ரன்வீரின் குடும்ப மருத்துவருக்கு ரன்வீரின் திருமண விடயம் இப்போது தான் தெரியும்.
இருந்தும் இது அவர்களின் தனிப்பட்ட விடயம் என்பதால் அதனைத் தோண்டித் துறுவவில்லை.
தனக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரிய மகப்பேற்று வைத்தியர் ஒருவரான அவரது நண்பியிடம் விடயத்தைக் கூறி இருவரையும் அனுப்பி வைத்தனர்.
மகப்பேற்று மருத்துவரின் அறைக்கு முன் வந்து நின்றதும், “நீ…ங்க இங்கயே இருங்க. நான் போய் செக் பண்ணிட்டு வரேன்.” எனத் தயக்கமாகக் கூறிய மீராவை முறைத்துப் பார்த்த ரன்வீர் அவளுக்கும் முன்னாக உள்ளே நுழைந்தான்.
வேறு வழியின்றி அவனைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றாள் மீரா.
மருத்துவர் மீராவைப் பரிசோதித்துக் கொண்டிருந்த நேரம் அவ் அறையைச் சுற்றிப் பார்த்தான் ரன்வீர்.
எங்கும் குழந்தைகளின் படங்கள் தான் இருந்தன.
அதனைக் காணும் போது ரன்வீரின் மனக் கண்ணில் அவனும் மீராவும் ஜோடியாக நிற்க, இருவரும் ஆளுக்கு ஒரு குழந்தையாக தூக்கி வைத்துக் கொண்டிருப்பது காட்சியாக வரவும் தன் கற்பனை செல்லும் திசையை எண்ணி அதிர்ந்தான் ரன்வீர்.
அவ்வளவு இலகுவாக மீராவைத் தன் மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டோமா என அவனுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
சற்று நேரத்தில் மருத்துவருடன் அங்கு வந்த மீரா மருத்துவரின் பதிலை ஆவலுடன் எதிர்ப்பார்க்க, அவரோ மீராவின் தலையில் அமைதியாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
“மிஸ்டர் ரன்வீர்… உங்க வைஃப் மீராவுக்கு PCOS இருக்கு.” என்கவும் ரன்வீர் அவரைப் புரியாமல் நோக்க, மீராவோ அதிர்ச்சியாக மருத்துவரை ஏறிட்டாள்.
“அ…அதனால தான் எனக்கு இத்தனை மாசம் ஆகியும் கரு தங்கலயா? அப்போ என்னால ஒரு குழந்தைய சுமக்க முடியாதா? நான் அதுக்குக் கூட பொருத்தம் இல்லாதவளா?” எனத் தன் பாட்டுக்கு அதிர்ச்சியில் கண்ணீருடன் ஏதேதோ பேச, அவளின் பேச்சைக் கேட்டு ரன்வீரும் அதிர்ந்தான்.
“நோ நோ… காம் டவுன் மிசிஸ் ரன்வீர். நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல. நீங்க சொன்னதுல பாதி கரெக்ட். உங்களுக்கு PCOS இருக்குறதனால தான் உங்களால ப்ரெக்னன்ட் ஆக முடியல. பட் அதுக்கு ட்ரீட்மெண்ட் இருக்கு. அப்படியே நீங்க ப்ரெக்னன்ட் ஆகி இருந்தாலும் தொண்ணூறு சதவீதம் அது மிஸ்கரேஜ் ஆக சான்ஸ் இருக்கு. சோ ஹெல்த்தி ப்ரெக்னன்சிக்கான ஒரே வழி முதல்ல உங்களுக்கு PCOS குணமாகணும்.” என மருத்துவர் கூறவும், “அதுக்கு என்ன டாக்டர் பண்ணணும்? ஏதாவது சர்ஜரி பண்ணணுமா? எவ்வளவு செலவானாலும் பரவால்ல.” என்றான் ரன்வீர் பதட்டமாக.
கணவனின் பதட்டத்தை தன் கவலை மறந்து வியப்பாகப் பார்த்தாள் மீரா.
