குமரி – 5
வெளியில் வந்து பார்த்த மூவரும் அதிர்ந்தனர். ஏனென்றால், ஐந்து பேர் கொண்ட ஒரு ரெளடி கும்பல் நின்றுக்கொண்டிருந்தது. அதில் ஒருவன் கருணாகரனின் கழுத்தை பிடித்து இறுக்கி ஒற்றை கையால் தூக்கி பிடித்துக் கொண்டிருந்தான்.
அதை விட அவர்கள் செழியனை விசாரிப்பது தான் திகிலானது மூவருக்கும். மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டே அவர்களின் முன் கையெடுத்து கும்பிட்டான்.அதன் பின் அவரை விட்டான் அவ்வொருவன்.
அவரை கீழே விட்டப்பின், பத்து பதினைந்து நிமிடத்திற்கு இருமிக் கொண்டே இருந்தவரின் சட்டைக் காலரைப் பிடித்து மறுபடியும் நிறுத்தி , புருவத்தை உயர்த்தி கேட்க ,இருமிக் கொண்டே இருந்ததால் பேச முடியவில்லை. அதனால், கருணாகரன் கையை நாச்சியார் பக்கம் சுட்டிக் காட்டினார்.
ஐவரும் ஒரு சேர நாச்சியார் பக்கம் முறைத்துக் கொண்டே திரும்பி பார்த்தவர்கள், சட்டென்று அவர்கள் பார்வை மாறியது. கோபமும் அல்லாது, பாவமும் அல்லாது, காதலும் அல்லாது, காமம் மட்டுமே உணர்வு வகை சேர்ந்தது இப்பொழுதில் என்பது போல் அவர்கள் ஐவரும் ஒரு சேர முல்லை மற்றும் சென்மொழியை கண்டனர்.
நாச்சியாரிடம் நெருங்கி கொண்டு வரும் பொழுதே , கூட்டத்தின் தலைவன் ஒருத்தன் இன்னொருவனுக்கு கால் செய்தான்.
“அண்ணாத்த, அந்த செழியன் பயல விசாரிச்சேன். அவனுக்கு ஒரு அம்மையும், இரண்டு தங்கச்சி அப்புறம் ஏதோ தம்பி இருந்தானாம். அவன் இப்ப இல்லையாம்!”
அந்த பக்கம் என்ன சொன்னார்களோ “ஆமாம் அண்ணே, இவன் அப்பன் சேந்துட்டானாம் .அந்த தம்பி பயலும் கிடையாதாம். உண்மை தான் “
மறுபடியும் எதிர்புறம் பேச, “இல்லைனா, உயிரோட இல்லைங்கிற மாதிரி தான் சொன்னாப்புல “
போனில் உள்ளவன் பேச, “சரி அண்ணே, விசாரிக்கிறேன்……” சிறிது இடைவெளி விட்டு “அவன் குடும்பத்தையும் சேர்த்து இழுத்துட்டு வரேன் ” இழுத்து கூறினான்.
அந்த பக்கம் அப்படியொரு சிரிப்பு, நாச்சியாருக்கு பகிரென்று இருந்தது. வேகவேகமாக செழியனின் வீட்டு கதவை தட்டினார்.
காதை குடைந்து கொண்டே அத்தலைவன் “வெளிய பூட்டியிருக்க கதவை எவ்வளவு நேரம் தட்டுவ? ” என்று அவன் கூறிய பின்னரே கவனித்தார்.
இவ்வளவு அதிகாலையில் எங்கு சென்றிருப்பான் என்ற யோசனையில் இருக்க, அதை கலைக்கும் விதமாக ஒருவன் அருகில் வந்து கதவைத் திறந்தான்.
உள்ளே பார்த்தவருக்கு ஒன்றும் கூற முடியவில்லை. தலை சுற்றி, கண் இருட்டியது போல் இருந்தது. ஏனென்றால் அவர்கள் இருந்ததற்கான அடையாளமே இல்லை. அவர் ஒரு வித பயத்தோடு திரும்ப ,அவரைப் போலவே தலைவனும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அதிர்ந்து ஒரு அடி பின் நகர அவரை பிடித்து நிமிர்த்தினான். “என்னம்மா இப்ப சொல்லு .எங்க உன் பையன்? ரூபாய் வாங்கிட்டு ஓடிட்டான். யாரு இப்ப அதுக்கு பொறுப்பாகிறது? “என்று நிதானமாக கேட்டான்.
