
அத்தியாயம் 30
காபி ஷாப்பின் மேற்கூரையைப் பார்த்து கொண்டிருந்தவளின் பார்வை, எதிரில் மார்பின் குறுக்கே கைகட்டி அமர்ந்திருந்த ஆதித் கிருஷ்ணாவை ஏறிட்டது. அவன் பார்வை அவளை விட்டு சிறிதும் விலகவில்லை. அவளின் ஒவ்வொரு அசைவிலும் அவள் ஆராவாக நடந்துக்கொள்வதை அவனால் உணர முடிந்தது. மருத்துவர் சொன்ன விசயங்களும் அவன் தலைக்குள் யோசனையாய் ஓடிக் கொண்டிருந்தது.
“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா, ஆரா தன்னை மறந்து போயிருந்தாலும் அவங்களோட ஸ்கில்ஸ், அதாவது அவங்களோட திறமைகள். ஆட்டிடூயூட் அவங்களை விட்டு போயிருக்காது. அவங்க ரொம்ப டைம் ஸ்பெண்ட் பண்ணின இடத்திற்குக் கூட்டிட்டு போங்க. சீக்கிரமே ரெக்கவர் ஆகிடுவாங்க” எப்போதோ மருத்துவர் சொன்ன விசயங்கள் அவன் மனதிற்கு வந்து போன நொடியில் அந்தக் குரல். அவனுக்குப் பரீட்சியமான குரல் அவனை எப்போதும் பாசத்துடன் அழைக்கும் தன்னவளின் அழைப்பு.
“க்ரிஷ்!!” அவனையே பார்த்திருந்தாள் பெண். விழிகள் கலங்க அவளைப் பார்த்தான். ஆர்வத்தில் ஆரா என அழைக்கப் போனவன் பட்டெனத் தன் வாய்க்கு மட்டுமல்ல மனதிற்கும் பூட்டிட்டுக் கொண்டான்.
“சொல்லுங்க மீரா” அவன் இயல்பாய் பேசினாலும் குரல் தழுதழுக்க. அவளுக்காகத் தேங்கி நின்ற கண்ணீரை உள் இழுத்துக் கொண்டு போலியாய் புன்னகைத்தான்.
“அடுத்து என்ன பண்ணப்போறோம்?” எனத் தயங்கிய படி கேட்டாள் பெண். அவள் பேசிக்கொண்டிருந்த நொடியில் அவர்கள் ஆர்டர் செய்த காஃபி வந்து விட அவளோ திருதிருவென விழிக்க,
“அடுத்து என்ன? காஃபி குடிக்கணும்”
“அதுக்கு அப்பறம்??” என அவள் வார்த்தைகளை உள் இழுத்தாள் பெண்.
“ஆரா வொர்க் பண்ணிக்கிட்டு இருந்த ஆஃபிஸ்க்கு போகப்போறோம். அப்படியே அவங்க ஃப்ரெண்ட்ஸ் கிட்ட விசாரிச்சிட்டு, வீட்டுக்குப் போகலாம்” எனச் சொன்னவுடன் தலையசைத்தவள் காஃபியை பருகினாள். அவனும் அவளைப் பார்த்த படியே காஃபியை முழுவதுமாய்க் குடித்து முடித்தான்.
“மிஸ் மீரா” என அவளை மீண்டும் அழைத்தான்.
“நீங்க என்னோட ஆராவை பார்த்ததில்லைல ? பாக்குறீங்களா?” என்றவன் அலைப்பபேசியில் அவளின் புகைப்படத்தை எடுத்து காட்ட முயன்றுக் கொண்டிருந்தவனின் விழிபார்த்து,
“இல்லை வேண்டாம்” என மறுப்பாய் சொன்னாள் அவள்.
“என் கண்ணுல படாத ஆரா உங்க கண்ணில் பட வாய்ப்பு இருக்குல, அதுக்காகத் தான் சொன்னேன் மீரா” என மழுப்பலாய் அவன் சொன்னாலும் ஆராவின் புகைப்படத்தைக் காட்டுவதில் அவன் முனைப்பாய் இருந்தான். அதை உணராத பெண்ணோ,
“ம்ம் சரி காட்டுங்க, உங்களோட இவ்வளவு காதலுக்கும் சொந்தகாரி யாருன்னு பார்க்கிறேன்” என நீளமாய் அவள் பேசி முடிக்க, ஆதித் கிருஷ்ணாவின் அகம் மகிழ்ந்தது. அவளை மீராவை பார்த்த நாளில் இருந்து ஒரிரு சொற்களில் பதில் சொல்லி அவனை நிராகரிக்கும் அவள் இன்று இவ்வளவு வார்த்தைகள் பேசியிருக்கிறாள் என்பதே அவன் மகிழ்ச்சிக்குக் காரணம்.
பிரதிபலன் இல்லாத அவனின் காதல் இப்போது அவள் ஆராவாகத் தன்னிடம் பேசி விட மாட்டாளா? என்று ஏங்கியது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அவளை அவளாகவே ஏற்றுக்கொண்ட காதல், இன்று அவள் முன் மண்டியிட்டு என்னை அடையாளம் கண்டுகொள்ளேன் எனக் கெஞ்சி கொண்டிருந்தது.
தன்னை மறந்து நிற்கும் பேதை பெண்ணுக்கோ, எதிரில் இருப்பவன் தன் மேல் எவ்வளவு காதல் வைத்திருக்கிறான் என்பதைப் புரியாத நிலையில் இருக்கிறாள். அவளின் சுட்டு விரலை கூடாத தீண்டாத இவனின் காதல் வேள்வி என்று தணியும் என்ற காத்திருப்பில், ஆராவின் புகைப்படத்தை அவளிடம் காட்டினான். அதைப் பார்த்த நொடியில் தன்னையே கண்ணாடியில் பார்ப்பதை போல் உணர்ந்தாள் பெண்.
“இவங்க தான் ஆராவா?” எனக் கேட்டவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள், அவனிடமிருந்து சின்னத் தலையசைப்பு, அன்னிச்சையாய் அவளின் பிஞ்சு விரல் அடுத்தப் புகைப்படத்தை ஸ்வைப் செய்தது. குழந்தை சிரிப்புடனை காதலின் தோள் சாய்ந்து நின்றவளின் விழிகள் தன்னவனைப் பார்த்திருக்க.
“வாவ் க்யூட் கப்பிள்ஸ்” என அவள் இதழ் மலர்ந்து சொன்னாள். ஒவ்வொரு புகைப்படத்தையும் அவள் பார்க்க ஆரம்பித்தாள். அவனோ அவளைத் தடுக்கவில்லை. உரியவள் தானே பார்க்கிறாள் பார்க்கட்டும் என்ற நினைப்பு அவனுள்.
“அப்போ கிளம்பலாமா மீரா?” என அவன் கேட்க தொடுதிரைபேசியை அவனிடம் கொடுத்து விட்டு எழுந்து நின்றாள் அவள்.
“போகலாம்” என்றாள்.
மீண்டும் அவர்களின் பயணம் தொடர்ந்தது. அந்தப் பயணத்தின் முடிவில் ஆரா முதல் முதலில் வேலை செய்துக்கொண்டிருந்த மேட்ரிமோனி ஆஃபீஸிக்கு அழைத்து வந்திருந்தான். மனோகரிடம் இருந்து மேட்ரிமோனியை அவன் வாங்கியிருந்தாலும் , ஆராவை அங்கு அழைத்து வருவதால் அவரை அங்கு வரச் செய்திருந்தான். அதே போல் அங்குச் சுதாவும் தன்னுடைய கணினி முன் அமர்ந்திருந்தாள். ஆஃபிஸ் செட் அப்பை பழையபடி மாற்றியிருந்தான். எல்லாம் அவளுக்காகத் தான்.
“ஆராவை என்க்கிட்ட கொண்டு வந்து சேர்த்த இடம் இது தான் மீரா” என்றான் அவனின் பக்கவாட்டில் நின்றிருந்தவளை பார்த்து.
“அப்படியா?”
“உள்ளே வாங்க இன்னும் நிறையத் தெரிஞ்சுப்பீங்க” என அவனழைக்க அவளைப் பின்தொடர்ந்தாள் பெண்.
“வெல்கம் சார்!” என வரவேற்ற மனோகர் அவனைத் தொடர்ந்து வந்தவளை கண்டவுடன்.
“இந்தம்மா ஆரா! நீ என்ன இந்தப் பக்கம் அதான் உன்னோட சம்பள பாக்கிலாம் கொடுத்தாச்சுல” என அவள் சொல்லி முடிக்கும் முன்னே.
“ஆரா வந்துட்டியா??” என்ற குரல் மட்டும் தான் அவளுக்குக் கேட்டது அதற்குள் அவள் மேல் பாய்ந்து கட்டியணைத்திருந்தாள் சுதா.
“என்னடி ஆரா! எதுக்காக இங்கே வந்த? இந்த மண்ட கசாயத்துக்கிட்ட இருந்து எப்படித் தப்பிக்கன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். மறுபடியும் நீ வந்து மாட்டிகாதேடி சம்பளமே தரமாற்றான் இந்த ஆளு” என அவளின் காதில் சுதா கிசுகிசுக்க,
“நான் ஆரா இல்லை”என அவள் தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள்.
“என்னடி உளறிக்கிட்டு இருக்க முதலில் வா” என அழைத்தவள் ஆரா எப்போதும் அமரும் இருக்கையில் அமர செய்தாள்.
“என்னடி கல்யாணம் ஏதும் பிக்ஸ் ஆகிடுச்சா? பத்திரிக்கை கொடுக்க வந்தீயா? உன் ஆளை வேற கூட்டிட்டு வந்திருக்க” என ஆதித் கிருஷ்ணாவை சுட்டிக் காட்டி பேச, புரியாது விழித்த பேதை பெண்ணோ.
“இல்லை நீங்க நினைக்கிற மாதிரி” என ஆரா துவங்கும் முன்,
“என்னடி நீங்க வாங்க போங்கன்னு வேற மாதிரி பேசுற, பெரிய இடத்து மருமகள் ஆனதும் எங்களை எல்லாம் மறந்துட்டீயா” என ஆராவை பேச விடாமல் அவள் கேள்விகளை அடுக்க,
“சுதா ப்ளீஸ் ஸ்டாப் இட்” என்ற குரலில் விழுக்கென் நிமிர்ந்து பார்த்தனர் இருவரும்.
“நீங்க நினைக்கிற மாதிரி அவங்க ஆரா இல்லை, ஷி இஸ் மீரா” எனச் சொல்லி முடித்தவன், மனோகரை பார்த்து,
“ஆரா இப்போ மிஸ்ஸிங் அவங்களைத் தான் தேடிட்டு இருக்கோம். சின்ன இன்வெஸ்டிகேசன்காகத் தான் இங்கே வந்தோம்” எனப் போலியாய் நடித்தவன் அவரை அறைக்குள் அழைத்துச் சென்றான். அவரிடம் பேச வேண்டியதெல்லாம் அறைக்குள் வைத்தே பேசினான்.
“மீரா ஒரு டூ மினிட்ஸ் வந்திடுறேன்” எனச் சொல்லவும் அவன் தவறவில்லை. அவளை காரில் காத்திருக்கும் படி சொல்லியவன். சுதாவை பார்த்து கைக்கூப்பினான்.
“தேங்க்ஸ் சுதா” என்றான்.
“இல்லை ஆதித் இது நான் அவளுக்கு செஞ்ச துரோகத்துக்கு நான் செய்யுற நன்றிக் கடன். நான் முதலிலே மகேஷ் பத்தி சொல்லியிருந்தால் ஆராவுக்கு இந்த நிலை வந்திருக்காதுல?” என சோகமாய் கேட்டாள் சுதா.
“அதெல்லாம் தெரியலை, பட் நீ முதலிலே சொல்லியிருந்தால் ஆராவை நான் தப்பா நினைச்சிருக்க மாட்டேன். எனிவே எல்லாமே சரியாகும்னு நம்புறேன்” என சொல்லி அங்கிருந்து அவன் கிளம்பினான். சுதா குற்ற உணர்வில் கூனி குறுகி நின்றாள்.
*********************************
இரவு நேர வேளையில் தனக்காக ஒதுக்கபட்டிருந்த அறையின் பால்கனியில் தொங்கி கொண்டிருந்த அக்ரலிக் ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் மீராவாய் மாறிப் போயிருந்த ஆரா. அன்று நடந்த விசயங்கள் அனைத்தும் அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. தன்னைப் போலவே ஒருத்தி இருக்கிறாள். அவளின் காதலன் எனச் சொல்லபடுபவன் தன்னை ஏன் ஈர்க்கிறான் என்ற விந்தையை அவளால் புரிந்துக்கொள்ளவே முடியவில்லை. ஆதித் கிருஷ்ணாவின் விழிகளை பார்த்து தன்னால் ஏன் பேச முடியவில்லை என்றெல்லாம் நினைத்து உழன்றுக் கொண்டிருந்தாள் பெண்.
“மீரா நீ மகேஷின் மனைவி ஞாபகம் வச்சுக்கோ” அவளின் அடி மனம் கூக்குரலிட்டது. அந்தக் கூக்குரல் அவளுக்குக் கேட்டாலும். ஆதித் கிருஷ்ணா, ஆரத்யா, இவர்கள் இருவருக்கு நடுவில் நான் ஏன் இருக்கிறேன். மீரா எனத் தன்னை அழைக்கும் போது கிடைக்காத ஆழ் மன தீண்டல் ஆரா என யாரேனும் அழைத்தாள். தன்னையே மறந்து நிற்பதற்கான காரணம் தான் என்ன? பெண்ணவளின் மனம் உழன்றது. தன் கழுத்தில் இருந்த டாலரை தடவிய படி அவளின் சிந்தனையில் மூழ்கி நின்ற நேரம். எதோ தோன்றியவளாய் விரைந்து அறைக்குள் நுழைந்தாள், ஆளுயர கண்ணாடியின் முன் நின்று அவளின் பிம்பத்தைப் பார்த்தாள். அவள் விழிகளை அவளால் நம்ப முடியவில்லை.
கண் காது மூக்கு என அனைத்தும் ஆராவுடன் ஒத்துபோவது சரி தான், ஆனால் அவள் அணிந்திருக்கும் அதே மயிலிறகும் புல்லாங்குழலும் இணைந்த டாலர். தன் கழுத்தின் மத்தியில் தொங்கி கொண்டிருப்பதன் பின் இருக்கும் மர்மம் தான் என்ன?
அவளின் குழப்பங்கள் அதிகரித்தது. அவளால் அதற்கு மேல் அந்த அறையில் அமைதியாக இருக்க முடியவில்லை. அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வர, அவளை எதிர்கொண்டு நின்றாள் லாவண்யா.
“அண்ணி!” லாவண்யாவின் சிரித்த முகத்தைப் பார்த்தவுடன்,
“நான் யாரு?” எனக் கேட்டவளின் விழிகளின் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
“அண்ணி என்னாச்சு? ஏன் அழறீங்க” அவளுடைய விழியைத் துடைத்து விட்டாள்.
“அழறேனா? நான் எதுக்கு அழுகுறேன்.” எனத் தன் கன்னத்தைத் தொட்டு பார்த்தாள்.
“அண்ணி ரிலாக்ஸ் ஆகுங்க, டென்சன் ஆகாதீங்க” என அவளைச் சமாதானம் செய்ய முயற்சி செய்தாள் லாவண்யா.
“இல்லை! என்னைச் சுத்தி என்ன நடக்குது?” என அவள் புலம்ப ஆரம்பிக்க, அதே சமயம் ஆதித் கிருஷ்ணா அங்கு வந்து சேர்ந்திருந்தான்.
“மீரா என்னாச்சு?” என அவன் கேட்க,
“ஆரா கழுத்தில இருக்க அதே செயின் எப்படி என் கழுத்துக்கு வந்துச்சு, நீங்க எல்லாரும் சேர்ந்து நான் மீரா இல்லை ஆரான்னு சொல்ல வர்றீங்க அதானே” எனக் கோபமாய்க் கத்தினாள் அவள்.
“இல்லை! நீங்க என்னோட ஆராவ இருக்கவே முடியாது, ஏன்னா? அவ இப்படி முட்டாள் தனமா யோசிக்க மாட்ட, ஒரே மாதிரி செயின் போடுறது, டாட்டூ போடுறெதெல்லாம் பார்த்து அவ சந்தேகப் பட மாட்ட, நீங்க என்னோட ஆராவா இருக்கவே முடியாதுங்க போய்ப் படுத்து தூங்குங்க, இன்னும் இரண்டு நாள்ல நான் இந்த வீட்டை விட்டு கிளம்பிடுவேன். என்னோட ஆராவை நானே தேடிக்கிறேன். எனக்கு யாரோட உதவியும் தேவையில்லை. உங்ககிட்ட உதவி கேட்டது என்னோட தப்பு தான் மீரா. என்னை மன்னிச்சிடுங்க” என அவள் முன் கைகூப்பிச் சொன்னவன் அங்கிருந்து விரைந்து நடந்தான். அவன் பேசியதைக் கேட்டு சிலை போல் நின்றாள் பெண்.
என்ன தான் அவன் வீரமாய்ப் பேசி அங்கிருந்து நகர்ந்தாலும். தன் காதலின் நிலைக்கண்டு அவன் மனம் வருந்தியது. அவளை எங்கும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாது. அவளைக் காயப்படுத்துவதை அவனால் உணர முடிந்தது. அவளின் ஆராவுக்கு எப்போது நினைவு வருகிறதோ அப்போது வரட்டும். என்ற முடிவை எடுத்தவனின் விழிகளில் கண்ணீர் வடிந்தது அதைத் துடைத்துக்கொண்டு தன் அறைக்குள் புகுந்துக்கொண்டான் ஆதித் கிருஷ்ணா.
**************
மறுநாள்;
அந்த விடியல் அவளுக்கு வித்தியாசமான உணர்வை கொடுத்தது. எதோ ஒரு வித இசையைக் கேட்டு அவளின் மதி மயங்கியது. பஞ்சு மெத்தையில் தேவதை போல் எழுந்து அமர்ந்தவள் கண்களைக் கசக்கி பார்த்தாள். அந்த ஒளி அவள் செவிகளுக்கு மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த இசையைத் தன்னை அறியாமல் பின் தொடர எதோ ஒன்று அவளை ஊந்தியது. பளிங்கு தரையில் அவள் பொற்பாதம் பதித்து நடக்க ஆரம்பித்தாள். அந்த இசை அவளை வேறு உலகத்திற்க்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையாகது.
இசைக்காகவே வாழ்ந்துக்கொண்டிருந்தவளால் எப்படி இந்த இசையை மறக்க முடியும். இந்த இசையமைத்தவள் அவள் தானே, உயிராய் நினைத்த காதல் நினைவற்று போன நிலையில் இருந்தவளுக்கு அந்த இசை கண்ணீரை வரவழைத்தது. பொங்கி எழும் கண்ணீரை துடைத்தபடி அந்த இசையைத் தொடர்ந்தாள். அவள் தலைக்கு மேலிருந்து இசை கேட்பது போல் உணர்ந்தாள் பெண். தலையை இறுக பிடித்துக்கொண்டு,
“ஆஆஆ.” என அலறியபடி இரண்டாவது மாடியை நோக்கி விரைந்தாள். அங்கு என்ன நடக்கிறது என்பது அவளுக்குப் புரியவில்லை தான் ஆனால். இந்த இசை அவளை வேறு எதையும் யோசிக்கவிடாமல் செய்ய, திறந்திருந்த அந்த அறைக்குள் நுழைந்தாள். அவள் நுழைந்த நொடியில் இசை பட்டென நின்றது.
ஜீவனற்ற உடலாய் அவள் அங்கு நின்றாள். அந்த அறை முழுக்க அனைத்து இசைக்கருவிகளும் இருந்தது. அறையின் சுவற்றில் ஆராவின் புகைப்படங்கள் அழகாய்த் தொங்கிக்கொண்டிருந்தது. அவளின் புன்னகையை பார்த்தவள். அறையின் மத்தியில் சிவப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள் அவள். மெல்ல புகைப்படத்தை நோக்கி நெருங்கியவளின் கவனம் இப்போது சிதறியது. அதற்குக் காரணம் அத்தனை இசைக்கருவிகளுக்கு மத்தியில் இருந்த கிட்டார் “என்னிடம் வா” என்று அழைப்பது போல் அவளுக்குத் தோன்றியது. மெல்ல நெருங்கினாள் கிட்டாரை கையில் எடுத்தாள். ஆழ்மனதில் இருந்த சலனங்கள் அகன்றது போல் ஓர் உணர்வை கொடுக்க. அதிலிருந்த ஸ்டரிங்கை ஒரு முறை விரல் கொண்டு தீண்டினால். அது ஒலியை கொடுத்தது.
அவளின் இமைகள் மெல்ல மூடியது, அவள் கண்களை இறுக மூடிய நொடி, புதிதாய் அங்கொரு இசை பிறந்தது. இத்தனை நேரம் அவள் கேட்ட அதே இசையை இப்போது மீராவாகி போன ஆரா இசைத்துக்கொண்டிருந்தாள்.
விழிகளில் இருந்து தானாய் வழிந்த கண்ணீர் அவளுக்குள் இருக்கும் உயிர் எங்கோ ஓர் மூலையில் துடிதுடித்துக் கொண்டிருப்பதை உணர்த்தியது. என்னை மீட்டுவிடு என்று அந்த உயிர் அலறியது. பாவம் பெண்ணவளுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் இசை மீட்டி முடித்த நொடியில். சிவப்பு திரை அவிழந்து விழுந்தது. அவளின் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய, அவள் கையில் இருக்கும் கிட்டாரை பார்த்தாள். அந்த புகைப்படத்தை பார்த்தை இரண்டையும் மாறி பார்த்து வியந்து நின்றாள்.
கையில் கிட்டாருடன் புன்னகைத்து நின்ற ஆராவின் புகைப்படம் அவள் விழிகளுக்குக் காட்சியளிக்க. திகைத்து போய் நின்றாள் பெண். மீண்டும் அவள் மனதில் எழும்பிய கேள்வி,
“நான் யார்??” என நினைத்தபடி தடுமாறி விழப் போனவளை,
“கேர்ஃபுல் ஆரா!!” என்ற குரல் நிதானத்திற்குக் கொண்டு வந்தது.
“சாரி மீரா!!” எனச் சொன்னவனைப் பார்த்து விலகி நின்றாள் பெண்.
“இதெல்லாம் எப்படி?” என அவள் கேள்விகளைக் கேட்கும் முன்,
“ஒன் மினிட்” என இடை நிறுத்தியவன்,
“நேத்துக் கோபத்தில் எதோ பேசிட்டேன் சாரி” என்றான்.
“இல்லை அது வந்து” வார்த்தைகள் தடுமாறி நின்றவளின் விழிகளை அவன் தடுமாற்றம் ஏதுமின்றி ஆழ்ந்து பார்த்தான்.
“நான் பேசி முடிக்கலை ஆரா” அதிரடியாய் அவள் பெயரை அழுத்தி சொன்னான்.அவளோ அரண்டு விழித்தாள்.
“இதில் நீ பயப்பட எதுவும் இல்ல ஆரா. இதுக்கு மேல் நான் உன்கிட்ட மறைக்க எதுவும் இல்லை. உன்கிட்ட என்னால பொய்யா நடிக்க முடியலை ஆரா. சோ நான் பேசி முடிக்கிற வரைக்கும் ப்ளீஸ் கொஞ்சம் லிசன் பண்ணு” என்றவன் அவள் விழிகளைப் பார்த்தான். அவளிடம் எந்த எதிர்விணையும் இல்லை.
“சொல்லுங்க” என்ற பதில் மட்டுமே அவளிடம் இருந்து.
“நீ இப்போ கேட்ட மியூசிக், கிரியேட் செய்தது என்னோட ஆரா தான். அவ இது மாதிரி நிறைய ஆல்பம் க்ரியேட் பண்ணி வச்சிருக்கா பட் அவளுக்கு அதை எங்க கொண்டு போய்ச் சேர்க்கணும் தெரியலை. அதனால அவளுக்காக அவளோட ப்ளே லிஸ்ட்டை நான் உருவாக்கினேன். அதை அவக்கிட்ட சர்ப்ரைஸா காட்டலாம்ன்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள என்ன என்னவோ நடந்திருச்சு. என்னோட ஆரா க்ரியேட் பண்ணிண மியூசிக் மீராவா இருக்க உனக்கு எப்படித் தெரிஞ்சது? அவளோட கிட்டார் பார்த்ததும் அதை எதுக்கு நீ ப்ளே பண்ணிண? இப்போ நீ பதில் சொல்ல வேண்டிய நேரம்”
“அதான் எனக்கும் தெரியலை” அவள் திணறினாள்.
“சரி என்னைப் பார்த்தால் உனக்கு எதுவுமே தோணலையா ஆரா? சொல்லு இந்தக் கண்கள்ல தேங்கி இருக்கக் காதலை உன்னால புரிஞ்சுக்க முடியலையா? எதுக்கு என்னைப் பார்த்து விலகி போற? யாருனே தெரியாத மகேஷை நம்புற அவன் உனக்குத் துரோகம் பண்ணிருக்கான்டி அவனை நம்பிட்டு என்னை விலக்கி வைக்கிறீயே ஆரா” என ஒரு வேகத்தில் பேசி விட, அவளோ கண் கலங்கி நின்றாள்.
“அப்பறம் இது மகேஷ் வீடு இல்லை என்னோட வீடு தான். லாவண்யா என்னோட தங்கச்சி. யசோதா என்னோட அம்மா” என அனைத்து உண்மைகளையும் உடைத்தெறிந்தான்.
“உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைல? இதுக்கு மேல் நீ இங்கே இருக்க வேண்டாம். உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு ஆரா. உன்னோட இந்த மறதி நோய் கூட என்னால போராட முடியலை. உன்னோட மகேஷ் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவான் நீ யார்க்கிட்டையும் சொல்லாமல் கிளம்பி போகலாம்” என்றவன் அவள் கையில் சின்னச் சிவப்பு நிற பரிசு பொருளை கொடுத்தான். ஆதித் கிருஷ்ணாவின் தொடுதலில் அவனை நிமிர்ந்து பார்த்தாள் பெண். அவளைப் பார்க்கவே அவனுக்குப் பரிதாபமாக இருந்தது. அவளை இந்த நிலையில் பார்க்க முடியாமல் தான் இப்படி ஒரு முடிவை ஆதித் கிருஷ்ணா எடுத்திருந்தான்.
“இதில் என்ன இருக்கு?” என அவள் கேட்டாள்.
“நீயே பார்த்து தெரிஞ்சுக்கோ ஆரா” எனச் சொல்லி அங்கிருந்து அகன்றான் அவன்.
மறுநொடியே அந்த வீட்டிற்க்குள் நுழைந்தான் மகேஷ் ஆதித் கிருஷ்ணாவை எதிர்கொண்டான்.
“நான் தான் சொன்னேன்ல அவ என்னோட மீரான்னு நீங்க தான் கேட்கலை மிஸ்டர் ஆதித்” நக்கல் தொனிக்க அவன் சொன்ன வார்த்தையில் ஓங்கி அவனை அறைந்திருந்தான்.
“என்னோட ஆராவுக்கு எதாவது ஆச்சு, உன் உடம்புல உயிரை மட்டும் தான் விட்டு வச்சிருக்கேன் அதையும் எடுத்திடுவேன்” என எச்சரித்தான் ஆதித் கிருஷ்ணா.
“முடிஞ்சா பண்ணிக்கோங்க மிஸ்டர் ஆதித். என்னைக் காப்பாத்துறதுக்கே பிறப்பு எடுத்து வந்திருக்கா என்னோட மீரா” என்றான்.
“கெட் லாஸ்ட் இடியட்” கோபமாய்க் கத்தினான் ஆதித் கிருஷ்ணா.
“அப்பறம் இந்த ஆராவை தேடுறதை விட்டுட்டு உங்களைக் காதலிக்கிற மஹதி மேமை கல்யாணம் பண்ணிக்கோங்க” என வாசலை காட்டினான் அவன். மஹதி ஒய்யாரமாய் அங்கு நடந்து வந்தாள்.
“நீ எதுக்கு இங்கே வந்த மஹதி.?” கோபத்துடன் வினவினான்.
“நீ ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கன்னு கேள்விபட்டேன் அதான் விஷ் பண்ணிட்டு போகலாம்ன்னு வந்தேன், இல்லை மகேஷ்?” ஆதித்திடம் துவங்கி மகேஷிடம் முடித்தாள் மஹதி.
“இங்கே இருந்து முதலில் நீ கிளம்பு மஹதி”
“வெயிட் பண்ணு ஆதித் மீரா மேடம் அவங்க புது லைஃப்-அ தொடங்க போறாங்க அதைப் பார்த்திட்டு போறேன்” என அனைவரும் பேசிக்கொண்டிருந்த போதே தன் உடமைகளை எடுத்துக்கொண்டு வந்தாள் ஆரா.
“ஆல் தி பெஸ்ட் மீரா. மகேஷ் மாதிரி பையன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்” என அவள் கை பிடித்துக் குலுக்க, கரத்தை வெடுக்கென உள் இழுத்துக்கொண்டாள் ஆரா.அவளை பார்த்தவுடன் அவள் மருத்துவமனையில் தன்னைக் கடத்த முற்பட்டது நினைவுக்கு வந்தது. அன்று அவள் ஆதித்தின் ஆள் என நினைத்திருந்தாள். ஆனால் மகேஷூக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் இவள் யார் என்ற யோசனையில் நின்றுக்கொண்டிருந்தாள் ஆரா.
“வா மீரா போகலாம்” என மகேஷ் அழைக்க அவனைப் பின்தொடர்ந்து சென்றாள் ஆரா. மஹதி இந்தக் காட்சியைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்த வேளையில். மனம் கலங்கி தன்னவள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித் கிருஷ்ணா.
அவன் காதலின் சகாப்தம் இன்றோடு முடிந்ததாய் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். என்ன தான் மகேஷோடு ஆராவை அனுப்ப அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும். அவளிடம் பொய் வேசம் போட முடியாமல் தோற்று போய் நின்றான் இந்தக் காதலன்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குள் ஆதித் கிருஷ்ணாவின் பேலஸிற்குள் காவலர்கள் நுழைந்தனர். ஆதித்தின் நண்பனான ராகவின் தலைமையில் மற்ற காவலர்கள் பின்தொடர மகேஷின் கையில் முதலில் கைவிலங்கை மாட்டினான் ராகவ்.
“சார் என்னை எதுக்காக சார் அரெஸ்ட் பண்ணுறீங்க” என அவன் துள்ளினான். பளாரென அறைந்தான் ராகவ்.
“மாலதியை என்னடா செஞ்ச” அறைந்த வேகத்தில் அவன் கேட்க,
“சார். சார்.” என இழுத்தான்.
“உன் ப்ரெண்டு சூர்யா எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்லிட்டான்” எனத் திமிராய் பதில் கொடுத்தான் ராகவ்.
“சார் நான் ஒன்னும் பண்ணலை சார், இதோ இங்கே நிக்குதே இந்த ஆரா பொண்ணைக் கொல்லுறதுக்குப் பணம் கொடுத்தாங்க சார். எனக்கு ஆரா மேல லவ்ஸ் சார் அதனால என் கூடப் பாட்டு பாடிட்டு இருந்த பொண்ணைக் கொண்ணுட்டு ஆராவோட ட்ரெஸை மாட்டி விட்டு கடல்ல தூக்கி போட்டுட்டேன் சார். எல்லாத்துக்கும் காரணம் இந்த மஹதி மேடம் தான் சார்” என அனைத்து உண்மையையும் ஆரா முன் போட்டு உடைத்திருந்தான்.
“அப்போ நான் மீரா இல்லையா? நீ என்னோட ஹஸ்பெண்ட் இல்லையா?” அவன் சட்டையைப் படித்துக் கேள்வி கேட்டாள் ஆரா.
“ஆரா!! நான் உன்னோட ஃப்ரெண்ட் தான். இவ்ளோ விசயம் நடந்ததுக்கு இந்த மஹதி மேடம் தான் காரணம்” என மீண்டும் மீண்டும் அவன் சொல்ல செய்வதறியது நின்றாள். இவனும் தன்னை ஆராவென அழைப்பதிலே அவள் ஆதித் கிருஷ்ணாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை புரிந்துக்கொண்டாள்.
“என்ன மகேஷ் ஆராவை உன் கூட அனுப்பிடுவேன்னு பார்த்தீயா? இது நான் உனக்கு வச்ச ட்ராப். நீ வந்தால் இந்த மஹதியும் வருவான்னு எனக்குத் தெரியும்.” சிரித்தவன்.
“ராகவ் உங்க கடமையை நீங்க செய்யலாம்” எனச் சிரித்தபடி ஆதித் கிருஷ்ணா சொல்ல, மஹதியின் கையிலும் கைவிலங்கு மாட்டினான் ராகவ்.
“ஹே நான் யாரோட பொண்ணு தெரியுமா?” மாட்டிக் கொண்ட கோபத்தில் கத்தினாள் மஹதி.
“நீங்க யாரோட பொண்ணா வேணும்னா இருந்திட்டு போங்க, எங்களுக்குத் தப்பு பண்ணுறவங்க எல்லாரும் ஒண்ணு தான்” என இருவரையும் கைது செய்து அவன் அழைத்துச் சென்றனர் காவலர்கள்.
“சாரி உங்களை நான் ரொம்பத் தப்பா நினைச்சிட்டேன்” என ஆரா ஆதித்தின் கரம் பிடித்து மன்னிப்பு கேட்டாள். அவனோ அவள் தலைக்கோதி,
“எல்லாமே உனக்காகத் தான் ஆரா. சீக்கிரம் என்ன புரிஞ்சுப்பன்ற நம்பக்கையில் என்னோட காதல் எப்போதும் காத்திகிட்டு இருக்கும். உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு ஆரா. நான் உன் கூட எப்போதும் இருப்பேன்” என்றவன் அவள் விழிநீரை துடைத்து அவளை விட்டு விலகினான்.
உன்னை தேடி,
அலைந்த தருணங்களில்!!
என்னை தொலைத்து நின்றேன்.!
நீ கிடைத்த மறுநொடியில்,
வண்ணம் தொலைத்த வானம்
வானவில்லாய் மாற,
அனைத்தும் பொய்யென என்னை மறந்து போனாய்!!
நான் மரித்துப் போனேன்.
உன்னை நீ மறந்து நின்ற நொடியில்,
என் காதலை தேடுகிறேன்,
அது உன்னுள் இன்னும் ஜீவிக்கிறதா?
இல்லை ஜீவனற்று கிடக்கிறதா?
என்னைப்போல்,
உனக்காக???
எபிலாக்:
சில வருடங்கள் கடந்திருந்தது, கோதண்டம் அரசியல் நோக்கத்திற்காக ஜெகன்நாதனுடன் சேர்ந்துக்கொண்டார், குடும்பத்தை துறந்து, தன் பிள்ளைகளிள் வாழ்க்கையை வைத்து அரசியல் லாபம் பார்க்க நினைத்த கோதண்டத்திற்கு விவாகரத்து கொடுத்திருந்தார் யசோதா. மஹதியை அவரின் பணபலத்தை வைத்து மீட்டிருந்தார் ஜெகன். ஆனால் அவளால் ஆதித் கிருஷ்ணாவை மீண்டும் நெருங்க தான் முடியவில்லை.அதற்கு காரணமும் ஆரத்யா தான்.
ஆதித் ஆராவிடம் கொடுத்த பரிசில் அவள் கொடுத்த புத்தகம் இருந்தது. அந்த புத்தகத்தின் ஆசிரியர் அவளே தான். அவர்களுடைய காதலை காவியமாக எழுதி. கிருஷ்ணாரத்யா எனும் தலைப்பு சூடிய புத்தகத்தை அவள் ஏற்கனவே அவனுக்கு பரிசாய் கொடுத்திருந்தாள். அதை மீண்டும் ஆராவிடம் கொடுத்து அதை படிக்க செய்தான் ஆதித் கிருஷ்ணா. அதோடு மட்டுமில்லாமல் அவளுக்கு சரியான சிகிச்சையும் அளித்து அவளின் நினைவுகளை பத்திரமாக மீட்டிருந்தான் ஆராவின் காதலன்.
ஆராவின் நினைவுகள் திரும்பிய பின் மஹதியால் ஆதித் கிருஷ்ணாவை நெருங்கவே முடியவில்லை. ஆரா அவளை நெருங்கவும் விடவில்லை
ஆரா தன் கனவுகளை தொடர்வதை காட்டிலும் தன் மாய கிருஷ்ணனை காதலால் துரத்திக்கொண்டிருந்தாள், விக்கிக்கும் சுதாவுக்கும் திருமணம் ஆகி அவர்கள் பாண்டிச்சேரியில் செட்டில் ஆகிவிட்டார்கள். சுதாவிடம் எப்போதும் போல் அலைப்பேசியில் தொடர்பில் தான் இருந்தாள் ஆரா.
திருமணம் எனும் பந்தத்தில் ஆராவும், ஆதித் கிருஷ்ணாவும் இன்னும் இணையவில்லை, தன் தங்கை லாவண்யாவின் கழுத்தில் மாலை சூடிக்கொண்டிருந்த அஜயை பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான் ஆதித் கிருஷ்ணா. அண்ணனின் கடமையை செய்து முடித்துவிட்டேன் என்ற பூரிப்புடன் தன் அருகில் லெகங்கா அணிந்து முகத்தில் புன்னகை பூசி நின்றவளை தன் தோளோடு அணைத்துக்கொண்டவன்.
“தேங்க்யூ மை டியர் ஸ்மைலி.!” என்றான்.
“ஆமா எதுக்கு தேங்க்ஸ்??”
“அது லாவண்யா மேரேஜ் வரைக்கும் வெயிட் பண்ணலாம்ன்னு சொன்னீயே அதுக்கு” என விழிகள் கலங்கினான்.
“க்ரிஷ்.! ஹப்பி டியர்ஸா” என அவன் விழிகளில் தேங்கி நின்ற நீரை அவளின் கை குட்டை வைத்து துடைத்துவிட்டாள். பிரம்மாண்டமான அரங்கில் மங்கள இசை இசைந்து இருவரையும் நடப்பிற்கு கொண்டு வர புன்னகையுடன் கையில் வைத்திருந்த ரோஜா மலர்களை இருவரும் மணமக்கள் மீது தூவினர்.
தன் மகளின் திருமணத்தை தனி ஆளாய் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் யசோதா. சுதாவும் விக்கியும் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பித்தனர்.
யசோதாவின் காலில் விழுந்து ஆசீரவாதம் பெற்றுக்கொண்டனர் மணமக்கள். ஆதித் கிருஷ்ணாவை நெருங்கிய லாவண்யா.
“அண்ணா.! ஆசிர்வாதம் பண்ணு, அண்ணி நீங்களும் சேர்ந்து நில்லுங்க” என ஆராவையும் அழைத்தாள் லாவண்யா.
“உன்னை ஆசிர்வாதம் பண்ணுற அளவுக்கு நான் பெரிய மனுசி இல்லை லாவண்யா. எங்களோட ப்ளஸிங்க்ஸ் எப்போதும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கும்” என லாவண்யாவின் தலைக்கோதினாள் ஆரா.
“அஜய் எங்க வீட்டு பொண்ணை கண் கலங்காமல் பார்த்துக்கோங்க” என புன்னகையாய் சொன்னாள் ஆரா, அதை ஏற்கும் விதமாய் புன்னகைத்தான் அஜய்.
“அண்ணி எங்களுக்காக தானே இத்தனை வருடம் கல்யாணம் பண்ணிக்காமல் இருந்தீங்க.? இனியாவது மேரேஜ் பண்ணிக்கோங்க” என லாவண்யா கேட்க,
“கண்டிப்பா லாவண்யா. உங்க அண்ணா சம்மதித்தால் உடனே கல்யாணம் தான்” என்ற ஆரா தன்னவனை காதலுடன் நோக்கினாள், அதே காதலுடன் அவனும் தன்னவளை பார்த்தான்.
“இப்படியே பார்த்திட்டு இருந்தால் எப்போ கல்யாணம் பண்ணுறது ஆதித், என் மருமகளுக்கு வேற அஃப்டர் மேரேஜ் ட்ரீம்ஸ் இருக்கு அதை நாங்கள் சேர்ந்து எக்ஸ்ப்ளோர் பண்ண போறோம்” என இடையில் சொன்னார் யசோதா.
தாயின் முகத்தில் இருந்த் பூரிப்பும் சந்தோசமும் தந்தை இருந்த வரை அவன் பார்த்ததில்லை, இப்போது தான் சுதந்திரமாக இருப்பதாய் சொல்லும் தன் தாயை பார்த்து, தந்தையின் மீது கோபம் வர தான் செய்தது. தான் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்ற கோதண்டத்தின் பிடிவாத குணமே இருவரையும் பிரித்திருந்தது. இந்த வீட்டை தாண்டி சென்று வெளியுலகத்தின் காற்றை சுவாசிக்க மாட்டோமா என்ற யசோதாவின் ஏக்கம் ஆராவால் நிறைவேறியிருக்கிறது.
அவர் செல்ல வேண்டும் என நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்து சென்று விட்டாள் ஆரா. தங்களின் திருமணம் மிக எளிமையாக அரங்கேற வேண்டும் என்ற ஆராவின் ஆசைக்கும் பச்சைக்கொடி காட்டிவிட்டார் யசோதா.
“மாம்.! சீக்கிரமே பண்ணிடுறேன்” என்ற பதில் கொடுத்திருந்தான். அவர்களின் திருமண நாளிற்காக இருவரும் காத்திருக்க ஆரம்பித்தனர், செல்பேசி உரையாடல்களும், தித்திக்கும் சந்திப்புகளும் தொடர்ந்தது, இரவு நேர வேலை முடிந்து வருபவளை பிக்கப் செய்து வருவதே அவனின் தலையாய கடமையாகி போனது, கொஞ்சம் காஃபியுடன் கொஞ்சம் காதலும் நீடித்தது. கோபம், சண்டை அழுகை இதெல்லாம் கடந்து அவர்கள் காதல் மோலோங்கி நின்றது. அவளை தவறாக நினைத்து விட்டு சாலையில் குடித்து அலைந்த நாட்களை நினைத்து இருவரும் பேசி சிரித்துக்கொண்டனர். ஊடல் கலந்தது தானே காதல், ஊடல் இல்லையேல் காதல் மரித்துப்போகும் அல்லவா.? என்ன தான் காதல் செய்தாலும் அவளிடம் கண்ணியம் காக்கும் ஆண்மகனை ஆராவுக்கும் மிகவும் பிடித்து போனது. தினமும் சந்தித்தாலும் இந்த காதல் ஏனோ சலிக்கவில்லலை, ஒருவரையொருவர் அறிந்துக்கொள்ள முற்பட்டனர், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் முயற்சிகளை எடுத்தனர், ஒருவரை ஒருவர் படிக்க ஆரம்பித்தனர், அவர்கள் எதிர்நோக்கி கொண்டிருந்த நாளும் வந்தது.
இருவரும் கரம் கோர்த்து நின்றிருந்தனர் ஆகாயத்தை பார்த்தபடி, அவர்களின் மூன்று நாள் காத்திருப்பை வீணடிக்காமல் ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது, அதைக் கண்டவுடன் ஆராவின் முகம் மலர்ந்து தன்னவனை காதலுடன் நோக்கினாள். காணும் திசையாவும் காட்சி தரும் வானத்தின் மீது அவளுக்கு காதல்.! அதில் ஏற்படும் ஆச்சரியங்களின் பின்னே என்ன இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள ஆசைக்கொள்பவள் ஆரத்யா.
அதே போல் தான் ஆதித் கிருஷ்ணாவுக்கும்,வானத்தின் மீது காதல் கொண்டவன், அதன் மாற்றங்களை ரசிப்பவன், மழை அடித்தாலும் வெயில் அடித்தாலும் அந்த வானத்தை பார்ப்பதை தவிர்க்க மாட்டான், இருவரின் ஆசைக்கும் தீனி போடும் இடத்திற்கு தான் ஆராவை அழைத்து வந்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. எல்லாருக்கும் கனவுகள் இருக்கும் அதே போல் இவர்களின் ஆசைகளும் கனவுகளும், ஆசையை துரந்தால் புத்தனாகி விடலாம் என்பார்கள், ஆனால் அந்த ஆசையை அடைய நாம் மேற்கொள்ளும் விசயங்கள் நம்மை ஒரு நாள் உயர்த்தும்,இருவரின் ஆசையும் கனவுகளும் அவர்கள் கண் முன் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தது.
நார்வே நாட்டின் வட துருவத்தில் அமைந்திருக்கும் ட்ரொம்ஸா என்ற சிறிய நகரம், செப்டம்பர் மாத இறுதியில் அவளை அங்கு அழைத்து வந்திருந்தான் ஆதித் கிருஷ்ணா. அவர்கள் பயணம் செய்து வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது ஆனால் ஆரோரா (aurora) என்று அழைக்கப்படும் நார்தன் லைட்ஸை (northern lights) ஐ பார்க்கவே இருவரும் அங்கு வந்திருந்தனர் கண்ணாடி இக்ளுவினுள் (glass igloo) அமர்ந்தபடி இருவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதவன் மறைந்து விட்ட அந்த ரம்மியமான இருள் சூழ் இரவில் வான் நோக்கி அன்னாந்து பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. பச்சை, ஊதா, நீலம் என கண்ணை பறிக்கும் நிறங்களில் ஆரோரா ஒளிவிளக்குள் ஒளிர, ஆகாயம் வர்ணஜாலம் காட்டி சிரித்தது. மெல்ல இருள் விலக, ஆகாயத்தில் வண்ணப் பொடிகளை அள்ளி தூவினாற்ப் போல் வண்ண ஒளிக்கீற்றுகள் உருவாகின.
அந்த காட்சியை ஸ்தம்பித்தபடி இருவரும் பார்த்திருந்தனர் தங்களை மறந்து, வார்த்ததைகள் தடைப்பட்டு மௌனம் நீடித்தது. அதை கலைக்கும் வண்ணம்,
“ஸ்மைலி.!” ஆதித் கிருஷ்ணாவின் குரல் கேட்டு தன்னவன் புறம் திரும்பினாள் ஆரா.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் நார்தன் லைட்ஸ் மறைஞ்சிடும்” என்றான் வானத்தை பார்த்தபடி,
“சோ வாட்.?” என பிரமித்தபடி மீண்டும் ஆகாயத்தையே பார்த்திருந்தாள் ஆரா.
“வில் யூ மேரி மீ ஆரா.?” என்ற கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள் ஆரா. நார்தன் லைட்ஸ் பார்த்தபடி திருமணம் செய்ய வந்தவள் அதை மறந்து அந்த ஆரோரோ ஒளிக்கீற்றை பார்த்து மெய்மறந்து நின்றாள். அந்த நிகழ்வுக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் இருவருக்கும் தெரியும் இருந்தாலும் அதைக் காணும் போது இருவருக்குள்ளும் ஆச்சரியம் மேலோங்கியது, அவள் கரம் பற்றி மோதிரத்தை அணிவித்தவன்.
“லவ் யூ ஸ்மைலி.!” என முன்நெற்றியில் முத்தம் வைத்தவனை காதலுடன் பார்த்தவள் தன்னிடமிருந்த மோதிரத்தை அவன் விரலில் பூட்டியவள்.
“லவ் யூ டூ க்ரிஷ்.!” என சொன்னாள். ஓரிரு நிமிடங்கள் நீடித்த அந்த வண்ண விளக்குகளின் அரங்கேற்றம் மெல்ல கரைந்து காணாமல் போக மீண்டும் அமைதி சூழ்ந்துக்கொண்டது, இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என சொல்லி அவள் திரும்பிய போது, தன்னவனின் மூச்சு காற்று அவள் மேனியில் பட்டு உரச திகைத்து நின்றவளின் இதழ்களை சிறை செய்திருந்தான் ஆராவின் கிருஷ்ணன், கடும் குளிரில் தன்னவனிடம் தஞ்சம் புகுந்திருந்தாள் கிருஷ்ணனின் ஆரா.
வானமெங்கும் தூவி கிடந்த நட்சத்திரங்களின் சாட்சியாய் காதலை தாண்டி இரு மனங்களும் பயணிக்க துவங்கியது அந்த கண்ணாடி இக்ளுவினுள்.
** நிறைந்தது**
கதையுடன் தொடர்ந்து பயணித்த அன்பு வாசக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். 💖
இந்தக் கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துகள், நிறை-குறைகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் என்னை மேலும் சிறப்பாக எழுத ஊக்குவிக்கும்.
புதிய கதையுடன் விரைவில் உங்களைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் இப்போது விடைபெறுகிறேன்.
அன்புடன்,
மதிளா சுகி ✨

