Loading

அத்தியாயம் – 7

ருத்ர மித்ரா!

விறுவிறுவென அவளை இழுத்துச் சென்றாலும், அக்னியின் கண்களில் பயம் என்பது மருந்துக்கும் இல்லை.

 

இரண்டு கரங்களையும் கனமான இரும்புச் சங்கிலி பிணைத்திருக்க, அந்தச் சிறைச்சாலையை விட்டு வெளியே அவளை இழுத்து வந்தான் ருத்ரன்!

 

அன்றைய நாள் முழுவதுமாக இருட்டான அறைக்குள் முடங்கி இருந்ததால், வெளியே வந்ததும் கண்கள் கூசியது அக்னிக்கு.

 

காற்றில் புடவை பறக்க.. முடிக்கற்றைகள் அங்கங்கே கலந்திருக்க, ருத்ரன் இழுப்பிற்கு இஷ்டமே இல்லாமல் இழுத்து வரப்பட்டாள் அக்னி.

 

சுற்றிலும் அந்த நகரின் மொத்த மக்களும் கூடியிருக்க, அவர்களைப் பார்த்தபடியே நடந்து அந்த நகரின் மையத்துக்குச் சென்றாள் அவள்.

 

அது வரையிலும் தலை குனிந்து, மக்களது கால்களை மட்டுமே அவதானித்து சென்றிருந்த அவளது கண்கள்.. ஓர் இடத்தில் மட்டும் மெல்ல நிமிர்ந்தது!

 

மெல்ல மெல்ல நிமிர்ந்து நிமிர்ந்து வான் நோக்கிய பொழுது. அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

அங்கே.. ஒருவன் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டிருக்க, அவன் காலடியில்.. பாதி வெட்டப்பட்ட மரம் ஒன்று போடப்பட்டிருந்தது.

 

‘யார் இவன்? எதுக்காக இவனை இப்படி இந்த ருத்ரன் நடு ஊர்ல தூக்கு போட நிற்க வச்சிருக்கான்?’ என்ற அதிர்வுடன் அக்னி, ருத்ரனைப் பார்க்க, அவனோ.. அவளைப் பார்த்து வெகு ஏளனமாய் சிரித்தான்.

 

அடுத்த நொடியே அவனது முகம் இறுகிய இரும்பாய்.. வேட்டைக்குத் தலை சிலுப்பித் தயாராகும் சிங்கமாய் மாற.. அனல் நெருப்பாய் தகித்த அவனது விழிகள், அக்னியின் முகம் பார்த்தே பேசத் துவங்கினாலும், அவனது பேச்சு மொத்த மக்களுக்குமானதாகத் தான் இருந்தது!

 

“இதோ.. இங்க நிற்கறானே.. இவன் யார்?

 

நம்ம கூட்டத்துல பிறந்த புல்லுருவி! இது எல்லாத்தையும் மீறி.. இவன் நம்ம கட்டுப்பாட்டைத் தாண்டி, நம்ம செல்லுல இருந்து தப்பிச்சுப் போக வேற பார்த்திருக்கான்.” என்றவன் ஒரு கணம் நிறுத்தி மக்களைத் திரும்பிப் பார்த்துப் பேச்சைத் தொடர்ந்தான்.

 

“கடவுள், இவனோட ஆயுளை இப்போ முடிக்கலை. இன்னும் கொஞ்ச நாள் இழுத்து வச்சு தான் இருந்திருக்கான்..

 

ஆனா, அதுக்கு இந்த ருத்ரன் விடமாட்டேனே!” என்றவன் இடுப்பில் இரு கைகளையும் வைத்து, வான் நோக்கிச் சிரித்தான்.

 

மொத்த ஊரும் குண்டூசி விழுந்தால் கூடச் சத்தம் கேட்கும் அமைதியில் இருக்க, அதில் அவனது சிரிப்பொலி, ரொம்பக் கொடூரமாய் ஒலித்தது.

 

இதையெல்லாம் கண்களில் கலவரத்துடன் அக்னி பார்த்திருக்க, அடுத்து இவன் என்ன செய்வானோ என்று அவளுக்கே உள்ளுக்குள், பொங்கி வரும் நீரூற்றாய் பயம் ஊற்றெடுக்க ஆரம்பித்தது!

 

பயந்த விழிகளால் படபடத்துக் கொண்டிருந்த அக்னியை மீண்டும் திரும்பிப் பார்த்தவன்.. அவள் விழிகளோடு தன்னதைக் கலந்து..

 

“இப்போ இவன் செஞ்ச தப்புக்கு, இவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?” என்று ஒரு நொடி இடைவெளியில் மீண்டும் தொடந்தான்.

 

“மரணம்!” என்ற அவனது கர்ஜனையில், கூட்டத்தில் இருந்த ஒரு பெண்மணியின் கதறல் அந்த இடத்தின் கொடூரத்தை இன்னமும் அதிகமாக்கியது.

 

கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு ஒரு மத்திம வயதுடைய பெண்மணி ஓடி வந்து ருத்ரன் காலடியில் விழுந்து, அவனது காலைப் பற்றிக் கொண்டு..

 

“ஐயோ.. தம்பி.. விட்டுடுப்பா.. அவரை விட்டுடுப்பா.. எனக்காக இல்லைனாலும், எங்களோட பெண்ணுக்காக அவரை விட்டுடுப்பா..” என்று கதற, அவரை ஆழமாய், அழுத்தமாய் பார்த்தான் ருத்ரன்.

 

அந்தப் பெண்ணின் புறமாய் குனிந்து.. “உனக்கே ஒரு பொண்ணு இருக்குல்ல?” என்று கேட்க, அவனது கேள்வியில் நீர் வறண்டது அந்தப் பெண்மணிக்கு.

 

அது ஒரே கேள்வி தான்!.. ஆனால் அது என்ன ராம பானமா? எதிரில் இருப்பவரின் மனதை ஒற்றை நொடியில் துளையிட்டு உயிரைக் குடித்தே விட்டதே?!

 

“உனக்கும் பொண்ணு இருக்குல்ல?” என்ற அந்த ஒற்றைக் கேள்வியில் கதறிக் கொண்டிருந்த பெண்மணி அதிர்ந்து அவனைப் பார்க்க, அவனோ.. இன்னுமாய் அவளிடம் குனிந்து..

 

“அப்போ உன் புருஷன் கண்டிப்பா சாக வேண்டியவன் தான்!” என்று கல்லென உரைத்து நிமிர்ந்தவன், தனது இடக்கரத்தை மெல்லத் தூக்கி.. ஒற்றைச் சொடுக்கிட, அதோ.. தூக்குக்கயிறு மாட்டப்பட்டு நின்றிருந்தவனின் காலடியில் இருந்த அந்த மரம் நகர்த்தப்பட்டு, கட்டிய மனைவியின் கண்ணெதிரே, தொண்டைக்குழி நெறித்து.. அந்தரத்தில் கை, கால்கள் துடிக்க.. செத்துப் போனான் அவன்.

 

அவனது மனைவியோ.. “ஐயோ.. ஐயோ..” என்று அந்த இடமே அதிரும்படி ஓலமிட்டு கொண்டிருக்க, கண்களில் சிறிதளவும் பரிதாபமின்றி தூக்கில் துடிப்பவனையே ஒரு வித திருப்தியான ரசனைப் பாவத்துடன் ருத்ரன் பார்த்திருக்க, அக்னிக்கோ உயிர்க்குலை நடுங்கிவிட்டது!

 

‘சொந்த ஊரைச் சேர்ந்தவனை.. தனது கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டான் என்ற காரணத்திற்காக இப்படி ஊரைக் கூட்டித் தூக்கிலிடுகிறானே.. இவன் என்ன மனிதனா?. இல்லை அரக்கனா?!’ என்று அவள் அதிர்ந்து போய்ப் பார்க்க.. அவளைத் திரும்பிப் பார்த்தவன், வேகமாய் அவளிடம் வந்தான்.

 

வந்த வேகத்தில் அவளது தலைமுடியைப் பற்றி இழுத்தவன்..

 

“பார்த்தியா.. பார்த்தியா.. நல்லா பார்த்தியா?

 

அடுத்து.. யாருன்னு தெரியுமா உனக்கு?

 

உன்னோட பாசத்துக்குறியா தீதி.. அதோ.. அங்க நிற்கறாளே, தாமினி! அவ தான் இப்படிக் கதறப் போறது..

 

ஏன்னா.. அடுத்து இந்தத் தூக்குல தொங்கப் போறது.. அவ புருஷன் ராம் தான்!” என்கவும், இரண்டு பெண் காவலர்களுக்கு மத்தியில், இடுப்பில் குழந்தையுடன் நின்றிருந்த தாமினியோ..

 

“ஐயோ!.. கடவுளே.. வேண்டாம்.. அவரை ஒன்னும் செய்துடாதீங்க.. ஐயோ!.. கடவுளே!..” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினாள்.

 

அதைப் பார்த்த அக்னியின் கண்களில் அவளையும் அறியாது கண்ணீர் துளிர்க்க, சட்டென அந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள்.. கண்களில் சிறிதும் பயமின்றி..

 

“இங்க பாரு ப்ரதாப்..” என்று பேச்சை ஆரம்பிக்க, மொத்த ஊரும், “ஏய்..” என்று அக்னியின் மீது பாய ஆவேசமானது.

 

அவர்கள் அத்தனை பேரும் ஒரே நேரத்தில் கூவிய அந்த ஒற்றை வார்த்தை, கடலலையின் பேரிரைச்சலாய் மாறி, அந்த ஒட்டுமொத்த ஊரையும் அதிரச் செய்தது.

 

அதில் ஒரு கணம் திகைத்தவள், மொத்த ஊரையும் தனது கடுகடுத்த பார்வையால் எரித்தபடி..

 

“ப்ரதாப்..” என்றாள் நிதானமாக!

 

அவள் இப்படி மீண்டும் அழைக்கவும் சில பெண்கள் ஆவேசமே கொண்டு முன்னால் வந்து அவளைத் தாக்க வர, அதை ருத்ரனின் விழியசைவில் அங்கிருந்த காவலர்கள் தடுக்க முயல, அதையும் தாண்டி ஒரு வயதான பெண்மணி முன்னே வந்து அக்னியின் கண்களில் பளார் என்று அறைய வந்தார்.

 

அவர் கண்களில் இருந்த கோபத்திற்கு, அவர் மட்டும் அக்னியை அறைந்திருந்தால் நிச்சயம் அவளது உதடு கிழிந்திருக்கும்.

 

ஆனால் ஓர் அலட்சிய பாவனையுடன் அக்னியையே பார்த்துக் கொண்டிருந்த ருத்ரன், வெகு சாதாரணமாக அந்தப் பெண்மணியின் கரத்தைப் பற்றிவிட, அந்தப் பெண்மணியோ ருத்ரனைத் திரும்பிப் பார்த்தார்.

 

“விடு தம்பி.. என்ன விடு.. எவ்வளவு தைரியம் இருந்தா உன்ன பேர் சொல்லிக் கூப்பிடுவா இவ?” என்று சீறிக் கொண்டே மீண்டும் அவள் மீது அவர் பாயப் போக, அவரைத் தடுத்த ருத்ரனோ கேலிச் சிரிப்புடன்..

 

“விடுங்க.. விடுங்க.. சின்னப்புள்ள ஏதோ தெரியாம பேசிட்டா.. அவ ஏதோ சொல்ல ஆசைப்படறா.. என்ன சொல்ல வரான்னு கேட்போம்..” என்று அந்தப் பெண்மணியைச் சமாதானப்படுத்திவிட்டு, அக்னியின் புறம் திரும்பியவன்,

 

“ஹ்ம்ம்.. நீ சொல்லு மா..” என்று மீண்டும் ஏளனமாய் கேட்டான்.

 

அதில் அனல் கசியும் விழிகளால் அவனை ஆழப் பார்த்தவள், “ராம் செய்தது தப்புன்னா.. அந்தத் தப்புக்குக் காரணமா இருக்கற நான் உன் கண்ணு முன்னாடியே தான இருக்கேன்? அப்போ அந்தத் தண்டனையை எனக்குக் கொடுத்துட்டு, ராமை விட்டுடு..” என்று அவள் கூற, அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், திடுமென ஏதோ வேடிக்கையைக் கண்டவன் போல இடி இடியென நகைக்க ஆரம்பித்தான்.

 

அவன் சிரிப்பதையே விழியகற்றாது அக்னி பார்க்க, சட்டெனத் தனது சிரிப்பை நிறுத்தியவன், அவனது கழுத்தை அழுந்தப் பற்றினான்!

 

அதில் அக்னிக்கு விழிகள் பிதுங்கி, கண்களில் நீர் வந்தாலும் அசையாது அவனையே அவள் பார்த்திருக்க, ஒரு கணம் அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலக்கவிட்டவன், அவள் விழிகளில் தெரிந்த உறுதியில் தன்னையும் அறியாது சற்றுத் தடுமாறிப் பின் மீண்டு, அவளை ஆவேசமாக விடுவித்தான்.

 

அதில் தடுமாறி கீழே விழுந்தவளை, மீண்டும் ஏளனமாய்ப் பார்த்துச் சிரித்தபடி..

 

“அக்னி.. அக்னி! உனக்கு ஒரு விஷயம் புரியல.. உன்ன நான் அப்படியே விட்டுடுவேனா என்ன?

 

உனக்குப் பெரிய தண்டனை இருக்கு மா.. கவலைப்படாதே!” என்று நக்கலாய் மொழிந்தவன், மீண்டும் அவளருகே கோபமாய் சென்று..

 

“அப்பறம்.. இங்க யாருக்கு என்ன தண்டனை கொடுக்கணும்னு முடிவு செய்யறது நானா தான் இருக்கணும்! உன்னைத் தண்டிக்க நீ எனக்கு அனுமதி கொடுக்கணும்ன்ற அவசியமில்ல..” என்று இறுகிய குரலில் கூற, அவனது குரல், அக்னியின் உடலுக்குள் ஊடுருவி, ஒரு நடுக்கத்தைக் காட்டியது!

 

அந்த நடுக்கத்தை அவனுக்குக் காண்பிக்கப் பிரியப்படாது அக்னி முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதே நேரத்தில் ருத்ரனின் கண்ணசைவில் இரண்டு பேர் வந்து அக்னியை மீண்டும் சிறைச்சாலைக்கே அழைத்துச் சென்றனர்.

 

அவளை இழுத்துச் செல்லும் போது தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்த அக்னியோ, தன்னையே தொடர்ந்து வரும் ருத்ரனின் பார்வையைக் கண்டு அதிர்ந்தாள்!

 

அந்தப் பார்வையில் இருந்தது என்ன?!

 

கோபம்? வெறுப்பு? 

 

கிடையவே கிடையாது!

 

ஏதோ இனம் புரியாத.. உயிருக்குள் ஊடுருவி.. அவளையே உறிஞ்சி எடுக்கும் துளைக்கும் பார்வை அது!

 

இவளது பார்வை, அவன் பார்வையோடு கலந்த பிறகும் கூட அவன் தனது விழிகளை விலக்கிக் கொள்ளவில்லை. ஆனால் அதற்கு மேல் அவனது பார்வையின் வீரியம் தாங்காது அக்னி தான் தனது விழிகளைத் திருப்பிக் கொள்ள நேர்ந்தது.

 

சிறைக்கு மீண்டும் வந்த பிறகும் கூட அவளுக்கு அந்தக் குழப்பம் தணியவில்லை. கூடவே ருத்ரன் மீதிருக்கும் ஆத்திரமும்!

 

இந்த ஊர் மக்களுக்காகத் தான் அதைச் செய்தேன்.. இதைச் செய்தேன் என்று அத்தனை பேசுகிறவன்.. இல்லாத அநியாயங்களை எல்லாம் செய்கிறவன்.. இன்று தனது சொந்த ஊர்க்காரனை இப்படி இத்தனை மக்கள் முன்னிலையில், அவனது மனைவி கதறக் கதறக் கொன்றிருக்கிறானே?’ என்று உள்ளுக்குள் பதைபதைத்தது அவளுக்கு!

 

‘அவனெல்லாம் மனுஷன் இல்ல.. மிருகம். உயிர் வாழத் தகுதியே இல்லாத மிருகம்!’ என்று உள்ளுக்குள் கொதித்தாலும், காரணமேயின்றி அவளது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

 

கூடவே, அவன் இடக்கண்ணுக்குள் இருந்து பளிச்சிடும் அவனது மச்சமும், அதே கண்கள் இன்று அவளைப் பார்த்த பார்வையும் அவளது நெஞ்சத்தைத் தடதடக்க வைத்து, காரணமே அறியாது பெரும் சோகத்தை அவளுக்குள் ஊற்றெடுக்க வைத்தது!

 

அவளே அறியாது அவள் கண்ணயர்ந்த பொழுது.. மீண்டும் அவளது கண்ணுக்குள் ஒளிர்ந்தது அந்த மச்சம்!

 

அந்த மச்சம் பொதிந்த அவன் விழிகளையே தவிப்போடு அவள் பார்த்திருக்க.. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மச்சத்துக்கு சொந்தமானவனின் முழு உருவமும் வெளிச்சத்துக்கு வந்து அவளுக்குக் காட்சி கொடுத்தது!

 

அவனையே அவள் அதிர்ச்சியுடன் பார்த்தது பார்த்தபடி இருக்க.. “என் மரணம் உன்னால தான்.. இல்லையா மித்ரா?” என்று கேட்டபடியே அவளருகே அவன் வர, தவிப்புடன் உதடு துடித்தது அக்னிக்கு!

 

விழிகளில் வழியும் கண்ணீருடன், அவள் மறுப்பாய் தலையசைக்க..

 

“இல்ல மித்ரா.. எனக்குத் தான் தெரியுமே! உன்னால தான் என்னைச் சொர்க்கத்துல சேர்த்து வாழ வைக்கவும் முடியும்.. நரகத்துல போட்டுச் சாகடிக்கவும் முடியும்.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அவனது இடக்கண் வெகு லேசாகக் கலங்கிச் சிவக்க, அக்னியோ வேகமாக ஓடிப் போய் வீறிடும் குழந்தையாய் அவனை அழுது கொண்டே அணைத்துக் கொண்டாள்!

 

அவள், அவனை அணைத்த மறுவினாடியே, அவனது பின்புறமாக வெகு வேகத்தில் வந்த துப்பாக்கிக் குண்டொன்று, அவனது முதுகை மெல்லத் துளைத்தது!

 

அது அவனைத் தொட்ட அடுத்த வினாடியே உள்ளுக்குள் அந்தக் குண்டு துளைத்த அதிர்வில் ஏற்கனவே சிவந்திருந்த ருத்ரனின் கண்கள் மேலும் சிவக்க, அவனது உடலே ஒரு கணம் தூக்கிப் போட, நிலை குலைந்து கீழே விழப்போனவன், அவன் விழுவதைக் கண்டு அதிர்ந்து பிரமை பிடித்து

நின்றிருந்த பெண்ணவளின் கண்களில் துளிர்த்த நீரைத் தன் பெரு விரலால் துடைத்துவிட்டபடி.. “லவ் யூ மித்ரா..” என்று கூறியபடியே கீழே சரிந்தான்!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்