சென்மொழியும், முல்லைக்கும் ஒன்றும் புரியாமல் நின்றனர். “என்ன ரூபாய் ? மஞ்சுளாக்காக எதுவும் கடன் வாங்கிருப்பாரோ? ” என்று முல்லை முணுங்க, “இருக்கலாம், இருக்கலாம். அந்த பிசாசு தான் பறிக்குமே. அய்யா தான் கேசியர் ஆச்சே. அவர்ட்ட புரளாத காசா? “என்று முல்லையிடம் எதிர் கேள்வி கேட்டாள் சென்மொழி.
ஆனால், நாச்சியாரோ ” அவன் உதவி தான செய்ய வந்தான்.அவனையும் , உங்களையும் ஏமாத்தினது அந்த மேலிடத்து ஆபிஸர் தான் .என் பையன் என்ன செஞ்சிருக்க போறான்? “என்று வெள்ளந்தியாக கூறினார்.
“என்ன ஆபிஸர் ? என்ன உளறுற கிழவி ? “என்று தலையைத் தடவிக் கொண்டேக் கேட்டான்.
“கொஞ்சம் உள்ளே நின்னு பேசலாமா? “என்று கண்களால் கூட்டத்தை காண்பித்துக் கூறினாள் முல்லை.
“ஓஓஒ…. நல்லா பேசலாம் ” என்று நாச்சியாரின் வீட்டின் பக்கம் நகர, முல்லை விரைந்து செழியனின் வீட்டுக்குள் நுழைந்தாள்.
அவளை மெச்சுதலாக பார்த்து விட்டு பின்னே சென்றான். கண்களாலேயே தன் கூட்டணிகளுக்கு சமிக்ஞை செய்தான்.
உடனே, அவர்களின் இருவர் காலனி வெளியேவும் , செழியனின் வாசல் முன்பு மீதி இருவரும் நின்று கொண்டனர்.
இவர்களின் சம்பாஷனைகளை பார்த்து விட்டே சென்மொழி வீட்டின் உள்ளே நுழைந்தாள். நால்வரும் நின்று கொண்டிருக்க ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்த கருணாகரனை அழைத்து நாற்காலி எடுத்து வரக் கூறினான் அத்தலைவன்.
தன் வீட்டில் குடியிருப்பவரின் முன் வேலை வாங்குவதை அவமானமாகக் கருதினார். அதுவும் கோபமும், வன்மமாக மாறியது அவர்கள் மீது. எடுத்து வந்தவரை மேலும் நான்கைந்து வேலைகளை வாங்கி விட்டு அனுப்பி விட்டான்.
” இப்போ சொல்லுங்க “என்று முல்லை தெளிவாக பேசினாள். நாச்சியார் தான் பதட்டமாக இருந்தார். சென்மொழி கூட தீர்க்க பார்வையோடு தான் இருந்தாள்.
“நீயே பார்க்கிறல பாப்பா? அப்பறம் என்ன கேக்குற? ” என்று அவனும் எதிர் கேள்வி கேட்டான்.
முல்லை”அம்மா சொன்னது வச்சு பார்த்தா உங்களுக்கு உதவுறதுக்கு உங்கக்கிட்ட இருந்து ரூபாய் வாங்கிருக்காரு சரியா? “
சிரித்துக்கொண்டே “நான் எதுக்கு அவன் கிட்ட உதவி கேக்கனும் ? அவன் தான் அம்மாக்கு முடியல அதனால ஒரு மூணு லட்சம் தாங்கனு கேட்டான் . அதோட இந்த கடனை குடும்பமா என் அம்மா, தங்கச்சிலாம் சேத்து அடைச்சுறுவோம்னு சொன்னான் “
நாச்சியாருக்கு கால்கள் பின்னிக் கொண்டு, உடல் வேர்த்து விதிர்விதிர்த்து போய் விட்டார். இப்பொழுது சென்மொழி மற்றும் முல்லைக்குமே பயம் தொற்றி கொண்டது.
இருந்தும் சென்மொழி தைரியத்தை வரவழைத்து கொண்டு ” இந்த மாதிரி கேட்டா யாரு எவருனு பாக்காமலே கொடுத்துருவீங்களா?” என்று கேட்க, “ஆமா ,நாங்க கேனைப்பயப்பாரு! அவன்ட்ட சொன்னேன் ரூபாயைக் கொடுக்கல உன் தங்கச்சியை தூக்கிருவேனு. அதலாம் கரெக்ட்டா கொடுத்துருவேனு சொல்லிட்டு ஓடிட்டான் ” என்று எகிறிக் கொண்டு கூறினான்.