“அவ்வளவு எல்லாம் பெரிய விஷயம் இல்ல மிஸ்டர் ரன்வீர். ஃபர்ஸ்ட் ஒரு ஹெல்த்தி டயட் ரொம்ப முக்கியம். உங்க வைஃபுக்கு ஊட்டச்சத்து ரொம்ப குறைவா இருக்கு. அப்புறம் ரெகியுலர் எக்சர்சைஸ், மெடிகேஷன்ஸ் இதெல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணா சீக்கிரம் உங்களுக்கு PCOS குணமாகிடும். நல்லபடியா குழந்தை பெத்துக்கலாம். அதுக்காக ஒருவேளை குணமாகலன்னா என்ன பண்ணுறது? என்னால ப்ரெக்னன்ட் ஆக முடியாதா? இப்படி எல்லாம் நெகடிவ்வா யோசிக்காதீங்க. இந்த ட்ரீட்மெண்ட் அப்போவே நீங்க ப்ரெக்னன்ட் ஆகலாம். பட் என்ன அது கொஞ்சம் ரிஸ்கி ப்ரெக்னன்சியா இருக்கும். குழந்தை பிறக்கும் வரை ரொம்ப கவனமா இருக்கணும். சோ இட்ஸ் பெட்டர் டு அவாய்ட் கெட் ப்ரெக்னன்ட் டில் யூ ரெகவர்.” என்றார் மருத்துவர்.
“நா…நான் கண்டிப்பா ப்ரெக்னன்ட் ஆகுவேன் தானே டாக்டர்?” என மீரா கண்கள் கலங்க எதிர்ப்பார்ப்புடன் கேட்க, “கண்டிப்பா… மத்தபடி நீங்க ஹெல்த்தியா இருக்கீங்க. நான் உங்களுக்கு எப்படி டயட் பண்ணணும்னு எழுதி தரேன். என்ட் கொஞ்சம் எக்சர்சைஸ் சொல்லி தரேன். அதையும் கரெக்டா பண்ணுங்க. நான் தர மெடிகேஷன் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க. அப்புறம் இன்னொரு விஷயம். PCOS க்கு முக்கிய காரணம் ஹார்மோனல் இம்பேலன்ஸ். அதனால நான் தர மெடிகேஷன்ஸுக்கு ஹார்மோன் சேஞ்சஸ்னால மூட் ஸ்விங் எல்லாம் வரலாம். விதின் அ மந்த் யூ வில் பீ பர்ஃபக்ட்லி ஃபைன்.” என்றார் மருத்துவர் புன்னகையுடன்.
இருவரும் மருத்துவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்ப, மீராவின் முகத்தில் ஒளியே இல்லை.
செல்லும் வழியில் ஒரு கடையில் நிறுத்திய ரன்வீர் மீராவுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் குவித்தான்.
அது கூட மீராவின் கவனத்தில் பதியவில்லை.
ரன்வீருக்கே அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
ஒரு ஓரமாக வண்டியை நிறுத்தியவன், “மீரா…” என்று அப் பெயருக்கும் வலிக்காதவாறு அழைத்த ரன்வீரைக் கேள்வியாக ஏறிட்ட மீராவுக்கு உலகமே இருண்டு விட்டது போல் இருந்தது.
“அதான் டாக்டர் சொன்னாங்களே பயப்பட எதுவும் இல்லன்னு. சீக்கிரமே உனக்கு குணமாகிடும்.” எனப் பரிவாகக் கூறிய கணவனின் விழிகளை இமைக்காமல் பார்த்த மீரா, “இப்போ புரியுதுங்க நான் உங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லன்னு.” என்றாள் மீரா விரக்தியாக.
மீரா கூறியதைக் கேட்டு ரன்வீர் அவளை அதிர்ந்து நோக்க, “நீங்க அடிக்கடி சொல்லுவீங்களே என் கிட்ட நீங்க எதிர்ப்பார்த்த மாதிரி அழகு இல்ல, படிப்பு இல்ல, நான் மாடர்னா இல்ல. அதனால நான் உங்களுக்கு பொருத்தமா இல்லன்னு. ஆனா இதெல்லாம் எப்பவாச்சும் மாறும்னு எதிர்ப்பார்த்தேன். ஆனா இப்போ பாருங்க. என் கிட்ட ஒரு பொண்ணுக்கு ரொம்ப முக்கியமான குழந்தை பெத்துக்குற தகுதி கூட இல்ல.” என மீரா கூறும் போதே அவளின் கன்னத்தைத் தாண்டி வழிந்தது கண்ணீர்.
