Loading

அத்தியாயம் 5

ராகவ் மற்றும் வீணா இருவரும் மதியம் கிளம்பலாம் என்று முடிவு செய்து, அங்கு சென்று தங்குவதற்கு தேவையான பொருட்களை வாங்க ‘மினி ஷாப்பிங்’ சென்றனர். பின் எதையும் மறக்கக் கூடாது என்பதற்காக இருவரும் சேர்ந்தே ‘பேக்கிங்’ வேலையை முடித்தனர்.

இப்போதைக்கு இருவரின் பெற்றோரிடம் இதைப் பற்றிக் கூறி அவர்களின் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம் என்று நினைத்து, இருவருக்கும் முக்கியமான வேலை இருப்பதால், சில நாட்களுக்கு வீட்டிலிருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாது என்று கூறிவிட்டனர். அவர்களும், இருவரும் ஒன்றாக தானே இருப்பார்கள் என்று நினைத்துவிட்டனர்.

இதோ அவர்களின் பயணம் ஆரம்பித்தது. அந்தி சாயும் நேரம் வந்துவிட்டதை உணர்ந்த சூரியன் மேற்கில் மறைய காத்திருக்கும் வேளையில், இருவரும் அந்த ஊரில் காலடி எடுத்து வைத்தனர்.

அருகில் இருக்கும் கிராமங்களை எல்லாம் கடந்து வந்ததனால், அந்த ஊரின் வளர்ச்சியை இறங்கியபோதே கண்டு கொண்டனர் இருவரும். தார் சாலைகள் சூரியக் கதிர் பட்டு மினுமினுத்தது.

“ஹ்ம்ம்… இந்த ஊர் மேல கவர்மென்டுக்கு இல்லாத அக்கறை இவங்களுக்கு எதுக்குன்னு கொஞ்சமாவது இந்த ஊர் மக்கள் யோசிச்சுருக்கணும்… ரோடு, ஹாஸ்பிடல், ஃபேக்டரின்னு வரிசையா கட்டி ஊர் மக்கள் வாய அடைச்சுட்டாங்க…” என்று வீணா கூற, “எனக்கு என்ன சந்தேகம்னா, இந்த ஊர்ல அப்படி என்ன இருக்குன்னு இங்க இவ்ளோ மெனக்கெட்டு ஹாஸ்பிடல், ரோடுன்னு கட்டணும்…” என்று ராகவும் அவனின் சந்தேகத்தை வீணாவுடன் பகிர்ந்து கொண்டான்.

“ஷாலிஹா அனுப்புன…” என்று வீணா ஆரம்பிக்க, அவளின் கைகளை அழுத்திப் பற்றியவன், “ஷ்… நாம இருக்குறது ஆபத்தான இடம்… சோ என்ன பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசணும்… இங்க காத்துக்கு கூட காது இருக்கலாம்… நாம இங்க வந்து இறங்குனது கூட அவங்களுக்கு தெரிஞ்சுருக்கும்… இனிமே ரொம்ப கவனமா இருக்கணும்… புரியுதா…” என்று ராகவ் கேட்க, மண்டையை நன்கு ஆட்டினாள் வீணா.

“இங்க பாரு வீன்ஸ்… இன்னொரு தடவ சொல்றேன்… நான் சொல்றத அப்படியே ஃபாலோ பண்றதா இருந்தா மட்டும் இப்போ என்கூட வா… இல்லன்னா திரும்ப ஊருக்கு பஸ் ஏத்தி அனுப்பி வச்சுடுறேன்…” என்று சற்று கடுமையாகவே கேட்டான்.

