இமை 33
தலையில் அடிபட்டு மயக்கத்தில் இருந்த எழிலிற்கு, யாரோ தன்னை தூக்குவதை உணர்ந்து மயக்கம் தெளிந்தது.. ஆனால் முழுதாக தெளியாமல் கண்களை திறக்க முடியாமலும் தன்னை தூக்கிய அந்த கைகளில் இருந்து பலவீனமாக விடுபட திமிறும் நொடியில் விஜய்யின் குரல் கேட்டு அவளே அறியாமல் இறுக்கம் தளர்ந்து அவன் கைகளில் தொய்ந்து விழுந்தாள்..
கண்கள் மூடி இருந்தாலும் அவள் உணர்வுகள் விழித்து இருக்க, காரில் தன்னை மடியில் தாங்கி இருந்த விஜய்யின் உடல் லேசாக நடுங்குவதை அந்த நிலையிலும் எழில் உணர்ந்து கொள்ள, “எனக்கு ஒண்ணும் இல்லை..’ விஜய்யின் நடுக்கத்தை குறைப்பதற்காக அவனிடம் பேச முயன்ற எழிலிற்கு அவள் உடல் ஒத்துழைக்க மறுக்க விஜய்யின் மடியில் அப்படியே கிடந்தாள்..
எழிலின் செவியில், விஜய்யின் தவிப்பான குரலுடன் கூறிய ஆறுதல் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் அடி மனதில் அமிழ்ந்து இருந்த நினைவுகள் நீர் குமிழி போல் மேலே வந்தது.. இதற்கு முன் தான் இதே ஆறுதல்.. இதே அக்கறை.. இந்த கனிவான பேச்சு. கன்னியாகுமரி மருத்துவமனையில் இருந்த போது கேட்டிருக்கிறேன்..
அதிலும் என் கரம் பற்றி.. என் தலையை தடவி கூறிய ஆறுதலான வார்த்தைகள்.. இந்த அஷ்வின் தான் அன்று தன்னை மருத்துவமனையில் அன்பாக பேசினானா? என்று அவ்வப்போது அவள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்.. அனைத்திற்கும் இன்று தீர்வு கிடைத்தது.. கண்களை திறந்து விஜய்யை பார்க்க முயன்ற எழிலிற்கு கண்களைத் திறக்க முடியவில்லை.. மருத்துவமனை வந்த வைத்தியம் பார்த்த பிறகே சற்று தெளிந்தாள்.
மருத்துவர் தன்னை பார்க்க அனுமதிதத்தும், அவசரமாக உள்ளே வந்த விஜய்யை மட்டும் அவள் பார்வை மொய்த்து கொண்டு இருக்க, விஜய் அவளிடம் வந்து விசாரிக்கவும், “கன்னியகுமரி ஹாஸ்பிடல் என் கூட இருந்தது நீங்க தானே..?” என்று நேரடியாக அவனிடமே கேட்டுவிட, அவள் கேள்வியில் விஜய் பதில் சொல்லாமல் திகைத்து விழிக்க அவன் பார்வையே சொன்னது அது தான் உண்மை என்று..
“நான் உங்க கிட்ட தான் கேட்கிறேன் ஹோட்டல்கார்.. நீங்க தான் அப்போ என் கூட இருந்திங்களோ?..” என்று கேட்க, அவளின் ஹோட்டலகார் என்ற அழைப்பில் கண்கள் மின்ன எழிலை பார்த்த விஜய், அவள் பார்வை தன்னை விட்டு விலகாமல் இருப்பதை உணர்ந்து பதில் தெரியாமல் விட மாட்டா போல இந்த ராங்கி..” என்று லிட்டில் கேர்ள் ராங்கியாக உருவகம் மாறி மனதில் செல்லமாக அவளை வைதவன் ஒரு பெருமூச்சுடன், “ம் ஆமா.. நான் தான் உன் கூட இருந்தேன்..” என்று ஒத்துக் கொண்ட விஜய்யை அதிர்ந்து பார்த்த எழில்,
“நீங்க எப்படி அங்க..? நான் எப்படி ஹாஸ்பிடல்..” என்று குழப்பமாக கேட்டு கொண்டு இருந்த எழில், “அப்போ அன்னிக்கு என்னை ஹாஸ்பிடல் சேர்த்தது நீங்க தானா..? நம்ப முடியாத திகைப்போடு கேட்க,
“ம்..” என்று விஜய் ஒற்றை வார்த்தையில் பதில் கூற
“பிளீஸ் ஹோட்டல்கார் எனக்கு டையர்டா இருக்கு.. அன்னிக்கு என்ன நடந்தது என்று தெளிவாக சொல்லுங்களேன்..” என்று கேட்க, “அதான் லிட்டில் கேர்ள் நானும் இதை தான் சொல்ல வந்தேன் நீ ரொம்ப டையர்டா இருக்க இப்போ எதுவும் பேச வேண்டாம்.. நீ ரெஸ்ட் எடு..” என்று அவள் காயத்தை மென்மையாக வருடியபடி மென்மையாக கூற, அவன் வருடியதிலும் குரலிலும் தன்னை அறியாமல் எழில் மனம் இளக..