“மீரா நான்…” என வார்த்தைகள் வராது ரன்வீர் தடுமாற, “பரவால்லங்க. என்ன இருந்தாலும் அது தானே நிஜம்.” என்றவளை பாய்ந்து அணைத்துக் கொண்டான் ரன்வீர்.
மறு நொடியே இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை எல்லாம் தன்னவனின் மார்பில் சாய்ந்து கதறித் தீர்த்தாள் பெண்ணவள்.
ரன்வீர் மீராவை சமாதானப்படுத்தக் கூட மறந்து தன் வார்த்தைகள் அவளை எந்தளவு காயப்படுத்தி உள்ளது என்று உணர்ந்து கண்கள் கலங்க அமர்ந்திருந்தான்.
சில நிமிடங்கள் கழித்து தன்னிலை அடைந்த மீரா அவசரமாக ரன்வீரை விட்டு விலகி அமர, அவளைக் கேள்வியாக ஏறிட்டான் ரன்வீர்.
“சா.. சாரி… நான் வேற ஏதோ யோசனைல… சாரி…” எனச் சங்கடமாகக் கூறியவள் ஜன்னலுக்கு வெளியே பார்வையைத் திருப்பினாள்.
அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத ரன்வீர் அமைதியாக வீடு நோக்கி வண்டியைச் செலுத்தினான்.
வீட்டுக்கு வந்த காயத்ரி மீராவின் சோர்ந்திருந்த முகத்தைப் பார்த்து விட்டு எதுவும் கேட்காமல் அமைதி காத்தார்.
மீரா மாடிக்குச் சென்றதும் மகனைப் பிடித்துக் கொண்ட காயத்ரி அவனிடம் மருத்துவர் என்ன கூறினார் என விசாரிக்க, ரன்வீரும் மருத்துவர் கூறியதை எல்லாம் கூறிவிட்டு மீராவின் டயட் ப்ளேனை காயத்ரியிடம் கொடுத்தான்.
அதனை வாங்கிப் பார்த்த காயத்ரி அதனை ரன்வீரின் கரத்திலேயே திணித்து விட்டு, “உன் பொண்டாட்டி தானே… நீயே பார்த்துக்க. உன்னால தான் அவளுக்கு இந்த நிலைமை.” என்றார் கோபமாக.
“அம்மா… என்ன பேசுறீங்க நீங்க? நான் என்ன பண்ணேன்? அது ஜெனட்டிக்கல் அன்ட் ஹார்மோனல் இம்பேலன்ஸ்னால வரும். அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” எனக் கேட்டான் ரன்வீர் பதிலுக்கு கோபமாக.
“ஆமா… இதெல்லாம் நல்லா பேசு. உன்னால அவ சரியா சாப்பிடுறது கூட இல்ல. விடிஞ்சதும் வெளிய கிளம்பிடுவ. நடுராத்திரில வீட்டுக்கு வருவ. சில சமயம் அவ சாப்பிடாம உனக்காக காத்திருப்பா. ஆனா நீ எப்பவாச்சும் அவள பக்கத்துல உட்கார வெச்சி சாப்பிட சொல்லி இருக்கியா?” எனக் காயத்ரி கேட்கவும் அதிர்ந்த ரன்வீர், “அவ சாப்பிட்டு இருப்பான்னு நினைச்சேன் நான்.” என்றான்.
“கிழிச்சா… நான் தான் அவள அதட்டி உருட்டி சாப்பிட வைப்பேன். அதுவும் எத்தனை நாளைக்கு என்னால பண்ண முடியும்? உனக்காக வெய்ட் பண்ண வேணாம்னு சொன்னாலும் கேட்க மாட்டா. சொல்லிப் பார்த்து முடியாம நானே விட்டுட்டேன். அப்படியே சாப்பிட்டாலும் கொஞ்சமா கொரிச்சிட்டு எழுந்திருச்சிடுவா. நாம மூணு பேரும் இவ்வளவு சம்பாதிச்சு கொட்டுறோம். ஆனா நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு சரியா சாப்பிடுறது இல்ல.” என்றார் காயத்ரி மருமகளின் நிலையை எண்ணி வருத்தமாக.
“நீங்க தானேம்மா வீட்டுல இருக்கீங்க. நான் பார்க்கும் போதெல்லாம் மாமியாரும் மருமகளும் அப்படி கொஞ்சிட்டு இருப்பீங்க. அப்போ நல்லா சாப்பிட வைக்க என்னவாம்?” எனக் கேட்டான் ரன்வீர் ஆதங்கமாக.
