Loading

காதல் மனசிலாயோ! 07

நாளை காலையில் திருமணம், இன்று மாலையில் நிச்சயதார்த்தம் என்று அடுத்தத்த விசேஷ வேலைகள் இரு வீட்டாரையும் நெருக்கியது.

விருமா வேலைகளை ஏவிக் கொண்டு இருக்க, வெளியில் இருந்து வந்த சுந்தர்
“அப்பா! அண்ணனுக்கு அண்ணி வீட்டில் இருந்து கோட், சூட் சாயந்திரம் நிச்சயத்திற்கு போடுவதற்காக அனுப்பி இருக்காங்க” என்றான்.

“சௌந்தர் கிட்ட குடுத்துப் போட்டு பாக்க சொல்லு”

“ஆ! சரி” என்ற சுந்தர், சௌந்தர் அறைக்குள் சென்று சிறிது நேரத்திலே திரும்பி வந்தான்.

“என்ன சரியா இருக்கா..?” எனக் கேட்ட தந்தையிடம், “அண்ணன் அந்த டிரஸை போட முடியாதாம், அது மட்டுமில்லப்பா நிச்சயத்திற்கு மேடையில் நிக்க போறதில்லைனு சொல்லிட்டார்” என்றான் மெல்ல சுந்தர்.

“என்ன பேசிட்டு இருக்கான், அவனை கூப்புடு” என விருமா அதட்டவும், பிரேமா பின் பக்கத்தில் இருந்து ஓடி வந்தார்.

சுந்தர் சென்று சௌந்தரை அழைக்க, அவனும் வந்துச் சேர்ந்தான்.

“என்ன ஆச்சுங்க…?” எனப் பதறிக் கேட்ட மனைவியை முறைத்தவர், சௌந்தர் வந்ததும், “ஏன் மேடையில் நிக்க முடியாதுனு சொன்ன…?” எனக் கேட்டார் மகனிடம்.

“அப்பா! ஏற்கனவே பிரமாண்டமாக அலங்காரம் பண்ணி மேடையில் நிக்க வச்சுட்டீங்க அதுவே பல வருசத்துக்கு தாங்கும், இன்னைக்கு நான் வரல. கவலைப்படாதீங்க நாளைக்கு உங்க ஆசைப்படி வந்து முகூர்த்த நேரத்துக்குத் தாலிக் கட்டிடுவேன்” என்றான் சௌந்தர்.

விருமா கோபம் வர”என்னடா! ஏதோ நடக்காதது நடந்த மாதிரி பேசுற, அவனவன் ரெண்டாவது கல்யாணமே பண்ணிட்டுப் போறானுங்க, நீ நின்ன கல்யாணத்தை நெனச்சுட்டு அது முடியாது, இது முடியாதுனு வருத்தப்பட்டுட்டு இருக்க, அந்தப் பொண்ணு, அவளோட அண்ணன் ரெண்டுப் பேருக்குமே கல்யாணம் முடிஞ்சு புள்ளக் குட்டியோட இருக்காங்க, ஓடிப்போனவளும் சந்தோஷமா இருக்கா. நீ என்னனா கல்யாணமே வேணானு சொன்ன, நாங்க போராடி ஒத்துக்கிட்டு இப்ப நிச்சயத்துக்கு வரமாட்டனு சொன்னா என்ன அர்த்தம்..?” எனக் கோபமாக பேசினார்.

“தம்பி! என்னப்பா ஏன் அப்பாவை கோபமாக்குற…? அவரு சொல்றதைக் கேளுப்பா” என பிரேமா மகனிடம் கெஞ்சினார்.

“அம்மா! ப்ளீஸ்” என்றவன், “அப்பா! நானும் அதான் சொல்றேன், பலப்பேருக்கு மத்தியில் நான் தப்புச் செய்யாமல் அன்னைக்கு அவமானப்பட்டேன். பொண்ணு இதானு காட்டினீங்க விரும்பி ஏத்துக்கிட்டேன். இன்னைக்கு வேறப் பொண்ணைக் காட்டுறீங்க, இந்தப் பொண்ணுக் கூட மேடையில் வந்து நின்னு போஸ் கொடுத்துட்டா, நாளைக்கு கல்யாணம் நிக்காதுனு உத்தரவாதம் சொல்ல முடியுமா…? எனக்கு அந்த நம்பிக்கை இல்லை. நாளைக்குக் காலையில் உங்க ஆசைப்படி தாலிக் கட்டுறேன், அதுக்கு முன்னாடி என்னைய கட்டாயப்படுத்தாதீங்க” என்றான்.

“அண்ணா! அவங்க வீட்டில் ஏற்பாடு பண்ணி, பாருங்க டிரஸ் அனுப்பிட்டாங்க” என்றான் சுந்தர்.

“நான் தான் முன்னாடியே சொல்லிட்டேன்ல, கல்யாணத்தின் அன்னைக்கு காலையில் தாலிக்கட்டுற நேரத்தில் மேடைக்கு வருவேனு. யாரு இந்த நிச்சயதார்த்தம் டிரஸ் எல்லாம் எடுக்க சொன்னா..?”

“அசோக் அண்ணா அளவுக் கேட்டு ஃபோன் பண்ணார், உங்களுக்கு கூப்புட்டு இருக்காரு நீங்க எடுக்கல, அதான் எனக்கு கால் பண்ணிக் கேட்டதும் நானே அளவுச் சொல்லிட்டேன், அப்பாவுக்கு தெரியும் அண்ணா”

“இப்ப அதுக்கு என்ன சௌந்தர்? நான் தான் அளவு சொல்ல சொன்னேன். கல்யாணம் முடிவுப் பண்ணிட்டு, நிச்சயமும் முடிவெடுத்து, அதுக்கு மாப்பிள்ளை வரமுடியாதுனு காரணம் சொல்ல முடியுமா.? நீயே யோசி” என்றார் விருமா.

“எனக்குப் புடிக்கலைப்பா, என்னைய எல்லாத்துக்கும் கட்டாயப்படுத்தாதீங்க, ஒரு கட்டத்துக்கு மேல நான் வேற மாதிரி யோசிச்சுடுவேன். ஏதோ! நீங்க, அம்மானு யோசிப்பதால் குடும்பம் முக்கியமுனு மனசுல படுது. என் மனசு இப்டி தான்பா, நானா என் வாழ்க்கையை கெடுத்துக்கல. நீங்க அமைச்சுக் கொடுத்தப் பாதையில் போய் தான் இந்த நிலையில் நிக்கிறேன். மனசை எல்லாம் டிரஸ் மாதிரி என்னால மாத்த முடியல, புரிஞ்சுக்கோங்கப்பா” எனக் கூறிவிட்டு அவன் அறையை நோக்கி சென்று விட்டான்.

விருமா யோசிக்கத் தொடங்கினார்….

“என்னங்க அமைதியா இருக்கீங்க…?” எனக் கேட்டார் பிரேமா.

“அவன் மனசையும் யோசிக்கிறேன்”

“அப்பா! அதுக்காக….” என்ற சின்ன மகனைப் பார்த்தவர், உடனே வீரனாருக்கு ஃபோன் செய்தார்.

மறுமுனையில் ஃபோன் அட்டென்ட் ஆக,
“ஹலோ!” என்றார்.

“சம்பந்தி, நல்லா இருக்கீங்களா?”

“ஆ! ஒரு விசயம் பேசனும் வீரனார்”

“சொல்லுங்க சம்பந்தி!”

“ஒன்னுமில்ல! எங்கப் பக்கம் நிச்சயத்திற்கு ஆம்பளைங்க நிச்சய ஓலை எழுதிட்டு பொம்பளைங்க பொண்ணு வீட்டுக்குப் போய் புதுப்புடவைக் கட்டி பூ வச்சுட்டு வரது தான் வழக்கம், அந்த மாதிரி சாயங்காலம் பண்ணிடலாம்” என்றார்.

“என்ன சொல்றீங்க சம்பந்தி, மண்டப்பத்தில் நிச்சய ஓலை எழுதிட்டு, மாப்பிள்ளை அழைப்பு, பொண்ணு மாப்பிள்ளை ரிசப்ஷன் எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்கு, இப்டி சிம்பிளா சொன்னா எப்டி சம்பந்தி..?”

“அது எல்லாம் புரியுதுயா, எங்கப் பக்கம் பழக்கமுனு சொல்றேன்ல.” என்றார் சற்று அதிகாரமாக, மகனின் மனம் நோகாமல் இந்நாளை மாற்றுவதற்காக அவரின் முடிவை மாற்றினார்.

பிரேமா மற்றும் சுந்தர் ஒருவர் ஒருவரைப் பார்த்துக் கொண்டனர்.