“இல்லை எனக்கு அன்னிக்கு நடந்தது என்ன என்று தெரியாமல் தூக்கம் வராது ப்ளீஸ் என்ன நடந்தது என்று சொல்லுங்க ஹோட்டல்கார்..?” என்று பிடிவாதமாக கேட்க “நீ இப்போ தூங்கி ரெஸ்ட் எடு லிட்டில் கேர்ள் நான் கண்டிப்பாக அன்னிக்கு என்ன நடந்தது என்று சொல்றேன்..” என்று விஜய் உறுதி அளிக்க,
கண்டிப்பா சொல்லுவிங்களா?..” என்று எழில் உறுதிபடுத்தி கொள்ள கேட்க விஜய் ஆம் என்று தலையசைக்க
அதில் அமைதி அடந்த எழில் மருந்தின் வீரியத்தில் கண்கள் உறக்கத்திற்கு செல்ல, அவள் ஆழ்ந்து உறங்குவதை உணர்ந்து அத்தனை நேரம் அவள் அருகில் அமர்ந்திருந்த விஜய் எழுந்து நின்றவன் இன்பமாக அதிர்ந்தான்..
ஏனெனில் எழில் விஜய்யின் கரத்தை இறுக பற்றிய படி உறங்கி இருந்தாள் அவனின் லிட்டில் கேர்ள்.. விஜய் சில நொடிகள் இணைந்திருந்த கரங்களை ரசனையுடன் பார்த்து கொண்டு இருக்க அந்த மோன நிலையை தொல்லை செய்வது போல் அவனின் அலைபேசி அழைக்க, பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுப்பதற்கு விஜய் எழிலின் பிடியில் இருந்து தன் கரத்தை அவள் உறக்கம் கலையாமல் விலக்க முயற்சிக்க, அதை உணர்ந்து அவன் கரத்தை இன்னும் இறுக பற்றி கொண்டாள் எழில்
“என்..னை விட்..டு போகா…திங்க கூ..டவே இருங்க.. நீங்க போ…னால் அப்..பறம் என் வீட்…டில் இருந்..து எல்..லாரும் இங்க வந்திரு…வாங்க.. எ..எ..னக்கு அவங்க வேண்..டாம்.. அந்த அஷ்..அஷ்வின் வேண்…டாம் என்..னை திட்..டுவான்.. இங..க இருங்..” உறக்கத்தில் தன் மனதில் இருந்த அழுத்தங்களை எல்லாம் உளறி கொண்டு இருந்த எழிலின் கரம் விஜய் கரத்தை விட்டு நழுவி கீழே விழப்போக, அதை விழ விடாமல் தாங்கி பிடித்தவன் அந்தப் பூங்கரங்களை தன் வலிய கரங்களுக்குள் பொத்தி பாதுகாப்பாக பிடித்தபடி அவள் விரல்களை தன் உதட்டில் ஒற்றி எடுத்தான்
இத்தனை நாள் சிறு சந்தேகம் கொண்டிருந்த விஜய்க்கு இப்போது எழில் மனம் நன்றாக புரிந்தது.. நம் உடம்பும், மனமும் பலவீனமாக இருக்கும் நேரத்தில் நம் மனதுக்கு நெருக்கமானவர்களை தான் நம் மனம் தேடும்.. எழிலும் அதற்கு விதிவிலக்கல்ல.. விஜய் தன் சிறு சிறு செயல்களில் எழில் மனதை அவள் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ரமிப்பு செய்திருக்க, அலைப்புற்று இருந்த எழிலின் ஆழ்மனம் அவன் அருகாமையை அவன் பாதுகாப்பை நாட.. அதன் விளைவாக உறக்கத்திலேயே உளறி இருந்தாள்
