Loading

மாலை சமுத்ராவோடு வெளியே கிளம்பினான் ஷாத்விக்.

சமுத்ரா நகைக்கடைக்கு செல்லலாமென்று கூற இருவரும் முதலில் நகைக்கடைக்கு சென்றனர்.

உதய் மற்றும் மகிழினிக்கு இரண்டு தங்க சங்கிலிகளை சமுத்ரா தேர்வு செய்து பில் போடக்கொடுத்திட ஷாத்விக் அவளை இன்னொரு பகுதிக்கு அழைத்து சென்றான்.

அங்கு அனைத்தும் வைர நகைகளாய் இருக்க அதில் அவன் தேர்வு செய்துவைத்திருந்த வைர மோதிரத்தையும்,வைரக்கல் பதித்த காதணிகளையும் சமுத்ராவிற்கு காண்பித்தான்.

“உனக்கு இது அளவா இருக்கான்னு பாரு.” என்று ஷாத்விக் சொல்ல சமுத்ராவோ சிறு அதிர்ச்சியுடன் ஷாத்விக்கை பார்த்தாள்.

“போட்டு பாரு சமுத்ரா. உனக்கு நல்லா இருந்தா இதையே எடுத்துக்கலாம். இல்லைனா கூட நாம டிசைன் பண்ணி கொடுத்தா அதுக்கு தகுந்தமாதிரி அவங்களே செஞ்சு கொடுத்துடுவாங்களாம்.” என்று ஷாத்விக் சொல்ல

“பட்ஜெட் கொஞ்சம் பெருசா இருக்கே மாமா.” என்று சமுத்ரா சொல்ல

“பட்ஜெட்டை பத்தி நீ ஏன் கவலைப்படுற? உனக்கு புடிச்சிருக்கா இல்லையானு மட்டும் சொல்லு அது போதும்.” என்று ஷாத்விக் உறுதியாக கூற

“எனக்கு பிடிச்சிருக்கு.”என்று சமுத்ரா கூற அதற்கு மேல் அங்கு எந்த தாமதமும் இருக்கவில்லை.

பில்லை கட்டிவிட்டு வெளியே வந்ததும் ஷாத்விக் சமுத்ராவை காரில் அமரச் சொல்லிவிட்டு மீண்டும் கடைக்குள் சென்று சில விநாடிகளிலேயே திரும்பி வந்தான்.

“என்னாச்சு மாமா?” என்று சமுத்ரா கேட்க

“விசிட்டிங் கார்ட்டை வாங்க மறந்துட்டேன். அதான் வாங்கிட்டு வரலாமேனு உள்ள போனேன்.”என்று காரணம் கூற அதற்கு மேல் சமுத்ரா எதுவும் கேட்கவில்லை.

வண்டியை ஸ்டார்ட் செய்தவன்

“பீச்சுக்கு போகலாமா?” என்று கேட்க சமுத்ராவும் சரியென்று தலையாட்டினாள்.

வண்டி நேரே கடற்கரைக்கு செல்ல இருவரும் மெல்ல கடற்கரை மண்ணில் நடக்கத் தொடங்கினர்.

மாலை நேரத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்ததால் கதிரவனின் தாக்கம் குறைவாகவே இருந்தது. 

“இப்படி அமைதியாக காலார நடந்து ரொம்ப நாளாச்சுல்ல?” என்று ஷாத்விக் நடந்தபடியே கேட்க

“ம்ம். நானும் பீச்சுக்கு வந்து ரொம்ப நாளாச்சு. மனசுக்கு ஒரு மாதிரி பாராமா இருந்தா இங்க வருவேன். இப்ப கொஞ்சநாளா வரமுடியிறதில்லை.” என்று சமுத்ரா கூற 

“நமக்கெல்லாம் மனசு சரியில்லைனா கால் நேரா பாய் கடை பிரியாணியை தேடித்தான் போகும்.” என்று ஷாத்விக் அலட்டிக்கொள்ளாமல் கூற

“அத்தை சொன்னாங்க வாரம் 3 முறை மாமா பாய் கடைக்கு மொய் எழுதுவாருனு” என்று அவளும் சிரிக்காமல் கூற

“ஏது மொய்யா? என்ன லந்தா?” என்றவன் இப்போது முறைக்க

“நான் கேள்விபட்டதை சொன்னேன் அவ்வளவு தான்.” என்று அவளோ அப்பாவி போல் சொல்ல

“மேடம் வேற என்னவெல்லாம் கேள்விபட்டீங்களாம்?” என்று ஷாத்விக் கேட்க

“இராத்திரியில மாங்கா திருடி சந்தையில வித்து மாமா கிட்ட தர்ம அடி வாங்குனது, பம்புசெட்டுல குளிக்கப்போறேனே மோட்டரை கையோட எடுத்துட்டு வந்தது, சொக்கன் மாமா பேரை சொல்லி நாலு கடையில பைசா பாக்கி வச்சது, அப்புறம்….” என்றவளை இடைமறித்தவன்

“போதும் போதும் லிஸ்ட்டு ரொம்ப பெருசா போகுது. அப்போ ஒரு விஷயம் உன் காதுக்கு வராமலில்லை. மொத்த குடும்பமும் டெய்லி என்னோட க்ரைம் லிஸ்ட்ட உனக்கு தெரியப்படுத்திட்டு இருந்திருக்கு. நல்ல குடும்பத்துல வந்து மாட்டியிருக்கேன் பாரு.” என்று ஷாத்விக் சலித்துக்கொள்ள சமுத்ராவோ அவனை பார்த்து‌ கிண்டலாக சிரித்தாள்.

“சரி நீ அங்க உட்காரு. நான் ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வரேன்.” என்றவன் அவளை அனுப்பிவிட்டு ஐஸ்க்ரீம் வாங்க வர சென்றான்.

அப்போது

“ஹலோ மேடம்” என்ற சத்தம் கேட்டு திரும்பி பார்த்தாள் சமுத்ரா.

அங்கு அவளின் பெயர் அறியாத கடற்கரை நண்பர் நின்றிருக்க சிநேகமாக புன்னகைத்தவள்

“ஹலோ சார் எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு.” என்று அவளும் நலம் விசாரிக்க

“எனக்கு என்ன மேடம் எப்பவும் போல ஸ்ட்ரெஸ் ஃப்ரீ கெயார் ஃப்ரீ தான். நமக்கு வானம் தான் எல்லை. எண்ணங்களிலில்லை தொல்லை.” என்று எதுகை மோனையுடன் பேச லேசாக புன்னகைத்த சமுத்ரா

“அப்புறம் சார்?” என்று அவளும் வழமை போல் பேசும் வாய்ப்பை மற்றவரிடமே விட்டுவிட

“அப்புறம் இன்னைக்கு ஏதோ வால் நட்சத்திரம் தெரியும்னு சொன்னாங்க. சரி நம்ம இரவின் இந்திராணி நிலவழகிக்கு போட்டியாக யாரு வந்துறப்போறானு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். மாசத்துல ஒவ்வொரு நாளும் தன்னோட வெவ்வெறு அழகை காட்டுற நிலவுக்கு போட்டியாக எந்த நட்சத்திரமும் வரமுடியாதுனு இங்க பல பேருக்கு புரியமாட்டேங்கிது. உலகத்தோட ஏச்சையும் பேச்சையும் கேட்டும் கூட கோவிச்சிட்டு போகாம தேவைக்கு தகுந்தமாதிரி தன்னோட உருவத்தை மாத்தி உலா வருகிற நிலவோட அருமை என்னைக்கும் யாருக்கும் புரியப் போறதில்லை. அதுவா நினைக்கிற வரைக்கும். பாருங்க எப்பவும் போல ட்ரக் மாறி பேசிட்டு இருக்கேன். சரி மேடம் நான் கிளம்புறேன்.” என்று அந்த நபர் வந்தது போலவே கிளம்பிட அப்போது கையில் இரண்டு ஐஸ்க்ரீம் உடன் ஷாத்விக் அங்கு வந்தான்.

“யாரு அது?” என்று அவளிடம் ஐஸ்க்ரீமை கொடுத்தபடியே கேட்டவன் அவளோடு அவளருகே அமர்ந்தான்.

“பெயர் தெரியாத ஃப்ரெண்ட்.” என்று சொன்னவளின் இதழ்களில் புன்னகை இருந்தது.

“அது தான் அவரு பேரா? இப்படியெல்லாமா பெயர் வைப்பாங்க?” என்று ஷாத்விக் ஆச்சரியத்துடன் கேட்க இப்போது அவனை முறைத்து பார்த்தாள் சமுத்ரா.

அவளின் முறைப்பதை கண்டவன்

“அப்போ அது இல்லையா? அவரு பேரு உனக்கு தெரியாதுன்னு சொன்னியா?” என்று ஷாத்விக் சிறுபிள்ளைபோல் கேட்க அதற்கும் சமுத்ராவிடமிருந்து முறைப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.

“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இவ இப்படி முறைக்கிறா?” என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டவன் தன் ஐஸ்க்ரீமை சுவைக்கத் தொடங்கினான்.

“உன்கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கனும்னு நெனச்சேன். நீ எங்க சண்டை கத்துக்கிட்ட?” என்று ஷாத்விக் தன் நெடுநாளைய சந்தேகத்தை கேட்க

“ஸ்கூல் படிக்கும்போது கராத்தே கத்துக்கிட்டேன். சரி அப்படியே கத்துப்போமேனு பாக்ஸிங் கோச்சிங்கும் போனேன்.” என்று சமுத்ரா கூற

“அப்போ நீ நிஜமாகவே பாக்ஸிங் கத்துக்கிட்டியா? நான் கூட அம்மா சொன்னப்போ உனக்கு கராத்தே மட்டும்தான் தெரியும்னு நெனைச்சேன். அன்னைக்கு நீ கும்மி எடுத்தப்போ கூட எனக்கு இப்படி இருக்குமோனு தோணல பாரேன்.” என்று ஷாத்விக் கூற

“அவ்வளவு வாங்கியும் இந்த வாய் அடங்கமாட்டேங்கிதே மாமா.” என்று அவள் கிண்டலாய் கூற தன் வாயை இரு கைகளாலும் அரணிட்டவன்

“அத தானா அடங்கிரும். பிரசன்ட் ஹிஸ்டரி, ஃப்ரீ ஹிஸ்டரி தெரிஞ்சிருச்சில்ல… இனி தானா அடங்கிடும்.” என்று அவன் கூற அவனை கேலியுடன் பார்த்தவளின் கண்களில் அந்த பயம் இருக்கட்டும் என்ற செல்ல மிரட்டல் இருந்தது.

“நான் ஒன்னு கேட்கட்டா மாமா?” என்று சமுத்ரா ஆரம்பிக்க

“கேளு..”

“நீங்க ஏன் எப்பவும் மாமா எது சொன்னாலும் அவருக்கு போட்டியாகவே ஏதாவது செஞ்சிட்டே இருந்தீங்க? உங்களுக்கும் மாமாவுக்கு நடுவுல என்ன பிரச்சினை?” என்று சமுத்ரா கேட்க

“பூவெல்லாம் உன் வாசம் படம் பார்த்திருக்கியா?” என்று ஷாத்விக் சம்பந்தமில்லாமல் ஒரு கேள்வி கேட்க

“பார்த்திருப்பேன்னு நினைக்கிறேன். நீங்க விஷயத்தை சொல்லுங்க.” என்று சமுத்ரா விஷயத்தை தெரிந்துகொள்ளும் முனைப்புடன் கேட்க

“அதுல ஜோதிகா அவங்க அப்பா அவங்க சொன்னதை நம்பலைனு அவரு கூட வருஷக்கணக்கா பேசாமல் இருப்பாங்க. அதே மாதிரி தான் இங்கேயும். உன் மாமா நான் எது செய்றேன்னு சொன்னாலும் என்னை நம்பாமல் வேணாம்னு ஒரு காரணம் சொல்லுவாரு. ஒருமுறை வழமை போல ஏதோ சொன்னாரு. அந்த நேரம் நானும் கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன். இவரு இப்படி சொல்லவும் அவரு கூட வாய்தகராறாகிடுச்சு. நான் கொஞ்சம் கம்மியா பேசிருக்கனும். ஆனா அன்னிக்கு அளவு மீறி போய் அது இரண்டு பேருக்கும் இடையிலான பேச்சு வார்த்தையை முறிச்சிடுச்சு. அன்னையில இருந்து பூவெல்லாம் உன் வாசம் பட ஜோதிகா மாதிரி நீங்க என்னை நம்பலைல்லனு நான் முறுக்கிட்டு சுத்த அவரும் போடா டேய் போக்கத்தவனேனு தண்ணி தெளிச்சு விட்டுட்டாரு. “என்று பழைய ப்ளேஷ்பேக்கை சொல்லி முடிக்க

“இருந்தாலும் இந்த சில்லறை காரணத்துக்காக நீங்க மாமா கூட ஒழுங்கா பேசாமல் இருந்திருக்க கூடாது.” என்று சமுத்ரா கூற

“இப்போ புரியிது. ஆனா அப்போ புரியல. சரி விடு முடிஞ்சதை பத்தி பேசுறதால எதுவும் மாறப்போறதில்லை. நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேட்கனும்?” என்று ஷாத்விக் தொடங்க

“என்ன விஷயம்?” என்று சமுத்ராவும் கேட்க

“உன் மனசுல இருக்க விஷயம் என்னனு நான் தெரிஞ்சிக்கனும்.” என்றவனின் வார்த்தைகளில் தெளிவில்லாததால் சமுத்ராவின் முகத்தில் குழப்ப ரேகைகள் சூழ்ந்தது.

