அடுத்த பேருந்து விடிந்த பிறகு தான் என்று தெரிந்ததும், அங்கிருந்த இருக்கையில் தன் பையை அருகில் வைத்துக் கொண்டு பயந்தபடி அமர்ந்தாள் தெய்வானை.
உறங்கிக் கொண்டிருக்கும் அலுவலகர் தவிர, அங்கு வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறியே இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தாள். தூரத்தில் ஒரு இருக்கையில் யாரோ படுத்து இருப்பது போல் தெரிந்தது.
காலையில் குடித்த காபி தான். அதன் பிறகு தண்ணீரைத் தவிர வேறு எதுவும் அவள் இதுவரை அருந்தவில்லை. பசியும் வயிற்றைக் கிள்ளியது. உறக்கம் வருவது போல் இருக்க, அப்படியே தன் பையில் தலையை சாய்த்தாள். உறக்கமா? மயக்கமா? என்ற தெரியாத நிலை. தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க, கஷ்டப்பட்டு கண்களை திறக்க முயன்றாள்.
மயக்கத்தில் கண்கள் திறக்க முடியாமல் போக, யாரோ இருவர் தன்னிடம் நெருங்குவது போல் இருந்தது. மயக்கத்திலும் அவளது உள்ளுணர்வு விழித்துக் கொள்ள, தன் தலையை தூக்கி தன் உறக்கத்தை கலைக்க முயற்சி செய்தாள். அதற்குள் அவ்விருவரும் அவளின் அருகே வந்து அவளின் வாயை மூடி தூக்கினர்.
தனக்கு ஏதோ ஆபத்து என்று கத்த முயற்சி செய்தாள். அவர்களின் அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது பசியின் காரணமாகவோ சற்றென்று மயக்கம் வர, அவர்கள் மீதே சரிந்து மயங்கும் தருவாயில், “டேய் யாருடா நீங்க? என் பெண்ணை என்னடா பண்றீங்க?” என்று குரல் கேட்டது.
திடீரென்று கேட்ட பெண்மணியின் குரலில் திடுக்கிட்ட கயவர்கள் இருவரும், அவளை அந்த பெஞ்சிலேயே விட்டுவிட்டு வேகமாக சென்று விட்டார்கள். அப்பெண்மணியின் குரல் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த டிக்கெட் அலுவலகரும் கண் விழித்து “என்ன ஆயிற்று?” என்று கேட்க,
“யாரோ இருவர் வந்து இப்பெண்ணை கடத்த முயற்சி செய்தார்கள்” என்றார் அப் பெண்மணி.
தெய்வானையோ மயங்கி இருக்க, இருவரும் அவளின் மயக்கம் தெளிவிக்க முயன்றனர். தண்ணீரை தெளித்து அவளின் முகத்தை துடைத்து விட்டார் அப்பெண்மணி. முகத்தில் தண்ணீர் பட்டதும் சிறிது மயக்கம் தெளிந்த தெய்வானை, கண்களை சிமிட்டி திறந்து அருகில் இருந்த பெண்மணியையும் அலுவலகரையும் கண்டு மலங்க மலங்க விழித்தாள்.
“அதன் பிறகு நடந்த ஒவ்வொன்றும் தான் உங்களுக்கு தெரியுமே அம்மா. இதுதான் நான் உங்களை பார்ப்பதற்கு முன்பு நடந்தது. எதையும் மறைக்காமல் உங்களிடம் சொல்லிவிட்டேன் அம்மா” என்று அவரின் மடியில் படுத்துக் கொண்டாள்.
அவளை பார்த்த நாள் அன்று நடந்தது அனைத்தையும் நினைத்துப் பார்த்தார் வள்ளியம்மாள். ஆம். அன்று தெய்வானையை காப்பாற்றியது வள்ளியம்மாள்தான்.
தன்னிடமிருந்த தண்ணீரை தெய்வானைக்கு புகட்டிய வள்ளியம்மாள், “யாருமா நீ? தனியாக வந்து இப்படி ஆபத்தில் மாட்டிக்க பாத்தியே!” என்று உண்மையான அக்கறையில் வினவினார்.
தெய்வானைக்கோ தன்னை பற்றி என்ன சொல்லுவது என்று தெரியாமல் கண்ணீர் வடிந்தது. “சரி, அழாதே! எங்கே போகணும்? என்றார் வள்ளியம்மாள்.
“கன்னியாகுமரி” என்று அவள் கூறியதும்,
“நானும் அங்கு தான் போகணும்” என்று அவளின் அருகில் அமர்ந்து “ஏதாவது சாப்பிட்டாயா?” என்றார்.
இல்லை என்று மறுப்பாக தலையாட்ட, தன்னிடம் இருந்த வாழைப்பழத்தை எடுத்து அவளுக்கு கொடுத்து சாப்பிடும்படி செய்தார். இரண்டு பெரிய வாழைப்பழங்களை வேக வேகமாக சாப்பிட்ட தெய்வானைக்கு, பழங்கள் உள்ளே சென்றதும் தான் பசி மட்டுப்பட்டது போல் இருக்க, கண்களும் தெளிவாக தெரிந்தது போல் இருந்தது.
அவருக்கு மிகவும் நன்றி கூறினாள் தெய்வானை.
“என் பெயர் வள்ளி. கோட்டயத்தில் உள்ள என் மகன் வீட்டிற்கு போய் இருந்தேன். கொரோனா பரவியதால், இத்தனை நாட்கள் கழித்து இன்று தான் என் வீட்டிற்கு செல்லலாம் என்று இங்கு வந்தேன். கடைசி பஸ்ஸை விட்டு விட்டதால் பேருந்து நிலையத்திலேயே அடுத்த பேருந்துக்காக காத்துக் கிடந்தேன். நீ வருவதை பார்த்தேன். சரி நீயும் காலையில் பேருந்துக்காக தான் இருக்கிறாய் என்று நினைத்து, உன்னை பார்த்துக்கொண்டு தான் அங்கு படுத்து இருந்தேன்.
நீ தலை சாய்ந்து உறங்க தொடங்கியதும் இரண்டு பேர் உன்னிடம் வந்தார்கள். முதலில் அவர்கள் உனக்குத் தெரிந்தவர்கள், உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள் என்றுதான் நினைத்தேன். வந்தவன் உன் வாயைப் பொத்தியதும்தான் உனக்கு ஏதோ ஆபத்து என்று வந்தேன்” என்று கூறினார்
அவர் கூறியதை கேட்டதும் பயந்த தெய்வானை, “ரொம்ப நன்றி மா” என்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “எனக்கு இங்கு அவர்கள் யாரையும் தெரியாதம்மா. நான் ஒரு அனாதை. எனக்கு போக்கிடம் எதுவும் இல்லை. கால் போன திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்” என்று கண்ணீரோடு கூறினாள் தெய்வானை.
அவளின் வயதும் தோற்றமும் ஏதோ கவலையில் இப்படி கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டார் வள்ளியம்மாள். “உனக்கு யாரும் இல்லை என்று கவலைப்படாதே! எனக்கு இருக்கும் ஒரே பையனும் கேரளா கோட்டயத்தில் வேலை விஷயமாக அங்கேயே அவன் குடும்பத்தை நிர்ணயித்துக் கொண்டான். இனிமேல் இங்கு வர மாட்டேன் என்று சொல்லிவிட்டான். ஆகையால் தான் எனக்கு அவனைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது நான் சென்று பார்த்துவிட்டு வருவேன். இங்கு நான் தனியாகத்தான் இருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னுடன் வந்து தங்கிக் கொள்” என்றார்.
அவர் கூறுவதும் தெய்வானைக்கு சற்று நிம்மதியாக இருந்தது. போகப் போக்கிடம் இல்லாமல் இருந்தவளுக்கு ஒரு இடம் கிடைத்ததில் மகிழ்ந்து, “ரொம்ப நன்றி மா” என்று அவளது கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
“அம்மாவுக்கு யாராவது நன்றி சொல்லுவாங்களா?” என்று சொல்லிய வள்ளி “உன் பெயர் என்ன?” என்றார்.
தெய்வானையும் தன் பெயரை கூற, தனிமையில் இருந்த இரு உள்ளங்களும் மனதளவில் நெருங்கி விட்டனர்.
தெய்வானையின் பேச்சை வைத்தே அவள் நேற்றிலிருந்து சரியாக சாப்பிடவில்லை என்பதை புரிந்து கொண்டார் வள்ளியம்மாள். ஆகையால் காலையில் முதல் பேருந்தில் கிளம்பாமல் ஏதாவது அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்து விட்டார். “நீ இந்த பெஞ்சில் படுத்து நிம்மதியாக கொஞ்ச நேரம் தூங்கு” என்று அருகில் கீழே உட்கார்ந்து கொண்டார் வள்ளியம்மாள்.
“அச்சோ அம்மா, நீங்க ஏன் கீழ உட்கார்றீங்க? பெஞ்சிலேயே உட்காருங்க. நான் தூங்கவில்லை” என்று மறுத்த தெய்வானையிடம்,
“விடிந்த பிறகு தான் பஸ் வரும். அதுவரைக்கும் சும்மா உக்காந்துகிட்டு என்ன செய்வ? பேசாம படுத்து தூங்கு. உன்னை பார்த்தால் ரொம்ப களைப்பா தெரியுற. நான் இவ்வளவு நேரம் தூங்கிட்டு தான் இருந்தேன். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்படியே தூக்கம் வந்தால் உன்னை எழுப்புகிறேன். அதுவரை நீ நிம்மதியாக தூங்கு” என்றார்.
தனக்கு உறக்கம் வரவில்லை என்று சொன்னவளை கட்டாயப்படுத்தி படுக்க வைத்தார் வள்ளியம்மாள். வேண்டாம் என்று சொல்லி படுத்தவள், கண்களை மூடிய அடுத்த ஒரு நிமிடத்திலேயே உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.
நன்றாக தூங்கிய தெய்வானை சலசல என்ற பேச்சு சத்தத்தில் கண் விழித்தாள். நன்றாக விடிந்திருந்தது மக்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.
ரொம்ப நேரம் தூங்கிட்டோமோ? என்று பதறி எழுந்து அமர்ந்தாள். அவள் எழுந்ததும் “ஏன் இப்படி அவசரமாக எழுந்திருக்கிறாய்?” என்று கண்டித்த வள்ளியம்மாள், “அங்க பாத்ரூம் இருக்கு போயிட்டு வா” என்று அவள் கையில் சில்லறையை கொடுக்க,
“என்னிடம் இருக்குதும்மா” என்று தன் கைப்பையில் பணம் எடுக்க போக, “பரவாயில்லை போயிட்டு வா” என்று அவள் கையில் சில்லறையை திணித்து அனுப்பினார்.
அங்கிருந்த பொதுக்கழிப்பிடம் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள் தெய்வானை. அவள் வரும்பொழுது அவளுக்கு கையில் காபியை கொடுத்தார்.
“ஏன் அம்மா உங்களுக்கு சிரமம்? நான் வந்து வாங்கி இருப்பேனே!” என்று சொல்ல,
“இதில் என்ன சிரமம். என் மகளுக்கு நான் செய்வதாக நினைத்துக் கொள்கிறேன்” என்றார்.
வள்ளியம்மாளின் ஒவ்வொரு செயலுமே, தெய்வானைக்கு தனது தாய் சரஸ்வதியை ஞாபகப்படுத்த, கண் கலங்கினாள் தெய்வானை.
“ஒரு காபி கொடுத்ததற்கு எதுக்கு அழுற” என்ற வள்ளியம்மாள் “சீக்கிரம் குடி. இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம கிளம்பனும்” என்றார்.
ஒரு வாய் காபி குடித்ததும் வயிறு கடமுடா என்று பிரட்டியது. இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே கரந்த பசும்பாலில் காபி குடித்தவளுக்கு, கடையில் உள்ள காபி குடிக்க பிடிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் நேற்று முழுவதும் சாப்பிடாததால் குடலோ பிரட்டுவது போல் இருக்க, “என்னால் முடியல அம்மா. ஏதோ செய்யுது” என்றாள் வேர்வை வழிய.
அவளின் முகத்தை கண்டவர் “என்ன ஆயிற்று?” என்று தன் முந்தானையால் அவளின் நெற்றியில் உள்ள வேர்வையை துடைக்க, அப்படியே கண் சொருகி மயங்கி விட்டாள் தெய்வானை.
“என்ன ஆச்சு?” என்று வள்ளி பதற, அருகில் இருந்தவர்களும் என்ன? என்று நான்கு அடி தள்ளி நின்றே விசாரித்தார்கள். ஒருவேளை கொரோனா தான் அந்த பெண்ணுக்கு வந்து விட்டதோ? என்று.
அருகில் இருந்த ஒருவர் “சீக்கிரமா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க. இப்படி பொது இடத்தில் பண்ணுனீங்கன்னா எப்படி?” என்று முகம் சுளிக்க,
வள்ளியம்மாளும் மக்கள் பயத்தை புரிந்து “அருகில் ஏதாவது மருத்துவமனை இருக்கிறதா?” என்றார்.
பின்னர் ஒருவர் உதவி புரிய, தங்கள் இருவரது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு, ஆட்டோ பிடித்து பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்தார். அவளை பரிசோதித்த மருத்துவர் “யார்? என்ன? என்று விசாரித்தார். “தன் மகள் என்றும், மகன் வீட்டிற்கு போய்விட்டு எங்களது வீட்டிற்கு போய் கொண்டு இருக்கின்றோம்” என்று கூறினார் வள்ளியம்மாள்
“ஓ” என்ற மருத்துவர், “உங்கள் மகளுக்கு திருமணம் முடிந்து விட்டதா?” என்று சந்தேகமாக கேட்டார். நேற்று இரவு தான் அவளை பார்த்தார். திருமணமாகிவிட்டதா என்று தெரியவில்லையே? என்று யோசிக்க, அவளின் நெற்றியில் இருந்த குங்குமம் அவர் கண்ணுக்கு தெரிய,
“கல்யாணம் எல்லாம் ஆயிடுச்சு டாக்டர். மாப்பிள்ளை வெளியூர் போயிருக்கிறார். அதனால் தான் இவள் என்னுடன் இருக்கிறாள்” என்றார்.
“உங்கள் மகள் குழந்தை உண்டாகி இருக்கிறார் என்று தோன்றுகிறது. எதற்கும் அவர் மயக்கம் தெளிந்ததும் பரிசோதித்து விடலாம்” என்றார் மருத்துவர்.
அவருக்கு அதில் மகிழ்வதா? வேண்டாமா? என்று தெரியவில்லை. இருந்தாலும் புதிதாக ஒரு ஜீவன் உருவாகி இருக்கிறது என்பதில் மகிழ்ந்த வள்ளியம்மாள், “ரொம்ப நன்றி டாக்டர்” என்றார்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..