Loading

மயூரத்தின் நேசம்!

உறக்கத்திலிருந்து விதிர்த்துப் போய் எழுந்தாள் அக்னி!

‘என்ன கனவு இது? எதுக்காக எனக்கு இப்படி எல்லாம் கனவு வருது? இந்த.. இந்த ருத்ரனை கொல்லறதுக்காகத் தான நான் இங்க வந்திருக்கேன்.. ஆனா, நானே எப்படி அவனுக்காக.. அவன் மரணத்துக்காக அழுவேன்..’ என்று எண்ணமிடும்போதே உதடு துடித்து.. அழுகை பீறிட்டது அக்னிக்கு!

அந்த இடது கண்ணுக்குள் இருந்த மச்சம் இப்பொழுதும் அவள் கண் முன்பு தோன்றி அவளை இம்சித்தது.

அந்தக் கண்களைப் பார்த்தால் அவளால் கசிந்துருகத் தானே முடிகிறது!

அந்தக் கண்களுக்கு மரண வலியை எப்படி அவளால் கொடுக்க இயலும்?

இந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ஒருபுறம் ருத்ரனைக் கொல்ல நினைப்பதும்.. மறுபுறம்.. அதே ருத்ரனின் விழிகளுக்குள் வீழ்ந்து கிடப்பதும் அவள் தானா? என்று அவளது எண்ணம் செல்லும் பொழுதே, உள்ளூர ஒரு திடுக்கிடல் அவளிடம்!

‘என்ன? அவன் கண்களுக்குள்ள நான் விழுந்து கிடக்கறேனா? எ.. எப்படி இது சாத்தியம்?

நான்.. நான் எப்படி ஒரு கொலைகாரன்கிட்ட காதல்வயப்பட முடியும்?

காதலா? இது காதலா? கடவுளே?!’ என்று எழுந்து மேலே அமர்ந்துவிட்டாள் அவள்.

‘இல்ல.. இது காதலும் இல்ல.. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல..’ என்று அவள் எழுந்து அருகிலிருந்த பானையிலிருந்து நீரை எடுத்து முகத்தைக் கழுவினாள்.

‘ஹ்ம்ம்.. இந்த மாதிரி கடத்திட்டு வந்தவன் மேல பரிதாபப்பட்டு காதல் வரதெல்லாம் வெறும் கதைகள்ல மட்டும் தான் நடக்கும்.. எனக்கு அந்த அளவுக்கு ஒன்னும் புத்தி பிசகிப் போய்டல..’

என்று அவள் எதேச்சையாகச் சிறையை விட்டு வெளியே பார்க்க, அங்கே ருத்ரன் கைகளைக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பது தெரிந்தது.

விழிகளை இந்தப் பக்கம்.. அந்தப் பக்கம் திருப்பாது அந்தப் பார்வை கூறுவது என்ன?

அவனை நிமிர்ந்து பார்த்தவள், அந்தப் பார்வையில் உறைந்து போய் அப்படியே நின்றிருந்தாள்.

அவளது இதயம் தன்னையும் மீறித் தாளம் தவறி அடித்துக் கொண்டது!

ஏனிந்த படபடப்பு? எதற்கு இந்தத் தடுமாற்றம்?

கொலைகாரனைக் கண்டு பயம் வரலாம்.. பதட்டம் வரலாம்? ஆனால்.. வயிற்றுக்குள் இந்தப் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு ஏன்?

அவன் பார்வைக்குள் தடுமாறியவளோ, அதன் வீரியத்துக்குள் இடம் மாறினாள்!

இருவரின் பார்வையும் துளி கூட விலகாது ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டிருந்தது.

காதல்.. எந்த நேரத்தில், யாருக்கு எப்படி வரும் என்று யாரால் கணிக்க இயலும்?

காதல் என்ற ஒன்றின் பொருளறியா அந்த ஆதாமின் இதய நாளத்தில் ஊடுருவிய அந்த உணர்ச்சிப் பிம்பம் தான் ஏவாளுக்காக ஆப்பிளைப் பறிக்கச் சொன்னதோ?

ஊரும், உலகமும் ஏவாள் ஆசைப்பட்டதைக் குற்றமென்று கூற.. அவளது ஆதாம் தான், ஆத்ம மனதோடு அவள் விருப்பத்தை நிறைவேற்றியவன்! ஊரார் பழியைத் தூக்கி கடலுக்கப்பால் வீசியவன்!!

அன்று அந்த ஏவாள், ஆப்பிளுக்கு ஆசைப்படாவிட்டால்.. இந்த மொத்த மனித இனமும் குரங்கோடு குரங்காக வனாந்திரத்தில் திரிந்து கொண்டு தானிருக்கும்!

ஏற்றத் தாழ்வின்றி.. மனிதனுக்கான எந்த உணர்வுமின்றி.. வெறும் ஐந்தறிவோடு இருந்திருப்பான் மனிதன்!

ஆனால்.. அவனுக்குள் இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறதே இந்தக் காதல்?

அந்த ஒற்றை உணர்வுக்காக, ஏவாள் செய்த அத்தனையும் பிழையற்றதாகிவிடுமே?!

ஆனால்.. எப்பொழுது ஏவாளின் மீது கொண்ட காதலுக்காக ஆதாம், கடவுளின் ஆணையையே மீறி அந்த ஆப்பிளைப் பறித்தானோ, அவன் அப்பொழுதே மனிதனாகிவிட்டான்!

முதல் விதி மீறல் ஆதாமின் உள்ளத்து உணர்ச்சியில் பீறிட்டது!

பின்னர் தான் ஆப்பிளைத் தின்றதும், மனித ஜன்மம் சபித்துப் போனதும்!

இதோ.. இப்பொழுது இங்கு நடந்து கொண்டிருப்பதும் அதே விதி மீறல் தான்..

தன்னதல்ல.. தனக்கு உகந்ததல்ல.. என்று எதிரெதிர் துருவங்களாய் நிற்கும் அதே ஆதாம், ஏவாளின் பிரதிநிதித்துவமாய் நிற்கும் இருவரும்.. தங்களை அறியாமலேயே.. ஒருவருக்குள் ஒருவர் முழுகத் துடிக்கிறார்கள்!

புறமாய் வெறுத்து.. அகத்தில் விரும்பும் முரண்கள்!

நியாயப்படியும், தர்க்கப்படியும் இருவரது மரணமும் அடுத்தவர் கரத்தினில் தான்! ஆனால்.. இந்தக் காதல், தர்க்க நியாயங்கள் பார்த்தா வருகின்றது!

இருவருக்கும் மற்றவர் மீது வெறுப்பு தான் என்று வெளிப்படையாகத் தீயைக் கக்கிக் கொண்டிருந்தாலும், அவளது நினைவின்றி அவனாலேயோ.. அல்லது, அவனது நினைவின்றி அவளாலேயோ இருக்க முடிவதே இல்லையே?

தன் மனதில் இருக்கும் இந்த ரகசியம் பிறருக்கு மட்டுமல்லாது, தங்களுக்கே கூடத் தெரிந்துவிடக் கூடாது என்று இருவரது அறிவும் மிகுந்த பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்க, ஒற்றை பார்வைத் தழுவலில் இருவருமே உணர்ந்து கொண்டார்கள், மற்றவரது உணர்ச்சியைப் பற்றி!

அவளது ஆழ்ந்த.. அழுத்தமான பார்வையில்.. அந்தக் கூர் விழியின் ஓரத்தில் மெல்லக் கசிந்த ஒற்றை நீர்மணி உதிர்ந்து உரைத்தது அவளது காதலை.

தனக்குள்ளும் ஏதோ கசிந்துருகி.. மெல்ல நடந்து அவளது சிறையை நோக்கிச் சென்றான் ருத்ரன்!

இருவருக்கும் இடையில் இருக்கும் அந்த இரும்புக்கம்பிகள், அவனைத் தடுக்க.. அவளைச் சிறையிட்டவனே தான் தான் என்பதையும் மறந்து ஒரு கணம் கண்களில் வலியோடு அந்தக் கம்பிகளைப் பார்த்தவன், தன்னையும் மீறிக் கலங்கும் விழிகளை அவளுக்குக் காட்டப் பிரியமின்றி விறுவிறுவென்று அங்கிருந்து நடந்தான்!

சிறைக்குள் காவலாயிருக்கும் காவலாளிகளின் விசித்திர பார்வையைக் கண்டு கொள்ளாது, விறுவிறுவென வெளியே வந்தவனை வாசலிலேயே தடுத்தார் அமரேந்தர்!

என்றுமே மருமகனைக் கண்டதும், கனிந்து போகும் அவர் முகத்தில் சற்று கடுமை இருந்தது!

“எங்க போயிட்டு வர ப்ரதாப்?” என்று அமரேந்தர் கேட்க, அவருக்குப் பதில் கூறாது முகம் திருப்பிக் கொண்டு நின்றிருந்தான் ருத்ரன்.

அதை ஆழக் கணக்கெடுத்த அமரேந்தரோ.. “ஏன் ப்ரதாப் உன் கண்ணு இவ்வளவு சிவந்திருக்கு? இது சரியா தூங்காததாலேயா? இல்ல.. அவ மேல இருக்கற கோபத்தாலேயா?” என்று அவர் கேட்க.. அவர், அவனை ஆழம் பார்ப்பது அவனுக்கும் புரிந்துவிட..

“இது.. இந்தச் சிவப்புக்குக் காரணம் கோபம் தான் மாமா.. அவ மேல தான் தீராக் கோபம்..