“நீங்க எதை பத்தி கேட்குறீங்க மாமா?” என்று அவள் குழப்பத்தோடு கேட்க

“நம்ம வாழ்க்கையை பத்தி. எல்லாமே அவசரமா முடிஞ்சிப்போச்சு. அதுக்காக போற போக்குல வாழ்ந்துட்டு போகனுங்கிற எண்ணம் எனக்கில்லை. எல்லாத்தையும் பழைய மாதிரி கொண்டு வரமுடியாது. ஆனா சில மாற்றங்களை கொண்டு வரலாம். ஆனா அதுக்கு முதல்ல உன் மனசுல என்ன இருக்குனு நான் தெரிஞ்சிக்கனும்.” என்றவனின் வார்த்தைகள் அவரின் மௌனயுத்தத்திற்கு போதுமானதாக இருந்தது.

“நம்ம வாழ்க்கையில எல்லாமே திடீர்னு நடந்ததாக இருந்தாலும் நடந்த எல்லாத்தையுமே இப்போ என் மனசு சந்தோஷமா ஏத்துக்க தயாராக இருக்குது. அன்னைக்கு ராத்திரி நான் அப்படி பேசுனது யோசிக்க கூட நேரம் இல்லாமல் எல்லாம் இப்படி நடந்திடுச்சேங்கிற கோபம், நம்ம விரும்புன பொண்ணு இந்த கல்யாணத்தால விஷம் குடிக்க முடிவு பண்ணிட்டாளேங்கிற ஏமாற்றம், இப்படி பல விஷயம் மண்டைக்குள்ள ஓடிட்டு இருந்தப்போ என்னோட கன்ட்ரோல் இல்லாமல் வந்த வார்த்தைகள் தான் அது. நான் அப்படி பேசுனது ரொம்ப தப்பு. நீ நடுராத்திரினு கூட பார்க்காமல் கிளம்பிப்போனப்போ தான் உன் மனசு எவ்வளவு காயப்பட்டுருக்குனு எனக்கு புரிஞ்சிச்சு. எதையும் அவசரப்பட்டு செஞ்சு பழகிட்டதால வார்த்தைகளும் அவசரமாகவே வந்திடுச்சு. நான் அன்னைக்கு செஞ்ச தப்புக்கு இப்போ உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். நாம நம்ம வாழ்க்கையை மறுபடியும் ஒருமுறை முறையாக தொடங்கனும்னு நெனைக்கிறேன். இதுக்கு உன்னோட பதில் எதுவாக இருந்தாலும் எனக்கு சம்மதம் தான். ஆனா பதில் சொல்ல நேரம் கடத்திடாத.” என்று ஷாத்விக் தன் மனதிலுள்ள அனைத்தையும் சொல்ல சமுத்ராவிற்கு தான் வார்த்தைகள் வரமறுத்தது. ஆனாலும் தன்னை நிதானப்படுத்திக்கொண்டவள்

“நீங்க சொன்னபடியே நாம மறுபடியும் நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்.” என்று காரண காரியமின்றி ஒரே வரியில் சமுத்ரா தன் பதிலை சொல்ல ஷாத்விக் தான் வாயடைத்துபோனான்.

பல நாட்கள் கெஞ்சி மன்றாடவேண்டியிருக்குமென்று அவன் நினைத்திருந்த ஒன்று இப்படி நடந்தேறுமென்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“நீ நீ நிஜமாத்தான் சொல்லுறியா?” என்று ஷாத்விக் சந்தேகத்துடன் கேட்க

“சரி உங்களுக்கு டவுட்டா தானே இருக்கு? நாள மறுநாள் உங்க டவுட்டை கிளியர் பண்ணுறேன்.” என்றவள் எழுந்து நடக்க ஷாத்விக்கும் பின்னாடியே ஓடினான்.

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்