Loading

ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்திருந்த ரன்வீர் வந்ததில் இருந்தே ஏதோ யோசனையுடன் இருக்க, அதனைக் கவனித்த தேஜ், “என்ன மச்சான்? எப்பவும் கல கலன்னு இருப்ப. இன்னைக்கு ஏதோ கப்பல் கவுந்துட்ட போல் இப்படி சோகமா இருக்க. என்னாச்சு?” எனக் கேட்டான்.

அவனுக்கு இன்னுமே ரன்வீரின் திருமண விடயம் தெரியாது.

உயிர்த் தோழனிடம் இவ்வளவு பெரிய உண்மையை மறைப்பது வருத்தமாக இருந்தாலும் ஏனோ அவனால் தேஜிடம் தன் மனதை வெளிப்படுத்த முடியவில்லை.

“ஒன்னும் இல்லடா. சும்மா தான். தலை வலிக்கிது.” என ரன்வீர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்த சனா அங்கு நின்றிருந்த தேஜைக் கண்டு கொள்ளாது, “RV… எங்க போனீங்க மூணு நாளா? ஏன் என் காலைக் கூட அட்டன்ட் பண்ணல?” எனக் கேட்டாள்.

ஒரு புதிய படத்திற்கான ஷூட்டிங் தான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதில் ரன்வீர் தான் கதாநாயகன். சனா கதாநாயகி. தேஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரம்.

அப்போது ஒரு குத்துப் பாட்டுக்கான ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த இடைவெளியில் தான் ரன்வீரைத் தேடி வந்திருந்தாள் சனா.

நண்பனைக் குறும்புப் பார்வை பார்த்த தேஜோ, “நீ நடத்து ராசா. நான் கிளம்புறேன்.” என ரன்வீரின் காதில் கேலியாக முணுமுணுத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

எப்போதும் சனாவுடன் பேச ஆர்வமாகக் காத்திருக்கும் ரன்வீருக்கு அன்று வார்த்தைகளுக்கே பஞ்சம் ஆகிப் போனது.

“கொ…கொஞ்சம் வேலையா இருந்தேன் சனா. அதான் நீ கால் பண்ணத கவனிக்கல. சாரி.” எனத் தயக்கமாகப் பேசிய ரன்வீரைக் குழப்பமாக நோக்கிய சனா, “இட்ஸ் ஓக்கே. அதை ஏன் இவ்வளவு தயங்கித் தயங்கி சொல்றீங்க? ஓக்கே லீவ் இட். இந்த வீக்கென்ட் ஒரு லாங் ட்ரைவ் போகலாமா? நாம டேட்டிங் போய் ரொம்ப நாள் ஆகிடுச்சு.” என்றாள் சனா குழைவாக.

வழமையாக சனாவின் கொஞ்சல் பேச்சை ரசிப்பவனால் இன்று அவள் கண்களைக் கூடப் பார்க்கத் தயக்கமாக இருந்தது.

“நோ சனா. யாராவது மீடியாக்காரன் பார்த்தா பிரச்சினை ஆகிடும். வேற ஒரு நாளைக்கு பார்க்கலாம்.” என்று வழி வெட்டினான் ரன்வீர்.

“பார்த்தா என்ன ஆகப் போகுது? ஆல்ரெடி நம்மள பத்தின ரூமர்ஸ் இருக்குறது தானே. அதை ரியலாக்கப் போறோம். அவ்வளவு தான். ப்ளீஸ் RV…” என சனா கெஞ்சலாகக் கேட்கவும் அதற்கு மேல் ரன்வீரால் மறுக்க முடியவில்லை.

அவன் சம்மதித்த பிறகே சனா அவ்விடம் விட்டு அகல, தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் ரன்வீர்.

சனாவிடம் ஆரம்பத்தில் ரன்வீர் டேட்டிங் செல்லக் கேட்கவும் முதலில் போக்குக் காட்டிய சனா சில நாட்கள் கழித்தே ரன்வீரின் கோரிக்கையை ஏற்றான்.

சினிமாத்துறையில் சனாவின் கால்ஷீட்டுக்காக நிறையப் பேர் காத்திருக்க, அவளை விட அதிக புகழைக் கொண்டவன் ரன்வீர்.