“உன்னை பற்றி சரியாக தெரியாத போதே உன்னை விட்டு போக யோசித்தவன், இப்போ எனக்கு எல்லாமே நீ தான் என்று ஆன பிறகு உன்னை விட்டு எப்படி போவேன்?.. நான் இங்கேயே உன் பக்கத்தில் தான் இருப்பேன்.. நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன்.. நீ நிம்மதியாக தூங்குடா லிட்டில் கேர்ள்..” என்று அவள் காதோரம் குனிந்து குழந்தைக்கு கூறுவது போல் மென்மையாக கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டு
உன் மனதில் நான் இருக்கேன் என்று தெரியும் ராங்கி.. ஆனால் அது எந்த விதமாக என்று தெரியாமல் குழம்பி இருந்த எனக்கு உன்னையே அறியாமல் இப்போ நீ பதில் சொல்லிட்ட..” என்று மனதில் தெளிந்தவன், “
ஆழ்ந்த உறக்கத்திலும் புருவம் சுளித்தபடி பற்றற்ற கொடியாக படுக்கையில் துவண்டு கிடந்த எழில் அவன் குரலிலும் இதழ் ஸ்பரிசத்திலும் முகம் இளக லேசாக இதழ் பிரித்து புன்னகையுடன் தன் உறக்கதை தொடர்ந்தாள்.. தன் லிட்டில் கேர்ளை பார்க்க, பார்க்க அவன் மனம் பாராமாகியது..
அன்று கன்னியாகுமரி மருத்துவமனையில் உன் வீட்டு ஆட்கள் வந்த பிறகு தான் நிம்மதியாக உன்னை விட்டு போனேன்.. லிட்டில் கேர்ள் ஆனால் அது எவ்வளவு பெரிய தப்பு என்று இப்போ நினைக்கிறேன்.. அன்னிக்கு அந்த அஷ்வின் உங்க பொண்ணு தான் என் மனைவி என்று யாருக்கோ உறுதி அளிப்பதை கேட்டு அந்த அஷ்வினை பெருமையாக நினைத்து இனி அவன் பார்த்து கொள்வான் என்று நம்பி தான் அங்கிருந்து சென்றான்..
ஆனால் தன் லிட்டில் கேர்ளை அன்று அப்படியே விட்டு வந்திருக்க கூடாது..’ என்று எழிலை அடையாளம் தெரிந்த நாளில் இருந்து ஆயிரம் முறையாவது தன்னை நிந்தித்து மனம் வருந்தி கொண்டிருந்தான் விஜய்..
ஆனால் இப்போது அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவள் வீட்டு ஆட்களின் மீது ஆத்திரம் வந்தது.. அந்த அஷ்வினை கொல்லும் வெறி வந்தது உன்னை இப்படி செஞ்சவங்க யாரையும் நான் சும்மா விட மாட்டேன் லிட்டில்..” என்று மனதில் சூளுரைத்து கொண்டு, அவள் தலையை வருடியபடியே அமர்ந்திருந்தான்..
இணைந்திருந்த கரங்களையும், விஜய் எழிலின் தலையை வருடிக் கொண்டு இருப்பதையும் சங்கவி நம்ப முடியாமல் விழி விரித்து வியப்பாக பார்த்து கொண்டு இருந்தாள்.. தனக்கு தெரிந்த எழில் அத்தனை அழுத்தமாக இருப்பாள்.. தன் உணர்வுகளை எளிதில் வெளிகாட்ட மாட்டாள்.. ஆனால் இன்று அவள் கண்களுக்கு அன்னையை தேடும் சிறு குழந்தையாக தெரிந்தாள்.. அதுவும் இந்த புதியவனை பார்க்கும் போது மட்டும் எழில் வேறு உணர்வுகளை வெளிப்படுத்துவதை கண்டு, இப்போது எழிலின் இயல்பு எது என்று புரியாமல் குழம்பி நின்றாள்..
