Loading

அத்தியாயம்10

நிறைமதியும் செந்தூரனும் காதலில் திளைத்து, களித்து ஒருவாரம் கடந்துவிட்டது. காதல் அவர்களை சுவீகரித்துக் கொண்டதா? அல்லது காதலை அவர்கள் சுவீகரித்தார்களா? தெரியவில்லை. காதலுடன் அவர்கள் நினைவுகளும் வாழ்வும் இனிதே பயணித்தன. கோயிலில் சந்தித்ததற்குப்  பிறகு நேரில் இருவரும் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் தினமும் அவன் மதியம் ஒரு தடவையும் மாலையில் ஒரு தடவையும் தவறாமல் அவளுக்கு அழைப்பெடுத்து விடுவான். பேசுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும்.  அரைமணியைத் தாண்டிவிடும் அவர்கள் அழைப்பைத் துண்டிக்க. அவர்களிடம் காதல் பற்றிப் பிடித்து, ஆழ வேரூன்றி, கிளைகள் விட்டு மிகவும் உறுதியாக வளர்ந்து நின்றது.

செந்தூரன் அவளைச் சந்தித்து வந்த அன்றே தனது அத்தையிடம் நிறைமதி மேலான தனது காதலை உரைத்துவிட்டான். அவருக்கு அது அதிர்ச்சியாகவும் சந்தோசமாகவும் இருந்தது. திடீரென காதல் என்று சொன்னால் அதிராமல் என்னதான் செய்வார்.

முதலில் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னான். சம்பந்தக் கலப்பு முடிந்த பின்னர் அந்தக் கல்யாணமே வேண்டாம் என்றான். இதோ ஒரிரு நாட்களிலேயே காதல் என்று வந்து சொல்கிறான் என்றால் அதிர்ச்சியாகத்தானே இருக்கும். ஆனாலும் அந்த அதிர்ச்சி ஏற்பட்டது போலவே உடனேயே மறைந்தும் போய்விட்டது. அந்த இடத்தைச் சந்தோசம் ஆட்கொண்டது. எப்படியோ தன் பிள்ளைக்கு ஏற்ற துணையை அவனே தேர்ந்தெடுத்து, கட்டி சந்தோசமாக வாழ்ந்தால் அதைவிட மனதிற்கு நிறைவைத் தரும் விஷயம் வேறொன்றுமில்லை என்பதை உணர்ந்தார். தானே அவன் காதலைத் தனது அண்ணனிடமும் கூறிவிட்டார். அன்றிலிருந்து அவளை ஒருதடவை வீட்டிற்குக் கூட்டிவரச் சொல்லி நச்சரிக்கத் தொடங்கி விட்டார். அவனுக்குத் தான் அதற்கான சரியான நேரம் கிடைக்கவில்லை.

அன்று சனிக்கிழமை காலையிலிருந்தே எதைப்பற்றியும் சிந்திப்பதற்கும் ஓய்வெடுப்பதற்கும் நேரமின்றி மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள் நிறைமதி. ஒரு திருமண வரவேற்புக்கென மூன்றடுக்கில் மிகப் பெரிய கேக் ஒன்று செய்ய வேண்டியிருந்தது. மாலை ஐந்து மணிக்குள் அதனைச் செய்து கொடுக்க வேண்டும். முதல்நாளே கேக்கைத் தயார் செய்து வடிவங்களை வெட்டி வைத்திருந்தாள். காலையில் வந்ததிலிருந்து அதற்கான அலங்கார வேலைகளை சற்றும் அசராது செய்திருந்தாள். சிந்துவுடன் சேர்ந்து நேர்த்தியாகவும் மிக மிக அழகாகவும் அந்தக் கேக்கை மதியத்திற்குள் செய்து முடித்திருந்தாள். இன்னும் சொற்ப வேலைகள் மட்டுமே இருந்தன. அதுவும் அதே  வாடிக்கையாளருக்கு சில கப் கேக்குகளில் ஐசிங் ரோஜாப்பூக்களைச் செய்து கொடுக்க வேண்டிய வேலை மட்டுமே எஞ்சியிருந்தது. அது அவளுக்கு அரைமணியில் செய்து முடிக்கக்கூடிய வேலைதான்.