அப்படிப்பட்டவன் தன்னிடம் டேட்டிங் செல்லக் கேட்கவும் சனா வானில் பறக்காத குறை தான்.

இருந்தும் உடனே சம்மதித்தால் அது அவளது தன்மானத்துக்கு இழுக்கு என்பதால் சில நாட்கள் போக்குக் காட்டி விட்டே சம்மதித்தாள்.

ரன்வீருக்கு சனாவின் மீது ஆரம்பத்தில் காதல் என்று எல்லாம் இல்லை.

தன் வருங்கால மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டானோ அப்படியே சனா இருக்கவும் தான் அவனுக்கு அவளைத் திருமணம் செய்ய ஆர்வம் ஏற்பட்டது.

அதுவும் இருவருக்கும் இருக்கும் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி பேசாதவர்கள் இல்லை.

இவ்வளவு நாட்களில் இருவரும் மூன்று நான்கு தடவைகள் மாத்திரமே வெளியே சென்று இருந்தனர்.

மற்ற நேரங்களில் இருவருக்கும் பேசிக் கொள்ளக் கூட நேரம் இருக்காது.

இதற்கு இடையில் தான் ரன்வீருக்கும் மீராவுக்கும் திருமணம் நடந்து இருந்தது.

ரன்வீருக்கு மீராவை தன் மனைவியாக ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினமாக உள்ளதோ அதே அளவு கடினமாக இருந்தது சனாவை விலக்கி வைப்பது.

ரன்வீரின் நிலை இவ்வாறிருக்க, மீராவோ காயத்ரியுடன் நன்றாகவே ஒட்டிக் கொண்டாள்.

அன்று இரவு ரன்வீர் வீடு திரும்பும் வரையிலுமே அவ் வீட்டில் பட்டாம்பூச்சியாக வலம் வந்தாள் மீரா.

அவளுக்கு ரன்வீரின் நினைவு சற்றும் எழவே இல்லை.

ரன்வீர் வீட்டினுள் நுழையும் போதே மீராவும் காயத்ரியும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்க, அவனுக்கோ கோபம் உச்சிக்கு ஏறியது.

‘நான் இங்க மனசுக்குள்ள இவ்வளவு கஷ்டப்படுறேன். இவ சிரிச்சு சந்தோஷமா இருக்கா.’ என மனதுள் வெறுப்பாக எண்ணிக் கொண்டான்.

ரன்வீரின் வெறுப்பான பார்வையைக் கண்டதுமே மீராவுக்கு இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷமான மனநிலை முற்றிலும் வடிந்த உணர்வு.

“ரன்வீர் கண்ணா… வந்துட்டியா? உனக்காகத் தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம். வா… வந்து சாப்பிடு.” என காயத்ரி அழைக்கவும் ரன்வீர் வந்து உணவு மேசையில் அமர, மருமகளைப் பார்வையால் மகனுக்குப் பரிமாறக் கட்டளை இட்டார் காயத்ரி.

அவரின் பேச்சை மறுக்க முடியாது தயங்கித் தயங்கி பயத்துடன் ரன்வீரின் அருகே சென்று நின்றவள் காயத்ரி இன்னுமே அங்கு நிற்கவும் வேறு வழியின்றி தானே கணவனுக்குப் பரிமாறினாள்.

மீரா தனக்கு உணவைப் பரிமாறவும் சட்டென தலையை உயர்த்தி அவளை சுட்டெரிப்பது போல் ரன்வீர் முறைக்க, பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.

“மீரா… நீயும் பசியில தானே இருக்க. அப்படியே உட்கார்ந்து சாப்பிடு.” என காயத்ரி கூறவும், “ஐயோ இல்ல அத்தை. நான் உங்க கூடவே சாப்பிடுறேன்.” என அவசரமாக மறுத்தாள் அவள்.