காயத்ரி கூறியதைக் கேட்டு அவனின் குற்றவுணர்வு அதிகரித்தது தான் மிச்சம்.
“சொல்லுவடா… ஆயிரம் சொந்தம் கூட இருந்தாலும் புருஷன் கூட இருக்குறது போல வருமா? அது சரி. அவ தான் உனக்கு பிடிக்காத பொண்டாட்டி ஆச்சே. அவ எப்படி போனா உனக்கென்ன?” என காயத்ரி நக்கலாகக் கேட்கவும், “அம்மா…” எனக் கத்தினான் ரன்வீர் அதிர்ச்சியாக.
“இந்தக் கத்துறது எல்லாம் உன் பொண்டாட்டி கிட்ட வெச்சிக்க. இங்க பாரு ரன்வீர். இன்னும் அஞ்சி நாள்ல உன் மூவி ரிலீஸ் ஆகுதுல. இந்த அஞ்சி நாள் மட்டும் தான் நான் உன் பொண்டாட்டிய கவனிச்சிப்பேன். அதுக்கப்புறம் நானும் உன் அப்பாவும் கொஞ்சம் நாள் காசி, ராமேஸ்வரம்னு போகலாம்னு இருக்கோம். அப்புறம் நீயாச்சு உன் பொண்டாட்டியாச்சு. நீ தான் அவள கூட இருந்து பார்த்துக்கணும் சொல்லிட்டேன்.” எனக் கட்டளை இட்ட காயத்ரி, “ஊருக்கு ஹீரோவா இருந்து பத்தாது. கட்டின பொண்டாட்டிக்கு ஹீரோவா இருக்கணும்.” என ரன்வீரின் காதில் விழட்டும் என்றே நக்கலாக முணுமுணுத்தவாறு அங்கிருந்து அகன்றார்.
சொன்னபடியே காயத்ரி மீராவைப் பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டார்.
ரன்வீர் கூட தன் உடல் தேவைக்காக அவளைக் கஷ்டப்படுத்தாது விலகியே போக, மீராவோ அதனைத் தவறாகப் புரிந்து கொண்டாள்.
அடுத்து வந்த நான்கு நாட்களும் வேகமாக உருண்டோட, அன்று ரன்வீரின் திரைப்படம் வெளியிடப்படும் நாள்.
எதிர்ப்பார்த்தது போலவே ரன்வீர் மற்றும் சனாவின் விசிறிகள் தியேட்டரில் அலை மோதினர்.
முதல் நாளே எதிர்ப்பார்த்ததை விட பல மடங்கு அதிகமாகப் பணம் வசூலானது.
படம் மெகா ஹிட்.
ரன்வீர் மற்றும் சனாவின் ரசிகர்களுக்கு உற்சாகம் தாளவில்லை.
எங்கும் பட்டாசு கொளுத்தி தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரசிகர்களே இவ்வாறிருக்க, படக் குழுவைக் கேட்கவும் வேண்டுமா?
படம் வெற்றி பெற்றதைத் கொண்டாடும் விதமாக இயக்குனர் அன்று இரவே பெரிய பார்ட்டியொன்றை ஏற்பாடு செய்தார்.
ஆட்டம் பாட்டம் குடி கும்மாளம் என்று இருந்தது மொத்த இடமும்.
ரன்வீரால் அங்கு வெகுநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அதற்காகப் பாதியிலும் எழுந்து செல்ல முடியவில்லை.
வேறு வழியின்றி அங்கேயே இருந்தான்.
நேரம் வேறு நள்ளிரவைக் கடந்து இருந்தது.
பெயருக்கு மதுவைத் தொட்டவனுக்கு இப்போது எல்லாம் அதனைத் தொடவே பயமாக இருந்தது.
சனாவோ ஒரு போத்தல் மதுவை காலி செய்து விட்டு ஏதோ மூக்கு முட்ட குடித்தது போல் பாவனை செய்து போதையில் இருப்பது போல் ரன்வீரிடம் நெருக்கமாக இருக்க முயன்றாள்.
ரன்வீருக்கோ அனைவரின் முன்னிலையிலும் அவளைத் தள்ளி விட மனமில்லை.
அதற்காக அவள் செய்வது அனைத்தையும் பொறுத்துப் போகவும் முடியவில்லை.
யாரின் கவனத்தையும் ஈர்க்காதவாறு அவளை விலக்கப் பார்த்தான்.
ஆனால் சனாவோ கம் பூசியது போல் ரன்வீரின் நெஞ்சிலேயே ஒட்டிக் கிடந்தாள்.
போதாக்குறைக்கு ‘பேபி… பேபி…’ என்று அனைவரின் முன்னிலையிலும் ரன்வீரைக் கொஞ்சினாள்.
அங்கிருந்து திரைப்படக்குழுவோ இதனை ஏதோ ரொமான்டிக் சீன் போல் ரசிக்க, ரன்வீருக்குத் தான் சனாவின் பேபி என்ற அழைப்பே நாராசமாக இருந்தது.
முன்பானால் சனாவின் ஒரு பார்வைக்கே வானில் பறந்து இருப்பான்.
ஆனால் இப்போது நிலைமை வேறு ஆயிற்றே.
இதற்கு மேலும் இங்கு நின்றால் நிலைமை மோசம் ஆகி விடும் என்பதால் ரன்வீர் அங்கிருந்து கிளம்பப் பார்க்க, சனாவை அந்த நிலைமையில் தனியே விட்டுக் கிளம்பவும் மனமற்று அவளையும் அழைத்துக்கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
“மச்சான் என்ஜாய்…” என தேஜ் கண்ணடித்துக் கூறவும் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சனாவுடன் கிளம்பினான் ரன்வீர்.
சனாவோ முற்றாக ரன்வீரின் மீது சாய்ந்திருக்க, அவளின் இடையைப் பற்றி அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் ரன்வீருக்கு.
வேறு வழியின்றி சனாவின் இடை பற்றி கார் வரை அழைத்துச் சென்று சனாவை முன்னிருக்கையில் அமர்த்தி சீட் பெல்ட்டைப் போட்டு விட்டான்.
இவை அனைத்துமே ரன்வீருக்குத் தெரியாமல் புகைப்படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
மறுபக்கம் வந்து ரன்வீர் வண்டியில் ஏறி அமரவும், “பேபி…” என்றவாறு சனா முன்னே சாய, அவள் தலை அடிபடாமல் இருக்க ரன்வீர் பாய்ந்து பிடித்துக் கொண்டான்.
வெளியிருந்து பார்ப்போருக்கு சரியாக அவர்கள் முத்தமிட்டுக்கொள்வது போல் தான் தோன்றும்.
ஒரு வழியாக சனாவை அவளின் ஃப்ளாட்டில் விட்ட ரன்வீர் அங்கிருந்து கிளம்பத் தயாராக, சனாவோ அவனை விடுவதாக இல்லை.
“போகாதே RV… எனக்குத் தனியா இருக்கப் பயமா இருக்கு.” எனக் குழந்தை போல் உதடு பிதுக்கினாள் சனா.
எல்லாம் ரன்வீரை மயக்க நடத்தும் நாடகம் தான்.
ஆனால் அவள் முன் இருப்பது முன்பிருந்த ரன்வீர் இல்லையே.
“நீ தூங்கு சனா… ரொம்ப லேட் ஆகிடுச்சு. நாம நாளைக்கு மீட் பண்ணலாம்.” என்ற ரன்வீர் சனாவின் கரத்தை விலக்க முயன்றான்.
சனாவோ சட்டென ரன்வீரின் சட்டையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவள், “நோ பேபி… டோன்ட் லீவ் மீ. எனக்குப் பயமா இருக்கு. எனக்கு தனியா இருக்கக் கஷ்டமா இருக்கு.” என்றாள் சனா கண்ணீருடன்.
பெருமூச்சு விட்ட ரன்வீரோ, “ஓக்கே நீ தூங்கு. நான் எங்கேயும் போகல.” என்றவன் சனாவின் அருகே அமர்ந்துகொள்ள, இது தான் சாக்கென்று அவனின் மடியிலேயே தலை வைத்துப் படுத்துக் கொண்டாள் சனா.
