Loading

மறுநாள் அதிகாலையிலேயே விழிப்புத் தட்டிய ஷனாயாவிற்கு உடல் அடித்துப் போட்டது போல் வலித்தது.

 

கண்களை மெதுவாகக் கசக்கியவாறே சுற்றும் முற்றும் நோக்க, முன்தினம் இரவு அவள் பால்கனியிலேயே தூங்கி விட்டதை உணர்ந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

 

சோம்பல் முறித்தவாறே எழ முயன்ற ஷனாயா அப்போது தான் அவளைப் போர்த்தியிருந்த போர்வையைக் கவனித்தாள்.

 

‘யார் போர்த்தி விட்டு இருப்பாங்க?’ என யோசித்த ஷனாயாவின் கண் முன் ரிஷப்பின் முகம் வந்து போக, இட வலமாக தலையை அசைத்தவள், “ச்சே ச்சே… அந்த சிடுமூஞ்சியா இருக்காது. அவனாவது எனக்கு நல்லது நினைக்கிறதாவது. யாருக்கு வேணும் அவன் உதவி? வேணியா தான் இருப்பா. இந்த வீட்டுலயே அவ மட்டும் தான் கொஞ்சம் நல்லவளா இருக்கா.” எனத் தன் பாட்டில் பேசிக்கொண்டே எழுந்தவள் போர்வையை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைய, அதே சமயம் கொட்டாவி விட்டபடியே அறைக்குள் நுழைந்தான் ரிஷப்.

 

இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொள்ள, இரு சோடி விழிகளும் அனலைக் கக்கத் தயாராகின.

 

ஆனால் அறைக்கு வெளியே கேட்ட மோகனின் குரலில் தன்னிலை அடைந்த ரிஷப் போர்வையையும் தலையணையையும் கட்டிலில் வீசி விட்டு அவசரமாக குளியலறைக்குள் நுழைந்துகொள்ள, பல்லைக் கடித்தவாறு அவனை அவனை மனதில் அர்ச்சித்தாள் ஷனாயா.

 

பால்கனியில் நின்று கீழே பார்க்கில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஷனாயாவின் கைப்பேசி ஒலி எழுப்பவும் அதனை எடுத்து யார் என்று பார்க்க, வினிதா அழைத்திருந்தாள்.

 

“சனா… ஆர் யூ ஓக்கே?” என்று தான் எடுத்ததும் கேட்டாள் வினிதா.

 

“ஹ்ம்ம்… இந்த கேள்வியே அபாண்டமா தெரியலயா வினி? சொல்லு. என்ன விஷயமா கால் பண்ண?” எனக் கேட்டாள் ஷனாயா.

 

வினிதா, “அது… நம்ம காலேஜ் கேங் ஃப்ரெண்ட்ஸ் உன் வெடிங் அட்டன்ட் பண்ண முடியாம போயிடுச்சுன்னு உன்ன இன்னைக்கு மீட் பண்ணணும்னு சொல்றாங்க. ட்ரீட் வேணும்னு…” எனத் தயக்கமாகக் கூற, “ஆமா… இது ஒரு வெடிங். இதுக்கு ட்ரீட் ஒன்னு தான் குறைச்சல். என்னைப் பொறுத்தவரைக்கும் கட்டாயத்துல என் கழுத்துல ஏறின தூக்குக் கயிறு இது.” என்றாள் ஷனாயா கடுப்பாக.

 

“சனா… உனக்கும் கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்ல.” என வினிதா கூறிக் கொண்டிருக்கும் போது ஷனாயா மறுத்துப் பேச வாய் திறக்க, அதற்குள் குளித்து உடை மாற்றி வந்த ரிஷப்பைக் கண்ட ஷனாயா அவனின் முதுகை வெறித்தவாறு, “அதுவும் சரி தான். தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல் தான். இந்த நரகத்துக்குள்ள அடைஞ்சி கிடக்குறதுக்கு அது எவ்வளவோ பெட்டர். நான் வரேன்னு சொல்லு.” என்றாள்.

 

ஷனாயாவின் பேச்சில் மனம் வலித்தாலும் ஒரு தோழியாக அவளின் மனதை நன்றாக அறிந்த வினிதா, “ஓக்கே சனா. நான் உனக்கு அட்ரஸ் அனுப்புறேன். நீ வந்துடு. அப்புறம் பார்க்கலாம். பாய்.” என அழைப்பைத் துண்டித்தாள்.

 

ரிஷப் ஆஃபீஸ் செல்லத் தயாராகி தன் கப்போர்டைத் திறந்து ஏதோ தேடிக் கொண்டிருக்க, அறைக்குள் நுழைந்த ஷனாயா அவனை ஒரு ஆளாகக் கூட மதிக்காது அப்படி ஒருவன் அங்கே இல்லை என்பது போல் தன் சூட்கேஸில் இருந்து ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழையப் பார்க்க, “ஏய்…” என அவளை நிறுத்தினான் ரிஷப்.

 

ரிஷப்பின் குரலில் ஒரு நொடி தன் நடையை நிறுத்திய ஷனாயா மறு நொடியே மீண்டும் குளியலறையை நோக்கி நடக்க, “ஏய் உன்ன தான் டி.” என்றான் ரிஷப் கடுப்பாக.

 

கோபமாக ரிஷப்பை நோக்கி வந்த ஷனாயா அவனின் முகத்தின் முன் விரல் நீட்டி, “என்ன ஏய்? நான் என்ன நீ வெச்ச வேலைக்காரியா? இல்ல உன்னோட அடிமையா? இந்த ஏய்னு பேசுறது, டி போடுறது எதுவும் என் கிட்ட வேணாம். நீ டி போட்டு பேசுறத கேட்டுட்டு சும்மா இருக்க நான் ஒன்னும் உன் பொண்டாட்டி கிடையாது.” என்றவள் தன் கழுத்தில் தொங்கிய தாலியை அவன் முன் நீட்டி, “இது வெறும் ஒரு மஞ்சள் கயிறு தான். இதை என் கழுத்துல கட்டிட்டேன்னு என் கிட்ட உரிமை எடுக்கலாம்னு நினைச்சா நடக்கிறதே வேற. முதல்ல மரியாதை முக்கியம்.” என்றாள் கோபமாக.

 

ஷனாயாவின் பேச்சில் இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் நின்றிருந்த ரிஷப் தன்னிலை அடைந்து தன் முகத்தின் முன் நீட்டியிருந்த ஷனாயாவின் கரத்தை பட்டெனத் தட்டி விட்டான்.

 

இப்போது அதிர்வது ஷனாயாவின் முறை ஆயிற்று.

 

“என்ன விட்டா ஓவரா தான் பேசிட்டு போற? நானும் பார்க்குறேன் பெரிய இவ ப

மாதிரி பேசுற. இவ பெரிய உலக அழகி. நாம அப்படியே இவ கிட்ட மயங்கி இவ மேல உரிமை எடுத்துக்குறோமாம். உன்னை எல்லாம் நான் மனுஷியா கூட மதிக்கல. ஒருவேளை நான் அப்படி எல்லாம் நடந்துக்கணும்னு உனக்கு தான் ஆசை இருக்கு போல.” என்றான் ரிஷப் நக்கலாக.

 

“யூ ப்ளேடி…” என மீண்டும் கோபமாக விரல் நீட்டி ஏதோ சொல்ல வந்த ஷனாயாவின் கரத்தை இம்முறை ரிஷப் சற்று ஆவேசமாகவே தட்டி விட, நிலை தடுமாறி கீழே விழப் போன ஷனாயா ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு ரிஷப்பை ஏகத்துக்கும் முறைத்தாள்.

 

“சொல்லிட்டே இருக்கேன் திரும்ப திரும்ப என் முன்னாடி கை நீட்டி பேசுற. கிவ் ரெஸ்பெக்ட் அன்ட் டேக் ரெஸ்பெக்ட். இங்க பாரு. நான் ஒன்னும் உன்ன பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கல. உண்மைய சொல்லனும்னா நான் இப்போ கையாளாகத்தனத்தோட நிற்க காரணமே நீ தான். நீ மட்டும் அன்னைக்கு என் பேச்சைக் கேட்டிருந்தா இவ்வளவும் நடந்து இருக்காது. எல்லாம் விடு. இதை நல்லா மண்டைல ஏத்திக்கோ. நீ சொன்னது போல இந்த மஞ்சள் கயிறை உன் கழுத்துல கட்டிட்டேன்னு எனக்கும் உனக்கும் நடுவுல எந்த விதமான சம்பந்தமும் இல்ல. என்னைப் பொறுத்தவரை ரோட்டுல போறவனும் நீயும் ஒன்னு தான். சரி… சொல்ல வந்ததை சொல்லிடுறேன். இது என்னோட ரூம். நேத்து வந்த உனக்கு என் சம்பந்தப்பட்ட எதுவுமே சொந்தம் கிடையாது. நான் உட்பட. என் அப்பா, அம்மா இருக்குற கொஞ்சம் நாளைக்கு மட்டும் நீ இந்த ரூம யூஸ் பண்ணிக்கலாம். பட் என்னோட திங்ஸ் எதையும் என் அனுமதி இல்லாம நீ தொட கூடாது. அப்பாவும் அம்மாவும் கிளம்பினதும் நீ வேற ரூமுக்கு ஷிஃப்ட் ஆகிக்கலாம். அதுவரைக்கும் இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடு.” என்ற ரிஷப் ஷனாயாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து வெளியேறினான். 

 

ஆத்திரத்தில் பல்லைக் கடித்த ஷனாயா, “ஆமா… பெரிய பொக்கிஷம் இவரோட திங்ஸ். நாங்க எடுத்துடுவோமாம்.” எனக் கிண்டலாகக் கூறி விட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த ரிஷப்பின் புகைப்படத்தைக் கையில் எடுத்த ஷனாயா ரிஷப்பின் மீதிருந்த கோபத்தில் அதனைத் தூக்கி கீழே போட முயன்றாள்.

 

பின் தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அதனை இருந்த இடத்திலேயே வைத்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

ரிஷப் அறையை விட்டு வெளியே வரும் நேரம் அவனின் பெற்றோர் அவனின் முகத்தையே நோக்கிக் கொண்டிருக்க, அதனைக் கண்டுகொள்ளாமல் வேலைக்குக் கிளம்பத் தயாரானான் ரிஷப்.

 

“ரிஷப்… எங்க போய்ட்டு இருக்க?” எனக் கேட்டார் மோகன் அழுத்தமாக.

 

“பார்த்தா தெரியலயா? ஆஃபீஸ் போக போறேன்.” என்றான் ரிஷப் அவரின் முகம் பார்க்காது.

 

“நேத்து தான் கல்யாணம் ஆச்சு. ஒரு வாரமாச்சும் லீவ் போட்டுட்டு வீட்டுல இருக்காம அதுக்குள்ள ஆஃபீஸ்னு ஓடுற.” எனக் கடிந்து கொண்டார் மோகன்.

 

பல்லைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திய ரிஷப் மோகனின் புறம் திரும்பி, “வீட்டுல இருந்து மட்டும் என்ன பண்ண போறேன் நான்? வெட்டியா வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்குறதுக்கு எனக்கு வேற வேலை இல்லையா? ஏதோ ஆசைப்பட்டு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஒரு வாரம் லீவ் போட.” என்றவன் பிற்பாதியை வாய்க்குள் முணுமுணுத்தான்.

 

மோகன் கோபமாக ஏதோ கூற வாய் திறக்க, அதற்குள் இடையிட்ட மேகலா, “ரிஷப் கண்ணா. அதான் அப்பா சொல்றார்ல. ஒரு ரெண்டு மூணு நாளாச்சும் லீவ் போடுப்பா. சனாவுக்கு வேற புது இடம் இது. அவள எங்கேயாவது வெளிய கூட்டிட்டு போய் வாப்பா.” என்றார்.

 

அதே நேரம் ஷனாயாவும் தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வெளியே வர, மேகலாவுக்கு தலையில் அடித்துக்கொள்ளலாம் போல் இருந்தது.

 

ரிஷப்பை ஏதாவது கூறி வழிக்குக் கொண்டு வரலாம் என்று பார்த்தால் ரிஷப்பின் மனையாளோ அவனுக்கு மேல் இருந்தாள்.

 

நேராக ஹாலுக்கு வந்தவள், “நான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்ண வெளிய கிளம்புறேன். வர கொஞ்சம் லேட் ஆகும்.” எனத் தகவல் கூறிய ஷனாயா யாரின் பதிலுக்கும் காத்திராமல் அங்கிருந்து வெளியேறினாள்.

 

அதே நேரம் வாசலில் நின்றிருந்த ரிஷப்பையும் முறைக்க தவறவில்லை.

 

ரிஷப்பும் பதிலுக்கு ஷனாயாவை முறைத்து வைக்க, மேகலா தயக்கமாக கணவனின் முகத்தை ஏறிட்டாள்.

 

மோகனின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

பெற்றோரை நக்கலாக ஏறிட்ட ரிஷப், “கட்டாயப்படுத்தி தாலி வேணா கட்ட வைக்கலாம். ஆனா வாழ வைக்க முடியாது.” என அழுத்தமாகக் கூறி விட்டு அவசரமாக வெளியேறினான்.

 

_______________________________________________

 

“எங்க வினி சனாவ இன்னும் காணோம்?”  எனக் கேட்டாள் ஷனாயாவின் கல்லூரித் தோழி மாலதி.

 

“அது தாண்டி நானும் பார்க்குறேன். வரேன்னு தான் சொன்னா. வெய்ட் பண்ணு. வந்துடுவா.” என்ற வினிதா அக் கஃபேயின் வாயிலிலேயே பார்வையைப் பதித்தாள்.

 

வினிதாவுடன் சேர்த்து ஷனாயாவின் கல்லூரித் தோழிகள் மூவர் அங்கு ஒன்று கூடி இருந்தனர்.

 

“வினி… ஆர் யூ ஷியூர்? அவளுக்கு வேற இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. அவளோட பாஸ்ட் தெரிஞ்சும் நாம அவள கட்டாயப்படுத்தி இருக்கக் கூடாது தான். பட் அவளுக்கும் கொஞ்சம் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயா இருக்கட்டும்னு தான் டி இந்த ஏற்பாடு. அது போக எங்களுக்கு அஷ்வின் பத்தி தெரியும்னு அவளுக்கு தெரியாதுல.” என்றாள் யாழினி.

 

வினிதா, “ஐ நோ யாழ். எனக்கும் அது தான் வேணும். அந்த தருண் மட்டும் உங்க கிட்ட அஷ்வின், சனா பத்தி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி நீங்களும் உண்மை தெரியாம எங்க சனாவ தப்பா நினைச்சிடுவீங்களோன்னு தான் உங்க கிட்ட அஷ்வின பத்தி நான் சொன்னேன். இந்த விஷயம் யாருக்கு தெரியுறது சனாவுக்கு பிடிக்கல. பட் இது மூலமா அவளுக்கு கொஞ்சம் சேன்ஜா இருக்குமேன்னு தான் எல்லா உண்மையையும் நானே சொன்னேன். அதனால தான் அவளோட மனநிலை தெரிஞ்சும் நான் இந்தப் ப்ளேனுக்கு ஓக்கே சொன்னேன். நீங்க ட்ரீட் கேட்டீங்கன்னு தான் அவள வர சொல்லி இருக்கேன். வருவான்னு நினைக்கிறேன். பார்க்கலாம்.” என்றவாறு கஃபேயை சுற்றி கண்களால் அலசியவளின் பார்வை ஓரிடத்தில் நிலைக்க, கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

“ஹேய் யாழ்… அது உன்னோட பாய் ஃப்ரெண்ட் கௌதம் தானே.” என வினிதா கை காட்டிய திசையில் பார்த்த‌ யாழினியின் கண்களும் குழப்பத்தில் சுருங்கின.

 

“ஆமா வினி. கௌதம் தான். யாரோ க்ளயன்ட்ட மீட் பண்ண அவங்க பாஸ் கூட போறதா சொன்னான். இங்க வருவான்னு தெரியாது. கௌதம் கூட இருக்குறது…” என யாழினி கூறும் போதே, “சனாவோட ஹஸ்பன்ட் ரிஷப்.” என முடித்து வைத்தாள் வினிதா.

 

அதே நேரம் ஷனாயாவும் கைப்பேசியில் பார்வையைப் பதித்தவாறு கஃபேயினுள் நுழைய, அங்கிருந்த ரிஷப்பைக் கவனிக்கவில்லை அவள்.

 

அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் வினிதா.

 

“சாரி வினி. லேட் ஆகிடுச்சு. ஹாய் காய்ஸ்…” என்றவாறு வந்தமர்ந்தாள் ஷனாயா வரவழைக்கப்பட்ட புன்னகையுடன்.

 

அதனை அவளின் தோழிகள் மூவரும் உணர்ந்தனர்.

 

“சாரி டி சனா. எங்களால உன் மேரேஜுக்கு வர முடியல. நான் என் ஹஸ்பன்ட் கூட அவரோட நேட்டிவ் போயிருந்தேன். யாழ் வேற உடம்பு சரி இல்லாம இருந்தா.” என மாலதியே பேச்சை ஆரம்பிக்க, ஆமோதிப்பாகத் தலையசைத்தாள் யாழினி.

 

பதிலுக்கு புன்னகைத்த ஷனாயா, “இட்ஸ் ஓக்கே டி.” என்பதோடு முடித்துக் கொண்டாள்.

 

அது ஏனோ ஷனாயாவுக்கு யாரிடமும் தன் மனதில் உள்ள கவலையைக் காட்டிக் கொள்ள விருப்பம் இல்லை. எதையுமே மனதிலே போட்டு பூட்டிக் கொள்வாள். வினிதா மட்டுமே அதற்கு விதிவிலக்கு.

 

பின் ஒரு சில வகை சிற்றுண்டிகளை ஆர்டர் செய்து விட்டு தோழிகள் மூவரும் பழைய கதைகள் பேசிக் கொண்டிருக்க, ஷனாயா மாத்திரம் வேறு ஓர் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.

 

“சனா… சனா…” என ஷனாயாவின் தோளைப் பற்றி மாலதி உலுக்கவும் தன்னிலை அடைந்த ஷனாயா, “எ…என்ன? என்ன கேட்டீங்க?” எனக் கேட்டாள் அவசரமாக.

 

ஷனாயாவின் மனம் ஒரு நிலையில் இல்லை என்பதைப் புரிந்துகொண்ட வினிதா ஷனாயாவை நெருங்கி, “சனா..‌ உன்னால முடியலன்னா நீ வீட்டுக்கு போ… நான் சமாளிச்சுக்குறேன்.” என்றாள் மெதுவாக.

 

மறுப்பாக தலையசைத்த ஷனாயா முயன்று தோழிகளுடன் தன்னை ஐக்கியம் ஆக்கிக் கொண்டாள்.

 

யாழினி வேண்டும் என்றே ரிஷப்பைப் பற்றிக் கேட்க, ஷனாயாவின் முகம் மாறியது.

 

இருந்தும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவளால் அதற்கு மேலும் சமாளிக்க முடியவில்லை.

 

சட்டென இருக்கையை விட்டு எழுந்த ஷனாயா, “நா…நான்… நான்… கிளம்புறேன். சாரி…” என்றவள் யாரின் பதிலுக்கும் காத்திராமல் அவசரமாக அங்கிருந்து கிளம்ப, அவளின் தோழிகளுக்கு தான் சங்கடமாக இருந்தது.

 

“வினி… சனாவ சரி பண்றேன்னு நாம அவள இன்னும் ஹர்ட் பண்ணிட்டோமா?’ எனக் கேட்டாள் மாலதி தயக்கமாக.

 

“ச்சே ச்சே… அப்படில்லாம் இல்ல மாலதி. அவளுக்கு உடனே எல்லாத்தையும் விட்டு வெளிய வர முடியல. அவளோட பாஸ்ட்ல இருந்து அவள் வெளிய வர முன்னாடியே கட்டாயக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. அதனால தான் அவளால எதையும் அக்சப்ட் பண்ணிக்க முடியல. விடுங்க. நாம தான் அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும்.” என்ற வினிதா, “சரி டி. நானும் கிளம்புறேன். என் ஹஸ்பன்ட் கிட்ட பையன விட்டுட்டு வந்தேன். ரொம்ப நேரம் ஆகிடுச்சு. இந் நேரத்துக்கு அவன் என்னை தேடுறானா இருக்கும். பாய் கேர்ள்ஸ்.” என விடை பெற்றாள்.

 

மாலதியும் கிளம்பி விட, யாழினிக்கோ தன் தோழியை அவ்வாறே விட மனமில்லாமல் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என முடிவெடுத்தாள்.

 

அதே நேரம் அங்கு இன்னொரு மேசையில் அமர்ந்திருந்த ரிஷப் சில நிமிடங்களுக்கு முன் வெளிறிய முகத்துடன் கஃபேயில் இருந்து வெளியேறிய ஷனாயாவைப் பற்றித் தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

ஷனாயா வரும் போதே அவளைக் கவனித்து விட்டான் ரிஷப்.

 

ஷனாயாவை அங்கு எதிர்ப்பார்க்காதவன் முதலில் எரிச்சல் அடைந்து, பின் அவள் தன் தோழிகளை சந்திக்க வந்திருப்பதை அறிந்ததும் தான் அவனது எரிச்சல் மட்டுப்பட்டது.

 

அதன் பின் அவளைக் கண்டு கொள்ளாத ரிஷப் சற்று நேரத்திலேயே முகமெல்லாம் மாறி, வெளிறி ஒரு வித பதட்டத்துடன் வெளிறிய ஷனாயாவைக் கண்டு குழப்பம் அடைந்தான்.

 

அவளுக்கு ஏதாவது பிரச்சினையா என் யோசித்தவனுக்கு சில நொடிகளின் பின்னர் தான் அவன் ஷனாயாவைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பது உரைத்தது.

 

‘ப்ச்… அவள் எப்படி போனா எனக்கென்ன வந்தது?’ என நினைத்தவன் அத்துடன் ஷனாயா பற்றிய யோசனையைக் கை விட்டான்.

 

சற்று நேரத்தில் அவன் சந்திக்க வந்த க்ளையன்ட்டும் கிளம்பி விட, ரிஷப்பும் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினான்.

 

ரிஷப்புடன் வந்திருந்த அவனின் பீ.ஏ கௌதமும் கிளம்பத் தயாராக, அவனருகில் வந்து நின்ற யாழினியை அவன் அங்கு சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

 

“ஹேய் யாழ்… நீ இங்க என்ன பண்ணுற?” எனக் கேட்டான் கௌதம் ஆச்சர்யமாக.

 

“அதான் என் ஃப்ரெண்ட்ஸ மீட் பண்ண போறதா சொல்லி இருந்தேனே கௌதம். இப்போ தான் எல்லாரும் கிளம்பினாங்க. சரி அதை விடு. இப்போ உன் கூட இருந்தவர் ரிஷப் தானே.” எனக் கேட்டாள் யாழினி.

 

அவளைக் குழப்பமாக ஏறிட்ட கௌதம், “ஆமா… என்னோட பாஸ் அவரு. உனக்கு எப்படி அவரைத் தெரியும்?” எனக் கேட்டவன் யாழினி அதற்குப் பதிலளிக்கும் முன்னே, “பாவம். ரொம்ப நல்ல மனுஷன். ஒரு பொண்ண ரொம்ப டீப்பா லவ் பண்ணாரு. ஆனா என்ன நடந்துச்சுன்னே தெரியல. சடன்னா அவங்க வீட்டுல அவருக்கு வேற பொண்ணு கூட கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. இப்போ ஒரு ஆறு மாசமாவே முன்னாடி போல ஜாலியா இல்லாம நடை பிணமா சுத்திட்டு இருக்கார்.” என்றான் வருத்தமாக.

 

“என்ன அவருக்கும் லவ் ஃபெயிலியரா?” எனக் கேட்டாள் யாழினி அதிர்ச்சியாக.

 

“அவருக்குமான்னா என்ன அர்த்தம்? வேற யாருக்கு லவ் ஃபெயிலியர்?” எனக் கேட்டான் கௌதம் குழப்பமாக.

 

அதில் தன் அதிர்ச்சியை விட்டு மீண்ட யாழினி, “அதெல்லாம் நான் அப்புறம் சொல்றேன். உன்னால எனக்கு ஒரு காரியம் ஆகணும்.” எனப் புதிர் போட்டாள்.

 

_______________________________________________

 

கஃபேயில் இருந்து வெளியே வந்த ஷனாயா தன்னை மறந்து ரிஷப்பின் வீட்டுக்கு செல்லாது அவளது பிறந்த வீடு இருந்த பக்கம் ஸ்கூட்டியை செலுத்தி இருந்தாள்.

 

அவளின் வீட்டை நெருங்கும் போது தான் தன்னிலை மீண்டாள் ஷனாயா. 

 

ஏனோ பெற்றோரை சந்திக்க மனமின்றி மீண்டும் ஸ்கூட்டியைத் திருப்பியவள் அவளின் வீட்டில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்த பேரூந்து தரிப்பிடத்தில் தன் ஸ்கூட்டியின் வேகத்தைக் குறைத்தாள்.

 

கலவையான நினைவுகள் நெஞ்சைத் தாக்க, ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்திய ஷனாயாவின் கண்கள் அப் பேரூந்துத் தரிப்பிடத்தில் நின்றிருந்த கல்லூரிப் பெண்களைக் கண்டதும் அவளையும் அறியாமல் கலங்கின.

 

அஷ்வின் முதல் முறை ஷனாயாவிடம் காதலைக் கூறியது முதல் பேரூந்தில் அவளுடன் பயணித்தல், அவர்களின் மௌன பாஷைகள், விழிகள் பேசும் மொழிகள் என ஒவ்வொன்றாய் நினைவு வந்து ஷனாயாவின் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.

 

ஸ்கூட்டியை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அங்கு வந்த பேரூந்தில் ஏறிய ஷனாயா எப்போதும் போல ஜன்னல் இருக்கை ஒன்றில் அமர்ந்துகொள்ள, அவளின் பார்வையோ பேரூந்தில் ஏறிய பயணிகளையே தவிப்புடன் நோக்கின.

 

ஒரேயொரு முறை தன்னவன் தன் பார்வையில் பட்டுவிட மாட்டானா என்ற ஏக்கத்தை தாங்கி இருந்தன ஷனாயாவின் விழிகள்.

 

ஆனால் ஷனாயாவின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கி பேரூந்து கிளம்பவும் விழிகளை மூடி ஜன்னலில் தலை சாய்த்தாள்.

 

இமை மூடிக் கிடந்தவளின் விழிகள் கண்ணீரை சிந்த, மனமெங்கும் அஷ்வினின் நினைவு தான்.

 

‘ஷனு… ஷனு…’ என் அஷ்வின் காதலுடன் அழைக்கும் குரல் ஷனாயாவின் செவிகளில் கேட்டுக் கொண்டு இருந்தது.

 

சில நிமிடங்கள் கழித்து ஷனாயா இருந்த இருக்கைக்குப் பின்னே யாரோ வந்து அமர்வதை உணர்ந்தவளுக்கு இமைகளைப் பிரித்து மீண்டும் ஒரு ஏமாற்றத்தை சந்திக்க மனம் விரும்பவில்லை.

 

ஷனாயா விழிகளை மூடி அஷ்வினுடன் இருந்த நிமிங்களை மனக் கண்ணில் கொண்டு வந்து மகிழ, யாரோ அவளின் தோள் தொட்ட உணர்வு.

 

பட்டென விழிகளைத் திறந்த ஷனாயாவின் இதழ்கள் புன்னகையில் மலர, கண்கள் ஆனந்தக் கண்ணீரை சிந்தின.

 

“அஷ்வின்…” எனத் தவிப்புடன் ஷனாயா திரும்பிப் பார்க்க, அவளுக்கு பின் இருந்த இருக்கையில் முகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்த அஷ்வின் ஷனாயாவைப் பார்த்து ஒற்றைக் கண்ணடிக்க, அவளுக்கோ வார்த்தைகளுக்கே பஞ்சமாகிப் போனது.

 

எப்போதும் போல பின் இருந்தவாறே ஷனாயாவின் இருக்கையில் கரங்களை ஊன்றி தலையை சா

ய்த்து ஷனாயாவையே விழி எடுக்காமல் நோக்கினான் அஷ்வின்.

 

“அஷ்வின்…” எனக் கண்ணீருடன் அஷ்வினின் முகத்தை வருடிய ஷனாயாவுக்கு இத்தனை நாட்கள் மனதில் இருந்த வலிகள் எல்லாம் எங்கோ பறந்தன.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்