“இல்லம்மா… நான் சாப்பிட நேரம் ஆகும். மாமா வந்ததுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடுவேன். அதுவரைக்கும் நீ எதுக்கும்மா பசில இருக்கணும்? உட்கார்ந்து சாப்பிடு. நான் ரெண்டு பேருக்கும் பரிமாறுறேன்.” என்ற காயத்ரி அவளை ரன்வீருக்கு அருகில் வலுக்கட்டாயமாக அமர்த்தி உணவைப் பரிமாறினார்.

ரன்வீருக்கோ மீராவின் அருகாமை நெருப்பின் மீது இருப்பது போல் இருக்க, தான் ஏதாவது கூறினால் தாய் மனம் வாடுவார் என அமைதி காத்தான்.

காயத்ரிக்கோ ரன்வீர் இந்த அளவு பொறுமையாக இருப்பதே பெரிய விஷயமாகத் தோன்றியது.

தன் முடிவு தவறாகவில்லை என அவர் திருப்திப்பட, மீராவுக்குத் தான் தெரியும் இது புயலுக்கு முந்திய அமைதி என்று.

ரன்வீர் இரவுணவை முடித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்து சற்று நேரத்தில் கையில் பாலுடன் அவ் அறைக்குள் நுழைந்த மீரா, “அத்தை கொடுத்து விட்டாங்க.” என அதனை ரன்வீரிடம் நீட்டினான்.

மறு நொடியே அதனை ஆவேசமாகத் தட்டி விட்டவன் மீராவின் கழுத்தைப் பற்றி சுவரோடு சாய்த்து, “என்ன டி? பத்தினி வேஷம் போடுறியா? நான் கேட்டேனா உன் கிட்ட இதெல்லாம்? நான் நேத்து உன் கிட்ட என்ன சொன்னேன்? தெளிவா சொன்னேன் தானே பொண்டாட்டின்னு என் மேல உரிமை எடுத்து எதுவும் பண்ணக் கூடாதுன்னு. வெளியே அம்மாவுக்காகத் தான் பொறுத்துப் போனேன். இங்கேயும் அதையே பண்ணுற. தொலைச்சிடுவேன் பார்த்துக்கோ. ச்சே… உன்ன பார்க்கவே எரிச்சலா இருக்கு. உன் கழுத்துல தாலிய கட்டி என் தலைல நானே மண் அள்ளிப் போட்டுக்கிட்டேன்.” என்றான் ரன்வீர் கோபமும் வெறுப்புமாக.

மீராவின் கழுத்தில் இருந்த ரன்வீரின் பிடி இறுகவும் அவளால் மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

ரன்வீரின் கரத்தை விலக்கப் போராடிக் கொண்டிருந்தவளுக்கு அவனது வார்த்தைகள் வேறு வலித்தன.

பின் ரன்வீரே தன் பிடியை விலக்கவும் கழுத்தைப் பிடித்தவாறு இறுமிக்கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினாள் மீரா.

அடுத்து வந்த நாட்களும் இவ்வாறே கழிய, அவர்களுக்குள் இருந்த இடைவெளி மேலும் மேலும் அதிகரித்தது ஒழிய அவர்களின் உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ரன்வீர் மீராவை வார்த்தைகளாலும் செயலாலும் வதைத்துக் கொண்டிருந்தான்.

இதனை காயத்ரியும் அவதானித்துக் கொண்டு தான் இருந்தார்.

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டி கணவனிடம் ஆலோசித்து விட்டு ஒரு முடிவை எடுத்தார் அவர்.

அன்று வார இறுதியாக இருக்க, சனாவின் கோரிக்கையை ஏற்று அவளுடன் வெளியே கிளம்பினான் ரன்வீர்.

சனாவிடம் உண்மையை மறைத்துப் பழக காயத்ரியின் நல் வளர்ப்பால் முடியவில்லை.

அதனால் ஏதாவது காரணம் கூறி இன்றே விலகிக் கொள்ளலாம் என முடிவு செய்தே வந்திருந்தான் அவன்.

ஒரு தனியார் பீச் சைட் ரிசோர்ட்டுக்கே இருவரும் வந்திருக்க, வண்டியில் இருந்து இறங்கியதுமே அவனுடன் கை கோர்த்துக் கொண்டாள் சனா.

ரன்வீரால் ஒரேயடியாக அவளை விலக்கிக் தள்ளவும் முடியவில்லை.