காலையிலிருந்து ஓய்வில்லாமல் வேலைசெய்ததால் புறங்கழுத்தில் சற்றே வலியை உணர்ந்து அதனைப் பிடித்து விட்டபடி நேரத்தைப் பார்த்தாள். மூன்று மணியாகியிருந்தது. அவளது வயிறும் கடாமுடா என்று கூக்குரல் இட்டது. அப்போதுதான் தான் இன்னும் மதிய உணவு உண்ணவில்லை என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றியது. எழுந்து கைகளைக் கழுவிவிட்டுத் தனது சாப்பாட்டுப் பையை எடுத்துப் பிறிதொரு மேசையில் வைத்துவிட்டு அமர்ந்தாள். அவள் வீட்டிலிருந்து வரும்போதே மதிய உணவைக் கட்டி வந்து விடுவாள். பாசமாய் அவளது அம்மா சமைத்துக் கொடுத்துவிடுவார் என்று எண்ணினால் அதுதான் மடத்தனம். ஒரு தேநீர் என்றாலும் அவளுக்குத் தேவையென்றால் அவளே போட்டுக் கொள்ள வேண்டும். அது கஷ்டமான வேலை இல்லைதான். ஆனால், இவள் எழுந்து குளித்துவிட்டு வந்து சரியாக சாமிக்கு விளக்கேற்றி வைக்கும் நேரத்தில் வீட்டில் இடித்து வைத்த கோப்பித்தூளில் மணக்க மணக்க பால்கோப்பி தயாரிப்பார் உமையாள். அதன் மணம் நாசியைத் தீண்ட உள்வாங்கியபடி வெளியில் வந்தால் பவித்திராவும் கவினயாவும் பல்லுக்கூடத் துலக்காமல் கோப்பி குடித்துக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு ஏன் குடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்கு மட்டுமாக அந்த வீட்டிற்கு வரும் அவளது தந்தை சங்கரன்கூட இரவில் ஏற்றிய போதையால் உண்டான தலைவலிக்கு சிறந்த மருந்தாக அந்த கோப்பியை எண்ணிக் கண்ணை மூடிக்கொண்டு, சிறிது சிறிதாக சத்தமாக உறிஞ்சிக் கொண்டிருப்பார்.

அதனை ஏக்கமாகப் பார்த்தபடி சமையலறைக்குள் சென்றால் கோப்பி ஊற்றிய பாத்திரங்கள்கூடக் கழுவி வைக்கப்பட்டிருக்கும். அது இன்று நேற்றல்ல.. அவள் கல்யாணத்துக்கு மறுப்புத் தெரிவித்த நாளிலிருந்து உமையாள் கடைப்பிடிக்கும் நடைமுறை.

அவள் தனக்கெனத் தேநீர் போட்டு வைத்துவிட்டு மதியத்திற்குத் தனக்குத் தேவையான உணவை மிகவும் எளிமையாகச் செய்து முடிப்பாள். காலை உணவு எப்போதும் அந்தத் தேநீர் மட்டுமே. அவள் வீட்டிலிருந்து புறப்படும் போதுதான் உமையாள் காலை உணவைத் தயாரிக்க ஆரம்பிப்பார். இரவிலும் வீட்டிலிருக்கும் நாட்களிலும் அவர் செய்யும் உணவில் ஏதோ உழைத்துத் தருகிறாளே என்ற கடமைக்காக சொற்பத்தை வைத்துவிடுவார். எப்போதும் அவராக சாப்பிட அழைக்கவும் மாட்டார். பசித்தால் போய் போட்டு சாப்பிட வேண்டியதுதான்.

அவள் அன்று மதியத்திற்கு தக்காளிச் சோறும் உருளைக்கிழங்குப் பிரட்டலும் செய்து கொண்டுவந்திருந்தாள். தனது உணவைப் பிரித்து வைத்துவிட்டு உண்பதற்காகக் கையில் எடுத்தவள், அப்போதும் கப் கேக்கிற்குத் தேவையான ஐசிங் கலவையைத் தயார் செய்து கொண்டிருந்த சிந்துவைப் பார்த்தாள்.

“சிந்து, நீ என்ன சாப்பிட்டாய்?” என்று கேட்டாள்.

“இல்லையக்கா.. கொஞ்ச முன்னர்தானே ஜுஸ் குடிச்சன். அப்புறமாய் சாப்பிடுறன்” என்றாள்.

நிறைமதிக்குத் தன் மீதே கோபம் ஏற்பட்டது. எப்போதும் பன்னிரண்டு அல்லது ஒரு மணிக்குள் என்ன வேலையென்றாலும் சிந்துவை சாப்பிடுமாறு பணித்துவிடுவாள். இன்று எப்படி மறந்தோம் என்று தனக்குத் தானே திட்டியவள்,

“அதை அப்படியே வச்சிட்டு எழும்பி வா சாப்பிடுவோம்” என்று சொன்னாள்.

“இல்லையக்கா, நான் பிறகு சாப்பிடுறன்” என்று சொல்லவும்தான் இவள் சாப்பாடு கொண்டு வரலையோ என்ற சந்தேகம் உண்டானது.

“இல்லை.. நீ சாப்பாட்டை எடுத்துவா” என்று கட்டளையாய் கூறினாள். 

“அக்கா…” என்று இழுத்தவள்,

“இன்று அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. அதால சமைக்கல” என்று தயக்கத்துடன் கூறினாள்.

“சரி எழும்பி வா. நான் நிறையத்தான் கட்டி வந்தனான்.” என்று கூறிவிட்டு சிந்துவின் தட்டையெடுத்து அதில் சாப்பாட்டை போட்டு வைத்தாள். சிந்துவும் மறுத்தால் அவள் திட்டுவாள் என்று பயந்து எழுந்து வந்து சாப்பிடத் தொடங்கினாள். இருவரும் அன்றைய வேலையைப்பற்றி பேசியபடி உண்டனர்.

திடீரென நிறைமதியின் மனதில் ஏதோ ஓர் வெறுமை உள்ளதைப் போன்ற எண்ணம் உண்டானது. ஏனென்று யோசித்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது அன்று மதியம் தன்னவன் அழைப்பெடுக்கவில்லை என்பது. வழமையாக எடுப்பவன் இன்று எடுக்கவில்லையே ஏன் என சிந்தித்தாள். ஒருவேளை தன்னைப் போல் அவனும் வேலைகளில் மும்முரமாக இருக்கானோ என்று எண்ணியபடி தனது அலைபேசியை எடுத்தாள். அதில் அவன் தனது புலனத்துக்கு அனுப்பியிருந்த அவனது புகைப்படங்களை சேமித்து வைத்திருந்தாள். அதில் ஒரு புகைப்படத்தில் அவனது சிரிப்பைப் பார்த்து ரசித்துக் கொண்டே உணவை உண்டாள். இடையில் உணவை எடுத்து வாய்க்குள் வைக்கச் சென்றவளின் கைகளை யாரோ திடீரென பற்றவும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவளது எண்ணத்தின் நாயகனோ அவள் கைகளில் இருந்த உணவைத் தன் வாயில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

எதிர்பாராத அவனது வருகை அவளுக்கு இனிமையான அதிர்வைக் கொடுத்தது. மனம் ஆனந்தக் கூத்தாடியது. அன்று கோயிலில் சந்தித்த பின்னர் இன்று வரை இருவரும் நேரில் சந்திக்கவில்லை. அவனுக்கு கடைகளில் அதிகளவு வேலைப்பளு இருந்ததால் எங்கும் நகர முடியாமல் இருந்தான்.

அவளுக்கும் அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதும் வாய் விட்டுக் கேட்க வெட்கி அப்படியே இருந்து விட்டாள்.

அவனுக்கு அன்று ஏனோ அவளைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசை உந்தவும் தான் செய்ய வேண்டிய வேலைகளை விரைந்து முடித்தான். மிகுதியை ரவிவர்மாவிடம் ஒப்படைத்து விட்டு நேரே நிறைமதியை பார்க்க வந்து விட்டான். மதியம் அழைப்பெடுக்காமல் ஒரு இன்ப அதிர்ச்சியை அவளுக்குக் கொடுக்க எண்ணியே நேரில் வந்து நின்றான்.

எதிரே சிந்து இருந்ததையும் பொருட்படுத்தாது தன் கையில் இருந்த உணவை அவனது வாய்க்குள் வாங்கிக் கொண்டதும் அல்லாமல் சற்றுத் தள்ளி இருந்த நாற்காலி ஒன்றை இழுத்து அவள் அருகில் போட்டு உட்கார்ந்ததையும் எண்ணி வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது. சிந்துவை நிமிர்ந்து பார்த்தாள். அவளோ எதுவும் பார்க்காதவள் போல் குனிந்து தனது சாப்பாட்டிலேயே கவனமாக இருந்தாள். 

“என்ன செய்றீங்க?” என்று எழும்பாத குரலில் கேட்டாள். அதற்கு “நான் என்ன செய்தேன்” என்று அடக்கிய சிரிப்பில் இதழ்கள் விரியக் கேட்டான். கண்களால் எதிரிலிருந்த சிந்துவைக் காட்டினாள். கண்களாலேயே தானும் அவளுக்கு பதிலைச் சொன்னான்.

சிந்து மிக வேகமாக சாப்பிட்டு முடித்ததும் எழுந்து கை கழுவி விட்டு “அக்கா நான் பக்கத்துக் கடையில் இருக்கிற ராகினியைப் போய் பார்த்துட்டு வாறேன். அவசரம் என்றால் கூப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டாள்.

“பார்த்தியா அவளுக்கு நான் வந்ததும் என்ன செய்யணும் என்று தெரிஞ்சிருக்கு. நல்ல பிள்ளை” என்று பாராட்டினான். 

“இப்படி எல்லாம் செய்யாதீங்க. அவள் எதிரே இருக்கிறாள். வந்து பக்கத்தில் இருக்கிறீங்க” என்றாள் வெட்கத்துடன். 

“பக்கத்தில் தானே இருந்தேன். கட்டிப் பிடிச்சு இப்படி கிஸ் பண்ணினேனா?” என்று கேட்டுக் கொண்டே அவளை இழுத்து அணைத்து கன்னத்தில் இதழ் பதித்தான்.

“ஸ்ஸ்.. விடுங்க” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள். இடக்கையால் அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளி விட்டாள்.

“ஏன்மா? நான் கிஸ் பண்ணினால் என்ன? இதற்குத் தானே அந்தப் பிள்ளையே எழும்பி வெளியில் போனது” என காதுக்குள் அவன் கிசுகிசுப்பாகச் சொல்லவும் அவள் மனம் அந்த இன்பத்தில் படபடத்தது. அவன் கள்ளச்சிரிப்பும் ஏதோ செய்யவும்,

“ப்ளீஸ்” என்று சொன்னவள்,

“ஏன் மதியம் ஹோல் பண்ணல?” என்று கேட்டாள். 

“எனக்கு இன்று ஏனோ உன்னைப் பார்க்கணும், உன் பக்கத்தில் இருக்கணும் மாதிரியே இருந்துச்சு. நேரில வந்துடுவோம் என்று ஹோல் பண்ணல” என்றான்.

அவளுக்கும் அந்த ஆசை இருந்ததே. ஆனால் அதை அவள் வாய் விட்டுச் சொல்லவில்லை. 

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே படார் என கதவைத் திறந்து விட்டு உள்ளே வந்தாள் பவித்ரா. வந்தவள் கண்கள் அவர்கள் இருவரையும் பார்த்து நன்றாகக் கணக்கெடுத்தது. நிறைமதிதான் பதறிப் போனாள். தடுமாற்றத்துடன் எழுந்து “என்ன பவி?” என்று கேட்டபடி அவள் அருகில் வந்தாள். ஆனால், செந்தூரனோ எந்தவித பதட்டமுமின்றி எதுவும் நடக்காதது போல் கால்மேல் கால்போட்டு அப்படியே நிமிர்ந்து அமர்ந்தான். அவனை ஒரு தடவை திரும்பிப் பார்த்துவிட்டு “அம்மா இண்டைக்கு உன்னை நேரத்துக்கே வீட்ட வரவாம்”

“ஏன்?”

“ஏனென்று சொன்னாத்தான் மகாராணி வருவிங்களோ?”

“இல்லை பவி… எனக்கு இந்த கேக் வேலை இன்னும் கொஞ்சம் இருக்கு. அதுக்குப் பிறகு அவங்க வந்து டெலிவரி எடுத்த பிறகுதான் வரலாம்” என்றாள் நிறைமதி.

ஒருமுறை செந்தூரனைத் திரும்பி ஏளனப் பார்வை ஒன்றை வீசிவிட்டு,

“உன் வேலையைப் பார்த்தாலே தெரியுது.. என்னவோ அம்மா உன்னட்ட ஹோல் பண்ணிச் சொல்லச் சொன்னாங்க. நான் யது வீட்ட வந்ததால நேரில சொல்லிட்டுப் போவம் என்று நினைச்சு வந்தன். நீ நேரத்துக்கு வந்தா உனக்கு நல்லம்” என்று சொல்லிவிட்டு அவனைத் திரும்பி முறைத்துப் பார்த்துவிட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டாள்.

நிறைமதி ஒருவித பயத்துடன் அப்படியே அசையாது நின்றுவிட்டாள். எழுந்து அவள் அருகில் வந்த செந்தூரன், அவள் தோள்களில் மென்மையாகத் தட்டி,

“ஏன் மதி ஒரு மாதிரி ஆகிவிட்டாய்?” என்று எதுவும் நடக்காதது போல் கேட்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“இது என் தங்கச்சி” என்றாள்.