“ப்ச்… இப்போ எதுக்கு ஓவர் சீரியஸா இருக்க… நீ சொல்றதெல்லாம் அப்படியே கேக்குறேன் போதுமா… ‘எப்பவும் நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுகிட்டு கவனமா இருக்கணும்… ஆபத்து இல்லன்னு உறுதியா தெரிஞ்சா தான் அந்த வேலைய செய்யனும்…’ – இது தான… அதெல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு… இப்போ எதுக்கு ‘உர்ரு’ன்னு மூஞ்சிய வச்சுருக்க… போறது சீரியஸான வேலைங்கிறதால நாமளும் அப்படி இருக்கணும்னு அவசியம் இல்ல… எங்க சிரி…” என்று அவனின் உதட்டை விரித்தவள், “இப்போ தான் ராகவ் மாதிரி இருக்க… இதுக்கு முன்னாடி அந்த வில்லன் ரகுவரன் மாதிரி இருந்த…” என்று அவனிற்கு பழிப்பு காட்டி முன்னே சென்றாள். ராகவும் சிறு சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான்.

மெல்ல சாலையில் நடந்து சென்றனர் இருவரும். எல்லா கிராமங்களைப் போலவே, ஊர் ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு தேநீர் கடை இருக்க, சில பெரியவர்கள் அங்கு அமர்ந்து உலக சமாச்சாரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

ஊருக்கு புதியவர்களான இருவரையும் கண்டதும், “என்ன தம்பி… எங்க ஊருக்கு வந்துருக்கீங்க..?” என்று அவர்களில் ஒருவர் வினவ, “நாங்க ரெண்டு பேரும் பத்திரிக்கைகாரங்க… உங்க ஊரோட வளர்ச்சிய பத்தி தெரிஞ்சுக்க வந்துருக்கோம் ஐயா…” என்றான்.

“இப்படி தான் நிறையா பேரு வரீங்க… ஆனா இதுவரைக்கும் பத்திரிகைலயோ டிவிலயோ எங்க ஊர் பத்தி வந்தத பார்க்கவே இல்ல… சரி சரி வாங்க உங்களுக்கு தங்குறதுக்கு ஒரு இடம் ஏற்பாடு பண்ணலாம்…” என்றார் இன்னொருவர்.

ராகவும் எந்த பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறான் என்று கூறவில்லை, அந்த பெரியவரும் கேட்டுக் கொள்ளவில்லை. வீணாவோ, ‘நல்ல வேள அவங்களே தங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிடுவாங்க போல…’ என்று நிம்மதியடைந்தாள்.

போகும் வழியில் ராகவ் அந்த பெரியவரிடம் இதைப் பற்றி விசாரிக்க, “எங்க ஊரப்பத்தி கேள்விப்பட்டு நிறையா பேரு வந்தாங்க பா… ஊருக்கு வந்தவங்க தங்குறதுக்கு இடமில்லாம அலைய கூடாதுன்னு எங்க ஊர் தலைவர் அவர்களுக்காகவே ஒரு வீட்ட ஒதுக்கி ககொடுத்துருக்காரு… யாரு புதுசா வந்தாலும், அவங்களை அந்த வீட்டுல தங்க வைக்க சொல்லி, அந்த டீக்கடை முனுசாமி கிட்ட சாவி குடுத்துருக்காரு… அதான் நீங்க வந்தவொடனே இங்க கூட்டிட்டு வந்துட்டேன். ராவு நேரம் வேற… இல்லனா உங்களைத் தலைவர் வீட்டுக்கே கூட்டிட்டு போயிருப்பேன்…” என்றார் அவர்.

பேசிக்கொண்டே அந்த வீட்டை அடைந்திருந்தனர். சற்று பெரிய வீடு தான். அருகில் சிறு சிறு வீடுகள் இருக்க, இந்த வீடு மட்டுமே மாடியெல்லாம் வைத்து பெரிதாக கட்டப்பட்டிருந்தது.

“உள்ள வாங்க…” என்று அழைத்துச் சென்றவர், “கீழ இருக்க ரூம்பு போதுமா, இல்ல மேல இருக்க ரூம்புல தங்கிக்குறீங்களா…” என்று அவர் கேட்க, “கீழ இருக்க ரூமே போதும்ங்க ஐயா…” என்றான் ராகவ்.