மெதுவாக ஏதாவது கூறி விலகலாம் என அவன் யோசிக்க, அவனுக்குத் தெரியாமல் கையில் கேமராவுடன் சற்றுத் தள்ளி அவர்களை ஒவ்வொரு கோணத்திலும் புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து கொண்டிருந்தான் ஒருவன்.

ஆம்… ரன்வீருக்குத் தெரியாமல் தான்.

அப் புகைப்படம் எடுப்பவனை ஏற்பாடு செய்ததே சனா தான்.

என்ன தான் அவள் சினிமாத் துறையில் புகழ் பெற்ற பிரபல நடிகையாக இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவளுக்குக் குடும்பப் பிண்ணனி இல்லை.

இன்றளவும் அவளது முதுகுக்குப் பின் ஒரு சிலர் முன்னால் அமைச்சரின் வப்பாட்டியின்‌ மகள், பின் வாசல் வழியாக வந்தவள் என்று பலவாறு கேலி செய்து கொண்டு தான் இருந்தனர்.

அதனால் தான் தலைமுறை தலைமுறையாக பாரம்பரியம் மிக்க ரன்வீரின் குடும்பத்திற்கு மருமகளாகச் சென்றால் அப் பெயர் மறைந்து சிறப்பாக பணத்தில் புரண்டு வாழலாம் என கற்பனைக் கோட்டை கட்டினாள்.

ஆனால் இந்த சில நாட்களில் ரன்வீர் தன்னுடன் பழகும் விதத்தில் இருந்த வேறுபாட்டை அவள் உணராமல் இல்லை. 

அதுவே சனாவின் மூளையில் எச்சரிக்கை மணியை அடிக்க, தம் இருவருக்கும் இடையில் இருப்பதை உலகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டினால் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் இவ் ஏற்பாட்டை செய்தாள் அவள்.

முதலில் இருவரும் சனா ஏற்பாடு செய்த கேண்டில் லைட் டின்னரை முடித்துக் கொண்டு கடற்கரையோரயாக காலாற நடந்தனர்.

ரன்வீர் சனாவிடம் என்ன காரணம் கூறலாம் என யோசித்துக் கொண்டு நடந்த வேளையில் அவனை நன்கு நெருங்கி நின்று கொண்ட சனா மெதுவாகத் திரும்பி புகைப்படக்காரனுக்கு கண்‌ காட்டினாள்.

“RV… வை டோன்ட் வீ மூவ் இன் டு தி நெக்ஸ்ட் ஸ்டெப்?” எனக் கொஞ்சல் குரலில் சனா கேட்கவும் அவளை அதிர்ச்சியுடன் ஏறிட்டான் ரன்வீர்.

“சனா நான்…” என ரன்வீர் ஏதோ கூற வருவதற்குள் சனா ரன்வீரின் முகத்தைக் கைகளால் தாங்கி அவன் இதழ்களை நெருங்க, அனைத்தும் தெளிவாகப் படமாக்கப்பட்டது.

சனாவின் நெருக்கம் இவ்வளவு நாளும் ரன்வீர் மறந்திருந்த பாரில் சந்தித்த அந்த முகமறியாப் பெண்ணின் நினைவைக் கிளப்பியது.

கூடவே அந்த செவ்வதரங்களில் இருந்த குட்டி மச்சமும்.

சட்டென தன்னிலை அடைந்து சனாவைத் தள்ளி விட்டவன் தம்மைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தவனையும் கண்டு கொண்டான்.

“ஏய்…” எனக் கத்திக் கொண்டு ரன்வீர் அவனைத் துரத்த, அவனோ வேகமாக அங்கிருந்து மறைந்திருந்தான்.

“ஷிட்…” எனக் கோபமாகத் தரையை உதைத்து விட்டு மீண்டும் சனா நின்றிருந்த இடத்துக்க வந்த ரன்வீர், “சாரி சனா. கொஞ்சம் மைன்ட் டிஸ்டர்பா இருக்கு. நாம இன்னொரு நாளைக்கு பார்க்கலாம். இப்போ போகலாம்.” என்று விட்டு முன்னே நடந்தான்.