“ம்ம்.. தங்கச்சிதானே, அதற்கு ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி நிக்கிறாய்?”

“எனக்கு பயமாய் இருக்கு”

“என்ன பயம்?” என்று புரியாமல் கேட்டான் அவன்.

“என்ன இப்படி கேக்குறிங்க. உங்கள் பக்கத்தில நான் இருந்ததும். அதுவும் நீங்க கையைப் பிடிச்சுப் பேசிக் கொண்டிருந்ததையும் அவள் பாத்து விட்டாள். எப்படியும் உடன வீட்ட போய்ச் சொல்லிடுவாள்” என்றவள் கண்கள் கலங்கின.

“அதுக்கு நீ ஏன்மா அழுகிறாய்?” என்று அவளை அணைத்து அவளது கண்ணீரை மென்மையாகத் துடைத்துவிட்டான்.

“வீட்டுக்குத் தெரிஞ்சா சும்மா விடுவாங்களா?”

“நான் உன்னுடன் சந்தோஷமாக கதைக்கத்தான் வந்தன். ஆனால் நீ இப்படி பயப்பட்டு அழுறாயே. இதுவரை நீ வீட்டில் எதுவும் சொல்லலையா? என்ன பயம் உனக்கு? உன் வீட்டுக்குத் தெரிந்தால் தான் என்ன? நம் இருவரைப் பொறுத்தவரையில் நாம் புருஷன் பொண்டாட்டிதான். என்ன நடந்தாலும் நான் உனக்கு இருக்கன்”

“எங்கள் வீட்டில் அம்மா இதை எப்படி எடுத்துக் கொள்வா என எனக்குத் தெரியல்லை. அதனால பயமா இருக்குது”

 “மதிம்மா.. நமக்கும் கொஞ்ச வயசில்ல. ரகசியமாய் கொஞ்சக் காலத்துக்குக் காதலிச்சிட்டு அப்புறமாய் கல்யாணம் கட்டுவோம் என்று இருக்க. உன் வீட்டுக்குத் தெரிஞ்சால்தான் நாம முடிவு எடுக்கலாம். யோசிக்காதடா” என்றவன்,

“ஓகே அதை விடு.. இப்போ எனக்கு பசிக்குது. வா சாப்பிடுவோம்” என்று அவளை சகஜமாக்க முனைந்தான். அவனும் அன்று வேலை அதிகமாக இருக்கவும் சாப்பிடவில்லை.

“என்ன நீங்க மதியம் சாப்பிடலையா? நான் இன்டைக்கு இது தானே கொண்டு வந்தேன்” என்று அதற்கும் கவலைப்பட்டாள்.

“நல்லாத்தான் இருக்கிறது. ஆமா இது யார் செய்தது?”

“நான்தான்”

“அதுதான் அவ்வளவு ருசியா இருக்குது’ என்றவன், அவளை அழைத்துச் சென்று அமர்த்திவிட்டு அவள் கையால் வாங்கி உண்டுவிட்டே ஓய்ந்தான்.

புறப்படும்போது நினைவு வந்தவனாக

“மதிம்மா.. நான் நம்ம வீட்டில சொல்லிட்டன். என் அத்தை உன்னை வீட்ட கூட்டி வரச் சொன்னாங்க” என்றான்.

“நான் எப்படி உங்க வீட்ட வாறது?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“அது உன் வீடு செல்லம். நீ வராம வேற யார் வாறதாம். நாளைக்கு சன்டேதானே. கடை பூட்டல்லோ? அப்போ நாளை காலையே ரெடியாகி வாறாய். அத்தைட்ட சொல்லிடுறன்” என்றுவிட்டு

“ஓகே மதிம்மா நான் வாறன். கடைக்குப் போகணும்.. லேட்டா ஹோல் பண்ணுறன்” என்றுவிட்டு அவள் கன்னத்திலும் நெற்றியிலும் முத்தங்களைப் பதித்து விட்டுப் புறப்பட்டான்.

இன்று மாலையே அவள் வாழ்வில் புயல் வீசப் போவதை அறியாமல் அவன் ஆனந்தத்துடன் விசிலடித்தபடிச் சென்றான். அவளும் அவன் பதித்துச் சென்ற முத்தத்தால் கன்னம் சிவக்க வெட்கப் புன்னகையைச் சிந்தியபடி தன் வேலையைத் தொடரச் சென்றாள்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. இந்த பவி வீட்டுல போயிட்டு என்ன புகம்பத்தை கிளப்பி விடப் போறாளோ