அதிலும் விஜய்யின் பிரிவான பேச்சை கேட்டு சங்கவிக்கு இன்னும் வியப்பாக இருந்தது.. ஒரு தந்தை தன் குழந்தையை சமாதானம் செய்வது போல் எழிலை சமாதானம் செய்வதை பார்த்து, “என் ஆளு என்னைக்காவது இப்படி பரிவாக என்கிட்ட பேசிருக்கானா?..! என்று ஒரு நொடி தன் காதலனை விஜய்யோடு ஒப்பிட்டு பார்த்தவள் அடுத்த நொடி அதற்காக தன்னையே கடிந்து கொண்டு,
“சார் எழிலை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?. என்ற சங்கவியை விஜய் கேள்வியாக பார்க்க “இல்ல இதற்கு முன்னாடியும் இவளுக்கு அடிபட்டது கார்ல வரும் போது சொன்னிங்களே.. அதோட எழில் இங்க வேலைக்கு சேர்ந்ததில் இருந்து அவளை எனக்கு தெரியும் என்கிட்ட கூட இப்படி அவ அழுத்தமாக தான் இருப்பா.. அவ இப்படி பேசினதும் உங்க கிட்ட மட்டும் தான்.. அதான் எழிலுக்கு உங்களுக்கு என்ன சம்பந்தம் என்று கேட்டேன்..? என கேட்க
“மதிக்கு அடிபட்டதுக்கு நீங்க தான் காரணம் என்று சொன்னிங்களே.. அது எப்படி?.. சங்கவியின் கேள்விக்கு பதில் கூறாமல் விஜய் வேறு கேள்வி கேட்க, “அது வந்து..”, என்று தயங்கிய சங்கவியை விஜய் முறைத்துப் பார்க்க,
“முறைக்காதிங்க சார்.. நான் அவ மேல சின்ன கோபத்தில் இருந்தேன்.. அது அவளை பார்த்ததும் என் கோபம் போய்ருச்சு ஆனா எதுவும் என்கிட்ட ஷேர் செய்யலையே சின்ன ஆதங்கம் அதான் சாயந்திரம் வரைக்கும் அவ கூட பேச கூடாது என்று விளையாட்டாக நினைத்து அவ பேசறதை கவனிக்காது மாதிரி நடந்தேன்..
ஆனால் எழில் என்கிட்ட பேசிட்டு வரும் போது தான் கீழ படியில் சேலை தடுக்கி விழுந்துட்டா.. சத்தியமா இப்படி ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை சார்.. அவ உங்களுக்கு எப்படியோ.. ஆனால் எனக்கு உயிர் தோழி அவ சீக்கிரம் சரியாகணும் என்று என் மனசு தவிக்குது சார்.. அவ கண் முழிச்சு என்னை பார்த்து சிரிச்சா மட்டும் தான் என் மனசு அமைதி அடையும்..” என்ற சங்கவியை கூர்ந்து பார்த்த விஜய், அவள் தவிப்பு உண்மை என்று உணர்ந்து
“ம் தெரியும்.. மதியோட மதி முகம் இப்படி சிதைந்து போவதற்கு முன்னாடி தெரியும்.. மதியோட இன்னொசெண்ட் எனக்கு தெரியும்.. மதி ஒருத்தனை நம்பி அவளோட வாழ்கைய ஒப்படைத்தது தெரியும்.. அவன் நல்லவன் என்று நம்பி நானும் மதியை அப்படியே விட்டிட்டு வந்தது தப்பு என்று இப்போ தான் தெரியும்..” என்று பெருமூச்சுடன் கூற கொண்டு இருக்க.. விஜய்யின் அலைபேசி சத்தமிட்டு தன் இருப்பை உணர்த்த
எடுத்து பார்த்தான் சுமித்ரா தான் அழைத்திருந்தார், “என்னடா மருமக எப்படி இருக்கா.. எந்த ஹாஸ்பிடல் இருக்கிங்க.. நானும் அப்பாவும் அங்க வர்றோம்..” என்று சொல்ல