“சரி பா… இந்தாங்க சாவி… நீங்க களைப்பு தீர கொஞ்சம் ஓய்வெடுங்க… ராவு உணவுக்கு பக்கத்து வீட்டு செல்வி கிட்ட சொல்லிட்டு போறேன்… அவ சமைச்சு தந்துடுவா… அப்பறம் நாளைக்கு காலைல உங்களைத் தலைவர் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்…” என்றவாறே அங்கிருந்து கிளம்பினார்.

அவர் சென்றதும், “வாவ் சோ ஸ்வீட்ல… கேக்காமலேயே நாம தங்குறதுக்கு வீடு, சாப்பிட சாப்பாடுன்னு எல்லாம் தராங்க…” என்று வீணா சிலாகிக்க, “அது தான் சந்தேகத்தையும் கூட்டுது… கேக்காமலேயே எதுக்கு செய்யனும்…” என்று ராகவின் பத்திரிக்கை மூளை வெளியில் வந்து குதிக்க, “ப்ச்… எல்லாத்தையும் டவுட்டோடவே பார்க்காத ராக்கி… ஜஸ்ட் என்ஜாய்… உனக்கு நியாபகம் இருக்கா, நாம சின்ன வயசுல, இது மாதிரி கிராமத்துக்கு போகணும்னு பிளான் போட்டோம்… ஆனா இப்போவரைக்கும் அது நடக்கல… இப்போ நாம கிராமத்துல இருக்கோம்… ஹ்ம்ம் என்னவொரு அமைதியான அட்மாஸ்பியர்… கிராமம் கிராமம் தான்… இதெல்லாம் எஞ்சாய் பண்றத விட்டுட்டு…” என்று வீணா சலித்துக் கொண்டாள்.

‘எந்த வேலைக்கு வந்தோம்னே மறந்துட்டு என்ஜாய் பண்றாளே… இவள இங்கயிருந்து பத்திரமா கூட்டிட்டு போறதுக்குள்ள எனக்கு தான் டென்ஷனா இருக்கு…’ என்று மனதிற்குள் நினைத்தவன், “நாம என்ஜாய் பண்றதுக்காக இங்க வரல வீன்ஸ்…” என்றான்.

“ஐயோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்… திரும்ப ‘நீதி டா நியாயம் டா நேர்மை டா’ன்னு ஆரம்பிக்காத…” என்று அழுதுவிடுபவள் போல் சொல்ல, சிரித்துக் கொண்டே அவளின் தலையில் தட்டியபடி ஒரு அறைக்குள் சென்றான், அவர்களின் சிரிப்பின் ஆயுள் குறைவு என்பது தெரியாமல்…

அந்த பெரியவர் சொல்லிச் சென்ற செல்வி, இரவுணவை கொடுக்க, அதை நன்றியுடன் வாங்கி சாப்பிட்டவர்கள், சிறிது நேரம் அவர்களின் திட்டம் பற்றி விவாதித்து விட்டு அவரவரின் அறைக்குள் சென்றனர்.

புது இடம் என்பதால் இருவருக்கும் உறக்கம் வரவில்லை. மாறாக இருவர் மனதிலும் இனம்புரியாத பயம் ஏற்பட்டது. பயத்திற்கான காரணம் மட்டும் இருவரும் அறியவில்லை. அதன் காரணமாகவே வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் படுக்க முடியாமல் எழுந்த ராகவ், வீணா தூங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக எழ, அந்நேரம் அவனின் அறைக் கதவு தட்டப்பட்டது. அங்கு வீணா தான் அவளின் தலையணையுடன் நின்றிருந்தாள்.

ராகவ் கேள்வியாக பார்க்க, “அங்க எனக்கு தூக்கம் வரல ராக்கி… இங்கயே உன்கூட படுத்துக்குறேனே…” என்று புருவம் சுருங்க பாவமாக அவள் கேட்க, சிறு சிரிப்புடன் அவள் உள்ளே வருவதற்கு வழி விட்டான்.

அவள் நேராக சென்று அவன் ஏற்கனவே படுத்திருந்த பக்கத்திலிருந்த தலையணையை மறுபக்கம் தள்ளிவிட்டு, “உனக்கே தெரியும் எனக்கு லெஃப்ட் சைட் படுத்தா தான் தூக்கம் வரும்… சோ நீ அந்த பக்கம் படுத்துக்கோ…” என்று இளித்து விட்டு சமர்த்தாக படுத்துக் கொண்டாள்.

