Loading

எனதழகா – 51 ❤️

காற்றில் பனிக்கட்டியை கரைத்து தூவி விட்டது போல்,  காற்று  சில்லென்று வீசி உடலெங்கும் ஊடுருவியது. அதை ரசிக்கும் மனநிலையில் யாரும் இல்லை குறிப்பாக ஆகாஷிற்கு .

காலை பொழுதில் கிளம்பியதில் இருந்து மதிய நேரம் வந்தும் தண்ணீரை தவிர ஒன்றும் உண்ணாமல் ,குடிக்காமல் பயணம் செய்ததால் வந்த கோபம். வீட்டிற்கு வந்த பிறகாவது உண்ணலாம் என்று நினைத்தவனுக்கு இடியாக இறங்கியது ராதேயின் ரீ- என்டிரி.

அதற்கே கடுப்பானவன், ” இல்லை இல்லை அத்தையை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறோம். ஃபஸ்ட் விருந்தோம்பல் தான் ” என்று மனதில் அவனே ஆறுதலாக நினைத்துக் கொண்டான் .ஆனால், அதையும் முறியடிக்கும் விதமாக வாசலில் அவரும் நின்று கொண்டு , மற்றவர்களையும் வெளியில் நிற்க வைத்து விட்டார்.

அதில் எரிச்சலாகி , ” அத்தை …….” என்று அவன் கத்தியதில் அனைவரும் திரும்பிப் பார்த்தனர் . வசுதேவர் மறுபடியும் நெஞ்சில் கைவைத்தார்.லஷ்மி அம்மா , மற்றும் அர்ஜூன் அவரின் அருகில் சென்று பார்க்க, லஷ்மி அம்மா தான் “ஏன்டா கத்துற? டாக்டருக்கு தான படிச்சிருக்க. ஹார்ட்டுக்கு ஆப்ரேஷன்  பண்ணிருக்கிறவர் முன்னாடி கத்த கூடாதுனு தெரியாதா? “

” இதெல்லாம் தெளிவா பேசுங்க. ஏன் உங்களுக்கு தெரியாது? ஹார்ட் ஆப்ரேஷன் செஞ்சவங்களுக்கு அதிர்ச்சி தர விஷயம் சொல்லக் கூடாதுனு ? ” ஆகாஷ் கோபமாக கேட்டான்.

லஷ்மி அம்மா தான் மகளா, கணவனா என்று குழம்பி கைகளை பிசைந்து கொண்டிருந்தார்.

இதை அனைத்தையும் அமைதியாக கைகளை கட்டிக் கொண்டு பார்த்தான் அர்ஜுன். ஆகாஷ் அத்தை என்று கூறிய பிறகு தான் நிமிர்ந்து தன் முன்னே இருப்பவர்களைக் கண்டான். அவன் கையை மடக்கி கோபத்தை கட்டுபடுத்துவது உற்ற தோழியான ஆதிராவிற்கே புரியும் பொழுது பெற்றவர்களுக்கு புரியாமல் இல்லை. இருந்தும் அவனின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்று பார்ப்பதற்கு அமைதிக் காத்தனர்.

லஷ்மி அம்மா கைகள் பிசைவதைக் கண்டு “என்ன? மாவு பிசைஞ்சது போதும். உள்ள போவோம். தாத்தாவுக்கு குளிர் ஒத்துக்காது. உங்களுக்கும் தான் ” என்று கூறிவிட்டு அர்ஜுனிடம் திரும்பி “மச்சான் மசமசன்னு நிக்காமல் முடிவை சொல்லு . பாவம் வயசானவங்க ” என்று தன் நண்பன் எதை சொன்னால் உள்ளே வருவான் என்று புரிந்துக் கொண்டு அதன் படியே செய்தான்.

அவனின் முயற்சியை புரிந்துக் கொண்டு பல்லை நறநறவெனக் கடித்துக் கொண்டே உள்ளே வாசலில் கால் வைத்தான். தோட்டத்தின் நடுவில் அம்மாளிகை இருந்தது. உள்ளே நுழைய மூன்று படிகள் இருக்கும். அனைத்து படிகளிலும் ராதேயின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மாமனார் என்று பெரிய பட்டாளமே நின்றுக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு படியாக ஏறும் பொழுதும் முறைத்துக் கொண்டே இருந்தான். உள்ளே சென்றவுடன் யாரையும் கண்டு கொள்ளாமல் சட்டென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.  வேக வேகமாக ராதே தனது அண்ணன் மகனின் அருகில் சென்று “கண்ணா ! எப்படி இருக்க? என் மேல எவ்ளோ கோபம் இருந்தாலும் ….. ” என்று அவர் பேச தொடங்கியவுடன், “பசிக்குது” என்று ஒரு சேர இரு குரல்கள் கேட்டது.