எழிலை மருமகள் என்று அழைத்ததில் எப்படி கண்டுபிடிச்சாங்க?.. என்று ஒரு நொடி திகைத்த விஜய், மதிக்கு அடிபட்டதில் தன் பதட்டமான செய்கையிலேய தன்னை உணர்ந்திருப்பார் என்று சரியாக கணித்தவன்,
“உங்க மருமகள் நல்லா இருக்கா.. இங்க பக்கத்தில் இருக்க ஹாஸ்பிடல் தான் இருக்கோம்.. வாங்க” என்று கூறிவிட்டு அருகில் இருந்த சங்கவியை பார்த்தவன், “மதி முழிக்கிற வரைக்கும் நீங்க இங்கதான் இருப்பீங்க..?” என கேட்க சங்கவி “ஆம்.” என்று கூறவும் “என்னோட அம்மா உங்களுக்கு தெரியும் இல்ல என கேட்க
“அம்மா யாரு?.. என்று குழப்பமாக சங்கவி கேட்க உங்களோட இப்ப இருக்கிற தலைமை ஆசிரியர் சுமித்ரா மணிகண்டன் அவங்க தான் என்னோட அம்மா இப்ப ஹாஸ்பிடல் வருவாங்க அவங்க வந்தா மட்டும் ரிசீவ் பண்ணிக்கோங்க நான் இப்போ என்னோட நேத்ரா பேபியை கூட்டிட்டு வந்திட்றேன்..” என்று அவள் பதிலை எதிர்பார்க்காமல் வெளியே செல்ல
“ஹெச் எம் இவரோட அம்மாவா..? என்று திகைத்து நின்ற சங்கவியிடம், “இல்லை என் அம்மா தான் ஸ்கூல் ஹெச் எம்..” என்று கூறி சென்றவனை முறைக்க முடியாமல் சங்கவி பார்வையை வேறு பக்கம் திருப்பி கொண்டாள்..
நேத்ராவை பார்த்து வெகு நேரம் ஆகிவிட்டதால் குழந்தையை பார்க்க விஜய் எழில் வீட்டிற்கு சென்றான்.. வேணியிடம் சொல்லிக் கொண்டு நேத்ராவை மருத்துவமனை அழைத்து வந்தான்.. காரில் இருந்து இறங்கிய நேத்ரா மருத்துவமனையில் முன்னால் இருந்த சின்ன பூங்காவை கண்டு அதை நோக்கி ஓடி சென்றவள் யார் மீதோ மோதி நின்றாள்..
“ஹேய் உனக்கு அறிவிருக்கா.. இப்படியா வந்து மோதுவ.. கண் முன்னாடி தானே இருக்கு. பார்த்து வர மாட்ட..” என்று அதட்ட”சாரி அங்கிள் தெரியாமல் இடிச்சிட்டேன்..” என்று நேத்ரா அந்த ஆடவனின் அதட்டலில் உடல நடுங்கி மன்னிப்பு கேட்க, “போ அந்த பக்கம்..” என்று நேத்ராவின் கை பிடித்து அந்த பக்கம் தள்ள..
அதில் நிலை தடுமாறி நேத்ரா கீழே விழ போகும் நொடியில் விஜய் நேத்ராவை தூக்கி கொள்ள, “அங்கிள் நான் தெரியாமல் தான் இடிச்சிட்டேன்..” என்று விஜய் கழுத்தை கட்டிக் கொண்டு அழுதபடி கூறிய குழந்தையை சமாதானம் செய்தவன், “ஹே மிஸ்டர் ஒரு சின்ன குழந்தைகிட்ட எப்படி பேசணும்னு என்று தெரியாது..” என்று எதிரில் இருந்த ஆடவனை திட்டியபடி அவனை பார்த்த விஜய்
அங்கு அஷ்வினை பார்த்ததும் தன்னை மீறி கோபத்தில் ஓங்கி அறைந்திருந்தான்.. நேத்ரா பயத்தில் மிரண்டு விழிக்க காரணம் இன்றி தான் வாங்கிய அடியில் அஷ்வின் அதிர்ந்து நின்றான்..
இமை சிமிட்டும்