Loading

 

 

ஈர்ப்பு 34

 

சற்று முன் நடந்தவைகளை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்து, அனுபவித்தேன். அப்போது அவன் சொன்ன, ‘நாளைக்கு தூங்க நேரம் இருக்காது’ ஞாபகம் வந்தது.

 

‘சீ ஹல்க், பேட் பாய்!’ என்று அவனை திட்டி(கொஞ்சி)யவாறே படுத்துறங்கினேன்.

 

திடீரென்று என்னை யாரோ உலுக்க, அடித்துப் பிடித்து எழுந்தேன். அங்கு அந்த மூவர் கூட்டணி முறைப்புடன் என்னைப் பார்க்க, “ச்சே நீங்க தானா? ஏன் டி இப்படி பேய் மாதிரி மேக்-அப் போட்டுட்டு வந்து என்னை பயமுறுத்துறீங்க?” என்று கொட்டாவி விட்டவாறே கூறினேன்.

 

“அட எரும, இன்னைக்கு உனக்கு கல்யாணம் அது ஞாபகம் இருக்கா?” என்று சாண்டி வினவ, “ஆமா, அதுக்கு எதுக்கு டி நீங்க இப்படி மிட்-நைட்ல இருந்தே ரெடியாகிட்டு இருக்கீங்க? இதுல என்னையும் எழுப்பி விடுறீங்க. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு.” என்று உச்சுக்கொட்டினேன்.

 

“லூஸி மணி அஞ்சாச்சு டி. இன்னும் ஒரு மணி நேரத்துல கோவில்ல இருக்கணும்.” என்று சாண்டி கூற, “என்னாது அஞ்சா? அடப்பாவிங்களா,  எதுக்கு டி இவ்ளோ லேட்டா எழுப்புனீங்க? நீங்க மட்டும் மேக்-அப் போட்டுட்டு அழகா… இல்ல கொஞ்சம் சுமாரா இருக்கீங்க. கல்யாணப் பொண்ணு நான் மட்டும் இன்னும் குளிக்காம இருக்கேன்.” என்றேன் பாவமான குரலில்.

 

“அடியேய் ஓவரா பேசுன இப்படியே போட்டோ எடுத்து குரூப்ல போட்டுடுவேன். ஒழுங்கு மரியாதையா சீக்கிரம் குளிச்சுட்டு வா.” என்றனர் அம்மூவரும்.

 

அவர்களை முறைத்து ஏதோ சொல்ல வந்த என்னை தடுத்த ஷீலா, “நதி இன்னும் குளிக்க போகலையா? அங்க அத்தை நீ ரெடியாகிட்டியான்னு கேட்டுட்டு இருக்காங்க.” என்றாள்.

 

என் அம்மாவின் பெயரை கேட்டதும், இன்னும் நேரம் தாழ்த்துவது எனக்கே ஆபத்தாகிவிடும் என்று தோன்ற, குளியலறைக்குள் புகுந்து கொண்டேன்.

 

அதற்கு பின் அனைத்தும் மின்னல் வேகத்தில் நடக்க, அந்நால்வரின் கூட்டு முயற்சியால் இதோ திருமண அலங்காரத்தில் நான். என்னை நானே ஒருமுறை கண்ணாடியில் பார்த்து வியந்தேன்.

 

மயில் நீல நிற பட்டுச் சேலையும் அதற்கேற்ற மயில் பச்சை நிற பிளவுஸில் தங்க நகைகள் அணிந்து, கல்யாணப் பெண்ணிற்குரிய நாணத்தோடு, ஒருவித தனித்துவமான அழகோடு மிளிர்ந்தேன் நான். என்னவனை காதலித்துக் கரம் பிடிக்கப்போகும் மகிழ்ச்சி என் முகத்தில் அப்பட்டமாக தெரிய, அம்மூவரின் கேலிகள் என்னை தொடர்ந்து கொண்டே இருந்தன.

 

“நதி மா ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே வந்த என் அம்மா கூட ஒரு நொடி என்னை கண்டு ஆச்சரியத்தில் விழிவிரிக்க, மறு நொடி என் கன்னம் வழித்து, “அழகா இருக்க டி.” என்றார்.