தனது அண்ணன் மகன் உள்ளே நுழைந்தவுடன், ராதேயும் சென்று விட்டார். மற்றவர்களை ராதேயின் பிள்ளைகள்  மற்றும் அவரின் மாமனார் வரவேற்றனர். அதனால் அனைவரும் உள்ளே வரும் பொழுது ஆகாஷ் தான் பொறுக்காமல் கத்தினான் .

திரும்பி பார்த்த ராதே சிறிது நேரம் உற்று பார்த்தார். ஆகாஷீம் அவரைப் போலவே செய்தான். பின்பு, புருவத்தை நீவி விட்டு நிமிர தன்னை கண்டு கொண்டார் என்ற மிதப்புடன் சோபாவில் அமர, அதனை பொய்யாக்கும் விதமாக “யாருப்பா தம்பி நீ? ” என்று கூறியவுடன் அங்கு சிரிப்பலைகள் பரவியது. ஆனால் , அர்ஜுன் மட்டும் நறநறவென பல்லைக் கடித்துக் கொண்டிருந்தான். அருகில் இருந்த ராதே அதனை புரிந்துக் கொண்டு அவனுக்காக உணவு பதார்த்தங்களை எடுத்து வைக்க சென்றவர் திரும்பி “ஆகாஷ் சும்மா சொன்னேன். சாப்பிட வா . அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ ” என்று கூறி அவனின் தலை முடியை கோதிவிட்டு சென்றார்.

அனைவரும் உண்டு விட்டு பயணக் களைப்பு போவதற்காக  உறங்க சென்று விட்டனர். அர்ஜுன் மற்றும் மாடிக்கு  செல்வதை பார்த்த ஒரு ஜீவன் அவன் பின்னால் சென்றது.

இங்கு வெங்கடேஷனுக்கு இதயத்துடிப்பு நிற்பது போலவே இருந்தது  . உள்ளே நுழைந்தவர்களை எந்த காரணத்தை கொண்டும் தனியாக வெளியே செல்லாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது அம்மாளிகையில்.

இன்னும் நம்ப முடியாமல் குட்டி போட்ட பூனை போல் அறையில் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டிருந்தார். வெங்கடேஷன் செய்தி அனுப்பியவுடனே , நிவான் ஆருஷிக்கு பத்திரமாக இருக்கும்படி  மெசேஜ் செய்து விட்டான். இன்னும் சில விஷயங்களை கேட்டும் தெரிந்துக் கொண்டான்.

ஆனால், வெங்கடேஷனுக்கு தான் இருப்பு கொள்ளவில்லை. அவரின் செயலைக் கண்டு ஆருஷிக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது. அதனால், “அப்பா, நம்ம ஒன்னும் தப்பு செய்யலை. அவங்க தான் பண்ணிருங்காங்க. நீங்க ஏன் பயப்படுறீங்க ? ” தனது சந்தேகத்தை தெளிவு படுத்துவதற்காக கேட்டாள்.

வெங்கடேஷன் பதறிக் கொண்டு “ஏன் மா , நான் நினைக்கிறது வேற . இது நல்ல சந்தர்ப்பம். இதை பயன்படுத்தி அவங்களுக்கான தண்டனையை கொடுத்திடனும். அதை நினைச்சு சந்தோஷப்பட்டேன். நம்ம அடுத்தடுத்து திட்டத்தை தீட்டனும் ” என்று கூறி மகளின் அருகில் அமர்ந்து, ஆருஷியின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்து “என் வாழ்க்கையில் என்னை பெத்தவங்க, என் கூட பிறந்தவங்க, என்னை கட்டினவை இப்படி யாருமே என்னை மதிச்சதில்லை. நீ தான்டா என் உலகமே. உனக்காக தான் அப்பா வாழ்றேன். நீ ஒரு மாதிரி சென்னையில் பண்ண அப்போ எனக்கே ஒரு மாதிரி ஆயிடுச்சு. அதை மட்டும் நான் புரிஞ்சுக்கிட்டு இருந்தால் இப்போ நம்ம  லண்டனில் இருந்துருப்போம். சரி! சந்தர்ப்ப சூழ்நிலை. விடு…. நம்ம மத்த விஷயத்தை பார்ப்போம் “என்று கூறிவிட்டு  நிவான், அபி மற்றும் வெங்கடேஷன் மட்டும் கலந்துக்கொள்ளும் பிரத்யேக வீடியோ காலை பேசுவதற்கு சென்று விட்டார் .

ஆனால், ஆருஷியின் மனம் தான் அடித்துக் கொண்டே இருந்தது தான் தன் தகப்பனுக்கு உண்மையாக இல்லையோ என்று.

🌤️ சென்னை

அபியும், நிவானும் சண்டையிட்டு கொண்டிருந்த நேரம் தீன வெங்கடேசன் வந்தார்.

தள்ளாடி கொண்டே வந்தவர் தனது மகனை ஒரு அடி அடித்து “என்ன டா கொடுத்த எனக்கு வாந்தி வாந்தியா வருது ” என்று கூறி “உவக்” என்று மறுபடியும் குமட்டி கொண்டிருந்தார்.

அவருக்காக லெமன் ஜூஸ் கலக்கி எடுத்து வந்த நிவன்”மாமா கம்முனு இரு! உன் மேல தப்ப வச்சுட்டு அவனை ஏன் திட்டுற ? இதுல மசக்கைல இருக்கிற பொண்ணு மாறி உவக் உவக்னு குமட்டிட்டு இருக்க ” என்று அதடி ஜூஸை குடிக்க வைத்தான்.

பரத்தோ ஆப்பிளை நறுக்கிக் கொண்டே “ஒருத்தரு வில்லனுங்கிற பேருல காமெடி பண்ணுறாரு. ஒருத்தரு காமெடினுங்கிற  பேருல வில்லத்தனம் பண்ணிக்கிட்டு இருக்காரு ” என்று முணுமுணுத்தான்.

“டேய் என்ன? ” என்று தீன வெங்கடேஷன் முகத்தில்  போதை தெளியும் வரைதண்ணீரை அடித்துக் கொண்டு தன்னை தெளிவுப்படித்துக் கொண்டே கேட்டார் தீன வெங்கடேசன்.

🏙️AA சொலியுஷன்ஸ்

அசோக் ராகவேந்தரின் ப்ராஜெக்ட் முடிவடைந்தற்காக அக்குழுவிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவர்களுக்கு உணவகத்தில் டின்னர் ஏற்பாடு செய்திருந்தான்.

அதற்காக உணவகத்தில் ராகவேந்தர் , அகிலன் உட்பட அனைவரும் அமர்ந்திருந்தனர். அந்நேரம் அகிலனுக்கும், அசோக்கிற்கும் ஒரு சேர  தொலைபேசியில் அழைப்பு வந்தது.

இருவரும் புருவ முடிச்சுகளோடு எடுத்து பேச, தூரத்தில் அவர்களைக் கவனித்து கொண்டிருந்த நிவானுக்கு சந்தேகமாக இருக்க, அபிக்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது.

அவன் எடுத்து பேசியவுடன்  கண்கள் கலங்கி “நிவான் ” என்று கூறினான்.

நிவானும்  , அபியும் ஒரு சேர செல்ல, அங்கு உள்ளவரைக் கண்டு அதிர்ச்சியாகி நின்றனர்.

எனதழகா – 52 ❤️

அபியும் , நிவானும் சென்ற இடம்  ரியாவின் வீட்டிற்கு தான். அவர்களின் பின்னால் அசோக், அகிலன், சாரா மற்றும் ராகவேந்தர் காரில் இறங்கினர்.

அபியும், நிவானும் அங்கு நின்று கொண்டிருந்த தீன வெங்கடேஷனை கண்டு அதிர்ந்து நின்றனர். பின்னால் வந்த அசோக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது. மீராவை விட்டுவிட்டு  இங்க ஏன் நிற்கிறார் என்று.

பின்னால் வந்த ஈஸ்வரி தான் “என்ன  தீனா ஒரு வழியாக மனசு வந்து நீ உயிரோடு தான் இருக்கேனு உலகத்துக்கு காமிச்சுட்ட போல ” என்று கூறிக் கொண்டே வந்தவர் அசோக்கின் கைகள் முறுக்கேறுவது புரிந்து அவனை இழுத்து கொண்டு ரியாவின் அறைக்கு சென்றனர்.

அங்கு ரியா ரத்த வாந்தி எடுத்து மயங்கி இருந்தாள்.   அவளின் அருகில் தாமரை அழுது கொண்டிருந்தார். தாஸோ ஒரு ஓரமாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கண்கள் பனிக்கவில்லை. ஏன், முகத்தில் எந்தவொரு எதிர்வினையும் இல்லாமல் இருந்தார்.

