உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -5

Loading

அத்தியாயம் -5

அவனோ அசராமல் “அப்படியா! சரி அப்போ பெரிய இயற்கை இரசிகையா?” என்று சொல்லி சிரித்தான்.மெதுவாக “யாராவது பொண்ணுங்க தனியா வந்து நின்னா உடனே வந்து பேச வேண்டியது” என்று முணுமுணுத்தவள்

இம்முறை “தர்ஷன்  நீங்க என்னைத் தொந்தரவு பண்ணுறத்துக்கே இங்கே வந்த மாதிரி இருக்கு” என்றாள் இன்னும் கோபம் குறையாமல்.

அவனோ அதே புன்னகையோடு “இதை நானும் சொல்லலாம் இல்லையா? நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ண வந்து இருக்கீங்கன்னு” என்ற போது அவளோ புரியாமல் பார்த்தாள்.

அவனோ தன் கைகளை நீட்டி எதிர்புறம் காட்ட அங்கே யோகா பாய் விரிக்கப்பட்டு இருந்தது.அங்கே அவன் அமர்ந்திருந்ததை அவள் கவனிக்கவில்லை என்பதை புரிந்து அமைதியாக நின்றாள்.

அவனோ விடாமல் “இப்போ என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்களுக்கு முன்னாடி இங்கே வந்தது நான் தான்” என்றான்.

அவளோ அதை கவனிக்காதது போல் நின்றுக் கொண்டாள்.அவளின் மனசெய்கையை முதலில் விழிகள் தான் அப்பட்டமாக காட்டிக் கொடுத்தது.அதை அவன் கண்டுபிடித்ததில் மட்டற்ற மகிழ்ச்சியில் நின்றான்.

“என்ன பதிலே இல்லை” என்று அவளை திரும்பவும் சீண்டிப் பார்த்தான்.அவளோ “இது எல்லாருக்குமான பொது இடம் இங்கே தனக்கானது பேசுறதுக்கு யாருக்கும் இல்லை” என்று சொன்னவள் “எதாவது தொல்லை பண்ணிட்டே இருக்கிறது” என்று முணங்கிக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.தர்ஷனுக்கு தமிழ் தெரியாது என்று அவனிடம் இவ்வளவு நேரப் பேச்சும் ஆங்கிலத்தில் தான் இருந்தது.

எப்போதும் போல் தயாராகி முழுநீள மேக்ஸி உடையை அணிந்தபடி வெளியில் நின்று சிந்தியாவுடன் நின்றுக் கொண்டிருந்தாள்.அப்போது தர்ஷன் அந்தப் பக்கமாகச் செல்லவும் சிந்தியா  அவனிடம் தமிழில் “மதன்கிட்டே சாப்பாடு அரேஜ்மெண்ட் பற்றி கொஞ்சம் விசாரிக்கச் சொல்லு நான் கால் பண்ணால் எடுக்கலை நீ வெளியே தானே போற உன் கூட ஆதிரையையும் அழைச்சிட்டு போ அவளுக்கும் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கும்” என்றாள்.

அதற்கு தர்ஷன் “அவங்களுக்கு என்கூட வர விருப்பம்னா எனக்கு பிரச்சினை இல்லை” என்று தமிழில் பேசவும் ஆதிரை தான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தவள் சிந்தியாவின் கையைப் பிடித்து இழுத்து கொஞ்சம் தள்ளி வந்தவள் “ஹேய் அவருக்கு தமிழ் தெரியுமா?”

“யாருக்கு தர்ஷனுக்கா அவன் தமிழன்டி நம்ம சென்னைத் தான்” என்றாள்.

அவளோ “அப்படியா! அப்போ நேற்று மலையாளத்துல பேசுனாங்க”

“அது மலையாளம்  அவனுக்கு தெரியும் அதனால பேசினான் இதெல்லாம் ஒரு டவுட்டுன்னு கேட்டுட்டு நீ சீக்கிரம் கிளம்பு கொஞ்சம் வெளியே சுத்திப் பார்த்துட்டு வா இன்னும் நாலு நாளைக்கு எங்கேயும் நகர முடியாது வியன்காவுக்கு எல்லோருக்கும் எதாவது வாங்குவல்லே அதான் போகச் சொல்றேன்” என்று அவளை துரத்துவதிலேயே இருந்தாள் சிந்தியா.