 

நான் எதுவும் கூறாமல் சிரிப்புடனே அவரின் வாழ்த்தை ஏற்றேன். ஆம், எனக்கு எதுவும் பேச தோன்றவில்லை. அந்த நிமிடங்களை அனுபவித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நொடிகளையும் அவசரமே இல்லாமல் ரசித்துக் கொண்டிருந்தேன்.

 

சற்று நேரத்தில், எல்லாரும் கோவிலுக்கு கிளம்ப, ஒருவித சுழலில் சிக்கிக் கொண்ட அவஸ்தையான உணர்வு எனக்குள் தோன்றியது. 

 

இந்த வீட்டில் என் அப்பா – அம்மாவிற்கு மகளாக, என் அண்ணனின் தங்கையாக உரிமையுடன் வளைய வந்த நான், இனி இந்த வீட்டிற்குள் நுழையும்போது ராகுலின் மனைவியாகியிருப்பேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சி மற்றும் கவலை என்ற இரு உணர்வுகளும் சரிவிகிதமாக எனக்குள் தோன்றி என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

எல்லா பெண்களும் இந்த தருணத்தை கடந்து தான் வந்திருப்பார்கள்  என்று என் மூளைக்கு தெரிந்தாலும், என் மனது அதை அவ்வளவு எளிதாக ஏற்கவில்லை. இவ்வாறு குழப்பத்தின் பிடியில் நான் சிக்கியிருக்க, அந்த நொடி க்ரிஷின் ஆறுதலுக்காக என் மனம் ஏங்கியது.

 

அடுத்த ஐந்தாவது நொடி, என் அலைபேசியில் அவனிற்காக நான் செட் செய்த பாடல் ஒலித்தது.

 

சஹாயனே சஹாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

சஹாயனே சஹாயனே என்னை நீ ஏன்  பறித்தாய்

 

அந்த நொடி எனக்குள் ஏற்பட்ட குழப்பம் சிறிது மட்டுப்படுவதாய் தோன்ற, மெல்லிய சிரிப்புடன் அதை உயிர்ப்பித்தேன்.

 

எடுத்ததும், “ஹே பப்ளி, உன் ஃபேஸ் ஏன் வாடியிருக்கு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பிரைட்டா தான இருந்துச்சு. அதுக்குள்ள என்ன குழப்பம் உனக்கு?’ என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்க, என் குழப்பம் முற்றிலும் மறைந்தது. அவன் என்னிடம் காட்டும் அக்கறையிலும், எனக்கான அவனின் தவிப்பும், என் குழப்பத்தை விரட்டின. ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற வேண்டும். ஆனால் இங்கோ நான் இழக்கப் போவது எதுவுமில்லையே!

 

ஒரு பக்கம் என் அப்பா – அம்மாவிற்கு செல்ல மகளாக, என் அண்ணனிற்கு அன்பு தங்கையாக, மறுபக்கம் என் அத்தைக்கு சுட்டி மருமகளாக, இவையெல்லாம் தாண்டி என்னவனிற்கு எல்லாமுமாக, இப்படி அனைத்து பக்கமும் என்னை கொண்டாட ஒரு கூட்டமே காத்திருக்க, அந்த குழப்பமே தேவையற்றது என்று தோன்றியது.

 

என் பதிலிற்காக அவன் காத்திருப்பதை அறிந்த நான், “சார், எப்பவும் உங்க ஜன்னல் கதவு மூடாதா?”  என்று அவனை கிண்டலடித்தேன்.

 

“என்ன நிது மா… பேக் டு ஃபார்ம்மா?” என்று  வினவினான்.

 

“ஹே, நேத்தே கேட்கணும்னு நினைச்சேன், அது என்ன நிது?” என்றேன் ஆர்வமாக.

 

“நீ மட்டும் என் பேரை விதவிதமா சுருக்கி கூப்பிடுறேல, அதான் நானும் ட்ரை பண்ண போறேன்.” என்றான் அவன்.

 

“ஹலோ, என் பேரு என்ன உங்க பேரு மாதிரி நீ…ளமாவா இருக்கு?” என்று நான் கதையடிக்க, ஹாலில் என் அம்மாவின் சத்தம் எனக்கு இங்குவரை கேட்டது, “நதி, உள்ள என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் வெளிய வா.”