அசோக் இவர்களைக் கண்ட பின்பு தான், வெளியில் உள்ளவர்களை மறந்து தாஸின் அருகில் சென்றான். ஈஸ்வரியோ  ரியாவின் அருகில் அமர்ந்து தாமரையின் கைகளை பிடித்துக் கொண்டார்.

வெளியில் இருந்து ஜன்னலினூடே அபி கம்பியை இறுகப்பற்றி ரியாவை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் தண்ணீர் வருவதைக் கூட உணராது  வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

தன் மகன் படும் வேதனை தாங்காமல் ஒரு ஓரத்தில் உள்ள சேரில் அமர்ந்து கொண்டார் தீன வெங்கடேஷன். நிவான் அபியையும், தனது மாமனையும் கண்டு யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.

அகிலன் இவர்களை வேடிக்கைப் பார்க்க, சாரா தான் சுதாரித்து அர்ஜுனுக்கு அழைத்து கூறி விட்டாள். ராகவேந்தரும் தனது பங்கிற்கு பேசி அவளையும் கொடைக்கானல் அனுப்பவதற்கான பணியை மேற்கொண்டார்.

தாஸின் அருகில் சென்று அசோக் நின்றவுடன் ” ஒரு பிள்ளையை தொலைச்சேன். இன்னொரு பிள்ளை என் கண் முன்னாடியே இப்படியொரு நிலைமையிலா இருக்கணும் ” என்று சோர்ந்து கூறினார்.

இதைக் கேட்டவுடன் தீன வெங்கடேஷனுக்கு நினைவுகள் வேறு எங்கோ சென்றது.

💭💭💭💭💭

இருபது ஆண்டுகளுக்கு முன்னர்  குண வெங்கடேஷன், தீன வெங்கடேஷன், வைதேகி ஆகிய மூவரும் வசுதேவரின்  தாத்தா, அப்பா மற்றும் அவருக்கும் நம்பிக்கையின் பாத்திரமாக விளங்கிய கணக்கர் முத்துசாமியின் மச்சினன் வடிவேலனின்  மழலைகள்.

முத்துசாமியின் ஒரே தவப்புதல்வன் சிறுவயதில் வந்த காய்ச்சலினால் இறந்து விட்டான். அவர் மனைவியும் பிள்ளையின் இழப்பை தாங்காமல் பிள்ளையின் இடத்திற்கே சென்று விட்டார்.

முத்துசாமி தான் வசுதேவர் கொடுத்த தைரியத்தில் காலங்களை கடந்து கொண்டிருந்தார். அவருக்கும் வயோதிகம் வந்தது. இவரின் பின்னால் கணக்கராக இருப்பதற்கு தனது மச்சினனை அழைத்தார்.

முத்துச்சாமியின் திருமணத்தின் போது பால் முகம் மாறாத ஆறு அகவை கொண்டிருந்த சிறு பாலகனாகத் தான் இருந்தார் வடிவேலன். அதனால், அவரையே தனது வாரிசாக நினைத்து அனைத்தும் கற்றுக் கொடுத்தார்.

அவரும் அனைத்தையும் கற்றுக் கொண்டு நிர்வாகத்தை காத்தார். இப்பொழுதெல்லாம் வசுதேவருக்கு வடிவேலனின் உதவியே அதிகம் தேவைப்பட்டது . முத்துசாமிக்கு இதை நினைத்து நிம்மதி தான் மனதிற்குள்  பரவியது. ஏனென்றால், வசுதேவருக்கு நமக்கு பின்னால் யார் இருப்பார்கள் அதுவும் உண்மையாக என்றும், தனது புதல்வனாக நினைத்த வடிவேலனுக்கு நல்ல வாழ்வாதாரம் அமைய வேண்டும் என்றும் வெகுநாட்களாக மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தார். இவ்விரண்டும் ஒரு சேர நடந்ததில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தான்.

இவ்வாறு  அனைத்தும் நன்றாக நடந்தால் உலகம் பொய்த்து விடுமே . காலை இருந்தால் மாலை உண்டு என்பதால் நன்றாக நீரோடை போல் சென்று கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கையின் திருப்பமாக உள்ளே நுழைந்தார் லஷ்மி அம்மாவின் தம்பி ஆறுமுகம்.

வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது என்னவென்று தெரியாதவாறு அவனின் முப்பத்தி எட்டு வருட வாழ்க்கையை கடந்திருந்தான். உறவுகள் என்னவென்று பால்ய காலத்தில் அறிய முற்படாமல் இருந்ததோடு, அன்னை அப்பனின்       கடைக்குட்டி என்று  கொடுத்த செல்லத்தின் காரணமாகவும் அன்பு, பண்பு, மரியாதை என்று எந்தவொரு நல்லொழுக்கங்களும் இல்லாமல் இருந்தான். அதனால், கல்யாணம் செய்து வைக்கவும் யாரும் முன் வரவில்லை, பெண் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை.

லஷ்மி, தனது தாய், தந்தை இருக்கும் வரை அன்னை வீட்டிற்கு சென்று வருவார். அதுவும் என்றோ ஒரு பொழுது தான். எப்பொழுதோ ஒரு நாள் வருபவளிடம் மகனைப் பற்றி கூற மனம் இல்லை. இவர்கள் இருவருக்கும் இடையில் பிறந்தவர்கள் லக்ஷ்மி அம்மாவின் வசதியினாலும், ஆறுமுகத்தின் விட்டேறி தனமாக இருக்கும் பண்புகளாலும் இருவரிடமும் பேசுவதில்லை. அதனால், அவர்களும் ஆறுமுகம் பற்றி லஷ்மியிடம் கூறவில்லை.

தனது தாய், தந்தை வயோதிகம் காரணமாக அடுத்தடுத்து காலமாகினர். அதனால், தனது தம்பியை தன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் லஷ்மி.

இவ்வளவு காலங்களும் லஷ்மி வசதி படைத்தவர் என்று  மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தவர் , இவ்வளவு வசதியுள்ளவர் என்று தெரியவில்லை. அப்பொழுது கேசவர் மற்றும் மீரா மட்டுமே பிறந்திருந்தார். மீராவிற்கு ஒரு அகவை கூட முழுதாக முடியவில்லை.

ஆறுமுகம்  தன்னுடைய சுதந்திரம் பறிப்போகி விடும் என்று இஷ்டம் இல்லாமல் லஷ்மியுடன் வர, இங்கு வந்தவுடன் தனக்கென்று ஒரு திட்டம் வகுத்து கொண்டான். அதன்படி வீட்டில் நுழைந்து ஒரு மாத காலம் ஆகியும் வீட்டிலுள்ளவர்கள் உண்ட பின்பே இவன் உண்பான். எவ்வளவு கூறியும் காத்துக் கொண்டே இருந்தான். லஷ்மி எப்பொழுதும் போல் சீக்கிரமாக சாப்பிடக் கூற, “அக்கா எனக்கும் வயசாகிடுச்சு. முன்னப் போல பசி அடங்க மாட்டேங்குது. அதனால், எனக்கு பின்னாடி இருக்கிற வீட்டை கொடேன். நான் அங்க தங்கிக்கிறேன். சாப்பாடு நான் சமைச்சு சாப்பிட்டுக்கிறேன்”

லக்ஷ்மி “ஏன்டா, நீ என்ன பைத்தியமா? உங்க மாமா காதுக்கு கேட்டுச்சு அவ்ளோதான். தனியா போறானாம்ல ” என்று கூறி அவனைத் திட்டி விட்டு, வசுதேவரிடம் முறையிட்டார்.

வசுதேவரோ சிறிது நேரம் யோசித்து விட்டு “சரி விடு. அவனுக்கு அந்த வீட்டை ஒதுக்கி கொடுக்கலாம் “

“ஏங்க ! அவன் தான் அப்படி பேசுறானா, நீங்களும் இப்படி சொல்லுறீங்க ” லக்ஷ்மி எகிறினார்.

” இல்லம்மா, நான் தப்பா சொல்லலை. அவனை நம்ம சங்கடப்படுத்த கூடாது. அதுக்காக சொல்லுறேன். அவனுக்கு மனைவி , குழந்தை குட்டினு இருந்தா அவனுக்கு ஒன்னும் தெரியாது இல்லையா ?அதான் சொல்லுறேன். அவன் அங்க போகட்டும். நம்ம அவனுக்கு சாப்பாடை மட்டும் அங்க கொடுத்து விடுவோம் ” என்று கூறினார்.

அதை தன் தம்பியிடமும் கூற, அவன் நேராக தனது மாமனிடம் சென்று, “ரொம்ப நன்றி மாமா! அப்படியே எனக்கு ஒரு வேலையும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தீங்கனா இன்னும் வசதியா இருக்கும் ” என்று பவ்யமாக கேட்க, லக்ஷ்மி வேகமாக ” நீ ஏன்டா வேலை பார்க்கனும்! இது நம்ம வீடுடா!”என்று கூறிய நொடி, அவரின் கையை இறுகப்பற்றி “அவசரப்பட்டு வார்த்தையை விடாத லஷ்மி ”

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்