Loading

அஜயும், விதுனும் எவ்வளவோ சொல்லியும், உத்ரா காதில் வாங்கவே இல்லை. துருவிடம் பேசி பார்த்தும் பயனில்லை. அவன் உத்ரா, தலைகீழே நின்று தண்ணீர் குடிக்க சொன்னாலும், உடனே செய்வேன் என்பது போல், அவள் முந்தானையை பிடித்துக் கொண்டே அலைந்து கொண்டிருந்தான்.

விது தான் “எப்படி இருந்தவன் எப்படி ஆகிட்டான் பாருடா” என்று தலையில் அடிக்க,

அஜய், “ப்ச்… இவள் என்னடா இப்படி பண்றா. அவளுக்கும் அர்ஜூனுக்கும் இப்போ தான் எல்லா பிரச்சனையும் சரி ஆகியிருக்கு. இந்த டைம்ல இப்படி ஒரு பிரச்சனை” என்று சலிக்க,

விது, “நீ ஒரு தடவை சுஜி அப்பாகிட்ட பேசி பாருடா. இல்லை இன்னும் நம்ம வீட்ல உன் லவ் மேட்டர் தெரியாது. வீட்ல சொல்லி அவங்க வீட்ல பேச சொல்லலாம்” என்றான்.

அவன் மறுப்பாய் தலையசைத்து, “அந்த ஆளு ஏதாவது விதண்டாவாதமா பேசுவாருடா. எதுக்கு நம்ம வீட்டுல இருக்குறவங்களை அசிங்கப்படுத்தனும்.” என்று கடுப்புடன் சொன்னான்.

அப்பொழுது, மீரா அஜயைப் பார்க்க, அவனும் அவளைப் பார்த்து வேண்டாம் என்று கண்ணைக் காட்டினான்.

யார் கவனிக்கவில்லை என்றாலும், இவர்களின் பார்வை பரிமாற்றத்தை அர்ஜுன் கவனித்து விட்டான்.

மீரா, கொஞ்ச நாளாகவே சோர்வாக இருப்பது போல் தோன்ற, இதனைப் பற்றி கேட்டே ஆக வேண்டும் என்று துருவ் உத்ராவிடம் சொல்ல, அவர்களும் அவள் அசந்த நேரத்தில் தனியாக அழைத்து சுற்றி நின்று என்ன என்று கேட்டனர்.

அவள் புரியாமல் “என்ன என்ன?” என்று கேட்க,

அர்ஜுன், “ம்ம் உனக்கும் அஜய்க்கும் நடுவுல என்ன ரகசியம் ஓடுது. அவன் எதை உன்கிட்ட சொல்லக்கூடாதுனு கண்ணை காட்டினான்.” என்று நேரடியாகவே கேட்டுவிட, அதில் அதிர்ந்தவள், “அது அது… அப்டிலாம் ஒன்னும் இல்லையே” என்று சமாளிக்க,

உத்ரா, “ப்ச் உனக்கு பொய் சொல்லலாம் வரல மீரா. உண்மையை சொல்லு.” என்று கண்டிப்பாய் கேட்க,

துருவ் “நீ ஏதாவது சொன்னா தான. அவங்க பிரச்னையை சரி பண்ண முடியும் சொல்லு மீரா” என்றான் பிடிவாதமாக.

அவள் “இல்ல அண்ணா அது… வந்து, அஜய்கிட்ட நான் ப்ராமிஸ் பண்ணிருக்கேன் சொல்ல  கூடாதுன்னு” என்று தலையை சொரிய,

விது, “ஹா ஹா ஹா… நாங்கல்லாம் ஒரு நாளைக்கு நூறு ப்ராமிஸ் பண்ணுவோம். நீ ஒரே ஒரு ப்ராமிஸ் பண்ணிட்டு ஓவரா பில்டப் குடுக்குற” என்று கலாய்க்க, அவள் உத்ராவை சங்கடமாக பார்த்தாள்.

அர்ஜுன் பொறுமையை இழந்து, “மீரா இப்போ சொல்ல போறியா இல்லையா” என்று சற்று கடுமையாக கேட்க,

அதில், “அன்னைக்கு ஹாஸ்பிடல்ல அஜயும், சுஜி அப்பாவும் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன். அதை தான் உங்க யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு அஜய் என்கிட்ட ப்ராமிஸ் வாங்கிட்டான்… “என்று சொல்ல, அர்ஜுன், என்ன பேசுனாங்க என்று கேட்க, அவள் நடந்ததை சொன்னாள்.

அன்று மருத்துவமனையில், அஜய், சுஜியின் அப்பா ராகவனை சமாதானம் செய்யும் பொருட்டு அவரிடம் பேச வர, அவர், அவனை பேசவே விடவில்லை.

“அங்கிள் நான் அவளை லவ் பண்றேன்… அவள் மேல எனக்கும் எல்லா அக்கறையும் இருக்கு. அண்ட் இப்படி நடந்துருக்க கூடாது தான். பட் எனக்கு ஒரு சான்ஸ் குடுங்க இனிமே இந்த மாதிரி நடக்காம நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல,

ராகவன், “அதான் இப்போ நடந்துருச்சே. அவள் என் பொண்ணா இருக்குற வரைக்கும், அவளுக்கு ஒரு சின்ன கீறல் கூட ஏற்பட விட்டது இல்லை. எப்போ உங்க கூட சேர ஆரம்பிச்சாஆ
ளோ அப்போவே அவளுக்கு ஏழரை சனி தான்…” என்று சொல்ல சுறுசுறுவென அவனுக்கு கோபம் வந்தாலும், “அங்கிள் உங்க கோபம் நியாயம் தான். பட் இது எங்களை மீறி நடந்துருச்சு. உத்ராவால முடிஞ்சுருந்தா அவள் கண்டிப்பா இப்படி நடக்க விட்டுருந்துருக்க மாட்டாள்.” என்று சொல்ல,

அவர்,” உத்ரா… உத்ரா… உத்ரா… அவளும், இப்படித்தான் அவள் பேரையே சொல்லிக்கிட்டு வெளிநாட்ல கிடைச்ச நல்ல வேலையையும், வாழ்க்கையையும் விட்டுட்டு அவள் கூடவே கிடக்கிறாள். இதுல லவ் மண்ணாங்கட்டி வேற…” என்றவருக்கு இப்போது  உத்ராவின் மீது தான் ஆத்திரமாக வந்தது.

அஜயோ கொலை வெறியில் இருந்தான். அவர் அதோடு விட்டிருந்தாலும் அவன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றிருப்பான். அவருக்கு அன்று நாக்கில் சனி இருந்தது போல, அவனிடம்,

“இப்போ கூட எனக்கு என் பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம். அவளுக்கு உன்னை பிடிச்சுருக்குன்னா எனக்கும் உனக்கு அவளை கல்யாணம் பண்ணி குடுக்க சம்மதம் தான் ஆனால்…” என்று நிறுத்தியவரை அஜய் புரியாமல் பார்க்க,

ராகவன் தொடர்ந்து, “உனக்கும் உத்ராவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க கூடாது. அவள் பிசினெஸயும் நீ பார்க்க கூடாது… உனக்கு என் பொண்ணு வேணும்னா அவள் கிட்ட நீ பேச கூடாது… எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல. திமிரு பிடிச்சவ” என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை அவரின் சட்டை அஜய்யின் கையில் இருந்தது.

இவ்வளவு நேரம் இதனைக் கேட்டு அதிர்ந்து இருந்த மீரா, இவன் இவ்வாறு செய்யவும் வேகமாக சென்று அவர்களை விலக்கினாள்.

“அஜய் விடு அஜய்” என்று அவனை விலக்க, அவன் “யோவ் எங்க இன்னொரு வார்த்தை அவளை பத்தி பேசி பாரு… வாயை இழுத்து வச்சு தச்சுருவேன். என்னையா தெரியும் உனக்கு என் உதி பத்தி.

அவளோட கால் தூசிக்கு கூட நீ வரமாட்ட… சுஜி உன் பொண்ணுங்கிறனால தான் அவளுக்காக நீ அவ்ளோ பண்ற. ஆனால் அவள் காலேஜ் படிக்கும் போது எவளோ பெரிய ஆக்சிடென்ட்ல இருந்து அவள் உயிரை கூட பொருட்படுத்தாம காப்பாத்துனா தெரியுமா போய் கேளு உன் பொண்ணு கிட்ட… சொல்லுவா. பெரிய உலக அழகியை பெத்து வச்சிருக்காரு” என்று கத்க,

மீரா, “அஜய் அமைதியா இரு… ப்ளீஸ்.” என்றாள்.

“நீங்களும் கேட்டீங்கள்ல அண்ணி. எப்படி உதியை பத்தி தப்பா பேசலாம்… யோவ் நீ என்னய்யா உன் பொண்ணை தரமாட்டேன்னு சொல்றது. என் உதியை தப்பா பேசுன உன்னோட பொண்ணு எனக்கு தேவையே இல்ல. கூட்டிட்டு போயா உன் பொண்ணை” என்று கத்தி பேச, அவர் கோபத்துடன் சென்று தான், சுஜியை உடனே அழைத்து சென்றார்.

பின் மீரா, “என்ன அஜய் இது… என்ன இருந்தாலும் பெரிய மனுஷன் கிட்ட போய்…” என்று பேச வர,

“பெரிய மனுஷன் மாதிரியா பேசுறான் அந்த ஆளு…” என்றவன், “அண்ணி இங்க நடந்தது யாருக்கும் தெரியக்கூடாது முக்கியமா உதிக்கு..” என்று கண்டிப்பாய் சொல்ல,

அவள் “அஜய், அவங்ககிட்ட சொன்னா ஏதாவது சொலியுஷன் கிடைக்கும்ல…” என்று கூற, அவன் அவள் கையை எடுத்து அவன் தலையில் வைத்து கொண்டு, “இது என் மேல சத்தியம் அண்ணி. யாருகிட்டயும் நீங்க சொல்ல கூடாது..” என்று அழுத்தமாய் கூறி விட, அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை. என்று அவள் சொல்லி முடிக்க, உதி அதிர்ந்து, மேலும், அவனின் அன்பில் நெகிழ்ந்து கண்ணில் நீர் கசிய நின்றிருந்தாள்.

அர்ஜுனும் விதுனுமோ “அந்த ஆளை அவன் சும்மாவா விட்டான்… வாடா அவர் வீட்டுல போய் உண்டு இல்லைன்னு ஆக்கிட்டு வரலாம்” என்று இருவரும் கிளம்ப,

மீரா, “ஐயோ. அப்படிலாம் எதுவும் பண்ணிடாதீங்க” என்று அவர்களை சமன்படுத்த, துருவ் உச்ச கட்ட கோபத்தில் இருந்தான்.

உத்ரா தன்னை நிலைப்படுத்தி கொண்டு, “யாரும் போய் யார் கிட்டயும் எதுவும் கேட்கவேண்டாம். இந்த விஷயத்தை வேற மாதிரி ஹேண்டில் பண்ணிக்கலாம்” என்று சொல்லிவிட்டு, துருவின் கையைப் பிடித்து அமைதி படுத்தினாள்.

அதில் அவன் இறுகிய கை சற்று தளர்ந்து, “சரி நான் சொல்ற மாதிரி பண்ணு.” என்று உத்ராவிடம் சில விஷயம் சொல்ல,

விது “வாவ் செம்ம” என்று கைதட்ட, அர்ஜுன், “வரேவா… சூப்பர் சீன் ஒன்னு இருக்கு அப்ப” என்று சொல்ல, மீரா, தான் கடவுளே இவர்களை என்னதான் செய்வது என்று தலையில் கை வைத்தாள்.

உத்ரா, “துருவ் ஒரு தடவை அவரு கிட்ட பேசி பார்க்கலாம்” என்று சொல்ல வருவதற்குள், “நீ யாருகிட்டயும் போய் பேசுறதுல எனக்கு உடன்பாடு இல்லை. ஜஸ்ட் டூ வாட் ஐ சே” என்று பல்லை கடித்து கொண்டு கூற, அவள் யோசனையுடன் சரி என்று தலையாட்டினாள்.

சுஜி அஜயின் நினைவிலேயே வாட, ஒருமுறை கூட என்னை பார்க்க உனக்கு தோன்றவில்லையா என்று மனதினுள் வெந்து கொண்டிருந்தாள்.

அன்று, அவள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதாக இருக்க, ராகவன் அவளை அழைத்து சென்றார்.

பாவம் அவளுக்கு அவர் அஜயிடம் பேசியதை பற்றி எதுவும் தெரியவில்லை. செக் அப் முடிந்து வெளியில் வருகையில், ராகவன் முன்னிலையிலேயே சுஜியை முக மூடி அணிந்த இருவர் கடத்தி சென்றனர்.

அதனை பார்த்து அதிர்ந்தவர், செய்வதறியாமல் திகைத்து நிற்க, உடனே காவல் துறையிடம் புகார் கொடுத்தார்.

அவர்களோ, அசட்டையாக, “உன் பொண்ண கடத்திட்டு தான் போனாங்களா… இல்ல யாரு  கூடவாவது ஓடி போய்ட்டாளா” என்று கேட்க,

அவர் “ஐயோ என் பொண்ணு அப்படிலாம் இல்லை சார்… என் கண்ணு முன்னாடி தான் சார் கடத்துனாங்க. என் பொண்ணை கண்டுபிடிச்சு குடுங்க சார்” என்று கெஞ்ச, அவர்களோ கம்பளைண்ட் எழுதி கொடுத்து விட்டு போகும்படியும், ஏதாவது மிரட்டல் கால் வந்தால், எங்களுக்கு உடனே தெரிவிக்கும் படியும் சொல்லிஅனுப்பினர்.

நடந்ததை, சுஜியின் அம்மா காயத்ரியிடம் வந்து  சொல்ல, அவரும் அழுது கரைந்து, “அவளை கடத்துறவரை நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க. எனக்கு என் பொண்ணு வேணும்” என்று கண்ணீர் விட,

அவருக்கு போலீசை நம்பி பிரோயோஜனம் இல்லையோ என்று தோன்றியது.

காயத்ரி,” உடனே இந்த விஷயத்தை உதிட்ட சொல்லலாம். அவளுக்கு நிறைய பெரிய ஆளுங்களை தெரியும். அவள் எப்படியும் கண்டுபிடிச்சுடுவா” என்று சொல்ல, “நான் போலீஸ்ல புகார் குடுத்துருக்கேன் அவங்க கண்டுபிடிச்சு தருவாங்க” என்று கோபமாக  சொன்னவருக்கு இரவு நேரம் ஆக ஆக அடிவயிற்றில் பயம் எழுந்தது.

 இருப்பினும் அவளிடம் போய் நான் நிற்க வேண்டுமா என்று ஈகோ பார்த்தவர், பின் தன் பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று உத்ராவின் அலுவலகம் சென்றார்.

அங்கு துருவ் தான் ஆஸ்திரேலியா சென்றதும், என்ன என்ன வேலைகள் செய்ய வேண்டும் என்று மீராவுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க, அவர் “நான் உத்ராவை பார்க்கணும்” என்று அவசரமாக வந்தார்.

துருவ், “அவள் மீட்டிங்ல இருக்காள் பார்க்க முடியாது” என்று சொல்ல,

அவர் “இல்லை நான் உடனே பார்க்கணும்” என்க,

“எதுக்கு” என்று துருவ் கேட்டதும், “என் பொண்ணை கடத்திட்டாங்க…” என்றார் பதற்றமாக.

அவன் அசட்டையாக சுற்றி முற்றி பார்த்து விட்டு, “உத்ரா எப்போ ஐபிஎஸ் படிச்சா? இதை பார்த்தா உங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன் மாதிரி இருக்கா” என்று நக்கலாக கேட்டான்.

அவரோ “நான் போலீஸ்கிட்ட சொன்னேன் அவங்க பெருசா எடுத்துக்க மாட்டுறாங்க. உத்ராக்கு நிறைய பேரை” என்று பேச வர, அவரை தடுத்து நிறுத்தியவன்,

“சாரி சார்… உங்க பொண்ணுக்கும், உத்ராவுக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு கூட்டிட்டு போய்ட்டிங்க. இப்போ அவள் உங்க பொண்ணு மட்டும் தான். அவளுக்கு என்ன நடந்தாலும் அதுக்கு பொறுப்பு நீங்க மட்டும் தான். இப்போ நீங்க போகலாம்” என்று விட்டு மீராவிடம் வேறு ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

அந்த நேரம் உத்ராவும், அஜயும் உள்ளே வர, அவர் அவசரமாக உத்ராவிடம் சென்று நடந்ததை சொல்ல, அவள் “உங்க பொண்ணை கடத்திட்டங்கன்னா. அதை என்கிட்ட ஏன் சார் சொல்றீங்க.” என்று தோளைக் குலுக்க, அஜய் அதிர்ந்து போயிருந்தான்.

அவனுக்கு அவளைக் காணவில்லை என்றதும், பதட்டம் தொற்றி கொள்ள, உத்ராவை பார்த்தான்.

ஆனால் அங்கு யாருமே பதட்டம் இல்லாததை பார்த்து விட்டு, மீராவை பார்க்க, அவள் கண்ணிலேயே சாரி என்று கெஞ்சினாள்.

அதில் இதுங்க தான் ஏதோ பிளான் பண்ணிருக்குதுங்க என்று நினைத்து, சிரிப்பை அடக்கி கொண்டு, அவனும் அவளை தேட முடியாது என்று மறுக்க 

அவர் “நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன் என் பொண்ணை கண்டுபிடிச்சு குடுங்க…” என்று சொல்ல, அவள் “பேச்சு மாறக்கூடாது” என்று தலையை சாய்த்து கேட்க, அவர் கண்டிப்பாக செய்கிறேன் என்று சொன்னார்.

அவள் உடனே, “உங்க பொண்ணை கண்டுபிடிச்சுட்டா, அவளுக்கும் அஜய்க்கும் கல்யாணம் நடக்கணும். உங்க சம்மதத்தோட” என்று அழுத்தமாய் சொல்ல, சிறிது யோசித்தவர், பின், பெண் கிடைத்தால் போதும் என்று நினைத்து சரி என்று விட்டார்.

இங்கு, சுஜியை கடத்திய இரண்டு முக மூடி கொள்ளைக்காரர்களும், “ஹே கத்துன… உன்னை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்” என்று ஒருவனும், “இவளை இன்னைக்கு எண்ணெய் சட்டில போட்டு ஃப்ரை பண்ணிட வேண்டியது தான்” என்று கோரமாக மற்றொருவன் பேச, சுஜி, இருவர் தலையிலேயும் நங்கென்று கொட்டி,

வெளிவராத குரலில், “தொண்டையில அடி பட்டுருக்குறப்ப எப்படிடா கத்தமுடியும்… உங்களுக்குலாம் யாரு கடத்தல் பண்ற கேரக்டர் குடுத்தது. நீங்க அதுக்குலாம் சரி பட்டு வரமாட்டீங்க” என்று கலாய்க்க,

அர்ஜுனும் விதுனும் முகமூடியை கழட்டி விட்டு, அவளை முறைத்து, “டெம்போலாம் வச்சு கடத்திருக்கோம் பங்கு… கொஞ்சமாவது பயப்படேன்” என்று பாவமாக சொல்ல, அதில் சிரித்தவள், தொண்டையை பிடித்து கொண்டு, “என்ன இந்த டிராமா” என்று கேட்க,

விது “உங்க அப்பாவுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுக்க தான்” என்றதும், அர்ஜுன் “ஆமா நீ எப்படி எங்களை கண்டுபிடிச்ச?” என்று யோசனையுடன் கேட்டான்.

 அவள், “டேய் லூசுகளா. மூஞ்சியை மறைச்சிங்களே… கைல இருந்த மோதிரத்தை மறைச்சீங்களா?” என்று தலையில் அடிக்க, இருவரும் அசடு வழிந்தனர். ஏன் என்றால், அர்ஜுன், அஜய், விது மூவரும் ஒரே மாதிரி மோதிரம் போட்டிருப்பர்.

விது தான், “இவ்வ்ளோ பண்ணி மண்டை மேல இருக்குற கொண்டையை மறந்துட்டோமே” என்று புலம்ப சுஜி நக்கலாக சிரித்தாள்.

பின், அர்ஜுன் அவளுக்கு நடந்ததை கூற, அவளும் அதிர்ச்சியில் தான் இருந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு அஜய் ஏன் அவளை தவிர்த்தான் என்று காரணம் புரிந்தது. பின், உத்ராவிடம் இருந்து, அவளை அழைத்து வரும் படி, தகவல் வர, மூவரும் அலுவலகம் நோக்கி சென்றனர்.

அவரசமாக இருவரும் வேறு சட்டையை அணிந்து கொண்டு, அங்கங்கே அதை கிழித்து கொண்டு, இதில், ரத்தம் வழிவது போல் முகத்தில் ஜாமை வேறு தடவிக்கொண்டு, அப்படியே டயர்ட் ஆக உள்ளே வருவது போல் சுஜியை அழைத்து வந்தனர். உத்ராவிற்கும் மீராவிற்கும் அவர்களை பார்த்ததும் வந்த சிரிப்பை அடக்குவது பெரும் பாடாக இருந்தது.

ராகவனும் தன் பெண்ணை காப்பாற்ற அடியெல்லாம் வாங்கி வந்திருக்கின்றனர் என்று பாவப்பட்டு விட்டு, சுஜியிடம் சென்று “உனக்கு ஒன்னும் இல்லலாமா… உன்னை கடத்துனவங்களை பார்த்தியா” என்று கேட்க, அவள் பதிலேதும் சொல்லாமல் அஜயைப் பார்த்தாள்.

அவன் அவள் முகத்தை பார்க்காமல் வேறு புறம் திரும்பி கொள்ள, அவனை நன்கு புரிந்தவள், “போலாம் பா” என்று மெல்லிய குரலில் கூற,

துருவ் “நீங்க சொன்ன சொல் மாற மாட்டிங்கன்னு நினைக்கிறேன்…” என்று சொல்ல, அவர் தலையாட்டி, பெரியவர்களை வந்து பேச சொன்னார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த அஜய், சுஜியின் கையை பிடித்து, ராகவனிடம் ஒப்படைத்து, “நீங்க ஒத்துக்கலைன்னாலும், இப்போ நான் இவளை என்கூட வரச்சொல்லி கூப்பிட்டா அவள் வருவா…” என்று சுஜியைப் பார்க்க, அவள் கலங்கிய கண்ணுடன் அவனை பார்த்திருந்தாள்.

“ஆனால் நீங்க பண்ணுன அதே தப்பை நான் பண்ண மாட்டேன். உங்க பொண்ணை நான் என் உயிரா நினைச்சுருக்கேன்… அவளுக்காக என் உயிரை கூட குடுப்பேன்” என்றவன், அழுத்தமாக

“ஆனால் யாருக்காகவும் நான் என் உதியை விட்டு கொடுக்கமாட்டேன். இப்போ உங்க பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா… உதியை பத்தி நீங்க சொன்னதை ஒத்துக்கிட்டு, உங்களை நிர்பந்தப்படுத்தி கல்யாணம் பண்ணுன மாதிரி ஆகிடும். இது கடைசி வரைக்கும் எங்களை பார்க்கும்போதெல்லாம் உங்களை உறுத்திக்கிட்டே தான் இருக்கும்.

இதுனால எங்களுக்கும் கருத்து வேறுபாடு வரும். ஒன்னு நீங்க எங்களை புரிஞ்சுகிட்டு, இந்த கல்யாணத்துக்கு சம்மதிங்க… இல்ல. உங்க பொண்ணுக்கு வேற பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுடுங்க.”என்று சொல்லி விட,

 சுஜி, “அப்பா போலாம்பா” என்று கலங்கிய குரலில் கூறி விட்டு,

“இந்த மாதிரி பேமிலியே பிரெண்ட்ஸ் – ஆ கிடைக்கிறது ரொம்ப அபூர்வம் பா. அங்க நானும் ஒருத்தியா அவங்களோட ஒற்றுமையா இருக்கணும்ன்னு தான் நான் ஆசைப்பட்டேன்.

ஆனால் என்னாலேயே என் பிரெண்டுக்கு ஒரு அவமானம்ன்னா. அதை என்னால ஒத்துக்க முடியாது.. அவங்களுக்கு ஒரு பிரிவினையா நான் வர்றதை என்னால ஏத்துக்க முடியாதுப்பா. உங்க இஷ்டப்படி நான் வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்று அவரை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டாள்..

அங்கிருந்த அனைவருமே அவள் பேசியதில் உருகி போயிருந்தனர். அஜய்க்கு அவள் பேசியதும், சென்றதும் இதயத்தை வெகுவாய் பிழிந்தது.

உத்ராவிற்கு, தனக்காக தன் காதலை தூக்கி போட்டு, சென்ற தன் தோழியை நினைத்து கண்ணீர் முட்டியது. அர்ஜுனும் விதுனும் கடத்தல் வேலை எல்லாம் பார்த்தும் இப்படி பிளான் A ஃபெயிலியர் ஆகிடுச்சே என்று தீவிர யோசனையில் இருந்தனர்.

அனைவரும் வீட்டிற்கு கிளம்ப, உத்ரா “எனக்கு ஒரு வேலை இருக்கு நீங்களாம் போங்க” என்றதும் விதுன் தவிர மற்றவர்கள் கிளம்பி விட, துருவ் அவளை ஆழமாய் பார்த்தான்.

உத்ரா அவனை பார்க்க முடியாமல் திணற, “சீக்கிரம் வந்து சேரு” என்று மட்டும் சொல்லிவிட்டு சென்று விட்டான். உத்ரா சென்றது சுஜியின் வீட்டிற்கு தான்.

சுஜி அறையில் கண்ணீரில் கரைந்து கொண்டிருக்க, நேராக ராகவனிடமும், காயத்ரியிடமும் சென்றாள்.

காயத்ரிக்கு தற்போது தான் இந்த விவரங்கள் எல்லாம் தெரிய வந்தது. அவருக்கு இவர்கள் அனைவரையுமே மிகவும் பிடிக்கும். இப்போது, தன் கணவர் இந்த குருவிக்கூட்டை கலைக்க பார்த்து விட்டாரே என்று வருத்தத்தில் தான் இருந்தார்.

உத்ராவை குழப்பமாக பார்க்க, அவள் ராகவனிடம், “சாரி சார்… இந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நான் தான. நான் அஜய் லைஃப விட்டு போய்டுறேன். சொன்னாலும்  சொல்லலைனாலும்,நான் கல்யாணம் ஆகி எல்லாரையும் விட்டுட்டு ஆஸ்திரேலியா தான் போகப்போறேன். எப்பவாவது தான் இங்க வருவேன். அதுவும் உங்களுக்கு இடைஞ்சலா இருந்தா நான் கண்டிப்பா திரும்பிவரமாட்டேன்.

எனக்கு அஜய், சுஜியோட வாழ்க்கைதான் முக்கியம். அப்பறம் என் பிசினெஸ் எதுவும் அவன் பண்ணல. அவனே தனியா நிறைய பிசினெஸ் பார்த்துகிட்டு இருக்கான்.

எல்லாமே அவனுக்குன்னு தனியா தான் இருக்கு. உங்க பொண்ணை ராணி மாதிரி பார்த்துக்குற அளவுக்கு அவனுக்கு திறமையும், பணமும், உழைப்பும் இருக்கு.

ப்ளீஸ் சார்… இவங்க கல்யாணத்துக்கு ஓத்துக்கோங்க.
கல்யாணம் முடிஞ்சதும் நான் சொன்ன மாதிரி இங்க இருந்து போய்டுவேன். இது இது என் அண்ணன் விதுன் மேல சத்தியம்” என்று உருகிய குரலில்  சொல்ல,

வெளியில் அவர்கள் அறியாமல் நின்றிருந்த விது “அட பங்கர நாயே… என் மேலேயே எத்தனை பொய் சத்தியம் தான் பண்ணுவ.” என்று அவளை திட்டிக்கொண்டிருக்க, அவர்களிடம் பேசி விட்டு வெளியே வந்த உத்ரா,

“என்ன பங்கு, டயலாக்லாம் கரெக்ட் ஆ பேசுனேனா…” என்று கேட்க,

அவன் அவளை முறைத்து, “உன்னை அர்ஜுன் மேல தான் சத்தியம் பண்ண சொன்னேன். எதுக்கு பங்கு என் மேல பண்ணுன” என்றதும்,

அவள் தலையில் கை வைத்து, “அய்யோயோ மாத்தி ப்ராமிஸ் பண்ணிட்டேனா. நான் வேணும்னா போய் டயலாக் கரெக்ஷ்ன் பண்ணிட்டு வரவா…” என்று திரும்ப,

“போதும் தாயே… போதும்” என்று விட்டு காயத்ரிக்கு அவர் பேச வேண்டிய வசனத்தை எல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி அவருக்கு ஒரு தம்ஸ் அப்பை காட்டினான்.

அவரும், நான் பாத்துக்கிறேன் என்று அவர் பங்கிற்கு ராகவனை பேசியே கரைத்தார்.

உத்ரா தான், விதுனிடம் “டேய் இதெல்லாம் நீ உன் லவ்க்கு பண்ணிருந்தா இந்நேரம் நீயும் கமிட் ஆகிருப்ப…” என்று விட்டு,

“சுஜி அப்பா மட்டும் ஓகே சொல்லட்டும் . அடுத்து உனக்கு தான் பொண்ணு பார்க்க போகணும்… யு நோ வாட் பெரியப்பா உனக்கு சூப்பர் பொண்ணு ஒன்னு பார்த்து வச்சிருக்காரு” என்று சொல்ல, அவன் தான் அந்த இடத்திலேயே வேரோடி நின்று விட்டான்.

மறுநாளே, ராகவன் தன் தவறை உணர்ந்து உத்ராவிடம் மன்னிப்பு கேட்டு, “நீ எங்கும் போகக்கூடாது… நான் தான் உன்னை பத்தி சரியா புருஞ்சுக்காம இப்படி முட்டாள் தானம் பண்ணிட்டேன்” என்றார்.

அவர்க்கு தான் ஒரே ஆச்சர்யம், அவளுக்காக, அவன் அவனின் காதலை தியாகம் செய்வதும், அஜய், சுஜிக்காக நாட்டை விட்டே செல்ல முயன்ற உத்ராவின் அன்பிலும் நெகிழ்ந்து விட்டார். இதெல்லாம் விதுனும் உத்ராவும் வெகு நேரமாய் யோசித்து எழுதிய வசனங்கள் என்று அவர்க்கு தெரியவில்லை பாவம்.

பின், அஜயிடமும் மன்னிப்பு கேட்டு, தன் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு கூற, அவன் யோசிப்பதை பார்த்து, உத்ரா “இன்னும் என்னடா யோசிக்கிற. முதல்ல நீ போய் சுஜியை பாரு” என்று அனுப்பினாள்.

சுஜியின் அறையில் விட்டத்தை வெறித்திருந்த சுஜி அஜயை பார்க்கவும், முதலில் அதிர்ந்து, பின், ஓடி வந்து கட்டிக்கொண்டாள்.

அஜய், அவளை இறுக்கி அணைத்து, “சாரி சுஜி… உன் விஷயத்துல நான் பண்ணுனது தப்பு தான். உன்னை விட்டு குடுத்துருக்க கூடாதுல… ஆனால், எனக்கு வேற வழி தெரியல…” என்று சொல்ல,

அவன் வாயை மூடியவள், “நீ பண்ணுனது கரெக்ட் தான் அஜய். எங்க அப்பா பேசுனது தப்பு தான. அப்படி பார்த்தா நானும் தான் உன்னை விட்டுகுடுத்துட்டேன்… சாரி டா.” என்றாள்.

அவளின் புரிதலான இந்த காதலில் அவன் வியந்து விட்டான்.

“யு ஆர் சோ ஸ்வீட் பஜ்ஜி… லவ் யு டி. லவ் யு சோ மச்…” என்று முகம் எங்கும் முத்த மழை பொழிய, அவள் ஷ் என்று வலியில் முகம் சுருக்கினாள்.

அதன் பிறகே, அவன் “ஹே சாரி டா கொஞ்சம் உணர்ச்சி வரப்பட்டுட்டேன். ரொம்ப வலிக்குதாடா” என்று கேட்க, அவள் “ம்ம் பேசும்போது தான் லைட்டா வலிக்குது” என்றதும், அவள் கழுத்தில் மென்மையாய் முத்தம் ஒன்றை கொடுத்து விட்டு, “நீ ரெஸ்ட் எடு…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, வானர கூட்டங்கள் உள்ளே வந்தது.

உத்ரா, சுஜியை முறைத்து, “இன்னொரு தடவை ரெண்டு பேரும் இப்படி லூசுத்தனம் பண்ணுனீங்க… கொன்னுடுவேன்” என்று  மிரட்ட,சுஜி அவளை கட்டிப் பிடித்து கொண்டாள்.

பின், அவர்கள் அரட்டை அடிக்கையிலேயே, அர்ஜுன் “இப்போ இந்த விஷயத்தை வீட்டுல எப்படி சொல்றது. துருவை வச்சு சொல்ல சொல்லுவோமா? இப்போலாம் அவன் சொன்னா தான் நம்ம வீட்ல காது குடுத்து கேக்குறாங்க” என்று சொல்ல,

உத்ரா, “அவன் என்ன உங்க லவ்வுக்கு தூதாடா… அர்ஜுன் மீரா விஷயத்தையும் அவன் தான் பேசி சம்மதம்  வாங்குனான். என் ஆளை பார்த்தா எப்பிடிடா தெரியுது உங்களுக்கு. ஒழுங்கா நீங்களே வீட்ல பேசுங்க” என்று மிரட்ட, அஜய்யும் அர்ஜுனும் “ஸ்டார்டிங் ட்ரபிள் தான்… யாரவது இதான் விஷயம்னு சொல்லிட்டா… நாங்க கை கால்ல விழுந்தாவது சம்மதம் வாங்கிடுவோம்” என்றதும், உத்ரா அஜய் காதில் ஏதோ முணுமுணுக்க, அவன் “ஹா ஹா ஹா… பண்ணிடுவோம்” என்று ஹை ஃபை கொடுத்தான்.

விது என்ன பிளான் பண்ணுதுங்க என்று யோசிக்க, காயத்ரி வந்தவர், சுஜியை அதட்டி, “இனிமே அர்ஜுனையும், விதுவையும் மரியாதையாக கூப்பிட வேண்டும் என்ன இருந்தாலும், புகுந்த வீட்டு உறவுகள்” என்று சொல்ல, அவள் தொண்டையைப் பிடித்து,

“இந்த பஞ்ச பரதேசிங்களுக்கு மரியாதை குடுத்தா தான் என் கல்யாணம் நடக்கணும்னா… அப்டி ஒரு கல்யாணம் எனக்கு தேவையே இல்ல” என்று பேச முடியாமல் பேச, அர்ஜுனும் விதுனும், ” அவ்ளோ கஷ்டப்பட்டாவது  கவுண்டர் குடுத்துடனும் உனக்கு… இல்ல…”  என்று தலையில் தட்டினர்.

துருவ் அடுத்த நாள், ஆஸ்திரேலியா செல்வதாக இருக்க உத்ராவுக்கு தான் அவனை அனுப்ப மனமே இல்லை. ஆனால் அவன் வேலையை முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்கையில் அவனை தடுக்கவும் முடியவில்லை. எப்படி அவனை காணாமல் இருப்போம் என்று தவித்தாள்.

இதில், அவளை திருமணத்திற்கு பிறகு, ஆஸ்திரேலியா அழைத்து செல்வதை பற்றியும் இன்னும் அவன் எதுவுமே பேசவில்லை. அவளும் முதலில் இவர்கள் பிரச்சனை சரியாகட்டும் என்று நினைத்து அமைதி காத்தாள்.

அவன் பின்னே சென்று அவனை அணைத்தவள், “புருஷா” என்று அழைக்க, அவன் “இப்போதான் உனக்கு நான் கண்ணனுக்கு தெரியுறேனாக்கும். விது கூட சேர்ந்துக்கிட்டு உன்னை யாரு அந்த ஆளு கிட்ட போய் பேச சொன்னது.” என்று கடுகடுக்க,

அவள் அவனை திரும்ப வைத்து, “இதை விட்டா வேற வழி தெரியல துருவ். ரெண்டு லூசும் என்னால பிரிஞ்சுருக்கறதை எப்படி என்னால பார்த்துகிட்டு இருக்க முடியும். இப்போ பாரு… பிரச்சனை சுமூகமா முடிஞ்சுருச்சு” என்றதும்,

அவன் “இதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்… இனிமே யாருக்காகவும் எதுக்காகவும் நீ யார்கிட்டயும் போய் கெஞ்ச கூடாது..” என்று தீர்மானமாய் சொல்ல,

“ஓ அப்போ நீங்க மட்டும் அப்டி பண்ணலாமா” என்று தலையை சாய்த்து கேட்க, அவன் இவளுக்கு எப்படி தெரியும் என்று முழித்தான்.

  “திருடா… நீ ரகசியமா என்ன திருட்டுத்தனம் பண்ணுறன்னு எனக்கு தெரியாதா” என்று கண்ணடிக்க அதில் சிரித்தவன், அவள் கன்னத்தை கிள்ளி, “என் ஹனிக்கு எவ்ளோ அறிவு…” என்று கொஞ்ச, அவள் “போதும் போதும்…” என்று விட்டு, வெளியில் சென்றாள்.

அங்கு வீட்டு பெரியவர்கள் எல்லாம் அமர்ந்திருக்க, அஜயும், அர்ஜுனும் நீ சொல்லு  நீ சொல்லு என்று சொல்லிக்கொண்டிருக்க, கர்ணன் “என்னடா சொல்லணும்…”என்று கேட்டதும்,

அர்ஜுன் “அது வந்து ப்பா. ஒரு முக்கியமான விஷயம் அதான்…” என்று சொல்ல,

கருணா “என்ன விஷயம்” என்று வினவ ,

அர்ஜுன் “அது… ஹான்… விது யாரையோ லவ் பண்ணுறான்” என்று கோர்த்து விட, அதில் திருதிரு வென்று முழித்த விது அவனின் அப்பா பார்த்த பார்வையில்,

“ஐயோ அப்பா நான் யாரையும் லவ் பண்ணல, அஜய் தான் சுஜியை லவ் பண்ணுறான்… “என்று உண்மையை உளறினான்.

அர்ஜுன், “ஹப்பா ஆமா மாமா அதான் மேட்டர்…” என்று சொல்ல,

அஜய், “அப்பா அது சுஜி நான் லவ் பண்ணி… அவள் என்னை லவ்” என்று உளற,

விது, ” ஏண்டா உன் நாக்குல எர்த் குவேக்(earthquack ) வந்த மாதிரி பேசுற” என்று யோசனையாய் கேட்க, அவனை முறைத்தவன்,

“அம்மா… லவ் கல்யாணம்” என்று மீண்டும் உளற,

லட்சுமி, “இதை இப்போதான் உங்களுக்கு சொல்லணும்னு தோணுச்சா டா. நாங்க நேத்தே சுஜி அப்பாட்ட பேசிட்டோம். துருவ் தான் எங்களுக்கு விஷயத்தை சொன்னான்.” என்று சொல்ல, அவர்கள் மூவரும், உத்ராவையும் துருவையும் வெறியுடன் பார்த்தனர்.

இருவரும் ஹை ஃபை கொடுத்து கொண்டு, நமுட்டு சிரிப்பு சிரிக்க, அஜய் “அடிப்பாவி… முன்னாடியே சொல்லிருந்தா நான் இப்படி அசிங்கப்படாமையாவது இருந்துருப்பேன்ல” என்று முறைத்து கொண்டிருக்கையிலேயே,

கருணா, “இன்னைக்கு சாயந்தரம் விதுன்க்கு பொண்ணு பார்க்க போறோம். இது சும்மா ஃபார்மாலிட்டி தான். மத்தபடி பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கு… அப்படியே நாலு பேருக்கும் கல்யாண தேதியை குறிச்சுடலாம்” என்று சொல்ல, விது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

உறைதல் தொடரும்…
-மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
42
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. நண்பர்களின் குறும்பு அட்டகாசம். நட்பின் பிணைப்பை வெகு ஆழமாகவும் அதே நேரம் மனதை வருடும் படியும் அமைத்துள்ளார் எழுத்தாளர். வேற லெவல். பல இடங்களில் வாய் விட்டு சிரிக்க முடிந்தது.