Loading

அத்தியாயம் 4

அது மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர். கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ‘வளர்ந்து வரும் ஊர்’களில் இந்த ஊரும் ஒன்று. ஆறே மாதங்களில் ஊர் ‘வளர்ச்சி’யடைய முடியுமா என்ற கேள்விக்கு ‘ஆம்’மென்று பதிலளித்திருக்கிறது இந்த ஊர்.

இங்கு ‘வளர்ச்சி’ என்று குறிப்பிடப்படுவது, பெரிய தொழிற்சாலை, அதற்கு சென்று வர செப்பனிடப்பட்ட சாலைகள், அங்கு ஏற்படும் விபத்துக்களினால் உண்டாகும் காயங்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனை ஆகியவையே ஆகும். அடுத்தடுத்து தோன்றிய கட்டிடங்களினாலும், கண்முன் ஊரில் நடக்கும் அதிசயங்களினாலும் அவ்வூர் மக்கள் ஆச்சரியத்தில் தான் மூழ்கினர். பாவம் அந்த அப்பாவி மக்களுக்கு தெரியவில்லை, இவையெல்லாம் மக்களுக்காக செய்யப்பட்டவை அல்ல, தொழிற்சாலைக்கு வருபவர்களுக்காக செய்யப்பட்ட வசதி என்று…

வருடம் முழுவதும் குண்டும் குழியுமாக இருந்த மண்தரையே பார்த்து வந்தவர்கள், தார் சாலையைப் பார்த்ததும், பார்க்க வேண்டியதை பார்க்காமல் விட்டுவிட்டனர். தொழிற்சாலையையும், மருத்துவமனையையும், சாலையையும் காட்டி ஒரு பக்கம் இவர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தவர்கள், மறு பக்கம் சத்தமே இல்லாமல் அவர்களின் கிராம வளங்களை அழித்துக் கொண்டிருந்தனர்.

அடிமட்ட வேலைக்காக அவ்வூரிலிருந்தே ஆட்களை பணிக்கு நியமித்திருக்க, அவ்வூர் மக்கள் அந்த தொழிற்சாலையைக் கொண்டாடத் துவங்கினர். அடிமைத்தனத்திற்கு அடித்தளம் ஆசை தான் என்பதை அந்த கிராமத்து மக்கள் அறியவில்லை… அதை அறிந்த மேல்மட்ட வர்க்கத்தினரோ, கேரட்டை காட்டி கழுதையை வண்டி இழுக்கச் செய்வதைப் போல், அம்மக்களை உபயோகித்துக் கொண்டனர்.

இவ்வளவு போற்றிப் புகழும் அந்த தொழிற்சாலையில் நடக்கும் வேலைகளைப் பற்றி கேட்டால், அங்குள்ள ஒருவருக்கும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை அது ஒரு ‘ஃபேக்டரி’… அவர்கள் ஊரின் ‘வளர்ச்சி’க்கு முக்கிய காரணமான ‘ஃபேக்டரி’… அதைப் பற்றி வேறு ஒன்றுமே தெரியாது… அதன் உரிமையாளரைக் கூட இதுவரை நேரில் கண்டதில்லை அவர்கள்

“இம்மாம் சைஸு காரு… வரிசையா நாலஞ்சு சொய்ங்குன்னு போகும்… அதுக்குள்ள யாரு இருக்கான்னுலாம் பார்த்தது இல்ல… மாசம் ஒரு ட்ரிப்பு அந்த ஃபேக்டரி முதலாளி வந்துட்டு போவாரு… இது கூட காத்துவாக்குல வந்த செய்தி தான்… அதுக்கு மேல அங்க என்ன நடக்குதுன்னுலாம் நமக்கு தெரியாது… நமக்கு அவ்ளோ விவரம் இல்ல… ஜோரா ஒரு ரோடு… இங்க இருக்க ஆரம்ப சுகாதார நிலையத்துல டாக்டருங்களுக்காக காத்திட்டு இருக்க நிலைமை போய், இதோ இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரி… நம்ம பயலுக சில பேருக்கு அந்த ஃபேக்டரிலேயே வேலை… வேற என்ன வேணும்… இன்னும் அடுத்த மாசம், இஸ்கூலு கூட கட்டிக்கொடுக்குறதா சொல்லிருக்காங்க…” – அங்கு வாழும் வெள்ளந்தி மனிதரின் பேட்டி இது.

இதுவரை அந்த தொழிற்சாலையைப் பற்றிய செய்தி சிறிதளவு கூட வெளியே கசியாமல் ரகசியம் காக்கப்பட, அதை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர் சிலர். ஆனால், அந்த சிலரில் பலர் இப்போது உயிருடன் இல்லை… இன்னும் சிலர், ஊரை விட்டு, வேலையை விட்டு ஓடியிருக்கின்றனர்.

இச்சம்பவங்களினால், சில காலம் ஊடகத்துறையின் கவனம் அந்த தொழிற்சாலையின் மேல் விழாமல் இருந்தது. அதெல்லாம் இராமமூர்த்திக்கு அந்த காணொளி காட்சி கிடைக்கும் வரை தான். உண்மைச்சுடரில் ஒரு மாதத்திற்கு முன்பு வரை பணியாற்றிய ஒரு பெண் நிருபரின் காணொளி தான் அது.

ஒரு மாதத்திற்கு முன், இந்த தொழிற்சாலை பற்றிய குறிப்புகளை சேகரிக்க சென்றவர் தான் அந்த பெண் நிருபர் ஷாலிஹா. முதல் இரு நாட்களில், அவர் தனக்கு கிடைத்த தகவல்களை அலுவலகத்திற்கு அனுப்பியிருக்கிறார். ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் அவரிடமிருந்து எந்த தகவல்களும் வரவில்லை.

சில நாட்களிலேயே அவரின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி கிடைத்தது.

‘ரிப்போர்ட்டர் தற்கொலை… அந்த பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கும் இவரின் தற்கொலைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா…’ இவ்வாறு அந்த தற்கொலை விஷயமே பரபரப்பு செய்தியாக மாறிவிட, தொழிற்சாலை பற்றிய செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டது.

ஒருவாறு அந்த செய்தியின் தாக்கம் இப்போது தான் குறைந்துள்ளது. இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான், அந்த காணொளி காட்சி அடங்கிய விரலி (பெண் ட்ரைவ்) அலுவலக முகவரிக்கு கூரியரில் அனுப்பப்பட்டது. அனுப்பியது யாரென்று சரிவரத் தெரியவில்லை.

அந்த காணொளியில், ஷாலிஹா ஆங்காங்கே காயங்களுடன் திரையில் தோன்றினார். “என் பேரு ஷாலிஹா. ‘உண்மைச் சுடர்’ பத்திரிக்கைல ரிப்போர்ட்டரா இருக்கேன்… ஒரு வாரத்துக்கு முன்னாடி *****ல இருக்க அந்த தொழிற்சாலைய பத்தி ரிப்போர்ட் பண்ண தான் நான் இங்க வந்தேன். ஆனா முதல் இரண்டு நாட்கள் எனக்கு எந்த உருப்படியான தகவல்களும் கிடைக்கல… இந்த ஊர் மக்கள் அந்த தொழிற்சாலைய ஏதோ கோவில பாக்குற மாதிரி தான் பார்க்குறாங்க… இப்படியே போனா சரிப்பட்டு வராதுன்னு, அந்த ஃபேக்டரிக்குள்ள ரகசியமா போக முடிவு செஞ்சேன்… ஆனா, அது அவ்ளோ ஈஸி இல்ல… உள்ள போறதுக்கு மூணு கதவுகள் தாண்டி போகணும்… ஒவ்வொரு கதவுலயும் ரெண்டு பாடிகார்ட்ஸ் வீதம் மொத்தம் ஆறு பேரு இருக்காங்க… எப்படியோ என் நல்ல நேரம் அன்னைக்கு அவங்க கண்ணுல மண்ண தூவிட்டு உள்ள போயிட்டேன். “

இந்த இடத்தில் சிறிது மூச்சு வாங்கிக் கொண்டார் ஷாலிஹா. பின் மீண்டும் தொடர்ந்தார். “உள்ள போனாலும் எனக்கு எதுவும் வித்தியாசமா படல… வேலை செய்றவங்கள சிலர் கண்காணிச்சுட்டு இருந்ததால என்னால தீவிரமா தேட முடியல… ஒரு நாள் முழுசா வெட்டியா சுத்துறோம்னு தோணுனப்போ தான், ஃபேக்டரில யாருக்கோ அடி பட்டுடுச்சுன்னு ஆம்புலஸ்ல ஏத்திட்டு போறத பார்த்தேன்… அங்க தான் என்னோட சந்தேகம் தீவிரமாச்சு… ஃபேக்டரில ஆக்சிடென்ட்னா வாரத்துக்கு ஒரு தடவங்கிறதே அதிகம் தான்… ஆனா இங்க ஒரு நாள் விட்டு ஒரு நாள், ஏதோ விபத்துன்னு அவங்க ஹாஸ்பிடலயிருந்து ஆம்புலன்ஸ் வருது… நானும் இதைப் பத்தி அவங்ககிட்ட கேட்டப்போ, இப்படி ஆக்சிடென்ட் ஆகுறவங்கள, ஃபேக்டரியோட சொந்த செலவுல அந்த ஹாஸ்பிடல்ல சிகிச்சை தரங்களாம்… மூணு நாள் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு மறுபடியும் வேலைக்கு வந்தா போதும்னு சொல்லுவாங்களாம்… இதைக் கேட்டு அந்த மக்கள் வேணா, அவங்க நல்லது பண்றாங்கன்னு நம்பலாம்… ஆனா ஐ ஃபெல்ட் சம்திங் ஃபிஷி… யோசிச்சுட்டே சுத்திட்டு இருந்தப்போ தான் எனக்கு யாரோ பேசுறது கேட்டுச்சு… அதை ரெகார்டும் பண்ணிக்கிட்டேன்…” என்று கூறியவர் அந்த பதிவை ஓட விட்டார்.

‘சார், இன்னைக்கு ஒரு ஆள நம்ம ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சு…’

‘….’

‘இல்ல சார்… அங்க எல்லாமே ரெடியா இருக்கு… இந்த தடவ சொதப்பாம பார்த்துக்குறோம்… பக்கவா எல்லாம் பண்ணிட்டு தான் அவர டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிருக்கேன்…’

இப்படி முடிந்திருந்தது அந்த பதிவு.

“இதைக் கேட்டதும் உங்களுக்கே தெரிஞ்சுருக்கும் அந்த ஹாஸ்பிடல்ல ஏதோ பண்றாங்கன்னு…” என்று கூறியவர் ஒரு பெருமூச்சுடன், “இவ்ளோவையும் சரியா பண்ண நான் கோட்டை விட்டது ஒரு இடத்துல… அங்க இருக்க சிசிடிவி கேமரா பத்தி யோசிக்காம விட்டுட்டேன்… அந்த இடத்த விட்டு வெளியே வரும்போது தான் அதை நோட்டீஸ் பண்ணேன்… அப்போவே என்னோட இறப்பு உறுதியாகிடுச்சுன்னு தெரியும்… ஆனா எனக்கு தெரிஞ்ச விஷயம் இந்த உலகத்துக்கும் தெரியணும்… அங்க நடக்குறது கண்டிப்பா நல்ல காரியம் இல்ல… இது மக்களுக்கு தெரியணும்… அதுனால தான் என் உயிரப் பத்திக் கூட கவலைப்படாம இந்த வீடியோவ பண்ணிட்டு இருக்கேன்… இது யாரு கைக்கு கிடைச்சாலும், ‘உண்மைச் சுடர்’ பத்திரிக்கைக்கு குடுத்து இந்த விஷயம் வெளிய வர மாதிரி செய்ங்க ப்ளீஸ்…” என்றதோடு அந்த காணொளி முடித்திருந்தது.

இந்த காணொளியை, இராமமூர்த்தி ராகவிற்கு அனுப்பியிருந்தார். ஒருவழியாக வீணாவை சமாதானப்படுத்தி, அவள் கேட்ட மாதிரியே இரவுணவை அந்த பிரபல விடுதியில் முடித்த பின்பு சோர்வுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.

ராகவிற்கு கண்கள் சொக்க, உடுத்தியிருந்த உடையைக் கூட களையாமல், அப்படியே கட்டிலில் விழுந்திருந்தான். கண்கள் மூடி உறக்கத்தின் பிடியில், தானே வலிய சென்று சுகமாக சிக்கிக் கொண்டவனை, ஒரேயொரு அதிர்வைக் கொண்டு நிகழ்விற்கு வரச்செய்தது அவனின் அலைபேசி.

எரிச்சலுடன் கண்களைத் திறந்து பார்த்தவன், இராமமூர்த்தி அனுப்பியிருந்த காணொளியை ஓடவிட்டான். காணொளி ஆரம்பித்தபோது அசுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தவன், இரண்டாவது விநாடியிலேயே கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தான்.

ஷாலிஹாவை அவனிற்கு தெரியும். அவன் வேளைக்கு சேரும்போது தான் அவளும் சேர்ந்திருந்தாள். அவளின் லட்சியமே, நேர்மையான நிருபர் என்று பெயர் எடுக்க வேண்டும் என்பது தான். அவளின் லட்சயத்திற்காக துடிப்புடன் செயல்படுபவளின் இறப்பு அவனிற்கு கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால், அவளின் இறப்பு தற்கொலை அல்ல, கொலை என்பதை அந்த காணொளி மூலம் அறிந்தவனிற்கு அதை ஜீரணிக்க சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டவன், மீண்டும் அந்த காணொளியை ஓடவிட்டு ஷாலிஹா கூறியதை மனதில் ஏற்றிக் கொண்டான். அவள் எடுத்த செயலை தான் முடிப்பதாக, மானசீகமாக ஷாலிஹாவிடம் கூறிக் கொண்டான்.

அப்போது தான் வீணாவின் நினைவு வந்தது. அவன் மேற்கொள்ளப் போகும் பயணம் எவ்வளவு ஆபத்தானது என்று ராகவிற்கு நன்கு புரிந்தது. இதில் வீணாவையும் சிக்க வைக்க வேண்டுமா என்று யோசித்துக் கொண்டிருந்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

அடுத்த நாள் விடியலைக் கட்டியம் கூற, சூரியன் தன் கதிர்களை பூமிக்கு பாய்ச்சியபடி மேலெழுந்தான். அந்த கதிர்கள் ஜன்னலின் வழியே ராகவையும் தீண்ட, மெல்ல கண் விழித்துப் பார்த்தவன், முதல் வேலையாகத் தன் அலைபேசியை ஒற்றைக் கண்ணில் பார்த்தான்.

அதுவோ அவனின் மனநிலை புரியாமல், சரியாக வேலை செய்து 8.15 என்று காட்ட, ‘ஷிட்… இவ்ளோ நேரமா தூங்குனேன்…’ என்று பதறியபடி எழுந்தமார்ந்தான்.

இரவு தான் யோசித்ததை நினைவிற்கு கொண்டு வந்தவன், மீண்டும் ஒரு முறை அதைப் பற்றை வீணாவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டே, வேகவேகமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.

ராகவ் காலை உணவை சாப்பிட வர, அங்கு அலுவலகத்திற்கு தயாராகி அமர்ந்திருந்த ஜீவாவைக் கண்டான்.

“டேய், இன்னைக்கு தான அந்த ஊருக்கு போறீங்க…?” என்று வினவ, “ஆமா மச்சான்… இன்னைக்கு மதியம் போல கிளம்பணும்…” என்று சோர்வாகக் கூறினான்.

அவன் குரலிலிருந்த சோர்வைக் கண்டு கொண்ட ஜீவா, “என்னாச்சு டா…” என்று ஆறுதலாகக் கேட்க, இரவு கண்ட காணொளிக் காட்சியை அவனிடம் ஒப்பித்திருந்தான் ராகவ்.

ஜீவாவிற்கும் அதைக் கேட்டதும் அதிர்ச்சியே. “டேய் என்னடா இது..? அப்போ ஷாலிஹா தற்கொலை பண்ணிக்கலையா..!” என்றான். பின் என்ன நினைத்தானோ, “மச்சான் அப்போ வீணா…” என்று இழுத்தான்.

“அதான் டா தெரியல… இந்த வீடியோ பத்தி சொன்னா, கண்டிப்பா ஜான்சி ராணி கணக்குல அவளும் வரேன்னு போர்க்கொடி தூக்குவா… நேத்து தான் கால்ல விழுகாத குறையா சமாதானப்படுத்திருக்கேன்…” என்று சலித்துக் கொண்டான் ராகவ்.

இவ்வளவு நேரம் இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது இருவருக்குமே… அவளின் பெயர் செய்த மாயமோ…

“ரொம்ப கேர்ஃபுல்லா இருங்க டா ரெண்டு பேரும்… டெய்லி கால் பண்ணிடு… நான் கால் பண்றப்போ நீ ஃபீல்டுல இருந்தனா மாட்டிக்க சான்ஸ் இருக்கு… அதான் உன்னையே கால் பண்ண சொல்றேன்…” என்று கூறினான் ஜீவா.

“கண்டிப்பா டா…” என்று உறுதி கொடுத்தான் ராகவ்.

கால் மணி நேர உரையாடலுக்குப் பின், ஜீவா அலுவலகத்திற்கு கிளம்ப, “திரும்ப எப்போ மீட் பண்ணுவோம்னு தெரியல டா…” என்று தன் நண்பனை ஒருமுறை அணைத்துக் கொண்டான் ராகவ். அவன் மனதிற்குள்,’மீட் பண்ணுவோமான்னே தெரியல…’ என்று கூறிக் கொண்டான்.

“எதுனாலும் கால் பண்ணு டா… ஒன் பெர்சென்ட் ரிஸ்க் இருந்தாலும், அதை எடுக்காத… நியூஸ் விட உயிரு முக்கியம்… வீணாவ பார்த்துக்கோ…” என்று ஆயிரம் பத்திரங்களுடன் வேலைக்கு கிளம்பினான் ஜீவா. தோழனையும் தங்கையையும் இனி எந்த நிலைமையில் காணப் போகிறான் என்பதை அறியாதவனாக…

காலையுணவை முடித்த ராகவ், வீணாவின் வீட்டிற்கு செல்ல வீட்டிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள் ஹரிணி. ராகவைப் பார்த்ததும் சிரித்தவள், “அவ இன்னும் தூங்கிட்டு தான் இருக்கா, அண்ணா…” என்றாள்.

ராகவ் சிரிப்புடன், “அது தான் தெரிஞ்ச விஷயமாச்சே… நான் அவள பார்த்துக்குறேன் மா…” என்றான்.

“ஓகே அண்ணா… பார்த்து போயிட்டு வாங்க ரெண்டு பேரும்…” என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றாள்.

வீணாவின் அறைக்குள் சென்றவன் கண்டது, அந்த ‘சிங்கிள் காட்’ கட்டிலில் பப்பரப்பா என்று கால்களை விரித்து உறங்கிக் கொண்டிருந்தவளை தான்.

‘தூங்குமூஞ்சி… எப்படி தூங்குது பாரு…’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டவனிற்கு ஏதோ தோன்ற, மெல்லிய புன்னகையுடன் குளியலறைக்கு சென்று, ‘ஜில்லென்ற’ தண்ணீரை எடுத்து வந்தவன், மெல்ல அவளின் மேலிருந்த போர்வையை விலக்கி, முகத்திலேயே ஊற்றினான்.

அதில் பதறியடித்து எழுந்தவளிற்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. ‘வீட்டிற்குள் எப்படி மழை பெய்யும்…’ என்று யோசித்துக் கொண்டிருந்தவள் எதேச்சையாக எதிரில் பார்க்க அங்கு கள்ளப் புன்னகையோடு நின்றிருந்தவனைக் கண்டு ‘மழை’க்கான காரணத்தை கண்டு கொண்டாள்.

அங்கு ஆரம்பித்தது அவர்களின் ஓட்டப் பந்தயம். பின் நேரமாவதை உணர்ந்து, எப்போதும் போல ராகவ் அவளிடம் தானே சென்று அகப்பட்டுக் கொள்ள, பத்து நிமிடங்களாக அரங்கேறிய ஓட்டப் பந்தயம் முடிவுக்கு வந்தது.

பின் வீணாவை ‘ரெஃப்ரெஷ்’ஷாகி வர சொன்னவன், அவளிடம் எவ்வாறு பேசலாம் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தான்.

குளித்து முடித்து வந்தவளை முதலில் சாப்பிட வைத்தே விஷயத்தை கூறலானான். நேற்றைய காணொளியை அவளிடம் காண்பித்தவன் தயங்கியபடியே, “வீன்ஸ் இது ரொம்ப டேஞ்சரானது… சோ நீ வர வேணாமே…” என்று கூற, அவனை ஒரு பார்வை பார்த்தவள், “ஹ்ம்ம் ஆமா ரொம்ப ஆபத்தானது தான்… சோ என்ன பண்ற நீயும் அங்க போகாத…” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்டவன் முழிக்க, “என்ன பார்க்குற… நீ போனா மட்டும், அவங்க உனக்கு சிவப்பு கம்பளம் விரிச்சு வரவேற்பு கொடுப்பாங்களா… யாரு போனாலும், மாட்டிக்கிட்டா ஆபத்து தான்… தனியா போறதுக்கு இது மாதிரி சேர்ந்து போறது தான் பெட்டர்…” என்றவள், “இனி எங்கயாவது தனியா போலாம்னு பிளான் போட்ட, நான் வேற மாதிரி பிளான் போட்டுடுவேன் பார்த்துக்கோ…” என்று மிரட்டவும் செய்தாள்.

அவளின் மிரட்டலை உள்ளுக்குள் ரசித்தவன், ‘ராட்சசி… கொஞ்சமாவது என்னைப் பேச விடுறாளா… அவளே எல்லாத்துக்கும் பேசிடுவா…’ என்று கொஞ்சிக் கொண்டவன், வேறு வழியின்றி அவளையும் அழைத்துச் சென்றான் அந்த ஊருக்கு.

அங்கு அவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் என்னென்னவோ…

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்