Loading

மாப்பிள்ளையின் நண்பனிடம் பேசி எப்படியாவது திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று மெல்ல நகர்ந்து அவனின் அருகில் நெருங்கி நின்று, “உங்கள் நண்பனை பற்றி அறிந்திருந்தும், இப்படி என் ஃபிரண்டோட வாழ்க்கையை கெடுக்கப் போறீங்களா?” என்று முறைத்தவாறு அவனுக்கு மட்டும் கேட்கும்படி பேசினாள் காவ்யா.

 

தன் அருகில் வந்து பேசும் காவ்யாவை மேலிருந்து கீழ் பார்த்து, “என்னிடமா பேசின?” என்று கேட்டான். 

 

அவளும் அவனை முறைத்துக் கொண்டே, “பின்ன! வேற யார்கிட்ட பேசுறேன்? உங்க பிரண்டுக்கு தானே இப்ப கல்யாணம்! ஏன் என்னோட பிரண்டோட வாழ்க்கையை இப்படி வீணாக்குறீங்க?” என்று கடுப்பாக கேட்டாள். 

 

“யாரு வீணாக்கனது? என் பிரண்ட கட்டிக்கிட்டா, என் தங்கச்சி ரொம்ப சந்தோஷமா தான் இருப்பா. அதை பத்தி நீ ஒன்னும் கவலைப்பட தேவையில்லை”

 

“யாரு உங்க தங்கச்சி? உங்க தங்கச்சி நல்லா இருக்கணும் என்பதற்காக, என் ஃபிரண்டோட வாழ்க்கையை பணயம் வைக்கணுமா?”

 

“ஏய் மக்கு! என் பிரண்டோட வைஃப் எனக்கு தங்கச்சி தானே! இது கூட தெரியல? பேச வந்துட்டா”

 

“யாரு..? யாரு மக்கு..?” என்று கோவமாக அவனை முறைத்தாள். ‘தங்கச்சியாம் பெரிய தங்கச்சி’ என்று தனக்குள் முனங்கி கொண்டு, “உங்களுக்கு ஒரு தங்கச்சி இருந்தால், இவரை கல்யாணம் பண்ணி வைப்பீங்களா? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா? இப்படி என் ஃபிரண்டோட வாழ்க்கையை விளையாடுறீங்களே?” 

 

“ஏய் லிசன்.. சும்மா எதையாவது பேசிகிட்டு இருக்காத. கல்யாணம் வேண்டாம்னா உன் ஃபிரண்ட எழுந்திருச்சு போக சொல்லு. யாரும் இங்கே கட்டாயப்படுத்தல. சும்மா ஏதாவது பேசிக்கிட்டு இருந்த அவ்வளவுதான். வாயை மூடிகிட்டு நிற்பது என்றால் இங்கே நில். இல்லையென்றால் உன் ஃபிரண்டையும் கூப்பிட்டுகிட்டு பேசாம கிளம்பி போயிட்டே இரு” என்று பல்லை கடித்தவாறு கோபமாக அவளை முறைத்துக் கொண்டே, அவளுக்கு மட்டும் கேட்கும் படி பேசினான் பிரசன்னா. 

 

அவனின் கோபத்தை கண்டு அதிர்ந்த காவ்யா, பயந்து வேகமாக தன் தோழியின் அருகில் வந்து நின்று கொண்டாள். 

 

மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு எடுத்து மாப்பிள்ளையின் கையில் கொடுத்த ஐயர், “கெட்டிமேளம், கெட்டி மேளம்” என்று சொல்லிவிட்டு, மாப்பிள்ளையை பார்த்து, “இந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டி, உங்க பொண்டாட்டியா ஏத்துக்கோங்க” என்று அவனுக்கு புரியும் படி கூறினார். 

 

அவனும் சிரித்துக்கொண்டே, சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டு, தன் அருகில் அமர்ந்திருக்கும் யாழினியை பார்த்து, “நான் உனக்கு இப்ப தாலி கட்ட போறேன். உனக்கு புடிச்சிருக்கா” என்று அவளிடம் சிறு பையன் போல் கேட்டான்.

 

இருபத்தி ஐந்து வருடம் பெற்று வளர்த்த தன் தந்தை தன் விருப்பத்தை கேட்காமல் திருமணத்தை முடிவு செய்தார்.

 

ஆனால் இவர் பார்த்து ஐந்து நிமிடம் கூட ஆகவில்லை உன் கழுத்தில் தாளிக்கட்டவா? என்று அனுமதி கேட்கின்றார் என்று அவனையே விழி விரித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

ஐயரோ நேரம் ஆவதை உணர்ந்து, மணமகனின் கையைப் பிடித்து, “சீக்கிரம் தாலியை கட்டுப்பா!” என்று அவசரப்படுத்தினார். 

 

பிரசன்னாவும் குனிந்து நண்பனின் தோளில் கைவைத்து, “மச்சி.. என்ன யோசிக்கிற? தாலி கட்டு” என்று சிறு அழுத்தம் கொடுத்தான். 

 

எதையும் சட்டை செய்யாத மணமகன் யாழினியின் கண்களை பார்த்துக் கொண்டே இருந்தான். 

 

லக்ஷ்மி பாட்டியோ யாழினியின் அருகில் வந்து, “என்னம்மா?” என்று அவளின் தோளை அழுத்த, சுய நினைவுக்கு வந்த யாழினி, தன்னையே பார்த்துக் கொண்டு தன் அருகில் அமர்ந்திருப்பவனின் கண்களில் தெரிந்த ஏதோ ஒரு ஈர்ப்பும், அவனை மறுப்பதற்கும் காரணம் எதுவும் இல்லாததாலும், சம்மதம் என்று தலையை ஆட்டினாள். 

 

அவள் தலையாட்டியதும், அவளின் கண்களை பார்த்துக்கொண்டே அவளது சங்கு கழுத்தில் மங்கள நாணை அணிவித்தான் மணமகன். 

 

இரண்டு முடிச்சி தன் பேரன் போட்டதும், காவ்யாவிடம் மூன்றாவது முடிச்சு போட வற்புறுத்தினார் பாட்டி.

 

தாலி கட்டி முடித்ததும் ஐயர் கொடுத்த குங்குமத்தை அவளின் நெற்றிலும் உச்சியிலும் மஞ்சள் மாங்கல்யத்திலும் வைத்தான். 

 

குங்குமம் வைத்த உடன் அவளின் முன் கையை நீட்டி, “அயம் இனியன். உன் பெயர் என்ன?” என்று அவளிடம் கேட்க, அனிச்சையாக அவன் கைகளை பிடித்து குலுக்கி “யாழினி” என்றாள். 

 

அவள் கைய உருவ முயற்சிக்க, அழுத்தமாக பிடித்துக் கொண்ட இனியன், “நீ என் பொண்டாட்டி. இனிமேல் உன் கையை நான் விடவே மாட்டேன்” என்று கூறி சிரித்தான்.

 

ஐயரும் அவனின் செயலைப் பார்த்து, ‘ஒரு கிழவன் இடமிருந்து தப்பித்து, குழந்தைத் தனமானவனிடம் மாட்டிக் கொண்டாள் இந்தப் பெண்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு, அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க செய்தார்.  

 

திருமண சடங்குகள் அனைத்தும் முடிந்ததும் பெரியவர்களிடம் ஆசி வாங்க சொன்னார் ஐயர்.

 

இனியன் தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டே தாத்தா பாட்டியின் கால்களில் விழுந்து ஆசி வாங்கினான். இருவரும் மணமக்களை மனமுடன் ஆசீர்வதித்து அணைத்துக் கொண்டனர்.

 

பின்னர் யாழினியின் நண்பர்களை பார்த்து, அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு உணவருந்த செல்லலாம்” என்று அழைத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்கள்.

 

அம்பாளை தரிசித்து முடிந்ததும், அனைவரையும் அழைத்துக் கொண்டு திருச்சியில் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவை முடித்தார்கள்.

 

நண்பர்கள் ஒவ்வொருவரும் யாழினியை வாழ்த்தி விட்டு, அடிக்கடி ஃபோன் செய்யும்படி சொல்லிவிட்டு, ஒவ்வொருவராக கிளம்ப கடைசி வரை அவர்களுடன் இருந்து கொண்டாள் காவியா.

 

இன்று இரவு சென்னைக்கு பிளைட் டிக்கெட் அவர்களுடன் யாழினிக்கும் எடுத்து விட்டதாக பாட்டியிடம் தெரிவித்தான் பிரசன்னா.

 

பின்னர் தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாகவும், அதை முடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்து விடுகிறேன். நீங்கள் ஹோட்டலில் இருந்து நேராக அங்கு வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

 

அவன் கிளம்ப இனியனும் அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டான். நான் பிரசன்னாவுடன் தான் போவேன் என்று.

 

பாட்டி தாத்தாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனது அடம் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. பிரசன்னாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஒரு சின்ன வேலை தான் மச்சான், நான் போய் முடித்து விட்டு வந்து விடுகிறேன். 

 

இப்பொழுது தானே உனக்கு கல்யாணம் ஆகி இருக்கிறது. தங்கச்சியை விட்டுவிட்டு நீ தனியாக வரக்கூடாது என்று எவ்வளவோ பொறுமையாக சொல்லிக் கொண்டு இருந்தான் பிரசன்னா.

 

இருந்தும் இனியன் நான் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிக்கொண்டு, நான் வரவேண்டாம் என்றால், நீயும் போக வேண்டாம். என்னுடனே இருந்து விடு, என்று அவன் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

 

பிரசன்னாவோ தாத்தாவிடம், “தாத்தா ஒரு சின்ன வேலை தான் தாத்தா. நான் நேரில் சென்றால் தான் நன்றாக இருக்கும். காலையிலேயே முடிக்க வேண்டிய வேலை. இனியன் திருமணம் என்று இவ்வளவு நேரம் ஆகிவிட்டது. இப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை” என்று புலம்பிக் கொண்டிருக்க, 

 

அவனின் அருகில் வந்த யாழினி, “அண்ணா.. நீங்கள் அவரையும் கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என்றாள்.

 

அதற்கு பிரசன்னாவோ, “அது எப்படி மா. திருமணம் முடித்ததும் தனியாக” என்று தயங்க, 

 

“பரவாயில்லை அண்ணா. அவர் உங்களுடன் வருவதில் உறுதியாக இருக்கிறார். இங்கு இருந்தாலும் அவரை சமாதானம் செய்வது கஷ்டம் தான் போலிருக்கிறது. நீங்கள் அவரை அழைத்துச் சென்று விட்டு வாருங்கள். பரவாயில்லை” என்று சொல்லி, 

 

தாத்தாவிடம், “அவர் சென்று வரட்டும் தாத்தா. ஒன்றும் பிரச்சனை இல்லை. எப்படியும் இனிமேல் நான் அவருடன் தானே இருக்க போகிறேன்” என்று தன்மையாக கூறிய யாழினியின் தலையே ஆதுர்யமாக தடவிய தாத்தா,  

 

“எல்லாம் உன் நல்ல மனசு போல் நலமாக நடக்க வேண்டும்மா” என்று சொல்லிவிட்டு பிரசன்னாவை பார்த்து, “சரி அவனை உன்னுடன் அழைத்துக் கொண்டு போ. இருவரும் சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு வந்து விடுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

 

இனியனும் நண்பனிடம் மகிழ்ச்சியாக, “நானும் உன் கூட வரேனே” என்று துள்ளி குதித்துக் கொண்டு சென்றான். 

 

அவனின் செய்கையை கண்ட காவ்யா, தன் தோழியை கவலையாக பார்த்தாள்.

 

அவளின் பார்வையை உணர்ந்த யாழினி தாத்தா பாட்டியை காண்பித்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தாள்.

 

இருவரையும் கவனித்துக் கொண்டு இருந்த தாத்தா காவ்யாவை பார்த்து, “நாங்கள் ஊருக்கு செல்லும் வரை நீ என் பேத்தியுடன் இருக்கிறாயா?” என்று வேண்டுதலாக கேட்டார்.

 

“அச்சோ தாத்தா.. என் கிட்ட ஏன் இப்படி கேட்கிறீர்கள்? நான் கண்டிப்பாக இருப்பேன். இப்போது மட்டுமல்ல, எப்பொழுதும் என் தோழிக்காக அவளுடன் இருப்பேன். நீங்கள் அதற்கு அனுமதி அளித்தால் மட்டும் போதும் என்றாள்.

 

தாத்தாவும் புன்னகைத்துக் கொண்டு, “உங்கள் தோழமைக்கு நடுவில் நாங்கள் என்றும் வர மாட்டோம் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு, நீங்கள் இந்த அறையிலேயே சற்று ஓய்வு எடுங்கள். நானும் பாட்டியும் பக்கத்து அறையில் இருக்கிறோம்” என்று சொல்லி தன் மனைவியை அழைத்துக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்று விட்டார்.

 

தனித்து விடப்பட்டதும் யாழினியிடம், “பார்த்தாயா யாழினி. அவர் சின்னப் பையன் போல் செய்து கொண்டிருக்கிறார். அவருடன் எப்படி காலம் முழுவதும் வாழ முடியும். நீ அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டாய்” என்று மீண்டும் பேச ஆரம்பித்தாள் காவ்யா. 

 

அவளிடம் பேசாதே என்பது போல் கையை காட்டி நிறுத்தி, “நல்லதோ கெட்டதோ எனக்கு இப்பொழுது திருமணம் முடிந்து விட்டது. இனி அதைப்பற்றி பேசி எந்த பலனும் இல்லை. இந்த ஜென்மத்தில் அவர்தான் என் கணவர். இதில் எந்த மாற்றமும் இல்லை. நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஆகையால் இதைப் பற்றி இனிமேல் பேசாதே” என்று தன் தோழியை தடுத்து விட்டாள் யாழினி.

 

இனி பேசி எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த காவ்யா, “சரி அதைப்பற்றி இனிமேல் நான் பேசமாட்டேன். உன்னுடன் எப்படி இனிமேல் நான் தொடர்பு கொள்வது. உன் ஃபோன் எடுத்து வந்தாயா?” என்று கேட்டாள். 

 

“இல்லை.. போகும் பொழுது தாத்தாவிடம் நம்பர் வாங்கி தருகிறேன். அதில் பேசலாம்”

 

“நான் எப்படியும் சென்னைக்குத்தான் வருவேன். அப்பொழுது கண்டிப்பாக பார்த்துக் கொள்ளலாம்” என்று அதன் பிறகு சாதாரணமாக இரு தோழிகளின் பேச்சு போல் நேரம் கடந்தது

 

பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் ஓடுவது இரு தோழிகளுக்கும் தெரியவே இல்லை. இன்று தான் திருமணம் முடிந்தது என்ற எண்ணம் கூட யாழினிக்கு சிறிதும் இல்லை. சாதாரணமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.

 

சாயங்காலம் ஐந்து மணி அளவில் தாத்தாவும் பாட்டியும் தோழியர் இருவருக்கும் காஃபியும் தின்பண்டமும் எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குள் வந்தார்கள்.

 

சிறிது நேரம் சாதாரணமாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்க, காவ்யா தாத்தா பாட்டியின் அன்பில் நிம்மதி அடைந்தாள். தன் தோழிக்கு இதுவரை கிடைக்காத பாசம். அந்த வீட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு துளிர்விட்டது. 

 

அதை மகிழ்ச்சியாக தாத்தா பாட்டியிடமும் பகிர்ந்து கொண்டாள். பின்னர் அவர்களின் ஃபோன் நம்பரையும் வாங்கிக் கொண்டு, “நேரம் ஆகிவிட்டது. வீட்டிற்கு செல்லவா?” என்று அனுமதியும் கேட்டாள்.

 

தாத்தா பாட்டி இருவரும் மகிழ்வாய் அவளை வழி அனுப்பி வைத்தனர். யாழினியை கட்டி அணைத்து, “ஊருக்கு சென்றதும் ஃபோன் செய். நானும் சென்னை வந்தால் கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன். எது என்றாலும் எனக்கு உடனே தெரிவித்து விடு” என்று சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினாள். 

 

அவள் வெளியே செல்ல கதவை திறக்கும் பொழுது, கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தான் இனியன். 

 

வந்ததும் நேராக யாழினியிடம் சென்று சிறிது அணைத்து கொண்டு, “சாரி பொண்டாட்டி. இனிமேல் உன்னை தனியே விட்டுவிட்டு போக மாட்டேன்” என்று சொல்லிவிட்டு பாட்டியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

 

திடீரென்று தன்னை அணைத்து விடுத்த கணவனின் செயலில் அதிர்ந்து அப்படியே நின்று விட்டாள் யாழினி.

 

அவளின் அதிர்ந்த முகத்தை கண்ட காவ்யா, அவளின் தோள் பற்றி உலுக்கினாள்.

 

அவனின் கையில் இருந்த பையை பார்த்த பாட்டி, “இது என்னது?” என்று பேரனிடம் கேட்க, தன் பாட்டியிடம்”இதில் என் பொண்டாட்டிக்கு டிரஸ்” என்றான். 

 

அதில் மகிழ்ந்த தாத்தா. பரவாயில்லையே! நான் நினைத்தேன் காலையிலிருந்து இந்த பொண்ணு பட்டுப்புடவை இல்லையே இருக்கிறாளே. மாற்று உடை வாங்க வேண்டும் என்று. பரவாயில்லை நீயே வாங்கி வந்து விட்டாய்” என்று பாராட்டினார் தன் பேரனை. 

 

அவன் சிறிதும் தயக்கமில்லாமல், “பிரசன்னா தான் வாங்க சொன்னான் பாட்டி. 

அவளுக்கு போடுறதுக்கு வேற ட்ரெஸ்ஸே இல்லையா! அதனால என்னை வாங்கி கொடுக்க சொன்னான். அதுவும் இல்லாம அவள் என் பொண்டாட்டியாம். என் பொண்டாட்டிக்கு என்ன தேவை என்றாலும் நான் தான் வாங்கி கொடுக்கனுமாம்” என்று பாட்டியிடம் சொல்லிவிட்டு யாழினியை பார்த்து, “ஏய் பொண்டாட்டி. இங்கே வா” என்று கூப்பிட்டான்.

 

அவன் கூப்பிட்டதும் தயங்கியபடியே அவனின் அருகில் வந்து நின்ற யாழினியின் கையில் உடை இருந்த கவரை கொடுத்துவிட்டு, “உனக்கு என்ன வேண்டும் என்றாலும் என்னிடம் தான் கேட்கனும் சரியா?

 

நான் உனக்கு எல்லாம் வாங்கி தருவேன். நம்ம வீட்டுக்கு போன உடனே அங்க உனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் நான் பாத்துக்குவேன். சரியா? எதுக்கும் அழுக கூடாது” என்று சிறு பெண்ணிடம் பேசுவது போல் யாழினியிடம் பேசினான். 

 

அவளும் சரி என்று தலையாட்டி, அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள்.

 

பையை வாங்கிய பின்னர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இனியன். அவனின் பார்வை அவளுக்குள் ஏதோ செய்ய, மௌனமாக தலை குனிந்தாள்.

 

“ஏய் பொண்டாட்டி. உனக்கு யாராவது ஏதாவது கொடுத்தா தேங்க்யூ சொல்லணும்னு தெரியாதா?” என்று தான் அவளுக்கு உடை வாங்கி கொடுத்ததற்கு அவள் தேங்க்யூ என்று சொல்லவில்லை என்பதை சுட்டி காட்டினான். 

 

அவளும் ஞே என்று விழித்து விட்டு அவனுக்கு நன்றி சொன்னாள். 

 

உடனே அவன் “யூ ஆர் வெல்கம்” என்று சொல்லிவிட்டு, “சரி.. நீ இதில் இருக்கும் டிரெஸ்ஸை போட்டுக்கோ. இன்னைக்கு நைட்டு நாம பிளைட்ல நம்ம வீட்டுக்கு போறோம். சரியா!” என்று சொல்லிவிட்டு, 

 

“பாட்டி தாத்தாவிடம், “வாங்க பாட்டி. அவ டிரஸ் சேஞ்ச் பண்ணட்டும். நாம அந்த ரூமுக்கு போகலாம்” என்று தன் பாட்டி தாத்தாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான். 

 

செல்லும் அவனை பார்த்துக் கொண்டிருந்த காவ்யாவை நெருங்கி “நீங்க என் பொண்டாட்டியோட ஃபிரண்டா?” என்று கேட்டான். 

 

அவள் ஆமாம் என்று தலையாட்ட, எங்க வீட்டுக்கு போன பிறகு யாழினி தனியா இருக்கிற மாதிரி ஃபீல் பண்ணுவால்ல. அதனால நீங்க அப்பப்போ ஃபோன் பண்ணுங்க. சரியா?” என்று அவளிடம் தலையை சாய்த்து கேட்டான்.

 

அவன் செய்கையில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, சிரிப்பை அடக்கிக் கொண்டு, “சரி தம்பி. கண்டிப்பாக நான் அவளிடம் அடிக்கடி பேசுகிறேன்” என்றாள். 

 

“ஏய்! என்ன என்னை தம்பி என்கின்றாய்? நான் உன்னோட எவ்வளவு ஹைட்டா இருக்கேன் பார். ஒழுங்கா அண்ணா சொல்லு” என்று அவளை மிரட்டினான். 

 

திடீரென்று கோபமாக பேசும் இனியனைக் கண்டு பயந்த காவ்யா, சரி என்று தானாய் தலையாட்டி, “சரிங்க அண்ணா” என்று வாய்மொழியாகவும் கூறினாள்.

 

அவள் சரி என்றதும் சற்றென்று இனியனின் கோபம் மறைந்து விட, “குட் கேர்ள்” என்று அவள் தலையை தட்டி விட்டு, “நாங்கள் ஊருக்கு போயிட்டு வருகிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

 

அனைவரும் அங்கிருந்து சென்றதும் தன் தோழி யாழினியை கட்டி அணைத்து இனியன் அண்ணா உன்னை நிச்சயம் நன்றாக பார்த்துக் கொள்வார். நீ தைரியமாக இரு. எனக்கு நேரம் ஆகிவிட்டது. கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு தன் தோழியை பிரிய மனமில்லாமல் வீட்டிற்கு சென்றாள் காவ்யா.

 

 

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்