தர்ஷன் மெதுவாக அவர்கள் பக்கம் எட்டிப் பார்த்து “ப்ளீஸ் லேடிஸ் எனக்கு நேரமாகுது நான் சீக்கிரமா போகனும் உங்க சோகக் கதையை அப்புறமாக பேசுங்க” என்றதற்கு  சிந்தியா “போ ஆதி அப்புறம் பேசிக்கலாம்” என்று அவளை காரில் ஏற்றிய பிறகு தான் அங்கிருந்து சென்றாள்.

கொஞ்சம் தயக்கத்தோடு முன்னால் அமர்ந்தவளைப் பார்த்து லேசான புன்னகையோடு காரை ஓட்ட ஆரம்பித்தான் தர்ஷன்.

ஒரு பெருத்த அமைதி அங்கே நிலவி இருக்க தர்ஷன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.ஆதிரை யோசனையாக அமர்ந்திருந்தவள் மெதுவாக அவன்  புறம் திரும்பி பார்த்தாள்.அவனோ காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான்.

அவர்கள் இருந்த பகுதியிலிருந்து கொஞ்சம் வெளியே கொஞ்ச தூரம் வந்ததும் “உங்களுக்கு எங்கே போகனும்?’’ என்று அவன் பேச்சை ஆரம்பிக்கவும் ஆதிரை வேகமாக “சாரி தர்ஷன்  உங்களுக்கு தமிழ் தெரியும்னு எனக்குத் தெரியாது நான் ஏதோ கோபத்துல அப்படி பேசிட்டேன்” என்றாள்.

அவனோ “எனக்குத் தமிழ் தெரிஞ்சதுனால சாரி கேட்கிறீங்க இல்லைன்னா நீங்க பேசினதைப் பற்றி யோசிச்சு இருக்க மாட்டீங்க அப்படித் தானே” என்று அவன் கேட்கவும் அவளிடம் பதிலில்லை.

“எல்லோரும் எப்பவும் ஒரே மாதிரியாகவும் ஒரே எண்ணத்தோடயும் இருக்க மாட்டாங்க ஆதி அதை  புரிஞ்சுக்கோங்க உங்க கூட்டை விட்டு நீங்க முதல்ல வெளியே வாங்க அப்போத் தான் மற்றவங்களை பார்க்கிற முறையும் மாறும் என்னை நல்லவன்னு காட்டிக்கிறதுக்காக நான் சொல்லலை இதே மாதிரி நீங்க வேற யாரையும் வருத்தப்பட வைக்கக் கூடாதுங்கிற எண்ணத்தில் தான் சொன்னேன்” என்றான்.

அவன் சொல்வது எல்லாம் உண்மைதான் என்ற அர்த்தத்திலும் அவனின் இந்தக் குரல் எங்கேயோ கேட்ட நினைவை அவளுக்குத் தர யாரென்ற நினைவில் ஆழமாய் யோசித்துக் கொண்டிருந்தவள் அப்படியே அமைதியாக இருந்தாள்.

அவள் அமைதியாக இருப்பதைக் கவனித்த தர்ஷன் “நான் இப்படி பேசுனது தப்பா? உங்களை நோகடிச்சிட்டேன்னா?” கொஞ்சம் பதறியபடி கேட்டான்.

அவளோ அவனை ஆழ்ந்து பார்த்தப்படியே இல்லை என்று தலையசைத்தாள்.அதைப் பார்த்து அவன் “அப்புறம் என்ன யோசனை அமைதியாகவே இருக்கீங்க” என்றதும் அவன் பக்கமாக நன்றாக திரும்பியவள் “நான் உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்பேன் நீங்க பொய் சொல்லக் கூடாது” என்றாள்.

காரை ஓரமாக நிறுத்தியவன் இம்முறை அவன் ஆதிரையை ஆழ்ந்து பார்த்தவன் “ம்ம்… சொல்லுங்க முடிந்த வரை உண்மை சொல்ல முயற்சி பண்றேன்” என்றான்.

அவளோ “இந்தக் குரல் நான் கேட்கிற அதே குரல்” என்று கண்களை மூடியபடியே அவனுடைய குரலை இரசித்து உணர்ந்தவளாய் “நீங்க தானே தினமும் ரேடியோவில் இரவு நேரத்தில் பேசுற ருத்ரா தானே” விழிகளில் ஆர்வம் பொங்க கேட்டாள்.

அவனோ “ருத்ரா அது யாரு?” என்று சிரித்தப்படியே கேட்டான்.

அவனது சிரிப்பைப் பார்த்து இவளோ “ப்ச் விளையாடாதீங்க தர்ஷன்  ருத்ரன் தானே நீங்க? எனக்குத் தெரியும் நான் தினமும் உங்க வாய்ஸ்ஸை கேட்பேன்” என்றாள்.