 

“ஹ்ம்ம், உங்க அத்தை என் பேரை ஏலம் போட ஆரம்பிச்சுட்டாங்க. அப்பறம் பார்ப்போம் பை.”

 

“ஹே நிது, ஒரே ஒரு தடவ…” அவன் ஒரு மாதிரி இழுக்க, ‘ஏதோ வில்லங்கமா கேட்கப் போறான்.’ என்று நினைத்துக் கொண்டே, “ஒரு தடவ…” என்று அவனை ஊக்கினேன்.

 

“ஒரு தடவ…. ‘ஐ லவ் யூ’ சொல்லேன்!” என்று ஏக்கத்துடன் அவன் வினவ, ஒரு நீண்ட பெருமூச்சு என்னிடம்!

 

“என்ன பப்ளி, வேற ஏதாவது கேட்பேன்னு எதிர்பார்த்தியோ?” என்று குறும்பாக அவன் வினவ, “ப்ச்… போடா…” என்றவாறு அலைபேசியை அணைத்தேன்.

 

*****

 

கோவிலில்… என்னை சுற்றி ப்ரியா, சாண்டி, ஷீலா, நேஹா என நால்வரும் வர, முதல் முறையாக குனிந்த தலை நிமிராமல் நடந்து வந்து கொண்டிருந்தேன் நான்!

 

“இங்க பாருங்க உலக அதிசயத்தை, இவ்ளோ நேரம் ஆட்டம் போட்டு எல்லாரையும் பயமுறுத்திட்டு இருந்த நதி, ஃபர்ஸ்ட் டைம் கல்யாணப் பொண்ணா மாறியிருக்கா.” என்றாள் சாண்டி.

 

இதை கேட்ட அங்கிருந்த பெரியவர்கள் கூட சிரிக்க, அவள் கைகளில் கிள்ளினேன் நான்.

 

“அடிப்பாவி என்னை எதுக்கு டி கிள்ளுன?” என்று ப்ரியா கத்த, “சாரி  டி, லெஃப்ட் சைட் கிள்ளுறதுக்கு பதிலா ரைட் சைட் கிள்ளிட்டேன்.” என்று அசடு வழிந்தேன்.

 

இப்படியே கலகலப்பாக பேசிக் கொண்டே சென்ற நாங்கள் கோவில் கருவறையை அடைந்தோம். அப்போது குனிந்தவள் தான் பூஜை முடியும்வரை நிமிரவே இல்லை. அங்கு சென்றதிலிருந்து அவனை பார்க்கவும் இல்லை.

 

இதுவரை அவர்கள் செய்த கேலியின் விளைவா, இல்லை உண்மையிலேயே எனக்குள் தோன்றிய நாணமா, ஏதோ ஒன்று அவனை பார்க்க விடாமல் தடுத்தது.

 

அங்கிருந்த ஆனந்த் கூட, “யாரு மா நீ? நதிக்கு பதிலா நீ எதுக்கு வந்திருக்க? நதி எங்க?” என்று கேட்டு என்னை கிண்டல் செய்ய… அதற்கும் நான் எதுவும் சொல்லவில்லை…

 

ஒருவித படபடப்புடன் இருந்தேன். தலை கவிழ்ந்திருந்ததால் யாருக்கும் என் தவிப்பு தெரியவில்லை.

 

அப்போது மெல்லிய குரல் என் காதருகே கேட்டது, “ஈஸி நிது, ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க? வந்ததுலயிருந்து என் முகத்தை கூட பார்க்கல. என்னாச்சு?” என்றான் கிசுகிசுப்பாக.

 

‘யாருக்கும் தெரியாதது, இவனுக்கு மட்டும் எப்படி தெரியுது? இது தான் வேவ்லேன்த்தோ! ஆனா, நீ எப்போவுமே ச்சோ ஸ்வீட் டா!’ என்று நான் அவனை உள்ளுக்குள் கொஞ்சிக் கொண்டிருக்க, அவனோ என் கைகளை ஆதரவாகப் பிடிக்க, அவனை நிமிர்ந்து பார்த்து சிரித்தேன்.

 

இதுவரை அவன் புற அழகை மட்டும் பார்த்து ஜொள்ளிய என் மனம் இப்போது அவன் அக அழகை பார்த்தும் ஜொள்ளியது!

 

“இதோ கைகோர்த்துட்டாங்கல, என்ன டா இன்னும் இவங்க ரொமான்ஸை ஆரம்பிக்கலையேன்னு பார்த்தேன். இனிமே இது மாதிரி நிறைய சீன்ஸ் இருக்கும். எல்லாரும் மிஸ் பண்ணாம பாருங்க.” என்றான் ஆனந்த்.

 

அதில் இருவரும் சுயத்திற்கு வர, நான் ஆனந்தை பார்த்து முறைக்க, அவன் தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்தான் அவன்.

 

அவனை என் அருகில் வர சொல்லி, மெதுவாக அவன் காதில் முணுமுணுத்தேன். அதன் பின்னர், அவன் இருக்கும் இடமே தெரியாமல், அவ்வளவு அமைதியாக இருந்தான்!

 

சற்று நேரத்தில் ஐயர் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே, தாலியை எடுத்து ராகுலின் கைகளில் கொடுக்க, அவனோ என் சம்மதத்திற்காக என் முகம் பார்க்க, இப்படி ஒருவன் என் வாழ்க்கை துணையாக வருவதை எண்ணி கர்வத்தில் என் முகம் மிளிர்ந்ததோ, அதையே சம்மதமாக ஏற்று என் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு என்னை அவனின் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான்.

 

அங்கிருந்த அனைத்து பெரியவர்களிடமும் ஆசீர்வாதம் பெற்று, சிறியவர்களின் கிண்டல்களையும் பெற்று மனம் நிறைந்து எங்கள் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தோம்.

 

கோவிலில் கல்யாணத்தை முடித்துவிட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கும் இவர்களின் கலாட்டாக்கள் தொடர, அந்த அலுவலகமே திண்டாடும் அளவிற்கு இருந்தது அவர்கள் செய்த அலப்பறைகள்.

 

சார்பதிவாளரோ அரண்டு போய் இருந்தார்!

 

ஏற்கனவே ராகுல் சிபிஐ என்று தெரிந்ததிலிருந்தே மரியாதையாக நடந்துக் கொண்டனர் அங்கிருந்த அனைவருமே.

 

ஆனால், இவர்களின் லூட்டியில் உண்மையிலேயே இவர்கள் சிபிஐ ஆபீஸர்கள் தானா என்ற சந்தேகம் அவர்களுக்கு கண்டிப்பாக வந்திருக்கும்.

 

உதாரணத்திற்கு, சாட்சிக் கையெழுத்து போட மணமகன் சார்பில் ஒருவரும் மணமகள் சார்பில் ஒருவரும் வருமாறு கூற, ஆனந்த், கிருஷ்ணா, அபி –  மணமகன் சார்பில் நாங்கள் மூவரும் கையெழுத்து போடுவோம் என்று அடம்பிடிக்க, நேஹா, சாண்டி, ப்ரியா – மணமகள் சார்பில் நாங்கள் மூவரும் கையெழுத்து போடுவோம் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

 

பெரியவர்களோ, “நீங்க எக்கேடோ கெட்டுப் போங்க.” என்று கூறிவிட… அங்கிருந்தவர்களின் பாடு தான் திண்டாட்டமானது!

 

அவர்கள் ஒன்றும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தயங்க, கடைசியில் ராகுல் தான் அனைவரையும் சமாதானப்படுத்தினான்.

 

ராகுல் சார்பில் ஆனந்தும், என் சார்பில் சாண்டியும் சாட்சிக் கையெழுத்து போட்டனர்.

 

ஒரு வழியாக அந்த அலுவலகத்தையே ரெண்டு படுத்தி விட்டு வீட்டிற்கு வந்தோம். அங்கு பால் பழம் கொடுக்கும் சடங்கு முடிந்ததும், பானைக்குள் மோதிரம் தேடி எடுக்கும் விளையாட்டு நடந்தது.

 

முதல் முறை நாங்கள் கைகளை உள்ளே விட்டு தேடினோம். ஆனால், மோதிரமே கிடைக்கவில்லை.

 

“ஹலோ மிஸ்டர் அண்ட் மிசஸ் ராகுல் கிருஷ்ணா, மோதிரம் என்கிட்ட இருக்கு. நீங்க ரொம்ப நேரமா எதை தேடிட்டு இருக்கீங்க?” என்றான் அபி.

 

அங்கிருந்தவர்கள் சிரிக்க, நான் என் அண்ணனை ‘பாசமாக’ பார்த்தேன்.

 

“சரி இப்போ போடுறேன். யாரு எடுக்குறான்னு பார்ப்போம்.” என்று கூறிவிட்டு, அம்மோதிரத்தை அந்த பானைக்குள் போட்டான்.

 

நாங்கள் இருவரும் கைகளை உள்ளே விட்டு தேட, ஆனந்த் மற்றும் கிருஷ்ணா, “ராகுல் விடாத டா, எப்படியாவது மோதிரத்தை எடுத்துடு.” என்று கூற, சாண்டி, ப்ரியா மற்றும் நேஹா, “நதி… கம் ஆன்… நீ தான் ஜெய்க்கணும்.” என்று கூற, அந்த இடமே களைக்கட்டியது.

 

நானோ இவர்களின் கூச்சல்களை கேட்டு சிரித்துக் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். அப்போது அவன் விரல்கள் அம்மோதிரத்தை என் விரல்களில் புகுத்தி விலகியது. நான் ஆச்சர்யத்தோடு அவனை பார்க்க, அவன் மெல்லிய சிரிப்புடன் லேசாக கண்ணடித்தான்.

 

‘ம்ம்ம் மறுபடியும் ஒரு ச்சோ ஸ்வீட்!’

 

“ஹலோ இவ்ளோ நேரம் உள்ள என்ன பண்ணிட்டு இருக்கீங்க? ஒரு மோதிரம் எடுக்க இவ்ளோ நேரமா?” என்றான் ஆனந்த்…

 

நாங்கள் இருவரும் கையை வெளியே எடுக்க, என் கையில் இருந்த மோதிரத்தை பார்த்ததும் சாண்டி, ப்ரியா மற்றும் நேஹா ஆர்ப்பரிக்க, ஆனந்த், கிருஷ்ணா மற்றும் அபி ராகுலை முறைத்தனர்.

 

இப்படியே நேரம் செல்ல, மதியம் ஓய்வெடுக்குமாறு என்னை  அறைக்குள் அனுப்பி வைத்தனர். உள்ளே சென்று ஃப்ரெஷ்ஷாகி என் அலைபேசியை எடுத்ததும் அழைப்பு வந்தது. புன்னகையோடு அதை உயிர்ப்பித்தேன்.

 

“ஓய், பப்ளி என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மறுபுறத்திலிருந்து ராகுல் கேட்க, “ஹ்ம்ம், நீங்க என்ன பண்றீங்களோ அதை தான் நானும் பண்றேன்.” என்றேன்.

 

“அப்படியா? நான் கல்யாணம் ஆகியும் இன்னும் என் வைஃப் என் பக்கத்துல இல்லைன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். அப்போ நீயும் அதையே தான் ஃபீல் பண்றீயா?” என்று சிரிப்புடன் வினவினான்.

 

நான் ஏதோ சொல்ல வருவதற்குள், என் அலைபேசியை பிடுங்கிய சாண்டி, “அண்ணா கொஞ்ச நேரமாச்சும் உங்க வைஃபை தூங்க விடுங்க. அப்போ தான் நைட் ஃப்ரெஷா இருப்பா.” என்று அவள் கூறி முடிக்கவும், அதிர்ந்த நான், “ஹே எரும என்ன டி சொல்ற?” என்றேன்.

 

என் பதட்டத்தில் அவளுக்கும் ஏதோ புரிந்திருக்க, “லூஸி, நைட் ரிசெப்ஷனுக்கு ஃப்ரெஷா இருப்பன்னு சொல்ல வந்தேன். நீ நினைச்ச மாதிரிலா ஒன்னும் இல்ல. ஆளை பாரு!” என்று நமுட்டுச் சிரிப்புடன் அலைபேசியை என்னிடம் தந்துவிட்டு சென்றாள்.

 

நானோ அசடு வழிந்தவாறே அலைபேசியை காதில் வைக்க, அதற்காகவே காத்திருந்ததை போல, “என்ன நிது மா, நீ அப்படி எதை யோசிச்ச?” என்று சிரிப்புடன் கேட்டான் ராகுல்.

 

“க்கும், ஒன்னும் தெரியாத மாதிரியே கேட்க வேண்டியது!” என்று நான் முணுமுணுக்க, “ம்ம்ம், எனக்கு என்னென்ன தெரியுதுன்னு நீயே நைட் செக் பண்ணிக்கோ.” என்றவாறே அலைபேசியை அணைத்தான்.

 

‘அச்சோ, எல்லாம் இந்த சாண்டியால வந்தது.’ – இதை கோபத்தோடு அல்ல வெட்கத்தோடே நினைத்தேன்.

 

*****

 

அன்று இரவு… ரிசெப்ஷனிற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். வெந்தய நிற டிசைனர் சேலையும் நேவி ப்ளூ கலர் பிளவுஸும் அணிந்து அதற்கேற்ற  ப்ளூ குந்தன் செட் அணிந்திருந்தேன். லைட் மேக்-அப் மட்டும் போட்டு ஒரு முறை கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டுக்கொண்டேன்.

 

வெளியில் வந்தால், அனைவரும் தயாராகி காத்திருந்தனர். என் கண்களோ ராகுலைத் தேட, “நீங்க தேடுற ஆள் இன்னும் ரெடியாகல.” என்றாள் நேஹா.

 

‘அச்சோ பார்த்துட்டாளே, சரி சமாளிப்போம்!’ என்று நினைத்தவாறு, “நான் யாரையும் தேடலையே.” என்றேன்.

 

“அதான் உங்க முகத்துலயே தெரியுதே!” என்று நேஹா சிரிக்க, “அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது?” என்று கண்களை சுருக்கி வினவினேன்.

 

“லைட்டா… இப்போ பாருங்க, நீங்க தேடுன ஆள் வந்துட்டாங்க.” என்றாள் சற்று சத்தமாகவே.

 

‘அச்சோ என் மானத்தை வாங்குறாளே!’ என்று நினைத்தபடியே திரும்பினேன்.

 

அங்கு ப்ளூ கலர் கோட் சூட்டில் கம்பீரமாக வந்து கொண்டிருந்தான் ராகுல். இப்போது வெட்கம் மானம் பார்க்காமல் வெளிப்படையாகவே சைட்டடித்தேன் நான்.

 

அப்போது பக்கத்தில் யாரோ கனைக்கும்  சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தேன். அங்கு ஆனந்த் நின்று கொண்டிருந்தான். 

 

“என்ன மேடம், இப்படி பப்ளிக்கா சைட்டடிச்சுட்டு இருக்கீங்க?” என்று அவன் வினவ, “ஹீ இஸ் மை ஹஸ்பண்ட். நான் பப்ளிக்கா சைட்டடிப்பேன். இல்ல ப்ரைவேட்டா சைட்டடிப்பேன். உங்களுக்கு என்ன?” என்றேன் மிதப்பான குரலில்.

 

“ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் சேர்ந்து என்னை சைட்டடிக்க விடாம பண்ணிட்டு, இப்போ நீங்க மட்டும் நல்ல பண்றீங்க பா ரொமான்ஸை!” அவன் புலம்புவதை கேட்டு அனைவரும் சிரிக்க, நேஹா அவனை இடித்து ஏதோ கூறினாள்.

 

அதற்குள் என் அருகில் வந்த ராகுல், “இங்க யாரோ என்னை தேடுனாங்க போல.” என்றான் மெல்லியக் குரலில்.

 

நானோ வேகமாக, “நான் ஒன்னும் தேடலையே.” என்றேன்.

 

“நீ தேடுறன்னு நான் சொல்லவே இல்லையே. அப்போ நீ தான் தேடுனதா?” என்றான் கண்சிமிட்டி.

 

இப்படியே சில நேரம் அவனை கலாய்த்துக் கொண்டும், பல நேரம் அவனிடம் மாட்டிக் கொண்டும் அந்த ரிசெப்ஷன் ஹாலிற்கு வந்தோம்.

 

அங்கு எங்கள் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.

 

அப்போது அங்கு வந்த தாமோ அங்கிள், “ஹே யங் மேன், எப்படியோ அன்னைக்கு சொன்ன மாதிரியே வெயிட் பண்ணி லவ் சொல்லி ஒரு வழியா கல்யாணமும் பண்ணியாச்சு.” என்றார்.

 

‘என்னைக்கு சொன்ன மாதிரி?’ என்று புரியாமல் நான் பார்க்க, அதை கண்ட தாமோ அங்கிளோ, “அன்னைக்கு உங்க மாமா பத்தி கேட்க வந்தப்போ, நான் கூட கேட்டேன், அவங்க ஃபேமிலியை காப்பாத்த உங்க டீம் இருக்கும்போது நீங்களும் ஏன் இவ்ளோ பாடு படுறீங்கன்னு. அதுக்கு சார் சொன்னாரு, ‘என் ஃபியூச்சரை காப்பாத்த நான் தான பாடு படணும்’னு.” என்றார்.

 

நான் அவனை பார்க்க, அவன் புன்னகையோடு என்னை பார்த்தான்.

 

“ஐ’ம் ரியலி ஹாப்பி ஃபார் போத் ஆஃப் யூ!” என்று அவர் வாழ்த்தியதும் நிகழ்விற்கு வந்தோம்.

 

“அப்பறம் யங் மேன், நீ சொன்ன மாதிரியே ரங்கராஜன் நதி பேருல பேங்க்ல வச்சுருந்த பணம் எல்லாத்தையும் எனக்கு தெரிஞ்ச அநாதை ஆஸ்ரமங்களுக்கு பிரிச்சு வேற வேற பேருல அனுப்பிட்டேன். அதுக்கான டீடைல்ஸ் இந்த ஃபைல்ல இருக்கு.” என்று கூறி அவர் கையிலிருந்த ஃபைலை ராகுலிடம் கொடுத்தார்.

 

“அங்கிள் இதை எதுக்கு என்கிட்ட கொடுத்துட்டு?” என்று ராகுல் கேட்கவும், “அதான இனிமே எதுக்கு உன்கிட்ட கொடுத்துட்டு? இந்தா நதி மா இதை வச்சுக்கோ.” என்றார்.

 

நான் குழப்பத்துடனும் ஆச்சர்யத்துடனும் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

“அங்கிள் இதை நதி கிட்ட கொடுக்குறத விட ஷீலா கிட்ட கொடுக்குறது தான் பெட்டர்னு எனக்கு தோணுது. ஏன்னா, அந்த பணத்தை அவ குழந்தையோட எதிர்காலத்துக்குன்னு கொடுத்தப்போ, ‘அந்த பணத்தை வச்சு தான் என் குழந்தை வளரணும்னு அவசியம் இல்ல’ன்னு அந்த பணத்தை வேண்டாம்னு சொன்னதே அவ தான்.” என்றான்.

 

அதை ஷீலாவிடம் கொடுத்த விஷயத்தை பகிர்ந்த போது அவள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியில், அவளை நினைத்து பெருமைப்பட்டேன்.

 

அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும், நாங்கள் சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம். அப்போது அவனையே பார்த்துக் கொண்டிருந்ததை கண்டவன், “என்ன நிது மா, என்கிட்ட என்ன கேட்கணும்?” என்றான்.

 

“இதை.. இதை பத்தி தான் கேட்கணும். எப்படி நான் நினைக்குறது வெளிய சொல்றதுக்கு முன்னாடியே உங்களுக்கு தெரியுது? இன்னைக்கு காலைல நான் குழப்பமா இருந்தப்பவும், கோவில்ல பதட்டமா இருந்தப்பவும், யாரும் கண்டுபிடிக்காதப்போ நீங்க மட்டும் எப்படி கண்டுபிடிச்சீங்க? இதோ இந்த பணம் மேட்டர் கூட, என் பேருல பேங்க்ல இருந்தது எனக்கு கில்டியா இருந்துச்சு. ஏதோ நானே தப்பு பண்ணி பணம் சேர்த்த மாதிரி. நான் யாருக்கிட்டேயும் சொல்லல. ஆனா அதை கூட தெரிஞ்சு சால்வ் பண்ணிருக்கீங்க. எப்படி உங்களால மட்டும் இப்படி லவ் பண்ண முடியுது?” என் கண்களை கண்ணீர் மறைக்க, அந்த நொடிப்பொழுது கூட அவன் பிம்பம் மறையக் கூடாது என்று என் கண்களை துடைத்துக் கொண்டேன்.

 

“ஸ்ஸ்ஸ் பப்ளி, எதுக்கு அழுகுற? பாரு கண்ணுக்கு போட்ட மை ஸ்மஜ்ஜாகிடுச்சு.” என்று அதை துடைத்து விட்டவாறே, “இப்போ என்ன இதுக்கெல்லாம் ரீசன் தெரியணும். அவ்ளோ தான! வெரி சிம்பிள், பிகாஸ் ஐ லவ் யூ! ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி லவ் எக்ஸ்பிரஸ் பண்ணுவாங்க. நீ அதை சொல்லி வெளிப்படுத்தின. நான் அதை என் செயல்ல வெளிப்படுத்துறேன். இதுக்கு போய் இப்படி ஃபீல் பண்ணி அழுகுற! என் பப்ளி எப்பவும் சிரிச்சுட்டே இருக்கணும்.” என்றான்.

 

அந்த நொடி, நாங்கள் எங்கிருக்கிறோம், எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றெல்லாம் எனக்கு கவனிக்க தோன்றவில்லை. அவனை அங்கேயே கட்டிக்கொண்டு, எப்போதும் மனதிற்குள் சொல்வதை வாய் விட்டுக் கூறினேன், “யூ ஆர் ச்சோ ஸ்வீட்!”

 

அப்போது கேட்ட, “சார் மேம், அப்படியே ஒரு போஸ்!” என்ற சத்தத்தில் திகைத்து விலகினேன்.

 

அங்கு அந்த ஹாலில் இருந்த அத்தனை பேரும் இதைப் பார்த்திருக்க, அந்த போட்டோகிராஃபருக்கு சொல்லாமலேயே போஸ் கொடுத்த எங்களை கண்டு அவ்வளவு மகிழ்ச்சி!

 

நானோ அசடு வழிய குனிந்த தலை நிமிராமல் இருக்க, அங்கு வந்தனர் அந்த மூவர் கூட்டணி அவர்களின் ஜோடிகளோடு!

 

“நான் தான் சொன்னேன்ல, கண்டிப்பா இன்னைக்கு ஒரு ரொமான்ஸ் இருக்குன்னு.” என்று ஆனந்த் கூற, பின்னர் ஒவ்வொருத்தராக எங்களை கிண்டலடிக்க, அவர்களுக்கு பதில் சொல்லியே எங்கள் சக்தியெல்லாம் வடிந்தது.

 

அப்போது மீண்டும் அந்த போட்டோகிராஃபர், “எல்லாரையும் ஒரு போட்டோ எடுக்கலாமா?” என்றார்.

 

“ஓஹ், ஷுயர்!”

 

நடுவில் நானும் ராகுலும், எனக்கு இடப்பக்கம் ப்ரியாவும் அபியும் நிற்க, ராகுலின் வலப்பக்கம் கிருஷ்ணாவும் சாண்டியும் நிற்க, அவர்களுக்கு பக்கத்தில் நேஹாவும் ஆனந்தும் நின்றிருந்தனர்.

 

அப்போது அந்த போட்டோகிராஃபர் ஆனந்தை பார்த்து, “சார் ஃப்ரேம் பத்தல, சோ இந்த சைட் வந்துடுறீங்களா?” என்றார்.

 

“ஏன் யா ஏன்? எல்லாரும் ஜோடி ஜோடியா நிக்குறாங்களே அதெல்லாம் உன் கண்ணுக்கு தெரியலையா? ஆளாளுக்கு எங்க ஜோடியை பிரிக்குறதே பொழப்பா போச்சு!” என்று அவன் புலம்ப, நாங்கள் அனைவரும் சிரிக்க, அந்த இன்பமான தருணம் புகைப்படமானது, என்றும் எங்கள் வாழ்நாளில் நீங்காத நினைவாக இருக்க!

 

இனி எங்கள் எல்லாருடைய வாழ்விலும், என்றும் வசந்தமே! (அதான் லிவ்ட் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்!!!)

 

இத்துடன் விடைபெறுவது,

ஹல்க்கின் பப்ளி…

ராகுலின் நிது…

க்ரிஷின் நதி…

 

(இன்னும் எபிலாக் இருக்கு…)

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
22
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்