Loading

அத்தியாயம் 2

வீணா அவளின் ஸ்கூட்டியை எடுப்பதைப் பார்த்த ராகவ், “வீன்ஸ், இன்னைக்கு மட்டுமாவது ரோட்டுல போறவங்க உன் தொல்லை இல்லாம போகட்டுமே…” என்று கூற, ஒரு நொடி சந்திரமுகியாக மாறிய வீணா, “நான் தொல்லையா…” என்று விழிகளை உருட்டிக் கேட்க, அதைக் கண்டவனிற்கு சிரிப்பு வந்தாலும், அவள் முன்னே அதைக் காட்டிக்கொள்ளாமல் பயந்தது போல நடித்தான்.

“ச்சேச்சே உன்னை போய் தொல்லைன்னு சொல்வேனா… உன் பெர்த் டே அதுவுமா, நீ எதுக்கு வண்டிய ஓட்டணும்… பின்னாடி உட்கார்ந்து மத்தவங்க தொல்லை இல்லாம ஜாலியா வான்னு தான் சொன்னேன்…” என்று ஒருவழியாக சமாளித்தான்.

“ஹுஹும் இன்னைக்கு நான் தான் ஓட்டுவேன்…” என்று பிடிவாதமாக ஓட்டுநர் இருக்கையில் அமர, அவனின் விதியை நொந்தபடி அவளின் பின் அமர்ந்தான்.

அவர்களின் வீடிருக்கும் சந்து வரை ஒழுங்காக ஓட்டியவள், பிரதான சாலை வந்த பின்னர் சற்று தடுமாறினாள்.

வண்டி சமநிலை இழந்து சாயும்போது, “ஹே ராக்கி… பிடி பிடி…” என்று அவள் கத்த, அவனோ ‘இது வழக்கமான ஒன்று’ என்பது போல, பின்னிருந்து அவளின் கரங்கள் அருகே அவனின் கரங்களை வைத்து வண்டியின் ஹாண்ட் பாரை பிடித்து வண்டியை சமநிலைக்கு கொண்டு வந்தான்.

‘இதுக்கு தான் சொன்னேன், நானே ஓட்டுறேன்னு…’ என்று அவளின் முகம் பார்க்க, அவளோ தன முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்தாள்.

இப்படியே அவர்களின் பயணம் தொடர, சாலையில் சென்றவர்களின் கவனம் இவர்களின் மேல் படிந்தாலும், அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றனர்.

அது ஒரு அநாதை ஆசிரமம். கிட்டத்தட்ட ஐம்பது ஆதரவற்ற குழந்தைகளின் இருப்பிடம். வீணா அவளின் பிறந்த நாளை இங்கு கொண்டாடவே இவ்வளவு அவசரமாக ராகவை இழுத்து வந்திருந்தாள்.

இது வீணாவிற்கோ ராகவிற்கோ புதிதல்ல. அவர்களின் வீட்டில் யாருடைய பிறந்த நாளாக இருந்தாலும், இது போல ஆசிரமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது அவர்களின் வழக்கம். இவ்வழக்கம் ராகவினால், வீணாவின் பொருட்டு பழக்கப்படுத்தப்பட்டது.

வீணா எப்போதும் தன்னையே சார்ந்திருந்தால், வெளியுலகில் நடப்பதை அறியாமலேயே இருந்து விடுவாள் என்று எண்ணிய ராகவ், அவளின் தனித்தன்மையை வெளிக்கொணரவும், அதே சமயம் தனிமையை உணராமல் இருக்கவும் செய்த ஏற்பாடுகளில் ஒன்றே, ஆசிரமங்களுக்கு சென்று வருவது.

மேலும், ஓவியம், நடனம் போன்ற வகுப்புகளில் அவளை சேர்த்துவிட்டு அவளின் திறமைகளையும் வளர்க்கச் செய்தான். முதலில், ‘போகவே மாட்டேன்’ என்று அடம் பிடித்தவளை, கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து அனுப்புவதற்குள் ராகவிற்கு தான் போதும் போதும் என்றானது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, வீணாவிற்கே அதில் ஆர்வம் உண்டாக, அவளே உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்று வர துவங்கினாள்.

இதனால், வீணா ராகவின் உதவியின்றி சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தாளா என்றால், அதற்கான விடை இல்லை என்பது தான். இப்போதும் அவளின் முடிவுகள் அனைத்தும் ராகவினால் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அமலுக்கு வரும். அது சாதாரண உடை விஷயமாக இருந்தாலும் சரி… வாழ்க்கையின் முக்கிய அங்கமான திருமண விஷயமாக இருந்தாலும் சரி…

ராகவும் வீணாவும் உள்ளே நுழைவதைப் பார்த்த குழந்தைகள், குதூகலமாக அவர்களை சூழ்ந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் இங்கு வந்து அவர்களுடன் விளையாடிவிட்டு செல்வதால், இருவரும் அங்கிருக்கும் அனைவருக்கும் பரிட்சியமானவர்களே.

அனைவரும் ஒரே நேரத்தில் வீணாவிற்கு வாழ்த்து சொல்ல, அவர்களின் அன்பில் திக்குமுக்காடித் தான் போனாள் வீணா. குழந்தைகளின் சத்தம் அதிகமாக, அதன் காரணமாக வெளியே வந்தார் அந்த ஆசிரமத்தின் பொறுப்பாளர் வசுமதி.

நாற்பத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும் வசுமதிக்கு. சாந்தமான முகம் என்றாலும் அதிலும் ஒருவித அழுத்தம் நிறைந்திருக்கும். வீணாவை நோக்கி புன்னகையுடன் வந்தவர், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், வீணா…” என்று வாழ்த்தினார்.

அவரைக் கட்டிக்கொண்ட வீணா, “தேங்க்ஸ் மதிம்மா…” என்றவள், “இப்படியே வாழ்த்தோட அனுப்பிடலாம்னு நினைக்காதீங்க… இன்னைக்கு உங்க கூட தான் காலை சப்பாடே… வாங்க வாங்க…” என்று எல்லாரையும் அழைத்தாள்.

வசுமதிக்கு வீணாவை பிடித்ததற்கு மற்றுமொரு காரணம் இது தான். வீணாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மூன்று வேளை உணவும் வீணாவின் பொறுப்பு தான். ஆனால் அவள் செய்ததை சொல்லிக்காட்டாமல், அவர்களுடன் ஒன்றாக உணவு உண்ணப்போவதாகக் கூறுபவளை வாஞ்சையுடன் பார்த்தார்.

இது பிடித்தத்திற்கான மற்றுமொரு காரணம் என்றால், அப்போது முதல் காரணம்… துறுதுறுவென்று இருப்பவளை பிடிப்பதற்கு தனி காரணமும் வேண்டுமோ!

வசுமதியின் கரம் பற்றி உள்ளே செல்ல முனையும் போது, “எதையோ மறந்த மாதிரி இருக்கே…” என்று தலையைத் தட்டி யோசிப்பது போல பாவ்லா செய்தவளின் மண்டையை உண்மையிலேயே தட்டியவன், “ஜீவா உனக்கு சோத்து மூட்டைன்னு பேரு வச்சதுல தப்பே இல்ல. சோத்த பார்த்ததும் என்னையவே மறந்துட்டு போற… இதுல மேடம் ‘எதையோ’ மறந்துட்டீங்களா…” என்று ராகவ் கேட்டான்.

“ஸ்ஸ்ஸ் பெர்த் டே பேபின்னு பாக்காம திரும்ப திரும்ப அடிக்கிற நீ…” என்று உதடு பிதுக்கியவளை ரசித்தவன், சிரிப்புடன் அவளின் தோள் மீது கைபோட்டு உள்ளே நுழைந்தான்.

“ஆமா, நீ தான் வீட்டுலயே மொக்கிட்டு தான வந்துருப்ப… இப்போ திரும்பவும் முதல இருந்தா…” என்று கிண்டலடித்தவாறே சாப்பிட அமர்ந்தான் ராகவ்.

“ப்ச்… கண்ணு வைக்காத ராக்கி…” என்று ஏகத்திற்கும் அலுத்துக் கொண்டவள், அவனை உரசியபடி அமர்ந்தாள்.

இதுவும் வழக்கமாக நடப்பது தான். அவனருகே அமர்ந்தால் தான், பிடிக்காததை அவனிடம் தள்ளிவிட்டுவிட்டு, பிடித்ததை அவனிடமிருந்து பறிக்கலாம்.

இப்படியே மகிழ்ச்சியாக ஒரு மணி நேரத்தை கழித்தவர்கள், வேலைக்கு செல்ல வேண்டிய நேரமானதால், அவர்களிடமிருந்து விடைபெற்றனர்.

வசுமதியோ, மீண்டும் இருவரையும் அணைத்து, “ரெண்டு பேரும் எப்பவுமே இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்…” என்று வாழ்த்தினார். மேலும், “எப்போ கல்யாணம்…?” என்று இருவரையும் பார்த்து பொதுவாகக் கேட்க, இவ்வளவு நேரம் வாயடித்துக் கொண்டிருந்தவளின் வாய் மௌனத்தை தத்தெடுக்க, கண்களோ நிலம் நோக்கிக் குனிந்தன.

ராகவிற்குமே மனதிற்குள் ஏதோ மாற்றம். இதுவரை இல்லாத மாற்றம்… இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக சுற்றியிருக்கின்றனர். அப்போதெல்லாம் வராத உணர்வு, இந்த ஒரு மாதமாக வருகிறதென்றால், இது தான் மஞ்சள் கயிறு ஏற்படுத்தப் போகும் ‘மேஜிக்’கின் முதல் படியோ… இல்லை ஏற்கனவே அவர்களுக்குள் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் காதலை, இப்போது தான் உணரத் துவங்கியிருப்பாதாலோ…

இருவரின் ஊன் இங்கிருந்தாலும், மனமோ அவர்களின் திருமண பேச்சு நடைபெற்ற காலத்திற்கு சுகமாகவே பயணித்தது.

ஒரு மாதத்திற்கு முன்…

வீணா வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகியிருந்தன. இந்த ஆறு மாதங்களில் அவள் ஒரு முறை கூட அவர்களின் ஊருக்கு செல்லவில்லை. இதைப் பற்றி இருவரின் தாய்மார்கள் ஒவ்வொரு அலைபேசி அழைப்பிலும் குற்றம் சொல்ல, அதைத் தாங்காத ராகவ், அவளை இழுத்துக் கொண்டு ஊருக்கு சென்றிருந்தான். ராகவின் வேலை காரணமாகத் தான் வீணாவும் ஊருக்குச் செல்லவில்லை என்பதை ராகவும் நன்கு அறிந்ததால், அவனே அவளை அழைத்து சென்றிருந்தான்.

அரை வருடம் கழித்து வந்த இருவருக்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்க, இருவருமே சுற்றம் மறந்து அதில் மூழ்கித் தான் போயினர்…

அப்போதும் ஒருவரை ஒருவர் பிரிந்து விடவில்லை. ஒன்று, ராகவ் இருக்கும் இடத்தில் வீணா இருந்தாள்… இல்லையென்றால் வீணா இருக்கும் இடத்தில் ராகவ் இருந்தான். இதைக் கண்ட அவர்களின் பெற்றோர்கள், இருவரையும் திருமண பந்தத்தில் இணைக்கும் தங்களின் முடிவு சரி தான் என்ற எண்ணத்திற்கு வந்தனர்.

அவர்களின் எண்ணத்தை முதலில் ராகவிடம் கூறி, அவனையே வீணாவிடம் பேச சொல்லலாம் என்று திட்டம் தீட்டினர். ஏனெனில், அவன் சொல்வது தானே அவளிற்கு வேத வாக்கு!

ஆனால், பேச்சோடு பேச்சாக வீணாவின் தாய் அவளிடம் இதைப் பற்றி கூறிவிட, முதலில் புருவம் சுருக்கி யோசித்தவள், பின் என்ன நினைத்தாளோ, அவளின் அறைக்கு சென்று கதவைப் பட்டென்று சாற்றிக் கொண்டாள்.

இங்கு மற்றவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, அப்போது தான் நண்பனை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ராகவ், அங்கு நிலவும் அசாதாரண சூழலை உணர்ந்து அதற்கான காரணத்தை யோசித்தான்.

தீவிரமாக யோசிக்க வேண்டிய அவசியமில்லாமல், வீணாவிற்கு தான் ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டான். ஏனெனில், உள்ளே நுழைந்த அடுத்த நிமிடமே எங்கிருந்தாலும் அவன் முன் வந்து வம்பிழுத்திருப்பாளே அவனின் ராட்சசி.

“என்னாச்சு ம்மா..? என்ன பண்ணி வச்சா அந்த வாலு…? நீங்க எதுவும் திட்டிட்டீங்களா, அத்த… ஆளே காணோம்…” என்று அன்னையிடம் ஆரம்பித்து அத்தையிடம் முடித்தான், ராகவ்.

“அது… வந்து… அவ ஒன்னும் பண்ணல டா…” என்று திக்கியவாறே மற்றவர்களை பார்த்த மாலதி, இருவரின் திருமண பேச்சையும், அதைக் கேட்டவள் உள்ளே சென்று அடைந்து கொண்டாள் என்பதையும் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டதும், அவரை முறைத்தவன், “ப்ச்… இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா கல்யாண பேச்சு..? அதுவும் அவகிட்ட… எங்க ரெண்டு பேருக்கும்… ப்ச்…” என்று சலித்துக் கொண்டவன், அன்னை கூற வந்த மறுமொழியைக் கூட செவி மடுக்காமல், அவனின் ‘வீன்ஸ்’ஸை தேடிச் சென்றிருந்தான்.

உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல், பிரசவ அறைக்கு வெளியே காத்திருக்கும் கணவனைப் போல, இருவரது தாய்மார்களும் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்க, அவர்களின் தந்தையரோ அந்த அறையை ஒரு பார்வை பார்ப்பது, மற்றவர்களை ஒரு பார்வை பார்ப்பது என்று பொழுதைக் கழித்தனர்.

கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாக, அனைவரையும் பதற வைத்துவிட்டு சாவகாசமாக கதவைத் திறந்தாள் வீணா. எப்போதும் இல்லாதவாறு சாந்தமாக வருபவளைக் கண்டவர்களுக்கு பதற்றம் அதிகரிக்க, அவள் அவர்களை அடையும் வரை கூட பொறுக்க முடியாமல், ஒரே எட்டில் அவளை அடைந்தவர்கள், “என்னாச்சு…” என்று ஒரே குரலில் கேட்க, பெண்ணவளிற்கு வாழ்நாளில் முதல் முறை வெட்கம் வந்ததோ… ஆனால், அவளின் இந்த பாவனையை இதுவரை கண்டிராததால், அவர்களுக்கு தான் அவளின் வெட்கம் புரியவில்லை.

இன்னமும் தன்னையே உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டவளிற்கு இருந்த பொறுமை பறந்து போக, “எனக்கு ஓகே தான் அத்த… ஆனா உங்க பையன் தான் ஒத்துக்க மாட்டிங்குறான்…” என்று கூறிவிட்டாள்.

அவளின் கூற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாவனையைக் காட்ட, அவர்களைக் கண்டவளிற்கு சிரிப்பு தான் வந்தது.

“டியர் பேரன்ட்ஸ்… என்ன எல்லாரும் ஸ்டான்னாகி நின்னுட்டீங்க… நான் சொன்ன விஷயத்துக்கு என்னென்னவோ நடக்கும்னு எக்ஸ்பெக்ட் பண்ணேன்… அத்த, இப்போ நீங்க அப்படியே பாசத்தோட என்னைக் கட்டிப்பிடிச்சு உச்சி முகர்ந்து, ‘உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்துக்குவேன்…’ன்னு சொல்லிருக்கணும்… அம்மோவ்… நீங்க ‘எப்படி உன்னை விட்டுட்டு இருக்கப் போறேனோ தெரியலையே…’ன்னு அழுகாச்சி சீன போட்டுருக்கணும்… அப்பா அண்ட் மாமா இந்நேரம் வீடே விழாக்கோலமா ஆக்கிருக்கணும்… ஆனா நீங்க இப்படி என் மூஞ்சியவே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்கீங்க…” என்று அவள் உதட்டைப் பிதுக்கி கூறியதில் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

வீணாவின் அன்னை ரேவதி அவளின் காதைத் திருகி, “வாய் வாய்… வாயத் தொறந்தா மூடுறதே இல்ல… நான் ஏன் டி கண்ணீர் விடணும்… தொல்ல ஒழிஞ்சதுன்னு சந்தோஷப்படுவேன்… உன் தொல்லைய எப்படி அண்ணி தாங்குவங்களோ…” என்று கூற, அவரிடம் முகத்தை திருப்பிக் கொண்டாள் வீணா.