அவனோ “அப்படியா! இப்போ நான் தர்ஷனா இல்லை ருத்ரனா? அதை முதல்ல தெளிவுப்படுத்திக்கோங்க” என்றான் கிண்டலாக…

அவளோ அவனைப் பற்றி அறியும் ஆவலில் எதையும் யோசிக்காமல் “ப்ளீஸ் ப்ளீஸ் எனக்காக” என்று எல்லாவற்றையும் மறந்து கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

தலையை லேசாக சாய்த்து கன்னத்தில் கையை வைத்தப்படி “நேற்று பேசியதற்கும் இப்போ பேசுறதுக்கும் ஆளே சம்பந்தமே இல்லை’ என்று நினைத்தப்படி அவளைப் பார்த்திருந்தான்.

அதைக் கண்டவள் “நீங்க யார்கிட்டயும் தெரியக் கூடாதுன்னு மறைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.

நீண்ட பெருமூச்சு விட்டவன் “ம்ம்… நான் தான் மித்ரா” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் விழிகளில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர வெளிப்படுத்தியவள் தன் இரு கன்னங்களில் கைவைத்து “ஹோ… உண்மையாகவா சொல்றீங்க தர்ஷன் என்னால நம்பவே முடியலை” என்றதும் அவனோ “அப்போ நான் ருத்ரன் இல்லை” என்றான்.

உடனே அவளோ “ப்ச் உடனே என்ன இப்படி மாத்தி சொல்றீங்க?”

“நீங்க தானே நம்ப முடியலைன்னு சொன்னீங்க?அதான்”

அவளோ “ப்ச் தர்ஷன் ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுறீங்க எனக்குத் தெரியும் இந்தக் குரல் நான் தினமும் இரண்டு வருஷமாக கேட்கிறேன் எனக்குத் தெரியாதா?” மகிழ்ச்சியாக புன்னகையோடு கேட்டாள்.

அவனோ “நீங்க என்னோட தீவிர ரசிகையா?” அவளைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

அவளோ “ம்ம்… அப்படியும் சொல்ல முடியாது  என்னன்னு எனக்கு சரியா சொல்லத் தெரியலை உங்க குரல் அந்த இரவோட அமைதியில் அழகாக இருக்கும் அதோட நீங்க ஒவ்வொரு இடத்துக்கும் போன விஷயங்களைப் பத்தி பேசும் போது ஏதோ அப்படியே அங்கே நானும் போன பீல்” இரசித்துக் கொண்டே சொன்னாள் அவளையும் அறியாமல்.

அவள் சொல்வதை எல்லாம் பார்த்தப்படியே கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த இரு நாட்களாக இயற்கையை இரசித்து நின்றவளை பார்த்தவனுக்கு யாரென்றே தெரியாத தன் மீதான ரசனையை அவள் விளக்கிக் கொண்டிருப்பதை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆதிரை “நான் பேசிட்டே இருக்கேன் நீங்க அமைதியா இருக்கீங்க” கேள்வியோடு கேட்டாள்.

அவனோ “இத்தனை நாளாக நான் இவ்வளவு பேசி இருக்கிறேன்னு நீங்கச் சொல்லித் தான்  எனக்கே தெரியுது அந்த ஆச்சரியத்தில் பார்த்துட்டு இருக்கேன்” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டு சிரித்தவள் “ப்ச் பொய் சொல்லாதீங்க தர்ஷன்  நான் உங்கள்  ருத்ரா என்ற வார்த்தை நீங்க சொல்லும் போது  ரொம்ப கணீர்னு இருக்கும் எனக்காக அதை சொல்லிக் காட்டுங்க” என்று திரும்பவும் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

அவனோ “ஆதிரை அது எல்லாம் அங்கே எப்.எம்ல வைச்சு வரும் இப்போ திடீர்னு சொன்னால் எப்படி?”

“சும்மா அந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க” என்ற போது அவனும் கொஞ்சம் நிமிர்ந்து குரலை செறுமியபடி “நான் ருத்ரா உங்கள்  ஹலோ எப்.எம் லிருந்து இன்னைக்கு என்ன ஸ்பேஷல் அதானே” என்று அவன் ஏற்ற இறக்கங்களோடுச் சொல்ல கண்களை சிமிட்டாமல் மெய் மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் தர்ஷன் பேசி முடித்ததும் கைகளை தட்டி “வாவ் சூப்பர் அட்டகாசம்” என்று  சொல்லி சிரித்தாள்.அவள் அப்படிச் செய்ததும் ஏனோ அவனையேப் பார்த்தது போல் இருந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்