” அவர் ஒடிட்டாருனு நீங்களா ஏன் சொல்லுறீங்க ?” என்றாள் முல்லை ,முட்டாள்த்தனமான கேள்வித்தான் என்று தெரிந்தும் கேட்டாள்.” இதைப்பாத்த எப்படி தெரியுது? ” என்று வீட்டைச் சுற்றி கையைக் காண்பித்தான்.
“சரி எவ்ளோ பணம் சொன்னீங்க? ” என்று முல்லை கேட்கும் பொழுதே , அடியாள் ஒருவன் உள்ளே நுழைந்து தலைவனின் காதில் ஏதோ ஓத, “சரி உள்ளே வரச் சொல்லு !” என்று கூறினான் அத்தலைவன்.
சிறிது நேரத்தில் இன்னொருவன் உள்ளே நுழைந்தான். “என்னடா மாப்பிள்ளை இந்த பக்கம் ? ” என்று வந்தவனைப் பார்த்து கேட்டான் தலைவன்.
வீட்டை சுற்றி பார்த்தவன், “ஏன்டா, இந்த வீட்டுல உள்ளவன் எங்க? ” என்று பதறிக் கொண்டு கேட்க, “ஏன்? ” என்று தலைவன் கேட்க, “அய்யயோ, அவன்ட்ட ஒரு வேலைக்கு அஞ்சு லட்சம் தந்துருக்கேன். அதை வாங்கலாம்னு வந்தேன்” என்று இன்னும் சில விஷயங்கள் கூறி புலம்பினான்.
“எஸ்கேப் ஆயிட்டான் மாப்பிள்ளை! பிடிச்சவுடனே உன் ரூபாயையும் சேத்து வாங்கி தரேன். ” என்று பல்லைக் கடித்துக் கொண்டே கூறினான்.
“ஏன்ப்பா, இந்த ரூபாய் தான்ப்பா ஏதோ மேலிடத்துல இருக்குனு சொன்னான் ” என்று மறுபடியும் நாச்சியார் சொன்னதையே கூற,
“என்னது மேலிடமா? மேலிடத்துல ரொம்ப சுலபமா ரூபாயே இல்லாம முடிச்சுட்டேன் . இவன் தான் அப்படியாகும் இப்படியாகும்னு கதை அளந்து ரூபாயை வாங்கிட்டான். வேலையை முடிச்சுட்டேன் ரூபாயைக் கொடுடானு கேட்டா இழுத்து அடிக்கிறான். தங்கச்சிக்கு கல்யாணம்னு சொல்றான், தம்பிக்கு அடிப்பட்டுறுச்சுனு சொல்றான். கதை கதையா சொல்லுறான் ” என்று புலம்பினார்.
முல்லை தான் சிறிது நேர யோசனைக்கு பின் “சார் ரூபாய் கொடுத்துட்டா எங்களை விட்டுறுவீங்களா? ” என்று கேட்க, “ரூபாயை வை.நீ யாரோ ! நான் யாரோ! என்று கூறி சாய்வாக நாற்காலியில் சாய்ந்து அட்டணக்கால் போட்டு உட்கார்ந்தான்.
முல்லை எழ முயலும் நேரம் நாச்சியார் முல்லையின் கையைப் பிடித்தார். என்ன என்று பார்க்க “எங்கடி போற? “என்று நாச்சியார் மெதுவாகக் கேட்க, “அதான் உன் அருமை புத்திரன் எட்டு லட்சம் வாங்கிட்டு போய்ட்டான். இப்போதைக்கு நம்மகிட்ட இருக்கிறது நகை தான். அதை வித்துத் தான் கொடுக்கனும் ” என்று தெரிந்தும் கேட்கிறாரே என்ற எரிச்சலில் பதில் கூறினாள்.
“அய்யா, நாங்க உங்க பணத்தை
தந்துருறோம். நகை அடமானமோ, இல்லை வித்தோ கொடுக்கிறோம். நாளைக்கு வாங்கையா!” என்று கூறி கையெடுத்து கும்பிட்டார் நாச்சியார்.
பத்து நிமிட யோசனைக்குப்பின் “எனக்கு தெரிஞ்ச சேட்டு கடை ஒன்னு இருக்கு. அங்க வச்சு கொடு காசை.” என்று விடாக்கண்டனாக இருந்தான்.
முல்லை சரி என்று கூற வந்தவளை கையைப் பிடித்து அழுத்திய சென்மொழி , ” அவர் உங்க ஆளுனு கம்மியா சொன்னா இல்லை நீங்க கமிஷன் பார்த்தா என்ன ஆகுறது?” என்று சரியாக கணித்து கூறியவளை மறுபடியும் மெச்சுதலாக பார்த்தான்.
“சரி, நீயே சொல்லு என்ன பண்ணலாம்னு? ” என்று தெனாவட்டாக கேட்டான்.சென்மொழி”நாங்கள் உங்களுக்கு ரூபாய் தரோம். என்னைக்கு வேணும் உங்களுக்கு ? “
“எனக்கு நாளைக்கே வேணும் . முடியுமா?” என்று நாக்கை வாயினுள் சுழற்றி புருவத்தை தூக்கி கேட்டான்.” அவ்ளோ சீக்கரமா😳! இரண்டு நாள் டைம் தாங்கய்யா” மன்றாடினார் நாச்சியார்.
தலைவன்”டைம் தரேன்!”. நாச்சியார் “சந்தோஷம். கண்டிப்பா தந்துருவேன் “.
தலைவன் ” இன்னும் முடிக்கல. இரும்மா!”. மூவரும் யோசனையுடன் பார்க்க, “இரண்டு நாளைக்கு அப்புறம் தரும் போது ஒரு மாசம் + இரண்டு நாளைக்கு உள்ள வட்டி தரனும்”.
நாச்சியார் “அய்யோ, என்னப்பா நீ!” . நாச்சியார் அடுத்து பேச வருவதற்குள் “இரு! இரு! இன்னும் முடிக்கலை. இரண்டு நாள் கெடு கேட்டுருக்க . அதுனால, உன் மக ஒருத்தவ என் கஸ்டடில வந்துரும். ஏதோ பாவம்னு இரண்டு நாளைக்கு மட்டும் சொல்றேன். புரியுதா ? “அசால்ட்டாக கூறி விட்டு சோடாவை கடகடவென இறக்கினான்.
நாச்சியார் உண்மையிலேயே மயங்கி சரிந்து விட்டார். முல்லையும், சென்மொழியும் பதறிக் கொண்டு ஓட , தலைவனின் கண் அசைவில் வாசலில் இருந்த இருவரும் இவர்களை பிடித்து வைத்துக் கொண்டனர். அத்தலைவனே நாச்சியாரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்.
கண் விழித்து ஒரு நிமிடம் சென்ற பின்னே நிதர்சனம் புரிய, திரும்பி மகள்களை பார்த்து விட்டு, அத்தலைவனிடம் திரும்பி “நாளைக்கு சாயங்காலம் தந்திடுறோம் பா !” என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டார்.
அதன்பின், அவன் இன்னொருவனுக்கு போன் செய்து சொல்ல, அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, சில பல நிபந்தனைகளோடு ஒப்புக் கொண்டான்.
வாசலில் ஒருவனைக் காவலுக்கு வைத்தத்தோடு, கருணாகரனையும் காவலுக்கு வைத்தான். நாளை சாயங்காலம் ஐந்து மணிக்கு மேல் தரவில்லை என்றால் இரு பெண்களோடு அன்னையாகிய உன்னையும் சேர்த்து மும்பை பக்கம் பார்சல் பண்ணி விடுவேன் என்று எச்சரித்து விட்டே சென்றான்.
மழை பெய்து ஒய்ந்தது போல் இருந்தது. மூவரும் தங்கள் வீட்டிற்கு வந்து அமர, நாச்சியார் டீ போட்டு மூவருக்கும் எடுத்து வந்தார்.
பசி வேறு வயிற்றைக் கிள்ளியது . வயிற்றை கவனித்து விட்டு மற்றதை அப்புறம் பேசலாம் என நினைத்து சென்மொழி குடிக்கப் போக , முகம் அலும்பி வந்த முல்லை அதை தட்டி விட்டாள். அதிர்ச்சியாகி சென்மொழி முல்லையைப் பார்க்க, முல்லை நாச்சியாரை பார்க்க, நாச்சியார் தேம்பி தேம்பி அழுதார்.
“எதுக்குமா விஷம்? ” என்று முல்லை கேட்டாள்.
கீர்த்தி ☘️