“என்னங்க சம்பந்தி, உங்க மகனின் நின்னு போன கல்யாணத்திற்கு நானும் தான் வந்திருந்தேன். முதல் நாள் ரிசப்ஷன் படு அமர்களமாக பண்ணி இருந்தீங்க, இப்ப என்னனா ஏதோ பழக்கமுனு சாக்கு சொல்றீங்க, எனக்கு வேண்டப்பட்டவங்க இருக்காங்க நான் அவங்க மெச்ச என் பொண்ணுக்கு எல்லாம் பண்ணனுமுல” என சற்று தைரியமாக கேட்டார் வீரனார்.

“ஆமாய்யா! அப்ப பண்ணினது வெளங்கல அதான் இந்தத் தடவை முறைப்படி பண்ணலாமுனு… உனக்கு எதும் பிரச்சனை இல்லையே…? போதுமா விளக்கம். இன்னைக்கு இப்டி தான் நடக்கும் நிச்சயம். புடிக்கலைனா நேரா சொல்லிடு” எனச் சற்று வேண்டுமென்றே வீம்பாக கூறினார்.

“முன்னாடியே சொல்லி இருக்கனுமுல சம்பந்தி” என்றார் அடக்கிய கோபத்துடன்.

“இப்ப என்ன நிச்சயம் குறிக்கப்பட்ட தேதி தானே நடக்கப்போகுது, மேடையில் பொண்ணு, மாப்புள்ள நிக்க மாட்டாங்க, நம்ம சேர்ந்து ஐயர் வச்சு எழுதிட்டு, மருமகளுக்கு வீட்டுல வந்துப் புடவைக் கட்டி விடுவாங்க எங்கப் பக்கம் பொம்பளைங்க” என்றார் முடிவாக.

வீரனாருக்கு கோபம் வந்தாலும் நெளிவுசுளிவு தெரிந்தவர் என்பதால் பொறுத்து அமைதியாக பதிலளித்தார்.

“சரி சம்பந்தி!” என்று மட்டுமே.

விருமா ஃபோனை வைக்கவும், வீரனார் தாம் தூம் எனக் குதித்தார்.

“இவன் வச்சது தான் சட்டமுனு பேசுறான். ஏதோ மாப்புள்ள வீடு ஆச்சேனு பாத்தா ரொம்ப தான் துள்ளுறான்..” எனச் சத்தம் போட்டார்.

அசோக் மற்றும் குடும்பத்தினர் வந்து விசாரிக்கவும், விசயத்தைக் கூறினார்.

“நீங்க அவசப்படுறீங்கனு நான் சொன்னேன்ல மாமா, பாருங்க எப்டி மாத்தி பேசுறாங்கனு, அவரு பையனுக்கு முறைப் பாக்கதால கல்யாணம் நின்னுட்டுனு நம்ம வீட்டுப் பொண்ணுக்கு நாம ஆசைப்படி நிச்சயம் செய்யக் கூடாதாமா..?” என அசோக் பொரிந்துத் தள்ளினான்.

“அதானே சித்தப்பா! இது என்ன அநியாயமா இருக்கு” எனக் கூறினாள் ஜனனி.

மீரா சத்தம் கேட்டு எட்டிப் பார்க்க, வீரனார்
“மாப்புள்ள வீடுனு பேசுறானுங்க, இருக்கட்டும் நமக்கு ஒரு வாய்ப்பு வரும் பாத்துப்போம் அசோக்..” என்றார்.

“என்னங்க மாப்புள்ள வீடு, நம்ம பொண்ணுக்கு இப்டி பண்ணனுமுனு ஆசை இருக்காதா…? ஒருத்தி தான் ஆசையில் மண்ணு அள்ளிப் போட்டுப் போயிட்டா, இவளுக்காச்சும் நம்ம விருப்பப்படி செய்யலாமுனு பாத்தா, அவங்க கட்டுப்பாடு போடுறாங்க” எனப் புலம்பினார் பைரவி.

மீரா விசயம் புரியாமல் ஜனனியைப் பார்க்க, ஜனனி மெல்ல நகர்ந்து அவளிடம் விளக்கினாள்.

“இதுக்கென்ன மாமி, அவரோட ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் பேட் சிட்டிவேசனா போயிட்டு அதான் இப்ப சிம்பிளா பண்ண நினைக்கிறாங்க போல” என்றாள் சாதரணமாக.

“அப்படி நினைக்கிறவங்க முன்னாடியே சொல்லி இருக்கனும், அது என்ன சாயங்காலம் நிச்சயத்தை வச்சுட்டு இப்ப வந்துப் பேசுறது.”

