Loading

அத்தியாயம் 29

காலங்கள் கடந்து தன் காதல் தேவதையைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்த பின் அவனுக்குப் பிறந்த முதல் விடியல் அது. அவள் அனைத்தையும் மறந்துவிட்டாள் என நினைத்தாலும் அவள் நலமாகத் தன்னுடன் இருக்கிறாள் என்பதே இந்த காதலனுக்கு நிம்மதியை தந்தது.

தன் வீட்டிற்கு ஆராவை அழைத்து வருவதென்பது அவனின் மிகப் பெரிய கனவு தான். இந்தச் சூழலை அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள் மகேஷை பற்றிக் கேட்டாள் அவன் என்ன சொல்வான், போன்ற சிந்தனைகள் மனதில் ஓடினாலும். தன் அறையின் கதவை திறந்து வைத்துக்கொண்டு. அவள் கண்விழித்து அறையைத் திறந்து வெளியே வருவதற்காகக் காத்திருந்தான் இந்தக் காதலன்.

தன் அறையின் எதிரே இருந்த அறையில் தான் அவளைத் தங்க வைத்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. பார்வை எதிர் அறையின் கதவில் இருந்தாலும். காஃபியை மெல்ல பருகினான். முழுவதுமாகக் காஃபியை பருகி விட்டு எழுந்து நின்றான். இப்போது நடக்கத் துவங்கினான். ஆரத்யா பாசத்துடன் வளர்த்த ஸ்கூபி அவன் காலை சுற்றி சுற்றி வந்தது. தன் கையில் தூக்கிய படி அறையின் கதவை பார்த்தான். கதவு பட்டெனத் திறந்தது.

தேவலோக மங்கை சுடிதாரில் காட்சி தருவது போல் ஆரத்யா அவன் விழிகளில் விழுந்தாள். எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்தான். அவளும் எதுவும் பேசாமல் அங்கும் இங்கும் திரும்பி பார்த்தாள். இப்போது அவனைப் பார்த்தாள். அவள் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“இவன் தானே அன்று மஹியை அடித்தான்” என அவள் யோசித்துக்கொண்டிருந்த போதே அவளை நெருங்கியவன்.

“ஹாய் குட் மார்னிங் ஆரா.!” என அவள் முன் போய் நின்றவனை முறைத்தாள் ஆரத்யா.

“இதோ பாருங்க நான்!!” என அவள் சொல்ல துவங்கும் முன் ,

“ஸ்டாப் ஸ்டாப்!! நீங்க ஆரா இல்லை மீரா, அதான சொல்ல போறீங்க? எனக்குத் தெரியும் நீங்க ஆரா இல்லை மீரான்னு” என அவன் சொன்னவுடன் அரண்டு விழித்தாள் பெண்.

“ஏன் அப்படிப் பார்க்கிறீங்க? என்னோட காதலி ஆராவை மாதிரியே நீங்களும் இருக்கிறதால தான் இவ்வளவு கன்ஃப்யூசன்” என அவனே பொய்யாய் ஒரு விளக்கம் கொடுத்தான். அவள் போக்கிலே செல்வது தான் அவளின் உடல்நிலைக்கு இப்போது நல்லது என்ற மருத்துவரின் அறிவுரைப்படி தான் இப்போது ஆராவிடம் இப்படிப் பேசிக்கொண்டிருக்கிறான் .

அப்போது ஆராவை பார்த்து ஸ்கூபி குரைக்க ஆரம்பித்தது. அவள் திடுக்கிட்டு விழித்தாள்.

“பயப்படாதீங்க! நான் எப்படி உங்களை ஆரான்னு நினைச்சு பேசினோனே அப்படித் தான், ஆரா வளர்த்த ஸ்கூபி  அதனால உங்களைப் பார்த்ததும் ஆரான்னு நினைச்சிட்டான்” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே ஆராவை நோக்கி பாய்ந்த ஸ்கூபி அவள் முகத்தை நாவால் நக்கி கொஞ்ச ஆரம்பித்தது. அவளால் அதைத் தடுக்க முடியவில்லை. ஸ்கூபியை செய்த செயலில் கூச்சம் ஏற்பட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஸ்டாப் ! ஸ்டாப் இட் ஸ்கூபி” என அவள் சொன்ன கட்டளையைக் கேட்டு அவள் தோள் மீது சாய்ந்து கொண்டது ஸ்கூபி.

“மஹி! எங்கே? நான் ஹாஸ்பிட்டல்ல தானே இருந்தேன்? அப்பறம் மஹியோட சிஸ்டர்?” என அவள் குழம்பி போய் நின்றாள்.

“மீரா அண்ணி!! நான் இங்கே தான் இருக்கேன் “ எனச் சிரித்தபடி வந்து நின்றாள் லாவண்யா.

“நீ.! உன் பேரு.!” எனத் தடுமாறிய ஆராவை பார்த்து.

“அண்ணி!! என்னை மறந்துட்டிங்களா? நான் தான் லாவண்யா. இந்தாங்க காஃபி எடுத்துக்கோங்க” எனக் காஃபியை நீட்டினாள் லாவண்யா.

“மஹி எங்கே? லாவண்யா!” என்றாள் திணறியபடி ஆரா.

“அண்ணி அண்ணா மால்தீவ்ஸ் போயிருக்காங்க” என்றாள் லாவண்யா.

“என்கிட்ட எதுவும் சொல்லலை” எனக் கேட்க,

“நீங்க பயப்படாதீங்க அண்ணி, இது நம்ம வீடு தான்” என்றாள் லாவண்யா.

“அப்போ இவர்??” என ஆதித்தை கை காட்டி ஆரா விசாரிக்க.

“நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வந்திருக்காங்க. அவங்களோட லவ்வர் கிடைச்சதும் இங்கே இருந்து போயிடுவாங்க” எனப் பேசிய படி அவள் அறைக்குள் அழைத்துச் சென்றாள் லாவண்யா. ஆதித் கிருஷ்ணாவை திரும்பி பார்த்தபடி கையில் ஸ்கூபியை தூக்கிக்கொண்டு சென்றாள் ஆரத்யா. அப்போது தன் அண்ணனை திரும்பி பார்த்த லாவண்யா கண் சிமிட்டி சிரித்தாள்.

அவளிடம் அவனால் நடிக்க முடியவில்லை. அடியே நீ தான்டி என் காதலி என அவனால் அடித்துச் சொல்ல முடியவில்லை. இந்தக் காதல் அவனை அமைதியாக்கியது. அனைத்தையும் மறந்து குழந்தையாக மாறி நிற்பவளிடம் வன்முறை செய்தால் அது காதல் இல்லை. அவள் போக்கில் அவள் இருக்கட்டும் ஆனால் அவனின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கட்டும். என்றாவது ஒரு நாள் அவளுக்கு நினைவு திரும்பும் அது வரைக்கும் காத்திருக்கத் தயாரானான் இந்தக் காதலன்.

இவனின் காதலுக்கு உறுதுணையாய் நிற்கும் தங்கையைப் பார்த்து அவன் மனம் பூரித்துப் போனது. ஆராவை சுற்றி அனைத்தும் நல்லதாகவே நடந்துக்கொண்டிருந்தது. ஒன்றை தவிர,

சமையல் அறையில் சமையலோடு சேர்ந்து காரசாரமாய் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. யசோதாவிற்கும் கோதண்டத்திற்கும் இடையே.

“என்னடி நடக்குது இந்த வீட்டில, எதோ பைத்தியகார பொண்ணைக் கூட்டிட்டு வந்து வச்சிருக்கான் உன் பிள்ளை?” கோபமாய்க் கத்தினார் கோதண்டம்.

“அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்? இதோ பூரி ரெடி ஆகிருச்சு அடுத்து இட்லி ரெடி பண்ணணும். நான் அதைப் பார்ப்பேனா? இல்லை வீட்டில நடக்கிற நாடகத்தைப் பார்ப்பேனா” எனக் கோபமாக எரிந்து விழுந்தார் யசோதா.

“அந்தப் பொண்ணை வெளிய போகச் சொல்லுடி” என்றார்.

“நான் சொல்ல மாட்டேன்”

“ஏன் உனக்கு வேலை இருக்கா? அப்பறம் சொல்லி அந்தப் பொண்ணை வீட்டை விட்டு வெளிய துரத்தி விடுறீயா?”

“இல்லை முடியாது, நான் சொல்லமாட்டேன் இந்தப் பொண்ணை ஆதித்க்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால அவ தான் என்னோட மருமக” எனச் சொல்லிவிட்டு அடுப்பறையை விட்டு வெளியே வந்தார்.

“கற்பகம்! பூரி பண்ணிட்டேன், மத்த வேலையை நீ முடிச்சிடு” என வரவேற்பறையில் அமர்ந்து பெருமூச்சு விட்டார். அவரைத் தொடர்ந்து வந்த கோதண்டம்.

“என்ன பேசிட்டு இருக்கன்னு புரிஞ்சு தான் பேசுறீயா யசோதா? மஹதியை தானே உன்னோட மருமகள்ன்னு சொல்லிட்டு இருந்த? இப்போ என்ன ஆச்சு”

“எவளோ ஒருத்திக்காக நம்மைப் பொண்ணை விட்டுக் கொடுத்தீங்களே அப்போவே முடிவு பண்ணிட்டேன். அந்த மஹதி நம்ம வீட்டுக்கு வேண்டாம்ன்னு”

“யசோதா!!” எனக் கத்தினார் கோதண்டம்.

“ஏங்க இப்படிப் பண்ணிட்டு இருக்கீங்க, பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுறதா? பெத்த பிள்ளை மேலையும் அக்கறை இல்லை, வளர்த்த பிள்ளை மேலையும் அக்கறை இல்லை, பணம் தான் உங்களுக்கு முக்கியமா போச்சு. லாவண்யாவை தத்தெடுத்தது என்னோட முடிவா? நீங்க தானே ஆசைப்பட்டுத் தத்தெடுத்தீங்க. இப்போ அந்தப் பொண்ணுகிட்ட எல்லா உண்மையும் சொல்லி.” எனப் பேசிக்கொண்டிருந்த போதே கண் கலங்கினார் யசோதா.

“பணம். பணம்ன்னு ஜெகன் பின்னாடி போறீங்களே, அந்தப் பணத்துக்காகத் தான் இந்த ஆரா பொண்ணைக் கொலை பண்ண முயற்சி பண்ணிருக்கா அந்த மஹதி, வீட்டுக்குள்ள வருவதற்கு முன்னாடியே இவ்வளவு பிரச்சனை பண்ணிருக்கா. லாவண்யாவை நம்மகிட்ட இருந்து பிரிக்க முயற்சி பண்ணிருக்கா. லாவண்யாவை தத்தெடுத்தோம்ன்னு மஹதிட்ட சொன்னது நீங்க தானே” கண்ணீர் வழிந்தாலும் எரித்து விடுவது போல் பார்த்து கேட்டார்.

“பழைய கதைய விடுடி, இப்போ இந்தப் பொண்ணை வீட்டை விட்டு வெளிய துரத்த முடியுமா? முடியாதா?

“நீங்க தலைகீழ நிண்ணு தண்ணி குடிச்சாலும், நீங்க நினைக்கிறது நடக்காது டாட், பிகாஸ் ஷி இஸ் மை கேர்ள்” எனக் கர்ஜித்தபடி படியிறங்கினான் ஆதித் கிருஷ்ணா. அவனைப் பார்த்தவுடன் முகத்தைத் திருப்பிக் கொண்ட கோதண்டம் பார்வையை வேறு திசையில் செலுத்தினார்.

“ஜெகன் நாதனை பகைச்சிகிட்டு உன்னால வாழவே முடியாது ஆதித்” என்ற குரல் அவன் செவிகளில் விழுவதைக் கவனிக்காது அமைதியாய் போய் டைனிங் டேபிள் அருகே போடப்பட்டிருந்த மரநாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான் ஆதித். மகன் சாப்பிட அமர்ந்திருக்கிறான் என்ற ஆர்வத்துடன் ஓடிச் சென்று அவனுக்குத் தட்டை எடுத்து வைத்தார்.

“இல்லை நீங்க பரிமாற வேண்டாம்” எனத் தாயின் முகம் பார்க்காமலே சொல்லியிருந்தான் ஆதித்.

“அம்மா மேல என்னப்பா கோபம்?” கண்ணீருடன் கேட்டார் யசோதா.

“ஒன்னுமில்லை மாம், நானே எடுத்துச் சாப்பிட்டுக்கிறேன், நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்க” எனச் சொன்னாலும். தாயின் முகத்தைப் பார்த்து பேசுவதை அவன் தவிர்த்தான். ஆரா விசயத்தில் தான் அவன் கோபமாக இருக்கிறான் என அவர் நினைத்துக்கொள்ள,

“நான் இந்த வீட்டில இல்லைன்னா என்ன என்னவோ நடந்திடுதில்ல மாம்?”

“ஆதித் கண்ணா! என்ன பேசுற அம்மா செஞ்சது தப்பு தான் அந்த மஹதியை நம்பினது தப்பு தான்.” எனத் தன் தவறை ஒப்புகொள்வது போல் பேசிக்கொண்டிருந்த யசோதாவை பார்த்தவன்.

“லாவண்யாவை பத்தின உண்மை எப்படி வெளிய போச்சு? யார் சொன்னது? லாவண்யாவுக்கு அவளைப் பத்தின உண்மையை யார் சொன்னது?” எனக் கோபமாகப் பேசிக்கொண்டிருந்த போது. லாவண்யாவும், ஆராவும் இறங்கி வருவதைப் பார்த்தவன் அந்தப் பேச்சை நிறுத்தினான்.

“மஹதிக்கு உங்க அப்பா தான் சொல்லியிருக்காரு” என யசோதா சொல்ல, தன் தந்தையைப் பார்த்து முறைத்தான். கற்பகம் உணவுகளை மேசை மீது அடுக்கி வைத்துக்கொண்டிருந்தாள்.

குளித்துவிட்டு தலையை விரித்துப்போட்டிருந்த ஆரா. தன்னுடைய கேசத்தைப் பட்டர்ப்ளை கிளிப்பில் அடக்கியிருந்தாள். சிறிய டாப் அணிந்திருந்தாள் அதற்குத் தோதாய் பளாசோ பேண்ட் அணிந்திருந்தாள். அவள் இறங்கி வருவதைப் பார்த்தவன் அமைதியாய் தன்னவளை ரசித்துக்கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் அவனின் கவலைகள் மறந்து போனது. அவன் பார்க்கும் பார்வை வீச்சு அவள் வதனத்தில் படர்வதை உணர்ந்ததைப் போல் நிமிரந்து பார்த்தாள் ஆரா.பட்டெனத் தலையைக் கவிழ்த்துக் கொண்டான்.

“வாங்க அண்ணி சாப்பிடலாம்” என லாவண்யா பேசியதில் தன் கவனத்தை அவள் பேச்சில் திருப்பினாள் ஆரா.

“ம்ம்ம்” என்ற பதில் அவளிடம் இருந்து. ஆதித்க்கு அருகில் இருந்த நாற்காலியில் அவளை அமர செய்து விட்டு லாவண்யா அனைவருக்கும் உணவுகளைப் பரிமாற ஆரம்பித்தாள். எதுவும் பேசாமல் அமைதியாய் அனைவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கோதண்டம் மட்டும் எதுவும் பேசாமல் வீட்டை விட்டு வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான் ஆதித் கிருஷ்ணா.

“உங்க லவ்வர் என்ன மாதிரி தான் இருப்பாங்களா?” அவனின் மௌனத்தை கலைக்கும் வண்ணம் கேட்டாள் ஆரா.

“யெஸ்!!” என்றவன் பூரியை மென்றபடி அவளைப் பார்த்தான்.

“நான் அவங்களைப் பார்க்கலாமா?”

“அவ எங்கே இருக்கிறான்னு தேடணும், உங்களால என் கூட ட்ரவல் பண்ண முடியுமா?” எனப் பட்டெனக் கேட்டதில் அதிர்ந்து விழித்தாள் ஆரா.

“வாட்?”

“இல்லை! ஆரா உங்களை மாதிரி தான் இருப்பாங்க நீங்க என் கூட வந்தீங்கனா அவங்களைத் தேடுறது கொஞ்சம் ஈசியா இருக்கும்” என ஆதித் சொல்ல,

“அண்ணி வேணும்னா போயிட்டு வாங்க, அந்தப் பொண்ணு கிடைச்சிட்டா ஆதித் அண்ணா நம்ம வீட்ல இருந்து கிளம்பிடுவார்” எனச் சிரிப்பை மறைத்துக்கொண்டு லாவண்யா சொன்னாள். இவர்கள் பேசவது புரியாமல் லாவண்யாவின் முகத்தைப் பார்த்தார் யசோதா.

“மாம்! என்ன நடந்திச்சின்னு அப்பறம் சொல்றேன்” எனக் காதில் கிசுகிசுத்தவள்,

“மாம் இவங்க தான் மீரா! நம்ம மகேஷ் அண்ணா இந்தப் பொண்ணைத் தான் மேரேஜ் பண்ணிகிட்டாரு.” எனத் தாயிடம் தொடங்கிவள்,

“மீரா அண்ணி இவங்க தான் இந்த வீட்டோட ஓனர் அம்மா, அதாவது உங்க மாமியார்” எனக் கிண்டலாய் சொல்ல,

“ஹாய் ஆண்ட்டி” என எழுந்து நிற்க போனவளின் கரம் பிடித்து அமர செய்தான் ஆதித். அவன் உரிமையாய் தொடுவதில் எதையோ உணர்ந்தவள் பட்டென கையை இழுத்துக்கொண்டாள்.

“யசோதா அம்மாவுக்கு ஃபார்மலிட்டிலாம் பிடிக்காது” என்றான் ஆதித். அனைத்திற்கும் சரியெனத் தலையசைத்து அமர்ந்திருந்தாள் ஆரா.

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லையே மிஸ் மீரா” என்றான் அவன்.

“ம்ம்ம்! நான் வரேன் மிஸ்டர் ???” என அவன் பெயர் தெரியாமல் முழித்தாள்.

“ஆதித் கிருஷ்ணா!” என்றான் உடனடியாக,

“நீங்க க்ரிஷ்ன்னு கூப்பிடலாம்” என அவள் முகத்தைப் பார்த்தபடி சொன்னான்.

“ஓகே க்ரிஷ்” எனச் சிரித்தாள். காதலியின் சிரிப்போடு சேர்ந்து பூரியும் இதமாய் இறங்க, அவளைப் பார்த்தபடி கையைக் கழுவி விட்டு எழுந்தான்.

********
ஆராவை தேட போவதாக ஒரு பொய்யை சொல்லி அவளை அழைத்துக்கொண்டு வந்தவனின் வாகனம் மெல்ல ஊர்ந்து சென்றுக்கொண்டிருந்தது. அவனருகில் ஒயிலாய் அமர்ந்திருந்தாள் ஆரத்யா.

“இப்போ நம்ம எங்கே போறோம்?” எனக் கேட்டாள்.

“ஆரா வொர்க் பண்ணிட்டு இருந்த ஆஃபிஸ்க்கு போறோம்” என்றான் ஆதித்.

“ரொம்பச் சைலண்ட்டா இருக்கு, எதாவது சாங்க்ஸ் இருந்தால் போட்டு விடுறீங்களா என்றாள். மஹி எனக்காகச் சாங்க்ஸ் போடுவான். ட்ரவல் கொஞ்சம் பீஸ்ஃபுல்லா இருக்கும்” என அவள் சொல்ல,

“என்னோட ப்ளே லிஸ்ட் உங்களுக்குப் பிடிக்குமா தெரியலையே” என்றான்.

“பரவாயில்லை கொஞ்சம் ஆன் பண்ணுங்க. இந்த அமைதி என்னை என்னவோ பண்ணுது ப்ளீஸ்” என்றவளின் கெஞ்சலில் அவனின் ப்ளேலிஸ்டை போட்டு விட்டான்.

“மல்லி பூ வச்சு வாடுதே!!” பாடல் ஒலிக்க இமை மூடி அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆரா. அவளை அறியாமலே அவளின் இதழ்கள் வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பித்தது. மெல்ல பாட்டின் சத்தத்தைக் குறைத்தான்.

“இந்தச் சாங்குக்கும் எங்களோட காதலுக்கும் ஒரு மெம்மரி இருக்கு மீரா” என்றான் அவன். இவர்களின் பேச்சுக்கு பின்னால் பாடல் இசைந்துக் கொண்டிருந்தது

“அப்படியா? என்ன மெம்மரி?” என ஆர்வமாய்க் கேட்டாள் மீராவாய் இருந்த ஆரா.

“இந்தச் சாங்க் ஆரா எனக்காக ரெக்கார்ட் பண்ணி அனுப்பினது. இது அவளோட வாய்ஸ் தான்.”

“வாட் நிஜமாவா சொல்லுறீங்க?” என ஆச்சரியபட்டாள்.

“யெஸ் அவ ஸ்டேஜ் சிங்கர். ப்ளே பேக் சிங்கர் ஆகணும்றது அவளோட கனவு” என்றான்.

அவர்கள் பேசிக்கொண்டிருந்த போதே ஆரா பாடி வைத்திருந்த பாடல்கள். அவள் கிட்டாரில் இசைத்த டியூன்கள் என ஒவ்வொன்றாய் ஒலிக்க, இறுதியாய் அந்தக் குரல் ஒலித்தது. ஆராவின் குரல்.

“டேய் க்ரிஷ்! உனக்கு என்னோட நியாபகம் இருக்க இல்லலையா? எத்தனை தடவ தான் உனக்குக் கால் பண்ணுறது. கேட்டால் பிஸ்னஸ் மேனை லவ் பண்ணினால் இப்படித் தான்னு கதை விடுவ? ஏன் பிஸ்னஸையும் காதலையும் யாரும் ஒன்னா மெயின்டெயின் பண்ணுறதே இல்லையா? இல்லை கல்யாணம் தான் பண்ணிகிறது இல்லையா? உனக்கு அஞ்சு நிமிசம் தான் டைம் என்னோட ஆஃபிஸ் வாசல்ல நீ வந்து நிக்கிற நான் உன்னைப் பார்க்கணும், ப்ளீஸ் வா க்ரிஷ் லவ் யூ” என முடிந்திருந்த குரல் பதிவை கேட்டு. கண்ணீர் பெருக்கெடுக்க ஆதித்தை பார்த்தாள்.

அவள் கரங்கள் இப்போது நடுங்கியது. ஏசி காரிலும் அவளுக்கு வியர்த்துக் கொட்டியது. தன் குரலையே தான் கேட்பது போன்ற உணர்வு எற்பட. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நடுநடுங்கி போனவள் பேச வார்த்தைகள் இன்றித் திணறி போனாள்.

பட்டென ஓடிக்கொண்டிருந்த ப்ளேலிஸ்ட்டை ஆஃப் செய்தவன்.

“மீரா! மீரா! ஆர் யூ ஓகே??” எனக் கேட்டான்.

“உங்களோட ஆராவை நான் உடனே பார்க்கணும்” எனத் தட்டுதடுமாறி சொன்னவள் மூச்சு விட முடியாமல் திணற. உடனே காரை நிறுத்தினான். இறங்கி ஓடி வந்தவன் , அவள் அம்ந்திருந்த பக்கம் இருந்த காரின் கதவை திறந்தான்.

“ரிலக்ஸா ப்ரீத் பண்ணுங்க மீரா? ஹாஸ்பிட்டல் போகலாமா?”

“இல்லை வேண்டாம் ஐ யெம் ஒகே” எனச் சொன்னாள்.

“எதாவது சாப்பிடுறீங்களா?” எனக் கேட்டான்

“இல்லை வேண்டாம்” என மறுப்பாய் சொன்னாள்.

“பக்கத்தில் தான் காஃபி ஷாப் இருக்கு வாங்க போகலாம்” என அவன் கரம் பிடித்து அழைத்தான். அவனின் தொடுதல் அவளுக்கு வேறு உலகத்தைக் காட்டியது. அவனருகில் பாதுகாப்பாய் உணர்ந்த பெண். அவனையே இமைக்காமல் பார்த்தாள். இந்த முறை அவனின் கைகளை உதறி தள்ளவில்லை. அவளின் கரத்தை அவனே மென்மையாய் விடுவித்து

“வாங்க மீரா, ஒரே ஒரு காஃபி ” என அவளை அழைக்க, அவளாகக் காஃபி ஷாப்பை நோக்கி நடந்தாள். காரை லாக் செய்துவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.

அவர்கள் காதலித்துக்கொண்டிருந்த போது வழக்கமாக வரும் காஃபி ஷாப் தான். கண்ணாடி கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவள். அவர்கள் வழக்கமாய் அமரும் இடத்தில் போய் அமர்வதைப் பார்த்துச் சந்தோசம் கொண்டான் அவளின் க்ரிஷ்.

நினைவுகள் என்றும் அழிந்து

போவதில்லை.

இந்தக் காதலில் மட்டும்.

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்