Loading

 

மறுநாள், காலையிலேயே ஆரவ் அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்க, வான்மதி “நானும் வரேன்” என்றாள்.

“ம்ம்” என்றவனுக்கு, ஏனோ மனதே சரி இல்லை. ஏதோ ஒரு சம்பவம் நிகழப் போவது போலவே மனது துடிக்க, வான்மதியை வீட்டில் தனியே விடவும் விருப்பமில்லை.

அதில் இருவரையும் அழைத்துக் கொண்டு அலுவலகம் வந்து விட, பணியாளர்கள் வந்தபடி இருந்தனர்.

அப்போது தான் திருமணம் ஆனதால் அவனின் நண்பர்களை அலுவலகம் வரவேண்டாம் எனக் கூறி இருந்தான். வான்மதிக்கோ அவளின் இருக்கைக்கு செல்லவே பிடிக்கவில்லை.

ஆரவின் யோசனை முகம் வேறு உறுத்த, இஷாந்தை காரணமாக வைத்து, அவன் அறையிலேயே இருந்தாள்.

சிறிது நேரத்திலேயே, அவனின் உள்ளுணர்வு சரி தான் என்பது போல, அவள் வந்திருந்தாள். மிருணா…

சிசிடிவியில் அவளைப் பார்த்ததுமே, உணர்ச்சி துடைத்த முகத்துடன் விழி சிவக்க அவன் அமர்ந்திருக்க, அதற்கு மேல் பொறுக்க இயலாமல், “என்ன ஆச்சு ஆரவ்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டாள் அவன் தோளைத் தொட்டு.

அதனை உணராதவன், இன்னும் மடிக்கணினியையே பார்வையால் எரிக்க, மிருணாவோ உடன் காவலருடன் வந்திருந்தாள்.

அதில், அவளையும் ரிசப்ஷன் பெண் உள்ளே விட வேண்டியதாகிட, அவள் உள்ளே நுழைந்ததுமே ஆரவின் மேனி இன்னும் இறுகியது. முதலில் அவளை யாரென்று புரியாமல் பார்த்த வான்மதி, ஆரவின் முகபாவத்தை கண்டதுமே மிருணா என்று அறிந்து கொண்டாள்.

மிருணாவுடன் வந்த காவலர் மாரிமுத்து, “மிஸ்டர் ஆரவ். உங்ககிட்ட ஒரு விசாரணைக்காக வந்துருக்கோம்.” என்று கடினமாக ஆரம்பிக்க, ஆரவ் விழி சுருங்க பார்த்தான்.

“மிஸஸ் மிருணா உங்க மேல புகார் குடுத்து இருக்காங்க, அவரோட ஹஸ்பண்ட் திவாகரை நீங்க கடத்திட்டதா. அவரை எங்க வைச்சு இருக்கீங்கன்னு சொல்லுங்க. இல்லன்னா, உங்களை இப்பவே அரெஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்.” என்று மிரட்டலாக கேட்க,

ஆரவ் ஒரு நொடி புரியாமல் பின், “ஹஸ்பண்ட்???” என கேலியாக மிருணாவை உறுத்து விழிக்க, மிருணா அவன் பார்வையில் பதறி திரும்பிக் கொண்டாள்.

“நான் தான் இவளோட ஹஸ்பண்ட் திவாகரை கடத்துனேன்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம்?” என்றவன் ‘ஹஸ்பண்ட்’ என்ற வார்த்தையை அழுத்திக் கூற,

“ஆதாரம் இருந்துருந்தா இப்போ நான் இவ்ளோ பொறுமையா பேசிட்டு இருக்க மாட்டேன். ஆனா, உங்ககிட்ட மோட்டிவ் இருக்கு. உங்களை டைவர்ஸ் செஞ்ச காரணத்துக்காக, பழி உணர்ச்சியில திவாகரை நீங்க கடத்துறதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு. உண்மையை நீங்களே ஒத்துக்கிட்டா நல்லது. இல்லைன்னா அடிச்சு ஒத்துக்க வைக்க வேண்டியது இருக்கும்” என்று எச்சரிக்க,

ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன், “தென், டூ இட்.” என்றான் எகத்தாளத்துடன்.

வான்மதி பதறி, வேகமாக மோனிஷாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பிட, மாரிமுத்து கோபத்துடன், “என்னடா நானும் பொறுமையா பேசிக்கிட்டே போனா, நீ திமிரு காட்டுற… எல்லார் முன்னாடியும் உன்ன அடிச்சு இழுத்துட்டு போனா தான், உனக்கு புத்தி வரும்.” என அவன் சட்டையில் கை வைக்க போக, அந்நேரம் அவரின் அலைபேசி ஒலித்தது.

எஸ்.பி தான் போன் செய்திருக்க, மரியாதையாக அதனை எடுத்து பேசிய மாரிமுத்துவிற்கு முகம் மாறியது.

“இல்ல சார். சும்மா ஒரு ஜெனரல் விசாரணை தான்.” என பம்மிட, எதிர்முனையில் எஸ். பி எப்படி கத்தினாரோ, உடனே, “இப்ப கிளம்பிட்டேன் சார் ஓகே சார்” என்று வேகமாக போனை வைத்து விட்டவர், “உங்களுக்கு எஸ். பி சார தெரியும்ன்னு சொல்லிருக்க கூடாது…” என உளறிட,

“அதை விடுங்க இன்ஸ்பெக்டர்… ஏதோ புத்தி வர வைக்கிறேன்னு சொன்னீங்க. சீக்கிரம் வரவைச்சா நான் போய் என் வேலையை பாப்பேன்.” என அடக்கமாக ஆரவ் அமர, மாரிமுத்துவிற்கு பயத்தில் முகம் வியர்த்தது.

“சார் சாரி சார்…” என அவசரமாக அங்கிருந்து புறப்பட்டவரை, மிருணா தான் திகைத்துப் பார்த்து, “சார். என் ஹஸ்பண்ட்” என்று கேட்டதில், “உன் புருஷன் வேற எங்கயாவது ஓடி போய் இருப்பான். நீயே போய் தேடு” என கடிந்து விட்டு, ஓட்டமும் நடையுமாக செல்ல, மிருணாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

வான்மதிக்கு தான் சிரிப்பை அடக்கவே இயலவில்லை. கூடவே, மிருணாவின் மீது கடும் கோபம் வர, அதற்குள் ஆரவ், “இந்த பிளான் உனக்கு யார் போட்டு குடுத்தது. என் அம்மாவா, இல்ல உன் அம்மாவா?” என்றே விழியில் திமிருடன், இரு கையையும் நிதானமாக சொடுக்கிட்டபடி கேட்க, அவள் அரண்டு விட்டாள்.

இத்தனை சீக்கிரம் கண்டுபிடிப்பான் என அறியாதவள், சமாளிக்க வார்த்தை இல்லாமல் தட்டுத் தடுமாற, டேபிளை டம்மென தட்டியவன், “உன்ன தான். யாரு குடுத்த ஐடியா இது?” என்று உறுமிட,

“யாரும் குடுக்கல. உன் அம்மா தான், என் புருஷனை கடத்தி வைச்சுட்டு, உன்ன போலீஸ்ல மாட்டி விட்டா தான், அவனை என் கண்ணுல காட்டுவேன்னு மிரட்டுனாங்க. அதோட குழந்தையையும் நான் தான் வளர்ப்பேன்னு தூக்கிட்டு போக சொன்னாங்க. இதை செய்யலைன்னா, திவாகரை கொன்றுவேன்னு மிரட்டுறாங்க.” என்றாள் குரல் கம்ம.

“ஓ… என்கிட்ட மாட்டுனா, இப்படி எல்லாம் வசனம் பேசணும்ன்னு சொல்லி குடுத்தாங்களோ?” வெகு நக்கலுடன் கேட்டதில், கண்ணில் நீர் திரண்டிருக்க, “நான் சொல்றது உண்மை தான். சத்தியமா…” என்றாள் உதட்டைக் கடித்து.

அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவன், “நீ நினைக்கிறது எதுவுமே நடக்காது மிருணா. ஜஸ்ட் கெட் அவுட். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்…” என்றவன் வாசலை நோக்கி கை காட்ட,

“ப்ளீஸ் ஆரவ்… திவாகரை விட சொல்லுங்க” என்று கிட்டத்தட்ட கெஞ்சிட, அவனோ “ஏய்” என்று கர்ஜித்தான்.

“என் பேரை சொல்ல கூட உரிமை இல்ல. இன்னொரு தடவை என் முன்னாடி நின்ன, கொன்னுடுவேன். அவுட்…” என சீறிட, மிருணாவிற்கு தான் அழுகையாக வந்தது.

கூடவே அவளின் பார்வை வேறு, வான்மதியின் கையில் இருந்த இஷாந்தை ஒரு நொடி ஏக்கமாக பார்க்க, அவனோ உரிமையுடன் வான்மதி மீது சாய்ந்திருந்தான்.

ஆரவை விட்டு சிங்கப்பூரில் இருந்த திவாகரிடம் சென்றதும், சில நாட்கள் வாழ்க்கை நன்றாகவே இருந்தது. அதிலும், தனக்காக கணவனை கூட விட்டு விட்டு வந்தவளைக் கண்டு திவாகருக்கு பெருமை மிஞ்சியது. கூடவே, அவளின் சொத்தும் அவளை மதிக்க வைக்க, நாள் செல்ல செல்ல, திவாகரின் நடவடிக்கையில் பெரும் மாற்றம்.

முதலில் குடிக்கு அடிமையானவன், பிறகு மற்ற பெண்களிடமும் அடிமையானான். இதனை அறிந்து மிருணா கோபப்பட, அவனோ “நீ மட்டும் சொத்துக்கும் சுகத்துக்கும் எவன் கூடயோ படுத்திட்டு தான என்கிட்ட வந்த. நான் மட்டும் உனக்கு உண்மையா இருக்கணுமா.” என குடிபோதையில் பிதற்ற, அவள் அதிர்ந்தே விட்டாள்.

சொத்துக்கும் அவனுக்கும் ஆசைப்பட்டது உண்மை தான். அந்த ஆசை பேராசையாய் மாறியதாலேயே செய்த அனைத்தையும் சரி என்றே அவள் மனது நம்ப வைத்தது. ஆரவையும்  காயப்படுத்த வைத்தது.

இப்போது, அதே உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அவள் காயப்படும் போது தான், செய்த தவறின் வீரியம் புரிய, அதன் பிறகு குழந்தையும் நிற்காமல் போக, தன்னை நொந்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.

அந்நிலையில் தான், ஒரு வாரம் முன்பு சரவணன் அவளுக்கு போன் செய்து, சென்னை வரக் கூற, அவளுக்கோ ஆரவின் முன் சென்று நிற்கவே பயமாக இருந்தது. குழந்தை பிறந்த கையோடு அவளின் உடல்நிலையை கூட கருத்தில் கொள்ளாமல், மருத்துவமனையில் இருந்து ஓட வைத்திருந்தானே.

ஆனால், திவாகர் தான், பணத்திற்கு ஆசைப்பட்டு அவளையும் அழைத்துக்கொண்டு இந்தியா வந்திறங்கி இருக்க, அதற்குள் ஆரவ் சரவணனை பேச்சு மூச்சின்றி ஆக்கி இருந்தான்.

இது அறியாத திவாகர், அவரை தேடி அவரின் வீட்டிற்கு சென்று சௌமியா முன் நிற்க, ஆரவை அடிக்கவும், வான்மதியின் திமிரை அடக்கவும் ஒரு வழி கிடைத்ததில் குரூரமாக சிந்தித்தவர், அவனை ஜெயிலில் தள்ளவும், அத்துடன் இருவரும் மொத்த பாசத்தையும் கொட்டி வளர்க்கும் இஷாந்தை அவர்களிடம் இருந்து பிரிக்கவும் சதி திட்டம் தீட்டினார்.

இதில், அவர் அறியாத ஒன்று, மிருணா வெறும் வாடகைத்தாய் போன்றே அவனை பெற்றதற்கான பத்திரமும் சான்றும் இருக்கிறது என்று தெரியாமல் போனது தான். மிருணா சிங்கப்பூருக்கே மீண்டும் செல்வதாக கூற, சௌமியா திவாகரை மறைத்து வைத்து, அவளை மிரட்டிட, இறுதியில் வேறு வழியற்று காவலருடன் இங்கு வந்திருந்தாள்.

இவை அனைத்தும் ஆரவ் அறிந்தது தான். எப்படியும் தனக்கு எதிராய் சரவணன் ஏதாவது செய்வார் என்று அறிந்தவன், அவரின் கால் ஹிஸ்டரியை ஹேக் செய்து, மிருணாவிடம் பேசியதையும் அறிந்தே இருந்தான். அதனாலேயே முன்னேற்பாடாக, தன்னுடன் பள்ளியில் படித்த நண்பனான எஸ். பியிடம் இதனை கூறியும் இருக்க, அவனும் “உன் பக்கத்துல யாரும் வரமுடியாது. நான் பாத்துக்குறேன்” என்று தைரியம் அளித்து, இப்போது தக்க சமயத்தில் அவனுக்கு ஆதரவும் அளித்திருந்தான்.

மிருணா சென்றதும், இதனை கேட்டு திகைத்த வான்மதி, “நல்லவேளை ஆரவ். நீங்க முன்னேற்பாடா இதெல்லாம் பண்ணலைன்னா, என்ன ஆகி இருக்கும். இஷு பேபியை நம்மகிட்ட இருந்து பிரிச்சு இருப்பாங்க.” என்று இஷாந்தை தவிப்புடன் அணைத்துக்கொள்ள,

அவனோ ஆத்திரம் தாண்டவமாட, “அது நான் உயிரோட இருக்குறவர நடக்காது.” என கோப பெருமூச்சுக்கள் விட்டதில்,

சற்றே தயங்கியவள், “ஆரவ்… அது… மிருணா பொய் சொல்ற மாதிரி எனக்கு தோணல. திவாகர் என்ன ஆனான்னு…” என கேட்டபடி நிறுத்த, அவளை திரும்பி முறைத்தவன், “நான் வேணும்ன்னா போய் திவாகரை காப்பாத்தி, அவள் கூட சேர்த்து வைக்கவா?” எனக் கேட்டான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“அதில்ல… நமக்கு சப்போர்ட் இருந்தாலும், உங்க அம்மா திவாகரை ஏதாவது பண்ணிட்டு உங்க மேல பழி போட்டா, நமக்கு தான் தேவை இல்லாத தலைவலி. அவள் செஞ்ச தப்புக்கு, இப்போ நல்லாவே அனுபவிக்கிறா. இதே சூழ்நிலை மறுபடியும் அவளை நமக்கு எதிரா யோசிக்க வைச்சுட்டா…” எனக் கேள்வியாய் பார்க்க,

“அப்படி எல்லாம் அவளால எதுவுமே செய்ய முடியாது மதி…” என்றான் சற்றே தணிந்து.

“இல்ல ஆரவ். என்னதான் பத்திரம் இருந்தாலும், பேபி பிறந்ததுமே அவள் போய்ட்டாலும், இப்போ இஷுவை வேணும்ன்னு கேட்டா, சிம்பதி கிரியேட் பண்ணி, கோர்ட்டையே நம்ப வைக்கலாம் ஆரவ். எனக்கு பயமா இருக்கு. என்னால இஷுவை விட்டுக்கொடுக்க முடியாது.” எனத் தவிப்புடன் கூற, அவளின் பயம் புரிந்தவன்,
எழுந்து அவளின் தோளை தொட்டு,

“என்னை நம்பு மதி. என்னை மீறி நமக்குள்ள யாரும் வரமுடியாது. ட்ரஸ்ட் மீ…” என ஆழ்ந்த குரலில் அவளை அழுத்தமாக பார்த்தபடி கூறியவனை, சில நொடிகள் பார்த்திருந்தவள், பின் மெல்ல தைரியம் எழ,

“மிருணாவை பார்த்ததும் சப்புன்னு அறையலாம் போல இருந்துச்சு ஆரவ். என் முன்னாடி அவளை நீங்க ஒரு அறையாவது அறையனும். ஓகே வா?” என தலையை ஆட்டி கேட்டிட, மெல்ல சிரித்தவன், “ட்ரை பண்றேன்.” என்றான் அவளை குறுகுறுவெனப் பார்த்து.

அவ்விடையில் சற்றே முகம் சுருங்கியவளை இன்னும் ரசித்தவன், அத்துடன் அமைதியாக இராமல், “இஷுவை கேட்டா குடுக்க மாட்ட ஓகே. ஒருவேளை, என்னை கேட்டா? டிவோர்ஸ கேன்சல் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்க சொன்னா?” என ஆழம் பார்த்து விட்டு, அவளின் விழிகளையே ஆராய, அவளுக்கு தான் புசுபுசுவென கோபம் வந்தது.

விழிகளை தாழ்த்திக்கொண்டவள், “அப்போ அவளையே கல்யாணம் பண்ணிக்கோங்க. நான் இஷுவை கூட்டிட்டு வேற எங்கயாவது போயிடுறேன்.” என முணுமுணுக்க, அவ்வளவு தான் இத்தனை நேரம் இருந்த இயல்பு மாறி, ஆரவின் முகம் கடுகடுப்பை தாங்கியது.

“அதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ற வரை வெய்ட் பண்ற. இப்பவே போ! ஆனா, இஷுவை என்கிட்ட குடுத்துட்டு போ! நானே வேணாம். அவன் மட்டும் வேணுமா? ஜஸ்ட் கோ!” என வஞ்சகமின்றி நெருப்பை உமிழ்ந்தவனுக்கு அவளிடம் இருந்து, ‘அவன், அவளுக்கு வேண்டும்’ என்ற வார்த்தை தான் தேவைப்பட்டது.

தன்னைக் காண அருவருப்பாக இருக்கிறது என்றவள், தான் அழைக்கும் கண்ணம்மா என்ற வார்த்தையும் அருவருக்கிறது என்றவள், அதன் பிறகு ஒரு முறையேனும் அவனும் அவளுக்கு முக்கியம் என்பதை உணர்த்தாது போனாள்.

அதனை அவள் உணர்த்தவில்லை என்றாலும், ஆரவ் உணர்ந்து கொள்வான் என்றாலும், அவனால் அவ்வலி ஏற்படுத்தும் காயத்தை ஏற்க இயலவில்லை.

அதனாலேயே ஒவ்வொரு முறையும், தன்னையும் முக்கியமாகக் கொள்வது போல சிறு வார்த்தையாவது உதிர்ப்பாள் என்றெதிர்ப்பார்த்து, ஒவ்வொரு வாதங்களையும் வைக்க, அதன் வெளிப்பாடு என்னவோ ஏமாற்றமே கிடைத்தது.

நன்றாக பேசிக்கொண்டிருந்தவன், திடீரென சினத்தை கக்கியதில் பேயறைந்ததை போல் நின்றவளுக்கு, ஒன்றும் புரியவில்லை. ‘அவரு மட்டும் என்னை விட்டுட்டு போறேன்னு சொல்றாரு. அப்போ நான் சொல்ல கூடாதா…?’ என வெதும்பியவள், ஒரு விஷயத்தை உணரவே இல்லை.

‘மிருணா அப்படி கேட்டால் என்ன செய்வாய்’ என்று தான் கேட்டானே தவிர, அவன் அவளுடன் சென்று விடுவதாய் கூறவே இல்லை. கூடவே, இப்போது தான் பழைய கோபத்தை மறந்து இயல்பாக பேசினான். அதற்குள் மீண்டும் கோப முகமூடியை போட்டுக் கொண்டதில், இன்னுமாக கண்ணீரே வந்தது வான்மதிக்கு.

அவன் கத்தும் போதே, மோனிஷாவும் தன்விக்கும் வந்திருக்க, தன்வி தான் பதட்டமாக, “டேய் ஏன்டா இப்படி சத்தம் போடுற?” என வாய்க்குள்ளேயே திட்டிட, ஆரவ் வான்மதியை முறைத்து விட்டு வெளியில் சென்றான்.

தன்விக்கும் அவன் பின்னே செல்ல, மோனிஷாவோ, “என்னடி ஆச்சு? அண்ணா ஏன் கோபமா போறாங்க?” என இஷாந்தை தன் கையில் வாங்கியபடி கேட்க, “உன் அண்ணன் கோபப்படலைன்னா தான் ஆச்சர்யம்” என்று தேம்பலுடன் வாய்க்குள்ளேயே முனகியவள், சுதாகருக்கு போன் செய்து நடந்ததை கூறி, “அவரு கோபமா எங்கயோ போய் இருக்காரு. நீ போய் பாரு” என்று விட்டு போனை வைத்து விட்டு உர்ரென நின்றாள்.

ஏனோ, மோனிஷாவிற்கு அவளின் அழுகையைப் பார்த்து வருத்தம் எல்லாம் தோன்றவில்லை. மாறாக சிரிப்பே வந்தது. முயன்ற அளவு சிரிப்பை வாய்க்குள் அடக்கிக்கொண்டவளை நிமிர்ந்து முறைத்த வான்மதி, “எதுக்குடி சிரிக்கிற?” என கண்ணை சுருக்கி கேட்க, “ஒண்ணும் இல்லையே…” என்றாள் தலையை ஆட்டி.

“பரவாயில்லை. வாய்வரை வந்துருச்சுல சொல்லு.” கண்ணீரைத் துடைத்தவாறு கேட்க,

“இல்ல! ரெண்டு பேரும் கொஞ்சுனா ஓவரா கொஞ்சுறது… சண்டை போட்டா, ஈகோவை புடிச்சுக்கிட்டு தொங்குறது… அதுவும் உனக்கு ஈகோ கொஞ்சம் ஜாஸ்தி தான்…” என்றிட,

“யாரு எனக்கு ஈகோவா? இப்போ அவரு தான் கோபப்பட்டு போறாரு நான் இல்ல” என உதட்டை சுளிக்க, “அவரை கோபப்படுத்துனது நீயா தான இருப்ப…” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“உன் அண்ணன் பெரிய அமைதியின் சின்னம். நான் பேசுனாலும் பேசலைன்னாலும் பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி வல்லு வல்லுன்னு தான் கத்துவாரு…” என பேசிக்கொண்டே வந்தவளுக்கு வார்த்தைகள் தொண்டையில் சிக்கியது.

முகமோ பதற்றத்தை தாங்கி இருக்க, அறை வாசலில் சாய்ந்து கையை கட்டியபடி, அவள் பேசியதை தான் கேட்டுக்கொண்டிருந்தான் ஆரவ்.

‘என்னை பார்த்தா உனக்கு பச்சை மிளகாயை கடிச்ச மாதிரி இருக்காடி…?’ என மனதினுள் வறுத்து எடுத்தவன், அவளை முறைத்தபடியே உள்ளே வர, பாவம் வான்மதிக்கு இதயமே நின்று விடும் போல இருந்தது.

மோனிஷாவிற்கு தான் சிரிப்பை அடக்கவே இயலயில்லை. “என்ஜாய்” என தோழியிடம் முணுமுணுத்து விட்டு, இஷாந்துடன் வெளியில் சென்றிட,

வான்மதி கையை பிசைந்தபடி, அங்கிருந்த ஃபைல் ஒன்றை எடுத்து வைத்து, அதனை தீவிரமாக பார்ப்பது போல பாவனை செய்தாள்.

நாக்கால் ஒரு பக்க கன்னத்தை எத்தியபடி, சிறிதாய் மென்னகை வீசிக்கொண்டவன், அவள் அருகில் எட்டெடுத்து வைக்க, அவளால் பின்னாலும் நகர இயலவில்லை.

அவனின் டேபிளில் தான் ஏற்கனவே முட்டி நின்றிருந்தாள். மூச்சுப்படும் தூரத்தில் நெருங்கி வந்தவன், இன்னும் நெருக்கம் பத்தாது என்பது போல, அவளுடன் முழுதாக உரசி நிற்க, அவளோ கால்கள் தடுமாற டேபிளின் மீதே சாய்ந்து கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தபடியே, அவளுடனே சாய்ந்தவன், கரத்தை அவளின் இடையை தீண்டி பின்னால் கொடுத்து, டேபிளில் இருந்த அலைபேசியை எடுத்து விட்டு நகர, ‘போனை எடுக்க தான் இப்படி வந்தீங்களா?’ என்பது போல ஆசுவாசத்துடன் அவனை முறைத்தாள்.

அம்முறைப்பை சலிக்காமல் தாங்கியவன், குளிர் கண்ணாடியையும் அணிந்து கொண்டு, “யூ கம் வித் மீ?” என வினவிட, ஏற்கனவே அவனின் உரசலில் தன்னிலை இழந்திருந்தவளுக்கு காதும் அடைத்திருக்க, “எ… என்ன?” என்றாள் புரியாமல்.

“என்கூட வர்றியான்னு கேட்டேன்…?” அவளை மேலும் கீழும் பார்த்தபடி அவன் மீண்டும் வினவ, வான்மதிக்கு தான் ஆரவ் கேட்ட தோரணை வேறு மாதிரி இருக்க, லேசாக முறைத்தாள்.

“உடனே ஓவர் திங்கிங் பண்ணாத. நீ சொன்னதை செய்யப்போறேன். அதை பார்க்க வர்றியா?” என அதட்டலாக கேட்டதில், ‘நான் என்ன கேட்டேன்?’ என்றவளுக்கு, ‘உண்மையிலேயே தன்னை இங்கிருந்து அனுப்பி விடுவாரோ அல்லது மிருணாவை மீண்டும்…’ என எண்ணங்கள் எங்கங்கோ அவளை மீறி பயணித்து, கண்களை கலங்க வைக்க, அக்கண்களையே அழுத்தமாக நோக்கி இருந்தவன்,

‘பைத்தியம்டி நீ…! என்னையும் சேர்த்து பைத்தியம் ஆக்குற’ என உள்ளுக்குள்ளே மருகியவன், “வா…” என அவளின் கையை பிடித்து இழுத்து சென்றான்.

‘எங்க போறோம்?’ என கேட்கக் கூட பயந்து, அவள் வெகு அமைதியுடன் வர, ஆரவின் கார் நேராக விக்ராந்த் வீட்டு வாசலில் நின்றது. அங்கு ஏற்கனவே காவலர்களும் கவின் மற்றும் சுதாகரும் இருக்க,

கவின் “மச்சான். மிஸஸ் சௌமியாவுக்கு ஒழுங்கா கடத்த கூட தெரியல. அவனை வீட்டுக்குள்ளேயே ஒரு ரூம்ல அடைச்சு வைச்சு இருந்தாங்க. அதை நாங்க சி.ஐ.டி ரேஞ்சுக்கு கண்டுபிடிச்சு, போலிஸ்ட்ட சொல்லி, கடத்தல் கேஸ அவங்க மேலயே போட்டுட்டோம்” என்று பெருமையாக கூற,

சுதாகர், “நீ ஏண்டா வந்த. அதான் நாங்க பாத்துக்குறோம்ன்னு சொன்னோம்ல.” என மதியை பார்க்க, ஆரவ் எதற்கும் பதிலளிக்காமல் நேராக உள்ளே சென்றான்.

அங்கு காவலர் மிருணாவிடம் ஏதோ கேட்டுக்கொண்டிருக்க, சௌமியா தான், அவன் மீது போடவிருந்த பழியை தன் மீது போட்டதில் கடுங்கோபத்தில் இருந்தார். ஆனால், எதுவுமே செய்ய இயலாத கையறுந்த நிலை.

சௌமியாவை கண்டுகொள்ளாமல் மிருணாவின் முன் சென்று நின்ற ஆரவை, தனக்காக திவாகரை காப்பாற்றி தந்த மகிழ்வில் அவள் பார்த்திருக்க, சில நொடிகளில் தலைக்கு மேலே குருவி பறந்தது ஆரவ் அறைந்த அறையில்.

கன்னத்தில் கை வைத்து, மயக்கமே வந்ததில் பொத்தென அருகில் இருந்த நாற்காலியில் மிருணா அமர்ந்திட, அவன் தான், “இது நீ செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து. பத்தாது தான்… ஆனா, என்னை பொறுத்தவரை யூ ஆர் ஆல்ரெடி டெட்…” என்றவன், வான்மதியின் மின்னிய விழிகளை திருப்தியுடன் பார்த்து விட்டு வெளியேறி விட, வான்மதி தான் மிருணாவைக் கண்டு நிமிர்வுடன் முறுவலித்து விட்டு, சௌமியாவை முறைத்தபடி நாக்கை துருத்தி விட்டு ஆரவின் பின் சென்றாள்.

அதன் பிறகு, முகத்தில் தோன்றிய மலர்வுடன் காரில் வந்து அமர, ஆரவ் என்னவோ இறுகிய நிலையில் தான் இருந்தான்.

அவனின் இறுக்கத்தை உணர்ந்தவள், கியரை பிடித்திருந்த அவனின் கரத்தின் மேல் தன் கரத்தை வைத்தவள்,  “கஷ்டமா இருந்தா என் கையை பிடிச்சுக்கோங்க. யூ வில் ஃபீல் பெட்டர்.” என முன்பு அவன் சொன்னது போன்றே கூறினாள். என்ன இருந்தாலும், அவனின் அம்மாவையும், அவன் நேசித்த பெண்ணையும் தண்டிக்கையில் மனம் வலிக்க தானே செய்யும் என்ற எண்ணத்தில்.

“எனக்கு ஒண்ணும் கஷ்டமா இல்ல.” என்று தோளைக் குலுக்கிக்கொண்டவன், அவள் கையை மட்டும் விலக்காமல் இருந்ததில், “உடம்பு முழுக்க ஈகோ தான்…” அவன் காதுபடவே அவள் பற்களை கடித்திட, “உனக்கு மட்டும் கம்மியாவா இருக்கு” என்று அவனும் அதே தொனியில் சத்தமாகவே பற்களை கடித்தான்.

அதில் இருவருமே ஒருவரை ஒருவர் முறைத்துக்கொள்ள, பற்றிய கையை மட்டும் வீடு செல்லும் வரை விடவே இல்லை.

அதோ இதோவென நான்கு ஜோடிகளும் உதகமண்டலத்திற்கு செல்லத் தயாராக, இஷாந்தை இது வரை நீண்ட பயணத்திற்கு அழைத்து செல்லாததால், சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்திலேயே சென்றனர்.

கோவையில் இருந்து இன்னோவா காரைப் பிடித்து, அனைவரும் ஒன்றாகவே ஊட்டி நோக்கி பயணப்பட்டனர்.

விமானத்தில் செல்லும் போது கூட ஹேமா சமாளித்து விட்டாள், ஆனால், மலையில் ஏற ஆரம்பித்ததுமே வயிற்றைப் பிரட்டத் தொடங்க, கவினும் லயாவும் அவளை திகிலுடன் பார்த்தனர்.

ஆரவ் தான் கார் ஓட்டிக்கொண்டிருக்க, சுதாகர் “மச்சான்… மெதுவாவே போடா. காட்டேஜ்ல செக் இன் 12 க்கு தான். மணி இப்போதான் 6.30 ஆகுது. பொறுமையாவே போலாம்.” என மனைவியின் நிலை புரியாமல் பேச, அதில் அனைவருமே ஒன்றாக மெதுவாக சிரித்து விட்டதில், அது சத்தமாகவே கேட்டது.

லயா தான், “டைமிங் எல்லாம் நீங்க ஃபிக்ஸ் பண்ணாதீங்க ப்ரோ. அத உங்க கூட வர்றவ பிக்ஸ் பண்ணிக்குவா.” என ஹேமாவை நக்கலாக பார்க்க, அவளோ அவளை தீயாக முறைத்து விட்டு, “ஆரவ் ஆரவ் கார நிறுத்து…” என்று கத்த, அவன் உடனே காரை ஓரம் கட்டினான்.

காரை விட்டு இறங்கியதுமே, வாந்தி எடுத்தவளை சுதாகர் பதறி பிடித்து, “ஹே… கல்யாணம் ஆகி நாலு நாள் தான ஆகுது. அதுக்குள்ளயா? ஆனா நான் தான் ஒன்னுமே பண்ணலையே மிஸஸ் சைட்…” என அவளுக்கு உதவி செய்து கொண்டே கிண்டலடிக்க, அவனையும் முறைத்து வைத்தவள், “ஜோக்கா? ஊட்டிக்கு போய் சிரிக்கிறேன்” என கடுப்பானாள்.

சிரிப்பை அடக்கிக்கொண்டவன், “சரி பொண்டாட்டி. காண்டாகாத. இந்தா தண்ணி குடி…” என கொடுத்து விட்டு காருக்கு அழைத்து வர, தன்வி தான், “நல்லவேளை மச்சான்… நீ வந்தனாள நாங்க தப்பிச்சோம். லாஸ்ட் டைம் நாங்க ஊட்டிக்கு வரும் போது, எங்களை இறங்க வச்சே டயர்ட் ஆக்கிட்டா.” என்றதில், வான்மதி ஆரவைப் பார்க்க, அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்தான்.

அதில் அவள் சட்டென திரும்பி விட்டு, அதி வேகத்தில் துடித்த இதயத்தை கையை வைத்து நீவிக் கொண்டாள்.

அவனுக்கும் பழைய நினைவுகள் தாக்க, நெஞ்சத்தை தேய்த்துக் கொண்டே வந்தவனுக்கு, அவளை முதன் முதலில் பார்த்த காட்சி பசுமையாய் விரிந்து புன்சிரிப்பைக் கொடுத்தது.

அவளுக்கும் தான். முதன் முதலில், ஹேமாவை தாங்கும் போது தானே, அதன் மூலம் கவரப்பட்டு அவனை கவனிக்கத் தொடங்கினாள்.

பின், கைப்பையில் இருந்து சில பிளாஸ்டிக் கவர்களையும், புளிப்பு மிட்டாய்களையும் திரும்பி ஹேமாவிடம் நீட்டியவள், “வாமிட் வந்தா இதுலயே எடுங்க அண்ணி. இறங்கி இறங்கி ஏறுனா உங்களுக்கும் டயர்ட் ஆகும். இந்த சாக்லேட்ட சாப்பிட்டுக்கிட்டே வாங்க கொஞ்சம் கண்ட்ரோல் ஆகும்” என்று முன்னேற்பாடாக அனைத்தையும் எடுத்து வந்தவளை ஹேமா தான் புரியாமல் பார்த்தாள்.

“எனக்கு வாமிட் வரும்ன்னு உனக்கு எப்படி தெரியும்?” என அவள் புருவம் சுருக்கி வினவ, வான்மதி இக்கேள்வியை எதிர்பாராமல் விழித்தாள்.

ஆரவும் அதே கேள்வியை முகத்தில் தாங்கி, அவளை அவ்வப்பொழுது பார்த்திட, “ஐயோ…!” என நொந்தவள், “அது… ஆரவ் தான் சொன்னாரு” என அவனையே கையை காட்டிட,

அவனோ “நான் எப்போ சொன்னேன்?” எனக் கேட்டான் கூர்மையாக.

“அது… அது…! ஹான்… அன்னைக்கு நீங்க பீர் அடிச்சுட்டு இருந்தப்ப சொன்னீங்க” என்று சமாளிக்க, கவினும் தன்விக்கும் “என்னது பீரா?” என்று கத்தினர்.

“டேய் மச்சான். நீ எப்போடா தண்ணி அடிச்ச?” கவின் உட்சபட்ச அதிர்ச்சியுடன் வினவ,

தன்விக்கோ, “அடேய். எத்தனை தடவ ஒரே ஒரு பெக் மட்டும் ட்ரை பண்ணலாம்ன்னு கெஞ்சி இருக்கேன். அப்போ எல்லாம் ஒத்துக்காம. நீ மட்டும் தனியா தண்ணி அடிச்சு இருக்கியா?” என்று தன்னை விட்டு குடித்து விட்டானே என்ற ஆதங்கத்தில் பொங்கிட, மோனிஷா அவனை பார்வையாலேயே சுட்டாள்.

இங்கு ஆரவும் வான்மதி மீது நெருப்பை அள்ளி வீச, ‘ஐயோ… இவரு குடிக்கிறது யாருக்கும் தெரியாது போலயே. உளறிட்டோமோ.’ என மேலும் நொந்து போனவள், “சாரி” என்றாள் கண்ணை சுருக்கி.

அத்தோடு அவனின் கோபம் பனியாய் உருகி விட, “நான் குடிச்சுருந்தாலும் தெளிவா தாண்டி இருப்பேன். உன்கிட்ட நான் எப்போ அவளை பத்தி பேசுனேன்.” என அவன் கேள்வியில் குறியாய் இருக்க,

‘விட மாட்டுறாரே’ என்றே தவித்தவள், “அதில்ல ஆரவ். ஹில் ஸ்டேஷன் டிராவல் சிலருக்கு ஒத்துக்காதுல. அதான், யாராவது வாமிட் பண்ணா குடுக்கலாம்ன்னு கொண்டு வந்தேன்.” என்று இளித்து வைத்து சமாளிக்க, அப்போதும் ஆரவின் பார்வை அவள் மீது சந்தேகமாக விழுந்தது.

ஆரவின் பார்வை மட்டுமல்ல பின்னால் அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் தான்.

“இது என்ன? ஒரு நல்லது பண்ணா எல்லாரும் இப்படி பாக்குறீங்க.” என நன்றாகவே திரும்பி அமர்ந்து அனைவரையும் முறைத்தவள், ஹேமாவிடம் கொடுத்ததை பிடுங்கி, “நீங்க இறங்கி இறங்கியே வாமிட் பண்ணுங்க. எனக்கு என்ன வந்துச்சு.” என சிலுப்பிக்கொண்டாள்.

அவள் செயலில் அனைவருமே புன்னகைத்து விட, “சரி சரி கோச்சுக்காத நாத்தனாரே! குடு. எனக்கு தேவைப்படும்” என மீண்டும் வாங்கிக் கொள்ள, அதன் பிறகு அவளின் வாந்தி மட்டும் நிற்கவில்லை.

அதிலும் சுதாகர் சுணங்காமல் ஒவ்வொரு முறையும் அவளை பார்த்துக்கொள்ள அவளுக்குத் தான் ஒரு மாதிரியாக இருந்தது.

“சாரி சுதி. உங்களையும் கஷ்டப்படுத்துறேனா?” என அவள் பாவமாக கேட்க, அவளை முறைத்து வைத்தவன், “இன்னொரு தடவை இப்படி கேள்வி கேட்ட, நான் அடிக்கிற அடில ரத்த வாந்தியே எடுப்ப. லூசு. இதெல்லாம் ஒரு விஷயமா…?” என அவளின் கன்னத்தை கிள்ளிட, ஏனோ அவளுக்கு மேனி எங்கும் சிலிர்த்தது.

“இஷு குட்டி, அங்க பாருங்க குரங்கு பாருங்க…” என இஷாந்தை கையில் வைத்து கவின் வேடிக்கை காட்டிக்கொண்டிருக்க, லயா “அதை இன்னொரு குரங்கு சொல்லுது பாரு.” என்று வாயை பொத்தி சிரித்தாள்.

தன்வியும் சேர்ந்து சிரித்து “இந்த அவமானம்லாம் நமக்கு தேவையாடா?” என மேலும் அவமானப்படுத்த, “நீ உன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணாம இங்க என்னடா பார்த்துட்டு இருக்க…?” என்றான் முறைப்பாக.

“ம்ம்க்கும்… ரொமான்ஸு? கார்ல ஏறுனதுல இருந்து சரக்கு அடிச்சவ மாதிரி தூங்குவா. இவளோட டிராவல் பண்ணுனா, நம்மளும் தூங்கி தான் வழியனும்…” என்று தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருந்தவளை, நன்றாக அணைத்துக் கொண்டவனை மற்றவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க,

அவனோ பதறி, “டேய் டேய்… உடனே கண்டதை யோசிக்காதீங்க. பேமிலி ட்ரிப் போகும் போது இவ தூங்கிகிட்டே தான் வருவா அதை சொன்னேன்.” என அவர்களின் எண்ணத்திற்கு தடை போட்டவன், ‘ஒரு வார்த்தை பேச விட மாட்டுறானுங்களே.’ என நொந்து தூங்குவது போல பாவலா செய்து உண்மையில் உறங்கியும் விட்டான்.

கவின் தான், ‘நானாடி குரங்கு…?’ என மனதினுள் அவளை திட்டியபடி, “ஏய்… லயா உன் அப்பா இங்க என்னடி பண்றாரு” என்று ஜன்னல் புறம் கையை காட்ட, அவளோ “எங்க அப்பாவா? எங்கடா?” என வேகமாக வெளியில் பார்த்து விட்டு, அவனை தீயாக முறைத்து வைத்தாள்.

“எரும எரும. என் அப்பாவை குரங்குன்னு சொல்றியா? நீ தாண்டா குரங்கு.” என்று அவனை அடிக்க, அதனை சிரிப்புடன் வாங்கிக்கொண்டவன், அவளை தடுக்கும் விதமாக, யாரும் அறியாமல் இடைக்குள் கை விட்டுக் கொண்டான்.

அதில் அவள் தான், திணறி உறைந்திருக்க, இவர்களின் சேட்டையை கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டே வந்த ஆரவ், “என்னடி… உன் அடி எல்லாம் அவ்ளோ தானா?” என அவளை ஏற்றி விட, அதனை எங்கே அவள் கேட்டாள். நெளிந்து கொண்டல்லவோ அமர்ந்திருந்தாள்.

சில நொடிகளிலேயே ஆரவிற்கும் புரிந்து விட, அவன் மெல்ல புன்னகைத்து விட்டு, பார்வையை வான்மதி புறம் திருப்ப, அவள் வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள்.

அதில் சற்றே ரசனையானவன், “மதி” என மென்மையாக அழைத்திட, சட்டென திரும்பியவள் “என்ன ஆரவ்?” என கேட்க, “இதுக்கு முன்னாடி ஊட்டிக்கு வந்து இருக்கியா?” என தெரிந்து கொண்டே கேட்டான்.

அவள் தான் செங்கொழுந்தாக சிவந்து விட்டு, “ம்ம். வந்துருக்கேன்.” என அவனைப் பாராமல் கூறிட, “நீங்க வந்து இருக்கீங்களா?” என தெரியாதது போல் கேட்டாள்.

இப்போது அவன் திணறி, உதட்டை கடித்துக்கொள்ள, “வந்துருக்கேன்.” என்றான் ஜன்னல் புறம் திரும்பி.

“ஓ… அப்போ எல்லா இடமும் சுத்தி பார்த்து இருப்பீங்க தான?” என மேலும் பேச்சு கொடுக்க, “மோஸ்ட்லி. நீ பார்த்த இடத்தை எல்லாம் நானும் பார்த்து இருக்கேன்.” என உளறி விட்டவன், “ஸ்ஸ்ஸ்…” என்று ஒற்றைக் கண்ணை மூடி தன்னையே மானசீகமாக அறைந்து கொண்டான்.

நல்லவேளையாக அது அவளுக்கு சரியாக கேட்காமல் போக, “ஹான்? என்ன சொன்னீங்க?” எனக் கேட்க, “நான் ஒண்ணும் சொல்லவே இல்லையே.” என்றவனை காப்பாற்றும் விதமாக காட்டேஜும் வந்திருக்க, பெருமூச்சு விட்டபடி நிறுத்தினான். 

அதன் பிறகே, முன்பு வந்திருந்த அதே காட்டேஜை தான் இப்போதும் நண்பர்கள் பிடித்திருப்பதை அறிந்து அவன் மெல்ல அதிர, அவளோ அதற்கும் மேல் வெகுவாய் திகைத்தாள். அதே காட்டேஜ் வாசலில் வைத்து தானே, எதிரில் இருந்த பால்கனி வழியாக ஆரவை பார்த்தாள்.

‘கடவுளே! என்னை ரொம்ப சோதிக்கிறியே’ என விதிர்விதிர்த்துப் போனவள், பின் ‘எப்படின்னாலும் ஆரவ்ட்ட பழசை சொல்லணும்ன்னு முடிவு பண்ணிட்டோம். அவரு என்னை என்ன நினைச்சாலும் சரி, சொல்லிடலாம்…’ என்றே மனதை தேற்றிக்கொண்டு காரை விட்டு இறங்க, ஊட்டி குளிர் மேனி எங்கும் ஊடுருவியது.

இஷாந்த் தான், திடீரென வெளியூர் அழைத்து வரவும் சிணுங்கி ஆரவிடமே தாவ, அவனும் அவனை சமன் செய்தபடி உள்ளே சென்றான்.

வாந்தி எடுத்தே மயங்கி இருந்த ஹேமா, “போன தடவை ஊட்டிக்கு வந்தப்ப கூட கொஞ்சம் ஸ்ட்ராங் ஆ இருந்தேன். இந்த தடவை ரொம்ப படுத்துது. ஒருவேளை வயசாகிடுச்சோ.” என சோர்வாக கேட்டபடியே வர, சுதாகர் தான் “ஆமா கிழவி. வயசாகிடுச்சு.” என்றான் நக்கலாக.

“ஒரு பேச்சுக்கு சொன்னா… கலாய்க்கிறீங்களா?” என தலையில் நறுக்கென கொட்டியவள், அறைக்கு சென்றிட, வாசலில் நின்ற கவின், லயா, தன்விக் மோனிஷா நால்வரும் இப்போதிருந்தே அவர்களின் திட்டத்தை தீட்ட ஆயத்தமாகினர்.

கவின் பாபநாசம் கமலஹாசன் தோரணையில், “இப்ப இருந்து ஒரு நிமிஷம் கூட வீணாக்காம, ஆரவ் வாயில இருந்து உண்மையை வரவைக்க எல்லா முயற்சியும் பண்ணனும். ஒருவேளை அவன் நம்மளை கண்டிபிடிச்சுட்டா, நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி முகத்தை சாதாரணமா வைச்சுக்கணும். முக்கியமா பதட்டப்பட கூடாது. அவன் தனி தனியா நம்மகிட்ட வந்து, இதே காட்டேஜை புடிச்சது கூட நம்ம பிளானான்னு கேட்பான். அப்போ எல்லாரும் ஒரே மாதிரி, ‘இது எதேச்சையா நடந்தது. கம்மி காசுல இந்த காட்டேஜுதான் இருந்துச்சுன்னு பொய் சொல்லணும்.'” என அடுக்கடுக்காக உத்தரவு கொடுத்தான்.

தன்விக், “பொய் சொல்ல எனக்கு தெரியாதேடா மச்சான்.” என பாவமாக கூற, “இதே ஃப்ளோவை ஃபிக்ஸ் பண்ணிக்க மச்சான். இப்படி பொய் சொன்னா உடனே நம்ப தோணுது.” என்று பாராட்டுவது போல வார, லயாவும் மோனிஷாவும் பக்கென சிரித்து விட்டனர்.

“நீங்க தீட்டிய திட்டம் எல்லாம் போதும், மூடிக்கிட்டு உள்ள வர்றீங்களா?” என ஆரவ் பின்னால் நின்று அழைக்க, அதில் நால்வரும் ஸ்லோ மோஷனில் திரும்பி பேந்த பேந்த விழித்தனர்.

“தி… திட்டமா? அப்படின்னா என்ன ஆரவ்?” என லயா அப்பாவியாக வினவ, மோனிஷாவோ, “திட்டம்ன்னா இங்கிலீஷ்ல பிளான் தான அண்ணா?” என்றாள் வெகுளி போல்.

“அட ச்சி. மூடுங்க…” என சைகை மூலமும், முகத்தை சுருக்கியும் நால்வரையும் திட்ட வந்தவன், மேலும் பேசும் முன் உள்ளே ஓடி விட்டனர்.

ஹாலில் நின்று, அந்த காட்டேஜை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வான்மதி, “இங்க எந்த ரூம்ல தங்க?” எனக் கேட்டாள் உள்ளே வந்த லயாவிடம்.

“கீழ மூணு ரூம். மேல ஒரு ரூம் இருக்கு மதி. லாஸ்ட் டைம் ஆரவ் வந்தப்போ, மேல தான் தங்குனான். அங்கேயே நீயும் இருந்துக்கோ.” என்று ஆரவைப் பார்த்து கண் சிமிட்டி விட்டு செல்ல, அவளோ ‘என்னது? ஒரே ரூம்லயா?’ என்று மேலும் அதிர்ந்தாள்.

அவனுடன் ஒரே அறையில் இருப்பதை நினைக்க தித்தித்தாலும், மனது படபடத்தது. அப்பட்டமாக திகைப்பை வெளிக்காட்டியவளை முறைத்தபடி இஷாந்தை கொடுத்தவன், “இஷுவை தூக்கிட்டு போய் பாலை குடு. நான் லக்கேஜ் எடுத்துட்டு வரேன்.” என்றிட, தலையை உருட்டியவள், துடித்த மனதை அடக்க இயலாமல் அறைக்கு சென்றாள்.

உடனே, இஷாந்திற்கு பாலை கொடுத்து தட்டிக் கொடுத்தவள், அவன் அவளை பார்த்து சிரித்து விளையாடியதும், “பேபிக்கு தூக்கம் வரலையா? நம்ம பால்கனில போய் வேடிக்கை பார்க்கலாமா? ம்ம்?” எனக் கேட்டபடி அந்த சிறிய பால்கனிக்கு தூக்கி சென்றவள், இன்றும் வானத்தை மூடி இருந்த மேகத்தை நிமிர்ந்து பார்த்து ரசித்தாள்.

“இஷு பேபி அங்க பாருங்க. க்ளவுட்ஸ் பாருங்க…” என்று மேலே கையை காட்டியவள், அந்த மேகத்தின் மீதே விழிகளை பதிய விட்டாள்.

கடந்து போகும் மேகமென்றே
உன்னை நினைத்து கடந்தேனடா…
கருமேகமாய் தேன் சிந்தி
உயிருடன் உள்நுழைந்தவன் நீயென்று உணராமல்…!

அவள் எண்ணம் போன்றே, கருமேகம் லேசாய் தூறலைத் தூவ, இஷாந்திற்கு ஒத்துக்கொள்ளாது என்று உள்ளே வந்தவள், அவளையே பார்த்தபடி அவள் பின் நின்றிருந்த ஆரவின் மீது மோதினாள்.

“உன் திங்க்ஸ் இங்க இருக்கு. ட்ரெஸ் சேஞ்ச் பண்றதுன்னா பண்ணிக்க. நான் வெளிய இருக்கேன்.” என்றவன், இஷாந்தை வாங்கிக்கொண்டு அறைக்கு வெளியில் இருந்த சோபாவில் படுத்தபடி, இஷாந்தை அவன் மீது போட்டு உறங்க வைக்க முயன்றான்.

ஆரவ் சென்றதும் கதவை சாத்திக்கொண்டவள், உடையை மாற்றிவிட்டு வெளியில் வந்து, ஆரவ் நெஞ்சின் மீது இஷாந்த் படுத்திருப்பதையும், ஆரவ் உறக்கத்தில் இருப்பதையும் பார்த்து சில கணங்கள் அப்படியே நின்றிருந்தாள்.

ஏனோ, அந்த இடத்தில் தானும் இருக்க வேண்டும் என்றே இதயம் பரிதவிக்க, உறங்கி இருந்தவன் கன்னத்தை கிள்ளி இஷாந்த் சேட்டை செய்து கொண்டிருந்தான்.

அதில் மெதுவாக முறுவலித்தவள், “உஷ்…” என இஷாந்தை பார்த்து வாயில் ஒரு விரல் வைத்து அமைதியாக இருக்க சொல்லி விட்டு, “அப்பா தூங்கட்டும் பேபி. நம்ம உள்ள போகலாம்.” என்று ஹஸ்கி குரலில் அவனுடன் பேசியபடி மெதுவாக தூக்கிக்கொள்ள, உறக்கத்திலும் ஆரவ் இஷாந்தை இறுக்கி தான் பிடித்திருந்தான்.

‘ப்ச்… என்ன இவரு டைட்டா பிடிச்சு இருக்காரு.’ என்று, மெல்ல அவன் கையை எடுத்து விட்டு, இஷாந்தை தூக்க, அவனோ மகனை கீழே விட்டு விட கூடாது என்ற விழிப்புடன் தான் உறங்கினான். இப்போது சட்டென விழித்திட,

“ஆரவ் ரிலாக்ஸ். இஷு தூங்காம இருந்தான். அதான் தூக்குனேன்.” என்று உடனே அவனை சமன்படுத்தியதும் தான், நிம்மதி ஆனவன், “நீ தூங்கு மதி. ட்ராவல் டயர்ட் – ஆ இருக்கும். நான் அவனை வச்சுக்குறேன்.” என்றான் அப்போதும் அவளை மனதில் நினைத்து.

“எனக்கு டயர்டாலாம் இல்ல. நீங்க உள்ள வந்து பெட்ல தூங்குங்க.” என்று அழைத்தாள்.

“வேணாம் இங்கயே தூங்கிக்கிறேன். இஷு அழுதா எழுப்பு. தனியா சமாளிக்க முடியாது…” என்றவன் ஒருக்களித்து படுக்க, அவனை கோப பெருமூச்சுடன் முறைத்தவள், “உங்களையே சமாளிக்கிறேன் பேபிய சமாளிக்க மாட்டேனா. என் பேபியை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும்.” என கிட்டத்தட்ட கத்திவிட்டே உள்ளே சென்றாள்.

பாவம் அவன் அப்போது தான் உறக்கம் நன்றாக கலைந்து, ‘அவள் ஏன் கத்துகிறாள்’ என்றே புரிந்து கொள்ள, ‘அட பைத்தியமே. உனக்கு டயர்டா இருக்கும்ன்னு தாண்டி சொன்னேன்.’ என்று தலையில் அடித்துக்கொண்டவன், ‘இவளை என்ன தான் பண்றதோ…!’ என்று மென்முறுவலுடன் மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தான்.

அனைவருமே, உறங்கி எழுந்து புத்துணர்வுடன் மாலையில் ‘லேக்’கிற்கு செல்ல கிளம்பினர்.

ஹேமா தான், “டேய். நான் இப்ப தாண்டா தெளிவா இருக்கேன். போட்ல போனா அகைன் வாமிட் வரும். என்னை விட்டுடுங்கடா நான் வரல.” என விட்டால் அழுதே விடுபவள் போல பாவமாக கூற, சுதாகர், “நம்ம போட்ல போக வேணாம் ஹேமா. ஜஸ்ட் ஒரு வாக் போயிட்டு வரலாம் ஓகே வா?” எனக் கேட்க, அதில் சிறு சிரிப்புடன் வேகமாக தலையாட்டினாள்.

எப்போதும் போல, அனைவரும் ஒன்றாக போட்டில் செல்லாமல் தனி தனி போட்டில் ஜோடியாக செல்ல, ஹேமாவும் சுதாகரும் மட்டும் அவர்களை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தனர்.

போட்டில் ஏறி அமரும் போதே, வான்மதிக்கு வயிற்றில் பயப்பந்து உருள, ஆரவிடம், “இஷுவை குடுங்க ஆரவ். நான் வச்சுக்குறேன்.” என்றாள் வேகமாக.

அவளையே நிதானமாக பார்த்தவன், சுதாகரை அருகில் அழைத்து, இஷுவைக் கொடுக்க, அவனும் “நான் தான் முன்னாடியே சொன்னேன்ல என்கிட்ட குடுத்துட்டு போன்னு…” என்றபடி அவனை வாங்கிக்கொண்டான்.    
  
வான்மதியோ அழுகுரலில், “பேபியை ஏன் குடுத்தீங்க ஆரவ். ப்ளீஸ். எனக்கு பயமா இருக்கு. அவனை பிடிச்சுக்குறேன்…” என்று கூறும் போதே, அவள் தோளின் மீது கை போட்டு அணைத்துக் கொண்டவன், மற்றொரு கையால் அவளின் கையை இறுக்கிப் பற்றிக்கொண்டான்.

அத்துடன் பயம் முற்றிலும் மறைந்து, ஒரு பாதுகாப்பு உணர்வும், கூடவே ஒரு வித சிலிர்ப்பும் தோன்ற அப்படியே அமைதியில் மூழ்கி விட்டாள்.

“இப்போவும் பயமா இருக்கா? இஷுவை தர சொல்லவா?” அவள் காதோரம் அவனின் ரகசிய குரல் ஒலிக்க, “ம்ம்ஹும்…” என மறுப்பாக தலையாட்டும் போதே, ‘போட்’ கிளம்ப ஆயத்தமாக ஒரு குலுங்கு குலுங்கியதில், ஆரவின் இதழ்கள் அவளின் காது மடல்கள் மீது அழுத்தமாக பதிந்தது.

அதில், குங்குமமாய் சிவந்து போனவள், விழிகளை மூடிக்கொள்ள, அவனுக்கோ தன்னை கட்டுப்படுத்துவது தான் பெரும்பாடாக இருந்தது.

“இது இன்சிடென்ட் இல்ல மதி. ஆக்சிடெண்ட் கிஸ்.” என்று மேலும் அவளை சிவக்க வைத்தவன், சில்லென்ற குளிர் காற்றுடன், தன்னவளின் வெப்பத்தையும் ரசித்திருந்தான், இப்பயணம் வாழ்விலேயே மறக்க முடியாததாக மாறப் போவதை உணராதவனாக.

தேன் தூவும்…!
மேகா!

 
ஹாய் டியர் ஃப்ரெண்ட்ஸ். நாளைக்கு மாக்சிமம் ஃபைனல் யூடி kudukkuren. சாரி கொஞ்சம் உடம்பு சரி இல்லை. சோ போன் ரொம்ப பாக்க முடியல. அதான் கமென்ட் அண்ட் இன்பாக்ஸ் மெசேஜ் எல்லாம் reply பண்ண முடியல drs.. and I love all your comments. Story இன்னும் போகனும் ன்னு ஆசை தான். ஆனா ஸ்டோரி nnaa முடிச்சு தான ஆகனும் சோ நானும் feelings oda thaan முடிக்கிறேன் 🙈🙈🙈 thank u sooooo much all your stickers, comments, ratings drs. 🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
49
+1
198
+1
7
+1
7

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.