Loading

அத்தியாயம் – 22

ராகவை, மணி அடித்ததும், ராகவ் பதிலுக்குச் சீறுவான். அதனால் அவர்களது சண்டை இன்னும் வலுப்படுமோ என்று பயந்த மூவரும் அச்சத்துடன் அவர்களையே பார்த்திருக்க, அவர்களை ஏமாற்றும் விதமாக ராகவ்.,

“சாரி மணி.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்.. ப்ளீஸ் சாரிடி..” என்று அவளது கையைப் பிடித்து அவன் கேட்க, அவளோ.. அவன் பற்றிய கரத்தை மெதுவாக விலக்கிவிட்டு.. “தர்ஷாவை வேலையைவிட்டுத் தூக்கிட்டியா என்றாள் நிதானமாக!

அதற்கு ராகவோ சந்தோஷமான முகத்துடன்.. “ஹா.. ஹா.. வேலையை விட்டுத் தூக்கறதா? நான் அவளைப் போலிஸ்லயே பிடிச்சுக் கொடுத்துட்டேன்..” என்றான் குரலில் உற்சாகம் கொப்பளிக்க.

அதைக் கேட்டுச் சற்று அதிர்ந்த மணியோ.. “ஏய்.. உனக்கு அறிவு ஏதாவது இருக்கா? வயசுப் பொண்ணு.. போலீஸ், கேஸுன்னா.. அவளோட வாழ்க்கை என்ன ஆகும்?” என்று கேட்க, பதிலுக்கு அவள் கூறிய அதே வார்த்தைகளாலேயே அவளைத் திருப்பித் தாக்கினான் ராகவ்.

“உனக்கு அறிவு ஏதாவது இருக்கா? உன் வாழ்க்கையை கெடுக்கப் பார்த்தவளுக்காகப் பரிதாபப்படறியே.. நீ பிறந்துல இருந்தே இப்படித் தானா? இல்ல அமாவாசை, பெளர்ணமிக்கு மட்டும் இப்படி ஆகிடுவியா?” என்று கேட்க, அவனைக் கடுகடுவென முறைத்த மணியோ..

“அப்போ அவளைப் பழிவாங்கறதுக்காகத் தான் நீ அவளை ஜெயிலுக்கு அனுப்பினயா?” என்று அவள் கேட்க, அவளது கேள்விக்குக் கோபமாய் பதிலுரைத்தான் ராகவ்.

“அவளைப் பழிவாங்கணும்னா நான் அவளைக் கொன்னே போட்டிருப்பேன்.. நான் நியாயமா சட்டப்படி தான் தண்டிச்சேன்..” என்றான் அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டே.

“அப்போ உனக்கு யார் தண்டனை கொடுக்கறது?” என்று மணி திருப்பிக் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பிய ராகவோ.. “எனக்கு எதுக்கு தண்டனை கொடுக்கணும்? ஹோ உன்ன கல்யாணம் செய்ததுக்காகவா? அதெல்லாம் உன்கூட வாழறதே தண்டனை தான்.. வேணும்னா தியாகிப் பட்டம் வேணா கொடுக்கச் சொல்லு, சந்தோஷமா வாங்கிக்கறேன்..” என்று நக்கலாக மொழிய, அவளோ நெருப்பில் சுட்ட தங்கம் போலக் கோபத்தில் சிவந்தாள்.

“என்ன கல்யாணம் பண்ணினதுக்காக உனக்குத் தியாகிப் பட்டம் வேற கொடுக்கணுமா? மண்ணாங்கட்டி..

என்னோட டிசைனை, கண்டவளோடதுன்னு சொல்லி அவளுக்கு காபி ரைட்ஸ் கொடுத்தியே.. அதுக்காகத் தண்டனை கொடுக்க வேணாமா?

அதை விட, அவளை வேலைய விட்டு அனுப்புன்னு சொன்ன பிறகும் கூட, கூடவே கூட்டிகிட்டு சுத்தினியே அதுக்கு உனக்குத் தண்டனை கொடுக்க வேணாமா?

எனக்கு இவ்வளவு மன உளைச்சல் கொடுத்தியே அதுக்கு தண்டனை கொடுக்க வேணாமா?” என்று அவள் அடுக்கிக் கொண்டே போக, அவளை இடையிட்டுத் தடுத்த ராகவோ..

“ஆமா.. ஆமா.. இது எல்லாத்துக்கும் தண்டனை கொடுத்தே ஆகணும் தான்.. அதனால தான் உன் கூடவே வாழ்ந்து என் தண்டனையை அனுபவிச்சுக்கலாம்னு வந்தேன்..” என்று அவன் கூற, மணிக்கு அவனது பேச்சில் சிரிப்பு வந்தாலும், அதை அடக்கிக் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மற்ற மூவருக்கும் அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

அந்த மூவரில் முழுவதாகக் குழம்பியிருந்த நித்யாவோ.. “மனோ அண்ணா.. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு தானே? எனக்கு என்னமோ இவங்கள பார்த்தா கல்யாணம் ஆனவங்க மாதிரியே பீலிங் வரல..

ஏதோ ரெண்டு லவ்வர்ஸ் சண்டை போடற மாதிரி சின்னப்பிள்ளைத் தனமா சண்டை போட்டுட்டு இருக்காங்க..” என்று கூற, வர்ணாவோ..

“ஆமா.. எனக்கும் அதே தான் சார் டவுட்டு.. இப்படி பொண்டாட்டி கோபமா வீட்டை விட்டு வந்துட்டா, புருஷன் சமாதானம் தான செய்வாங்க.. இங்க அந்த விஷயத்தைப் பத்தியே பேசாம இவங்க பாட்டுக்கு மாத்தி மாத்தி குத்தம் சொல்லறேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காங்க..” என்று கூற, அதற்குள் ராகவ் பேச ஆரம்பித்திருந்தான்.

“ஏய்.. இன்னொன்னு சொல்லுடி.. என்னமோ ரொம்ப நல்லவ மாதிரி இத்தனை வாய் பேசறல்ல? என்ன உண்மையாவே காதலிக்கறவளா இருந்திருந்தா இத்தனையையும் நீ என்கிட்டே நேர்லயே கேட்டுச் சண்டை பிடிச்சிருக்கணும் இல்ல? எதுக்குடி இப்படி என்ன விட்டு வந்த? என்ன விட்டுட்டு போற அளவுக்கு உனக்குத் தைரியம் இருக்குல்ல?” என்று அவன் கேட்கையில் அவனது குரல் சற்று கம்மத் தான் செய்தது.

“உன்ன நான் ஏன் விட்டுட்டுப் போனேன்னா.. அதுக்கும் காரணம் உன் மேல இருக்கற காதல் தான்.. நீ சந்தோஷமா இருக்கணும்னு நினச்சேன்..

ஆனாலும் உன்ன உடனடியா விடணும்னு எல்லாம் யோசிக்கல.. நான் பாட்டி வீட்டுக்குப் போய் ரெண்டு நாள் தங்கியிருந்து இந்த விஷயத்தைப் பத்தி யோசிக்கலாம்னு நினச்சேன்..

அதுக்குள்ள அந்த மனோ எருமை என்ன எவ்வளவு கேவலமா பார்த்தான் தெரியுமா? அதனால தான் எனக்குப் புருஷனும் இல்ல.. இப்போ அண்ணனும் இல்லன்னு சோகமா நினச்சுட்டே சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் வந்தேன்.

நைட் எல்லாம் அங்க வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து தான் யோசிச்சேன். அப்போ தான் புரிஞ்சுது, தர்ஷா உன்ன வளைக்க முயற்சி செய்யறா.. ஆனா இன்னும் நீ வளையல.. ஒருவேளை நான் உன்ன விட்டுப் போய்ட்டேன்னா நீ முழுசா வளைஞ்சுடுவியோன்னு பயந்துட்டு தான் திரும்பி வரலாம்னு யோசிச்சேன்..

ஆனா அன்னைக்கு முழுக்கவே சரியா சாப்பிடாததால நான் மயங்கிட்டேன் போலிருக்கு.

இவங்க தான் என்ன ஹாஸ்பிடல்ல சேர்த்தாங்க..” என்று வர்ணாவைச் சுட்டிக் காண்பிக்க, அவ்ளோ நடந்ததை விளக்கமாகக் கூறினாள்.

“நீங்கப் பேசினதை வச்சு மணி, நேத்து காலைலயே வீட்டை விட்டுக் கிளம்பிட்டாங்கன்னு தோணுது. ஆனா நான் இன்னைக்கு விடியற்காலைல தான் அவங்கள பார்த்தேன்.

ஊருக்குப் போயிட்டு திரும்பி வந்துட்டு இருந்த நான் எதேச்சையா வெயிட்டிங் ரூம் பக்கம் பார்க்க, அங்க இவங்க தூங்கிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சுது. இவங்க எங்கடா இங்க? அதுவும் தனியா வந்துருக்காங்கன்னு யோசிச்சுட்டு அவங்ககிட்ட போய் அவங்க தோளைத் தோட்டா, ஆள் அப்படியே மயங்கி விழறாங்க.

எவ்வளவு நேரம் மயக்கத்துல இருந்தாங்களோ? அங்கேயே அம்புலன்சுக்கு போன் பண்ணி, அவங்கள இங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்தேன்.

வந்துட்டு இவங்களுக்கு ட்ரிப்ஸ் போட்டு முடிக்கற வரைக்கும் என்னால வேற யோசிக்கவே முடில.. இவங்க கண் விழிச்சதுக்கு அப்பறம் தான் மனோ சாருக்கு போன் செய்தேன்..” என்று அவள் முழுதாகக் கூறி முடிக்க, மணியோ அவளை ஆச்சர்யமாய் பார்த்தாள்.

“என்ன தெரியுமா உங்களுக்கு? நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணயிருக்கோமா?” என்று அவள் கேட்க, வர்ணாவோ.. “நான் ஆபரணால வேலை செய்றேன்.. உங்க கல்யாணத்துக்கு சார் என்ன இன்வைட் செய்திருந்தார். அப்போ பார்த்ததால தான் உங்களை இவ்வளவு சீக்கிரமாகக் கண்டுபிடிக்க முடிந்தது.” என்று அவள் கூறி முடிக்க, மணியோ.. “தேங்க்ஸ்..” என்றாள் மென்மையாக.

அவளது உணர்வைப் புரிந்துகொண்ட வர்ணாவோ.. “தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு?” என்றாள் மெல்ல அவளது கையைப் பற்றித் தட்டிக் கொடுத்தபடி.

சந்தடி சாக்கில் தானும் பாவமன்னிப்பு பெற்றுவிடலாம் என்று எண்ணி மணியின் முன்பு மனோ வந்த நிற்க, அவனை எரித்து விடுவதை போலப் பார்த்தாள் அவள்.

“இந்த எருமை எதுக்கு இங்க வந்தான்?” என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, மனோவோ.. ” சாரி மணி.. நான் ரொம்ப தப்பா நடந்துக்கிட்டேன்.. நீ எப்பவும் சொல்லற மாதிரி நான் காம்பிளான் பாய் தான்.. இன்னும் வளரவே இல்ல..

எனக்கு இருந்த வேற பிரச்சனைல உன்ன போட்டு வறுத்துட்டேன்.. நிஜமா நான் மனசார உன்ன அப்படி நினைக்கலடி..” என்று இறைஞ்சுதலாகக் கேட்க, இன்னமும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் மணி இருந்தாள்.

அதனால் மனோவின் முகம் காற்று போன பலூனாய் தொங்கிவிட, அவனைக் காப்பற்ற ராகவ் தான் களத்தில் குதிக்க வேண்டியதாய் இருந்தது.

“டி.. பாவம்டி.. அவனும் சின்னப் பையன் தான? அவனுக்கே வீட்டுல தனியா இருக்கோம்.. கடைய தனியா பார்த்துக்கறோம்னு ஏகப்பட்ட டென்சன்.. அதுல அவன் ஏதோ சொல்லிட்டான்னு நீ ஏன் இப்படி இருக்க?

என்னையே மன்னிச்சுட்ட.. அவனை மன்னிக்க மாட்டியா?” என்று கேட்க, அவனை ஆச்சர்யம் கலந்த கேலிப்பார்வை பார்த்தாள் மணி.

“ஓஹோ?! கதை அப்படிப் போகுதா? ஒரு இருபத்து நாலு மணி நேரம் நான் உங்களுக்கு நடுவுல இல்ல.. அந்த கேப்புல ரெண்டு பேரும் இப்படி சமாதானமாகிட்டீங்க!” என்று அவள் கலாய்க்க, அதற்கும் மனைவியைச் சமாதானப்படுத்தும் பொருட்டு.. “நீ தாண்டி நாங்க சண்டை போட்டதுக்கும் காரணம்.. இப்போ சமாதானமாகி ஒத்துமையா இருக்கவும் காரணம்..” என்று அவள் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினான் அவன்.

அதைப் பார்த்து வெட்கத்துடன் திரும்பிக் கொண்ட மனோவோ.. “அடேய்.. அவளை இப்போ என் கூடத் தாண்டாச் சமாதானம் செய்து வைக்கச் சொன்னேன்.. நீ அவ கூட ஏற்கனவே சமாதானமாகிட்ட.. இப்போ நீ ஓவரா சமாதானம் செய்யறதுக்கு பார்த்துட்டு இருக்க..

இது பப்ளிக் பிளேஸ்.. பார்த்து நடந்துக்கடா..” என்று கூற, அதில் சட்டென விலகினார்கள் மணியும், ராகவும்.

அப்பொழுது தான் மணியின் பார்வை, எதேச்சயாக நித்யாவின் பக்கம் பாய.. “ஏய் நித்யா.. நீ இங்க என்னடி செய்யற?” என்று கேட்க, அவளைப் பார்த்தது இடுப்பில் கை வைத்த முறைத்தாள் அவள்.

“ஏண்டி கேட்கமாட்ட.. உனக்காகப் பதறியடிச்சு ஓடி வந்தேன் பாரு.. நீ என்ன நல்லா கேள்வி கேட்ப..” என்று சற்று குறைப்படுதலோடு நித்யா கூற, மனோ தான் அவள் வந்த காரணத்தையும், அவளால் தான் தங்களுக்கு தர்ஷாவைப் பற்றிய உண்மை தெரிந்தது என்ற விவரத்தையும் கூறி முடிக்க, அவளது அண்ணனின் நிலையை எண்ணி வருந்திய மணியோ அவளது அண்ணனின் வைத்திய செலவுகளைத் தானே பார்த்துக் கொள்வதாய்க் கூற, நித்யாவோ, தோழியை ஓடிச் சென்று கட்டிக் கொண்டாள்!

ஒரு வழியாக மணியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வரும் போது தான் ராகவுக்கு அவன் தந்தையிடமிருந்து போன் வர, இவர்களது இந்தச் சண்டை விவகாரம் அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ என்று சிறு திகிலுடன் அவன் அந்த அழைப்பை ஏற்றால்.. அவர் ஒரு சந்தோஷமான விஷயம் கூறத் தான் அழைத்திருந்தார்.

இன்னும் ஒரு வாரத்தில் பாட்டி, பாலாஜி, தேவகி மூவரும் தங்களது உலகச் சுற்றுப் பயணம் முடிந்து தாய்நாடு திரும்பப் போவதாக அறிவித்தார். அதில் மூவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

வர்ணாவையும், நித்யாவையும் அழைத்துக் கொண்டு உணவு விடுதிக்குச் சென்றவர்கள், சந்தோஷமாகப் பேசிக்கொண்டே உண்டு முடிக்க, அனைவரின் வயிறோடு, மனதும் நிறைந்தது!

இப்படியே ஒருவாரம் ஓடியிருக்க, அன்று தான் பாட்டி, மற்றும் ராகவின் பெற்றோர் வீடு வர, வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.

வந்தவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக.. மணியும், ராகவும் அன்னியோன்னியமாகத் திகழ்ந்தார்கள் என்றால், அவர்கள் மயக்கம் போட்டு விழும் அளவிற்கு ராகவுக்கும், மனோவுக்குமான நட்பு இருந்தது.

போலியாய் சற்றுத் தள்ளாடியபடியே.. “அம்மா.. நம்ம பசங்களுக்கு யாரோ சூனியம் வச்சுட்டாங்க.. இங்க பாருங்க இந்த மூணுங்களும் எப்படி ஒத்துமையா இருக்குதுங்க..” என்று பாலாஜி அவர்களைக் கேலி செய்ய, தேவகியோ..

“ஹையோ.. போதும்.. நீங்களே அவங்க மேல கண்ணு வைக்காதீங்க..” என்று செல்லமாய் கடிந்து கொண்டார்.

அவர்கள் வந்து சாப்பாடெல்லாம் ஆன பிறகு, ராகவும், மணியும் தங்களது சூட்கேசை எடுத்துக்கொண்டு கீழே வந்தார்கள்.

குடும்பமே அவர்களை வியப்பாய் பார்க்க.. “என்ன பார்க்கறீங்க?” என்று கேட்ட ராகவோ, மேலும் தொடர்ந்தான்.

“கல்யாணம் முடிஞ்சு எங்களை ஹனிமூனுக்கு அனுப்புவீங்கன்னு பார்த்தா.. நீங்க ஊர் சுத்திட்டு வரீங்க.. இப்போ இது எங்க டர்ன்..

நாங்களும் ஒரு மாசம் ஹனி மூனுக்குப் போறோம்..” என்று கூற, அனைவருக்குமே ஏகத்துக்கும் மகிழ்ச்சி!

“சந்தோஷமா போயிட்டு வாடா பையா..” என்று தேவகி ராகவின் முதுகைச் செல்லமாகத் தட்டிவிட்டு, மணியின் புறம் திரும்பி.. “என் அழகுப்புள்ள..” என்று கூற, சட்டென ராகவுக்கும், மனோக்கும்.. “இது அழகா? அகோரம்..” என்று அவளைக் கேலி செய்வது நினைவு வந்துவிட, அதை அடக்கிக் கொண்ட இருவரும், கண்களில் சிரிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அதைத் தானும் உணர்ந்த மணியோ.. “தெரியுதுடா நீங்க ரெண்டு பேரும் என்ன நினைக்கறீங்கன்னு தெரியுது.. தைரியம் இருந்தா அதை இப்போ சொல்லுங்க பார்ப்போம்..” என்று மிதப்பாகக் கூற, இருவரும் வாயில் கை வைத்துக் கொண்டு மறுப்பாகத் தலையசைக்க..” அந்தப் பயம் இருக்கணும்..” என்று பொதுவாகக் கூறிவிட்டு, மனோவின் புறமாகத் திரும்பி..

“நாங்க டூர் முடிச்சுட்டு வர வரைக்கும் எங்க அலங்காரையும் ஒழுங்கா பார்த்துக்கணும்.. சரியா?” என்று கூற, அவனோ அதற்கு.. “உத்தரவு எஜமானி..” என்றான் கேலியாக.

ஆனால் மணி அதோடு நிறுத்தாது..

“அப்பறம் நீயும், பாட்டியும் இனி இங்க தான் தங்கறீங்க. இது என்னோட ஆர்டர்.. உனக்குப் பிடிக்கலைனாலும், நான் சொல்லறத்தைத் தான் நீ கேட்கணும்.. ஏன்னா.. நீ என்கூட பொறந்துத் தொலைச்சுட்ட..

நீ கடைக்குப் போறது, வரதுன்னு இருக்கும் போது பாட்டியைத் தனியா விட்டுட்டு இருக்க முடியாது. அதுக்குன்னு பாட்டிய மட்டும் இங்க கூட்டிட்டு வந்துட்டு உன்னையும் தனியா விட முடியாது.. அதனால பாட்டியும், நீயும் இனி இங்க தான் இருக்கீங்க..

அது என்னோட வீடுன்னா.. இது உன்னோட வீடும் தான்..” என்று பெரிய மனுஷியாய் உத்தரவு பிறப்பிக்க, அதைக் கண்ட அனைவருக்குமே வியப்பாய் இருந்தாலும்.. அவளது உத்தரவுக்கு ஆசையாகவே அடிபணிந்தார்கள்.

இப்படிப் பேசிக்கொண்டே ராகவும், மணியும் கிளம்ப அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக அனைவரும் வெளியே வந்தனர்.

ராகவும், மணியும் காரில் ஏறிக்கொள்ள, அவர்களுக்கு அனைவரும் கையசைத்து விடை கொடுக்க.. மனோவோ.. “இப்படி ஆளாளுக்கு டூர் போயிட்டு வரீங்க.. இங்க சிங்கிள் பையன் ஒருத்தன் இருக்கானே.. அவனும் பாவம்னு யாராவது நினைச்சீங்களா?” என்று பெருமூச்செறிய, பாட்டியோ அவன் தோளில் தட்டினார்.

“சிங்கிள் பையா.. உன்ன சீக்கிரமே மிங்கிள் பண்ணறதுக்கான வேலையெல்லாம் நடந்துட்டே இருக்குடா..” என்று கூற, அவனோ.. “இல்ல.. எனக்கு நீங்கப் பார்க்கற பொண்ணெல்லாம் பிடிக்கல..” என்று கூற, அவரோ.. “இன்னும் பொண்ணு போட்டோவையே காண்பிக்கல.. அதுக்குள்ளே உனக்குப் பிடிக்கலையா?

இதோ.. இங்கப் பாரு.. இந்தப் பொண்ணு பிடிக்கலையா? சரி விடு.. அப்போ நாங்க பொண்ணு வீட்டுல இந்தச் சம்மந்தம் செட் ஆகாதுன்னு சொல்லிடுறோம்..” என்று கூறி அவர் காண்பித்த புகைப்படம் வர்ணாவினுடையது.

அதைப் பார்த்த மனோவின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, பாட்டியிடம்.. “எப்படி பாட்டி?” என்றான் தன் வியப்பை குரலிலும் காட்டி.

அதற்குச் சென்று கொண்டிருந்த காரை பாட்டி சுட்ட, காருக்குள் இருந்து ராகவின் குரல் கேட்டது.

“என்ஜாய் மச்சி.. நாங்க திரும்பி வரதுக்குள்ள கல்யாண தேதியை ஃபிக்ஸ் பண்ணிடு..” என்று கூற, மனோவுக்கோ என்ன கூறுவதென்றே தெரியவில்லை.

ஆம்.. ராகவ் தான், மனோவுக்கு, வர்ணாவின் மேலிருக்கும் விருப்பம் அறிந்ததும் வர்ணாவின் பெற்றோரிடம் பேசி.. மதம், ஜாதி என்று பேசியவர்களைத் தன் பேச்சு சாமர்த்தியத்தால் வளைத்து, இங்கு அவர்கள் வீட்டிலும் பேசி இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான்.

அதை உணர்ந்த மனோவுக்கு ராகவ் மீது அத்தனை மதிப்பு ஏறியது. அவன் இங்கிருந்தே, “தேங்க்ஸ் டா மச்சான்..” என்று கத்த, ராகவோ காருக்குள்ளிருந்து தன் வலக்கையை வெளியே நீட்டி வான் நோக்கி ஆட்டினான்.

அதே சமயம் காருக்குள்ளிருந்த மணியோ.. ராகவை ஆசையாகப் பார்த்து.. “லவ் யூ டா..” என்றாள் குரல் கரகரக்க!

அவளது ஒவ்வோர் காதல் உரைப்புக்கும் ராகவ் மொத்தமாய் நெகிழ்வான் தான்.

அதிலும் இப்பொழுது தனவளுடனான தனிமைப் பயணம் மேற்கொள்ளப் போகிறோம். அந்த நிலையில் இப்படித் தோள் சாய்ந்து கண்களில் மயக்கத்துடன் தன்னவள் காதல் உரைக்கும் பொழுது முழு மொத்தமாய் சரணாகதி அடைந்தவன்.. “லவ் யு டி பொண்டாட்டி..” என்று கூறி அவள் இதழில் தன் வல்லின இதழால் மெல்லினம் படித்தான்!

சுபம்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
11
+1
17
+1
2
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்