“வீணா குட்டி,நீ இப்போ சொன்னதெல்லாம் கல்யாண சீன் அப்போ பண்றது… ரொம்ப வேகமா இருக்கியே டா…” என்று கன்னம் வழித்துக் கொண்டார் மாலதி.

“முதல ராகவ் இதுக்கு சம்மதிக்கணுமே…” என்று வீணாவின் தந்தை கோபலகிருஷ்ணன் கூற, “அதெல்லாம் அவன் ஒத்துப்பான்… ஒத்துக்காம எங்க போயிடுவான்…” என்று கூறும்போதே அவளின் தலையில் ராகவ் கொட்டினான்.

“ஸ்ஸ்ஸ் ஆ… பாருங்க அத்த உங்க பையன் இப்போவே என்னைக் கொட்டுறான்…” என்று மாலதியிடம் குற்றப்பத்திரிக்கை வாசிக்க, மாலதியும் மருமகளுக்கு அன்பான மாமியாராக மகனை எதிர்த்து கேள்வி கேட்டார்.

சில பல பேச்சு வார்த்தைகளுக்குப் பின், ஆறு மாதங்களுக்குப் பின்னர் திருமணத்தை நடத்தலாம் என்ற முடிவிற்கு வந்தனர்.

இருவரின் வீட்டிலும் ஆறு மாதங்களுக்குப் பிறகான திருமணத்திற்கு இப்போதே வெகு தீவிரமாக திட்டம் தீட்ட ஆரம்பிக்க, சம்பந்தப்பட்ட இருவரும் ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்று அனைத்தையும் தூர இருந்தே பார்த்துக் கொண்டனர். அவ்வப்போது இருவரும் ஒருவர் முகத்தைப் பார்ப்பதும், மற்றவர் கேள்வியாக நோக்கும்போது உதடு பிதுக்கி ‘ஒன்றும் இல்லை’ என்பதுமாக இந்த ஒரு மாதத்தை கழித்திருந்தனர்.

இவர்களின் திருமண விஷயம் ஜீவா உள்ளிட்ட சில நெருங்கிய வட்டத்தினருக்கு மட்டும் சொல்லப்பட்டது. அன்றிலிருந்து ஜீவாவும் விதவிதமாக கலாய்த்து பார்த்து விட்டான். இருவரிடமும் எந்த வித எதிர்வினையும் இல்லை.

இருவருக்குமே ‘திருமணம்’ என்ற வார்த்தையைக் கேட்டால் ஒருவித இன்ப அவஸ்தை ஏற்படத்தான் செய்தது. ஆனால், எங்கே அதைத் தான் வெளிப்படுத்தினால் மற்றவர் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடுமோ என்று நினைத்தே அதைப் பற்றிய யோசனையை ஒத்திப்போட்டனர்.

சிறு வயதில் உரிமையாக ஆரம்பித்த நட்பு, எப்போதோ காதலாக உருமாற்றம் பெற்றுவிட, அதை உணர இயலாத இரு உள்ளங்களும், உணரும்போது காலமும் கடந்திருக்குமோ…

கடந்த காலத்தை நினைத்துக் கொண்டே அவர்களின் பணியிடத்திற்கு வந்து சேர்ந்தனர் ராகவும் வீணாவும்.

அதே இடத்தில் தான் இவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போட காத்திருக்கிறது விதி… இந்நிலையில், ஆறு மாதங்களுக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட இவர்களின் திருமணம் நன்முறையில் நிகழுமா..? விதி இவர்களுக்கு என்ன வைத்திருக்கிறது..?

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments