வானவங்குடி!
வானத்து தேவர்களால் ஆசிர்வாதிக்கப்பட்ட ஊர்.
இயற்கை தன் இரு கரங்களை விரித்து ஆசையாய் வாறி அணைத்து கொண்ட இடம் அது. ஆதலால் செழிப்புக்கு பஞ்சம் இல்லாமல் பசுமை விரிந்து கிடந்தது.
திராட்சை கொத்தாக பறவைக்கூட்டம் ஒவ்வொரு மரத்தின் மேலும் அமர்ந்து இருக்க, அந்த ஊரே ஒரு மினி வேடந்தாங்கல் போல இருந்தது.
பறவைகளின் கீச்சு குரல் சப்தம் அந்த காலை நேரத்தை மயக்கும் சிருங்கார சங்கீதமாய்.
மாசோடு கூடல் கொள்ளாத தென்றல் காற்று அந்த ஊர் மக்களின் நுரையீரலுக்கு அருமருந்தாய்..
அந்த ஊரில் பசுமை போர்வை விலகாமல் இருக்க காரணம் எந்த வீட்டிலும் தொலைக்காட்சி இல்லை, யார் கைகளிலும் அலைப்பேசி இருக்காது
மொத்தத்தில் அலைவீச்சில் இயங்கும் எல்லா பொருட்களையும் இந்த ஊர் மக்கள் உபயோகிப்பது இல்லை.
ஏதாவது முக்கியமான செய்தியை பார்க்க வேண்டுமா?
இரண்டு தெருவிற்கு பொதுவாக சேர்த்து ஒரு தொலைக்காட்சி இருக்கும். அதில் பார்த்துக் கொள்ளலாம்.
ஏதாவது அவசரமா?
ஊர் தபால் நிலையத்தில் இருக்கும் பொது தொலைப்பேசியை தான் உபயோகிக்க வேண்டும்.
அப்படி தான் அவசரமாக பேசுவதற்காக பொது தொலைபேசி இருக்குமிடத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்தான் அவன்.
திகழ்முகிலன்!
இரண்டு சூரியனை வெட்டி கண்களில் வைத்து இருப்பவன்.
முகத்தின் மேல் முளைத்திருக்கும் அழகான புல்வெளி அந்த தாடி.
வடிவான தாடை… அதன் இறுதியில் பார்ப்பவரை அபாயத்தில் தள்ளும் சுழல் போல ஒரு குட்டி சுழிவு.
கட்டுமஸ்தான தேகத்திற்கு சொந்தகாரன்.
உருவத்திற்கும் இதழ்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் எப்போதும் புன்னகையை சுமந்து இருக்கும் இனியாளன்.
அதே அகமலர்ந்த சிரிப்போடு தபால் நிலையத்திற்கு வந்தவன், தன் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைக்க போகும் அந்த தொலைப்பேசி எண்ணை சுழற்றினான்.
மறுமுனையில் அழைப்பு எடுக்கப்பட்டதும் எதைப் பற்றியும் பேசாமல் நேராக விஷயத்தின் மையப்புள்ளிக்கு வந்துவிட்டான்.
“சங்கரா எனக்கு வேலை பார்த்துட்டியா? பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்க யாராவது ஒத்துக்கிட்டாங்களா?” என்றவனின் குரல் தடதடத்து போகும் ரயிலின் வேகத்திற்கு இணையாக இருந்தது.
அவனுடைய அந்த அவசரத்திற்கு காரணம், இப்போது அவனுக்கு அவசரமாக பத்து லட்சம் தேவைப்படுகின்றது.
இருபது லட்ச ரூபாய் பணத்தை பதினைந்து வருடங்களுக்குள் அடைத்துவிடுவதாக பத்திரத்தில் கையொப்பமிட்டு கடன் வாங்கி இருந்தார் திகழ்முகிலின் தந்தை ராஜா.
ஆனால் பணம் வாங்கி புதிதாக முதலீடு செய்து தொழில் ஆரம்பித்த இரண்டே மாதத்தில் ராஜா இறந்துவிட, அந்த இருபது லட்ச கடன் மொத்தமும் திகழின் மீது விழுந்துவிட்டது.
பதின் மூன்று வயதில் அந்த கடனை சுமக்க ஆரம்பித்தவன், இதோ இருபத்து எட்டு வயதில் கூட அந்த கடனின் பாரம் தாங்காமல் மூச்சு முட்டுகின்றான்.
இன்னும் இரண்டு நாள் தான் அவனுக்கு கெடு… வரும் நாற்பத்து எட்டு மணி நேரத்திற்குள் அந்த கடனை முழுதாக அடைக்காமல் விட்டுவிட்டால் அதுவே நாற்பது லட்சம் கடனாக மாறிவிடும்.
பதினைந்து வருடங்களாக உழைத்த அவனால் இருபது லட்ச கடனில் வெறும் பத்து லட்சத்தை தான் அடைக்க முடிந்து இருந்தது.
அவர்கள் ஊரில் பெரிதாக யாரும் ஊரை விட்டு வெளியூர் சென்று வேலை செய்ய மாட்டார்கள். ஒரு வருடத்தில் அதிகமாக ஒருவர் தான் ஊரை விட்டு வெளியே போக முடியும்.
சொந்த ஊரிலேயே பல பல வேலைகளை பார்த்தவனால் அதிகமான பணத்தை ஈட்ட முடியவில்லை.
ஒரு நாளில் கிட்டத்தட்ட மூன்று நான்கு வேலைகள் மாறி மாறி பார்ப்பான். ஆனாலும் அவனால் மாதத்தில் பத்தாயிரத்திற்கு மேல் ஈட்ட முடியாது.
இந்த கடனை எப்படி அடைப்பது என்ற மனக்கலக்கத்தில் இருந்த போது தான் அந்த ஊரை விட்டு ஒரு வருடத்திற்கு முன்பாக வெளியூருக்கு சென்று சம்பாதிக்க போய் இருந்த இவனுடைய நண்பன் சங்கரனைப் பார்த்தான்.
வெளியூரில் வேலை செய்தால் பணம் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும் என்ற விஷயம் தன் நண்பனின் மூலம் தெரியவர அவனிடம் வேலை பார்த்து தர சொல்லி கேட்டு இருந்தான்.
ஏதாவது வேலை கிடைத்துவிடுமா? என்ற திகழின் அவசரம் புரிய சங்கரன் மெல்லிய சிரிப்போடு நல்ல செய்தியை சொல்ல ஆரம்பித்தான்.
“திகழா, உனக்கு வேலை கிடைச்சுடுச்சு டா… ஒரு வருஷத்துக்கு டிரைவரா நீ கார் ஓட்டுறதுக்கு பத்து லட்சம் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க” என்ற செய்தியை கேட்டு இவனுக்கு மகிழ்ச்சியும் சந்தேகமும் ஒரு சேர வெளிப்பட்டது.
“ஏதே கார் ஓட்ட பத்து லட்சம் ரூபாய் தராங்களா? நல்லா விசாரிச்சு பார்த்தியா?” என்றான் முகில் தாடையை சொறிந்தபடி.
“திகழு… பணம் அதிகம் வந்தா கூட கொஞ்சம் வில்லங்கமும் இருக்கும்… நீ கார் ஓட்டப் போறது புதுசா படத்திலே நடக்க தொடங்கி இருக்கிற தியான்ற பொண்ணுக்கு… அதனாலே நீ கொஞ்சம் ஜாக்கிரதையாவும், அதே சமயம் எந்த விஷயமும் வெளியே சொல்லாம இருக்கிறதுக்காகவும் தான் இந்த பணம்” என்றதும் திகழ் முகத்தின் கோணம் கோணல் மாணலாக மாறியது.
“என்னது நடிகையா… அப்போ அந்த பொண்ணோட குணம் நல்லா இருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு ஒத்து வராது... நீ வேற வேலையைப் பாரு” என்றான் சட்டென்று.
நடிகையா இருந்தா குணம் நல்லா இருக்காது! இதே திகழ்முகிலனின் ஆணித்தரமான எண்ணம். ஆனால் அந்த எண்ணத்தில் ஆணி அடிக்க காத்து கொண்டு இருக்கின்றாளே அங்கு ஒருத்தி.
“திகழா… இதை விட நல்ல வாய்ப்பு உனக்கு அமையாது டா… எதையும் யோசிக்காம சரினு சொல்லு… இல்லை நீ கஷ்டப்பட்டு பத்து லட்சமா குறைச்ச கடன் அப்புறம் நாற்பது லட்சமா மாறிடும். நீ இப்போவே சொன்னா தான் வேகமா அக்ரீமெண்ட் போட்டு பணம் இரண்டு நாளுக்குள்ளே கையிலே கிடைக்கும்”
சங்கரன் பேசிய வாழ்வின் எதார்த்தம் திகழை மெல்ல நிதானிக்க வைத்தது. இப்போது அவனால் முன்பு போல பட்டென்று நிராகரிக்க முடியவில்லை…
திகழின் சூழ்நிலை அவனை சூழ்நிலை கைதியாக கட்டிப் போட, மௌனமாய் நின்றான்.
‘நான் என்ன அவளை கல்யாணமா செஞ்சிக்க போகின்றேன்… இவ்வளவு யோசிக்க? ஒரு டிரைவராக அவளோட ஒரு வருஷம் டிராவல் பண்ண போறேன்’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டவன் இறுதியில் சரி என்ற பதிலோடு அலைப்பேசியை வைத்தான்.
என்ன தான் வருகிறேன் என்று சொல்லிவிட்டாலும் அவன் மனதை ஏதோ ஒரு நெருஞ்சி முள் குத்தி கொண்டே இருந்தது.
நெருடலோடு தன் வீட்டு சாலைக்குள் நுழைந்தவனின் முகம் அங்கே கண்ட காட்சியில் சுருங்கிப் போனது.
அவன் சிறு வயதில் இருந்து தூக்கி வளர்த்த பக்கத்து வீட்டு பெண் வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தாள்.
அவள் பருவம் அடைந்து நான்கு மாதங்களே ஆகி இருக்க துப்பட்டா போடாமல் சாலையில் குனிந்து கோலம் போட்டு கொண்டு இருக்கவும் அவனின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
எதிர் வீட்டில் அமர்ந்து இருந்த வாலிப விடலை ஒன்று இவளை பார்க்கவும் அவனின் பொறுமை எல்லை கடந்து போனது.
“சுஜா… எழுந்துடு” என்றான் பல்லை கடித்துக் கொண்டே…
“என்னணே” எனக் கேட்டபடி அவள் கோலம் போடுவதை நிறுத்திவிட்டு எழுந்து கொள்ளவும் “முதலிலே ஷாலைப் போட்டு பழகு. சில கொல்லிக்கட்டை கண்ணுங்க எப்ப டா துணி விலகும்னே அலைவாய்னுங்க” என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு சொல்லவும் சுஜா சங்கடத்தோடு உள்ளே சென்றுவிட்டாள்.
இவன் பார்த்த கொதிக்கும் பார்வையில், அந்த இளைஞனும் பம்மி கொண்டு வீட்டிற்குள் புகுந்து கொண்டான்.
அவனுக்கு ஆத்திரம் அடங்கவே இல்லை. ஒரு ஆண் பார்க்கின்றான் என தெரியாமல், சுற்றி இருப்பவர்களை கவனிக்காமல் எப்படி ஓரு பெண் அலட்சியமாக இருக்கலாம் என்று சுஜாவின் மீது கோபம் எழுந்தது.
‘முதலிலே வசந்தி அக்கா கிட்டே சொல்லி சுஜாவுக்கு நல்லது கெட்டது சொல்லி தர சொல்லணும்…’ என முணுமுணுத்துக் கொண்டே தன் வீட்டிற்குள் நுழைய, முற்றத்தில் அமர்ந்து இருந்த அவனின் தாய் திலகவதி, திகழையே கூர்மையாக பார்த்தார்.
அந்த பார்வை அவனை மௌனமாக தலை குனிய வைத்தது.
பனி போன்று குளிமையானவனின் குணம் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தகிக்கும் நெருப்பாய் மாறிவிடும்.
அது ஒழுக்கம்!
ஒழுக்கம் தவறுபவர்களை அவனுக்கு அறவே பிடிக்காது. அதிலும் முக்கியமாக பெண்கள் தவறினால் அவன் முகம் அத்தனை ரௌத்திரமாகிவிடும்.
சாலையில் ஒரு பெண் சப்தமாக சிரித்தபடி போனாலே முகத்தை சுழிப்பான்.
‘இப்போ எதுக்கு இப்படி சிரிச்சு வைக்கிறாளுங்க… நாலு பேரு திரும்பிப் பார்க்கணும்ன்றதுக்காகவா?’ என கோபமாக நினைப்பான்.
பெண் என்றால் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன். அவனுடைய இந்த ஒரு குணம் மட்டும் திகழின் தாயை முகம் சுழிக்க வைக்கும்.
அவரும் பிள்ளையின் மனதை எவ்வளவோ மாற்ற முயற்சித்துப் பார்த்துவிட்டார்.
ஆனால் இந்த ஊர் பெண்களுக்கு விதித்து இருக்கும் கற்பு கோட்பாடு என்ற கோட்பாடுகளை கேட்டு வளர்ந்தவன் அவன்… ஆகையால் அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சமும் விட்டு கொடுக்க மாட்டான்.
பெண்களை ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்பவன் தானும் அந்த ஒழுக்கத்திலிருந்து இம்மியளவு நகராமல் இருப்பான்.
இவனின் இந்த குணத்தை ஊரே பாராட்டினாலும் திலகவதிக்கு மட்டும் அந்த குணம் பிடிக்காது. எப்போதும் போல அந்த பிடித்தமின்மை இப்போது அவர் முகத்தில் வெளிப்பட்டது.
“இப்போ எதுக்கு சுஜாவை வெளியே உள்ளே போக சொன்ன?” எனக் கேட்டவர் கொண்டையை முடிந்தவாறே முற்றத்தில் இருந்து எழுந்து நின்றார்.
“அந்த பையன் தப்பா பார்த்துட்டு இருந்தான் மா அதான் சுஜாவை உள்ளே போக சொன்னேன்…” என பதிலளித்தவாறு உள்ளே சென்று தண்ணீரை எடுத்து குடிக்க முற்பட்டான்.
“அப்போ தப்பு பண்ணவனை உள்ளே போக சொல்லி இருக்க வேண்டியது தானே? ஏன் தப்பே செய்யாத சுஜாவை உள்ளே போக சொன்ன” எனக் கேட்க அவன் தொண்டை கமற குவளையை கீழே வைத்துவிட்டு தாயைப் பார்த்தான்.
அவன் தாய் கேட்டது நியாயமான கேள்வி தான்!
ஆனால் அவனிடம் அந்த வினாவிற்கு விடை இல்லை.
அவனுக்கு தாயின் கேள்விகளும் அவர் சொல்ல வருவதன் அர்த்தமும் புரிகின்றது தான், ஆனால் அதை முழுதாக ஏற்கவிடாமல் உள்ளுக்குள் ஊறி கிடந்த போதனைகள் ஒருபுறம் தடுத்து கொண்டு இருந்தது.
மௌனமாய் வெறித்துப் பார்த்த மகனின் மனநிலையை உணர்ந்த திலகவதி, அவனின் அருகே வந்து தலையை வருடியவாறே “வேண்டாம் திகழா… உன் அப்பா பண்ண தப்பையும், இந்த ஊரு பண்ற அதே தப்பையும் நீயம் பண்ணிடாதே…” என்றவரின் குரல் மென்மையாக இருந்தது. ஆனால் வார்த்தைகளோ அழுத்தமாக வெளிப்பட்டது.
“நான் என்ன தப்பு மா பண்றேன்? பொண்ணுனா ஒழுக்கமா அடக்கமா இருக்கணும்லே… அதை எடுத்து சொல்றது தப்பா?” என்றான் தாயின் கண்களை நேருக்கு நேர் பார்த்து.
“பொண்ணுங்களை ஒழுக்கம் அடக்கம்ன்ற வார்த்தைகளை மட்டும் வெச்சு எடைப் போடாதே திகழா” என்றவரின் குரலில் கண்டிப்பின் காரம் சேர்ந்து இருந்தது.
“அப்போ எதை வெச்சு அவங்க குணத்தை அளக்கணும்னு சொல்ல வர்றீங்க?” என்று அவன் கேட்கவும் அவரின் பார்வை ஈட்டியின் கூர்மையாய் மகனைப் பார்த்தது.
“பொண்ணுங்க குணம் என்ன கடையிலே விக்கிற அரிசி சர்க்கரையா அளந்து பார்த்து வாங்க?” என்று அவர் எதிர்க் கேள்வி கேட்கவும் திகழன் திகைத்தான்.
மறுத்து வாதிட இப்போது எந்த பதிலும் இல்லை. இப்படி தாய் பல கேள்விகளை நியாயமாக கேட்பாள், ஆனால் அவனுக்கு அதற்கான பதில் தெரியாது. இந்த சமூகம் இப்படி தான் சொல்லி கொடுத்தது அது சொல்லி கொடுத்தது தான் சரியாக இருக்கும் என்று நம்புவன்.
எப்போதும் தாய் இப்படி கேள்வி கேட்டால் பதில் இல்லாது பேச்சை வேறு விஷயத்துக்கு மடை மாற்றிவிடுவான். அதே போல தான் இன்றும் சட்டென்று பேச்சை மாற்றினான்.
“அம்மா போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு… நம்ம கடனை இன்னும் இரண்டே நாளிலே அடைச்சுடலாம் மா… வேலை கிடைச்சுடுச்சு…” என்று தகவலாக சொன்னவன் தன்னுடைய உடமைகளை எடுத்து வைக்க ஆரம்பித்தான்.
அந்த வார்த்தைகளில் பெற்றவளின் மனம் குளிர்ந்துவிட, “இனியாவது எந்த கடன் சுமையும் இல்லாம நீ சந்தோஷமா வாழணும்” என்று மனதார அவன் உச்சித் தொட்டு முகர்ந்தவர் அவனுடைய உடமைகளை எடுத்து கொள்ள உதவி செய்தவாறே, “எந்த ஊருலே வேலை? என்ன வேலை?” என்று கேள்வி கேட்டார்.
“சென்னையிலே மா… கார் ஓட்டுற வேலை” என்று சொன்னவன் முகம் பிடித்தமின்மையை காட்டியது.
ஆனாலும் அதை வெளிப்படையாக காட்டி கொள்ள முடியாமல் வாங்கிய கடன் அவனை மௌனியாக்கியது. பிடிக்காவிட்டாலும் அவளின் சாரதியாக இருக்க முடிவெடுத்துவிட்டான் அவன்.
திகழ் முகில்கள் வந்து கொண்டு இருக்கின்றது தியா என்னும் தீயை மேலும் எரிய வைக்கவும்… ஆற்றுப்படுத்தி அணைக்கவும்…
அவன் மழை மேகத்தில் இந்த தீ அணையுமா?