‘கொழுப்ப பாரேன் இந்த ராட்சசிக்கு…’ என்று நினைத்தவன், எதுவும் கூறாமல் அவளிற்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் கடந்ததும், அவன் முதுகில் அவள் சுரண்ட, “இப்போ என்ன வீன்ஸு..?” என்று கேட்க, “அது… எனக்கு பயமா இருக்கு ராக்கி…” என்று கூற, மெல்ல அவள் பக்கம் திரும்பியவன், “என்னாச்சு என் வீன்ஸுக்கு… எதுக்கு பயம்..?” என்று வினவினான்.

“தெரியல…” என்று உதடு பிதுக்கி அவள் கூற, அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “ப்ச்… காலைல இருந்து ட்ராவல் பண்ணது டையர்ட்டா இருக்கும்… சோ மூளைக்கு வேலை கொடுக்காம படுத்து தூங்கு…” என்றான்.

அவளும் அவன் அணைப்பில் பொருந்திப் போக சற்று நேரத்திலேயே கண்ணயர்ந்தாள். அவள் உறங்கியதை உறுதிபடுத்திக் கொண்டு கண் விழித்து ராகவ், “எனக்குமே பயமா தான் இருக்கு வீன்ஸ்…” என்று கூறி அணைப்பை இறுக்கி, அவளின் தலையில் கன்னம் சாய்த்து உறங்கிப் போனான்.

இருவரும் நிம்மதியாக உறங்கும் கடைசி இரவு அது என்பதை இருவருமே உணரவில்லை…

அடுத்த நாள் காலை இருவருக்கும் சற்று தாமதமாகவே விடிந்தது. வெளியில் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு விழித்த ராகவ், அவன் இருக்கும் இடம் உணர்ந்து வேகமாக எழ முயற்சிக்க, அவனின் முயற்சியில் வீணாவின் உறக்கம் தடைப்பட்டதால், “ப்ச்” என்று மறுபுறம் திரும்பி படுத்தாள். ராகவிற்கு முன்தின இரவின் நினைவுகள் மனதில் தோன்ற, அதைக் கலைக்கும் விதமாக மீண்டும் கதவு தட்டப்பட்டது.

அதில் நிகழ்விற்கு வந்த ராகவ், அவனின் அலைபேசியில் மணியை பார்த்துக் கொண்டே கட்டிலை விட்டு கீழே இறங்கினான். மணியோ ஒன்பதை தாண்டியிருந்தது.

‘ச்சே… இவ்ளோ நேரமா தூங்கிருக்கோம்…’ என்று மானசீகமாக தலையிலடித்துக் கொண்டே வெளியில் சென்று கதவைத் திறந்தான்.

அங்கு முன்தினம், இந்த வீட்டிற்கு அழைத்து வந்த பெரியவரும் அவரின் அருகே செல்வியும் நின்றிருந்தனர்.

“என்ன பா… இன்னும் எழுந்துக்கலையா..? உங்களைத் தொந்தரவு பண்ணிட்டேனா..?” என்று அந்த பெரியவர் கேட்க, “இல்லங்க ஐயா… புது இடங்கிறதால நைட் தூக்கம் வரல… அதான் இவ்ளோ நேரமாகிடுச்சு…” என்றான் ராகவ்.

“ஓ சரி பா… செல்வி காலை சாப்பாடா கொண்டு வந்துருக்கா… நீங்க சாப்பிட்டு கிளம்பி இருங்க… நான் ஒரு தடவ தலைவர பார்த்துட்டு வந்து உங்களைக் கூட்டிட்டு போறேன்…” என்றவர் வாசலோடு கிளம்பினார்.

வெளியில் நின்றிருந்த செல்வியை உள்ளே அழைத்தவன், “ரொம்ப நன்றிங்க… நீங்க வச்சுட்டு கிளம்புங்க… நாங்க கிளம்பிட்டு வந்து சாப்பிட்டுக்குறோம்…” என்றான்.

செல்வியோ, “பரவால தம்பி… எதுக்கு நன்றி எல்லாம்…” என்று கூறிவிட்டு, அங்கிருந்த மேசையில் கொண்டுவந்ததை அடுக்க ஆரம்பித்தாள்.

ராகவோ விரைவில் கிளம்ப வேண்டும் என்று எண்ணியவன், அறைக்குள் சென்று வீணாவை எழுப்ப ஆரம்பித்தான்.

“வீன்ஸு… எழுந்துக்கோ… நாம எங்க இருக்கோம்னு முதல எழுந்து பாரு… ஹே ராட்சசி மணி ஒன்பதுக்கு மேல ஆச்சு டி…” என்று வித விதமாக எழுப்பியும், “ம்ம்ம்” என்ற சத்தத்தை தவிர வேறு எதுவும் அவளிடமிருந்து வரவில்லை.

இப்படியே சென்றால் மதியம் கூட எழ மாட்டாள் என்பதை உணர்ந்தவன், மீண்டும் குளிர்ந்த நீரைக் கையில் எடுத்தான். அவள் மேல் ஊற்றப்போகும் நொடி, என்ன நடந்தது என்று அறிவதற்குள், ராகவ் முழுவதுமாக நனைந்திருந்தான்.

அவனிற்கு எதிரில் வாய் கொள்ளா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தவளைக் கண்டவன், நடந்ததை யூகித்து, “ராட்சசி… நீ தூங்கலையா..?” என்று வினவ, “ப்ச்… அதான் வெளிய போறப்போ எழுப்பி விட்டுட்டியே…” என்று கூறினாள் வீணா.

“அப்போ முதல எழுப்புனப்போவே எழுந்துக்க வேண்டியது தான…” என்று முகத்தில் வழியும் நீரை துடைத்தவாறு கேட்க, “ஹான் நேத்து நீ என் முகத்துல தண்ணி கொட்டுனேல… அதான் பழிக்கு பழி…” என்று உதட்டை சுழித்து வெளியே ஓடிவிட்டாள்.

வெளியே வந்தவள், அவர்களிருந்த அறையையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த செல்வியைக் கண்டு புருவம் சுருக்கி யோசித்தவள், அடுத்த நொடியே செல்வியின் அதிர்ச்சி போஸிற்கான காரணத்தை யூகித்தாள்.

முன்தினம் உணவு கொடுக்க வரும்போது கூட அருகிலுள்ள அறையில் இருந்தவர்கள், காலையில் ஒரே அறையிலிருந்து வெளிவந்தால், அந்த கிராமத்து பெண்மணிக்கு அதிர்ச்சியாகத் தானே இருக்கும். ஒரே வீட்டில் ஆணும் பெண்ணும் தங்கியிருப்பது சந்தேகத்திற்குரியது என்பது போன்ற பழைய சிந்தனைகளில் மூழ்கியிராவிட்டாலும், இது போல ஒரே அறையில் தங்கியிருப்பதை வரவேற்கும் அளவிற்கு அந்த கிராமம் இன்னமும் ‘நாகரிக வளர்ச்சி’ அடையவில்லை தான்.

இந்த யோசனைகளில் மூழ்கியிருந்தவரை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள் வீணா.

“என்னாச்சு அக்கா..? ஏன் இப்படி ஷாக்காகிட்டீங்க..?” என்று பதிலைத் தெரிந்து கொண்டே கேள்வி கேட்க, அவரோ என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் அவரிடம் அதே கேள்வியை வேறு மாதிரி கேட்டு, அவளும் நிருபர் தான் என்பதை நிருபித்துக் கொண்டிருக்க, செல்வியை காப்பதற்காகவே, அங்கு வந்தான் ராகவ்.

“ஹே வீன்ஸ்… நீ இன்னும் குளிக்க போகலையா..?” என்று கேட்டவாறே ராகவ் வர, “இல்ல ராக்கி… இந்த செல்வி அக்கா எதையோ பார்த்து அதிர்ச்சில உறைஞ்சு போய் நின்னுட்டு இருந்தாங்களா… அதான் என்னாச்சுன்னு விசாரிச்சுட்டு இருந்தேன்…” என்று ஏற்ற இறக்கத்தோடு கூறினாள்.

அவனும் அதை நம்பி, “என்னாச்சுங்க…” என்று செல்வியைப் பார்த்து வினவ, அவரோ பதற்றத்துடன், “அதெல்லாம் ஒண்ணுமில்ல… சாப்பாட இங்க வச்சுருக்கேன்… சாப்பிட்டுட்டு சொல்லுங்க வந்து எடுத்துக்குறேன்…” என்று இருவரையும் பார்க்காமல் கூறிவிட்டு, விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓடினார்.

அதைக் கண்டு சிரித்தவளின் டி-ஷர்ட்டைப் பற்றி பின்னே இழுத்து, “ஹே வீன்ஸு… என்ன பண்ண… பாவம் அவங்க இவ்ளோ வேகமா ஓடுறாங்க..?” என்று சந்தேகத்துடன் ராகவ் வீணாவை நோக்க, “அவங்க நம்ம ரெண்டு பேரும் ஒரே ரூம்ல படுத்துட்டு இருந்தத வேற மாதிரி யோசிச்சுருக்காங்க போல…” என்று கூறிவிட்டு தோள்களை குலுக்கிவிட்டு அவளின் அறைக்குள் நுழைந்தாள்.

அப்போது தான் ராகவிற்கு இப்படி ஒரு கோணம் இருப்பதே தெரிந்தது. இருவரும் ஒன்றாகவே வளர்ந்ததால், ஒரே அறையில் தூங்குவது என்பது இருவருக்குமே புதிதல்ல… அவர்களின் பெற்றோர் கூட இதை ஒரு பொருட்டாகக் கண்டு கொள்வதில்லை.

அப்படியே பழகிப் போனதால், முன்தின இரவு அவள் வந்து அவனின் அறையில், அவனின் கட்டிலில் படுத்ததை அவனும் பெரிதாக எண்ணவில்லை. ஆனால், இப்போது செல்வியின் எண்ணம் தெரிந்த பின்பு, உள்ளம் லேசாக குறுகுறுக்க தான் செய்தது. இந்த குறுகுறுப்பு, மனம் அவளை தோழியாக எண்ணாமல், காதலியாக எண்ண ஆரம்பித்ததாலோ…

வீணா அறைக்குள் சென்றபோது எப்படி நின்று கொண்டிருந்தானோ, அவள் குளித்துவிட்டு வரும் வரையில் அப்படியே நின்று கொண்டிருப்பதைக் கண்டவள், ‘இந்த ராக்கிக்கு என்னாச்சு..? இவனும் ஸ்டான்னாகி நின்னுட்டு இருக்கான்…’ என்று நினைத்தவள், மெல்ல அவனருகே சென்று அவள் கூந்தலில் வழியும் நீரை அவன் மீது தெளித்தாள்.

இதுவும் கூட அவர்களின் தினசரி விளையாட்டு தான். ஆனால், கள்ளம் புகுந்த கள்வனின் மனதோ மங்கையவளை வேறு கோணத்தில் பார்க்கத் துவங்கியிருக்க, அவள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவனின் காதலை தூண்டிவிட முயன்று கொண்டிருக்க, அவன் தான் அதில் தவித்துப் போனான். அவளோ எப்போதும் போல அவனைத் தொல்லை செய்து கொண்டிருந்தாள்.

“ஹே ராக்கி என்ன நீயும் இப்படி ஷாக்ல நிக்குற..? வா வா எனக்கு பசிக்குது…” என்று அவனின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

பின் சிரமப்பட்டு முயன்று, தன் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன், ‘எதுவாக இருப்பினும் இங்கிருந்து சென்றபின் பார்த்துக் கொள்ளலாம்…’ என்று நினைத்தான்.

ஆனால், அவன் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால், விதி என்ற ஒன்று எதற்கு இருக்கிறது…

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்