என்ன உளவு பார்க்க வந்திருக்கா அவ.. அதுவும் அவ?!” என்றவன் கண்கள் இன்னமும் கனலாக ஜொலித்தன.

உடனே அமரேந்தரோ..

“அப்படின்னா.. அவளைக் கொன்னுடலாம்ல ப்ரதாப்? எதுக்கு அவளை உயிரோட வச்சிருந்து இன்னும் இன்னும் உன் கோபத்தைப் பெருக்கிட்டு இருக்கணும்?” என்று அவர் கூற, அவரைச் சட்டென நிமிர்ந்து பார்த்தவனோ, ஒரு விரக்திச் சிரிப்பை உதிர்த்துவிட்டு..

“அவளைக் கொல்லறதா? கொன்னுடலாம் மாமா.. அவளைக் கொல்லறது ஒன்னும் அவ்வளவு பெரிய கஷ்டம் இல்ல..” என்றவன், ஒரு கண நேர இடைவெளிக்குப் பிறகு..

“ஆனா.. அவ செத்துட்டா.. கூடவே இந்த ருத்ரனும் செத்தாகணுமே மாமா.. அது தான விதி?” என்று அவன் கேட்க, அமரேந்தருக்குத் தூக்கி வாரிப்போட்டது!

“பிரதாப்.. என்ன சொல்லற நீ?” என்று அவர் அதிர்ந்து போய்க் கேட்க, அதே விரக்திக் சிரிப்புடன்..

“மாமா.. ஒரு காட்டுல ஒரு ஆண் மயில் ரொம்ப சுதந்திரமா.. சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்துச்சாம்..

அந்த ஆண் மயிலுக்கு யாரைப் பார்த்தும்.. எதைப் பார்த்தும் பயமே இல்லையாம்!

சிங்கமே எதிர்ல வந்தாலும், அந்த ஆண் மயில், தன்னோட கூறிய அலகாலும், நீளமான நகத்தாலும் அந்தச் சிங்கத்து வயித்தையே கிழிச்சு எரிஞ்சுடுமாம்.

அந்த மாதிரி ஒரு சமயத்துல தான், அந்த ஆண் மயில் வானத்துல பறந்துட்டு இருந்தப்போ, தரையில் கருப்பு நிறத்துல ஏதோ ஒன்னு ஊர்ந்து போறதைப் பார்த்துச்சாம்..

மேல இருந்து பார்க்கும் போதே, அதோட அழகால கவரப்பட்டு கீழ இறங்கி வந்தா.. அது ஒரு கருநிற நாகப்பாம்புன்னு தெரிஞ்சுதாம் அந்த ஆண் மயிலுக்கு.

பல்லில் நஞ்சிருக்கும் அந்த நாகத்தைப் பத்தித் தெரிஞ்சாலும்.. அந்தப் பாம்போட அழகுல தன்னை மறந்துடுச்சாம் அந்த மயில்..

மெல்ல மெல்ல அந்தப் பாம்பை, மயில் நெருங்க நெருங்க.. பாம்பும் மயில் கிட்ட நெருங்கி வந்து.. மயிலைத் தன்னோட உடம்பாலே வளைச்சுக்கிச்சாம்!

இந்த மயிலுக்குப் புரியுது! அந்தப் பாம்பு தனக்கு நல்லதில்லை.. அது மேல ஆசைப்படறது தன்னோட உயிருக்கே ஆபத்தா முடியும்னு.. ஆனா அந்த மயிலால, பாம்பை ஒண்ணுமே செய்ய முடியலையாம்…

மயிலாட கூர்மையான நகங்களெல்லாம் மழுங்கிப் போய்டுச்சாம்.. அதோட அலகையும், உருக்குன மெழுகை ஊத்தி ஒட்ட வச்ச மாதிரி, அதை அசைக்கக் கூட முடியலையாம் அந்த மயிலால!

ஆனா மாமா.. உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா?

அந்த மயிலோட அலகை யாரும் மெழுகு ஊத்தி ஒட்ட வைக்கவும் இல்ல.. அதோட நகங்களோட கூர்மை மழுங்கிப் போகவும் இல்ல!

எல்லாம் அந்தப் பாம்பு மேல, மயிலுக்கு இருந்த மயக்கம் தான் காரணம்!

அதே மாதிரி தான் மாமா எனக்கும்!

என்னோட ஒரு கை அழுத்தத்துக்கு அக்னி தாங்க மாட்டா.. என்னைக் கொல்லத் தான் அவ வந்தான்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே அந்த ராம் வீட்டுலேயே என்னால அவளைக் கொன்னுருக்க முடியும்!

ஆனா.. அவளை அந்தப் பனிமூட்டமான ராத்திரி வேலைல, மாறு வேஷத்துல போயிருந்த நான் என்னைக்குப் பார்த்தேனோ.. அன்னைக்கே என் மனசைத் தொலைச்சுட்டேன் மாமா..

என்னால அவளைக் கொல்லவும் முடியல.. அவளை விட்டு விலகியிருக்கவும் முடியல!

அதே சமயம்.. நம்மள அழிக்கத் துடிக்கற ஆட்கள் பக்கம் அவ இருக்காளேன்றதையும் என்னால தாங்கவே முடியல!

ஓரொரு சமயம், அவளை அப்படியே கழுத்தை நெறிச்சு கொன்னுடலாம்னு ஆத்திரமா வருது.. ஆனா உடனேயே அப்படி நான் நினைச்சதுக்காக என்னையே தண்டிச்சுக்க நினைக்கறேன் மாமா..” என்று அவன் கூறுகையில் தொண்டை அடைத்தது ருத்ரனுக்கு.

ருத்ரனின் மனநிலை முற்றும் முழுதாகப் புரிந்துவிட்டது அமரேந்தருக்கு!

அவனது மனத் துடிப்பு வெறும் உடல் காமமல்ல.. அது அவன் மூச்சோடு கலந்த இதயத்துடிப்பு!

தவறு தான்.. அக்னியின் மீது அவன் காதல் கொண்டிருப்பது மிகப் பெரும் தவறு தான்!

அது தவறென்று புரியாதவனும் அவனல்ல.. ஆனால் இப்படி மருகுகிறவனை என்ன செய்ய முடியும்? இதை எப்படி ஏற்றுக்கொள்ளவும் முடியும்?

அவனுக்கு எதைச் சொல்லி என்னவென்று புரிய வைப்பது என்று அமரேந்தர் யோசித்துக் கொண்டிருக்கையில், ருத்ரனே தொடர்ந்தான்.

எனக்கு நீங்க என்ன யோசிக்கறீங்கன்னு புரியுது மாமா..

அக்னி மேல நான் காட்டற கருணை, நம்ம மக்களைக் கஷ்டப்படுத்திடுமோனு யோசிக்கறீங்க.. இல்ல?

எனக்கும் அது தெரியும் மாமா.. அதனால தான் நான் அதுக்கும் ஒரு திட்டம் வச்சிருக்கேன்..

ஆனா.. அதெல்லாம் அப்பறம்..” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு அர்ஜுன் வந்தான்.

வந்தவன், ருத்ரனைப் பார்த்து..

“ஜி.. ஒரு முக்கியமான விஷயம்..” என்று கூறிவிட்டு, அவன் காதுக்குள் ஏதோ ஒன்றை அவன் கூற, அவன் கூறியதைக் கேட்டவனுக்கு.. கண்கள் ஜொலித்தன!

அளவிடாத மகிழ்ச்சியுடன் அவனை ஆரத் தழுவிக் கொண்டவன்..

“மாமா.. நம்ம “ப்ராஜக்ட் டி”யை செயல்படுத்தறதுக்கான முக்கியமான பொருள் இன்னும் ரெண்டு நாள்ல நம்ம காளிக்ஷேத்ரா கடல் எல்லைக்கு வரப் போகுதாம்..

அது மட்டும் நம்ம கைக்குக் கிடைச்சுட்டா..” என்று கூறி அரக்கத்தனமாக வான் நோக்கிச் சிரித்தவன், மீண்டும் அமரேந்தரைப் பார்த்து..

“அது மட்டும் நம்ம கைக்குக் கிடைச்சுட்டா.. இனி இந்தக் காளிக்ஷேத்ராவைத் தொட ஒரு பயலுக்கும் தைரியம் இருக்காது..” என்று கூற, அது வரையிலும் அக்னியின் மீது ருத்ரனுக்குத் துளிர்த்திருந்த காதலால், ருத்ரனின் அந்த அசுரத்தன்மை கனிந்து விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த அமரேந்தரோ.. ‘இல்ல.. எந்தக் காரணத்தாலும், ருத்ரனின் இந்த வீரமும், அவன் மனதின் தீரமும் குன்றவே குன்றாது..’ என்ற உறுதியில் தன் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டு சிரித்தார்.

அதே வேளையில், ஜுவாலாமுகியின் வீட்டை நோக்கி, சிறைக் காவலாளியின் மனைவி ஓடிக் கொண்டிருந்தாள்.

அவள் ஜுவாலாமுகியின் வீட்டு வாசலுக்கு வந்து கதவைத் தட்டவும், அதைத் திறந்த ஜுவாலாமுகியிடம் அவள் தான் கொண்டு வந்த விவரத்தைக் கூறவும்.. ஏற்கனேவே சிவந்திருந்த அந்தப் பெண்மணியின் கண்கள், அக்கினி ஜுவாலையாய் கனன்றன!

-கனவு தொடரும்!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்