், உன் அப்பா ஞாபகம் வர்ரத தடுக்க முடியல. இவருக்கு துரோகம் பண்ணுறோமோனு நினைச்சு, உன்னை விட்டு விலகி போய், மொத்தமா நான் பெத்த புள்ளைய இழந்துட்டு நிக்கிறேன். எத்தனை பிள்ளை பெத்தாலும், மூத்த புள்ளை தான்டா தாய்க்கு எல்லாமே. உன்னை சுமந்த நாளையும் பெத்த நாளையும் மறக்க முடியாது. ஆனா உன்னை இப்ப இழந்துட்டேன்னு நினைக்கும் போது, தாங்க முடியல. அம்மாவ மன்னிச்சுடுடா. எதையோ செய்ய நினைச்சு உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். மன்னிச்சுடு”

அழுகையோடு அவர் பேசப்பேச, வீராவின் மனம் உடைந்தது. திருமணம் முடிந்து, வீரா பிறந்து, சுருளி இறந்து, மீண்டும் திருமணம் செய்யும் போது, தாமரை இருபதுகளில் தான் இருந்தார். அந்த வயதில் வாழ்வு அழிய வேண்டாம் என்று தான், லட்சுமி அனைவரையும் எதிர்த்து இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். அந்த வயதில் தாமரைக்கு என்ன பக்குவம் வந்திருக்க போகிறது? இயல்பிலேயே தாமரை ஒரு தலையாட்டி பொம்மை தான். ஆட்டி வைத்தார்கள் ஆடிக் கொண்டிருந்தார். அதை ஓரளவு வீராவும் புரிந்து கொண்டிருந்தான். இப்போது அவர் தரப்பு விளக்கமும் கிடைக்க, மனதில் பாரம் ஏறி தொண்டை அடைத்தது.

கைபேசியை மறைத்து தொண்டையை சரி செய்து கொண்டவன், “விடுங்க. எல்லாமே முடிஞ்சு போச்சு. இத இனி பேசியும் பிரயோஜனம் இல்ல. அழாம இருங்க” என்றான்.

கண்ணை துடைத்துக் கொண்டார் தாமரை.

“சரிபா அழல.. அப்புறம் ஒன்னு சொல்ல வந்தேன். ஜாக்ஷி ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா. உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா. அத்த சொல்லும் போது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. நீங்க எப்ப கல்யாணம் பண்ணாலும் சரி. என் ஆசிர்வாதம் இருக்கும்”

“ம்ம். அவ நல்லவ தான்”

“ஆமா.. ரொம்ப நல்ல பொண்ணு.. சரி சரி நீ தூங்க போறியா? நான் வச்சுடவா?”

“ம்ம்”

“சாப்பிட்டியா?”

“ம்ம் நீங்க?”

“சாப்பிட்டேன்பா.. என் மருமக கூட நின்னு வேலை செஞ்சா.. மனசார சாப்பிட்டேன்”

“ஓ.. சரி”

“சரி நீ தூங்கு நான் வைக்கிறேன்”

“ம்ம்”

வைத்து விட்டு படுத்தவனுக்கு, வெகுநேரம் தூக்கம் வரவில்லை. தாமரை மனதில் இருந்து கொட்டியதை அவனால் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இனி இதைப்பேசியோ நினைத்தோ பிரயோஜனமில்லை என்று உறங்கி இருந்தான்.

நல்ல உறக்கத்தில் இருக்க, அதிகாலை ஐந்து மணிக்கு ஜகதீஸ்வரியிடமிருந்து அழைப்பு வந்தது.

தூக்கத்துடனே எடுத்து காதில் வைக்க, “வீரா” என்றார்.

“சொல்லுங்க பாட்டி?”

“வீரா.. இங்க.. உன் அம்மா இறந்துட்டாடா” என்றதும் பட்டென விழித்தான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
26
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. “தவறு என்பது தவறி செய்வது
      தப்பு என்பது தெரிந்து செய்வது
      தப்பு செய்தவன்
      திருந்த பார்க்கணும்..
      தவறு செய்தவன்
      வருந்தியாகணும்…”

      😀😀😀
      CRVS (or) CRVS 2797

    2. தாமரை மனதில் பாரம் குறைந்து விட்டது சூப்பர். வீரா புரிந்து கொண்டான்.