Loading

அத்தியாயம் 3

‘உண்மைச்சுடர்’ என்ற பெயர் பொறித்த பலகை மாட்டப்பட்டிருந்த வளாகத்திற்குள்ளிருந்த வாகன நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்தினாள்… இல்லை இல்லை நிறுத்தினர் ராகவ் மற்றும் வீணா.

அங்கிருந்து வெளியே வந்தவர்களை கவனித்த காவலாளி, “என்ன தம்பி, இன்னைக்கும் டபுள்ஸா… ரெண்டு பேரும் ஒண்ணா வண்டியோட்டிட்டு வர அழகே தனி…” என்று கலாய்க்க, “அண்ணா, ஏன் இப்படி.?” என்று ராகவ் பாவமாக கேட்க, அவனருகே இடையில் கைவைத்து அந்த காவலாளியை முறைத்தாள் வீணா.

அடுத்த ஐந்து நிமிடங்கள் இப்படியே அவருடன் பேசியபடி கழிய, அப்போது தான் நேரத்தைக் கண்ட ராகவ், “ஷ்… நேரமாச்சு…” என்று கூறினான்.

“அச்சோ… ஆமா தம்பி… நான் உங்களை நிக்கவச்சு பேசிட்டு இருக்கேன் பாருங்க… என்னன்னு தெரியல, இந்த ஒரு வாரமா ஆஃபிஸே பரபரப்பா இருக்கு… இன்னைக்கு கூட யாரோ ஒரு ஹீரோ தற்கொலை பண்ணிக்கிட்டாராமே… அதை கவர் பண்ண போகணும்னு ஒரு சிலர் போயிட்டாங்க… நீங்களும் உள்ள போங்க… இல்ல அந்த எடிட்டர் உங்களையும் ஏதாவது சொல்லிடப் போறாரு…” என்று அவரின் வேலைகளை கவனிக்கச் சென்றார்.

அவரின் கூற்றை கவனித்த ராகவ், “வீன்ஸு, உன் பெர்த் டே கொண்டாதுறதுக்குள்ள இங்க ஒரு சம்பவம் நடந்துருக்கு போல… வா என்னன்னு தெரிஞ்சுப்போம்…” என்று அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

அங்கு அவர்களுக்கு முன் வந்திருந்த ஜீவாவிடம் சென்றவர்கள் அவனும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தனர். ராகவ், “டேய் என்னாச்சு டா… ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்க..?” என்று அவன் தோளைத் தட்டி கேட்க, அவனிடம் பார்வையைக் கூட திருப்பாமல், “எல்லாம் அந்த வீணாப்போன எடிட்டர்னால தான் டா… மனுஷன் இந்த ஒரு வாரமா, ‘அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா’ன்னு ஹோட்டல்ல ஆர்டர் குடுக்குற மாதிரி என் உசுர வாங்குறாரு டா…” என்று புலம்பினான்.

அப்போது அவன் முன் நிழலாட, யாரென்று பார்த்தவன், அங்கு கோபமாக நின்றிருந்த வீணா கண்ணில் பட, அவளின் கோபத்திற்கான காரணத்தை யோசித்த மறுநொடி அவன் சொல்லில் சனி விளையாடியதை அறிந்து கொண்டான். எடிட்டரே மேல் என்பது போல திட்ட ஆரம்பித்த வீணா, திட்டினாள்… திட்டினாள்… திட்டிக் கொண்டே இருந்தாள்.

அவனோ இம்முறையும் ராகவைப் பாவமாக பார்க்க, அவனோ இதற்கும் அவனிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல அருகிலிருந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

வீணாவோ திட்டித் திட்டியே சோர்வாகி மூச்சு வாங்க, ஜீவா தான் தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டினான்.

“இன்னொரு தடவ என் பேர யூஸ் பண்ணி அந்த டபரா தலையன திட்டுன அவ்ளோ தான்…” என்றவாறே போத்தலை வெடுக்கெனப் பறித்தாள்.

அப்போது அங்கு வந்த வேலையாள், ராகவை இதழாசிரியர் அழைப்பதாகக் கூற, “மச்சான்… கங்கிராட்ஸ் டா… அடுத்து நீ தான் போல…” என்று ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்ற பரந்த மனப்பான்மையுடன் ஜீவா கூற, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான் ராகவ்.

இதழாசிரியர் இராமமூர்த்தியிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றவனை வரவேற்றது அவரின் சூடான வார்த்தைகளே. களப்பணி மேற்கொண்டிருந்த ஏதோ ஒரு நிருபரிடம் தான் பாசமாக பேசிக் கொண்டிருந்தார் அவர்.

இராமமூர்த்தி, இயல்பில் நல்ல மனிதர் தான். ஆனால், இது போன்ற பரபரப்பான சூழ்நிலையைக் கையாளும் போது மட்டும் கோபம் அவரின் துணையாகிப் போகும். அந்நேரத்தில் யாராவது சிறு தவறு செய்தாலும், அதைப் பெரிதாக்கி சாமியாடி விடுவார் மனிதர்.

இந்த நேரத்தில் தான் வந்து சிக்க வேண்டுமா என்று சற்று மனம் சுணங்கிப் போனான் ராகவ்.

அவன் வந்து ஐந்து நிமிடங்கள் கழித்து தான் அந்த தொலைபேசிக்கு முக்தி கொடுத்தார் இராமமூர்த்தி. முக்தி தான்… இவரின் கோபத்திற்கு அன்றைய பலியாகிப் போனது அந்த தொலைபேசி.

“க்கும் ராகவ்… உன்னை எதுக்கு கூப்பிட்டேன்…” என்று தலையைத் தட்டி யோசித்தவர், “ஹான்… இந்தா இந்த ஃபைல் பாரு… அந்த ***** இடத்துல இருக்க ஃபேக்டரி பத்தி சில லீட்ஸ் கிடைச்சுருக்கு… நாளைக்கே அங்க போய் என்னென்ன தகவல்கள் சேகரிக்க முடியுமோ சேகரிச்சுடு… அடுத்த வாரம் இதைப் பத்தின ரிப்போர்ட் என் கைல இருக்கணும்…” என்றார்.

ராகவ், பொதுவாகவே இது போல வெளியூருக்கு சென்று களப்பணி மேற்கொள்ள மாட்டான். உள்ளூரில் நடக்கும் நிகழ்வுகளையே ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து வழங்குவான். இது போன்ற வாய்ப்புகளையும் வேறு யாருக்காவது மாற்றி விடுவான்.

ஆனால் இப்போது எல்லாருமே அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலையில் கவனமாக இருப்பதால், யாரையும் மாற்றிவிட முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டான்.

எதற்கும் கேட்டுப் பார்போம் என்று நினைத்த ராகவ், “சார், இந்த வேலைய வேற யாருக்காவது கொடுக்க முடியுமா..?” என்று வினவ, அவனை முறைத்தார் இராமமூர்த்தி.

இராமமூர்த்திக்கும், ராகவ் வெளியூருக்கு செல்ல மாட்டான் என்பது தெரியும். இதுவரையில் இப்படி நிருபர்கள் பற்றாகுறை வராததால், அவரும் கண்டுகொள்ள வில்லை. ஆனால், இப்போதுள்ள சூழலில் ராகவ் இப்படி கேட்பது அவருக்கு கோபத்தையே கொடுத்தது.

“ஐ டின்ட் எக்ஸ்பெக்டட் யூ டு பி இர்ரெஸ்பான்சிபில், ராகவ்… உங்களுக்கே இங்க இருக்க சூழ்நிலை புரிஞ்சுருக்கும்… அப்பறம் எப்படி இப்படி வந்து எக்ஸ்க்யூஸ் கேக்குறீங்க…” என்று ஆரம்பிக்க, ‘இவருக்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியது இருக்கே…’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான் ராகவ்.

இறுதியில் அவன் வாயிலிருந்து அங்கு செல்வதாக உறுதிபெற்ற பின்பே, அவரின் அறிவுரைகளை நிறுத்தினார் மனிதர்.

வெளியில் புலப்படாத பெருமூச்சுடன் அறையை விட்டு செல்ல முற்பட்டவனை நிறுத்தியவர், “உன் கூட சுத்துமே அந்த பொண்ணையும் கூட்டிட்டு போ…” என்றார் அலட்சியமாக.

‘கூட சுற்றும்’ என்ற பதத்திலேயே கோபம் கொண்டவன், அவளையும் அழைத்து செல்லுமாறு கூறியதைக் கேட்டு, மீண்டும் அவரின் மேசைக்கு வந்து, “சார், அவ எதுக்கு… நான் மட்டும் போயிட்டு வரேன்…” என்று சொல்ல, “உன் ஒருத்தனால முடியாதுங்கிறதால தான் அவளையும் கூட்டிட்டு போக சொல்றேன்… நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்…” என்று கூறினார்.

அதைக் கேட்ட ராகவ், ஒருவித இறுக்கத்துடனே அறையிலிருந்து வெளியேறினான்.

அவன் வருவதைக் கண்ட வீணா, அதுவரையிலும் அருகிலிருந்த தோழியுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்தவள், அவனைப் பார்த்ததும் ‘நல்ல பிள்ளை’ போல அவளின் இடத்தில் அமர்ந்து வேலை பார்க்க துவங்கினாள். அவளை ராகவ் வெறுமனே கடந்து சென்றதைக் கண்டவள் புருவம் சுருக்கி அவனைப் பார்க்க, அவனோ மனதுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்ததால், அவளைக் கவனிக்கவே இல்லை.

ராகவின் மனம், ஏதோ விரும்பத்தகாதது நடக்கப் போகிறது என்று அவனை எச்சரித்துக் கொண்டிருந்தது. பொதுவாகவே, ராகவிற்கு உள்ளுணர்வில் நம்பிக்கை அதிகம். இப்போதும் மனம் செய்யும் எச்சரிக்கையை உதாசீனப்படுத்த அவன் விரும்பவில்லை. முதலில் வீணாவிடம் சொல்லி, அவனுடன் வராமல் தடுக்க வேண்டும் என்று எண்ணினான்.

எண்ணியதை செயல்படுத்த வேண்டி நிகழ்விற்கு வந்தவன் ஒரு நொடி பயந்து தான் போனான். அங்கு அவனின் மேசையில், கன்னத்தில் கை வைத்து அவன் முகத்திற்கு வெகு அருகில் தன் முட்டைக் கண்ணை உருட்டிக் கொண்டிருந்தாள் வீணா.

“ச்சே… லூசு ராட்சசி… இப்படியா பயமுறுத்துவ…” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ராகவ் வினவ, அவளோ ஒரு பக்கமாக உதட்டை வளைத்துவிட்டு, “உன் மூஞ்சில இவ்ளோ ரியாக்ஷன்ஸ் காட்டுறியே… அப்படி உன் மைண்ட் வாய்ஸ்ல என்ன பேசிக்குறன்னு கேக்க வந்தேன்…” என்றாள்.

அவள் கூறிய த்வனியில் சிரித்தவன், “கேட்டுச்சா…” என்றான் கிண்டலாக, “ஹான் நல்லா கேட்டுச்சு… ‘லூசு ராட்சசி’ன்னு கத்துனது… உன் க்ரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுது… இன்னைக்கு நைட் சாப்பாடு உன் செலவு தான் பார்த்துக்கோ…” என்று சிலுப்பிக் கொண்டாள்.

‘மேடம் சாப்புடுற ரெண்டு சப்பாத்திக்கு இந்த அக்கப்போரு…’ என்று மனதிற்குள் சிரித்துக் கொண்டான் ராகவ். சற்று முன்னர் இருந்த மனநிலை வெகுவாக மாறியிருந்தது. என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உத்வேகம் பிறக்க, அதற்கு காரணம் அவனின் ‘ராட்சசி’ என்பதை உணர்ந்து அவளை பாசமாக (அவன் காதலை உணராததால், இது பாசப் பார்வையே!) பார்த்தான்.

அவன் பார்வையை உணராதவளோ, “ஆமா ரொம்ப நேரம் அந்த டபரா தலையன் கூட என்ன பேசிட்டு இருந்த..?” என்று வினவினாள்.

ராகவும் கையிலிருந்த கோப்பை அவளிடம் கொடுத்து விஷயத்தை சொல்ல, “ஹே அப்போ நம்ம ரெண்டு பேரும் *****க்கு போறோமா… சூப்பர்…” என்று குதித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் உற்சாகத்தைக் கண்டு ஒருபுறம் அவளையும் அழைத்துச் செல்லலாமா என்று யோசித்தாலும், அவளின் பாதுகாப்பு கருதி முதலில் எடுத்த முடிவிலேயே ஸ்திரமாக இருக்கலானான்.

“ஓய்… போறோமா இல்ல… போறேன்… நான் மட்டும் தான் அங்க போறேன்…” என்று அவன் கூறியதும், அதுவரையிருந்த மகிழ்ச்சி வடிய, “ஏன்… அதெல்லாம் தெரியாது… நானும் வருவேன்… எடிட்டர் என்னையும் தான உன்கூட வர சொன்னாரு…” என்று சிணுங்கினாள்.

‘இப்போ மட்டும் மேடத்துக்கு எடிட்டராம்…’ என்று உள்ளுக்குள் அவளின் அலும்புகளை ரசித்தாலும், வெளியே அவளின் கோரிக்கையை நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“இங்க பாரு வீன்ஸ்… அங்க வந்து உன்னையே பார்த்துட்டு இருக்க முடியாது… எனக்கு என்னமோ இப்போ அங்க போறது சேஃப் இல்லன்னும் தோணுது…” என்று அவன் கூற, அதையெல்லாம் காதில் வாங்குபவளா அவள்…

“அப்போ நீயும் போகக் கூடாது…” என்று பிடிவாதத்தின் மறுஉருவமாக அவள் நிற்க, எப்போதும் அவள் மீது கோபத்தைக் காட்டாமல், பொறுமையாக கையாள்பவனுக்கே அன்று கோபம் எக்கச்சக்கமாக வந்தது.

“ஒரு தடவ சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா… உன்னை கூட்டிட்டு போக மாட்டேன் அவ்ளோ தான்… போய் ஒழுங்கா வேலைய பாரு… எப்போ பார்த்தாலும் என்கூடவே வரணும்மா…” என்று கோபமாக கத்தியவன், கடைசி வரியை முணுமுணுக்க அது அவனருகில் இருந்த வீணாவின் காதிலும் விழுந்தது.

அவன் கத்தியதில், அலுவலகமே ஒரு நொடி அமைதியாக, அங்கிருந்தவர்கள் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜீவா ராகவின் மேசைக்கு வந்தவன், “என்னாச்சு ராகவ்… எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க…?” என்று கேட்டான்.

ராகவோ ஜீவாவின் கேள்வியில் தன்னிலை அடைந்தவன், தான் பேசிய வார்த்தைகளை உணர்ந்து மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு, தன் முன் நின்றிருந்தவளைப் பார்த்தான்.

கண்களோ எந்நிலையிலும் உடைப்பெடுக்கும் நிலையில் இருக்க, முகம் முழுவதும் கண்ணீரை அடக்கியதாலோ, மற்றவர்களின் பார்வையாலோ சிவந்திருந்தது. பார்வை அவனையே வெறித்திருக்க, அதிலிருந்த செய்தியில் ராகவ் தான் உடைந்து போனான்.

‘நீயா இப்படி சொன்ன… எத்தனையோ பேரு இதை விட கேவலமா சொன்னப்போ கூட அதை பொருட்படுத்தாம கடந்து போயிருக்கேன்… ஆனா இப்போ நீயே இப்படி சொல்லிட்ட…’ என்று வாய் திறவாமல், கண்களின் மூலமே அவனை விசாரித்துக் கொண்டிருந்தாள் வீணா.

ராகவ் ஏதோ சொல்ல வர, எங்கு அதைக் கேட்டால் முற்றிலுமாக உடைந்து விடுவோமோ என்று நினைத்தவள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தாள். அவனைக் கடந்து செல்லும்போது அவளின் அனுமதியின்றியே ஒரு துளி கண்ணீர் அவளின் கன்னத்தின் வழி இறங்கி அவனின் காலில் பட்டு தெறித்தது.

அவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்த தானே இன்று அவளின் கண்ணீருக்கு காரணமானதை எண்ணி வேதனையுற்றான் ராகவ். விதியோ, ‘இது துவக்கம் தான்…’ என்று கெக்கலித்துக் கொண்டிருந்தது.

ராகவின் தோளில் கைவைத்த ஜீவா, “ஹே என்னாச்சு டா..? வீணா ஏன் அழறா..?” என்று வினவ, நடந்ததை சுருக்கமாக கூறி முடித்தான் ராகவ்.

“அவள ஏன் டா வர வேணாம்னு சொன்ன… அதான் நீ அவக்கூட இருப்பேல… ப்ச்… அப்படியே வரவேணாம்னு நெனச்சா, அவள கன்வின்ஸ் பண்ணனும்… இப்படியா கத்துவ…?” என்று அவளின் அண்ணனாக பேசினான் ஜீவா.

“ப்ச்… அவள கத்திட்டு நான் மட்டும் சந்தோஷமா இருக்க மாதிரி பேசுற… என்ன அறியாமலேயே கத்திட்டேன் டா… ப்ச்… இது தான் ஃபர்ஸ்ட் டைம் அவள ஹர்ட் பண்றது…” என்றவன் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சோர்வாக அமர்ந்து விட்டான்.

“சரி விடு டா… நீ தான கத்துன… இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு அவக்கூட போய் பேசு… அதெல்லாம் உன்கூட பேசாம அவளால இருக்க முடியாது…” என்று நண்பனாக ஆறுதல் கூறினான்.

ஆனால், அவர்கள் நினைத்ததைப் போல, வீணாவை சமாதானப்படுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை. எப்போதும் மதிய உணவை ராகவுடன் சாப்பிடுபவள், இன்று அவளின் தோழி ஒருத்தியுடன் சென்று விட்டாள்.

மற்ற நேரங்களில், அவளின் முன் சென்றாலே, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாள். ராகவும் மூன்று நான்கு முறை அப்படி சென்று, அவள் பேசாததால் தொங்கிய முகத்துடன் வந்தான். அலுவலகம் என்பதால், அதற்கு மேல் அவனால் அவளிடம் சென்று பேச முடியவில்லை.

வீட்டிற்கு செல்லும்போது ஒன்றாக தானே செல்ல வேண்டும், அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவனிற்கு அடுத்த ஆப்பாக, அவனை விட்டுவிட்டு அவள் மட்டும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.

வேகமாக ஜீவாவை வண்டி எடுக்கச் சொன்னவன், அவளை பின்தொடர்ந்து சென்றான். அவள் பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததும் தான் அவனிற்கு இயல்பாக மூச்சு விட முடிந்தது.

காலையில் சீக்கிரம் எழுந்தது, அலுவலகத்தில் ஏற்பட்ட மனஉளைச்சல், வீணாவுடனான முதல் சண்டை என அன்றைய நாள் அவனை பெரிதும் சோர்வுறச் செய்தது. வீட்டிற்குள் நுழைந்ததும், நீள்சாய்விருக்கையில் சாய்ந்து கொண்டான்.

அவன் கண்களை மூடிய இரண்டாவது நிமிடம் அவனின் அலைபேசி ஒலிக்க, யாரென்று பார்க்காமல் அழைப்பை ஏற்றுவிட்டான். எதிர்முனையில் ரேவதி தான் பேசினார்.

“ராகவ், வீணாக்கு என்னாச்சு… அவ சரியாவே பேசல… ஆஃபிஸ்ல ஏதாவது சொல்லிட்டாங்களா..?” என்று ரேவதி பதற்றமாக வினவ, ராகவிற்கு தான் குற்றவுணர்வாகிப் போனது.

பிறந்த நாள் அதுவுமாக அவளைக் கத்தியதற்கு ஆயிரமாவது முறையாக தன்னைத் தானே திட்டிக் கொண்டான்.

“ஹலோ ராகவ்… நான் பேசுறது கேக்குதா..?” என்று ரேவதி குரல் கொடுக்க, எதிர்முனையில் இருப்பவருக்கு பதில் சொல்ல வேண்டுமே என்று யோசித்தவன், “இன்னைக்கு அலைச்சல்னால டையர்ட்டா இருப்பா அத்த. நான் அவள பார்த்துட்டு உங்களுக்கு பேச சொல்றேன்…” என்று வாயில் வந்ததைக் கூறி அழைப்பைத் துண்டித்தான்.

ராகவ் மறுபடியும் வெளியே செல்வதை பார்த்த ஜீவா, “இப்போ தான டா வந்த… அதுக்குள்ள எங்க போற..?” என்று வினவ, “வீன்ஸ பார்த்துட்டு வரேன் டா… இன்னமும் கோபமா இருக்கா போல… அத்த கிட்ட கூட சரியா பேசலன்னு சொல்றாங்க…” என்று வருத்தத்துடன் கூறினான்.

“ரெஃப்ரெஷ் பண்ணிட்டு போ டா… இப்படியே போகாத… அப்பறம் என் தங்கச்சி பயந்துடப் போறா…” என்று அவனை இலகுவாக்க, ஜீவா அவனை கலாய்க்க, மென்சிரிப்புடன் அவன் அறைக்குச் சென்றான்.

பத்தே நிமிடங்களில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டவன், வீணாவின் வீட்டை நோக்கி நடைபோட்டான். வீணா தங்கியிருக்கும் வீடு, ராகவின் வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளியிருந்தது. அவளுடன் அவளின் தோழி ஹரிணி அங்கு தங்கியிருக்கிறாள்.

ராகவ் அங்கு செல்வதற்குள் ஜீவா ஹரிணிக்கு அழைத்து சற்று நேரம் அவர்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு வருமாறு கூறியிருந்தான். ஹரிணியும் வீணா – ராகவிடையே ஏதோ பிரச்சனை என்று யூகித்திருந்தவள் மறுபேச்சு பேசாமல், வீணாவிடம் கடைக்குப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பியிருந்தாள்.

அவள் சென்ற இரண்டாவது நிமிடம் வாயிற்கதவு தட்டும் ஓசை கேட்க, ஹரிணி தான் வந்துவிட்டாளோ என்று நினைத்து, “கதவு தொறந்து தான் இருக்கு ஹரி…” என்று சோர்வாக கூறினாள்.

அவளின் குரலை வைத்தே அவளின் வேதனையை புரிந்து கொண்டவன், கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். அங்கு இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தவளின் முன் சென்றான்.

அவனின் டியோவின் நறுமணம், வந்தது அவனென்று உணர்த்த கண்களை வேகமாகத் திறந்து அவனைப் பார்த்தாள். பார்க்க மட்டுமே செய்தாள்… பார்வையிலேயே கேள்விகளை கேட்க ஆரம்பித்தாள்.

அவளின் விழி மொழியை அறியாதவனா அவன்… விழிமொழிக்கான பதிலை வாய்மொழியில் கூறினான்.

அவளின் முன் முட்டிக்காலில் அமர்ந்தவன் அவளின் கைகளைக் பற்றிக் கொண்டு, “சாரி வீன்ஸ்… ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன் டா… நான் அப்படி பேசுனது தப்பு தான்… அதுக்கு ரெண்டு அடி கூட அடிச்சுக்கோ… ஆனா பேசாம இப்படி இருக்காத…” என்று மன்னிப்பு கேட்டவனை கண்கள் சுருக்கி பார்த்தவள், என்ன நினைத்தாளோ, அவன் கைகளுக்குள் இருந்த கரங்களை உருவி, சப்பென்று அவனின் கன்னத்தில் அறைந்தாள்.

அதை எதிர்பார்க்காதவன் ஒரு நொடி திகைத்துப் போய் அவளைப் பார்க்க, அவளோ அவனின் மறு கன்னத்திலும் அடித்தாள்.

“என்ன டி அடிக்குற…” என்று அவன் பரிதாபமாக வினவ, “நீ தான அடிக்க சொன்ன…” என்று கூறிவிட்டு தோளை குலுக்கிக் கொண்டாள்.

“அதுக்குன்னு அடிச்சுடுவியா…” என்றவனை முறைத்தவள், “அடிச்சதோட விட்டேனேன்னு சந்தோஷப்படு… எப்படி நீ அப்படி சொல்லலாம்… நான் உன்கூட சுத்துறது உனக்கும் தப்பா தெரியுதா…” என்று கண்களில் வலியுடன் கேட்டவளை, எக்கி அணைத்துக் கொண்டவன், “சாரி டா… நான் அப்படி சொல்லணும்னு நினைக்கல…” என்றவனை இடைமறித்து, “மனசுல இருக்குறது தான வெளிய வரும்…” என்றாள்.

“ப்ச்… அப்படியெல்லாம் இல்ல வீன்ஸ்… உன் ராக்கிய பத்தி உனக்கு தெரியாதா… அது ஜஸ்ட் ஹீட் ஆஃப் தி மொமெண்ட்ல வந்துடுச்சு… இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுபிடிச்சுட்டு இருந்தா, வாழ்க்கையே நரகமாகிடும்…” என்றான்.

அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கஷ்டப்பட்டு அவளை சமாதானப்படுத்தியிருந்தான் ராகவ். வீணாவும், அவனுடன் *****க்கு வருவேன் என்ற நிபந்தனையுடன் சமாதானமாகியிருந்தாள்.

‘வரது வரட்டும்… நானும் அவ கூட தான இருக்கப் போறேன்…’ என்ற யோசனையில் அவளின் நிபந்தனைக்கு சம்மதித்திருந்தான் ராகவ். ஆனால், இந்த முடிவினால் பிற்காலத்தில் இருவருமே நிம்மதியற்று கிடப்பர் என்று தெரிந்திருந்தால், எப்பாடு பட்டாவது அவளை அழைத்துச் சென்றிருக்க மாட்டானோ…

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments