Loading

அத்தியாயம்- 21

யாரோ விடாது காலிங் பெல் அழுத்திய சத்தத்தில் அடித்துப் பிடித்து எழுந்தான் மானபரன். எழுந்து நேரத்தைப் பார்த்தால் காலை ஆறு மணி.

இந்த நேரத்தில் யார் வந்திருப்பது என்ற யோசனையுடன் கீழே இறங்கி கதவைத் திறந்தால் எதிரே கண்களில் கொலைவெறியுடன் நின்றிருந்தான் ராகவ்.

அவனைக் கண்டு முன்னே வந்த மனோவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்த ராகவோ.. “மணி.. ஏய் மணி..” என்று சத்தமாய் அழைக்க, கடுப்பான மானபரனோ..

“டேய்.. யார, எங்க வந்து தேடற?” என்று கேட்க, ராகவோ திரும்பி அவன் சட்டையைப் பிடித்தான்.

“எங்கடா மணி?” என்று அடங்காத ரௌத்திரத்துடன் கேட்க, அவனது கையைச் சட்டெனத் தட்டிவிட்டவனோ.. “டேய்.. எங்கடா என் தங்கச்சி?” என்று பதறினான்.

அவன் இப்படி மணியைத் தன் தங்கை என்று விளிக்கக் கேக்டவும், ரங்காவின் கண்கள் சிவந்தன.

“என்னடா தங்கச்சி? இப்போ மட்டும் அவ உன் தங்கச்சின்னு தெரியுதா? அன்னைக்கு வந்தப்போ எவ்வளவு அசிங்கப்படுத்தின?” என்று கேட்க, மனோவோ..

“டேய்.. அப்போ திட்டினேன்.. அதுக்காக நீ அவளைத் தொலைச்சுட்டு வந்து நின்னா, நான் அமைதியா பார்த்துட்டு இருக்கணுமா?” என்று கேட்க, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான் ராகவ்.

“என்ன தாண்டா பிரச்சனை உங்களுக்கு? எங்க போனா அவ?” என்று மனோ கேட்க.. அவனை நிமிர்ந்து முறைத்த ராகவோ..

“நேத்து அவ கடைல இருந்து நேரா இங்க தான வந்தா..” என்று அவனைக் குற்றம் சாட்டும் பார்வை பார்க்க மனோவோ புருவம் சுளித்தான்.

“ஆமா.. அவ நேத்து காலைலயே இங்க வந்தாளே.. ஆனா என்கிட்டே எதுவும் பேசல. வந்தா.. என்ன பார்த்தா.. அப்பறம் அப்படியே கிளம்பிட்டா..” என்று அவன் கூற, ராகவோ மீண்டும் எகிறினான்.

“ஏண்டா.. ஒரு பொண்ணு.. அதுவும் உன் தங்கச்சி.. எந்த மனநிலைல இங்க வந்தான்னு அவ முகத்தைப் பார்த்து கூடக் கண்டுபிடிக்க முடியாதா?” என்று கேட்க, அதில் இருவருக்கும் கைகலப்பாகியது. இருவரும் இப்படிச் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது அங்கே பதட்டத்துடன் வந்தாள் நித்யா.

அவள் தான் மணியின் தோழி. அவளது அண்ணனுக்காகத் தான் அவள் தர்ஷா – ராகவ் நட்பைப் பிரிக்கும்படி மணியிடம் முதலில் கேட்டது.

அவளை இங்கே காணவும் ராகவுக்கு அவளை அடையாளம் தெரியாவிட்டாலும், மனோவுக்கு அவளைத் தெரிந்திருந்தது.

அவன் தன் சொந்தத் தங்கையிடம் எப்படியோ.. ஆனால், தங்கையின் தோழியிடம் பாசமிகு அண்ணன் தான்!

உள்ளே வந்தவளிடம்.. “வாம்மா நித்யா.. என்ன ஆச்சு இவ்வளவு காலைலயே இங்க வந்திருக்க?” என்று அவன் கேட்க, அவனை முறைத்தவள், ராகவிடம் திரும்பி.. “உங்க போன் எங்க?” என்று கேட்கவும் ராகவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

“என் போன்? எதுக்கு என் போன கேட்கற? முதல்ல நீ யார்?” என்று அவன் கேட்க, மனோ பதில் கூறினான்.

“இது நித்யா.. மணியோட ப்ரண்ட்.. உங்க கல்யாணத்துக்கு கூட வந்தாளே.. ஞாபகம் இல்ல?” என்று கேட்க, வெறுப்புடன் ராகவையே பார்த்திருந்த நித்யாவோ.. “இவருக்கு என்னையெல்லாம் ஞாபகம் இருக்காது.. ஆனா தர்ஷாவை நல்லா ஞாபகம் இருக்கும்..” என்று ஒரு மாதிரியான குரலில் கூற, ராகவ் திகைத்தான்.

“இப்போ இந்த விஷயத்துக்குள்ள அவ எங்க வந்தா?” என்று இவன் கேட்க, நித்யா தொடர்ந்தாள்.

“தர்ஷாவும், என் அண்ணனும் காதலிச்சாங்க.. அவங்க கல்யாணம் கூட நிச்சயமாகி இருந்துச்சு. அப்போ தான் அவ என் அண்ணாகிட்ட உங்கள லவ் பண்றதா சொல்லி, கல்யாணத்தை நிறுத்தினா. அப்போதுல இருந்து என் அண்ணன் மனசாலவுல ரொம்ப பாதிக்கப்பட்டான்.

நான் அவனுக்காக உங்ககிட்ட மணியைப் பேசச் சொன்னேன். ஆனா அவ உங்ககிட்ட பேச இஷ்டப்படல. அதனால தர்ஷாகிட்ட என்னென்னவோ சொல்லி அவளை உங்ககிட்ட இருந்து விலகவச்சா.

அதுக்குப் பிறகு என் அண்ணன் கூட தர்ஷா சேர்ந்தா தான்.. மறுபடியும் திடீருன்னு அவன் கூட பிரேக் அப் பண்ணிட்டா.. அதனால என் அண்ணன் மெண்டலி ரொம்ப ஆஃபெக்ட் ஆகி இப்போ ஹாஸ்பிடல் ட்ரீட்மெண்ட்ல இருக்கான்.

ஆனா இங்க பார்த்தா அவளை நீங்க உங்க கடைல வேலைக்குச் சேர்த்துருக்கீங்க.. இதெல்லாம் சொல்லி எச்சரிக்கறதுக்காக நான் மணிய ரீச் பண்ணலாம்னா அவளோட போன் எடுக்கல. உங்களுக்கு போன் பண்ணினாலும் அதே நிலைமை தான்.

என்கிட்டே மனோ அண்ணாவோட நம்பர் இல்ல.. அதான் நான் உடனே இதையெல்லாம் சொல்லி உங்கள எச்சரிக்கை செய்யலாம்னு வந்தேன்..” என்று கூற ராகவுக்குத் தலையே சுற்றிவிட்டது.

முன்னாலேயே ஒரு இன்டர்ன்ஷிப் ப்ரோக்ராமில் தர்ஷாவுக்கும், ராகவுக்கும் பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தினால் தான் தர்ஷா, ராகவிடம் வேலை கேட்டிருந்தது. அதுவும் சரியாகக் கண்காட்சி நேரத்தில் மணிக்கு உதவியாக இருப்பாள் என்று தான் அவன் தர்ஷாவை உள்ளே விட்டது.

ஆனால் தர்ஷாவுக்குள்ளே இப்படி ஒரு குயுக்தி இருக்கும் என்று அவன் சந்தேகம் கூடக் கொள்ளவில்லையே?

மணியின் மனதுக்கு எதோ தவறாகப் பட்டிருக்கத் தானே அவள் தர்ஷாவை உடனடியாக வேலையை விட்டுத் துரத்த வேண்டும் என்று கூறினாள். ஆனால் அதைத் தான் மதிக்காமல் போனது எவ்வளவு பெரிய பிசகு? என்று எண்ணியவன் நெற்றியில் பலமாக அறைந்து கொண்டான்.

அவனது செயலைப் பார்த்த நித்யாவோ.. “அப்போ நிலைமை கை மீறிப் போய்டுச்சு.. அப்படித் தானே?” என்று ராகவை நேர்பார்வையுடன் கேட்க அவனோ பதில் கூறாமல் தலைகுனிந்தான்.

“சரி சொல்லுங்க இப்போ மணி எங்க?” என்று அவள் கேட்க, சோர்ந்து போய்ப் பொத்தென்று சோபாவில் அமர்ந்த ராகவோ.. “தெரியல..” என்றான் இன்னும் தலை நிமிராமலேயே.

அதைக் கண்டு கண்கள் விரிய திகைப்படைந்த நித்யாவோ.. “அண்ணா.. என்னண்ணா சொல்லறார் இவர்? அவ எங்க இருக்கான்னு தெரியலைன்னா என்ன அர்த்தம்?

அவளைக் கண்டுபிடிக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா இல்லையா? அவளோட கார் கூட இங்க வாசல்ல தான் இருக்கு.. ஆனா அவ எங்க போனானு உங்க ரெண்டு பேருக்குமே தெரியலையா?” என்று அவள் கேட்க, இரு ஆண்களுக்கும் குற்ற உணர்வாகியது.

“அவ விசயத்துல நான் ரொம்பவே தப்புப் பண்ணிட்டேன்..” என்று எங்கோ பார்த்துக்கொண்டு மனோ கூற, அதையும் இடையிட்டுத் தடுத்தாள் நித்யா.

“ஹையோ.. இப்போ நீங்கச் செஞ்ச தப்பெல்லாம் நினச்சுப் பார்த்து ரெகிரேட் செய்ய நேரமில்லை.. ராகவ் சார் நீங்க வீட்டுக்குப் போய் மணி அங்க ஏதாவது உங்களுக்கு லெட்டர் மாதிரி எழுதி வச்சிருக்காளான்னு பாருங்க..

மனோ அண்ணா, நாம ரெண்டு பேரும் தர்ஷா வீட்டுக்குப் போய் அவகிட்ட விசாரிப்போம்.. கூடவே போலீசுக்கும் சொல்லுவோம்..” என்று சிறு பெண்ணான அவள், திகைத்து நின்றிருந்த இரண்டு இளம் தொழிலதிபர்களை முடுக்கிவிட்டு, அவர்கள் செய்ய வேண்டியதை எடுத்துச் சொல்ல, அப்பொழுது தான் இருவருக்குமே தங்களது நிலை உறைத்தது.

அவர்கள் உணர்ந்த அடுத்த நொடியில் இருந்து மின்னல் வேகத்தில் வேலைகள் நடக்கத் துவங்கின.

ஒரு பக்கம் ராகவ் அவன் வீட்டுக்குச் சென்று அவன் அறையில் மணி எங்கே செல்கிறேன் என்று ஏதாவது குறிப்பு எழுதி வைத்திருக்கிறாளா என்று தேட.. அவனுக்கு அப்பொழுது கிடைத்தது ஒரு பொக்கிஷம்.

எந்த நகை டிசைன்களை தர்ஷா செய்தது என்று அவன் ஊரறிய அறிவித்தானோ, அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தில் மணியின் கையெழுத்துக் குறிப்புகளோடு ஆரம்ப நிலையில் இருந்து வரையப்பட்டு இருந்தது.

அதிலும் அதன் ஆரம்ப நிலை யோசனைகளை முதற்கொண்டு அதில் வெறும் பென்சில் கீறல்களாக வரையபப்ட்டிருக்க, ராகவுக்கோ தான் செய்த இமாலயத் தவறு புரிந்தது.

ஏற்கனவே மணி, தன்னையும் – தர்ஷாவையும் இணைத்துக் குழம்பிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் இவன், மணி செய்த வேலைகளெல்லாம் தர்ஷா தான் செய்தாள் என்று அவளை உயர்த்தி, அதே அத்தனைப் பேரின் முன்னிலையில் இவளைத் தாழ்த்தியிருக்கிறான்.

இந்த எண்ணம் தோன்றிய அப்பொழுதே, மணி முந்தைய நாள் தனது மேஜையில் அவளது லாப்டாப்பை வைத்துவிட்டுச் சென்றது அவனது நினைவுக்கு வந்தது. அதை ஏன் தனது மேஜையில் வைத்திருக்கிறாள் என்று அவன் யோசித்ததும் கூட!

ஒருவேளை அதில் தான் இந்த டிசைன்களை எல்லாம் மணி சேமித்து வைத்திருக்கிறாளோ என்று எண்ணியவன், அந்த மடிக்கணினியைத் திறந்து பார்க்க, அதில் அவள் செய்த எந்த டிசைனும் இல்லை.

குழம்பியவன், எதற்கும் இருக்கட்டும் என்று அந்த லேப்டாப்பில் அழிக்கப்பட்டவைகளை எல்லாம் மறுபடியும் மீட்டெடுக்க முயற்சிக்க.. இதோ.. மணியின் வேலைகள் அனைத்தும் அப்படியே வந்து அவன் கண் முன்னாள் விழுந்தன.

அதிர்ச்சியில் உறைந்தவனுக்கு அப்பொழுது தான் தர்ஷா செய்த முழு துரோகத்தின் அளவும் தெரிய வர, அந்த நிமிடமே அவளது கழுத்தைப் பிடித்து நெறித்துவிட வேண்டும் என்ற ஆத்திரம் வந்தது.

அதே சமயத்தில் அவனுக்கு மனோவிடம் இருந்தும் அழைப்பு வர, அவன் தர்ஷாவிடமிருந் கறந்த உண்மைகளை எல்லாம் இவனிடம் ஒப்புவிக்க, ராகவின் கண்கள் சிவந்தன.

அடுத்த கணமே போலீசுக்கு அழைத்தவன், தர்ஷா, மணியின் படைப்புக்களை தன்னுடையது என்று பொய் சொல்லி அவளது உழைப்பைத் திருட முயற்சித்ததாக அவளைக் கைது செய்ய வைத்தான்.

தர்ஷா கதறிக்கொண்டே போலீஸ் ஜீப்பில் ஏறிப் போக, அதைக் கண்களில் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தான் ராகவ்.

அப்பொழுது அவனருகே வந்த மனோவோ.. “இவளுக்குத் தண்டனை கொடுத்தாச்சு.. இப்போ மணியை எப்படி கண்டுபிடிக்கறது ராகவ். போலீஸ்ல கம்பலைன் பண்ணியாச்சு.. ஆனா நம்ம சைட்ல இருந்து நாம் என்ன செய்யறது?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு கேட்க, அதே சமயத்தில் மனோவுக்கு ஒரு போன்கால் வந்தது.

அதை எடுத்துக் பார்த்தவனது கண்கள் ஆனந்த அதிர்ச்சியில் விரிந்தன.

“இவ எதுக்கு அதிசயத்திலும் அதிசயமா எனக்கு போன் பண்றா?” என்று எண்ணியபடி அவன் போனை எடுக்க, மறுபுறத்தில் இருந்தது அவன் ஒருதலையாகக் காதலிக்கும் வர்ணா தான்.

இவன் போனை எடுத்து ஹெலோ என்கவுமே.. “ஹெலோ.. மனோ.. எங்க இருக்கீங்க? என் கூட உங்க தங்கச்சி இருக்கா.. நான் இங்க இருக்கேன்..” என்று கூறி ஒரு முகவரியைக் கூற, மனோவுடன், ராகவும், நித்யாவும் சேர்ந்து விரைந்தனர்.

அது ஒரு மருத்துவமனை! இங்கு மருத்துவமணியில் மணி என்ன செய்கிறாள்.. அவளுக்கு ஏதாவது ஆபத்தோ என்று எண்ணி மூவரும் விரைய, ரெசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் மணியின் பெயரைக் கூறி அறை எண்ணை அறிந்து அங்கு ஓடுவதற்குள், அவர்கள் உயிர் அவர்களிடத்தில் இல்லை.

ஓடிச்சென்று கதவைத் தட்டக்கூட மறந்து ராகவ் கதவைத் திறக்க, அங்கே மணி, ஒரு படுக்கையில் அமர்ந்து தலைகுனிந்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

முகத்தில் இதுநாள் வரை அவன் மட்டுமல்ல.. வேறு எவருமே கண்டிராத சோகம் அப்பிக் கிடந்தது அவளிடத்தில்.

அவளைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளுக்குள் பெரும் கோபம் ஒன்று பொங்கி எழ.. வேகமாக அவளிடம் சென்றவன், அவளது தோளைப் பிடித்துத் தூக்கி நிறுத்தி, அவளது கன்னத்தில் பளாரென்று ஓர் அறை விட்டான்.

அதை அங்கிருந்த மற்ற மூவரும் அதிர்ந்து பார்க்க, கன்னத்தை ஒற்றைக் கையால் பற்றிக்கொண்ட மணியோ கண்மூடி நின்றிருக்க, மெல்ல மனோவிடம் வந்த வர்ணா.. “ச்சே.. என்ன மனுஷன் இவர்? பொண்டாட்டி காணாம போய்க் கிடைச்சிருக்கா.. அவளைப் பார்த்ததும் இப்படித் தான் நடந்துப்பாங்களா?

பாவம் உங்க தங்கச்சி.. இவங்க அவரை விட்டு வந்தது ரொம்பவே சரி தான்..” என்று அவள் கூறி முடிப்பதற்குள், மணியின் கரம், அதை விடப் பலமாக ராகவின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அதைப் பார்த்த பெண்கள் இருவரும் அதிர்ச்சியுடன் வாயில் கை வைத்துக் கொள்ள.. அவர்கள் புறம் சற்று குனிந்த மனோவோ.. “இப்போ தெரியுதா யார் டெரர்னு?” என்று கேட்க, அதற்கு நித்யாவோ..

“என்னண்ணா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க.. இவங்க இப்படி நடந்துக்கறத பார்த்தா பிரச்சனை பெருசாகிடும் போலிருக்கு..” என்று பயத்துடன் கூற, அப்பொழுது ராகவ் பேசும் சத்தம் கேட்க, மூவரும் அவனைக் கவனித்தனர்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
11
+1
4
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்