158 views

முதல் முறை சொந்த ஊரை விட்டு பல மைல்கள் கடந்து தன் கனவை நோக்கி பயணித்து சென்னை வந்தடைந்தாள் ரிதன்யா.

பேரூந்தில் இருந்து இறங்கியதுமே சென்னை மாநகரத்தின் பரபரப்பான சூழல் ஊட்டியிலேயே பிறந்து வளர்ந்தவளை வியப்படையச் செய்தது.

கையில் பையுடன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளின் பின்னால் இருந்து, “ரியா…” என்ற குரல் கேட்கவும் புன்னகையுடன் குரல் வந்த திசையில் திரும்பினாள்.

அபிமன்யு ரிதன்யாவைப் பார்த்து புன்னகையுடன், “ஹாய்…” எனக் கை அசைக்க, பதிலுக்கு கையசைத்த ரிதன்யா அபிமன்யுவை நோக்கி நடந்தாள்.

ரிதன்யாவின் கரத்தில் இருந்த பையை வாங்கிக் கொண்ட அபிமன்யு, “சாரி ரியா… ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டேன்… அதான் லேட்… வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” எனக் கேட்டான்.

ரிதன்யா, “இல்ல அபி… இப்போ தான்… ஊட்டில சுத்தியும் சைலன்ட்டான ப்ளேஸ்ல இருந்துட்டு சென்னைல இதெல்லாம் பார்க்கும் போது டிஃபரன்ட்டான ஃபீலா இருக்கு…” என்க, “இதெல்லாம் என்ன ரியா? போக போக நம்ம சென்னையோட அருமை பெருமை எல்லாம் நீயே புரிஞ்சிக்குவ…” என்றான் அபிமன்யு புன்னகையுடன்.

அபிமன்யு, ரிதன்யா இருவருக்குமே ஒரே கல்லூரியில் தான் பயிற்சிக் காலம் நடந்தது. அன்றிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள்.

இப்போதும் அபிமன்யு பேராசிரியராக கடமை புரியும் கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே ரிதன்யாவிற்கும் பேராசிரியராக வேலை கிடைத்துள்ளது.

அபிமன்யு ரிதன்யாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்ல, அவளை திவ்யாவும் ஹரிஷும் இன்முகத்துடன் வரவேற்றனர்.

ரிதன்யா, “வணக்கம் அங்கிள்… வணக்கம் ஆன்ட்டி…” எனக் கை கூப்பவும் இருவருக்கும் முதல் பார்வையிலேயே அவளைப் பிடித்து விட்டது.

திவ்யா, “எப்படி இருக்கடா ரியா? ட்ராவலிங் எல்லாம் கம்ஃபடபளா இருந்ததா?” எனக் கேட்க, “ஆமா ஆன்ட்டி… ஆல் ஓக்கே…” என்றாள் ரிதன்யா புன்னகையுடன்.

ஹரிஷ், “திவி… ரொம்ப தூரம் ட்ராவல் பண்ணி வந்தது அந்தப் பொண்ணுக்கு டயர்டா இருக்கும்… ரியாம்மா… நீ உள்ள போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வாடா முதல்ல…” என்கவும் திவ்யா ரிதன்யாவை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

முதல் முறை தன் மகன் ஒரு பெண்ணை வீட்டிற்கு அழைத்து வரவும் அபிமன்யுவைத் தனியே பிடித்துக்கொண்ட ஹரிஷ், “அப்புறம் மகனே… எப்போ கல்யாணம்?” எனக் கேலியாகக் கேட்கவும் அவரைப் புரியாமல் பார்த்த அபிமன்யு, “என்னப்பா சொல்றீங்க? யாருக்கு கல்யாணம்?” எனக் கேட்டான்.

ஹரிஷ் அபிமன்யுவின் தோளில் கரத்தைப் போட்டபடி, “இல்லடா மை சன்… பொண்ணு கூட ரெடின்னு நினைக்கிறேன்… அதனால தான் கேட்டேன்…” என்றவனின் பார்வை ரிதன்யாவிடம் செல்ல, அதனைக் கவனித்த அபிமன்யு தலையில் அடித்துக் கொண்டான்.

அபிமன்யு, “அப்பா… ஏன்ப்பா உங்க புத்தி இப்படி போகுது? நீங்க அந்தக் காலத்துல பெரிய லவர் பாயா இருந்து அம்மாவை டைரெக்டா தாத்தா, பாட்டி கிட்ட இன்ட்ரூ பண்ணினதனால என்னையும் அப்படி நினைச்சீங்களா? எனக்கு இந்த லவ் எல்லாம் செட் ஆகாது… நேரம் வரும் போது நீங்களும் அம்மாவுமே நல்ல பொண்ணா பார்த்து கட்டி வைங்க…” என்கவும் அவனைப் பார்த்து உதட்டை சுழித்த ஹரிஷ், “என் பையன்னு வெளிய சொல்லிடாதே டா… அப்புறம் எனக்கு தான் அசிங்கம்… லவ் எல்லாம் செட் ஆக மாட்டேங்குதாமே சாருக்கு…” எனும் போதே, “அப்பாவும் பையனும் என்னை விட்டுட்டு தனியா என்ன டிஸ்கஷன்?” எனக் கேட்டவாறு வந்தாள் திவ்யா.

அபிமன்யு, “அம்மா இந்த அப்பா…” எனக் கூற வரும் போதே அவனின் வாயில் கை வைத்து அடைத்த ஹரிஷ், “மகனே… உங்க ஆத்தா கிட்ட மட்டும் நான் கேட்டதை மாட்டி விடாதே டா… நீ என்ன சொன்னாலும் அப்பா செய்றேன்…” என அபிமன்யுவிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவன் திவ்யாவிடம், “அது ஒன்னும் இல்ல திவி… சும்மா தான் பேசிட்டு இருந்தோம்… அப்பா மகனுக்குள்ள ஆயிரம் இருக்கும்… உனக்கு என்ன?” என சமாளித்தான்.

இருவரையும் சந்தேகமாகப் பார்த்த திவ்யா, “ரியா வந்துட்டா… சாப்பாடு எடுத்து வெச்சி இருக்கேன்… வாங்க சாப்பிட ரெண்டு பேரும்…” என்று விட்டு அங்கிருந்து செல்லவும் அபிமன்யுவின் வாயிலிருந்த தன் கையை எடுத்த ஹரிஷ் பெருமூச்சு விட்டான்.

அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்த அபிமன்யு, “ஏதோ இன்னைக்கு தப்பிட்டீங்கப்பா… அப்புறம் நீங்க சொன்னதை மறந்துடாதீங்க… இருந்தாலும் அம்மாவுக்கு நீங்க ரொம்ப தான் பயப்படுறீங்க…” என்கவும், “நான் எங்க உங்க அம்மாவைப் பார்த்து பயந்தேன்? உங்க அம்மா எல்லாம் எனக்கு ஒரு ஆளா?” எனக் கேட்டான் ஹரிஷ்.

உடனே அபிமன்யு, “அம்மா நீங்க எப்போ வந்தீங்க?” என்கவும், “அவன் பொய் சொல்றான் திவி… நான் எதுவும் சொல்லல…” என ஹரிஷ் பதறித் திரும்பினால் அங்கு யாருமே இருக்கவில்லை.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த அபிமன்யுவை முறைத்த ஹரிஷ் அவனின் காதைப் பிடித்து இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகே சென்றார்.

நால்வரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, “ரியா… எதுக்கு தனியா வீடு எல்லாம் பார்த்துக்கிட்டு? நம்ம வீட்டுலயே இருக்கலாம்ல…” எனக் கேட்டாள் திவ்யா.

அவளைப் பார்த்து புன்னகைத்த ரிதன்யா, “தேங்க்ஸ் ஆன்ட்டி… நீங்க இப்படி கேட்குறதே பெரிய விஷயம் தான்… பட் அது சரிப்பட்டு வராது ஆன்ட்டி… அபி ஆல்ரெடி வீடு எல்லாம் பார்த்து தான் வெச்சிருக்கான்… எல்லாம் செட் ஆனதுக்கு அப்புறம் அப்பாவையும் இங்கயே கூட்டிட்டு வரலாம்னு இருக்கேன்…” என்க, “நீ இவ்வளவு சொல்றதுக்கு அப்புறமும் எங்களால உன்ன ஃபோர்ஸ் பண்ண முடியாதுமா… பட் கண்டிப்பா அடிக்கடி நம்ம வீட்டுக்கு வரணும்… ஓக்கேயா?” என ஹரிஷ் அன்புக் கட்டளை இடவும் அதனைப் புன்னகையுடன் ஏற்றாள் ரிதன்யா.

நால்வரும் சாப்பிட்டு முடிந்து ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அபிமன்யு, “ரியா… நீ சாப்பிட்டு வா… நான் உன்ன அந்த வீட்டுல ட்ராப் பண்றேன்… எல்லாம் ஓக்கேயான்னு பார்த்து வீட்டுக்கு தேவையானது எல்லாம் இப்பவே வாங்கினா உனக்கும் ஈஸியா இருக்கும்…” என்கவும், “என்ன அபி உனக்கு அவசரம்? இப்போ தானே அவ வந்தா… கொஞ்சம் நேரம் இருக்கட்டுமே…” எனக் கடிந்து கொண்டாள் திவ்யா.

ரிதன்யா, “ஐயோ இல்ல ஆன்ட்டி… பரவால்ல… இன்னொரு நாளைக்கு நிச்சயம் வரேன்… நாளைக்கே ஜாப்ல ஜாய்ன் பண்ணணும்… சோ இப்பவே போய்ட்டு எல்லாம் பார்த்து ரெடி பண்ணினா தான் சரியா இருக்கும்…” என்றாள்.

“சரிம்மா… பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க… அடிக்கடி வீட்டுக்கு வா… உனக்கு ஏதாவது வேணும்னா இல்ல ஏதாவது பிரச்சினையா இருந்தா தயங்காம எங்க கிட்ட சொல்லு… நீயும் எங்களுக்கு அபி போல தான்…” திவ்யா கூறவும், “தேங்க்ஸ் ஆன்ட்டி…” என அவளை அணைத்துக் கொண்டாள் ரிதன்யா.

************************************
“ஹேய் பூர்ணி… உங்க அத்தான் வந்து இருக்கார்… நீ கூட சொல்லி இருக்கியே போலீஸ்னு… அவர் தான்…” என பூர்ணிமாவின் தோழி ஒருத்தி கூறவும், “என்ன? வியான் வந்து இருக்கானா? நிஜமா தான் சொல்றியா மகா?” என மகிழ்ந்த பூர்ணிமா உடனே கீழே செல்ல, அங்கு தனது ஜீப்பில் அவளுக்காக காத்திருந்தான் வியான்.

வியான், விரானை விட சில நாட்களே மூத்தவளான பூர்ணிமா தன் படிப்பை முடித்து விட்டு ஒரு ஐ.டி கம்பனியில் எச்.ஆராக பணி புரிகிறாள்.

பூர்ணிமா வந்ததும், “அத்தை உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க… சீக்கிரம் வா… எனக்கு டைம் ஆச்சு…” என அவசரப்படுத்தினான்.

அவனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இருக்கவில்லை. அவனை முறைத்து விட்டு மேலே சென்று தன் கைப்பையை எடுத்துக் கொண்டு வந்து பூர்ணிமா ஜீப்பில் ஏறவும் ஜீப் வேகமாகப் புறப்பட்டது.

வியான் ஜீப்பை ஓட்ட, அவனுக்கு பக்கத்து இருக்கையில் வாகாகத் திரும்பி அமர்ந்த பூர்ணிமா வியானையே கண் எடுக்காமல் பார்த்தாள்.

பாதையில் பார்வையைப் பதித்தவாறே, “திரும்ப இப்படி பார்த்தேன்னு வை… அடிச்சி பல்லை தட்டி கைல தந்துடுவேன்…” எனப் பல்லிடுக்கில் கோபமாகக் கூறினான் வியான்.

உடனே இவ்வளவு நேரமும் கஷ்டப்பட்டு அடக்கிய சிரிப்பை வெளி விட்ட பூர்ணிமா, “ஹஹா… எப்படி டா நீ இப்படி இருக்க? சிரிப்புன்னா என்ன விலைன்னு கேட்ப போல..‌. அப்படி இருந்தும் என்ன மந்திரம் வெச்சி இருக்கியோ தெரியலடா என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் உன் மேல தான் கண்ணு… உன்னைப் போய் நான் பார்ப்பேனா? அப்படி இந்த மூஞ்சில என்ன தான் இருக்குன்னு தான் பார்த்தேன்…” என மீண்டும் வெடித்து சிரிக்க, “பூர்ணி…” என வியான் பல்லைக் கடிக்கவும் அவனை இதற்கு மேலும் ஆத்திரப்படுத்த விரும்பாதவள், “சரி அதை விடு வியான்… எதுக்கு அம்மா என்னை திடீர்னு கூட்டிட்டு வர சொன்னாங்க?” எனக் கேட்டாள் பூர்ணிமா.

வியான், “எனக்கு தெரியல… வீட்டுக்கு தானே போற… நீயே கேட்டுக்கோ… தயவு செஞ்சி கொஞ்சம் நேரம் என்னை டிஸ்டர்ப் பண்ணாம அமைதியா வா… இல்ல இடைல இறக்கி விட்டுட்டு போயிடுவேன்…” என மிரட்டவும் கோபமாக உதட்டை சுழித்த பூர்ணிமா வியான் சொன்னதை நிச்சயம் செய்தாலும் செய்வான் என அமைதி ஆகினாள்.

பூர்ணிமாவின் வீட்டில் வண்டியை நிறுத்தவும் வீட்டில் இருந்த கூட்டத்தைப் பார்த்து பூர்ணிமா யோசனையோடு உள்ளே செல்ல, அவளை விட்டதும் கிளம்பப் போன வியானைப் பிடித்துக்கொண்ட வீர், “வியான்… ஏன் உடனே கிளம்புற? பூர்ணியை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க… நீயும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போகலாம்ல… எல்லாரும் இங்க தான் இருக்காங்க…” என்றான்.

“இல்ல மாமா… எனக்கு வர்க் இருக்கு..‌. அதான் எல்லாரும் இருக்காங்கல்ல… நான் எதுக்கு? பப்புவை டைமுக்கு சாப்பிட சொல்லுங்க… நான் வரேன்…” என்ற வியான் வீரின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அங்கிருந்து அவசரமாகக் கிளம்பினான்.

வீட்டினுள் நுழைந்த பூர்ணிமா ஹாலில் அமர்ந்து இருந்த புதியவர்களைப் புரியாமல் பார்க்க, எங்கிருந்தோ வந்த ஆத்யா, “அக்கா..‌ சீக்கிரம் வாங்க…” என பூர்ணிமாவை இழுத்துக்கொண்டு அறைக்குச் சென்றாள்.

பூர்ணிமா, “ஆது… என்ன நடக்குது இங்க? யார் அவங்க?” எனக் குழப்பமாகக் கேட்க, அங்கு வந்த தீக்ஷா, “அக்கா… அத்த இந்த சாரியை கொடுத்தாங்க… சீக்கிரம் இதைப் போட்டு ரெடி ஆகுங்க…” என அவசரப்படுத்தினாள்.

இருவரிடம் இருந்தும் ஒழுங்கான பதில் வராமல் போகவும் தீக்ஷா கொடுத்த சாரியை அணிந்துகொண்டு பூர்ணிமா வர, கையில் நகைப் பெட்டிகளுடன் அங்கு வந்தாள் ஜீவிகா.

“மா… என்னமா நடக்குது இங்க? எதுக்கு என்னை ரெடி ஆக சொன்னீங்க?” எனப் பூர்ணிமா புரியாமல் கேட்கவும் தான் கொண்டு வந்த நகைகளை தன் மகளுக்கு அணிவித்த ஜீவிகா, “உன்னை பொண்ணு பார்க்க வந்து இருக்காங்க பூர்ணி…” என்றாள் புன்னகையுடன்.

ஜீவிகா கூறியதைக் கேட்டு அதிர்ந்த பூர்ணிமா, “என்ன? ஏன்மா திடீர்னு இந்த ஏற்பாடு? என் கிட்ட யாரும் ஒரு வார்த்தை சொல்லல…” எனக் கோபப்பட, “ஷ்ஷ்ஷ்… சத்தம் போடாதே பூர்ணி… அவங்களுக்கு கேட்க போகுது… எங்களுக்கு கூட தெரியல… திடீர்னு அவங்க பொண்ணு கேட்டு வந்துட்டாங்க… எங்களால ஒன்னும் பண்ண முடியல… உன்ன ஏதோ கல்யாணத்துல பார்த்து மாப்பிள்ளைக்கு பிடிச்சி போயிடுச்சாம்… உங்க அப்பா அந்தப் பையனைப் பத்தியும் அவங்க குடும்பத்தைப் பத்தியும் விசாரிச்சதுல எல்லாருமே நல்ல விதமா தான் சொன்னாங்க… எதுக்கு நல்ல சம்பந்தம் ஒன்ன மிஸ் பண்ணணும்னு தான் வியான் கிட்ட உன்ன கூட்டிட்டு வர சொன்னேன்…” என்றாள் ஜீவிகா.

பூர்ணிமா, “இவ்வளவு அவசரமா எதுக்குமா? இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே…” என சிணுங்க, அவளைப் பொய்யாக முறைத்த ஜீவிகா, “இதுவே ரொம்ப லேட்… பாரு உனக்கு எத்தனை வயசாகுதுன்னு… உனக்கு அப்புறம் தான் தீக்ஷா, அவ்னி எல்லாருக்கும் கல்யாணம் பண்ணணும்… ப்ளீஸ்டா… நல்ல சம்பந்தம்… வேணாம்னு சொல்லிடாதே…” என்றாள்.

பூர்ணிமாவிற்கும் திருமணம் செய்து கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. திடீர் ஏற்பாட்டால் தான் சற்று வருத்தப்பட, அதுவும் திருமணம் முடிந்தால் குடும்பத்தை விட்டு வேறு வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே யோசித்தாள்.

சரியாக அங்கு வந்த ஈஷ்வரி, “என்ன பண்ற ஜீவி இன்னும்? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எவ்வளவு நேரமா வெய்ட் பண்றாங்க… பூர்ணி ரெடி ஆகிட்டாளா?” எனக் கேட்டார்.

ஜீவிகா பூர்ணிமாவை கெஞ்சல் பார்வை பார்க்கவும் புன்னகைத்த பூர்ணிமா, “நான் ரெடி மா… எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல… ஃபீல் பண்ணாதீங்க…” என்கவும் மனம் நிறைந்த ஜீவிகா தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டாள்.

ஈஷ்வரியும் ஜீவிகாவும் முதலில் கீழே சென்று விட, சற்று நேரத்தில் ஆத்யாவும் அவ்னியும் பூர்ணிமாவை கீழே அழைத்துச் சென்றனர்.

தீக்ஷா காஃபி ட்ரேயை பூர்ணிமாவிடம் வழங்கவும் தலைகுனிந்தவாறே ஒவ்வொருவருக்கும் பறிமாறினாள்.

அங்கு மாப்பிள்ளையாக வந்து இருந்தவனோ பூர்ணிமாவையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, லேசாக தலை நிமிர்ந்து பார்த்த பூர்ணிமா அவனின் பார்வையில் முகம் சிவந்து தலை குனிந்தாள்.

அங்கு வந்திருந்த மாப்பிள்ளையின் தாய், “பொண்ணுக்கு எங்க பையனை பிடிச்சிருக்கான்னு கேளுங்க…” என்கவும் ஜீவிகாவும் வீரும் பூர்ணிமாவின் முகத்தை ஆவலாக நோக்க, லேசாக தலையை நிமிர்த்தி மாப்பிள்ளையாக வந்திருந்த சஞ்சய்யின் முகம் நோக்கினாள் பூர்ணிமா.

சஞ்சய்யோ எங்கு அவள் மறுத்து விடுவாளோ எனப் பதட்டமாக இருக்க, அதனைக் கண்டு லேசாக புன்னகைத்த பூர்ணிமா தன் பெற்றோரைப் பார்த்து சம்மதமாகத் தலையசைத்தாள்.

ஆத்யா, “ஹே… அக்கா ஓக்கே சொல்லிட்டாங்க…” என மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க, அனைவரையுமே அம் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது.

பெரியவர்கள் திருமணத்தைப் பற்றி மேற்கொண்டு பேச, சஞ்சய்யையும் பூர்ணிமாவையும் தனியே பேச அனுப்பி வைத்தனர்.

இருவருமே யார் முதலில் ஆரம்பிப்பது என அமைதியாக இருக்க, லேசாக தொண்டையைச் செறுமி விட்டு சஞ்சய்யே பேச்சைத் துவங்கினான்.

சஞ்சய், “ஐம் சஞ்சய்… பொதுவா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல முன்னாடி தான் தனியா பேசுவாங்க… நாம தான் வித்தியாசமா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு பேசுறோம்…” என்க, பூர்ணிமா எதுவும் கூறாது புன்னகைத்தாள்.

“மௌன விரதம் இருக்கீங்களா?” என சஞ்சய் திடீரெனக் கேட்கவும் அவனைப் புரியாமல் பார்த்த பூர்ணிமா, “இல்லயே… ஏன் கேட்குறீங்க?” எனக் கேட்டாள்.

சஞ்சய், “ஹப்பாடா… ஒரு வழியா பேசிட்டீங்க… நான் கூட நீங்க அமைதியா இருக்குறதை பார்த்து மௌன விரதம் இருக்கீங்களோன்னு நினைச்சேன்…” எனப் புன்னகைக்கவும் அவன் கூறியதைக் கேட்டு சட்டென சிரித்து விட்டாள் பூர்ணிமா.

பூர்ணிமா, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லங்க… சடன்னா பொண்ணு பார்க்க வரவும் கொஞ்சம் டென்ஷன்… அதான்… வேற ஒன்னும் இல்ல…” என்க,

“ஆமால்ல… சாரி… அம்மா ரொம்ப நாளா பொண்ணு பார்க்கவான்னு கேட்டுட்டு இருக்காங்க… நான் வேணாம்னு இழுத்தடிச்சிட்டே வந்தேன்… என் ஃப்ரெண்ட் ஒருத்தனோட கல்யாணத்துல உங்கள பார்த்ததும் ஏனோ பிடிச்சு போச்சு… அம்மா கிட்ட சொன்னதும் அவங்க உடனே பொண்ணு பார்க்க போகலாம்னு கிளம்பிட்டாங்க… ம்ம்ம்… நான் ஒன்னு கேட்கலாமா?” என்றான் சஞ்சய்.

பூர்ணிமா சரி எனத் தலையசைக்கவும், “அது… உங்களுக்கு நிஜமாவே இந்தக் கல்யாணத்துல சம்மதமா? ஏன் கேட்குறேன்னா உங்களுக்கு வரப் போற ஃபியூச்சர் ஹஸ்பன்ட் பத்தி நிறைய கனவு இருந்து இருக்கும்… நான் அதுக்கெல்லாம் ஏத்த மாதிரி இருக்கேனா? இல்ல உங்க பேரென்ட்ஸுக்காக ஓக்கே சொன்னீங்களா?” என சஞ்சய் கேட்கவும் புன்னகைத்த பூர்ணிமா,

“பொதுவாவே பொண்ணுங்களுக்கு தனக்கு வரப் போற கணவன் பத்தி நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கும்… எனக்கும் இருந்தது… அது எனக்கு வரப் போற கணவன் நெட்டையா இல்ல குட்டையா இருக்கணும்… ஆர் வெள்ளையா இருக்கணும்… இல்ல கறுப்பா இருக்கணும்… இல்ல இவ்வளவு சம்பாதிக்கணும்… இப்படி எதுவுமே இல்லங்க… எனக்கு இருந்த ஒரே எதிர்ப்பார்ப்பு எனக்கு வரப் போற பையன் என் அப்பா அம்மாவுக்கு பிடிச்சவனாகவும் என் மனசுக்கு பிடிச்சவனாகவும் இருக்கணும்… அதே சமயம் எங்க வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு… என் ஹஸ்பன்ட் என் பேரென்ட்ஸுக்கு மருமகனா இல்லாம மகனா இருக்கணும்… இது மட்டும் தான்… உங்களைப் பார்த்ததும் எனக்கு பிடிச்சி இருந்தது… என் பேரென்ட்ஸுக்கு கூட உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு… சோ… என் எதிர்ப்பார்ப்பை நீங்க பூர்த்தி பண்ணுவீங்களா?” என சஞ்சய்யின் கண்களை நேராகப் பார்த்து கேட்டாள்.

பதிலுக்கு புன்னகைத்த சஞ்சய், “கல்யாணம்னு சொல்றது ரெண்டு மனசு சேருறது மட்டும் இல்ல… ரெண்டு குடும்பமும் சேருறது தான்… உங்களை எனக்கு பிடிக்கும்னா உங்களைப் பெத்தவங்களை பிடிக்காம போகுமா?” என்றவன் பூர்ணிமாவை நோக்கி கரம் நீட்ட, புன்னகையுடனே அவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் பூர்ணிமா.

இருவரும் கீழே வர, இளம் பட்டாளம் இருவரையும் கிண்டல் செய்தே முகம் சிவக்க வைத்தனர்.

இரண்டு மாதத்தில் திருமணத்தை நடத்தலாம் எனப் பெரியவர்கள் பேசி முடிவெடுக்க, அனைவருக்குமே தம் குடும்பத்தில் நடக்கப் போகும் வாரிசுகளில் முதல் திருமணம் என்பதால் மகிழ்ச்சியுடன் அப்போதிலிருந்தே திருமணத்துக்கு தயாராக ஆரம்பித்தனர்.

************************************
“வியு… எங்க இருக்க? கிளம்பிட்டியா?” என விரான் ரகசிய குரலில் கேட்கவும் காதில் ப்ளூடூத்தை மாட்டிக்கொண்டு ஜீப்பை இயக்கிய வியான், “கிளம்பிட்டேன் விரு… டென் மினிட்ஸ்ல ரீச் ஆகிடுவேன்… நீ லைவ் அப்டேட் கொடுத்துட்டே இரு… ஜாக்கிரதை…” என்றான்.

காரிருள் சூழ்ந்த இரவில் ஆள் அரவமற்ற அந்த தார் சாலையில் ஒரே ஒரு வெள்ளை வாகனம் மட்டும் ஒரு ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்க, அதற்கு அருகில் சில ரௌடிகள் சிகரெட் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்களை விட்டு சற்று தள்ளி ஒரு மரத்தின் பின் மறைவாக நின்றிருந்த விரான் அவர்கள் என்ன செய்கிறார்கள் என அவதானித்தவாறே அவற்றை தன் கைப்பேசியில் வீடியோ எடுத்துக் கொண்டான்.

அதே சமயம் அந்த வெள்ளை நிற வண்டியின் அருகே இன்னுமொரு வண்டி வந்து நிற்க, புருவ முடிச்சுடன் அங்கு என்ன நடக்கிறது எனக் கவனித்த விரானின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

விரான், “வியு… வந்துட்டியா? சீக்கிரம்…” என அவசரப்படுத்த, “வந்துட்டேன் விரு… ஜீப்பை யார் கண்ணுக்கும் தெரியாம நிறுத்திட்டு வரேன்… வெய்ட் பண்ணு…” என்ற வியான் சற்று நேரத்திலேயே அவ் இடத்தை அடைந்தான்.

விரான் கை காட்டிய திசையில் பார்வையை செலுத்திய வியானின் கண்கள் கோபத்தில் சிவக்க, கை முஷ்டியை இறுக்கியவன் தன் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்தான்.

ஏனென்றால் இரண்டாவது வந்த வண்டியின் ட்ரங்கை திறந்த ஒருவன் அதிலிருந்து கை, கால்கள், வாய் எனக் கட்டிய நிலையில் மயக்கத்தில் இருந்த ஒரு பெண்ணை இழுத்து தரையில் போட்டனர்.

பின் தமக்குள் அந்தப் பெண்ணைக் காட்டி ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டனர்.

விரான், “வியு… எங்க ரெண்டு பேராலயும் தனியா இந்த கும்பல பிடிக்க முடியாது… உன் டீமை அந்த பக்கமா வர சொல்லு…” என்கவும் வியான் யாருக்கோ அழைத்து ஏதோ பேசி விட்டு வைத்தவனின் கோபம் அடங்க மறுத்தது.

வியான், “இன்னைக்கே இவனுங்களை பிடிச்சி எல்லா உண்மையையும் தெரிஞ்சிக்கணும்…” எனக் கோபமாகக் கூற, “கூல் விரு… ஆத்திரப்பட்டு எதுவும் செய்ய முடியாது… எது பண்ணுறதா இருந்தாலும் பொறுமையா தான் பண்ணணும்… நீ தானே இதை எனக்கு சொல்லுவ… இப்போ உனக்கு என்னாச்சு?” எனத் தன் தம்பியைக் கடிந்து கொண்டான் விரான்.

திடீரென வியான் வரவழைத்த காவல்துறை வண்டியின் சத்தம் கேட்கவும் அந்த ரௌடிக் கும்பல் அங்கிருந்து விரைவாகத் தப்பிக்க முனைய, அதற்குள் வியான் தன் கையிலிருந்த துப்பாக்கியால் அவர்களின் காலில் சுட்டான்.

காவல் துறையினரைக் கண்டு அவர்கள் பதற, வியானும் விரானும் மறுபக்கமாக வந்து அவர்களைப் பிடித்தனர்.

வியான் தலைவன் போல் இருந்த ஒருவனின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தியவன், “உண்மைய சொல்லுடா… யாரு உங்களை இதை எல்லாம் பண்ண சொன்னாங்க? இந்தப் பொண்ணுங்களைக் கடத்தி நீங்க என்ன பண்ணுறீங்க? சொல்லலன்னா ட்ரிகரை அழுத்திடுவேன்… சொல்லுடா நாயே…” என ஆவேசமாகக் கத்த, அந்த ரௌடிக் கும்பலின் தலைவனோ சுற்றியும் தன் அடியாட்களைப் பார்த்து கண் காட்ட, காவல் துறையினர் சுதாகரிக்கும் முன்னதாகவே அனைவரும் ஒரே சமயத்தில் தம் கழுத்தில் அணிந்திருந்த செயினில் டேப்லெட் போல் இருந்த ஒன்றைக் கடித்தனர்.

விரான், “வியு…” என அதிர்ந்து கத்த, அதற்குள் அந்த ரௌடிக் கும்பலில் இருந்த அனைவருமே வாயில் இருந்து இரத்தம் கக்கி இறந்தனர்.

“டேய் டேய்… சொல்லுடா உண்மையை…” என வியான் தலைவனைப் பிடித்துக் கத்த, வாயிலிருந்து இரத்தம் வடிய வியானைப் பார்த்து ஏளனமாகப் புன்னகைத்தவன், “உன்னால என்னைக்குமே எங்களைப் பிடிக்கவும் முடியாது… அழிக்கவும் முடியாது…” என்று விட்டு கண் மூடினான்.

வியான், “டேமிட்…” என ஆவேசமாகக் காலால் தரையை உதைக்க, அவனின் தோள் மீது கரம் வைத்து சமாதானப்படுத்திய விரான், “முதல்ல இந்த பொண்ணுக்கு என்னாச்சுன்னு பார்க்கலாம் வியு…” என்கவும் காவல் துறையினரிடம் அந்த ரௌடிக் கும்பலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லக் கட்டளை இட்டான் வியான்.

விரான் அந்தப் பெண்ணின் மூக்கில் விரல் வைத்து சுவாசிக்கிறாளா எனப் பரிசோதித்தவன், “வியு… மூச்சு ரொம்ப ஸ்லோவா போகுது… சீக்கிரம் ஹாஸ்பிடல் எடுத்துட்டு போகணும்…” என்கவும் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அந்தப் பெண்ணைப் பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவர், “அண்ணா… அந்தப் பொண்ணு ரொம்ப வீக்கா இருக்கா… அந்தப் பொண்ணோட பிளட்ல கொஞ்சம் கூட ப்ளாஸ்மா இல்ல… அதனால அந்தப் பொண்ணோட உடம்புக்கு தேவையான எந்த சக்தியும் கிடைக்காது… அந்தப் பொண்ணோட உயிரைக் காப்பாத்தணும்னா உடனே ப்ளாஸ்மா ஏத்தி ஆகணும்…” என்க, “அப்போ அதுக்கு உடனே ஏற்பாடு பண்ணு அர்ஜுன்…” என்றான் வியான்.

சித்தார்த் – அஞ்சலியின் இரண்டாவது மகனும் தீக்ஷாவின் தம்பியுமே அர்ஜுன். படித்து முடித்து தற்போது VAV மருத்துவமனையிலேயே மருத்துவனாக கடமை புரிகிறான்.

அர்ஜுன், “எங்க ஹாஸ்பிடல் பேங்க்ல இப்போ அந்தப் பொண்ணோட ப்ளட் டைப்புக்கு மேட்ச்சான ப்ளாஸ்மா இல்ல அண்ணா… மத்த ஹாஸ்பிடல்ஸ் கிட்ட கேட்டு இருக்கேன்… அது கிடைச்சா தான் மேற்கொண்டு ட்ரீட்மெண்ட் பண்ண முடியும்…” என்றான்.

விரான், “அர்ஜுன்… இந்த ப்ளாஸ்மா மூலமா வேற ஏதாவது யூசஸ் இருக்கா?” எனக் கேட்கவும் வியானும் அதே கேள்வியைத் தாங்கி அர்ஜுனைப் பார்க்க,

“எப்படி இல்லீகலா நம்ம உடல் பாகங்களைத் திருடி அது மூலமா சம்பாதிக்கிறாங்களோ, அதே போல ப்ளாஸ்மாவையும் திருடி பெரிய விலைக்கு விற்க முடியும்… ப்ளட்ல ப்ளாஸ்மா ரொம்ப குறைவா இருக்குறவங்களுக்கு இப்படி கடத்தப்படுற ப்ளாஸ்மா யூஸ் ஆகும்… அது மட்டும் இல்லாம இப்போ காஸ்மெடிக்ஸ் தயாரிப்புல கூட இந்த ப்ளாஸ்மா பயன்படுத்துறாங்க…” என்றவாறு அங்கு வந்தான் சித்தார்த்.

வியான், “மாமா நீங்க…” என இழுக்க, “அர்ஜுன் எல்லாம் சொன்னான் வியான்… டோன்ட் வொரி… இது சீக்ரெட்டாவே இருக்கும்… பட் நீங்க ரெண்டு பேரும் கேர்ஃபுல்லா இந்த கேஸை ஹேன்டில் பண்ணுங்க… நிதுவையும் சர்வாவையும் இழந்ததைப் போல நம்ம ஃபேமிலியால உங்களையும் இழக்க முடியாது…” எனக் கண் கலங்கினான் சித்தார்த்.

இன்று வரையிலுமே தன் தோழியின் மரணத்திலிருந்து சித்தார்த்தால் வெளி வர முடியவில்லை.

சித்தார்த் தம் பெற்றோரைப் பற்றிக் கூறவும் வியானும் விரானும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “அப்பா…” என அர்ஜுன் தான் அவனை சமாதானப்படுத்தினான்.

சித்தார்த், “சாரி கண்ணா… கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” என்க, “மாமா… காஸ்மெடிக்ஸ்ல இந்த ப்ளாஸ்மா எப்படி யூஸ் ஆகும்? கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க…” எனக் கேட்டான் விரான்.

“ப்ளேட்லெட் – ரிச் ப்ளாஸ்மா… PRP அப்படின்னு சொல்லுவோம்…‌ இதோட யூசஸ்ல மிக முக்கியமானதும் அற்புதமானதுமான யூசஸ் தான் காஸ்மெடிக்ஸ்ல பயன்படுறது… உதாரணமா சொன்னா தோல் புத்துணர்ச்சி… நம்ம முகம், கை, கால்கள்ல தோல்ல காணப்படும் இறந்த திசுக்களை நீக்கி புதிய திசுக்களை வளரச் செய்தல்… இன்னும் சொல்லப் போனா பருக்கள், ஸ்ட்ரெச் மார்க்ஸ் ட்ரீட்மெண்ட்ல கூட இது யூஸ் ஆகும்… ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா அப்படிங்குற ஆண், பெண் வழுக்கை நோயால பாதிக்கப்பட்டவங்களுக்கு முடி மீளுருவாக்கவும் இது பயன்படும்… இப்படி நிறைய அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சிகிச்சைகள்ல இந்த ப்ளாஸ்மா பெரிய இடத்தைப் பிடிக்கிது… உங்களுக்கே தெரியும் இப்போ உள்ள பசங்க தங்களோட வெளி அழகுல எவ்வளவு கவனம் செலுத்துவாங்கன்னு… இப்படி ப்ளாஸ்மா கடத்துறவங்களோட ப்ளஸ் பாய்ன்ட்டே அது தான்…” என விளக்கம் அளித்தான் சித்தார்த்.

அர்ஜுன், “நம்ம உடம்புல இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு ப்ளாஸ்மாவை டொனேட் பண்ணலாம்… அதே அளவுக்கு மீறி பண்ணோம்னா நம்ம உடம்புக்கே அது ஆபத்தா முடியும்…  இப்போ இந்தப் பொண்ணுக்கு நடந்து இருக்குறது கூட அது தான்… வலுக்கட்டாயமா அந்தப் பொண்ணோட உடம்புல இருந்து ப்ளாஸ்மாவை எடுத்து இருக்காங்க…” என்கவும் வியான் கோபத்தில் பல்லைக் கடித்தான்.

திடீரென, “டாக்டர்… டாக்டர்…” எனப் பதறிக் கொண்டு ஒரு நர்ஸ் ஓடி வர, “என்னாச்சு?” எனக் கேட்டான் சித்தார்த்.

நர்ஸ், “டாக்டர்… அந்தப் பொண்ணோட ஹார்ட் பீட் ஸ்லோ ஆகிட்டே போகுது… திடீர்னு ஃபிட்ஸ் வந்து உடம்பு தூக்கி தூக்கி போடுது…” எனப் பதட்டமாகக் கூறவும், “ஓஹ் காட்…” என்றவாறு சித்தார்த் ஓட, மற்ற மூவரும் அவனைப் பின் தொடர்ந்தனர்.

வியானும் விரானும் வெளியே நிற்க, சற்று நேரத்திலேயே வெளிய வந்த சித்தார்த்தும் அர்ஜுனும் வருத்தமான முகத்துடன் இட வலமாகத் தலையசைத்தனர்.

“ஷிட்…” என வியான் சுவற்றில் ஓங்கிக் குத்தினான்.

அர்ஜுன், “இங்க கொண்டு வரும் போதே அந்தப் பொண்ணோட உடம்பு ரொம்ப வீக்கா தான் இருந்தது… ப்ளேட்லெட்ஸ் வேற குறைவால ஃபிட்ஸ் வந்து அந்தப் பொண்ணோட உடம்புல அதை எதிர்க்க எந்த எதிர்ப்பு சக்தியும் இல்லாததால இறந்து இருக்கா…” எனப் பெருமூச்சு விட்டான்.

விரான், “வியு… நீ போய் அந்த ரௌடிக் கும்பல் பத்தின ஏதாவது டீட்டெய்ல்ஸ் கிடைக்குதான்னு பாரு… நான் இந்தப் பொண்ணு யாருன்னு தேடி அவங்க வீட்டுல தகவல் கொடுக்குறேன்… மாமா… இந்தப் பொண்ணோட போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டை கொஞ்சம் சீக்கிரமா வாங்கி தர முடியுமா?” எனத் தன் சகோதரனுக்கு கட்டளை இட்டு விட்டு சித்தார்த்திடம் கேட்டான்.

சித்தார்த், “சரி விரான்… நான் அதுக்கு ஏற்பாடு பண்றேன்…” என்றான்.

************************************
“என்ன தைரியம் இருந்தா என் கிட்ட வேலை பார்த்துக்கிட்டு என் பணத்துலயே கை வைப்ப?” எனக் கோபமாகக் கேட்ட மோனிஷா தன் முன் நின்று இருந்தவனின் கன்னத்தில் ஓங்கி அறைய, “மேடம்… என்ன பண்றீங்க? குற்றவாளியை தண்டிக்க வேண்டியது எங்க பொறுப்பு…” எனக் கடிந்து கொண்டார் காவல் அதிகாரி.

சஞ்சய், “மேடம்… ப்ளீஸ் காம் டவுன்… அவனைத் தான் போலீஸ் விசாரிச்சுட்டாங்களே… அதை சொல்ல தானே நம்மள வர சொல்லி இருக்காங்க… நீங்க வாங்க முதல்ல…” என மோனிஷாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றான்.

சரியாக அதே நேரம் காவல் நிலையத்தினுள் நுழைந்தான் வியான்.

சஞ்சய்யைக் கண்டு புருவம் சுருக்கிய வியான், “சஞ்சய்… நீங்க இங்க என்ன பண்றீங்க?” எனக் கேட்க, “சார் நீங்க?” என வியான் யார் என்று தெரியாமல் கேட்டான் சஞ்சய்.

“ஐம் வியான் சர்வேஷ்… பூர்ணியோட மாமா பையன்…” எனத் தன்னை அறிமுகப்படுத்தவும் சிநேகமாகப் புன்னகைத்த சஞ்சய், “ஓஹ்… சாரி ப்ரோ… பூர்ணி உங்களைப் பத்தி நிறைய சொல்லி இருக்கா… முன்னாடி மீட் பண்ணி இல்லல்ல… அதான் சரியாத் தெரியல…” என்றான்.

வியான், “பரவால்ல… சரி என்ன விஷயம்? ஏதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்க, “ஆமா ப்ரோ… இது மோனிஷா… எங்க எம்.டி… ஃபெதர்ஸ் காஸ்மெட்டிக்ஸ் கம்பனி ஓனர்… எங்க கம்பனில தான் இந்த செல்வா வர்க் பண்ணான்… அக்கவுன்ட் டிப்பார்ட்மென்ட்டுக்கு பொறுப்பா இருந்தான்… கொஞ்சம் நாள் முன்னாடி தான் இவன் எங்களுக்கே தெரியாம எங்க கம்பனி பணத்தை ஆட்டைய போடுறது தெரிஞ்சது… இதனால எங்க கம்பனிக்கு பெரிய லாஸ்… உடனே போலீஸ்ல பிடிச்சி கொடுத்துட்டோம்… அதைப் பத்தி விசாரிச்சி சொல்றேன்னு சொல்லி இருந்தாங்க… இன்னைக்கு வர சொல்லி கால் வந்துச்சி… அதான் வந்தோம்…” என விளக்கம் அளித்தான் சஞ்சய்.

‘காஸ்மெட்டிக்ஸ் கம்பனி…’ என்கவும் ஒற்றைப் புருவம் உயர்த்தி மோனிஷாவை அவதானித்த வியான், “குரு… அந்த ஆளை விசாரிச்சீங்களா? என்ன சொன்னான்?” எனக் கேட்டான்.

உடனே குரு என்ற இன்ஸ்பெக்டர், “யேஸ் சார்… எவ்வளவு கேட்டும் உண்மையை ஒத்துக்கவே இல்ல… அப்புறம் அடிச்சி கேட்டதும் தான் உண்மைய சொன்னான்… இவன் ட்ரூ பியூட்டி கம்பனியோட ஆளு… ஃபெதர்ஸ் கம்பனியோட ப்ராடெக்ட்ஸ் இந்தியா ஃபுல்லா ஃபேமஸ்னால அதோட ரகசியத்தை தெரிஞ்சிக்க இவனை அனுப்பி இருக்காங்க… பட் பணத்தை ஆட்டைய போட்டது இவனோட சொந்த ஐடியா சார்… பாதி பணத்தை ஆல்ரெடி செலவு பண்ணிட்டான்…” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு முதலில் அதிர்ந்த மோனிஷா, “பார்த்தியா சஞ்சய்? அந்த பார்த்திக்கு சொந்தமா முன்னேற துப்பில்ல… என் உழைப்பைத் திருட ட்ரை பண்ணி இருக்கான்…” என்றாள் கோபமாக.

பின் வியானிடம் திரும்பிய மோனிஷா, “சார்… நான் அந்த ட்ரூ பியூட்டி கம்பனி ஓனர் பார்த்தி மேல கம்ப்ளைன் தரேன்… அவன் மேல அப்படியே நஷ்ட ஈடு வழக்கு பதிவு பண்ணுங்க…” என ஆத்திரத்துடன் கூறவும் வியான் சஞ்சய்யை அழுத்தமாகப் பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்த சஞ்சய், “மேடம் ப்ளீஸ்… கொஞ்சம் அமைதியா இருங்க… போலீஸ் பார்த்துக்குவாங்க…” என்றான் மோனிஷாவிடம்.

மோனிஷாவின் கோபம் கொஞ்சம் கூட குறையாமல் இருக்க, “சஞ்சய்… அந்த ஆளை நான் பார்த்துக்குறேன்… அவனை அரெஸ்ட் பண்ணி தனிப்பட்ட முறைல விசாரிக்கிறேன்… இந்த ஆள் பாதி பணத்தை செலவு பண்ணிட்டான்னு சொல்றான்… சோ அதை மீட்குறது எங்களால முடியாத காரியம்… மிச்ச பணத்தை சீக்கிரம் வாங்கி தரோம்…” என்ற வியான் சஞ்சய்யிடம் மேலும் சில தகவல்களை வாங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

அவர்கள் இருவரும் சென்றதும் சிந்தனை வயப்பட்ட வியான் சித்தார்த் கூறியவற்றையும் சஞ்சய் கூறியவற்றையும் தொடர்புபடுத்தி யோசித்தான்.

************************************

ரிதன்யா சென்னையில் மிகவும் பிரபலமான அன்னை தெரேசா பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்து ஒரு வாரம் கடந்த நிலையில் அன்று மாணவர்களுக்கான மாதாந்தப் பரீட்சை என்பதால் சற்று விரைவாகவே கல்லூரிக்கு வந்தாள்.

மாணவர்கள் வரும் முன் பரீட்சை மண்டபத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என மேற்பார்வை செய்வதற்காக அவளுக்கு பொறுப்பாகத் தந்திருந்த வகுப்பறையைத் திறந்தவள் அங்கு கண்ட காட்சியில், “ஆஹ்….” என அலறினாள்.

ஏனென்றால் அவ் வகுப்பின் மத்தியில் இருந்த மின் விசிறியில் அக் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

சில மணி நேரத்திலேயே கல்லூரி வளாகம் முழுவதும் காவல்துறை, மீடியா, மக்கள் கூட்டம் என்பவற்றால் நிரம்பி வழிந்தன.

************************************

ஃபர்ஸ்ட் பார்ட்ல அவன், அவள்னு எழுதினவங்களை இப்போ இந்த கதைல பெரியவங்களா காட்டும் போது அவர்னு எழுத வர மாட்டேங்குது… அவர்னு மரியாதையா எழுதினா எனக்கே ஏதோ போல இருக்கு… 🤧🤧🤧 அதனால முன்ன மாதிரியே மரியாதையா இல்லாம எழுதுறேன்… என் ஹீரோஸ், ஹீரோயின்ஸ் எல்லாம் வயசானவங்களா காட்ட கஷ்டமா இருக்கு… ஜோகங்கள்… 🙈🙈🙈

அப்புறம் இன்னொரு விஷயம்… இந்த கதை முதல் பார்ட்ல வந்தவங்களோட பசங்களோட கதைன்னு சொன்னேன்… அதனால கேரெக்டர்ஸ் அதிகமா இருக்கும்… பெரிய கதை… சோ மெதுவா விளக்கமா தான் கொண்டு போவேன்… அப்போ தான் ஒவ்வொரு கேரெக்டர்ஸும் உங்க மனசுல பதிவாங்க… ஒருவேளை படிக்கிற உங்களுக்கு ரொம்ப இழுக்குறேன்னு தோணுதோ தெரியல… முடிஞ்ச அளவு கதையை போரிங் இல்லாம கொண்டு போக முயற்சி பண்றேன்… கீப் சப்போர்ட்டிங் 🤗

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *