Loading

பகுதி -10

மணிமேகலையைப் பெண் பார்க்கும் படலம் ஜீவனின் வீட்டில் துவங்கியது.  தேவான்ஷி வீட்டில் இல்லை… 

“இதெல்லாம் எதுக்கு டா ஜீவ்…!!” வெட்கத்தில் தலை குனிய, வேதாந்த் வம்பு செய்தே ஒரு வழி ஆக்கினான்.

“அத்ஸ் வெட்கமா…!! அச்சோ அதெல்லாம் வேற வருமா…!! இத்தனை நாளும் இது எனக்கு தெரியாம போச்சே… !!” என்க

“டேய் வேதம் சும்மா இருடா நீ வேற… !!” எனும் போதே கதிரவன் .,”உள்ளே வரலாமா…?” என்று அனுமதி கேட்க, வேதாந்த் சும்மாயிராமல்,” சார் நீங்க எல்லாம் வந்து பார்க்க கூடாது நாங்க தான் அழைச்சுட்டு வர வேண்டும் “என்றான்.

“ஸ்ஸ்ஸ் ஒரு ஆர்வத்தில் வந்துட்டேன் பா…  ஏன் மேகா நான் தானே எதுக்கு மறுபடியும் மேக்கப்… ??”

“நான் ஒன்றும் அதிகமா மேக்கப் போடலை…!!”  சிணுங்கினாள் .

“அத்தை நீ அநியாயத்துக்கு வெட்கப்படுற இது சரி இல்லை வாங்க வெளியே போகலாம்” என்று வேதாந்த் கிண்டல் செய்வதை மட்டும் விடவே இல்லை.

கதிர்வேலனின் தந்தைக்கு மனம் மகிழ்ந்து போனது. 

“அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்தி விடலாம் “என்றார்.

“சார் எங்களுக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை பட் மேரேஜ் கிராண்டா தான் பண்ணுவோம்…  என் அப்பா இருந்திருந்தால் எவ்வளவு சிறப்பாக பண்ணுவாரோ அதை விட பல மடங்கு அதிகமா செய்வேன் நான்…  சீர்வரிசை எல்லாம் என்ன எதிர்பார்க்கறீங்க …எதுவும் வேண்டாம் னு சொல்லாதீங்க…  அத்தையோட  ப்ராப்பர்டீஸ் இல்லாம  நாங்க செய்ய வேண்டிய அனைத்தும் செய்து விடுவேன் “என்று ஜீவன் உரைக்க தன் அண்ணன் மகனை பெருமிதமாக பார்த்தார் மணிமேகலை.

“ஜீவன்  எனக்கு சந்தோஷமா இருக்கு பட் நிஜமாகவே உங்க அத்தையை தவிர வேறு எதுவும் பெரிதாய் எனக்கு வேண்டாம்…  ப்ளீஸ் மேகா சொல்லுங்க “என்றதும் மணிமேகலையோ.,” நான் எனக்கு தேவையானதை வாங்கிக்கிறேன் கதிர்…  தடை சொல்லாதீங்க “என கூறி விட சமாதானம் செய்து விட்டார்.

பெண் பார்க்கும் படலம் இனிதே நடந்து முடிந்தது அனைவரும் கிளம்பி விட்டனர்.

அனுகீர்த்திகா அமைதியாக நின்றிருக்க, மனதிலோ.,’ அக்கா எங்கேப் போயிருப்பா ஏன் இந்த டைமில் இல்லாம கிளம்பினா…?” என யோசித்தாள்.

“ஹேய் தவுசண்ட் வாலா என்ன அமைதியா இருக்க…!!  சோறு போடுவாங்களா, மாட்டாங்களா னா…  ??”

“டேய் ஊசிப் போன உளுந்தவடை…  உன்னை கேட்டேனா உன் வேலையைப் பாரு டா…  ஆளைப் பாரு…  சைனா பீஸ் “

“சைனா பீஸா…  யாரு நானா..? இருடி உன்னை முதல்ல இங்கிருந்து துரத்துறேன்… ” விழிகளை உருட்டி முறைத்தான்.

“யப்பா  பெரிய கண்ணகி, முறைச்சு பார்த்து பஸ்பமாக்கிடுவ போயா  மேட் இன் சைனா” என வம்பு செய்து விட்டு நகர்ந்தாள்.

“இவளை…  தேவா தங்கச்சினு நான் உன்னை விடுறேன் டி டீமனிக் ..?”

“டீமனிக்கா… !! அப்படின்னா…??” 

“ஆமா டீமனிக் தான்…  அந்த வகைப் பேய்கள் தான் ஆபத்தானவையாம் ,இருக்கிறவங்களை எல்லாம் காயப்படுத்தி வைக்குமாம் சினிமாவில் காட்டுற மாதிரி …நீ வந்ததும் என்னை கழுத்தை நெரிச்ச இல்ல அதனால டீமனிக் தான்…  இங்கே பாரு காயத்தை..” என்றான் முறைப்பாக

“அது நான் தான் சொன்னேனே நீ ஒரு சைனா பீஸ் னு, அதான் டச் பண்ணதும் டேமேஜ் ஆகிட்ட, வாரண்டி கியாரண்டி எதுவும் கிடையாது… இந்த  ஜீவன் சாரை சொல்லனும்…  அவர்  ஷோரூமில் கூட சைனா பீஸ் விற்க மாட்டேங்கிறாரு… ஆனா கூடவே ஒரு சைனா பீஸ் வச்சு சுத்திட்டு இருக்கார் “என நாக்கு துறுத்தி பழிப்பு காட்டி விட்டு சென்றாள்.

“ஓவரா டேமேஜ் பண்றாளே…  இருடி உன்னை கவனிச்சுக்கிறேன் குட்டிசாத்தான்…” முணுமுணுத்தவன் ஷோரூமிற்கு கிளம்பினான்.

 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 

ரௌடிக்கும்பல் தலைவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். கூடவே அவனது அடியாட்களும்.

 

அவனை ஏற்பாடு செய்திருந்த அந்த மனிதர் மருத்துவமனைக்கு வந்தார்.

“சார் அண்ணனை ஐசியூ வில் வச்சிருக்காங்க சார்..” முனகினான் ஒருவன்.

“த்தூ எதுக்கும் லாயக்கில்லாத உங்க கிட்ட அந்த வேலையை கொடுத்தேன் பாருங்க என்னை சொல்லணும்” என்று சலித்துக் கொண்டார்.

“சார் நாங்க என்ன கனவா கண்டோம்… காத்துல கத்தி கட்டை எல்லாம் பறக்கும் னு…  கத்தி காத்துல வந்து எங்களை எல்லாம் கிழிச்சு காயப்படுத்தி வச்சிருச்சு அண்ணனை கட்டையாலேயே அடிச்சு கோமாவில் படுக்க வச்சுடுச்சு தெரியுமா…??”  என்று வலியில் புலம்பினான்.

“வாட், என்னடா கிறுக்கு தனமா உளர்றீங்க தண்ணி அடிச்சு எங்கேயோ விழுந்துட்டு கதையா சொல்றீங்க  இதுவரை என் கிட்ட பிடுங்கின பணத்தை வச்சு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க எனக்கென்ன..??” என்று கிளம்ப… 

“சார் நிஜமாகவே காத்துல தான் சார் கத்தி வந்தது…  நம்புங்க சார்…”  என்று முனகியவனோ மயக்க நிலைக்கு  சென்று விட்டான்.

“என்ன இது இப்படி சொல்றானுக… ?? ஒரு வேளை நிஜமாகவே  ஏதாவது மந்திர வேலையா இருக்குமோ இல்லை ஆவி பேய் ஏதாவது..!!” என்று முணுமுணுத்தார்.

“ஹலோ சாமி நான்  கனகவேல் பேசுறேன்… இங்கே பெரிய பிரச்சினை நான் உங்களை பார்க்க வரேன் சாமி “என்று காரில் ஏறினார்…  சற்று தொலைவு சென்றதுமே , கனகவேலின் கார் எதிரே வந்த மற்றொரு டெம்போவால் அடித்து தூக்கியெறியப்பட்டது.  அதில் தேவான்ஷி உஷ்ணப் பார்வையுடன் அமர்ந்திருந்தாள்.

 

மறுநாள் செய்தியில் டிரைவர் இல்லாத டெம்போ ஒன்று கார் மீது மோதியதில் ஒருவர் பலி என்று கனகவேலின் புகைப்படம் வெளியாகியிருந்தது.

“எப்படி டா …?? எப்படி டிரைவர் இல்லாம டெம்போ ஓடுச்சா…?, இது எப்படி சாத்தியம்… ??”என்று மந்திரவாதி கத்திக் கொண்டிருக்க…  ரௌடிகளும் அடிபட்ட விஷயத்தையும் கூறி அதிர வைத்தனர்.

“என்ன இது எப்போ… ??”

“சாமி அதை சொல்ல தான் கனகவேல் உங்களுக்கு ஃபோன் பண்ணி இருந்தார்…  ஆனால் அதற்குள் ஆக்ஸிடண்ட் நடந்திருக்கு…  எனக்கு என்னவோ  இதெல்லாம் அந்த பொண்ணு ஆவி தான் பண்ணுது னு தோணுது…”  என்று மென்று விழுங்கினான் அவரது சீடன்.

“முட்டாள் நடந்தது எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசுற…  அதுக்கு வாய்ப்பே கிடையாது…  நீ முதல்ல அந்த இளங்கோவனுக்கு  ஃபோன் பண்ணி உடனே பூஜைக்கு ஏற்பாடு பண்ணனும் னு வரசொல்லு “என்று சொல்ல

“சாமி மறந்துட்டிங்களா அந்த பொண்ணு ஓடிப் போயிட்டதா அவர் சொன்னாரே…  !!!”

“ச்சே…  அவன் கிட்ட சொன்ன வேலை எது உருப்படியா நடந்தது…  நீ.. நீ.. நீ… அவன் பேர் என்ன  ஹான்  ஜீவன்,  ஜீவனுக்கு ஃபோன் பண்ணி வரச் சொல்லு,  உடனே பூஜைக்கு ஏற்பாடு பண்ணனும் னு சொல்லி பணத்தோட வரச் சொல்…  பத்து லட்சம் வேணும்… அதுவும் கேஷா வேணும் னு சொல்லு…”  என்றார்.

“சாமி ஆயிரம், ஐநூறு ரூபாய்,  எல்லாம் செல்லாது னு சொல்லிட்டாங்க இந்த நேரத்தில் பணம் கேட்டா கிடைக்குமா…??”

“கிடைக்கனும் அவன் அப்பாவுக்காக என்ன வேணும்னாலும் செய்வான் நீ சொல்லு…  உடனே கிடைக்கலைனாலும் இன்னும் ஒரு மாதத்திற்குள்ள ஏற்பாடு செய்ய சொல்லு “என்றார்.

“சரிங்க சாமி…”  என்று வெளியேறினான் அந்த சீடன்.

“திடீர் னு டெம்போ நகருமா , அதுவும் காரை அடிச்சு தூக்கற அளவுக்கு…  இல்லையே ஏதோ தவறா நடக்குதே… இல்ல இல்ல என் ப்ளான் ல ஏதோ ஒண்ணு சறுக்குது…  இந்த நேரத்தில் இந்த பிரதமர் வேற இப்படி ஒரு அறிவிப்பு விட்டுத் தொலைஞ்சுட்டாரு… இந்நேரம் என்  கனவை அந்த ஜீவனே நிறைவேத்தி வச்சிருப்பான் எல்லாம் போச்சு விட மாட்டேன் நான் நினைச்சதை அடைஞ்சே தீருவேன் “என்று எண்ணியபடி அமர்ந்திருந்தார்.

 

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

“அப்புறம் ஆன்ட்டி மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சு ஒரே ட்ரீம்ஸ் தான் உங்களுக்கு…” என்று மணிமேகலையைக் கிண்டல் செய்து கொண்டிருந்தாள் தேவான்ஷி.

“ஸ்ஸ்ஸ் நீ இருக்கியே…  சும்மா இரு தேவ்… “

“ஹை ஹை ஹை…!!  வெட்கமா…!! அச்சோ க்யூட் அத்தை…!! “

“வாயாடி அவன் வந்திடப் போறான், நீ என் கண்ணுக்கு தெரிய மாட்டன்னு நினைச்சுட்டு இருக்கான்,  அமைதியா இரு “என்று சொல்ல தேவான்ஷி வேகமாக அறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

“அவ்வளவு பயம்…  ம்ம்ம்…  அவனுக்கு பயந்து என் மேரேஜ் அட்டன்ட் பண்ணாம இருந்திடாத… சரியா..!!”

“நீங்க என்னை  கண்டுக்காத மாதிரி இருந்தா நான் உங்க கூடவே இருப்பேன் ஓகே…” என்று டீலிங் பேசினாள் தேவான்ஷி.

“நிச்சயமாக… !!” என்று உறுதி கொடுத்தார் மணிமேகலை.

 

மணிமேகலையின் திருமண வேலைகளும் துரிதமாக நடக்க ஜீவன்  பிஸியாக அலைந்து கொண்டிருந்தான்.

“ஜீவன் லைனில் கிடைக்கலை சாமி…  “

“சரி காத்திருப்போம்  நீ இளங்கோவனுக்கு  ப்ரஷர் கொடு பணம் நமக்கு வேணும்… ” என்றார் அழுத்தமாக.

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

 

நாட்கள் செல்ல…. மணிமேகலை கதிர்வேலன் திருமண நாளும் வந்தது.

“காலம் போன கடைசியில் கல்யாணம் ஒண்ணு தான் குறைச்சல் இப்போ உங்க அண்ணனுக்கு,  அதுவும் எவ்வளவு பெரிய மண்டபம் எவ்வளவு கிராண்டா ஏதோ இளவயசுக்காரங்களுக்கு பண்ற மாதிரி இவ்வளவு அலப்பறை பண்றீங்க…, ஏதோ ஒரு கோவில்ல வச்சு கல்யாணத்தை முடிச்சிட்டு ஹோட்டலில் சாப்பாடு குடுத்து முடிக்க வேண்டியது தானே..! இதுல ஹனிமூன் போக ஏற்பாடு வேற …!”என்று தன் கணவனிடம் சலித்துக் கொண்டாள் நர்த்தனா.

“ஏய் வாயை மூடு டி என்னவோ நீ கையை அறுத்துட்டு செலவு பண்ற மாதிரி பேசுற…, உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு…  , உனக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை என்றால் கிளம்பு , இங்கிருந்து சும்மா நொய் நொய்னுட்டு ப்ப்ச்… ” என்று மனைவியை என்றும் இல்லாத திருநாளாக இன்று அடக்கினான் ரமேஷ்.

“யோவ் என்ன ஓவரா பேசுற…  கொழுப்பு கூடிருச்சா உனக்கு…  ஏதோ சொந்த பந்தம் எல்லாம் ஒரு மாதிரியா பேசுறாங்க னு சொன்னேன்… இந்த காலத்தில் நல்லது சொன்னா கூட தப்பா தான் தெரியுது… ” முறுக்கி கொண்டாள் நர்த்தனா.

“அடேங்கப்பா அக்கறை தான்,  நீ இப்படியே பேசிட்டு இரு என் அப்பா காதில் விழட்டும்…  அப்புறம் நடுத்தெருவில் நிற்க போற” என்று முணுமுணுத்தான்.

 

கணவனிடத்தில் திட்டு வாங்கிய கோபத்தை மணிமேகலையிடம் இறக்க செல்ல , அங்கே மணிமேகலை தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார்.

“ஆன்ட்டி செமயா இருக்கீங்க….  உங்களுக்கு 32 வயசு ஆகிடுச்சு னா யாரும் நம்ப மாட்டார்கள்…  செம ப்யூட்டிஃபுல் “என்று  தேவான்ஷி பாராட்ட அனுவும் அதையே கூறினாள்.

 

நர்த்தனா உள்ளே நுழைய மணிமேகலை கண்ணாடி வழியே அவளைப் பார்க்க , ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி ஏதோ வேண்டா வெறுப்புடன் நுழைவது போல காட்டிக் கொண்டாள் நர்த்தனா .

அவளது பின்னாலேயே பிரீத்தியும் நுழைய ,மணிமேகலை மனதில் ‘ரைட்டு ஏதோ கச்சேரி பண்ண வந்திருக்காளுக கொஞ்சமா ஆட விடலாம்… ‘என்று நினைத்தபடி அனுவிடம்  .,”அனு ஒரு லெமன்  ஜூஸ் வேணும்டா டயர்டா இருக்கு” என்றதும் அனு நர்த்தனா ப்ரீத்தியை பார்த்தபடி வெளியேறினாள்.

“அப்புறம் எப்படியோ என் கொழுந்தனை வளைச்சு போட்டு எங்க வீட்டுக்கு மருமகளா வந்துட்டீங்க…  ம்ம்ம் காலம் போன கடைசியில் உங்களுக்கு வந்த வாழ்வைப் பாருங்க…  ப்ரீத்தி இனிமே இவங்களும் உன் அண்ணி நல்லா பார்த்துக்க…  ஆமா ப்ரீத்தி உங்க நாத்தனார் ஆச்சே அவள் விளக்கு பிடித்து நாத்தனார் முடி போட வேண்டும் என்றால் அவளுக்கு புடவை எடுக்கனும் தெரியுமா…?” என்று சொல்ல தேவான்ஷி பின்னால் இருந்து பல்லைக் கடித்தாள்.

“ஓஓஓ அப்படியா… எடுத்துடலாமே.. !!”

“ஓஓஓ அப்போ எடுக்கலையா அது சரி வீட்டில் யாராவது பெரியவங்க இருந்தா சடங்கு முறை தெரியும்,  இருக்கிற ரெண்டு பேரும் மொட்டைப் பசங்க… , வீட்டுப் பெரியவங்களா நீங்க இருந்து என்ன பிரயோஜனம் அவுத்து விட்ட கன்னுக்குட்டியா திரிஞ்சீங்க,  ஏதோ கொஞ்சம் அழகா இருக்கீங்க, அதனால என் வீட்டுக்காரரோட அண்ணன் ஆசைப்பட்டுட்டார்” என்று நர்த்தனா தன் போக்கிற்கு பேசிக் கொண்டே செல்ல தேவான்ஷி பின்னால் இருந்து நர்த்தனா தலையில் நறுக்கென்று கொட்டினாள்.

“ஸ்ஸ்ஸ் ஆஆஆ யம்மா” என்று திரும்பிப் பார்க்க அங்கே ஒருவரும் இல்லை . மணிமேகலை உள்ளூர நகைத்தபடி வெளியே எதுவும் தெரியாதது போல அமர்ந்திருந்தார்.

“ஏதோ பெரிய கட்டையால அடிச்சது போல இருந்துச்சே…  ஒரு வேளை கனவா இருக்குமோ… முழிச்சுட்டு இருக்கும் போது கனவு வராதே…  கனவா இருந்தாலும் அடிச்சா வலிக்காதே… இப்ப வலிக்குதே… இவ அடிச்சிருப்பாளோ… ” என்று முனகியபடி மணிமேகலையைப் பார்க்க ,அவரோ பச்சைப்பிள்ளை கணக்காய் அமர்ந்திருந்தார்.

“என்ன ஆச்சு அண்ணி…? ஏன் அங்கேயும் இங்கேயும் பார்க்கிறீங்க… ??”என்று ப்ரீத்தி கேட்க ,’ஒன்றுமில்லை ‘என்று தலையாட்டினாள்.

“ஏன் ப்ரீத்தி … உன் சின்ன அண்ணன் மேரேஜுக்கு எவ்வளவு விலை போட்டு புடவை எடுத்தாங்க…  ??”

“மூவாயிரத்திற்கு எடுத்து தந்தோம் எங்க வீட்ல…  !!” நர்த்தனா பதில் கூறினாள்.

“ஓஓஓ சூப்பர்… ஹான் ப்ரீத்தி நான் உனக்கு புடவை  முப்பதாயிரத்திற்கு எடுத்திருக்கேன் பிகாஸ் நீ அவருக்கு ஒரே தங்கை இல்லையா அதான் ..!!”எனும் போதே ப்ரீத்தியின் விழிகள் சாசரைப் போல விரிந்தது.

‘ஒரு விக்கெட் அவுட்டு’ என்று சிரித்தபடி நர்த்தனாவைப் பார்க்க அவளோ கோபத்துடன் ப்ரீத்தியை பார்த்தபடி நின்றிருந்தாள்.

“நிஜமாவா அண்ணி….!!” 

“அட நான் எதுக்கு பொய் சொல்லனும்…  உனக்கு ப்ரைஸ் டேகோடு புடவையைத் தரேன் பிடிச்சிருந்தா பாரு இல்ல மாத்திக்கோ… விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை சொல்லு நான் பே பண்றேன் புரியுதா உன் அப்பா கிட்ட தான் இருக்கும் போய் பாரு “என்று ப்ரீத்தியை அனுப்பி வைத்து விட்டார் மணிமேகலை.

 

கூட்டணி உடைந்த கோபத்தில் நர்த்தனா வெளியே செல்ல முற்பட மணிமேகலையின் கணீர் குரல் தடுத்து நிறுத்தியது .

“ஏய் நண்டு…”

அதிர்வாய் திரும்பிப் பார்த்தாள் நர்த்தனா.

“ஷாக்கை குறை ஷாக்கை குறை… உன்னைத் தான் கூப்டேன்…. இந்த நண்டு  இருக்கே நண்டு  அது வலைக்கு வெளியே வந்திடுச்சுனா சும்மாவே இருக்காதாம் , குடு குடு னு அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டே ஏதாவது சேட்டைப் பண்ணிட்டே இருக்குமாம் ஆனா வலைக்குள் இருந்தா சத்தம் கூட கேட்காது…  அதே மாதிரி தான் நீயும்…. ஆள் இல்லை னு சலம்புறது ,  அப்புறம் அங்க என் மாமனார் கிட்ட வம்பு பண்றது னு ஏதாவது செஞ்ச… , ம்ம்ம் செஞ்சு தான் பாரேன்…  மணிமேகலை மந்திரிச்சு விட்டுடுவா புரியுதா…  போய் அவருக்கு தம்பி பொண்டாட்டியா லட்சணமா வந்தவங்களை வரவேற்றோமா தாம்பூல பை போட்டு எல்லாருக்கும் தந்தோமானு இருக்கனும்… உன் தகிடுதத்தத்தை என் கிட்ட காட்டுற வேலை எல்லாம் என் கிட்ட வச்சுக்காத போடி… ஹைய என்ன லுக்கு… கண்ணை நோண்டி கைல கொடுத்திடுவேன்…  போடி முகூர்த்ததிற்கு டைம் ஆகிடுச்சு நான் ரெடி ஆகனும்” என்று சொல்ல நர்த்தனா முறைப்புடனேயே வெளியேறினாள்.

“சூப்பர் அத்தை…  செம மாஸ்,  ம்ஹூம் கொல மாஸ்… இந்த மாதிரி மெண்டல்ஸ்க்கு எல்லாம் உங்க ட்ரீட்மெண்ட் தான் கரெக்ட்…” என்று  சிரித்தாள் தேவான்ஷி. 

 

முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு பொண்ணை அழைச்சுட்டு வாங்க என்று ஐயர் கூறியதும் அனு மணிமேகலையை அழைத்து வர அறை வாயிலிலேயே தேவான்ஷி நின்றிருந்தாள்.

அதனைக் கண்ட ஜீவனோ.,” ஓய் நீ தான் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டாயே …ஏன் தனியா நிற்கிற …??வா என் கூட…  என் பக்கத்தில் நில்லு “என தன்னோடு நிறுத்தி கொண்டான். தேவான்ஷி அவனது முகத்தைப் பார்த்து கொண்டு நிற்க தன் கையில் இருந்த அட்சதையை அவளிடமும் கொடுக்க வாங்கிக் கொண்டாள்.

37 வயது ஆண் மகன் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிடுக்காய் கம்பீரமாக அமர்ந்திருந்தார் கதிர்வேலன்.  அவருக்கு இணையான தோரணையுடன் வந்தமர்ந்த மணிமேகலையை ரசனையுடன் பார்த்து விட்டு ஐயர் கூறிய மந்திரங்களை உச்சரிக்க சொந்தபந்தத்தில் சிலர் முணுமுணுத்தனர்.

கதிர்வேலன் காத்திருந்து கல்யாணம் பண்ணாலும் நல்லா தேவதை மாதிரி தான் பொண்ணு பார்த்து இருக்கான்….  ரெண்டு பேருக்கும் ஜோடிப் பொருத்தம் நல்லா தான் இருக்கு.. என்று சிலரும் இந்த வயசில் கல்யாணம் பண்ணி குழந்தை குட்டி பிறக்கிறது சந்தேகம் தான் என்று சிலரும்…  அதெல்லாம் குழந்தை பிறக்கும் என்று சிலரும் சொல்ல அனைவரின் வாழ்த்துகளோடு இனிதே திருமணம் நடந்து முடிந்தது.

…… தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    3 Comments

    1. Archana

      😍😍😍😍mega athai mrg ovr ah🥳🥳🥳🥳 antha samiyar enna ellarayu vechu game aaduran🤔🤔🤔

    2. Janu Croos

      ஒருவழியா மேகா கதிர் கல்யாணம் நடந்துடிச்சு… ஏன் நர்த்தனா உனக்கு ஏன் இநாத வேண்டாத வேலை….மேகா கிட்ட வாயக்குடுத்து நல்லா வாங்கிகட்டிக்கிட்டியா…
      என்னது….தேவா யார் கண்ணுக்கும் தெரியலயா….அப்போ எப்படி மேகா கண்ணுக்கு அனு கண்ணுக்கு வேதா கண்ணுக்கு எல்லாம் தெரியுறாள்….
      அந்த ரவுடி கும்பல அடிச்சது யாரு….ட்ரைவர் இல்லாம லாரி எப்படி ஓடும்….எல்லாம் மர்மமாவே இருக்கே….