“பேபி… சீக்கிரம் நாம கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன தான் நான் பெரிய நடிகையா இருந்தாலும் என் முதுகுக்குப் பின்னாடி எல்லாரும் வேற மாதிரி பேசுறாங்க. எக்ஸ் மினிஸ்டரோட இல்லீகல் டாட்டர், பின் வாசல் வழியா வந்தவ, நல்லா இருந்த குடும்பத்த சிதைச்சவளோட பொண்ணு இப்படி ஏகப்பட்ட விதமா சொல்றாங்க. எனக்கு இந்தப் பெயர்லாம் வேணாம். உங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா மிசிஸ் ரன்வீரா தான் எல்லாரும் என்னைப் பார்ப்பாங்க.” என சனா கூறவும் அவளின் மனதில் இருந்த வலியை உணர்ந்த ரன்வீருக்கு ஒரு பெண்ணுக்கு வீணாக எதிர்ப்பார்ப்பை வளர்த்து விட்டோமே எனக் குற்றவுணர்வாக இருந்தது.
“நீ எதையும் யோசிக்காம தூங்கு சனா.” என்ற ரன்வீருக்கு மனைவியின் நினைவாகவே இருந்தது.
மீராவின் மீது காதலா எனக் கேட்டால் அவனுக்கே விடை தெரியாது.
ஆனால் நிச்சயம் வெறுப்பு கிடையாது.
தான் அவ்வளவு மோசமாக நடத்தியும் தன்னை வெறுக்காது தனக்காக எல்லாம் பார்த்துப் பார்த்து செய்யும், அதுவும் அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் மனைவி கிடைத்தால் யாரால் வெறுக்க முடியும்?
“டூ டேய்ஸ்ல நடக்க போற ப்ரஸ் மீட்ல நம்ம ரிலேஷன்ஷிப்ப அஃபீஷியலா சொல்லிடலாம்.” என சனா கூறவும் அதிர்ந்த ரன்வீர், “என்ன அவசரம் சனா? முதல்ல அந்த ஃபோட்டோஸ் பத்தின க்ளாரிஃபிக்கேஷன் கொடுக்கணும்.” என்றான்.
அதனைக் கேட்டு உள்ளுக்குள் கோபத்தில் பொங்கிய சனாவுக்கோ அதனைக் காட்டத் தான் வழி தெரியவில்லை.
ரன்வீரைத் திருமணம் செய்யும் வரை அவள் அமைதி காக்கத்தான் வேண்டும்.
சனா தூங்கும் வரை காத்திருக்க முடிவு செய்த ரன்வீருக்கு அவள் தூங்காமல் தன்னைப் பிடித்து வைத்திருப்பது ஆயாசமாக இருந்தது.
சனாவோ விடிய விடிய உறங்காமல், போதையில் உளறுவது போல் நடித்துக் கொண்டு, இடைக்கிடை கண்ணீரும் சிந்திக் கொண்டிருக்கவும் ரன்வீருக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.
விடிந்த பின்னர் தான் சனாவை உறக்கம் தழுவ, அவசரமாக அங்கிருந்து வெளியேறினான் ரன்வீர்.
ரன்வீர் சனாவுடன் சேர்ந்து ஒன்றாக அவளது ஃப்ளாட்டுக்குள் நுழைவது முதல் மறுநாள் காலை ரன்வீர் தனியாக வெளியே வருவது என அனைத்துமே புகைப்படம் எடுக்கப்பட்டது.
ரன்வீர் வீட்டுக்கு வந்த போது வீடே அமைதியாக இருந்தது.
வேகமாக மாடி ஏறி தன் அறைக்குள் நுழைந்தவனை வெற்றுப் பார்வை பார்த்தாள் மீரா.
“எங்க அப்பாவையும் அம்மாவையும் காணோம்?” எனக் கேட்ட ரன்வீரிடம், “அவங்க நைட்டே கிளம்பிட்டாங்க. உங்களுக்கு நிறைய தடவை கால் பண்ணாங்க.” என்ற மீரா அவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.
“ஓஹ்…” என்ற ரன்வீருக்கு அடுத்த என்ன பேசுவது என்று கூடத் தெரியவில்லை.
“நைட் செலிப்ரேஷன் பார்ட்டி இருந்துச்சு.” என ரன்வீர் கூற, “ம்ம்ம்… தெரியுது.” என்றாள் மீரா.
இப்போதும் அவனின் முகத்தைப் பார்க்காமல் போர்வையை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.
ரன்வீருக்கு அவளின் நடவடிக்கை குழப்பமாக இருந்தது.
மீரா அறையை விட்டு வெளியேறியதும் குளிப்பதற்காக தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்த ரன்வீர் கண்ணாடியில் தெரிந்த தன் விம்பத்தைப் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.
அதில் ரன்வீரின் கன்னத்தில் பளிச்சென சிவப்பு நிறத்தில் உதட்டுச் சாயம் பதிந்திருந்தது.
அப்போது தான் முன் தினம் ரன்வீரின் அசந்த நேரம் பார்த்து சனா போதையில் அவனது கன்னத்தில் முத்தமிட்டது நினைவுக்கு வந்தது.
“ஷிட்… இதைப் பார்த்து தான் அவ அப்படி ரியாக்ட் பண்ணாளா? ஓ காட்.” எனத் தலையில் அடித்துக் கொண்டான் ரன்வீர்.
கீழே சமையலறையில் நின்றிருந்த மீராவின் நெஞ்செல்லாம் ஏதோ அழுத்தம்.
அவள் பயன்படுத்தும் மருந்துகளும் அதற்கு ஒரு காரணம்.
கணவனின் முகத்தில் இன்னொரு பெண்ணின் உதட்டுச் சாயம் பதிந்த தடத்தைக் கண்ட பின்னும் கூட அவளது கண்கள் ஒரு சொட்டுக் கூட கலங்கவில்லை.
மாறாக நெஞ்சில் பாரம் தான் ஏறியது.
அவசரமாகக் குளித்து விட்டு கீழே வந்த ரன்வீருக்கு எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியவில்லை.
மீராவின் பார்வையில் விழ அங்கேயே நடை பயின்றான்.
அவனுக்கு உணவைத் தயாரித்து எடுத்து வந்த மீரா, “சாப்பிட வாங்க.” என்றாள் மெல்லிய குரலில்.
உடனே வந்து அமர்ந்த ரன்வீர் தனக்குப் பரிமாறியவளின் கரத்தைப் பற்றி தனக்கு அருகே உட்கார வைத்து, “நீயும் உட்கார்ந்து சாப்பிடு.” என்றான்.
“இல்ல நான் அப்புறமா…” என ஆரம்பித்தவளை ஒரு பார்வை தான் பார்த்தான்.
அமைதியாக சாப்பாட்டைப் போட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
‘அட… இவ கிட்ட அன்பா சொல்றத விட அதட்டி சொன்னா தான் வேலை நடக்குது. ஃபியூச்சர்ல இதையே யூஸ் பண்ணிக்கலாம்.’ என மனக் கணக்கு போட்டவனின் முகத்தில் மெல்லிய புன்னகைக் கீற்று.
மீரா கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு எழ முயல, அவளின் கரம் பற்றித் தடுத்த ரன்வீர், “என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட? நீ சாப்பிடவே இல்ல. நானும் பார்த்துட்டு தான் இருந்தேன். ஒழுங்கா போட்டு சாப்பிடு.” என்றான் அதட்டலாக.
“இல்லங்க. எனக்குப் போதும். வயிறு ரொம்பிடுச்சு. ப்ளீஸ்…” என்றாள் மீரா கெஞ்சலாக.
“டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கு தானே. இப்படி சாப்பிட்டா அப்புறம் எப்படி நீ என் குழ…” எனச் சொல்ல வந்தவன் மீராவின் அதிர்ந்த பார்வையில் குரலைக் கணைத்துக் கொண்டு, “அப்புறம் எப்படி உனக்கு குணமாகும்?” எனக் கேட்டவன் தானே அவளுக்குப் பரிமாறினான்.
இதற்கு மேலும் தன் பேச்சு எடுபடாது எனப் புரிந்து கொண்ட மீரா அமைதியாகச் சாப்பிட, குறும்புச் சிரிப்புடன் தன் உணவை உண்டான் ரன்வீர்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மீரா சமையலறையை ஒதுக்கிக் கொண்டிருக்க, அவள் பின் வந்து நின்ற ரன்வீர், “இரண்டு நாளைக்கு போடுறதுக்கு மாதிரி ட்ரெஸ் எடுத்து வெச்சிட்டு சீக்கிரம் நீயும் ரெடி ஆகு.” என்கவும் திடீரெனக் கேட்ட குரலில் பதறியவாறு திரும்பிய மீரா சமநிலை தவறி ரன்வீரின் மீதே சாய்ந்தாள்.
Antha anu gundu eppa vedikum