தனக்குத் தேவையான புகைப்படங்கள் கிடைத்து விட்டதே என்ற நிம்மதியில் சனாவும் அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

அங்கு ரன்வீரின் வீட்டிலோ காயத்ரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மீரா.

“ப்ளீஸ் அத்தை. இதெல்லாம் வேணாம். அவர் பார்த்தா கோபப்படுவாரு.” என்ற மீராவிடம், “அதெல்லாம் இல்ல. இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும். ஊர்ல இருந்து வரும் போது லேட்டா வந்ததால கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே எதுவும் ஏற்பாடு பண்ணல. சரி நீங்க ரெண்டு பேருமாவது மனசு விட்டுப் பேசி ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு வாழ்க்கைல அடுத்த கட்டத்துக்குப் போய் இருப்பீங்கன்னு பார்த்தா ரெண்டு பேரும் ரெண்டு பக்கமா போறீங்க. அவன் என்னடான்னா எப்பப்பாரு வேலை வேலைன்னு வீட்டுல இருக்குறதே இல்ல. நீயும் அவன் வந்தாலும் அவன் முன்னாடி போகாம என் கூட சுத்திட்டு இருக்க. இது சரிப்பட்டு வராது. இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகணும். வரட்டும் அவன். இன்னைக்கு இருக்கு அவனுக்கு. நீ போய் பக்கத்து ரூம்ல ரெடி ஆகு. நான் பால் கொண்டு வந்து தரேன்.” என அசல் மாமியாராக மாறிக் கட்டளை இடவும் மீராவால் மறுக்க முடியவில்லை.

காயத்ரி தந்த மெல்லிய சில்க் சேலையை அணிந்து அதற்கேற்ப நகைகளை அணிந்து தயாராகியவளைக் காணும் போது காயத்ரிக்கு மீராவின் அப்பழுக்கற்ற அழகை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

நெற்றி வழித்து அவளுக்கு திருஷ்டி கழித்தவர், “என் ராசாத்தி. என் கண்ணே பட்டு விடும் போல. அப்படியே மகாலட்சுமி கணக்காட்டம் இருக்க. இன்னைக்கு பாரு என் புள்ள எப்படி உன் கிட்ட தலை குப்புற விழப் போறான்னு.” என காயத்ரி கூறவும் மீராவின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

அவளுக்குத் தான் உண்மை நிலவரம் தெரியுமே.

இருந்தும் காயத்ரியை சங்கடப்படுத்த விரும்பாமல் அவருக்கு மெல்லிய புன்னகையை பதிலாக வழங்கினாள் மீரா.

சற்று நேரத்தில் ரன்வீர் வரும் அரவம் கேட்க, மீராவைப் பதற்றமும் பயமும் தொற்றிக் கொண்டது.

“நீ இங்கயே இரும்மா. நான் போய் அவனுக்கு நல்லா நாழு வார்த்தை சொல்லி அனுப்புறேன். அப்படி என்ன பெரிய வேலை பொண்டாட்டிய விட முக்கியமா?” எனக் கேட்டுக் கொண்டு சென்றவர் மாடிப் படியில் ஏறிக் கொண்டிருந்த ரன்வீரிடம் சென்று, “என்ன ரன்வீர் இது வர நேரம்? உனக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சு தெரியும் தானே. வீட்டுல பொண்டாட்டிய வெச்சிட்டு எப்பப்பாரு வேலை வேலைன்னு போய்ட்டு இருக்க. இது நல்லா இல்ல சொல்லிட்டேன். அந்தப் புள்ள பாவம். உன்ன நம்பித் தானே வந்திருக்கா. சரி அதெல்லாம் இருக்கட்டும். இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணி இருக்கேன். ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுங்க. சீக்கிரமா எனக்கு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுங்க.” எனும் போது மாடிக் கைப்பிடியில் கரம் பதிந்திருந்த ரன்வீரின் பிடி இறுகியது.

காயத்ரிக்குப் பதிலளிக்காது வேகமாக மாடி ஏறிச் சென்று தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

சனாவை வீட்டில் விட்டவன் நேராக சென்றது என்னவோ பாருக்குத் தான்.

சனா நெருங்கியதில் இருந்தே ஏனோ அந்த நினைவடுக்கில் தொலைந்த பெண்ணின் நினைவு அதிகமாக வந்தது.

கூடவே அந்தக் குட்டி மச்சமும் அப் பெண்ணின் வார்த்தைகளும் நினைவில் வந்து போயின. 

மீராவின் உதட்டில் இருந்த மச்சத்தை ஒரு தடவை பார்த்திருந்தாலும் பெரிதாக அது அவன் மனதில் பதியவில்லை.

அப்படியே பதிந்தாலும் நிச்சயம் மீராவையும் அப் பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்க்க நினைக்கவே மாட்டான் அவன்.

காரணம் ரன்வீரைப் பொறுத்தவரையில் அவனுக்கும் மீராவுக்கும் கடுகளவு கூட பொருத்தம் கிடையாது.

எல்லாவற்றையும் தாண்டி அவனின் தாய் கட்டாயப்படுத்தி செய்து வைத்த திருமணம் என்பதால் எந்தத் தவறுமே செய்யாத மீராவை அடியோடு வெறுத்தான் அவன்.

அவளுடன் சேர்ந்து வாழும் எண்ணம் அவனுக்குத் துளியும் கிடையாது.

மூக்கு முட்டக் குடித்து முழுப் போதையில் இருந்தவனின் செவியில் மீண்டும் அப் பெண்ணின் வார்த்தைகள் ஒலித்தன.

அன்று ரன்வீர் போதையில் இருந்தாலும் அவனின் மூளைக்குள் அந்த வார்த்தைகள பதிந்து போய் இருந்தன.

அதனாலேயே அவனை அறியாமல் போதையில் இருக்கும் போதே மீண்டும் அவ் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

தன்னுடன் ஒரு இரவைக் கழித்த பெண் நிச்சயம் அதனை வைத்து தன்னிடம் தனியாகோ இல்லை மீடியா மூலமாகவோ ப்ளாக் மெயில் செய்வாள் என ரன்வீர் எண்ணியிருக்க, இவ்வளவு மாதங்கள் கடந்தும் எதுவும் நடக்காமல் போகவும் தான் ரன்வீர் அப் பெண்ணின் மீது வைத்திருந்த தவறான அபிப்ராயத்தை மாற்றினான்.

“நான் உங்க பெரிய ஃபேன்…”

“என்னை மறந்துடுவீங்களா?”

“நிஜமா இது நீங்க தானா?”

“நான் தப்பான பொண்ணுன்னு நினைப்பீங்களா?”

“என்னை மறந்துடுவீங்களா? என்னை மறந்துடுவீங்களா?” என்ற வார்த்தைகளே மாறி மாறி காதில் ஒலிக்க, செவிகளை அழுத்தமாக மூடிக் கொண்டு, “ஆஹ்…” எனக் கத்தினான் ரன்வீர்.

ஏற்கனவே சனா, மீரா, அந்த முகம் அறியாப் பெண் எனக் குழப்பத்தில் இருந்தவனுக்கு காயத்ரியின் வார்த்தைகளைக் கேட்டு கோபம் உச்சத்துக்கு எகிறியது.

அதே கோபத்தோடு அறைக்குள் நுழைந்தவன் அறையில் இருந்த அலங்காரத்தைப் பார்த்து ஆவேசம் கொண்டான்.

இருந்தும் இன்று இவற்றுக்கு ஒரு முடிவு கட்டி ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் மீராவின் வரவுக்காகப் பொறுமையாகக் காத்திருந்தான்.

சற்று நேரத்தில் கையில் பால் சொம்புடன் மீராவை ரன்வீரின் அறைக்கு முன்னால் காயத்ரி அழைத்து வந்து விட்டுச் செல்ல, மீராவுக்கோ பயத்தில் கை கால்கள் நடுங்கின.

இன்று ஏதோ பெரிதாக நடக்கப் போகிறது என மீராவின் இதயம் வேறு தாறுமாறாகத் துடித்தது.

தலை குனிந்த வண்ணம் தயங்கித் தயங்கி உள்ளே வந்தவளை ஏறிட்டு அழுத்தமாக நோக்கினான் ரன்வீர்.

அவன் முன் வந்து நின்றவளோ எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே பால் சொம்பை அவனை நோக்கி நீட்ட, எதுவும் கூறாது ரன்வீர் அதனை வாங்கிக் கொள்ளவும் மீராவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவ்வளவு சீக்கிரம் அவன் மனம் மாறி விட்டானா என தலையை நிமிர்த்தி ஆராய்ச்சியாக ரன்வீரின் முகம் நோக்க, அவனின் சிவந்திருந்த கண்கள் வேறு கதை கூறின.

பயத்தில் மீராவின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

அருகில் இருந்த டீப்பாயில் பால் சொம்பை எட்டி வைத்த ரன்வீர் எழுந்து நிற்கவும் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் மீரா.

ரன்வீரோ ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மீராவை நெருங்க, அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவள் ரன்வீர் ஒவ்வொரு அடி எடுத்து வைத்து முன்னே வரவும் பின்னோக்கி நகர்ந்தாள்.

ஒரு‌ கட்டத்தில் மீராவால் பின்னோக்கி நகர முடியாமல் சுவர் தடுக்க, சுவரோடு ஒட்டி நின்று கணவனின் முகத்தை பயத்துடன் ஏறிட்டவளை விஷமப் புன்னகையுடன் நெருங்கி மீராவின் இரு பக்கமும் சுவற்றில் கரங்களை ஊன்றி சிறை வைத்தான் ரன்வீர்.

“நா…ன் வேண்டாம்னு தான் சொ…சொன்னேன். அத்…அத்தை தான்.” என வார்த்தைகள் வராது தூக்கித் திணறினாள் மீரா.

அதனைக் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத ரன்வீர் தன் வலது கையால் மீராவின் கழுத்தில் தொங்கிய தாலியைத் தூக்கி தன் முகத்துக்கு முன் கொண்டு வந்தவன், “ம்ம்ம்… இதை நான் தான் உன் கழுத்துல கட்டினேன்ல. இதைக் கட்டினா நீ என் பொண்டாட்டி ஆகிடுவியா?” எனக் கேட்டான் என்ன உணர்வு என்றே அறிய முடியாத ஒரு குரலில்.

ரன்வீரின் பேச்சு ஒரு பக்கம் பயத்தை ஏற்படுத்த, இன்னொரு பக்கம் அவனின் நெருக்கம் தயக்கத்தை ஏற்படுத்த, எல்லாவற்றையும் தாண்டி அவனிடமிருந்து வந்த மது வாடையில் மீராவிற்கு குமட்டிக் கொண்டு வந்தது.

ஏதோ ஒரு‌ தடவை தோழிகள் வைத்த சவாலுக்காக மதுவைத் தொட்டிருந்தாலும் அதன் பின்னர் நடந்தவைகள் இனி ஒரு நாளும் மதுவைத் தொடக் கூடாது என்ற முடிவை மீராவை எடுக்க வைத்தது.

“என்ன? பதிலைக் காணோம்? அப்படியா? இந்த மஞ்சள் கயிற்ற உன் கழுத்துல கட்டினா நான் உனக்கு பொண்டாட்டின்ன உரிமைய தரணுமாம். அப்படின்னு என் அம்மா சொல்றாங்க. ஆமா… அவங்க எனக்கு அம்மாவா? இல்ல உனக்கு அம்மாவா? பெத்த பையன் மனசுல என்ன இருக்குன்னே புரிஞ்சிக்காம அவங்க ஆசைய என் கிட்ட திணிக்கிறாங்க.” என்றான் ரன்வீர் விரக்தியாக.

மீராவோ பதில் கூறாமல் ரன்வீரின் முகத்தையே வெறித்திருந்தாள்.

அவனின் வார்த்தைகள் அவளுக்கு வலியைக் கொடுத்தாலும் அப்படியாவது தன்னவனின் மனதிலுள்ள பாரம் குறையட்டும் என்ற எண்ணத்தில் அமைதி காத்தாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
10
+1
33
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment