நாளை காலையில் நமக்கு திருமணம் என்று குகன் சொன்னதும் அதிர்ந்து எழுந்து விட்டாள் தெய்வானை.
அவள் கையைப் பிடித்து தன் அருகில் அமர்த்திய குகன் “ப்ளீஸ் புரிந்துகொள் தெய்வா! இனிமேலும் நான் காலம் தாழ்த்த விரும்பவில்லை. நோயின் தீவிரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை நாம் தனியாக இறந்து விட்டால், கள்ளக் காதலர்கள் தனியாக இருக்கும் பண்ணை வீட்டில் இறந்து விட்டார்கள் என்று செய்தி வரும்.
அதுவே திருமணம் செய்து கொண்டால், இளம் கணவன் மனைவியர் இறந்து விட்டார்கள் என்று செய்தி தான் வரும்” என்று உருக்கமாக பேசினான்.
அவன் பேசுவதை உண்மை என்று நம்பிக் கொண்டு ‘ஒருவேளை நாம் இறந்து விட்டால், இவர் சொல்லுவது போல, என் அம்மாவும் இவர் என் கள்ளக்காதலன் என்று நினைத்து விடுவார்களோ’ என்று அரை மனதாக திருமணத்திற்கு சம்மதித்தாள்.
அவள் பயந்த முகத்தையும் கண்டு வருத்தமாக இருந்தாலும், அவளது சம்மதத்தில் மனமகிழ்ந்தான் குகன். அன்றைய பொழுது அப்படியே அமைதியாக கழிய, மறுநாள் காலையில் வழக்கம்போல் அவளுக்கு முன்பே எழுந்த குகன் ஏழு மணிக்குள்ளாகவே வெளி வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டான். தோட்டத்தில் உள்ள பூக்களையும் பறித்து வைத்து விட்டான்.
தெய்வானை எழுந்ததும் அவளுக்கு குடிப்பதற்கு காபியை கொடுத்தான் குகன். “சீக்கிரமா குளிச்சிட்டு வா. ஒன்பது பத்ரைக்குள்ள நம்ம கல்யாணம் நடக்கணும்” என்றான்.
என்னதான் அவன் கூறியதற்கு சம்மதித்தாலும் இப்படி பெரியவர்கள் சம்மதம் இல்லாமல் தனியே திருமணம் செய்வது தெய்வானைக்கும் வருத்தமாக இருக்க, மௌனமாக சரி என்று தலையாட்டி அறைக்குச் சென்றாள்.
கோனாரின் மகள் கொடுத்த உடையில் இருந்த புடவையை குளித்துவிட்டு அணிந்து கொண்டாள். தயாரானதும் தயக்கமாக அறையை விட்டு வெளி வர, அங்கிருந்த சோபாவில் வேஷ்டி சட்டை அணிந்தபடி அமர்ந்திருந்தான் குகன்.
அவளை கண்டதும் புன்னகைத்த குகன் “சாப்பிடுகிறாயா?” என்றான்.
அவள் வேண்டாம் என்று மறுப்பாக தலையாட்ட,
“சரி கல்யாணம் முடிச்சுட்டு சேர்ந்தே சாப்பிடுவோம்” என்று அவள் கையில் ஒரு டம்ளரை கொடுத்தான்.
அதில் ஹார்லிக்ஸ் இருக்க “இப்ப இதை குடிச்சுக்கோ! அப்புறமா சாப்பிடலாம்” என்ற படி ஒரு கூடையை காண்பித்து, “இதில் உள்ள பூக்களை உனக்கு தலைக்கு தேவையான படி கட்டிக்கொண்டு, மிச்சத்தை இரண்டு மாலை போல கட்டி விடு” என்றான்.
அவள் அமைதியாக பூத்தொடுக்க அமர்ந்ததும், “இது ஒரு டிஃபரண்டான ஃபீலாக இருக்குதுல்ல. நம்ம கல்யாணத்துக்கு நாமளே வேலை செய்துக்கிட்டு இருக்கோம்” என்றான் ஒருவித பூரிப்புடன்.
அவளோ எந்த பதிலும் சொல்லாமல் பூக்களை தொடுக்க ஆரம்பித்தாள். அவளுக்குள் இந்த திருமணம் சரியா? தவறா? என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. எத்தனை நாட்கள் கழித்துச் சென்றாலும், தனது தாய் தன்னை நம்புவாள். ஆனால் ஊரும் உலகமும் என்ன பேசும் என்ற ஒரு பயம் அவளுக்கு இருந்ததால் பேசாமல் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள்.
திருமணத்திற்கு மற்றுமொரு காரணம், ஒருவேளை குகன் சொல்வது படி அவளது தாய் மாமன் அழகிற்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோ என்ற பயமும் அவளுக்கு இருந்தது. அது மட்டுமல்லாது ஏனோ குகனையும் அவளுக்கு பிடிக்கத்தான் செய்தது. ஒருவேளை தனியாக இருப்பதால் அவனை பிடித்து இருக்கிறதோ? என்ற எண்ணமும் தோன்றியது. இப்படியாக பலவாறான எண்ணங்கள் அவளுக்குள் ஓட அமைதியாக பூக்களை தொடுத்து முடித்தாள்.
அரை மணி நேரத்தில் அவளின் அருகில் வந்து அமர்ந்த குகன், “எவ்வளவு அழகாக மாலையை தொடுத்திருக்கிறாய்?!” என்று வியந்து பார்த்தான்.
அவளுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நானா இவ்வளவு அழகாக பூக்களை கட்டியது என்று.
அதைப் பார்த்ததும் அவன் “பார்த்தாயா! உனக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்கு. அதனாலதான் மாலை இவ்வளவு அழகாக வந்திருக்கிறது” என்றான்.
பதில் எதுவும் சொல்லாமல் ஒருவேளை அதுதான் உண்மை போல என்று நம்பினாள் தெய்வானை.
மணி ஒன்பதரை தாண்ட அவளின் கைகளை பற்றிய குகன் “எதைப் பற்றியும் ரொம்ப யோசிக்காத தெய்வா. நான் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். உன் அம்மாவிற்கும் நடந்த விசயங்களை புரிய வைப்பேன். அவர்களும் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். அதைப்பற்றி எல்லாம் நீ கவலைப்பட்டு, இன்றைய இந்த அருமையான நேரத்தை கவலையில் கழித்து விடாதே!” என்று அவள் நெற்றியில் முட்டினான்.
சிறு குழந்தையிடம் பேசி புரிய வைப்பது போல் தன்னிடம் பேசும் குகனை நோக்கி தன் மனது கொஞ்சம் கொஞ்சமாக சாய்வதை உணரத் தொடங்கினாள் தெய்வானை. மென்மையாக புன்னகைத்துக் கொண்டு அவனுடன் எழுந்து நிற்க, அவன் அவளை அழைத்துக்கொண்டு அங்கிருந்த பூஜை அலமாரியின் அருகில் சென்று நின்றான்.
அவர்கள் அலமாரியில் இருந்த பிள்ளையார் புகைப்படத்தையும் அவர்கள் குலதெய்வ புகைப்படத்தையும் அழகாக துடைத்து பூக்கள் வைத்து அலங்கரித்து இருந்தான் குகன்.
அவள் விளக்கேற்றியதும் “எங்கள் குலதெய்வத்தின் சாட்சியாக, இன்றிலிருந்து உன்னை என் மனைவியாக்கிக் கொள்கிறேன். அதில் உனக்கு சம்மதமா?” என்றான் அவனின் கண்களை பார்த்து.
அவள் படபடப்பாக தலைகுனிந்து நிற்க “தெய்வா!” என்றான் மென்மையாக.
அவள் மெதுவாக தலையை நிமிர, “என்னை கல்யாணம் செய்துகொள்ள உனக்கு சம்மதமா?” என்று மீண்டும் அவள் கண்களை பார்த்தபடியே கேட்டான்.
எல்லாம் ஏற்பாடும் அவர் இஷ்டத்துக்கு செய்துட்டு, இப்ப வந்து சம்மதம் கேட்கிறார் என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் சம்மதம் இல்லை என்று சொன்னால், உடனே நிறுத்தி விடுவாரா? ஒருவேளை அப்படி நிறுத்திவிட்டால் மீண்டும் அவருடன் எனக்கு திருமணம் நடக்குமா? என்னை முற்றிலும் மறந்து விட்டால் என்ன செய்வது? திரும்ப அவரை நான் எப்படி பார்த்து சம்மதிக்க வைப்பது? அவரில்லாமல் என்னால் வாழ முடியுமா? ஏன் மனதிற்குள் இப்படி எல்லாம் ஓடுகிறது? பார்த்து ஒரு வாரம் கூட ஆகவில்லை, அதற்குள் அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று ஏன் எனக்கு தோன்றுகிறது? என்று பலவராக நினைத்துக் கொண்டு அமைதியாக நின்று இருந்தாள்.
குகனுக்கு நெஞ்சம் படபடப்ப தொடங்கியது. ஒருவேளை அவள் மறுத்து விடுவாளோ? என்று. அவள் சம்மதித்து விடுவாள் என்ற ஏதோ ஒரு நம்பிக்கையில் இதுவரை எல்லாம் ஏற்பாட்டையும் செய்து விட்டான். திருமணம் பற்றி அவன் கூறும்போது கூட, அவள் மறுத்து இருந்தால் அப்படியே எல்லாவற்றையும் நிறுத்தி இருப்பான்.
அவளின் செய்கையை வைத்து அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். ஆனால் அவள் யாருமில்லாமல் திருமணம் செய்வதற்கு தான் தயங்கிக் கொண்டிருக்கின்றாள் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆனால் இப்போதைக்கு உள்ள சூழ்நிலை எல்லோருடைய சம்மதத்திற்கும் காத்திருக்கும் படி செய்யவில்லை.
அது மட்டும் அல்லாமல் அவனது அம்மா எவ்வளவுதான் அவன் மீது பாசமாக இருந்தாலும், அவருக்கு அவரது அண்ணன் மகளையோ அல்லது அப்பாவின் தங்கை மகளையோ தான் நான் திருமணம் முடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்படிப்பட்டவரிடம் தெய்வானையை பற்றி சொல்லி சம்மதம் கேட்பது நடக்காத காரியம்.
ஒருவேளை எனக்கு அத்தை பெண்ணையோ! மாமா பெண்ணையோ! பிடித்திருந்தால் கூட அவர்களில் யாரையாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டிருக்கலாம். இருவரையும் பார்க்கும் பொழுது தனக்கு மனைவியாகப் போகிறவள் என்ற எண்ணம் துளிகூட தோன்றவே இல்லை. அதை தன் தாயிடம் எத்தனையோ தடவை கூறினாலும், அதை அவர் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை.
ஆனால் தெய்வானையை பார்த்த உடனேயே, ஏனோ அவளை விட்டு பிரிய கூடாது என்று மனம் துடிப்பதை உணர்ந்தான். அதனால் தான் இவ்வளவு பிடிவாதமாக திருமணம் வரைக்கும் வந்துவிட்டான். இப்பொழுது அவளது மௌனம் அவனை கொன்றது ஒருவேளை மறுத்து விடுவாளோ? என்று.
ஆனால் ஒரு விசயத்தில் மட்டும் உறுதியாக இருந்தான். ஒருவேளை அவள் மறுத்து விட்டால் திருமணத்தை இன்று நடத்தக்கூடாது. தன் தாய் தந்தையரிடமும் அவளது தாயிடமும் அனுமதி வாங்கிக்கொண்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று.
இருவர் கையிலும் தெய்வானை தொடுத்த மாலை இருக்க, இருவரும் எதிரெதிரே நின்றுகொண்டு இருந்தார்கள்.
அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த குகன், அவளின் அமைதியை கலைக்கும் விதமாக, தன் ஒரு விரலால் அவள் நாடி பற்றி முகத்தை தன்னை பார்க்க செய்து, “என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதமா?” என்று அவளின் முகத்தை ஏக்கமாக பார்த்தான்.
அவன் முகத்தைக் கண்டதும் மறுப்பதற்கு அவளுக்கு தோன்றாமல், சம்மதம் என்று தலையாட்ட, அவள் கண்களை பார்த்துக் கொண்டே, அவள் கழுத்தில் மாலையை போட்டான். பின்னர் அவள் கைகளை பற்றி அவளிடம் இருந்த மாலையை தனக்கு போட வைத்தான்.
“ரொம்ப தேங்க்ஸ் பொண்டாட்டி” என்று சொல்லி, அவனது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கழட்டி, அவளின் தலைவழியாக அவளுக்கு அணிவித்து, அவளது நெற்றியோடு தன் நெற்றியை வைத்து,
“இந்தக் கணம் முதல், உலகத்தில் உள்ள எல்லா கடவுளும் சாட்சியாக, உன்னை நான் மனைவியாக ஏற்றுக் கொண்டேன். இனிமேல் எந்த சக்தியும் நம்மை பிரிக்க முடியாது” என்று கூறி அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் குகன்.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..