“ஓ!” என அமைதியானாள் மீரா, அவளின் மனதில்’ஒரு வேளை சௌந்தர் எதும் முடியாதுனு சொல்லி இருப்பாரோ’ எனத் தோன்றியது. அவன் மனம் பற்றி அறிந்தமையால் அந்த எண்ணம் வந்தது.

“சரி விடுங்க! பாத்துப்போம், கல்யாணம் நல்லப்படியா முடியட்டும். இந்த வீரனார் சமயம் வரும்போது யாருனு காட்டுறேன்” என வெளியில் சென்று விட்டார் வீரனார்.

~~~~

மாலை வேளையில்……

விருமா கூறியப்படி, ஐயர் வைத்து, பெரியவர்கள் நிச்சம் ஓலை வாசித்து கையெழுத்திட்டனர்.

சௌந்தர் வீட்டிலே இருந்துக் கொண்டான். மீராவும் அவள் வீட்டில் இருந்தாள்.

இருவருமே அன்றைய இரவிற்கு பின் ஃபோனில் கூட பேசிக்கொள்ளவில்லை.

அனைத்தும் முடித்து வீரனார் வீட்டிற்கு பிரேமா தலைமையில் சிலப்பெண்கள் நிச்சயப் புடவைக் கட்டுவதற்காக வந்தார்கள்.

மனதில் வருத்தம் இருந்தாலும், பைரவி அனைவரையும் நிறைவாக வரவேற்றார்.

மீராவிற்கு புதுப்புடவை வைத்துக்கொடுத்து, கட்டிவிட சொல்ல ஜனனி தானே கட்டிவிடுவதாக வாங்கிக் கொண்டு மீராவை அழைத்துச் சென்றாள்.

ஜனனி, விருமா வீட்டினரைத் திட்டிக் கொண்டே மீராவிற்கு புடவையைக் கட்டிவிட்டாள்.

“மாமி! பரவாயில்ல விடுங்க” என்றாள் மீரா.

“உனக்கு புரியாது மீரா, இது என்ன முறை… இந்தக் காலத்தில் எல்லாமே மாறுது, பொண்ணு, மாப்பிள்ளை நிக்க வச்சு போட்டோ எடுக்க வேண்டாமா.? நானும், உன் மாமாவும் சேர்ந்து நின்ன ஆல்பம் இருக்கும் பாத்து இருக்கல… இது எல்லாம் மெம்மரீஸ் தானே.” எனப் புலம்பியதும் தான் மீராவிற்கும் அதுப் புரிந்தது.

‘ஆமால! நான், சேரா, அக்கா எல்லாம் நின்னமே மாமா நிச்சயத்தில், ஜாலியா இருந்துச்சு’ என எண்ணி மகிழ்ந்தாள்.

பிரேமா உள்ளே வரவும் இருவரும் அமைதியாகினர்.

மீராவிற்குப் புடவைக் கட்டி முடிக்கவும், ஜனனி ஃபோன் அடித்தது, அதை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.

பிரேமா மட்டும் இருக்க, “கண்ணு! தப்பா நெனைக்காத, என்னடா இப்டி சாதரணமா நிச்சயம் பண்றாங்கனு. மொத தடவை நல்லா தான் பண்ணோம். ஆனா தம்பி தான், இன்னைக்கு….” எனக் காலையில் நடந்ததை மறைக்காமல் மருமகளிடம் கூறினார்.

ஜனனி அவர் கூறியதைக் கேட்டதும், தான் மனதில் எண்ணியது சரியென்று நினைத்தாள்.

“எங்களைத் தப்பா நெனைக்காத கண்ணு, எம் புள்ள ரொம்ப பாவம்…” என மகனுக்காக பரிந்துப் பேசினாலும், நடந்ததை மறைக்காமல் கூறிய மாமியாரை ஏனோ மீராவிற்கு மிகவும் பிடித்தது. .

அவரின் பேச்சு, அந்த கண்ணு! என்ற அழைப்பு அவளை ஈர்த்தது.

வெள்ளந்தியான அவரின் மனதைப் புரிந்துக் கொண்டவள், “சரிங்கம்மா! எனக்குப் புரியுது, நீங்க கவலைப்படாம இருங்க” என்றாள் ஆறுதலாக.

அவளின் அம்மா! என்ற அழைப்பில் உள்ளம் குளிர்ந்தவர், “என் கண்ணு! ராசாத்தி!” என முகத்தைத் தடவி முத்தம் வைத்தார் பிரேமா.

ஜனனி நுழையும் போது அந்தக் காட்சியை காணவும், மகிழ்ச்சியாக சிரித்துக் கொண்டே”என்ன மருமகளுக்கு தனியா ஐஸ் வைக்கிறீங்களா…?” எனக் கிண்டல் செய்தாள்.

“என் வீட்டு மருமகளுக்கு நான் ஏன் ஐஸ் வைக்கனும். மனசார தான் கொஞ்சுறேன்மா” எனக் கூறினார்.

“கொஞ்சுங்க, யாரு வேணானு சொன்னா, ஆனா இப்டி பண்ணிட்டீங்களே, ரெண்டுப் பக்கமும் இல்லாத வசதியா? ஒரு தடவைக் கல்யாணம் தடைப் பட்டுனு, அடுத்து வரவளுக்கு நடக்கவேண்டிய சந்தோஷமான தருணங்களை தடைச் செஞ்சுட்டீங்க” என ஜனனி ஆதங்கத்துடன் கூறினாள்.

“ஜனனி! நீ சொல்றது எனக்கு புரியுது, ஆனா….” என நிறுத்தினார்.

“மாமி! ஏன் மறுபடியும் அதைப் பத்தி பேசுறீங்க…? எனக்கு ஒன்னும் இதுல வருத்தம் இல்ல, சிம்பிளா பண்றது தான் எனக்குமே புடிச்சிருக்கு” என்றாள் மீரா.

“என்ன மீரா, இன்னும் கழுத்தில் தாலி ஏறல, அதுக்குள்ள மாமியாருக்கு சப்போர்ட் போல” என முகத்தைச் சுளித்தாள் ஜனனி.

“அப்படியில்ல மாமி, அம்மா என் கிட்ட அதப்பத்தி பேசி வருத்தப்பட்டாங்க, அதான்” என மீரா ஜனனியை சமாதானம் செய்தாள்.

“அத்தாச்சியா..?” எனப் புரியாமல் கேட்ட ஜனனியிடம், “இவங்களை தான் அம்மானு சொன்னேன்” என்றாள் மீரா.

“ஓ! மாமியார் அம்மா ஆகிட்டாங்களா? சரி, சரி, இப்டியே எப்பையும் இருக்கனும் மீரா” எனச் சிரித்தாள்.

“நீயே திருஷ்டிப் போட்டுடாத ஜனனி, இந்தப் புடவை உனக்கு ரொம்ப அழகா இருக்கு கண்ணு” என மருமகளை கைகளால் சுற்றி திருஷ்டிச் சுத்தினார்.

“இப்டியே எங்களை ஒரு போட்டோ எடு” என மீரா அருகில் நின்றார் பிரேமா.

ஜனனியும் அவளது ஃபோனில் இருந்து அவர்களை போட்டோ எடுத்தாள்.

“கண்ணு! தம்பி நம்பர் வச்சு இருக்கீயா..? இல்ல தரவா..?”

மீரா ஜனனியை காண, “அது எல்லாம் நான் வாங்கிக் குடுத்துட்டேன்” எனச் சிரித்தாள்.

“நல்லதா போச்சு, நம்ம இப்ப எடுத்த போட்டோவை, தம்பி நம்பருக்கு அனுப்பி வை கண்ணு, என் கிட்ட பட்டன் போன் தான் இருக்குது, அதை எடுத்துட்டும் வரல”

மீரா வேறு வழியில்லாமல் தலையை அசைத்தாள்.

ஜனனி உடனே அந்த போட்டோவை மீராவிற்கு அனுப்பிவிட்டாள்.

அடுத்தடுத்து முறைகளை முடித்துக் கொண்டு மாப்பிள்ளை வீட்டினர் கிளம்பினர்.

மணமக்கள் புரிந்துக் கொள்ளும் முன்னே, மாமியார், மருமகள் புதுப்பித்ததிருந்தது.

இரவு….

அடுத்த நாள் காலையில் திருமணம் என்கிற போது அதற்கான எந்தவித கனவுகளும், எதிர்பார்ப்புகளும் இன்றி வழக்கமான நாளை போல படுக்கையில் படர்ந்திருந்தாள் மீரா.

மாமியார் கூறியது நினைவு வர, உடனே ஃபோனை எடுத்து, அன்று எடுத்தது போட்டோவை சௌந்தருக்கு ஃபார்வோர்டு செய்தாள்.

அது டபுள் டிக் நோக்கி சென்று இருந்தாலும், இன்னும் திறக்காத நிலையில் காணப்பட்டது.

காதல் மனசிலாயோ!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்